அலைக்குறிப்புகள்-1எங்கள் சொந்த கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனுக்கும் நாங்கள் வந்திறங்கிய போர்ட் கொச்சியின் போட் ஜெட்டிக்கும் பெரிய அளவு வித்தியாசங்கள் ஏதுமில்லை. ஆரவாரமும் பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக மற்றொரு ஞாயிற்றுக் கிழமையை வரவேற்றுக்கொண்டிருந்தது அந்த நகரம்.
ஊருக்குள் நுழைந்ததும் கண்ணில் படும் முதல் விஷயம், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தொடர்பான சுவரொட்டிகள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. யூதர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி அது என்று பின்புதான் தெரிந்து கொண்டோம்.
பெரிதாக திட்டம் எதுவும் இல்லை எங்களிடம். போட் ஜெட்டியிலிருந்து வெளியில் வந்தவுடன், இடது புறம் 'டச் பேலஸ்' என்று போர்ட் போட்டு 1.5 கிலோமீட்டர்கள் என்று போட்டிருந்தது. அதுவே எங்களின் முதல் திட்டமானது. வெயிலின் உக்கிரம் தொடங்காத காலை வேளை என்பதால் நடந்தே செல்லலாம் என்று தொடங்கினோம். மிக அமைதியான கடைவீதி.. மிக மிக அமைதியான தெருக்கள் என்று வழி நெடுகிலும் கிராமத்துக்கான உணர்வைத் தந்து செல்கிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் வாழ்ந்த சுவடுகளும் அங்கங்கே காணக்கிடைக்கின்றன. வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதாய் அறிவித்த பெயர்ப்பலகை ஒன்று ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு காலத்தின் சுவடுகளைச்சுமந்த மிச்சம் இன்னமும் எஞ்சிய படி கண்ணில் பட்டது. கடையின் கதவுகள் திறந்திருக்காத நிலையில் இன்னமும் அந்த கடை அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதா என்று ஆச்சரியப்படுத்தியது.
மேலும் படிக்க...முதலில் சென்ற டச் பேலஸ் பார்வையாளர் நேரம் 10 மணிக்குத்தான் தொடங்குவதாய் அறிந்து, அதே திசையில் இன்னும் சில நூறு மீட்டர்களில் சைனகோஜ் என்றழைக்கப்படும் யூத ஆலயத்திற்குச் சென்றோம். செல்லும் வழியில் அனேகமாய் யூத முகங்கள் எதிர்ப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் வந்து குடியேறியவர்கள் அவர்கள். கொஞ்சம் பின்னோக்கி பார்க்கையில், கி.மு 700 வாக்கில் வாணிபம் செய்வதற்காக முதன் முதலில் யூதர்கள் இங்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின் கிங் சாலமனின் காலத்தில் கொஞ்சம் இஸ்ரேல் இரண்டாக பிரிந்த போது தஞ்சமடைந்தவர்கள் கொஞ்சமென, வளர்ந்து இப்பகுதி இன்று jew town என்று அழைக்கப்படுகிறது.

காமன்வெல்த் நாடுகளில் இருப்பதிலேயே மிகப்பழமையான சைனகோஜ் இது. இடைக்காலத்தில் கொச்சின் ஒரு சில ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளானபோதும் இவையனைத்திற்கும் தப்பி இன்றும் உயிர்ப்புடன் உள்ள இந்த ஆலயம் 1568ல் நிர்மாணிக்கப்பட்டது. இங்கு ஹீப்ரு மொழியில் அமைந்த கல்வெட்டுகள் சிலவும் காணக்கிடைக்கின்றன. அவர்களின் வழிபாட்டு முறைகளோ, சடங்குகளோ எதுவும் எனக்குத் தெரியாதெனினும், உள்நுழைந்தவுடனேயே வந்து கவிழ்ந்து கொள்ளும் அடர்ந்த மெளனம், ஒரு ஆலயத்தினுள் நாம் இருப்பதை சொல்லிச்செல்கிறது. பல நூறு வருடங்களாக கடவுளின் சாலையாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த இடத்தினுள் சில நிமிடங்கள் மெளனமாய் நின்ற பின் திரும்பினோம். இந்த ஆலயத்தின் முன்புறம் இந்தியாவில் யூதர்களின் பாரம்பரியத்தை விளக்கும் காட்சி சாலை ஒன்றும் உள்ளது.
