Saturday, January 03, 2009

சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்


நீங்கள் கடைசியாக வரைந்தது எப்போது? நினைவிலிருக்கிறதா?

எனக்கு வரையவே வராது. நான் வரைந்ததே இல்லை என்று தத்து பித்து காரணங்களெல்லாம் வேண்டாம்.
நாம் எல்லாருமே வரைந்திருக்கிறோம்.. சிறிதோ பெரிதோ.. சுமாரோ சூப்பரோ, சிலேட்டோ தரையோ புதுச்சுவரோ, அதனை ஒரு தேர்ந்த ஓவியனுக்கே உரிய சிரத்தையுடன் மற்றவர்கள் நினைப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நமக்காக.. நமக்காக மட்டுமே வரைந்திருக்கிறோம்.. நினைவிலிருக்கிறதா?

ஆனா ஆவன்னாவிற்கும் முன்னதாக நம் கைவரப்பெற்ற கலை அது. நாம் கற்றுக்கொண்ட முதல் வரிவடிவம்..
வரைந்து முடித்த பின்பான அந்த மனநிலை நினைவிலிருக்கிறதா..? வரைந்தது சின்னஞ்சிறிய கோட்டோவியமே ஆயினும், முப்பரிமாண பிம்பமென மயக்கமுறும் வகையில் வெவ்வேறு தொலைவுகளில் வெவ்வேறு கோணங்களில் வைத்து ரசித்திருக்கிறீர்களா? தீக்குச்சி மனிதர்களைக் கொண்டு வகுப்பறை நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறீர்களா? பள்ளியில் ஓவிய நோட்டில், ஓரு மலை அதன் இடையிலிருந்து ஓடிவரும் ஒரு நதி, கரையில் ஒற்றைத் தென்னைமரம், அருகிரேயே வயல் சூழ்ந்த ஒரு குடிசை வரைந்த அனுபவம் உண்டா?

எங்கே இருக்கிறான் அந்த ஓவியன் இப்போது? என்றாவது தேடியதுண்டா?

நம் முதல் ஓவியம் எழுத்துக்கள்தான். அப்படி ஒரு சிரத்தையுடன் ஒவ்வொரு எழுத்தாக வரையத் தொடங்கினோம். அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.

கொஞ்சம் யோசித்தால், பள்ளியில்தான் நான் முதன் முதலில் மற்றவர்களுக்காக வரையத்தொடங்கினேன்.. ஆசிரியர்களுக்காக. நான் வரையவனவற்றின் மதிப்பு அவை பெறும் மதிப்பெண்களை விட அதிகம் எனக்கு.. ஒவ்வொருவருக்கும்தான்.
இப்படித்தான் வரைய வேண்டும் என்றில்லாமல், எப்படியும் வரையலாம் என்றிருந்த காலமது.
8 ம் வகுப்பு ஆ பிரிவில் கயல்விழியின் ரப்பர் வளையளோ, ஜியாமெண்ட்ரி பாக்சின் நீள் வட்டத்துளையோ, ஏதுமற்ற நேரங்களில் வெறும் கையோ போதுமானதாக இருந்தது கிளாமிடோமோனாசை வரைவதற்கு. அப்போதெல்லாம் கிளாமிடோமோனாஸ் ராமுவிடம் வட்டமாகவும், புண்ணியமூர்த்தியிடம் நீள்வட்டமாக பென்சில் ஷேட் உடனும், காயத்ரியிடம் பொட்டு வைத்த முகம் போலவும் இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு வளர்ப்புப்பிராணி மாதிரி. வரைந்து முடித்த பின்,

”ஹை.. என்னோடதப் பாரு.. எப்படி இருக்குனு.. நல்லாருக்கா..?”

ஒவ்வொரு வகுப்பிலும்.. இந்த சம்பாஷனைகள் கண்டிப்பாய் இடம் பெற்றிருக்கும்..

வகுப்பறைக்கு வெளியே ட்வீட்டியும் மிக்கி மௌசும் என் பால்ய நண்பர்கள். ஏராளமான முறை வரைந்திருக்கிறேன். தங்கமலரில் வரும் கிருஸ்துமஸ் தாத்தா, ஒரு வரி பிள்ளையார், காந்தி தாத்தா என அனைவரும் என் கைவண்ணத்திலிருந்து தப்பியதில்லை.

