Sunday, March 30, 2008

கூண்டுக்கிளிகள்


எங்கோ நினைவுகளின் ஆழத்திலிருந்து நினைவுக்கு வந்தது டோங்கு மாமாவின் முகம். எப்போது அவரை நினைத்தாலும் ஒரு ராஜ அலங்காரத்துடன், தலையில் கிரீடம் கையில்செங்கோல் சகிதமாக டோங்கு ராஜாவாகத்தான் எண்ணத்தோன்றுகிறது.
ஏன் இப்படி? ஒரு வேளை அவரின் சிங்கங்களால் இருக்கலாம்.
நேரு மாதிரி, எங்கள் ஊருக்கே மாமாவாகிப்போனவர் அவர். அவரைப்பற்றிய மேலதிக விவரங்கள் கிராமத்தில் யாருக்குமே தெரியாது என்பது என் நம்பிக்கை.

டோங்கு மாமா கதை சொல்ல ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். காவிரிக் கரையோரம் ஒரு திட்டுப் பிள்ளையார் உண்டு. திருட்டுப் பிள்ளையார். பல வருடங்களுக்கு முன், எவனோ ஒருவன் அரச மரத்தடியில் சிவனே என்று இருந்த பிள்ளையாரை திருடிக்கொண்டு போய் தன் வீட்டுக் கிணற்றி்ல் போட்டுவிட்டான். எப்படியோ, கண்டுபிடித்து பிள்ளையாரை கரையேற்றுகையில், ஏதோ தோஷநிவர்த்தி அது இதுவென கதை சொல்லி தப்பித்துவிட்டான். ஆனால், மாட்டிக் கொண்டார் அந்த பிள்ளையார். அன்றிலிருந்து திருட்டுப் பிள்ளையார் ஆகி, இன்று திட்டுப் பிள்ளையாராய் வந்து நிற்கிறார்.

திட்டுப் பிள்ளையார் ஒருமுறை காணாமல் போனதால், ஊர் பெரிசுகளெல்லாம் ஒன்று கூடி சின்னதாய் ஒரு கோயில் கட்டி அதில்,...
சரி கதைக்கு வருவோம்.. அந்த கோயிலின் முன்பு அரசமரத்தடியில் வட்டமாய் சிமெண்டு பெஞ்சு மாதிரியான ஒரு அமைப்பு இருக்கும்..
அதுதான் டோங்கு மாமாவின் சிம்மாசனம்..

மாலை நேரம் வந்தால், ஊரின் அனைத்து அரை டிராயர்களும் ரெட்டை ஜடைகளும் அரசவைக்கு வந்து விடுவர்..

அவரின் கதைசொல்லும் உத்தியே, அதன் கதையல்லாத தன்மைதான்.

ஒவ்வொருவரராக ஏதாவது கேள்விகள் கேட்பார்.. பதில்களை என்றும் எதிர்பார்த்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு அட்டண்டன்ஸ் மாதிரி.. சில கேள்விகளுக்கு அவரே பதிலும் சொல்லுவார். இடையில், நாங்கள் கண்டுபிடிக்கமுடியா ஏதோ ஒரு புள்ளியில் ஒரு கதை தொடங்கி இருக்கும்.

இத்தனை வருடங்களுக்குப் பின் அவரின் சிம்மாசனத்தில் அமர்ந்து, கதை சொல்வதாய் நினைத்துப் பார்க்கிறேன். சில டஜன் சின்னதுகள், லேசாக வாயைப் பிளந்தபடி ஆச்சரியம் மிளிரும் கண்களுடன் என்னையே பார்ப்பதாய் எண்ணுகையில் சிரிப்புதான் வருகிறது. எப்படி கொஞ்சம் கூட சிரிக்காமல் அவரால் கதைசொல்ல முடிந்ததோ.

