ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் எர்ணாகுளம் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் அமைந்தது. கடந்த முறை எர்ணாகுளத்திலும் கொச்சியிலும் அதிகமாக நேரம் செலவழி்க்க முடியாமல் போனதால் இம்முறை நிச்சயம் கொச்சின் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.
உள் நுழைவதற்கு முன் ஒரு கொசுறு தகவல். எர்ணாகுளமும் கொச்சியும் இருவெவ்வேறு ஊர்களல்ல. இவை இரண்டுமே ஒருங்கிணைந்த கொச்சி மாநகராட்சியின் பகுதிகள். 1967ல் தனித்தனியாக இருந்த எர்ணாகுளம் கொச்சி மற்றும் மட்டன்சேரி நகராட்சிகள் இணைந்து கொச்சின் மாநகராட்சி உருவானது. எர்ணாகுளம் நவநாகரீகத்தில் திளைத்திருக்கும் நவீன பட்டணம். கொச்சி (அ) ஃபோர்ட் கொச்சி இன்னும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் தான் சிறப்புடன் வாழ்ந்த கால்த்தை அசைபோட்டுக்கொண்டிருக்கும் பழமையின் பட்டணம். இப்படி இரு முரண்பட்ட நகரங்களை ஒரே இடத்தி்ல் காண்பதே சிறப்புதானே..
மேலும் படிக்க...எனக்கு போர்ட் கொச்சி செல்வதற்குத்தான் ஆர்வம் அதிகம். இருந்தாலும் எர்ணாகுளத்தையும் ஒரு வலம் வரலாமே என்றொரு எண்ணம்.
நாங்கள் ஒரு குழுவாகச் சென்றிருந்த போதும் முதல் நாள் பயணக்களைப்பிலிருந்தே யாரும் மீண்டு வராத நிலையில் நான் மட்டும் தனியே என் பயணத்தைத் தொடங்கினேன். காலை 6 மணிக்கு முதலில் சென்ற இடம், எர்ணாகுளத்தில் மரைன் டிரைவ் என்றழைக்கப்படும் கடலொட்டிய நடைபாதை. பொதுவாகவே மேற்குக் கடற்கரையில் சூரிய உதயத்தை விட அஸ்தமனமே சிறப்பு என்றாலும், மாலை 5 மணிக்கு ரயில் என்பதால் கண்டிப்பாக அஸ்தனமனம் பார்க்க முடியாது. உதயமாவது பார்ககலாமே என்றுதான் கிளம்பினேன்.
கொஞ்சம் கொஞ்சமாக இருளின் பிடியிலிருந்து மீண்டு வரும் கடலின் பிரம்மாண்டம் கொள்ளை அழகு. சூரியனைக் காணமுடியாவிட்டாலும் விடியலின் ஒவ்வொரு வினாடியிலும் அதன் இருப்பை உணரமுடியும்.
மரைன் டிரைவ் 2லிருந்து 3 கிலோமீட்டர் நீளம் இருக்கலாம். இது பருவழைக்காலம்.. மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியில் போட்ட மாதிரி ஈரம் அப்பியிருந்தது. லேசான தூறல் இருந்த போதும் குடைபிடித்தபடியே அந்த காலைவேளையில் பல பெரிசுகள் சுவாரஸ்யமாக கதைத்தபடியே நடைபயின்றுகொண்டிருந்தனர். மருந்துக்குக் கூட 40 வயதுக்குக் கீழ் யாரையும் காணோம்.
கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை. ஓரத்தில் குரோட்டன்ஸ் செடிகள். அங்கங்கே இளைப்பார பெஞ்சுகள் என்று நடைபாதையை மிகச்சிறப்பாக பராமரித்து வருகின்றனர். ஆனால் கடல்தான் கொஞ்சம் ஏமாற்றம் தருகிறது.
இந்த இடத்தில் கடல் கிட்டத்தட்ட கழிமுகம் மாதிரி. அரபிக்கடல் கொஞ்சம் கன்னாபின்னாவென்று நிலத்தினுள் நீண்டிருக்கும் இடம் இது. அலைகள் இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட சிறைக்கைதியைப்போல் தன் சீற்றம் தணிந்து கவிழ்ந்த முகத்துடன் காட்சி தருகிறது கடல். இந்த பிம்பத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன அங்கங்கே மிதந்து கொண்டிருக்கும் ஆகாயத்தாமரைகள். அதன் பரிமாணத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஒரு குளத்திலிருந்து வேறுபடுத்திச்சொல்லிவிடமுடியாது. ஆனாலும் அந்த மரைன் டிரைவிற்காகவே நிச்சயம் செல்லவேண்டிய இடம் இது.