பள்ளியில் மிக எளிய கோட்டோவியங்களிலிருந்து கொஞ்சம் சிக்கலான குறுக்குவெட்டுத் தோற்றங்களை வரையத்தொடங்கிய நாளில், என் நண்பர்கள் பலருக்கு வரைவதின் மீதிருந்த ஆர்வம் ஓரமாய் ஓடிப்போய் ஒளிந்து கொண்டது. அதன் உச்சம் விலங்குசெல்லின் குறுக்கு வெட்டுத் தோற்றம். அந்த சமயம் பெரும்பலானோர், பேப்பரில் பென்சில் கொண்டு கொத்து பரோட்டோ போடத் தொடங்கியிருக்க நான் மட்டும் கோலத்துக்கு புள்ளி வைப்பதாய் வைத்துக்கொண்டிருப்பேன். எப்படியோ வந்து ஒட்டிக்கொண்டு விட்டது அந்த ஆர்வம். நான் பெரிய ஓவியன் என்ற அவசரமுடிவுக்கெல்லாம் வரவேண்டாம். நான் வரைபவன். அது எப்படி வந்தாலும் விடாது வரைபவனாகத்தான் இருந்தேன். அது ஏதோ ஒரு வகையில் மனநிறைவைத் தந்தது.



கல்லூரிக்கு வந்த புதிதில், Engineering Drawing ஆஸ்பத்திரி சுத்தத்துடன் வரைதலை அணுகச் சொன்னது. ஒவ்வாரு மில்லி மீட்டரும் வரைதலின் அங்கம் என்றது. வரைந்தேன். அதுவும் கூட புதுவகையான ஆனந்தமாக இருந்தது. வரைவதற்கென்றே பிரத்யேகமான தயாரான தாள் , விதவிமான கருவிகள், உயரமான மேசை என புதுச்சீருடையில் பள்ளி செல்லும் குழந்தையின் குறுகுறுப்புடன் கடந்து சென்றன அந்த ஓவிய நாட்கள்.
முதலாமாண்டு கடந்த பின்னரும் கூட அவ்வப்போது, தூங்க வைக்கும் பேருரையாசிரியர்களின் வகுப்புகளில் நோட்டுப்புத்தகத்தில் ஏதேதோ வரைந்ததுண்டு.

ஆனால் இன்று வேலைக்கு வந்த பின் கடைசியாய் வரைந்தது எப்போது என்று தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. வரைதல் என் விருப்ப பொழுதுபோக்காக இருந்ததிலிருந்து, ஒரு தொழிற்பெயராய் மாறியது எப்போது என்று யோசித்தால் விடையில்லை.
ஒரு வேளை பால்யம் தொலைத்து சொந்தம் விட்டு, தேசம் விட்டு தூக்கம் தொலைத்து நாம் துரத்தும் நாணயச் சிதறல்களில் காணாமல் போயிருக்கலாம். எனக்கு வரைதல் போல உங்களிடமிருந்தும் கவனிக்கக் கூட அவகாசமின்றி ஏதாவதொன்று காணாமல் போயிருக்கக் கூடும். கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு தேடிப்பாருங்கள், தொலைத்த இடத்தை கடப்பதற்கு முன்..

பள்ளியில் என்னுடன் படித்த பழனிவேலுவுக்கு வினோதமானதொரு பழக்கமுண்டு. ஒவ்வொரு முறை சமூகஅறிவியல் பாடத்தில், பெருங்கடல்களைக் குறிக்கச்சொல்லி வரைபடங்கள் கொடுக்கப்படும் போதெல்லாம், சமுத்திரங்களை குறித்து விட்டு, அவற்றில் கர்ம சிரத்தையாக மீன்களை வரைந்து கொண்டிருப்பான். பல முறை ஆசிரியர்கள் கூப்பிட்டுக் கண்டித்தும் கூட அவன் மாறவே இல்லை. கேட்டால்,

”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்? என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.

ம்ம்ம்...
இப்போது யோசித்துப் பார்க்கையில் உண்மையென்றே படுகிறது.

41 comments:

ரெஜோ said...

ஹாய் ED புலி ..

இன்னமும் அழகாய் நினைவிருக்கின்றன அந்த நாட்கள் ...

இத எப்டி பாலா வரையறது ??