பொதுவில் அவர் சொல்வதெல்லாம் வீர தீர கதைகளாகவே இருக்கும். அதுவும் தன்னிலையில்தான் கதை சொல்வார். அதிலும் ஒரு வசீகரம் இருக்கும். காவிரிக்கரை போர்க்களத்தில் நின்று இரண்டு தலை ராட்சசனை அவர் கத்தியால் 'விஷ்க்' எங்களுக்கு இரத்தம் சில்லிட்டுப்போகும். அவர் சிங்கத்தின் வாயைப் பிளக்கையில் சுற்றிலும் ஏதேனும் சிங்கம் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளத் தோன்றும்.

எங்கள் வீட்டின் எதிரில் சம்பத் வீடு. அந்த வீட்டின் பக்கவாட்டில் ஆஸ்பெஸ்டாஸ் போட்டு ஒரு அறை இருக்கும் அதுதான் அவரின் அறை. அவர் ஒரு நித்திய பிரம்மச்சாரி். சகலமும் அவரேதான் செய்து கொள்வார். அவர் வேலை செய்வது ஏதோ ஒரு சர்கஸில். ரிங் மாஸ்டர் வேலை. அத்தனை சிங்கங்களை கட்டி மேய்க்கும் வேலை. அதுவே கூட அவர் மீதான பிரம்மிப்பிற்கு காரணமாய் இருந்திருக்கலாம்.
பெரும்பாலும் வட இந்தியாவில்தான் கேம்ப் இருக்கும். வருடா வருடம் மழைக்காலங்களில் ஊருக்கு வருவார். அரிதான சில தருணங்களில் கோடையிலும்.

அவர் வீட்டின் எதிரில் இருந்ததாலோ என்னவோ எங்கள் மீது தனி கரிசனம் உண்டு அவருக்கு. என்னையும் அக்காவையும் அழைத்து வைத்து சில சிறப்புக்கதைகளும் சொல்லுவார். எனக்குப் பெருமையாக இருக்கும்.
நான்தான் அவருக்கு கிரி பாட்டி கடையிலிருந்து காலைக்கு இட்டலிகள் வாங்கி வருவேன். கொடுக்கும் போதே தெரிந்து விடும். அவர் கண்களில் ஒரு குறும்பு.ஒன்று சினிமாக்கு வர்ரியாடா? அல்லது

"மாப்ளே..ஆத்துக்கு வர்ரியாடா..?"

அவ்வளவுதான் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி, அப்பாவிடம் அழுது அடம் பிடித்து புறப்படுகையில் அம்மா வாசல் வரை வந்து,

" டோங்கு பத்திரமா போய்ட்டு வாப்பா.."

"நான் பாத்துக்கறேங்கா. கவலப்படாதீங்க"

என்றபடி சைக்கிளை எடுத்தால்,
அவர் சைக்கிளில் கேரியர் இருந்தாலும் முன்னாடி கம்பியில் அமர்வதுதான் என் விருப்பம்.

பங்குனியி்ல் காவிரியில் அவ்வளவாக தண்ணீர் இருக்காது. அணில் முதுகில் கோடு மாதிரி காவிரில் வரிவரியாக தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். மணல் திட்டுத் திட்டாகத் தெரியும். காவிரியல் குளிப்பதே தனிசுகம்தான். அதைவிட பெரிய சுகம் குளித்தவுடன் ஈரத்துண்டுடன் வெயிலில் நிற்பது.

குளித்தவுடன் காட்டாமணக்கு குச்சிகளை ஒடித்துக் கொண்டு சுற்றிலுமிருக்கும் மானசீக சிங்கங்களை அடக்கிக் காட்டுவார். ஒரு பேட்டனின் லாவகத்துடன் அவர் சுழற்றுவதிலேயே ஒரு தனி வசீகரம் இருக்கும். சில பல குறிப்புகளும் சொல்லுவார். நானும் கேட்டுக்கொள்வேன்.

அன்றும் அப்படித்தான், ஜலக்கிரீடைக்குப் பின் திட்டுப் பிள்ளையார் மேட்டில் அரசமரத்தடியில் அமர்ந்தோம். சிலுசிலுவென்ற காற்று இதமாக காது குடைந்தது.

