Thursday, April 05, 2007

வாக்கு மூலம்



(NITTFEST'07 போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை)

அதே "டிக்… டிக்… டிக்…."
எனது நிமிடங்களை மெல்ல நிரப்பிக் கொண்டிருந்தது.

அப்துல்லா பாய் கதவைத்திறக்கும் சத்தமும் டேபிள் மீது டம்ளர் வைக்கும் சத்தமும்.
பிரித்தறியமுடியாத சில பறவைகளின் ஒலி; முட்டிக்குக் கீழே தழும்பின் மீது சூரியன் லேசாக சுட்டுக்கொண்டிருந்தது.

என்னுடைய எல்லா நாளும்இப்படித்தான் தொடங்குகிறது. இந்த மலைக்கிராமத்திற்கு வந்த இந்த மூன்று மாதத்தில் என் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றும் பெரிய மாறுதல் இல்லை. கண்விழிக்கும் போது பதிற்றாண்டுகள் பழமையான அதே அறை, அதைவிடப் பழமையாக நான், அதே நினைவுகள், அதே சூரியன், அதே ஜன்னல், அதே வெறுமை.

காட்டு மல்லி பூத்திருக்குமோ?

மெல்ல கண்விழித்தேன். ஜன்னலின் வழியே கீரிப்பாறை என்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது.

இது உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான மாற்றம் அல்ல. என்னைப் பொருத்த வரை இது படுத்திருப்பதற்கும் அமர்தலுக்குமான மாற்றம். நான் இப்போதெல்லாம் தூங்குவதே இல்லை. நினைவுகளின் குவியலில் புதைந்து போவதாக அது பரிணமித்து விட்டது.

தினசரிகள் கூட வாங்குவதில்லை. இந்த உலகமே அர்த்தமற்று போன பிறகு நாட்டில் என்ன நடந்தால் எனக்கென்ன?

மெல்ல எழுந்து மல்லிச்செடியருகில் சென்றேன். இன்னும் பூக்கவில்லை. நிச்சயம் நாளை பூத்து விடும்.

இதற்கு மேலே போகும் முன், என்னைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.
"ம்ம்ம்.. என்ன சொல்ல….. நான் ஒரு அப்பாவி, ரொம்ப நல்லவன், சிங்கம் மாதிரி, திறந்த புத்தகம் மாதிரி…"
ஆங்…அங்கதான் அது ஆரம்பமாச்சு..
திறந்த புத்தகம் மாதிரி
…..
….

..
ஆம். நான் ஒரு புத்தகம்தான். செல்லரித்துப்போன ஒரு புத்தகம்.
சின்ன வயசில் எங்கள் வீட்டுக்கருகில் அரைடிராயர்கள் யாரும் இல்லை. நொண்டி, கபடி, கில்லி என அனைத்து ஆட்டங்களும் எனக்கு ஒருமையில்தான். பள்ளியிலோ எனக்கு ஆடத்தெரியாது என்று ஒதுக்கப்பட்டேன். ஒரு கட்டத்தில் அனைத்தும் அலுத்துப்போக, பேச்சுத்துணைக்கு வந்தார் கல்கி. அதன்பின் சாண்டில்யன், சாவி, தேவன் என ஒவ்வொருவராக வர என் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. என் சாம்ராஜ்யம் அது. வேறு எவரையும் தவறியும் அனுமதிக்காமல் பழிதீர்த்துக்கொண்டேன்.

* * * * * * * * * *

ஒரு நாள் வகுப்பில் எங்கள் வரலாற்றாசிரியர்,
"ராஜராஜனின் தந்தை யார்?"
"சுந்தர சோழன்" நான்.
அவரைப் பொறுத்தவரை அது ஒரு out of syllabus கேள்வி. எனக்கோ அது பொன்னியின் செல்வன் கதாபாத்திரம்.
என்னை வகுப்பின் முன் அழைத்து ஏதேதோ சொல்லி, பாராட்டி அனுப்ப, என் மனக்குதிரைக்கு சிறகு முளைத்த தினம் அன்று.

அன்று என்னைச் சுற்றியிருந்த அந்த முப்பத்தாறு ஜோடிக்கண்களில் தெரிந்த வியப்பும் ஆச்சரியமும் எனக்கு போதையூட்டின.
நான் சென்று அமர்ந்த போது, அருகிலிருந்தவன் அவனருகில் இருந்த ஒருவன் காதில் ஏதோ சொன்னது எனக்குப் பெருமையாய் இருந்தது. அன்றெனக்குத் தெரியவில்லை அது மிகக்கொடிய தண்டனையென்று.