அது ரொம்ப ஈசி சீனி .. ஒரு ரூபாய் எடுத்துக்கோ .. அதுல நூல் சுத்தி பிரிக்கும் போது கிடைக்கற மாதிரி கற்பனை பண்ணிக்கோ ...

:-)

ரெஜோ said...

கதை என்று நினைத்து தான் ஆரம்பித்தேன் . பத்தி என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை .. நல்ல முயற்சி .. படிக்கும் ஒவ்வொருவருக்கும் எதையாவது ஒன்றை நினைவு படுத்தினாலே போதும் ... Mission Completed .. நீ செய்திருக்கிறாய் .. தொடரட்டும் ... :-)

ரெஜோ said...

//

கிளாமிடோமோனாஸ் ராமுவிடம் வட்டமாகவும், புண்ணியமூர்த்தியிடம் நீள்வட்டமாக பென்சில் ஷேட் உடனும், காயத்ரியிடம் பொட்டு வைத்த முகம் போலவும் இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு வளர்ப்புப்பிராணி மாதிரி

//

எனக்கு அழகாய் வரையத் தெரிந்த ஒரே ஓவியம் அமீபாவுடையது .. அதுவும் பள்ளி நாட்களில் என்னுடைய வானவில் அமீபா மிகப் பிரபலம் ,, எந்த அளவில் என்றால் ஆர்வக் கோளாரில் , வரையக் கற்றுத் தருவதாகச் சொல்லி , பக்கத்து இருக்கைக் காரனின் புது sketch pocket ஐத் தீர்த்து , கணக்கு வாத்தியாரிடம் அடி வாங்குமளவு ..
அடிக்க மாட்டாரா என்ன ?? வரைந்தது கணக்கு நோட்டுப் புத்தகத்தில் தானே :-)

Anonymous said...

nalla iruku pa :)school life la na varanchathu kooda ninaivukku vanthadu enaku :) nice one

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஏதேதோ எண்ணங்களை அசை போடச் செய்துவிட்டாய் பாலா. நன்றி! பழனிவேலுவின் குணாதிசியத்தோடு கூடிய ஒரு நண்பன் எனக்கும் பால்ய பருவத்தில் இருந்தான்.

-ப்ரியமுடன்
சேரல்

Kingsly said...

என் நினைவுக்கு வருபவை..

8 ஆம் வகுப்பு.. பூமர் பப்பில் கம் பரவலாக பேசப்பட்ட தருணம்.. ஒரு பிஸ்கெட் கம்பெனி நடத்திய ஓவியப்போட்டி.. மாணவர் தன் தாயின் உருவத்தை வரைந்து அனுப்பவேண்டும் *. நானும் வரைந்தேன்..

ஓவியத்தை அனுப்ப வேண்டிய நேரம் வந்தது.. விதிமுறைகளை மீண்டும் வாசித்தேன்.. *-இன் அர்த்தம் புரிந்தது. ஓவியத்துடன் நூறு பிஸ்கெட் கவர்களையும் சேர்த்து அனுப்பவேண்டுமாம்!!!

அஞ்சல் செய்ய ஒரு வார காலம் மட்டுமே இருந்தது.. இருப்பினும் வீட்டிற்கு தெரியாமல் பிஸ்கெட் கொஞ்சம் கொஞ்சமாக நூறு பாக்கெட் வாங்கினேன்.. அந்த ஒரு வாரத்தில் அத்தனையும் காலி செய்தேன்..

ஓவியத்தையும் நூறு கவர்களையும் அனுப்பினேன்.. பதில் ஏதும் வரவே இல்ல..

அப்போது, அந்த ஓவியப்போட்டியால் உயரிய என் உடல் எடை.. இன்று வரை குறைக்க முயற்சிக்கிறேன்!! - முடியல!

அன்புடன்..
கிறிஸ்துஅரசன் - கிங்ஸ்லி என்பதன் தமிழாக்கம் :)

bhupesh said...

பாலா அசத்தல்!! இதோ இன்னொரு ரசிகன்.

சாணக்கியன் said...