அன்று அவருக்கு ஏதோ பிரச்சனை போலும், ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். ம்ஹீம்.. பேசிக்கொண்டிருந்தார்.
சர்க்கஸிற்கெல்லாம் இப்போது யாருமே வருவதில்லையாம். அதனால் அவர்களின் சர்க்கஸை மூடப்போகிறார்களாம். குனிந்து கொண்டே சொன்னார். மாமா இப்படி பேசியதே இல்லை. என்னவோ போலிருந்தது.

அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்னிடம்? ஆறுதலா.எப்படி ஆறுதல் சொல்வது.. அதற்கெல்லாம் வயசு பத்தாது எனக்கு அப்போது.

"மாமா, பேசாம சிங்கம் புலியெல்லாம் இங்க கூப்புட்டு வந்துடுங்க மாமா.. நாம இங்க சர்க்கஸ் போட்டுறலாம்.."

சில வினாடிகள் தாமதத்திற்குப்பின்,
கடகடவென சிரித்தார். என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டாரோ? எதுவும் புரியாமல் நானும் சிரித்தேன்.
கொஞ்சநேரம் ஒரு கனத்த மெளனம் நிலவியது.

"மாப்ளே, கூண்டுக்குள்ள போனது பயமாத் தெரியலடா.. கூண்ட விட்டு வெளிய வற்றத்துக்குத்தாண்டா பயமா இருக்கு.."

என்றோ அவர் சொன்ன வார்த்தைகளுக்கு இன்றுதான் அர்த்தம் புரிந்தது.
அதன் பின் டோங்கு மாமாவை நான் பார்க்கவே இல்லை.

சில வருடங்களுக்கு முன் பூதலூர் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து பார்த்ததாகவும், மாமா சைக்கிளில் புடவை வியாபாரம் செய்வதாகவும் ராஜசேகர் சொன்னான். அப்போது கூட, தலையில் கிரீடத்துடன், ராஜ உடையில்தான் நினைவுக்கு வந்தார். ஒரு கையில் செங்கோலுடன், புடவை வியாபாரம் செய்யும் மாமாவை நினைக்கையில் வயிற்றில் என்னவோ செய்தது.

காலச்சக்கரம்தான் எவ்வளவு குரூரமாகச் சுழல்கிறது மாதிரியெல்லாம் நீதி சொல்லது எனக்குப் பிடிக்கவில்லை..

யார்கண்டார்? இந்நேரம் ஏதேனும் ஒரு திண்ணையில் புடவை கட்டிய அரக்கிகளைப் பற்றிய கதைகளை அவர் சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்.

Wednesday, March 05, 2008

கலிகாலம் என்று...



இன்றும்,
கைக்குழந்தையுடன்
பேருந்தில் ஏறும் பெண்களுக்கு
இடம் கொடுக்கும் நபர்கள்
இருக்கிறார்கள்..

அனாமத்தாய் கிடக்கும்
பணப்பைகள்
காவல் நிலையத்தில்
சேர்ப்பிக்கப்படுகின்றன...

மறதியாய்,
சில்லறை வாங்காமல்
திரும்புகையில்,
கூப்பிட்டுக் கொடுக்கும்
கடைக்காரர் இருக்கிறார்...

ஊர் பேர் தெரியாமல்
அடிபட்டுக் கிடப்பவர்கள்
மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்படுகின்றனர்...

பல மூன்றெழுத்து வார்த்தைகள்
அகராதிகளுக்கு அப்பாலும்
உயிருடன் இருக்கின்றன..

இவை எதற்குமே
திராணியற்றவர்கள் மட்டும்,
இன்னும்
சொல்லிக்கொண்டே
இருக்கிறார்கள்...
...

Wednesday, February 27, 2008

இல்லாமலின் இருத்தல்



வானம் முழுக்க நட்சத்திரங்கள்
நிறைந்திருந்தாலும்,
வராமல் போன ஒற்றை நிலவிற்காகவே
ஏங்கிக்கிடக்கிறது மனம்..

