”..... அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.
அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?
பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.
கேட்டு விட்டு எழுதுகிறேன்.”
படித்து முடித்து மூடிவைத்தபோது எதுவுமே தோன்றவில்லை. சுற்றி சுற்றி மொத்தமாக வெறுமையை நிரப்பிச்சென்றதாக ஒரு பிரமை.. இப்புத்தகம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூட தெளிவாகச் சொல்லமுடியவில்லை.. ஏதோ பிடித்திருக்கிறது.. ஏதோ பிடிக்கவில்லை.. ஏதோ குறைகிறது. ஆனாலும், நிச்சயம் ஏதோ உள்ளே இருக்கிறது.
மேலும் படிக்க...
ஒரே கோட்டில்தான் கதை செல்கிறது. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைத் தொடராமல், மொத்தமாக அரசூரைத் தொடர்கிறது இக்கதை.
காலம் கிட்டத்தட்ட இரு நுற்றாண்டுகளுக்கு முன்.. அது ஏன் கிட்டத்தட்ட? அதுதான் பிரச்சனையே. காலம் என்ற ஒன்றே இங்கு கிட்டத்தட்டதான். சரி. கதைக்குப் போகலாம் வாங்க.
அரசூரில் ஒரு புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணர் சுப்ரமணிய அய்யர். அவருக்கு இரண்டு புத்திரர்கள். வேதங்களை கரைத்துக்குடித்து கடைசியில் மனநிலை பிறழ்ந்து போகும் சாமா முதல்பையன். தந்தைக்குப்பின் புகையிலை வியாபாரத்தை பொறுப்பாக கவனித்துக்கொள்ளும் சங்கரன் இரண்டாமவன். வியாபாரம் மட்டுமல்ல. தினம்தினம் மாடியிலிருந்து பக்கத்து அரண்மனையில் ராணியின் ஜலக்கிரீடையையும் கவனித்துக்கொள்கிறான்.
ராணிக்கு ஒரு ராஜா. பெயரைத்தவிர ராஜாவுக்குரிய எந்தவொரு அடிப்படைத்தகுதியுமின்றி, வெள்ளையர்களை அண்டிப்பிழைக்கும் ஒரு டம்மி ராஜா. அவருக்கு மலப்பிரச்சனையிலிருந்து வாய் உபசாரம் கேட்கும் புஸ்தி மீசைக்கிழவன் வரை ஆயிரத்தெட்டு பிரச்சனைகள். இதில் தன் மனைவி குளிக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் பார்க்கிறான் என்பது பிரதானமிழந்துபோக, கஜானாவிலிருந்து கரையப்போகும் அடுத்த வராகன்தான் அவரின் கவலை.
மலையாளக்கரையிலிருந்து மாட்டுப்பெண்ணாக வரும் பகவதிக்குட்டி மற்றும் தமையன் கிட்டாவய்யன் குடும்பத்தைப்பற்றிய பின்புலம்.
பார்வதியைப் பெண் பார்க்க அனைவரும் வண்டி கட்டிக்கொண்டு மலையாளக்கரைக்குப் போனபோது சாமாவுடன் வீடும் தீக்கிரையாகுகிறது. அதிர்ச்சியில் அவன் தாய் கல்யாணியம்மாளுக்கு நோவுகண்டுவிடுகிறது. அப்புறம் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சங்கரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் முடிகிறது..
உண்மையில் கதையென்று பார்த்தால் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை.

இது சாதாராண கதை. இதனை அசாதாராணமாக்குவதற்கென்றே வருகின்றனர் பனியன் சகோதரர்கள். காலத்தால் நுற்றைம்பது வருடத்துக்கு பின்னாலிலிருந்து சர்வசாதாரணமாக ஒரு ஆஸ்டின் காரில் காலத்தில் பயணிக்கின்றனர். கள்ளத்தோணி போட்டு ஜாமான் கடத்தற மாதிரி பின்னாளிலிருந்து பொருட்களை கொண்டு சென்று முன்னாளில் விற்று வருகின்றனர்.