* * * * * * * * * *

அதன் பின் ஏதேதோ படிக்கத்தொடங்கினேன். கடலை மடித்து வரும் காகிதம் கூட தப்பவில்லை. கடைசியில் என் மூளை ஒரு குப்பைத்தொட்டியான பின்பும் அது நிற்கவில்லை.

கல்லூரியிலும் அந்த வியப்புக் குறி தொடர்ந்தது.

இடைப்பட்ட வருடங்களில் என் பேச்சும் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து புத்தகங்களுடன் மட்டும் பேசுவது என்ற அளவில் சுருங்கிவிட்டது.
ஊரார் பார்வையில் என் பிம்பம் கல்லடி பட்டது.
"ரொம்ப அழுத்தம்டா…"
"சரியான head weight party டா.."
"அய்யே!!! அது ஒரு உம்மனா மூஞ்சி.."
என நான் கேட்டுப்பழகிய பாராட்டுகள் அதிகம்.

கல்லூரி விடுதியில் என் நண்பர்களிடம் பேசியதைக்காட்டிலும் என் அறைச்சுவர்களிடம் அதிகம் பேசியிருப்பேன்.

அப்போதெல்லாம் என் தனிமையை நிரப்பியது இந்த டிக்.. டிக்… டிக்… தான்.

அப்துல்லா பாய் அழைக்கும் குரல் கேட்டது.
மெல்ல அறைக்குச் சென்றேன். மேஜை மீது உணவு காத்திருந்தது. ஒரு அணில் வந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்தது. நான்கு பருக்கைகள் எடுத்து ஜன்னல் மீது வைத்தேன். தயங்கித் தயங்கி வந்து தன் வாலைக் கோதியபடி கொறித்துச்சென்றது. மனசுக்குள் குறித்துக்கொண்டேன்.

ம்ம்… எங்கே விட்டேன்.. என் அறையில்..
பல நாள் அழுதிருக்கிறேன் என் அறையில். நான் அழுவதை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வேறு…
ம்.. அப்படியே அது முடிந்து போனது.

கல்வியை முடித்து தொடர்ந்த வருடத்தில், ராணுவத்திற்கு ஆளெடுப்பதாய் மதிய வெயிலில் அரை நிர்வாணமாய் மைதானத்தில் ஓடவிட்டனர். என்னை விதவிதமாய் அளவெடுத்தபின் முடிவு செய்தனர். அன்று தேர்வான 300 பேரில் நானும் ஒருவன்.

ஒரு நாட்டின் எல்லை என்பது என்ன என்று அந்நாளில் புரிந்து கொண்டேன். மக்களுக்குத் தெரிவது போர் மட்டுமே. அன்றாடம் நடக்கும் சண்டைகள் அவர்களுக்கு தெரிவதில்லை.

துப்பாக்கிச் சத்தம் தாலாட்டாய் ஆகிப்போனது. துப்பாக்கிச்சத்தத்தைக் கொண்டே அது நம்முடையதா எதிரியினதா என்று சொல்லவேண்டும். நடு ராத்திரி சைரன்கள் பழகிப்போயின. முழுமையிழந்த மனிதர்கள் பழகிப்போயினர். தூக்கமும் கொஞ்சம் தூரப்போனது. இருந்தும் என்ன.?? இள ரத்தம்.. முறுக்கேறிய தோள்கள் கர்வம் கொள்ளச்செய்தன.

அப்படித்தான் ஒரு நாள் சண்டை வந்தது, பங்களாதேஷ் எல்லையில். ஏதோ புதிய பள்ளிக்குச் செல்லும் மாணவனைப்போல உற்சாகத்துடன் கிளம்பினேன். நானும் ஒரு நிஜப்போரைப் பார்க்க..ம்..ம்.. ம்.. இல்லை பங்கேற்க..

மேஜர் எங்கள் பதுங்கு குழிக்கு வந்து ஐந்து நிமிடம் இந்தியில் வீரம் பொங்க உரையாற்றிச் சென்றார். முடிவில் நாங்கள் தெரிந்து கொண்டது இன்னும் சில நாட்கள் நாங்கள் அங்கேயே இருக்கவேண்டும் என்பதுதான்.
அந்த கருவறையில் எனக்கு ஒரு நண்பன் கிடைத்தான். முதன் முதலாய் அவனை நோக்கிச் சாய்ந்தது என்மனம். எங்களுக்குள் துளிர்விட்டது ஒரு புதிய உறவு. அவனும் என்னை மாதிரியே தனிமையின் கொடுங்கரங்களில் சிக்கி தன் முகவரியைத் தொலைத்தவன். எங்களுக்குள் பல பொது அம்சங்கள். ம்.. போதும். இதற்கு மேல் அவனைப்பற்றி சொல்ல மனசு கனக்கிறது.