பத்தொன்பது கேள்விகளுக்கு,
சரியாய் விடையளித்தும்,
தவறவிட்ட இருபதாம் கேள்வியே
தேர்வறைக்குப் பின்னும்
தொடர்ந்து வருகிறது.

மாலைமுழுதும் அவளுடன்
இருந்தும் கூட,
அவள் சென்ற பிறகு,
அவள் அமர்ந்திருந்த பெஞ்சையே
வெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

புலம்பெயர்ந்த பிறகுதான் புரிகிறது,
இட்லியும் சாம்பாரும்
இன்னபிற முன்னாள் அலட்சியங்களும்,
இந்நாள் ஏக்கமென்று..

எதிரியாய் கருதியவனின்
மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,
தவற விட்ட தருணங்களும்,
நழுவிப்போன நட்பின் கணங்களும்..

ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் சுகித்திருக்கலாமோ?

கிடைக்கப்போவதில்லை
எனத் தெரிந்தே தேடுவது
பைத்தியக்காரத்தனமாய்த்
தெரியலாம்..

என்ன செய்ய..?
எத்தனை இருந்தாலும் கூட,
இல்லாமல் போவதிலும்,
அதன் இல்லாமை தரும் சோகத்திலும்,
அடையாளம் காணமுடியா முகமூடியோடு
ஏதோ ஒரு சுகம்
ஒளிந்திருக்கத்தான் செய்கிறது

Tuesday, February 26, 2008

நிழல் நிஜமாகிறது


நாகப்பட்டிணம் பேருந்து நிலையம், தன் வழக்கத்துக்கு சற்றும் விரோதமில்லாமல் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. செல்லரித்த சில கட்டடங்கள், காரை பெயர்ந்து நிற்க, காற்றில் கலந்து வரும் மூத்திரவாசனையுடன், சென்னைக்கான பேருந்தைத் தேடிக்கொண்டிருந்தேன். கட்டிடங்களின் தலையில் ஒவ்வொன்றாக நியான் விளக்குகள் பளிச்சிடத் தொடங்கியிருந்தன.


ஏழேகால் மணிக்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை. எரிச்சல் எரிச்சலாக வந்தது. எதன்மீதும் குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. சுற்றுப்புறம் முழுதும் கண்களால் துளாவியபடி நின்றிருந்தேன்..
பல எரிச்சல் நிமிடங்களுக்குப் பின், பேருந்தி்ல் ஏறும் சமயம் செல்போன் சிணுங்கியது..

சட்.. இன்னைக்கே நாலாவது முறை.. எடிட்டராகத்தான் இருக்கும். இந்த இதழுக்கான சிறுகதை இன்னும் அனுப்பவில்லை.. இன்னும் எழுதவே இல்லை. இன்னும் அடித்துக்கொண்டிருந்தது. கூட்டத்தில் முட்டிமோதி எனக்கான இருக்கைக்குச் சென்றால், யாரோ ஒருவர் துண்டு போட்டு காவலுக்கு ஜன்னல் வழியே கையை விட்டபடி காத்திருந்தார். என் ரிசர்வேசன் டிக்கெட்டின் நம்பகத்தன்மையை நான் நிரூபித்து இருக்கையில் அமர்வதற்குள் கால் கட்டாகி இருந்தது..


எனக்கு டிரைவர் சீட்டுக்கு பின் இரண்டாவது வரிசையில் ஜன்னல் சீட்..ஒரு வழியாக உட்கார்ந்தாகி விட்டது.
கால் பண்ணி காய்ச்சல் வாங்க வேண்டுமா? யோசனையுடன் பொத்தான்களை அழுத்தினேன்..
"ஹலோ.."
"!--! -- ! .. "
"இதோ வந்துட்டே இருக்கேன் சார்.." எத்தனை தடவை..
".."
இன்னும் வோர்ட் கவுண்ட் பண்ணனும், டெம்ப்ளேட் பிக்ஸ் பண்ணனும், ப்ரூஃப் ரீட் பண்ணனும், இத்யாதி இத்யாதி..
"சார். நாளைக்கு காலைல உங்க கையில கதை இருக்கும் சார்.. நானே டைப் பண்ணி அனுப்பிடறேன்.. உங்க இன்பாக்ஸை நாளைக்கு செக் பண்ணுங்க.."
"பண்ணிடறேன் சார்.. நம்புங்க..." கெஞ்சாத குறை..
"..."
கால் ஓடிக்கிட்டே இருக்கு.. சீக்கிரம் கட்பண்ணுய்யா..!" சார் பஸ் புறப்படப்போகுதுன்னு நினைக்கிறேன்.. நான் நாளைக்கு பேசறேன் சார்.."
"..."
பீப்.. பீப்..
அப்பாடா..