ஒரு முறை இறந்தகாலத்தில் புகைப்படம் எடுத்து நிகழ்காலத்துக்கு வந்து டெவலப்செய்து, மீண்டும் இறந்த காலத்துக்கே சென்று விற்கின்றனர். எனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு பயப்படாதீங்க. இதெல்லாம் புத்தகத்தில் வர்ரதுதான்.
போதாக்குறைக்கு ராஜாவையே சுற்றி சுற்றி வந்து திவசத்துக்கு சாராயம் கேட்கும் இறந்து போன ராஜாக்கள் வேறு.. சுப்பம்மாளின் வாயில் ஏறி நலங்கு பாடும் மூத்தகுடிப்பெண்டுகள் ஒரு புறம். சாமாவுடன் போகம் கொள்ளும் குருக்கள்பெண் மறுபுறம்.. என்று தெளித்து வைத்த மாதிரி வழி நெடுகிலும் மீகற்பனைக்கான வித்துகள் கொட்டிக்கிடக்கின்றன. யாவரும் அதனை சட்டைசெய்வதில்லை. அதுவும் ஒரு அங்கமாக, அது பாட்டுக்கு இருக்கிறது.
நாம்தான் உள்ளே நுழைகயில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்..
ஏனெனில், எதிர்பாரா சாலையின் திருப்பங்களில், உங்களை மதமாற்றம் செய்விக்க குரிசைகளுடன் பாதிரிகள் காத்திருக்க கூடும். பிரசாதம் வாங்க கோயிலுக்குப் போனால், வெடிக்காரனின் கால்கள் வந்து பிரசாதத்தில் பங்கு கேட்கலாம். அக்கடா என்று சாலையில் நடக்கும் போது ஆகாயத்திலிருந்து சினேகாம்பாளின் தகப்பனார் உங்கள் மீது மூத்திரம் பெய்யலாம். அல்லது யந்திரத்தில் ஒளிந்திருக்கும் தேவதைகள் வந்து குடிக்க பால் கேட்கலாம். 300 ஆண்டுகளுக்கு முன் துர்மரணமடைந்த குருக்கள் பெண் வந்து போகத்திற்கு அழைக்கலாம்...
இதுதான் என்றில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுதான் அரசூர்.
குறிப்பிடவேண்டிய விஷயம். அந்த மொழி நடை. விதவிதமான மொழிநடைகள். சுதந்திரத்துக்கும் முந்திய காலத்தின் வெகுஜன தமிழ்நடை மாதிரி.. அரதப்பழசான, தொட்டால் உடைந்துவிடக்கூடிய மாதிரி பழுப்புக்காகிதத்தில் தூசியேறிப்போய் சில புத்தகங்கள் நூலகத்தில் கிடைக்குமே.. அந்த மாதிரி ஒரு நடை.. எப்படித்தான் அப்படி எழுதினார் என்று ஆச்சரியமூட்டுகிறது. ஒரு பக்கம் ரெண்டு பக்கம் அல்ல, பெரும்பாலான இடத்தில் அத்தகைய நடைதான். முழுக்க பிராமண பாஷைதான்.. ஆனால், மனதை கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளுங்கள்.. உங்களை அதிரவைக்கும் பிராமண பாஷை இது.
பெண்பார்க்கச் செல்கையில் அந்த மலையாள நடை. சென்னைக்குச் செல்கையில் காலத்தால் கொஞ்சம் மாறுபட்ட நடை என்று ஏகத்துக்கு மெனக்கெட்டிருக்கிறார் முருகன்.
