
நான் வெற்றியென்று வெறிகொண்டு அலைந்தவர்களில் ஒருவன்
எது வெற்றி? கேள்வியில் கரைந்தவர்களில் முதல்வன்
அலையாத ஊருமில்லை!! தேடாத தேசமில்லை!!!
வெற்றி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி காட்சி தந்திருக்கிறது.
ஒரு சிலருக்கு வெற்றி எனும் சொல்லின் பொருள்
கல்விச்சாலையிலேயே முடிந்து போகிறது - இன்னும் சிலருக்கு
பணம் புகழ் பெண் செல்வம் என படிப்படியாக நீள
கடைசியில் ஒருவன் சொன்னான்
“உன்னுடைய வெற்றியை உன்னைத்தவிர
வேறு யாரால் தீர்மானிக்க முடியும்??"
இமயமலையின் உச்சிக்கே சென்றாலும் அது வெற்றியல்ல
உன் கண்களில் இருப்பது ஆகாயமென்றால்..
நானும் முடிவெடுத்தேன்
எனக்கு எல்லைகளற்ற ஒரு தேசம் வேண்டும்.
மன்னவன் எண்ணத்திற்கு மறுப்பேது?
அன்றைக்கே பட்டறைகளில் பொறி பறந்தது..
பார்சிறுக்கும் படைதிரட்டி பெரும்போர் தொடுத்தேன்
எதிர்த்தவர் தலைகளை
என் யானைகளுக்குக் கால்பந்தாடக் கொடுத்தேன்
மிச்சமின்றி துவம்சம் செய்து வெற்றி வாகை சூடினேன்

என் பாவங்களுடன் சேர்த்து
என் தேசத்து எல்லையும் விரிந்தது
* * * * * * * * *
"நாடு கடத்துங்கள் இவனை..!"
ஒருநாள் அனிச்சையாய் ஆணையிட்ட போதுதான்
கடத்துவதற்கு நாடே இல்லையென பதில்வந்தது
நாடு என்பது நிலத்துக்கல்ல; மனிதர்களுக்கு
பாதி பேரை நான் கொன்றேன்; மீதி பேரை போர் கொன்றது
இப்படி இருக்கையில் எப்படி இருக்கும் இனி நாடுகள்?
வெற்றிக்கு நான் தந்த வரையறை தவறோ?
முதன் முறையாக
கடந்து வந்த பாதை மீது சந்தேகம் வந்தது..
இழுக்கெனத் தெரிந்தும் துணிந்தபின் எண்ணினேன்..
நான் ஒருவன் வாகைப்பூ சூடுவதற்காக
ஆயிரமாயிரம் பெண்டிர் பூவிழந்தனர் என்பது
ஏன் எனக்குத் தெரியவில்லை?
நான் செய்த தவறுக்கு பூக்களுக்கும் ஏன் தண்டனை?
முடிவில் வெற்றியும்தான் எவ்வளவு சோகமானது..!
மனதில் ஒரு மின்னல்..
நீ முடிவென்று நினைக்கும் வரை எதுவும் முடிவல்ல
தற்கொலை என்பது எதிரியைக் கண்டு பயந்த
கோழையின் சவப்பெட்டி
பராக்கிரமம் பாடும் ஆயிரம் அடைமொழிகளும்
அதைவிட அதிகமாய் விழுப்புண்களும் சுமந்தவன் நான்.
எனக்கான முடிவு இதுவல்ல..
அதனை நானே தேடிக்கொள்கிறேன்..
மனதின் ஒரு ஓரம் மீண்டும் சொன்னது
-“என்றும் எனக்கு எல்லைகள் இல்லை”