முன்பெல்லாம் எப்போதாவது எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு முறை வாரஇதழ் ஒன்றில் வெளியாகி இருந்த என் சிறுகதை ஒன்றை படித்த இவர், புதிதாக தொடங்கப்பட்ட சிற்றிதழ் ஒன்றுக்கு என்பெயரை பரிந்துரை செய்திருக்கிறார்.. கடந்த சில மாதங்களாக எழுதிவருகிறேன்.. பெரிதாக வரவேற்பு ஒன்றும் இல்லை. ஆனால் நானாக எழுதும் போது இருந்த சுதந்திரம் பறிபோய்விட்டதாய் ஒரு உணர்வு. இப்போதெல்லாம் அவசரத்துக்கு எழுதி்க்கொண்டிருக்கிறேன். செயற்கைக் கருத்தரிப்பு மாதிரி. சாம்பார் செய்வது மாதிரி. இந்த மாதிரி கொஞ்சம் அந்த மாதிரி கொஞ்சம் என்று எல்லாத்தையும் கலந்து கதை என்ற பெயரில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.. இதோ இரவோடு இரவாக ஒரு கதை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் எடிட்டர்..


இன்னைக்கு ராத்திரி சிவராத்திரிதான்.. ஏதாவது ஒன்றை எழுதித்தரவேண்டும்..

டிரைவரும் கண்டக்டரும் மிக சாவகாசமாக, சாந்தி பரோட்டாவின் சால்னாவைப் பற்றி விவாதித்துக்கொண்டே வந்து பேருந்தை எடுக்கையில், பயணச்சீ்ட்டில் குறித்திருந்த புறப்படும் நேரம் கடந்து சிலமணிநேரங்கள் ஆகியிருந்தது.


நான் கையில் பேப்பர் பேனாவுடன், காலை கொஞ்சம் தூக்கி முன்சீட்டில் முட்டுக் கொடுத்துக் கொண்டு ஒரு மாதிரி போஸில் அமர்ந்து கொண்டேன்..
எங்கிருந்து தொடங்குவது. எதுவும் தெளிவில்லை.. என்னத்தை எழுதுவது. திரும்பவும் இலக்கில்லா அந்த எரிச்சல்..


போதாக்குறைக்கு கண்டக்டர் தன்பங்குக்கு, TV போட.. ஜாக்கிசானும், ஓவன் வில்சனும் சென்னைத் தமிழில் புகுந்து விளையாடத்தொடங்கினர்.
இப்போதே எழுதி முடித்தால்தான் காலையில் டைப் பண்ணி அனுப்ப முடியும்.
கோயம்பேடு போனா கதைக்காகாது.. அசோக் பில்லர்லையே இறங்கி ஆட்டோ பிடிச்சு போயிடலாம்... யோசித்துக் கொண்டே ஆரம்பித்தேன்..

