Sunday, June 26, 2011

ஒரு நாள் கூத்து

எழுமையும் ஏமாப்புடைக்கும் என்றாலும் கூட கல்வி எல்லாரும் மிக எளிதாக கிடைத்துவிடுவதில்லை. நானும் கூட மரத்தடி பள்ளியில் மண்ணைக் கிளறியபடி ஆர்க்கிமிடீசைப் படித்தவன்தான். இதைப்பற்றியெல்லாம் அவ்வப்போது அலசி காயப்போடுகையில்,

”ஏதாவது செய்யணும் சார்” என்று ஒரு குரல் கேட்கும்.

என்னதான் அந்த அசரீரி அடிக்கடி கேட்டாலும், இது வரை ஏதும் செய்ததில்லை. அதற்கான வாய்ப்புகளும் சரியாக அமைந்ததில்லை.

அவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்வது மாதிரி அமைந்திருந்தது சென்ற வாரத்தில் ஒரு நாள். அலுவலகத்திலிருந்து நாங்கள் 25 பேர் ஒரு குழுவாக, அரசு சாரா தொண்டு நிறுவனமொன்று நடத்தும் பள்ளிக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் செலவிட்டோம்.

ஒரு நாள் முழுவதும் குழந்தைகளுடன், அவர்களுக்கு கற்றுக்கொடுத்து நிறையவே கற்றுக்கொண்டு, கதைகள் பேசி விளையாடி அவர்களின் பிரியா விடைகளுடன் மாலை கிளம்புகையில், இது ஒரு முழுமையான நாள் என்ற எண்ணமே எழுந்தது.

சம்பிரதாயமான முறையில் இல்லாமல், சின்னச்சின்ன பரிசோதனைகள் வாயிலாக பாடம் நடத்தும் உத்தியை நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். அவ்வப்போது கேள்விகள் கேட்டு அவர்களையும் சோதனையில் பங்கேற்கச்செய்தது எதிர்பார்த்த பலனைத்தந்தது. எல்லாக்குழந்தைகளுக்கும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. சரியான முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்தான் இப்போதைய பெரிய தேவை.

என் பள்ளிக்காலத்தை இன்று நிதானமாக யோசித்துப்பார்க்கையில், முதலில் நினைவுக்கு வருவது, பாடப்புததகங்களுக்கு வெளியிலும் சென்று ஒரு கதை சொல்வது மாதிரி ஈடுபாட்டுடன் பாடமெடுத்த ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே. அவர்களின் பிம்பம் என் மனதில் ஒரு ஆதர்சமாகவே பதிந்திருக்கிறது. எனக்கு ஆங்கிலம் எடுத்த பாலு வாத்தியார். பொதுவாகவே அரசுப்பள்ளிகளில் ஆங்கிலத்துக்கு மருமகள் மரியாதைதான். ஆனால், அவர் ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு சிலாகிக்கும் போது, அப்படி ஒரு பரவச நிலையில் இருப்பார். அப்படி என்னதான் அந்த நாலு வரியில் அடங்கியிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவே படிக்கத்தோன்றும். அதே போல் சமூக அறிவியல் எடுத்த பாஸ்கர் வாத்தியார். ”1963 ம் ஆண்டு பைத்தியக்காரன் ஒருவனால் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று புத்தகத்தில் வரும் ஒரு வரியை வைத்துக்கொண்டு ஒரு வகுப்பு முழுமைக்கும் கதைசொல்லிக்கொண்டிருப்பார். கேட்டுமுடிக்கையில் ”என்னது, கென்னடி செத்துப்போய்ட்டாரா?” னு கேட்கத்தோன்றும்.

அது போலவே இன்னும் சிலர் உண்டு. பள்ளியில் பாடப்புத்தை மட்டுமே கட்டியழுத ஆசியர் எவர் பெயரும் மூளைமடிப்புகளில் பதியவேயில்லை.

சென்ற வாரம் அந்த குழந்தைகள் அனைவரையும் பார்க்கையில் அந்த எண்ணம் மேலும் வலுப்பட்டது.