அறைக்குத்திரும்பி காலை உணவுக்குப் பின் போர்ட் கொச்சிக்கான பயணம் தொடங்கியது. இம்முறை நண்பர் ஒருவரும் இணைந்து கொள்ள இருவரானது எங்கள் பயணம்.
எர்ணாகுளத்திலிருந்து கொச்சிக்கு செல்ல சாலை மார்கம் தலையைச் சுற்றி மூக்கைத்தொடுவது மாதிரி. ஆனால், பகல் முழுவதும்
20 நிமிட இடைவெளியில் போக்குவரத்துப் படகுகள் தாராளமாய்க் கிடைக்கின்றன. ம்ம்ம்.. டவுன் பஸ் மாதிரி இதனை கற்பனை பண்ணிக்கொள்ளலாம். 50 லிருந்து 80 பேர் வரை செல்லக்கூடிய படகுகள். சிலசமயங்களில் இருசக்கர வாகனங்களும் இதில் பயணிக்கின்றன. கொச்சியிலிருந்து தினந்தோறும் வேலை நிமித்தமாக எர்ணாகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்குச் சென்று வருவோருக்கு இவைதான் ஆபந்தாண்டவன். டிக்கெட்டும் ரயிலின் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டைவிட 50 பைசா குறைவுதான். எர்ணாகுளம் போட் ஜெட்டி (படகு நிறுத்தம்) யிலிருந்து எங்களின் பயணம் தொடங்கியது.
பத்து நிமிட பயணம்தான். இந்திய கடல்படை தளமொன்றும் கொச்சின் சரக்குப் பெட்டகமும் இடையில் வருகின்றன. இவற்றைக் கடந்து
ஃபோர்ட் கொச்சியில் கால் வைத்தபோதே உணர்ந்து கொண்டேன். இது நான் எதிர்பார்த்த மாதிரி இருக்கப் போவதில்லையென. மொத்த ஊரும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டிருந்தது.
(மீண்டும் அலையலாம்)
8 comments:
//மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியில் போட்ட மாதிரி ஈரம் அப்பியிருந்தது.//
ரசித்தேன் பாலா...
அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்...தொடர்ந்து எழுதுங்கள்....
மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியில் போட்ட மாதிரி ஈரம் அப்பியிருந்தது //
ஆரவாரமில்லாத அழகான குறிப்புகள்
என்னப்பா இது? ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சுப்போச்சு......
சீக்கிரம் வா :)
-ப்ரியமுடன்
சேரல்
@அமித்து அம்மா & செய்யது:
ஆகா.. பாத்தீங்களா.. நீ்ங்க ரெண்டு பேருமே ஒரே வரியை எடுத்துக்காட்டியிருக்கீங்க.. :)
நானும் ரொம்பவும் ரசித்து எழுதிய வரி அது..
வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து பதிய முயல்கிறேன்.. :)
@ சேரல்:
இது ஒரு வகையில் நானே எனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் commitment சேரா.. அன்னைக்கு இவ்வளவுதான் டைப்ப முடிஞ்சது.. ஒரு வேளை இதனைப் பதியாமல் நான் தள்ளிப்போட்டால், மொத்தமாக அலுப்புத் தட்டி பதியாமலே விட்டுவிடவும் கூடும்ங்கறதால, இப்படி.. கவலைப்படாதீங்க.. கூடிய சீக்கிரம் திரும்பவும் வர்ரேன்.. :)
Hey bala.. one doubt da.. I'm following your blog.. yet why is my profile not visible in ur followers list ?
குதலைக் குறிப்புகள் மாதிரி அலைக்குறிப்புகளா? ஆரம்பம் அமர்க்களமா இருக்கு. பதிவைப்போலவே ஆரவாரமில்லாத அமைதியான புகைப்படங்கள்!
நன்றி சாணக்கியன் :)
Post a Comment