நிழல் நிஜமாகிறது
-------------------------
யாருமற்ற ஒரு அறை.. சுவர்க்கடிகாரம் சுதியோடு டிக் டிக் பாடிக்கொண்டிருந்தது.. தரையில் சில தலைகொய்யப் பட்ட பொம்மைகள். அருகில் ஏதோ ஒரு அறையிலிருந்து இன்றைய முக்கியச் செய்திகள் கேட்டது. சத்தமில்லாமல் சீலிங் பேன் மெல்ல ஓடிக்கொண்டிருந்தது. லேசாகத் திறந்திருந்த முன்கதவு கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு தயக்கத்துடன், முழுசாய்த் திறப்பதற்குள்,


"டா............டி"

ஒரு குட்டிதேவதை ஓடி வந்தது. சமீபத்தில்தான் ஓடப்பழகியிருக்க வேண்டும். ஒரு மாதிரி தத்தி தத்தி ஓடிவந்து குருவின் கழுத்தைக் கட்டிக்கொண்டது..

"அம்முக்குட்டி.. அதுக்குள்ள ரெடியாயாச்சா..? ம்ம்.. மம்மி எங்க.?"
பெரிய தேவதை இன்னும் குளித்துக் கொண்டிருக்க வேண்டும்.
குரு மனதுக்குள் சிரித்துக் கொண்டான்..
சில்மிஷத்திற்கு இது நேரமல்ல..கோபித்துக் கொள்வாள்..காலேஜ் படிக்கும் போதிலிருந்து அவள் அப்படித்தான். திருமணமாகி 5 வருடங்களுக்குப் பிறகும், இன்னும் அவனாள் அவளைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.
முதல் நாள் அவளைப்பார்த்த போது மனசுக்குள் இருந்த அந்த சந்தோஷ குறுகுறுப்பு ஒவ்வொரு நாளும் புதுசாய் இன்னும் இருக்கிறது..

குழந்தையை உப்புமூட்டை தூக்கிக்கொண்டான்..

இன்னைக்கும் சமாளிக்க வேண்டும்.. இன்று பார்க் போவதாய் ஒரு பிளான்.ஆனால், அதற்குள் கிளையண்ட் ஒருவரிடமிருந்து ஒரு கால். அவரைப் போய் பார்த்தபின்தான் பார்க். இன்னைக்கு ருத்ர தாண்டவமே ஆடப்போறா.
அப்போ கூட அவ அழகாத்தான் இருப்பா..

கொஞ்சம் கொஞ்சமாக என் மனக்கண் முன் விரியத் தொடங்கியிருந்தது குருபிரசாத்தின் வீடு.. முற்புறம் முழுதும் பூச்செடிகளால் தன்னை அலங்கரித்துக் கொண்ட ஒரு அழகான வீடு. முப்பதுகளின் துவக்கத்தில் குரு. அவன் காதல் மனைவி திவ்யா தொட்டுவிடும் தூரத்தில்..

இவர்களுக்குள் காதல் கொஞ்சம் வினோதம்.. பெண்களைக் கண்டாலே விலகி ஓடும் குரு, முதன்முதலில் திவ்யாவைப் பார்த்தது ஒரு ப்ரெளசிங் சென்டரில். நான்காம் ஆண்டு பொறியியலில், ப்ராஜெக்ட் வொர்குக்காக ப்ரெளசிங் சென்னர் போன போது, திவ்யாவும் வந்திருந்தாள். முதல் சிலநாட்கள் பார்வையொடு கழிய, சில நாட்களுக்குப் பின் அவள்தான் வந்து அவளிடம் பேசினாள்.. அதைவிட ஆச்சரியம் இருவரும் கடந்த இரு வருடங்களாகக் குடியிருப்பது ஒரே ஏரியாவில்... இன்னும் பல ஆச்சரியங்களுடன் அவர்களின் பேச்சும் தொடர்ந்தது..

ரொம்ப ரிசர்வ்டு டைப்பான குருவுக்கு, எல்லார் கூடவும் பளிச்சுன்னு பேசற திவ்யாவை பாத்த உடனேயே புடிச்சிடுச்சு. அவ்ளோதான்.. இதுக்கப்புறம் என்ன வேணும்.. அவ பண்ற ஒவ்வொன்னும் அவனுக்கு அழகா தெரிஞ்சுது..
ரொம்ப தயங்கி தயங்கி, அவன் அவள்கிட்ட சொல்லும் போது ஆறு மாசம் ஓடிடுச்சு.
எல்லாத்தையும் குனிந்தபடியே கேட்டுகிட்டு இருந்தா. கடைசியா திரும்பினப்போ கண்ணில ஒரு துளி நீர் இப்பவோ அப்பவோன்னு திரண்டு நின்னுது. அவ்ளோதான் அவன் பாத்தது.. அப்புறம் பளீர் னு ஒரு அறை..
பார்வைப்புலம முழுக்க நட்சத்திரங்களாகப் பறக்க, அடுத்து அவன் கேட்ட வார்த்தைகள்..

