Tuesday, October 16, 2007

நான் ஏன் எழுதுகிறேன்..? ஜெயகாந்தன்

எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன்.
எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச்செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன்.
வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்.
ஜெயகாந்தனின் வானொலி உரை- ஜீலை-5- 1971

இப்படிச்சொன்ன ஜெயகாந்தன்தான் பின்பொருமுறை, "நீங்கள் ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை?" என்று கேட்டதற்கு,
"நான் விரும்புவதை எழுதுவதற்கு எனக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ, அதே அளவு சுதந்திரம் எழுதாமல் இருப்பதற்கும் உள்ளது" என்றார்..

என்ன ஒரு விசித்திரமான பதில்..! அவருடைய கதாபாத்திரங்களின் சாயல், அவர் மூலம் அடிக்கடி வெளிப்படுவதைக் காணலாம். அல்லது எதிர்த்திசையில் , அவரது குணாதிசியங்கள் அவரின் கதாபாத்திரங்களின் மீது படிந்திருப்பதாகவும் கொள்ளலாம். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கங்காவாகட்டும் 'யுகசந்தி'யின் கெளரிப்பாட்டியாகட்டும், ஏதோ ஒரு விதத்தில் எங்கோ ஒரு மூலையில் அவரின் சாயல் தென்படும்.

அவர் தேர்தலிலும் ஒரு முறை போட்டியிட்டிருக்கிறார், தி.நகர் தொகுதியில். அதில் அவர் பெற்ற வாக்குகள் 200க்கும் குறைவே. எதற்காக தேர்தலில் நின்றார்? தெரியாது.. தேர்தல் முடிவுகளுக்குப் பின் "என்னை நம்பி வாக்களித்த அனைவருக்கும் நன்றி" என்ற அறிக்கையும் கூடவே வந்தது.

அவருடைய பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் தென்படுவது போன்ற 'ஸ்திரபுத்தி'யில்லாத தன்மையா? அல்லது, நான் நினைத்ததை நான் செய்கிறேன் என்ற தன்னிறைவா இது.? தெரியாது..

இவை எல்லாவற்றையும் கடந்து, என் மனதைக்கவர்ந்த எழுத்தாளர் அவர்.. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவரின் 'கர்வம்'. தான் ஒரு எழுத்தாளன் என்ற கர்வம்.. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத அந்த ஞானச்செருக்கே அவரின் அடையாளம்.

பாரதீய ஞானபீட தேர்வுக்குழுவினர் சொன்னது...
"தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, இந்திய இலக்கிய உலகுக்கு அவரது பங்களிப்பு மேன்மை சேர்த்திருக்கிறது. "
உண்மைதான்...

1 comment:

ராஜ நடராஜன் said...

என்னைப் பொருத்தவரை எழுபதுகளின் இறுதிவரை அறிந்த,புரிந்த ஜெயகாந்தன் வேறு.இப்போதைய முகம் தெரியா ஜெயகாந்தன் வேறு.