”..... அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.
அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?
பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.
கேட்டு விட்டு எழுதுகிறேன்.”
படித்து முடித்து மூடிவைத்தபோது எதுவுமே தோன்றவில்லை. சுற்றி சுற்றி மொத்தமாக வெறுமையை நிரப்பிச்சென்றதாக ஒரு பிரமை.. இப்புத்தகம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூட தெளிவாகச் சொல்லமுடியவில்லை.. ஏதோ பிடித்திருக்கிறது.. ஏதோ பிடிக்கவில்லை.. ஏதோ குறைகிறது. ஆனாலும், நிச்சயம் ஏதோ உள்ளே இருக்கிறது.
மேலும் படிக்க...
ஒரே கோட்டில்தான் கதை செல்கிறது. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைத் தொடராமல், மொத்தமாக அரசூரைத் தொடர்கிறது இக்கதை.
காலம் கிட்டத்தட்ட இரு நுற்றாண்டுகளுக்கு முன்.. அது ஏன் கிட்டத்தட்ட? அதுதான் பிரச்சனையே. காலம் என்ற ஒன்றே இங்கு கிட்டத்தட்டதான். சரி. கதைக்குப் போகலாம் வாங்க.
அரசூரில் ஒரு புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணர் சுப்ரமணிய அய்யர். அவருக்கு இரண்டு புத்திரர்கள். வேதங்களை கரைத்துக்குடித்து கடைசியில் மனநிலை பிறழ்ந்து போகும் சாமா முதல்பையன். தந்தைக்குப்பின் புகையிலை வியாபாரத்தை பொறுப்பாக கவனித்துக்கொள்ளும் சங்கரன் இரண்டாமவன். வியாபாரம் மட்டுமல்ல. தினம்தினம் மாடியிலிருந்து பக்கத்து அரண்மனையில் ராணியின் ஜலக்கிரீடையையும் கவனித்துக்கொள்கிறான்.
ராணிக்கு ஒரு ராஜா. பெயரைத்தவிர ராஜாவுக்குரிய எந்தவொரு அடிப்படைத்தகுதியுமின்றி, வெள்ளையர்களை அண்டிப்பிழைக்கும் ஒரு டம்மி ராஜா. அவருக்கு மலப்பிரச்சனையிலிருந்து வாய் உபசாரம் கேட்கும் புஸ்தி மீசைக்கிழவன் வரை ஆயிரத்தெட்டு பிரச்சனைகள். இதில் தன் மனைவி குளிக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் பார்க்கிறான் என்பது பிரதானமிழந்துபோக, கஜானாவிலிருந்து கரையப்போகும் அடுத்த வராகன்தான் அவரின் கவலை.
மலையாளக்கரையிலிருந்து மாட்டுப்பெண்ணாக வரும் பகவதிக்குட்டி மற்றும் தமையன் கிட்டாவய்யன் குடும்பத்தைப்பற்றிய பின்புலம்.
பார்வதியைப் பெண் பார்க்க அனைவரும் வண்டி கட்டிக்கொண்டு மலையாளக்கரைக்குப் போனபோது சாமாவுடன் வீடும் தீக்கிரையாகுகிறது. அதிர்ச்சியில் அவன் தாய் கல்யாணியம்மாளுக்கு நோவுகண்டுவிடுகிறது. அப்புறம் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சங்கரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் முடிகிறது..
உண்மையில் கதையென்று பார்த்தால் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை.

இது சாதாராண கதை. இதனை அசாதாராணமாக்குவதற்கென்றே வருகின்றனர் பனியன் சகோதரர்கள். காலத்தால் நுற்றைம்பது வருடத்துக்கு பின்னாலிலிருந்து சர்வசாதாரணமாக ஒரு ஆஸ்டின் காரில் காலத்தில் பயணிக்கின்றனர். கள்ளத்தோணி போட்டு ஜாமான் கடத்தற மாதிரி பின்னாளிலிருந்து பொருட்களை கொண்டு சென்று முன்னாளில் விற்று வருகின்றனர்.