"இதைச் சொல்றதுக்கு இவ்ளோ நாளாடா..? மக்கு.."

மட்டும்தான்.. அவன் கண்களைத் திறப்பதற்குள் சாலையைக் கடந்திருந்தாள்..
குருபிரசாத்திற்கு தன்னையே நம்பமுடியவில்லை.. கொஞ்சநேரம் ஆகாயத்தில் பற்ந்த பின் வீட்டுக்குத் திரும்பினான்..

திவ்யா வீட்டில் பெரிதாக ஒன்றும் பிரச்சனை வரவில்லை. குரு வீட்டில் கொஞ்சமாக அமர்க்களத்துக்குப்பின், ஒரு சுபயோக சுபதினத்தில் சுற்றமும் நட்பும் சூழு குரு திவ்யா திருமணம் நடந்தது..

இன்றோடு ஒரு சில காதல்வருடங்களுக்குப் பின் ஒரு குழந்தையும்.. ஸ்வேதா. அதுதான் அவர்கள் முதன் முதலில் சந்தித்த ப்ரெளசிங் சென்டர் பேரு..
ம்ம்ம்... வேணாம்.. நல்லா இல்ல..
சரி..அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச ஒரு பெயர்..
ம்ம்.. போதும்..
திவ்யா குளிச்சுட்டு வந்தாச்சு..
குரு விட்றாத.. எப்படியும் சமாளிச்சுடு..
முகத்தை ஒரு மாதிரி கொஞ்சலாக வைத்துக்கொண்டான். ஒரு கண்ணாடி கிடைத்தால் தன்முகத்தையே பார்த்துக்கொள்ளலாம் போல் தோன்றியது.. அதற்குள் திவ்யா வந்தாச்சு..

"டார்லிங்.. இன்னும் ரெடி ஆகலியா..? பார்க் போலாம்னு சொன்ன..?"

"இதோ அஞ்சு நிமிஷம் டா.. ரெடியாயிடறேன்.. .. உங்க பொண்ணு வேற.. அரைமணி நேரமா ஒரே நச்சரிப்பு.. டாடி டாடின்னு.."

அவள் சலித்துக்கொள்வது கூட அழகுதான்..
குரு தடுமாறாத..
"ஆமா.. இப்படித்தான் சொல்லுவ.. கடைசியில அரைமணிநேரம் ஆகும்.."

அழகாய்ச் சிரித்தாள்..
"ஆமா.. ஆகும்தான்.. என்ன பண்ண.. லேட் ஆயிடுச்சே.."

ஆங்.. இதுதான் சமயம்..
சோபாவில் அமர்ந்து, ஷீவைக் கழற்றிக்கொண்டே, முடிந்த வரை மிக இயல்பாய் சொன்னான்

"ok டியர்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. நீ பொறுமையா கிளம்பு.. அதக்குள்ள நான் போய் ஒரு க்ளையண்டப் பாத்திட்டு வந்துடறேன்."

எந்த சத்தமும் இல்லை.. பெட் ரூமி்ல் திறக்கப்பட்டுக் கொண்டிருந்த டிராயர் கூட பாதியில் நின்றதாய் ஒரு பிரமை..

"வந்த உடனே நாம பார்க் போகலாம்.. "

"நெனச்சேன்.. அய்யா இன்னைக்கு சீக்கிரம் வரும் போதே நினைச்சேன்.. குடும்பத்தைப் பத்தி அக்கறை இருந்தாத்தான. "

"ஹே. .. அதெல்லாம் இல்லடா.. இது ரொம்ப முக்கியமா."

