Monday, November 19, 2007

எனக்கென...
நாளின் இனிமை சொல்லும் இளகிய மாலை...
வானவில்லும் வியந்து போகும் அழகிய சோலை..
பூக்களின் பாடலை என் காதில் ஓதி
போதை கூட்டியது தென்றல்..
தனிமையில் அமர்ந்திருந்த நான்
என்னைச்சுற்றிய புல்வெளியில்
பனித்துளியாய் மாற யத்தனித்த நேரம்,
முன்னறிவிப்பின்றி என் முன்னே வந்தமர்ந்தது
ஒரு பட்டாம்பூச்சி


அனிச்சையாய் கைகள் நீட்டினேன்..
எதற்காக? பிடிப்பதற்கா?
தெரியவில்லை..
பிடித்தால் என்ன செய்யப்போகிறேன்?
மென்மையின் மேனி தீண்டவோ?இல்லை
வழித்துணையாய் வீடு செல்லவோ?
விடையில்லை.. ஆனாலும்
உள்மனதில் உருக்கொண்ட ஆசையில்
உடன் களத்தில் குதித்தேன்.எழுந்து நெருங்கினேன்.
மெல்ல படபடத்து
அடுத்த மலருக்குத் தாவியது..
தொடர்ந்தேன்..
அதற்கடுத்த மலருக்கும்..
என் பிரயாசை அனைத்தையும்
தன் ஒற்றைச் சிறகசைப்பில் தட்டிவிட்டபடி
பூக்களுக்கிடையில் ஒரு பிரௌனியன் பாதையில்
சிறகடித்தது பட்டாம்பூச்சி..


நீண்டு கொண்டே சென்ற
அந்த நிகழ்காலத்தின் முடிவில்
நிச்சயமற்று நான்..
கடந்து செல்வது மலர்ப்பாதை எனினும்
என் மனதுக்குள் ஒற்றை முள்ளாய்
ஒரு ஏமாற்றம்..திரும்பிப்பார்த்த போது
தொடங்கிய இடத்திலேயே நான்..
கால்கள் களைத்து கடைசியில் வந்தமர்ந்தேன்..
காட்சி இன்பத்தில் மனம் லயிக்கவில்லை..
மனதில் வெறுமை மட்டுமே நிரம்பி வழிந்தது..
சாதாரண வெறுமையல்ல..
அள்ள அள்ளக் குறையாத வெறுமை.
கண்ணைச்சுற்றி காட்சியிருந்தும்
காணமுடியாத வெறுமை..
பச்சைப் புல்வெளிகளில் இருந்த ஆனந்தம்
இப்போது இல்லை.
இப்பூங்காவின் கவின் முழுமையும்
அந்த ஒற்றைப் பட்டாம்பூச்சி
களவாடிச் சென்று விட்டதாய்த் தோன்றியது..


இருக்குமிடமெங்கும் மெல்ல இருள் படர்ந்தது.
என் மனதிலும்தான்..
வானம் பார்த்தேன்..
என்னைப் போலவே தனிமையில்
அந்த நிலா..
எனக்காய் அழுவதாய்த் தோன்றியது.
நிலவுக்கு ஆறுதல் சொல்லும் தைரியம்
எனக்கிருக்கவில்லை...
மௌனமாய் தரை நோக்கியிருந்தேன்..
மனதினுள் ஏதோ ஒரு சலசலப்பு..
துரத்தல் தொடங்கிய அதே மலர் மீது
பட்டாம்பூச்சி மீண்டும்.


இம்முறை என் கைகள் நீளவில்லை..
மௌனமாய்ப் புன்னகைத்தபடி விழி மூடினேன்..
நொடிகளும் யுகங்களும்
உருபுமயக்கங்களாய் உருப்பெற்று
உருண்டோடின..
விழிதிறந்த போது
என் விழித்திரையில்
அந்த பட்டாம்பூச்சி இல்லை..
அதிர்வின்றி எழுந்து நின்றேன்..
மனதில் ஏதோ ஒரு நிம்மதி..
இப்பூங்கா மீண்டுமொரு முறை
பூப்பெய்தியதாய் ஒரு பிரமை..
என் மனம் இப்போது
ஆனந்தமாய் படபடத்துக் கொண்டிருந்தது
மெல்ல வீடு நோக்கி நடக்கத்தொடங்கினேன்..
குனிந்து பார்க்கவில்லை என்றாலும்
எனக்கு நிச்சயமாய்த் தெரியும்
அந்த பட்டாம்பூச்சி
இப்போது அமர்ந்திருப்பது
என் தோள் மீது..

5 comments:

நாடோடி இலக்கியன் said...

இந்த வயதிலேயே இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள்,வருகின்ற காலங்களில் கவனிக்கப்படுவீர்கள்,தொடர்ந்து எழுதுங்கள்,பாராட்டுக்கள்!!!!!!

Bee'morgan said...

Nandri Ilakkiyan..!!

அனுஜன்யா said...

brownian motion என்ன அழகான உவமை வண்ணத்துப்பூச்சியின் பறக்கும் பாதையை விவரிக்க! 'நொடிகளும் யுகங்களும் உருபு மயக்கங்களாய்'! நாடோடி இலக்கியன் சொல்வதை முற்றிலும் ஆமோதிக்கிறேன். 'தமிழ்மணம்' போன்ற திரட்டிகளில் இணைத்தால், என்னும் பலர் உங்களைப் பார்த்து, மகிழ்ந்து, சில பெரியவர்கள் செதுக்கவும் கூடும்.

அனுஜன்யா

ஜெகன்நாதன் சித்ரா said...

பட்டாம்பூச்சியோடு மகிழ்ந்திருந்த காலங்களை உவமைகளோடு விளக்கிய கவிஞருக்கு பாராட்டுகள்
பல.......

என்றும் அன்புடன்
ஜெகன் சுசி.

Bee'morgan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெகன்..