* * * * * * * * * *

நினைக்கிற மாதிரி நேரடியாக போருக்கெல்லாம் செல்ல முடியாது. ஒரு குழி விட்டால் அடுத்த குழி.. இப்படியே ஒரு வாரம் கடந்திருக்கும்.. அதன் பின்தான் எனக்கான நாள் வந்தது..

எதிலுமே முதல் என்றும் மறக்க முடியாதது. எனக்கும் தான்.

ஓரிடத்தில் எசகு பிசகாக சென்று முட்டிக்கொள்ளாத குறை. ஒரு சிறிய மணல் மேட்டைக்கடந்த போது எதிரே 15 அடி தூரத்தில், டைரக்ட் ரேன்ஜ் என்று சொல்வார்கள், ஒரு சப்பை மூக்குக்காரன் ஒரு மாதிரி அசௌகரியமாக துப்பாக்கியைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான். அவன் கவனம் திரும்பும் முன்னர் என் விசை உயிர்த்தது. அவனுக்கு நெற்றியில் இரத்தத்தால் திலகமிட்டு வீரசுவர்கம் அனுப்பி வைத்தேன்.
"...................."
"அவனுக்கும் ஒரு மனைவி இருந்திருப்பாளோ? தன் கணவன் திரும்பி வருவான் என காத்திருந்திருப்பாளோ? ஆயிஷாவா இல்லை மும்தாஜா இல்லை வயதான கண்தெரியாத பெற்றோரா?"
உண்மையிலேயே அந்த சப்பை மூக்குக் காரனுக்காக இன்று அழுதேன். சுவரில் மாட்டியிருந்த அந்த முகமூடிச் சித்திரம் என்னைப் பார்த்துச்சிரித்தது.



இல்லை… இது போலி இல்லை.. உண்மை. என் வேதனை உண்மை. அவன் கண்ட அந்த வலி உண்மை. என் முகமூடிகள் தொலைந்து விட்டன.

* * * * * * * * * *

3அடி 2அங்குலமாய் இருந்த வயசில் ஒரு நாள் என் பாட்டி இறந்து விட அனைவரும் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர். எல்லோரும் ஏன் அழுகின்றனர் என எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் நானும் முயற்சித்தேன். கண்ணீரே வரவில்லை. யாரும் பார்க்காத சமயம் பார்த்து கண்ணில் இரு சொட்டு நீர் எடுத்து வைத்துக்ககொண்டு அழ(!)த் தொடங்கினேன். எனக்குக் கிடைத்த முதல் முகமூடி அது.

அதன் பின் எத்தனையோ முகங்களை மாட்டிக்கொண்டு, எத்தனையோ முறை அழுது, எத்தனையோ முறை சிரித்து, பலமுறை சபித்து இன்று அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறேன்.

இன்று அழும் போது யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் இல்லை. எதற்காகவும் தயங்குவதில்லை. நான் எனக்காக வாழத்தொடங்கி 3 மாதமாகிறது.

* * * * * * * * * *

அந்த சப்பைமூக்கனைத் தொடர்ந்து மேலும் பலர். அப்படியே முன்னேறினேன். எங்கிருந்தோ வந்த குண்டொன்று என் முழங்காலுக்கு கீழே நலம் விசாரிக்க உள்ளே சென்றது. அதன் பின் எதுவும் ஞாபகம் இல்லை.
எதிரிகள் முகாமில் சிக்கி ஒரு வாரம் சிதைபட்டு ஒரு வழியாய் தப்பி சுந்தவரவனக்காடுகளில் ஒரு வாரம் ஊண் உணவின்றி திரிந்து கடைசியாய் உயிர் பிழைத்த போது உணர்ந்து கொண்டேன், உயிர் என்ற சொல்லின் பொருளை.

இப்படி ஒவ்வொரு வார்த்தைக்காய் எனக்கு பொருள் கற்பித்துக் கொண்டே போனது வாழ்க்கையெனும் அகராதி.

என் கருவறை நண்பன் ஒரு நாள் எங்கள் கர்னலினால் என் கண்ணெதிரே சுட்டுக்கொல்லப்பட, என்னுள் துளிர் விட்ட செடி கருகிப்போனது. நான் மிக நெருக்கத்தில் கண்ட மரணம் அது. என் கனவுகள் பொடியாயின. அவன் போர்க்களத்தில் மடிந்திருந்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் அவனின் மரணம் என்னை உலுக்கிப் போனது.