அந்த பள்ளியைப் பற்றி குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய ஒரு விஷயம், அவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்கள். அனைவருக்கும் பொதுவான மற்றொரு அம்சம், அனைவருமே பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் போருக்குப் பறிகொடுத்தவர்கள். இருக்கும் பெற்றோரும் தமிழகத்திலும் ஒரிசாவிலும் அகதிகள் முகாமை விட்டு வெளியில் செல்ல ஏகப்பட்ட கெடுபிடிகள். அவர்கள் அருகிலுள்ள இடங்களுக்கு வேலைக்குச் சென்றால் கூட மாலை இத்தனை மணிக்குள் முகாம்களுக்குத் திரும்பியிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள். இந்த தொண்டு நிறுவனம் அங்கிருக்கும் குழந்தைகளில் இருநூறு பேரை அழைத்து வந்து இங்கு எழுத்தறிவிக்கிறது. இது ஒரு Residential school. மாதத்தின் பத்து மாதங்கள் குழந்தைகள் அனைவரும் இங்கேயே இருக்கின்றனர். கோடை விடுமுறையாக இரு மாதங்கள் மட்டும் முகாம்களுக்கு விஜயம்.

இப்படி ஒரு இடம் பெங்களுரில் இருப்பது எனக்கு பெரிய ஆச்சரியம். அதுநாள் வரையில், இப்பள்ளியைப் பற்றி நான் கேள்விப்பட்டது கூட கிடையாது.

அப்பள்ளியைப் பற்றிய விவரங்கள் அறிந்தவுடன், நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும் எனத்தோன்றியது. இலங்கையில் அவர்கள் துடித்துச் சாகும் போதும் கூட, வரட்டுப் பேச்சு பேசிக்கொண்டிருந்த கையாலாகாதவர்களாகத்தான் நாம் இருந்திருக்கிறோம். அரசை மட்டும் குற்றம் சொல்வதில் பயனில்லை. நாமும் அதன் ஓர் அங்கம்தான்.

என்னால் முடிந்த குறைந்த பட்சமாக ஒரு நாளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்கியது. நிர்வாகிகளுடன் மேலும் பேசியதில், அனைவரும் கையிலிருந்த சொற்ப ரூபாய்களைத் தொகுத்து, அவர்களின் உடனித்தேவையாக சில மருந்துகளும் முதலுதவிப்பெட்டியும் வாங்கிக்கொடுத்தோம்.

அங்கு கட்டமைப்பு வசதிகளும் ரொம்ப பெரிதாக இல்லை. 10வது வரை அங்கு வகுப்புகளுக்கு வசதிகள் உள்ளன. பத்தாவதுக்கு பிறகு வகுப்பில் சிறந்து விளங்கும் ஒரு சிலர் மட்டும் P.U செல்கின்றனர். அதிலும் சிலர் மட்டுமே கல்லூரி வரை எட்டிப்பார்க்கின்றனர்.

பள்ளியைப் பற்றி மேலும்: http://www.igia.org.in/

நாங்கள் 6 லிருந்து 10 வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் எடுத்தோம்.

திட்டப்படி நான் எடுத்துக்கொண்ட, காந்தவியலுக்கு மொத்தம் மூன்று பேர். ஒவ்வொருவம் சுழற்சி முறையில் எடுப்பதாகத்தான் திட்டம். ஆனால் மாணவர்கள், ஆங்கிலத்தில் தடுமாறவே, அனைத்தையும், தமிழிலேயே விவரிக்க வேண்டி வந்ததால் ஒய்வில்லாமல் மூன்றரை மணிநேர வகுப்பையும் நானே எடுத்தேன்.

வகுப்பிலிருந்து வெளிவருகையில் என்னால் சரியாக பேசவே முடியாவிட்டாலும் கூட மிகுந்த மனநிறைவைத்தந்தது அந்த சிலமணிநேரங்கள். மாணவர்களின் இடைவிடாத கேள்விகள், ஆச்சரியப் பார்வைகள், புரிந்த சிரிப்புகள், கற்றுக்கொண்டதன் நன்றிகள் .