அதே மாதிரி விதவிதமான கதாபாத்திரங்கள். வெண்பா வடிக்கும் கொட்டக்குடி தாசி, டெலிபதியை முயற்சிக்கும் பிஷாரடி வைத்தியர், தகட்டில் தேவதைகளை நிறுத்தும் ஜோசியர் அண்ணாசாமி ஐய்யங்கார் திவரசப் பிராமணர் சுந்தர கனபாடிகள் என்று நிறைய நிறைய முற்றிலும் முரண்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையம் ஸ்தாபிப்பதிலும், அந்தந்த சூழ்நிலைகளில் அந்தந்த பாத்திரங்களில் மனஓட்டங்களைச் சித்தரிப்பதிலும் ஆச்சரியமூட்டுகிறார். சில இடங்களில் கொஞ்சம் அதிகப்படியான மன ஓட்டங்கள் சலிப்பைத்தருகின்றன.
அப்புறம், கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான மதராஸ்பட்டிண சூழலைப் படம்பிடித்திருப்பதும் ஒரு புதுமையான அனுபவம். காப்பி என்று புதிதாக வந்திருக்கும் ஒரு வஸ்துவைப்பற்றி சிலாகிக்கின்றனர். பெண்பார்ப்பதற்கு வண்டிகட்டிக்கொண்டு நாள்கணக்கில் பயணம் செல்கின்றனர். கிண்டி கிராமத்திலிருந்து சென்னைப்பட்டணம் போய் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பிராமணர்கள் இருக்கின்றனர். இப்படி இன்னும் பல.
உறுத்திய விஷயம். அதுவும் நடைதான்.. சில இடங்களில் ரொம்ப abusive.. கொஞ்சம் அதிகப்படியான டோஸ்தான்.. இவ்வளவு காட்டம் தேவையான்னு தெரியல. போகம் போகம் போகம். சில பாத்திரங்களின் வடிவமைப்பிலேயே போகமும் கூடவே வந்துவிட்டிருக்கிறது. ராஜாவுக்கு சேடிப்பெண் மீது எப்போதும் ஒரு கண். சாமாவுக்கு குருக்கள் பெண். சங்கரனுக்கு பார்வதிக்குட்டி. இருந்தாலும் கப்பலில் வெள்ளைக்காரப் பெண்மணிகளுடன் சுகித்திருக்கிறான். கிட்டாவய்யனுக்கு பணிமுடிந்து திரும்புகையில் வழியில் தென்படும் அனைத்து பெண்களும் காமபாணம் எய்கின்றனர். சில இடங்களில் கதைக்குத் தேவையான ஒன்றாகத் தோன்றினாலும் இவ்வளவு தேவையா? தெரியவில்லை.
இப்படியெல்லாம் கதை எழுதினால் இதன்பெயர் மாய யதார்த்தமாம். ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், இருக்கவே இருக்கார் நம்ம கவிதை அண்ணாத்த அனுஜன்யா. அவரின் இந்தப் பக்கத்திற்கு போய்ப்பாருங்க.
கடைசியா என்னதான் சொல்ல வர்ர? இதைப் படிங்கறீயா? வேணங்கறியா..?
நீங்கள் பதினெட்டு வயதுக்குட்பட்டவரா (அ)
அவ்வப்போது மனநிறைவுக்குக்காகவும் பொழுது போக்கிற்காகவும் புத்தகங்கள் படிப்பவரா.. தாராளமாய் இந்த பதிவை இத்துடன் மறந்துவிட்டு உங்கள் அன்றாடப்பணிகளைத் தொடரலாம்..
இல்லை. நன் ஒரு தீவிர வாசிப்பாளன். தேடித் தேடிப் படிப்பவன். புதியன தேடும் பித்தன் அப்பிடீன்னெல்லாம் வசனம் பேசற ஆளா? தப்பே இல்லை.. படிச்சுப்பாருங்க.
புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்
--------
அரசூர் வம்சம்
இரா. முருகன்
464 பக்கங்கள்
ரூ.175
கிழக்கு பதிப்பகம்
---------
14 comments:
யப்பா...! இப்பவே கண்ணக்கட்டுதே? :-). இது போல பழைய நடை கொண்ட சிறுவர் புத்தகங்களை நூலகத்தில் படித்திருக்கிறேன். அவை அலாதியானவை. பள்ளிக்கூட விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு செல்வதும் அங்கே நடக்கும் சம்பவங்களையும் சித்தரிக்கும் சிறார் நாவல் ஒன்றை வாசித்திருக்கிறேன். ‘பரிகாசம்’ போன்ற புதிய வார்த்தைகளை அதிலிருந்துதான் கற்றேன். அந்த நூலக நாட்கள்தான் நினைவிற்கு வருகின்றன...
பதிவுக்கு பதிவு எழுத்து மெருகேறி வருகிறது... :-)
அழகாக எழுதுகிறாய் பாலா.
வாழ்த்துகள்!
தீவிர வாசிப்பு சரிதான். ஆனால் இதைவிடப் படிக்க வேண்டிய நூல்கள் இன்னும் நிறைய இருப்பதாக நான் கருதுகிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்
@ சாணக்கியன் :
இதுக்கே அசந்துட்டா எப்படி? இது ட்ரெய்லர்தான். ;)
உண்மையில் நூலகத்தில் புத்தகம் பெற்று படிப்பதெல்லாம் அழகான ஞாபகங்கள்.. இப்போது அதையெல்லாம் விட்டு ரொம்பதூரம் வந்துவிட்டோம்..
கருத்துக்கும் நன்றி :)
@ சேரல் :
நன்றி சேரா.. :)
//
ஆனால் இதைவிடப் படிக்க வேண்டிய நூல்கள் இன்னும் நிறைய இருப்பதாக நான் கருதுகிறேன்.
//
:) வாவ்.. கிட்டத்தட்ட இதே பொருள்படும் வரியொன்றை நானும் எழுதியிருந்தேன். இது அறிமுகம் மட்டுமே. இதற்குமேல் அவரவர்களின் தனிப்பட்ட விருப்பங்களைப்பொறுத்து என்று, இரண்டாம் மூன்றாம் திருத்தல்களில் அதனை நீக்கிவிட்டேன். நான் விட்டதை அப்படியே நீங்களும் சொல்லியிருக்கீங்க..
பாலா! இந்தப் புத்தகம் ஒரு புண்ணியம் செய்திருக்குமானால், அது உங்க கைல வந்து இங்க ஒரு பதிவாகி, என்ன வயிறு குலுங்க சிரிக்க வச்சதுதான்.
MMKR-ல ஊர்வசி சொல்றது போல "நீங்க உங்க வேதனையைச் சொல்றேள்! நான் சிரிச்சுண்டு இருக்கேன்!" அப்படின்னு உங்ககிட்ட சொல்லனும்னு தோணுது!
போகம், சுதித்தல் என்கிற விசயங்கள் பெரும்பாலும் எழுத்து நடைல அளவுக்கு மீறி இருந்தா அனாவசியம். அப்படி எழுதறவங்க விரச உணர்வ தூண்டனும்னு நோக்கம் உடையவங்களா மட்டுமே இருக்க முடியுங்கறது என்னோட எண்ணம். அன்னாரை வாழ்த்தி வரவேற்க கா(ம)மிக்ஸ் பத்தரிக்கைகள் இருக்கின்றன.
இலக்கியத்துல விரசம்கிறது பிரம்மாஸ்திரம்தான். ஆனா அதை உபயோகிக்காமலேயே வாசக நெஞ்சங்கள வென்றிருக்காரே நம்ம கல்கி :). திருந்துங்கய்யா!
Miga alazha irukirathu ungaloda eluthu mattrum ungaloda tamil alumai, valthukal :-) Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.
Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html
கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.
@Subi:
வணக்கங்கண்ணா.. :) முதல் முறையா வந்துருக்கீங்க.. கருத்தும் சொல்லியிருக்கீங்க.. மிக்க நன்றி :)
தாமதமா பதில் சொல்றதுக்கு மன்னிக்கனும். அலுவலகத்தில் ஆணிகளின் எண்ணிக்கை அளவுக்கதிகமா பெருகறாதால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. :P
//இலக்கியத்துல விரசம்கிறது பிரம்மாஸ்திரம்தான்//
மிகப்பொருத்தமான உவமை.