நான் ஆர்வமாக கடைசியாக வரைந்தது பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் என்று நினைக்கிறேன். அதன் முன்னர் 6,7-ஆம் வகுப்புகளில் ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். பின்னர் அது என்னுடைய ஏரியா இல்லை எனவோ என்னவோ விட்டுவிட்டேன். ஆனால் ED யில் ஒரு ஆர்வம் இருந்தது. அது புரிதல்/கற்றல் கொடுத்த சந்தோசத்தினால். பின்னர் இசையும் தமிழும்தான் என் ஆர்வாயின. அவை என்றும் தடைபடவில்லை இன்று வரை. ஒருவேளை குறைந்திருக்கலாம். கணிப்பொறியிலும் வரையலாமே? என் தந்தை கணிப்பொறியில் வரைந்த சில ஓவியங்கள் http://kaniniththoorigai.blogspot.com/

Vilva said...

அருமை..! ஒவ்வொரு வரியை கடக்கும் போதும், ஒவ்வொரு நிகழ்வை ஞாபகப் படுத்திவிட்டு நகர்கிறாய். தனிமையிலோ நண்பர்கள் மத்தியிலோ ஒவ்வொருவரும் புலம்பும் வார்த்தைகளுக்கு வடிவம் தந்திருக்கிறாய்.

பி.கு: “எனக்கு சில நிமிடங்கள் ஆயுள் நீடித்துள்ளது..!” :-)

Anonymous said...

ரொம்ப இயல்பா மனசை தொடும் பதிவு.
தொடரட்டும் உன்னோட எழுத்துக்கள்.

Bee'morgan said...

@ரெஜோ:
:) :)
ஏதோ எட்டிப்பார்க்கும் தூரத்தில், நேற்று நடந்த மாதிரி இருக்கு

@ ரெஜோ, சத்யா, சேரல், கிங்ஸ்லீ, சாணக்கியன், வில்வா அண்ணா:
மொத்த பதிவுமே, கொசுவர்த்தி சுத்தறத்துக்காக எழுதினதுதான். ரொம்ப இல்லன்னாலும், படிக்கறவங்க அவங்கவங்க அளவுக்கு கொஞ்சமா சுத்தினா அதுவே போதும்.. :D நீங்க எல்லாரும் இங்க வந்து சுத்தினதுல எனக்கு மிக்க மகிழ்ச்சி.. :) :)

Bee'morgan said...

@ sathya:
நன்றி சத்யா.. :)

@ சேரல்:
நன்றி சேரா :) கொஞ்சம் நிதானமாக யோசிக்கையில்தான், எத்தனை விதவிதமான நண்பர்கள் நமக்கு வாய்த்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. இப்பதிவால், நீங்கள் ஒரு நண்பரை நினைவுகூர்ந்ததில் மகிழ்ச்சி.

@ கிருஸ்துஅரசன்
இதுதான் உன்னோட பாடி பில்டிங் உத்தியா..? சொல்லவே இல்ல.. என்னதான் இருந்தாலும் ஒரு வாரத்தில ஒரு நூறெல்லாம் ரெம்பவே ஓவர்

Bee'morgan said...

@ பூபேஷ்:
ஓ.. வாவ். அண்ணா நீங்களா..? :) :) நீங்க வந்ததே எனக்குப் பெரிய சந்தோசம்.
தங்களின் முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா :)

Bee'morgan said...

@ சாணக்கியன்
அழைத்தமைக்கு நன்றி சாணக்கியன். கண்டேன்.. MS Paint லேயே இவ்வளவு சிறப்பாக செய்யும் உங்கள் தந்தைக்கு Coraldraw, photoshop போன்ற இன்னும் கொஞ்சம் நவீன பயன்பாடுகளை அறிமுகப்படுத்தலாமே..!

Bee'morgan said...

@ வில்வா:
நன்றி அண்ணா..
//
பி.கு: “எனக்கு சில நிமிடங்கள் ஆயுள் நீடித்துள்ளது..!” :-)
//
எனக்கும் கொஞ்சம் கமிஷன் உண்டுல்ல..? :)

Bee'morgan said...

@ தாரிணி:
நன்றி அக்கா.. :)

MSK / Saravana said...

// அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.//

அட்டகாசம் பாலா..

MSK / Saravana said...

//”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்? என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.//

மிக அருமை..

MSK / Saravana said...

பதிவு நல்லா இருக்கு.. எனக்கு ஓவியங்கள் மிகவும் பிடிக்கும்..

Bee'morgan said...

தவறாமல் வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி சரவணா :)
அந்த கடைசி வரியிலிருந்துதான் இந்த பதிவே தொடங்கியது..