ஒரு முறை இறந்தகாலத்தில் புகைப்படம் எடுத்து நிகழ்காலத்துக்கு வந்து டெவலப்செய்து, மீண்டும் இறந்த காலத்துக்கே சென்று விற்கின்றனர். எனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு பயப்படாதீங்க. இதெல்லாம் புத்தகத்தில் வர்ரதுதான்.
போதாக்குறைக்கு ராஜாவையே சுற்றி சுற்றி வந்து திவசத்துக்கு சாராயம் கேட்கும் இறந்து போன ராஜாக்கள் வேறு.. சுப்பம்மாளின் வாயில் ஏறி நலங்கு பாடும் மூத்தகுடிப்பெண்டுகள் ஒரு புறம். சாமாவுடன் போகம் கொள்ளும் குருக்கள்பெண் மறுபுறம்.. என்று தெளித்து வைத்த மாதிரி வழி நெடுகிலும் மீகற்பனைக்கான வித்துகள் கொட்டிக்கிடக்கின்றன. யாவரும் அதனை சட்டைசெய்வதில்லை. அதுவும் ஒரு அங்கமாக, அது பாட்டுக்கு இருக்கிறது.
நாம்தான் உள்ளே நுழைகயில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்..
ஏனெனில், எதிர்பாரா சாலையின் திருப்பங்களில், உங்களை மதமாற்றம் செய்விக்க குரிசைகளுடன் பாதிரிகள் காத்திருக்க கூடும். பிரசாதம் வாங்க கோயிலுக்குப் போனால், வெடிக்காரனின் கால்கள் வந்து பிரசாதத்தில் பங்கு கேட்கலாம். அக்கடா என்று சாலையில் நடக்கும் போது ஆகாயத்திலிருந்து சினேகாம்பாளின் தகப்பனார் உங்கள் மீது மூத்திரம் பெய்யலாம். அல்லது யந்திரத்தில் ஒளிந்திருக்கும் தேவதைகள் வந்து குடிக்க பால் கேட்கலாம். 300 ஆண்டுகளுக்கு முன் துர்மரணமடைந்த குருக்கள் பெண் வந்து போகத்திற்கு அழைக்கலாம்...
இதுதான் என்றில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுதான் அரசூர்.
குறிப்பிடவேண்டிய விஷயம். அந்த மொழி நடை. விதவிதமான மொழிநடைகள். சுதந்திரத்துக்கும் முந்திய காலத்தின் வெகுஜன தமிழ்நடை மாதிரி.. அரதப்பழசான, தொட்டால் உடைந்துவிடக்கூடிய மாதிரி பழுப்புக்காகிதத்தில் தூசியேறிப்போய் சில புத்தகங்கள் நூலகத்தில் கிடைக்குமே.. அந்த மாதிரி ஒரு நடை.. எப்படித்தான் அப்படி எழுதினார் என்று ஆச்சரியமூட்டுகிறது. ஒரு பக்கம் ரெண்டு பக்கம் அல்ல, பெரும்பாலான இடத்தில் அத்தகைய நடைதான். முழுக்க பிராமண பாஷைதான்.. ஆனால், மனதை கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளுங்கள்.. உங்களை அதிரவைக்கும் பிராமண பாஷை இது.
பெண்பார்க்கச் செல்கையில் அந்த மலையாள நடை. சென்னைக்குச் செல்கையில் காலத்தால் கொஞ்சம் மாறுபட்ட நடை என்று ஏகத்துக்கு மெனக்கெட்டிருக்கிறார் முருகன்.