கண்டிப்பா யோசிக்கவேண்டிய ஒரு கருத்து. இங்கு கல்கியையெல்லாம் ஒப்பிடவே முடியாது. அந்த பேலன்ஸ் எல்லாராலும் பண்ணிடமுடியறதில்ல. பெண்ணை வருணிப்பதிலும் கூட அத்தனை கண்ணியம் இருக்கும் கல்கியின் எழுத்தில்.
வாசகர்கள் தரமான படைப்புகளை மட்டும் ஆதரித்தாலே இன்னபிறவும் ஒதுக்கப்பட்டுவிடும்.. எல்லாம் நம்ம கையிலதான்..
நல்ல விமர்சனம் பாலா. அரசூர் வம்சம் ரொம்ப நாளைக்கு முன்னால வாசிச்சேன். உங்க பதிவைப் படிச்சதும் அந்த புத்தகத்தின் நினைவு வந்தது. இரா.முருகனுக்கு மெயில் அடிச்சு கேட்டுட்டேன்...கதை பிடிச்சுது ஆனா ரொம்ப எராட்டிக்கா இருந்ததுன்னு. மாஜிக்கல் ரியலிசம் கதைகளை வாசிக்கறதுக்கு பொறுமை அதிகம் வேணும். வெகு சிலர்தான் அதை அற்புதமா எழுத்துல கொண்டுவந்திருக்காங்க. என் பொண்ணுக்கு ஹாரி பாட்டர் பிடிக்கும் ஆனா என்னால் அதை சுத்தமா பார்க்கவே முடியாது, ப்ளீஸ் என்னை விட்டுடும்மான்னு சொல்வேன். ஆனா அதை அளவோடும் அழகியலோடும் கையாண்டா nothing like that, நம்மளோட imagination சேர்ந்து முற்றிலும் புதிய தளத்திற்கும் வாசிப்பானுபவத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும். Milan Kunderaவின் நாவல்கள் வாசிச்சுப் பாருங்க...பா.வெங்கடேசனின் கதைகளும் நல்லாயிருக்கும். இப்ப நான் வாசிச்ச மயில்வாகவன் மற்றும் கதைகள் அஜயன் பாலாவும் நல்லா எழுதியிருக்கார். புத்தகங்கள் நிறைய வாசிச்சு உங்களோட எழுத்து நடை மெருகேயிருக்குது பாலா. வாழ்த்துக்கள் தொடர்ந்து வாசியுங்கள், நிறைய எழுதுங்கள், சரியா?
உன் எழுத்து நடையில் ஒரு சிறு சறுக்கல் கண்டதாக உணர்கிறேன். நீ எடுத்துக்கொண்ட பாடுபொருளான புத்தகத்தின் விளைவாகக்கூட இருக்கலாம். இனிவரும் உன் படைப்புகளில் பழைய பாலா-வை எதிர்பார்க்கிறேன்.
வலைச்சரத்தின் மூலம் உங்கள் பதிவைக் காண நேர்ந்தது மிக்க மகிழ்ச்சி. புத்தகங்களைப் பற்றி எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து என்ழுதுங்கள். புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நன்றி,
கிருஷ்ணப் பிரபு.
@ கிருஷ்ணப் பிரபு:
உங்களைப் போன்றோரின் ஊக்கம்தான் என்னை மேலும் எழுதவைக்கிறது.. தொடர்ந்து எழுதுகிறேன்..
வலைச்சரத்தில் தொடுப்பு கொடுத்திருப்பதை இப்போதுதான் காண்கிறேன்.. தகவல் தந்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே.. :)
என்னுடைய விமர்சனத்தை விட தங்களுடையது மிக நன்றாக உள்ளது.
நன்றி நடராஜன். :)
உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்..
Post a Comment