எந்த வகை ஓவியம் பிடிக்கும் என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடுகள் எழலாம்..
ஓவியங்கள் பிடிக்காதவர்கள் இருப்பார்களா.. ? :) எனக்கும் பிடிக்கும்..

Unknown said...

எனக்கும் ஓவியங்கள் மிகப் பிடிக்கும் பாலா..நான் பள்ளி நாள்களில் நிறைய பரிசு வாங்கியிருக்கிறேன். பள்ளிப்படிப்பு முடித்த பின்னும் என்னுடைய ரிகார்ட் நோட்டுக்கள் பள்ளியில் ரெபரென்ஸுக்காக வைத்திருந்தார்கள். உங்கள் பதிவு அதையெல்லாம் ஞாபகப்படுத்திவிட்டது. கடைசியாய எப்போது வரைந்திருப்பேன்...கணினியில் பெயிண்ட் ப்ரஷ்ஷில் பெண்ணின் முகத்தை மட்டும் வரைவேன். குழந்தைகளுக்காக ஸ்லேட்டில் பூக்கள், மரங்கள் வரைவேன்...உங்கள் நண்பர் பழனிவேலைப்போல மீன்கள் வரைவேன்..."வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா" என்று நினைக்கத் தோன்றுகிறது இப்பதிவை படித்தபின். என் மகள் மிக நன்றாய் வரைகிறாள் பாலா..அவளுக்கு தேவையான அத்தனை ப்ரஷ்கள், ஓவிய சமபந்தமான அனைத்தும் வாங்கித் தந்து அவளை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அவள் பள்ளியிலும் அவளுக்கு பரிசுகளும் ஊக்குவிப்புக்களும் நிறைய...நல்ல பகிர்வு பாலா. நன்றி

Bee'morgan said...

நன்றி உமா :)
//
பள்ளிப்படிப்பு முடித்த பின்னும் என்னுடைய ரிகார்ட் நோட்டுக்கள் பள்ளியில் ரெபரென்ஸுக்காக வைத்திருந்தார்கள்
//
ஆகா.. பாக்கி எல்லாரும் இதப்பாத்து கத்துக்கங்க -னு எல்லா பள்ளியிளும் சில ரெபரன்ஸ் நோட்டுகள் வைத்திருப்பார்கள்.. அச்சடிச்ச மாதிரி மணிமணியா அதில எழுதியிருக்கறத பாத்தாலே கொஞ்சம் பொறாமையா இருக்கும்.. நீங்களும் அந்த மாதிரியா..? ;o) ஒத்துக்கறேன்.. நீங்க பெரிய ஆளுதான்..

உங்களின் ஞாபக அடுக்குகளில் புதைந்து போயிருந்த சில நிகழ்வுகளை இப்பதிவு மீட்டெடுத்திருந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சன்மானம். நீங்கள் சொல்வதைக் கேட்கையில், அந்த சன்மானம் நிச்சயம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன்.

உங்கள் குழந்தைக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கம் பாராட்டத்தக்கது. தொடர்ந்து செய்யுங்கள்.. :)

Unknown said...

பாலா, புதிய பதிவுகள் ஏதும் எழுதவில்லையா? உடல் நலம் சரியில்லையா?

Bee'morgan said...

@உமா:
அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. நான் மிக்க நலம்.. நீங்க பரிவுடன் கேட்டதே டானிக் சாப்பிட்ட மாதிரி இருக்கு. :) இதோ எழுதியாச்சு அடுத்த பதிவு. படிச்சுப்பாருங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்? என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.

ம்ம்ம்...
இப்போது யோசித்துப் பார்க்கையில் உண்மையென்றே படுகிறது.

:)-

Bee'morgan said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா :)

தோகை said...

நல்லா இருக்கு பாலா..
பதினொன்னாவதுல பிள்ளையாரை வரைஞ்சு தொடங்கிய ஓய்வு நேரத்துல வரையப் போட்ட ஓவிய நோட்டைத் தேடிப்பாத்தேன்.. கிடைக்கல.. :( (அடுத்த முறை ஊருக்குப்போறப்ப நல்லா தேடிப்பாக்கணும்!)
ED - இப்ப டீச் இந்தியா நல்வினையால ஒரு காது கேளா டிப்ளமோ மாணவனுக்கு சொல்லிக் கொடுத்தப்ப மலரும் நினைவுகள்.. (submissionக்கு அடுத்தநாள் hostel-ஏ எனக்கு ED sheets போட்டது நினைவிருக்கா? :D)

Bee'morgan said...