மதியம் உணவுக்குப் பின்னர், அவர்களுடன் விளையாட்டுகள். அடுத்த இரண்டு மணி நேரமும் கண்மூடித்திறப்பதற்குள் கடந்துவிட்டது.

இவ்வளவு நெருக்கமாக அம்மாணவர்களுடன் பழகுவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. கிளம்புகையில், மாணவிகள் சிலர் அவர்களே தயாரித்த நன்றி கூறும் வாழ்த்து அட்டையொன்றை நீட்டிய போது என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.

அலுவலகத்திலுந்து திரும்பவும் அடுத்த வருடம்தான் என்றாலும், நான் தனியாகவே மீண்டும் ஒரு முறை செல்லாம் என்று எண்ணியிருக்கிறேன்.

பிறந்தநாள், இறந்தநாள் என்று ஆயிரக்கணக்கில் ரெஸ்டாரன்ட்டுகளில் கொட்டித்தீர்க்கும் பெங்களுர் மக்கள் வருடத்தில் ஒரு நாள் இங்கும் வந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம். பகிரப்படும் மகிழ்ச்சி இரட்டிப்பாகுமென்று ஒரு சொல்வழக்கு உண்டு. நம்பாதாவர்கள் ஒரு முறை கண்டிப்பாய் இங்கு வரவும்.

இது ரெசிடென்சியல் பள்ளி என்பதால் அம்மாணவர்களுக்க பெரிதாக வெளியில் செல்லும் வாய்ப்புகளும் இல்லை. பள்ளியின் காம்பௌண்டு சுவர்களுடன் முடிந்துவிடுகின்றன அவர்களின் இந்தியப்பெருங்கடலும், இமயமலைகளும். நாங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததன் திருப்தியை விட, அவர்களுக்கு ஒரு மாறுதலாக , அவர்கள் உலகின் ஒரு நாள் விருந்தினர்களாக சந்தோஷம் அளித்ததே பெரிதாக இருந்தது.

எத்தனையோ சோகங்களைக் கடந்து வந்திருந்த போதும், அனைவர் முகத்திலும் சந்தோசமும் நம்பிக்கையும் இன்னும் மிச்சமிருக்கின்றன.

வீடு திரும்பிய பின் குற்றவுணர்ச்சி கொஞ்சம் குறைந்தது மாதிரி இருந்தது.

* * * *

குறிப்பு 1: வழக்கொழிந்து போன பல அழகான தமிழ்ப்பெயர்களைச் சந்தித்தேன். ஈகை வேந்தன், நெடுஞ்செழியன், கார்முகிலன் என இன்னும் பல. இன்று தமிழ்நாட்டில் எந்தவொரு பெற்றொரும் மூன்றெழுத்துக்கு மிகுந்து நாமகரணம் சூட்டுவதாகத்தெரியவில்லை. அந்த மூன்றில் ஒன்று வடமொழியாக இருந்தால் பெற்றோருக்கு இன்னும் பெருமை

குறிப்பு 2: ஒரு சிறுவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவன் நெருங்கிய உறவினர்கள் அவன் கண்முன் கொல்லப்பட்டதை ஒரு செய்தியைப் போலச் சொன்னான். எனக்குதான் அதற்கு மேல் பேசமுடியவில்லை.

4 comments:

Vilva said...

"ஏதாவது" செய்ய உத்வேகம் கொடுப்பதோடு..மனதுக்கு நிறைவை கொடுப்பதால்.. கண்டிப்பாய் இன்னும் பலமுறை செய்யலாம்..! இன்னும் பல அனுபவங்கள் பெற வாழ்த்துக்கள்..!

Bee'morgan said...

நன்றி வில்வா.. :)

கண்டிப்பாக ஏதாவது செய்வோம்..

J S Gnanasekar said...

Good

venkat said...

Bala...The article is real good.Will try to visit there.