அங்கிருக்க மனமின்றி பணியைத்துறந்து ஊர் திரும்பினேன்.
ஏகப்பட்ட ஏளனப்பேச்சுகள்.
"சுயநலக்காரன்"
"போரைக் கண்டு பயந்துவிட்டான். கோழை""
எனப் பலப்பல..
அவர்களுக்கு பதில் சொல்லும் நிலையை நான் கடந்துவிட்டேன்.

என்னை விட்டுச்சென்ற தனிமை விடாமல் வந்து தொத்திக்கொண்டது.

மீண்டும் கல்கியையும் சுஜாதாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஓரு புத்தகநிலையம் துவங்கினேன். அது மற்றவர்களுக்காக என்பதை விட எனக்காக. எனக்குப் புத்தகங்கள் தேவை. இடைவிடாமல் தேவை. ஏகாந்தம் எனக்கு வேண்டாம்.

மீண்டும் பழையபடி ஆனேன்.

காலம் தன் கணக்குகளை என் மீது எழுதிச்சென்றது. அறுபதைக்கடந்த ஒருநாளில் கண்பார்வை லேசாக மங்கத் தொடங்கியது.

கடந்த மூன்று மாதமாய் இந்த மலைக்கிராமத்தில். இந்த மூன்று மாத காலத்திற்குள் என் மீதும் பசுமை படர்ந்து விட்டதாய் ஒரு உணர்வு. தனிமை கொடுமையல்ல, அது ஒரு தவம் என்று சொல்லித்தந்தது தூரத்தில் நிற்கும் கீரிப்பாறை.

அந்த மலைமீது காணிகள் என்னும் பழங்குடிகள் வசிக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து ஏதாவறு விற்றுச்செல்வார்கள். அப்படித்தான் அறிமுகமானான், நீலன்.. ஒருவேளை எனக்கொரு மகனிருந்து அவனுக்கொரு மகனிருந்தால் அத்தனை வயசிருக்கும். ஒடுங்கிய முகம், கரிய நிறம், ஒரு மாதிரி மலையாளம் கலந்த தமிழ்,.. புரியும்.

சூரியன் தன் பயணத்தை முடித்துக்கொள்ள சித்தமாயிருந்தான்.

ஒரு நாள் அவனுடன் காட்டுக்குச் சென்றேன். சுந்தரவனத்தின் விசாலமும் அங்கு நான் கண்ட தனிமையும் எனக்கு காடுகளின் மீது ஒரு வித இனம் புரியாத பயத்தை உண்டாக்கியிருந்தன. ஆனால் இந்த காடு என்மீது மாயம் புரிந்தது.

செல்லும் வழியெங்கும் என்னுடன் பேசிக்கொண்டே வந்தான். நான் பேசாத போது வழியிலிருந்த செடிகளுடன் பேசிக்கொண்டே வந்தான். சிறிய புழுக்கள் கூட அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.

எனக்குப் பொறாமையாய் வந்தது. இவனுக்கு பேச்சுத்துணைக்கு இத்தனை நண்பர்களா? அவனது நண்பர்களிடம் பேசும் வயசை நான் கடந்து விட்டேனா?

வெட்கம் விட்டு அவனிடம் கேட்டேன்.
சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவன்,
"தட்சிணா என்ன?"
"என்ன வேண்டும்? பணமா? உணவா? விளையாட்டுப் பொருளா?"
"கதை வேணும்…
எனக்குக் கதைபறைய வேணும்"

காணிகளின் நம்பிக்கையில் மலையிலிருக்கும் ஒவ்வொரு பாறையும் மனிதர்களே. தீராத கதைகேட்கும் ஆவலுள்ள மனிதர்கள் பாறையாய் மாறி தன் ஆயிரம் இதழ்களால் கானகம் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.

போருக்குப் பிந்திய என்வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு, அவன் கேட்ட தட்சணை.
என்கதை சொன்னேன்.
அவனுக்கு நிறைய விளங்கவில்லை. எனினும் ஆர்வத்துடன் கதைகேட்பனைப் போலக் கேட்டான்.
என் வாழ்க்கையில் நான் பட்டவை அனைத்தும் இதற்குத்தானோ.. இந்த ஒரு நாளுக்காகத்தானோ? எங்கிருந்து வந்தது எனக்கந்த பேச்சு. மணிக்கணக்கில் இடைவிடாது பேசியிருப்பேன். தொட்டியிலிருந்து வடியும் நீரைப்போல என் மனதும் கசிந்தது. அந்த ஒரு நாள், ஆயிரம் புத்தகங்களில் தேடியும் வர்ணிக்க வார்த்தை கிடைக்கவில்லை.