அங்கிருந்து வரும் வழியெங்கும் சிறிதும் பெரிதுமாய் ஆண்டிக் எனப்படும் பழம்பொருள் விற்பனைக் கடைகள் ஏராளமாய் இருக்கின்றன. முழுக்க முழுக்க இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளைக் குறிவைத்து இயங்குபவை இந்தக் கடைகள். ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள், பழங்கால சிலைகள், ஓலைச்சுவடிகள், பட்டு, வாசனைப்பொருட்கள், புத்தகங்கள், மூலிகைகள் என்று ஒன்றுக்கொன்று சம்ந்தமில்லாமல் பல பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. (தனியாகவும் கிடைக்கின்றன) . என்னவாக இருந்த போதிலும் இவை அனைத்திற்கும் இடையில் நூலிழை போன்றதொரு தொடர்பு ஓடுகிறது. அது இந்தியா. வரலாற்றுப் புத்தகத்தில் இந்தியா என்ற நாட்டில் எதுஎதெல்லாம் சிறப்பானவை என்று உள்ளதோ, அது நூற்றாண்டுகளுக்கு முன்னராக இருக்கலாம் கவலையில்லை, அவையனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இந்தியா என்ற ஒரு பிம்பம் மேற்கில் எப்படி பிரதிபலிக்கப்படுகிறது என்று இந்தக் கடைகளில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு சில பதிற்றாண்டுகளுக்கு முன் வெளிவந்த சில ஹாலிவுட் படங்களில், இந்தியா என்றாலே யானைகளும் பாம்பாட்டிகளும் மந்திரவாதிகளும் நிறைந்த ஒரு நிலம் என்பது மாதிரியான சித்தரிப்பு இருக்கும். அதற்கும் இதற்கும் பெரிதாக எதுவும் வித்தியாசம் இல்லை எனலாம். புத்தக்கடைக்குச் சென்றால், சல்மான் ருஷ்டி, கிரண் தேசாய், அருந்ததிராய் என்று மேற்கில் பிரபலமான எழுத்துகள் மட்டும் கிடைக்கின்றன. குறிப்பாக இன்னொரு விஷயமும் எல்லா கடைகளிலும் தவறாமல் கிடைக்கிறது. அது காமசூத்ரா. கொக்கோகரிலிருந்து வாத்ஸ்யாயனர் வரை பிறந்த தேசம் என்பதாலோ என்னவோ, வரும் வெளிநாட்டுப் பயணிகளில் இரண்டில் ஒருவர் தவறாமல் கேட்கும் விஷயம் இதுவாம். coffee table books என்றழைக்கப்படும் சைஸில் சில ஆயிரங்கள் விலையிட்டு அமோகமாய் விற்பனையாகின்றன இந்த புத்தகங்கள்.
பட்டு ஆடைகள் நுண் வேலைப்பாடமைந்த தரை விரிப்புகளும் ஏராளமாய்க் கிடைக்கின்றன. இங்கு கடை வைத்திருப்போரில் பெரும்பாலானோர் காஷ்மீரிலிருந்து வந்ததாகச் சொல்கின்றனர். இந்த தரைவரிப்புகள் முதலான கைவினைப்பொருட்களும் அங்கிருந்துதான் வருகின்றனவாம். ஆச்சரியமாய் இருந்தது. இந்தியாவின் வடமுனையில் தயாராகும் ஒரு பொருளுக்கு தென்முனையில் இப்படி ஒரு சந்தை அமைந்திருக்கிறது. அதுவும் வெளிநாட்டு பயணிகளால் விரும்பி வாங்கிச்செல்லப்படுகிறது.
இப்படியே ஒவ்வொரு கடையாக கடந்து டச் பேலஸ் க்கு வந்தடைந்தோம்.
(மீண்டும் அலையலாம்)
2 comments:
உன் எழத்துக்கள் என்னை சில நிமிடம் கொச்சின் துறைமுகத்திற்கே கொண்டு சென்று விட்டன. உனது அடுத்த அலைக்குறிப்பை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்
நன்றி பானு :)
கூடிய விரைவில் அடுத்த பகுதியுடன் வருகிறேன்..
Post a Comment