Monday, May 03, 2010

இடமாறு தோற்றப்பிழை

யாருமற்ற பெருவெளியில்
பஞ்சுப்பொதி சுமந்தபடி
ஊர்ந்துகொண்டிருந்த யானை,

நான்
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
உடல் குறுக்கி, துதிக்கை உயர்த்தி
ஒரு கோபுரமாய்ச் சமைந்தது

அந்த யானையின் படைப்பில்
என் பங்களிப்பும்
உண்டெனினும்,

அது காணாமல் போனதைப் பற்றிய
சஞ்சலங்கள் ஏதுமில்லை
என்னிடம்

புதிதாய் முளைத்த
கோபுரம் ஏற்படுத்திய
கிளர்ச்சி மட்டுமே

கல்பகாலமல்ல
கால் நிமிடம்தான்

கல்விழுந்த குளமென
சிறிய சலசலப்பில்
கோபுரம் சரிந்துவிழுந்து
தவழும் குழந்தையானது

அம்மாவிடம் அடம்பிடித்தும்
கிடைக்காத ஐஸ்க்ரீம்
ஆசையுடன் நான் நட்ட
பூச்செடி
சாகசங்கள் புரியும்
இரும்புக்கை மாயாவி

என் மனதுக்கு நெருக்கமான
அத்தனையாகவும் உருக்கொண்ட
அந்த மாயக்கம்பளம்
வெறும் வெண்மேகமென
உணர்ந்த ஒரு நாளில்
நான் வளர்ந்துவிட்டிருந்தேன்

Monday, April 26, 2010

இருத்தல்




சோப்புக்குமிழ்கள் ஊதி விளையாடும்
சிறுபிள்ளையாய்
உன் பார்வைகளை விசிறிச்செல்கிறாய்

ஒவ்வொரு குமிழும் என் உலகையே
பிரதிபலித்தபடி யாருக்காகவுமில்லாமல்
மிதந்து கொண்டிருந்தது

விரும்பி விரும்பிச்சென்று
குமிழ்களை தொடவிரும்பும் சிறுவனாய்
இலக்கற்றலையும் உன் பார்வைப்புலத்தில்
பட்டுவிடத் தவிக்கிறேன் நான்

என்செய்வேன்,
விரல்தொடும் அக்கணமே குமிழுடைந்து
என் உலகமும் சிதறுகிறது

இன்னும் சிலமுறை குமிழ்களை
இழந்தபின்தான் புரிகிறது

என் உலகம் என் கைகளில் இருப்பதைவிட
உன் பார்வையில் இருப்பதனால்தான்
இன்னும் இருந்துகொண்டிருக்கிறது

Tuesday, January 12, 2010

துளி விஷம்

கோபம் கொள்ள முடியா
நபர்கள் மீது
கோபம் கொள்ளும் நேரங்களில்
கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்
ஜீவராசிகளனைத்தும்
அவனாகவே உருக்கொள்கின்றன

நீ, அவன், அவள் என்று அதற்கு
பேதமில்லை

சின்ன பென்சில் கூட
கொலைக்கருவியாகிறது

குறைந்தபட்ச தண்டனையாய்
மரணதண்டனை அளித்து
கூர் உடைக்கிறேன்

கருவிகளில்லா நேரங்களில்
வெறும் கையே
போதுமானதாயிருக்கிறது

கையில் படியும் இரத்தக்கறை
இரசிக்கையில்
என்னையுமறியாமல்
முளைத்துவிடுகின்றன
இரு கோரைப்பற்கள்

தெருவில் கலவிசெய்யும் நாயை
கல்லெடுத்து எறிகிறேன்
அந்த நாயாய் என்னை
ஒருவன் சொல்லால் அடித்தது
கல்லாய் பறக்கிறது

வீட்டில் நுழைந்து காலணி விடுகையில்
குதித்தோடும் கரப்பானை
துரத்திச் சென்று மிதிக்கையில்
வாயொழுகும் இரத்தம் சுவைக்கிறது

ஆற்றாமை, கோபம், காழ்ப்பு
எந்த கோப்பையிலிருந்தாலும்
விஷம் ஒன்றுதானே..!

சாக்ரடீசாக விரும்பியே
பருகுகிறேன்
ஒவ்வொரு துளியையும்