அதைவிடப்பெரிய பரிசு அவன் தந்த அந்த காட்டு மல்லிச்செடி. கோவிலில் பிரசாதம் பெறும் பக்தனைப்போல பக்தியுடன் வாங்கிக்கொண்டேன்.

அன்றிலிருந்து அந்த மல்லிதான் என் பேச்சுத்துணை. அதன்பின் அந்த நெட்டிலிங்க மரத்திலிருந்த அணில், என் மேஜையின் துளையில் இருக்கும் பொறிவண்டு, அவ்வப்போது வந்துபோகும் அந்த சிட்டுக்குருவி…

கேட்டுக்கொண்டிருந்த அந்த தேரை என்னையும் சேர்த்துக்கொள் என்றபடி மறைவில் சென்று ஒளிந்தது.

என் விதியை நினைத்தேன். இப்போதெல்லாம் அழுகைக்குப் பதில் சிரிப்புத்தான் வருகிறது.
"A tyrants excuse for crime and a fools excuse for failure.."
ஆம்ப்ரோஸ் பியர்ஸ் நினைவுக்கு வந்தார்.

இதற்குள் அந்த பெரிய மலை, காடு, என் மல்லிச்செடி என எல்லாவற்றையும் விழுங்கியபடி மெல்ல என்னை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது இருள்.
மின்சாரம் கூட எனக்கு இப்போது பிடிப்பதில்லை. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு என் நாட்குறிப்பைத் திறந்தேன். மீண்டும் அதே டிக் டிக்..டிக் என் எண்ணத்தை நிறைத்தது. இருளின் வருகைக்குப் பின் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு எனக்கிருக்கும் ஒரே சாட்சி.

29.03.07

இன்று மூன்று நல்ல காரியங்கள் செய்தேன்

1)பசியுடன் வந்த ஒரு அணிலுக்கு உணவிட்டேன்
2) என்னால் உயிர் விட்ட ஒருத்தனுக்காக உண்மையிலேயே அழுதேன்
3) நாளையும் மூன்று நல்லது செய்ய முடிவெடுத்துள்ளேன்.
அதற்கு மேல் என்ன எழுதுவதென்று தெரியவில்லை..

இன்னமும் நான் ரொம்ப நல்லவன், அப்பாவி …

கீழேயே எழுதினேன்

நான் தலைக்கனம் பிடித்தவன், சுயநலக்காரன்

என்னை அணியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று சொன்ன அந்த அணித்தலைவன் விளையாட வருகிறாயா எனக் கேட்டான்;
சப்பை மூக்குக் காரனின் முகம் தெரியாத மனைவி வந்தாள்; பள்ளியில் கடலைமிட்டாய் விற்கும் தாயம்மாக் கிழவியிடம் திருடிய 2 ரூபாய் நாணயம் கை கால் முளைத்து என்னைத் துரத்தியது; தி.ஜா வந்து ஏதோ ஒரு வார்த்தைக்கு அர்த்தம் கேட்டுப்போனார்.
வில்பர் ஸ்மித்துடன் புதையல் வேட்டைக்குச் சென்று மீள முடியாத காட்டுக்குள் சிக்கிக் கொண்டேன். எங்கு தேடியும் என்னைக் காணவில்லை.

என் கருவறை நண்பன் வந்து "தும் கப் ஆ ரகேகோ" என்றான்.

அதற்கடுத்தநாள் என் நாட்குறிப்பு நிரப்படவில்லை.
30.03.07
__________________
__________________
__________________
__________________
பட்டிருந்தால் எழுதியிருப்பேன்,

மல்லி இன்று பூத்தது.

3 comments:

Vilva said...

நின் அறிவின் விஸ்தரிப்பா? இது அனுபவ விஸ்தரிப்பா? இது வெறும் கற்பனையாகப்படவில்லை. கற்பனையையும் தாண்டிய ஏதொ சிலவற்றை அறிந்திருக்கிறாய் என்பதன் வெளிப்பாடு.

சுனைபோல சீரான கதைபோக்கு.. விஷய ஞானம்.. உணர்வுகள் விளக்கப்பட்ட விதம் ... பாராட்டத்தக்கவை.

வாழ்க வளமுடன்..!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல நடை. நல்ல கதை. தொடர்க!

-ப்ரியமுடன்
சேரல்

J S Gnanasekar said...

நல்ல கதை.

இக்கதையைப் படிக்க ஆரம்பித்தவுடன், மிகப்பெரிய ஆச்சரியம். இக்கதைக்காக நீங்கள் வாங்கிய முதல் பரிசை, இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் வாங்கினேன்.

-ஞானசேகர்