அதே மாதிரி விதவிதமான கதாபாத்திரங்கள். வெண்பா வடிக்கும் கொட்டக்குடி தாசி, டெலிபதியை முயற்சிக்கும் பிஷாரடி வைத்தியர், தகட்டில் தேவதைகளை நிறுத்தும் ஜோசியர் அண்ணாசாமி ஐய்யங்கார் திவரசப் பிராமணர் சுந்தர கனபாடிகள் என்று நிறைய நிறைய முற்றிலும் முரண்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையம் ஸ்தாபிப்பதிலும், அந்தந்த சூழ்நிலைகளில் அந்தந்த பாத்திரங்களில் மனஓட்டங்களைச் சித்தரிப்பதிலும் ஆச்சரியமூட்டுகிறார். சில இடங்களில் கொஞ்சம் அதிகப்படியான மன ஓட்டங்கள் சலிப்பைத்தருகின்றன.
அப்புறம், கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான மதராஸ்பட்டிண சூழலைப் படம்பிடித்திருப்பதும் ஒரு புதுமையான அனுபவம். காப்பி என்று புதிதாக வந்திருக்கும் ஒரு வஸ்துவைப்பற்றி சிலாகிக்கின்றனர். பெண்பார்ப்பதற்கு வண்டிகட்டிக்கொண்டு நாள்கணக்கில் பயணம் செல்கின்றனர். கிண்டி கிராமத்திலிருந்து சென்னைப்பட்டணம் போய் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பிராமணர்கள் இருக்கின்றனர். இப்படி இன்னும் பல.
உறுத்திய விஷயம். அதுவும் நடைதான்.. சில இடங்களில் ரொம்ப abusive.. கொஞ்சம் அதிகப்படியான டோஸ்தான்.. இவ்வளவு காட்டம் தேவையான்னு தெரியல. போகம் போகம் போகம். சில பாத்திரங்களின் வடிவமைப்பிலேயே போகமும் கூடவே வந்துவிட்டிருக்கிறது. ராஜாவுக்கு சேடிப்பெண் மீது எப்போதும் ஒரு கண். சாமாவுக்கு குருக்கள் பெண். சங்கரனுக்கு பார்வதிக்குட்டி. இருந்தாலும் கப்பலில் வெள்ளைக்காரப் பெண்மணிகளுடன் சுகித்திருக்கிறான். கிட்டாவய்யனுக்கு பணிமுடிந்து திரும்புகையில் வழியில் தென்படும் அனைத்து பெண்களும் காமபாணம் எய்கின்றனர். சில இடங்களில் கதைக்குத் தேவையான ஒன்றாகத் தோன்றினாலும் இவ்வளவு தேவையா? தெரியவில்லை.
இப்படியெல்லாம் கதை எழுதினால் இதன்பெயர் மாய யதார்த்தமாம். ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், இருக்கவே இருக்கார் நம்ம கவிதை அண்ணாத்த அனுஜன்யா. அவரின் இந்தப் பக்கத்திற்கு போய்ப்பாருங்க.
கடைசியா என்னதான் சொல்ல வர்ர? இதைப் படிங்கறீயா? வேணங்கறியா..?
நீங்கள் பதினெட்டு வயதுக்குட்பட்டவரா (அ)
அவ்வப்போது மனநிறைவுக்குக்காகவும் பொழுது போக்கிற்காகவும் புத்தகங்கள் படிப்பவரா.. தாராளமாய் இந்த பதிவை இத்துடன் மறந்துவிட்டு உங்கள் அன்றாடப்பணிகளைத் தொடரலாம்..
இல்லை. நன் ஒரு தீவிர வாசிப்பாளன். தேடித் தேடிப் படிப்பவன். புதியன தேடும் பித்தன் அப்பிடீன்னெல்லாம் வசனம் பேசற ஆளா? தப்பே இல்லை.. படிச்சுப்பாருங்க.
புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்
--------
அரசூர் வம்சம்
இரா. முருகன்
464 பக்கங்கள்
ரூ.175
கிழக்கு பதிப்பகம்
---------