நன்றி தோகை.. :)

ம்ம்.. தேடிப்பார்.. இத்தனை நாட்கள் கழித்து புரட்டிப் பார்த்தல் கூட ஒரு சுகமான அனுபவம்தான்.

Bee'morgan said...

@தோகை
//
hostel-ஏ எனக்கு ED sheets போட்டது நினைவிருக்கா? :D)
//
மறக்க முடியுமா அதெல்லாம்.. :)

அ.மு.செய்யது said...

இந்த பதிவை படித்து விட்டு சத்தம் போட்டு "சான்ஸே இல்லன்னு" கத்தி வைத்தேன்.

அலுவலகத்தில் எல்லோரும் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள்.

உங்களின் இந்த பதிவிற்கு வலைச்சரத்தில் தொடுப்பு கொடுத்த அமித்து அம்மாவிற்கு என் நன்றிகள்.

ஆயிரத்தில் ஒரு பதிவு இது.

Venkatesh Kumaravel said...

மிகவும் நெருக்கமான எழுத்துகள். ரசித்து எழுதியிருக்கிறீர்கள். நினைவுகூர்தல் ஒரு கலை. ரொம்ப லாவகமாக சாத்தியமாயிருக்கிறது உங்களுக்கு. வாழ்த்துகள். ஏகப்பட்ட நினைவுகளினூடே என்னை ஆழ்த்திவிட்டீர்கள். நான் இப்போதும் வரைந்துகொண்டுதான் இருக்கிறேன், ஏனெனில் நான் கட்டிடக்கலை (ஆர்க்கிடெக்சர்) படித்துக்கொண்டிருப்பமையால். உங்கள் வலைப்பூவை ஃபாலோ செய்யத் துவங்கியிருக்கிறேன். தொடர்ந்து எழுதவும்.

S.A. நவாஸுதீன் said...

நம் முதல் ஓவியம் எழுத்துக்கள்தான். அப்படி ஒரு சிரத்தையுடன் ஒவ்வொரு எழுத்தாக வரையத் தொடங்கினோம். அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.

உண்மை உணரும்போது உடம்பு மகிழ்ச்சியில் லேசாக சிலிர்துகிச்சுங்க. நானும் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று நான் வரைந்தேன்?

Bee'morgan said...

@செய்யது:
நன்றி தோழரே..! :) தொடர்ந்து வாருங்கள்.. உங்கள் ஊக்கமும் விமர்சனமும் என்னை மென்மேலும் வழிநடத்தும்..

Bee'morgan said...

பின்தொடர்வதற்கு நன்றிகள் வெங்கிராஜா :) பரபரப்பாய் இயங்கும் வாழ்வில் சிலநிமிட ஆறுதலுக்காவது கடந்து போன காலங்களை நினைவு கூர்தல் அவசியமாகிறது. அதிலும் இது போன்ற நினைவு கூர்தல்கள், ”ஓ.. நீயும் அப்படித்தானா” என்ற பரஸ்பர அறிமுகம் தருகையில் இன்னும் ஒரு சந்தோஷம். :)

Bee'morgan said...

நன்றி நவாஸுதீன் .. :) உங்களை ஒரு நிமிடமேனும் யோசிக்க வைத்திருந்தால் அதுவே இப்பதிவின் வெற்றி.

Bee'morgan said...

தொடுப்பு கொடுத்த அமித்து அம்மாவிற்கு சிறப்பு நன்றிகள்.. :) :)

முபாரக் said...

”சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்” இந்த ஒரு வரியே போதும். பலவிதமான சலனங்களைத்தந்து கொண்டேயிருக்கிறது.

வாழ்த்துகள்

Bee'morgan said...

நன்றி முபாரக்.. :)

Smiley said...

Super da bala. !! Felt totally nostalgic !!

நானும் ஒரு ரூபாய் நாணயம், வளையல் வைத்து வரைந்தது உண்டு.
மலைகள்,மேகம், ஆறு, கரை அருகில் தனிமையில் மனிதன்..
... எல்லாமே நினைவுக்கு வருது !!

GRIFFIN said...

Supera irukku. :-)

Bee'morgan said...

Thanks da Raghu.. :)