"ஒன்னும் வேணாம்.. போங்க.. போய் உங்க க்ளையண்டையே கட்டிகிட்டு அழுவுங்க..."

"திருவாரூர்,திருவாரூர்,திருவாரூர்" மற்றும் "டீ காப்பி, டீ காப்பி" யோடு வந்தது தஞ்சாவூர் பேருந்து நிலையம்..
ஒரு அரைமணிநேரத்துக்குப் பின் பேருந்து புறப்பட கொஞ்சமாய் கண்களை மூடி குருபிரசாத்தைத் தொடர்ந்தேன்..
குருபிரசாத், புறப்படத் தயராகிக்கொண்டிருந்தான்.

"டாடி.. வரும் போது எனக்கு பவர் ரேஞ்சர்ஸ் பொம்மை டாடி.. "

"சரி டா செல்லம்.. அப்டியே வற்றத்துக்குள்ள மம்மியை சமாதானம் பண்ணிவை.. வந்தவுடன் பார்க் போகலாம்.."

"ok டாடி.."

"ம்.. அப்ப்புபுபுபுபுறம்... "
இப்படி கேட்டா முத்தம் தரணும்னு அர்த்தம்..
சமத்தாக வந்து கன்னத்தில் ஒரு உம்மா கொடுத்தது குழந்தை..
அடுத்தது கிடைக்குமா என்ற நப்பாசையில் திரும்பிய போது, பெட்ரூம் கதவு முன்னமே சாத்தி்யிருந்தது. சமாதான ஒப்பந்தத்துக்கு இது நேரமல்ல.. வந்து பார்த்துக் கொள்ளலாம்.. திவ்யா ஒரு பெரிய குழந்தை.. பார்க் போனா எல்லாம் சரியாயிடும்..

"ஏண்டி ராதிகா.. அத்தானக் கூப்புடு.. நல்ல வேளை.. ஒரு தண்ணி பாட்டில் வாங்கியாரச் சொல்லு.. "
மொழியில்லாத ஒரு முனகல்..

"அண்ணாச்சி.. வாங்க.. ஒரு டீ போட்டுட்டு வந்துடலாம்.."

"அட.. என்னங்கய்யா இது..."

"கொஞ்சம் இருப்பா.. வண்டியை ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு வற்றேன்.."
ஒரு மாதிரி, ட்யூன் பண்ணாத ரேடியோ மாதிரி, சகல சம்பாஷனைகளும் காதில் விழுந்து கொண்டிருந்தன..

மெல்ல கண்விழித்தேன்.. காற்றில் மெல்லியதொரு பரபரப்பு தெரிந்தது.. ஒவ்வொருவருக்கு ஒரு அவசரம். எங்கள் பேருந்து நின்று கொண்டிருந்தது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன்.. நீண்ட தூரத்துக்கு வாகனவரிசை விளக்கு வைத்த ஜன்னல்களாகத் தெரிந்தது..


"என்ன சார் ஆச்சு.."

இதே கேள்விக்கு பலவிதப்பட்ட தேற்றங்கள் தரப்பட்டுக் கொண்டிருந்தன பேருந்தினுள். கடைசியில் வந்த நடத்துனர் அனைவரின் கேள்விப்பார்வைக்குமாய் பதில் சொன்னார்..


"ஏதோ ஆக்சிடண்டாம்.. இப்போதான்.. கொஞ்சநேரம் முன்னாடி.. எவனோ ஒரு லாரி காரன் பைக்ல ஏத்திட்டானாம்.. "


"எப்போ டிராஃபிக் கிளியர் பண்ண போறாங்கன்னு தெரியல.."
"...?"
கொஞ்சநேரம் கடந்தது..


"இதுக்குத்தாங்க.. SETC க்கு திருச்சி போர்டிங்கே குடுக்கக்கூடாது.. அது மட்டும் இல்லைனா, இந்நேரம் பின்னாடியே செங்கிப்பட்டி போய் பைபாஸை புடிச்சு போயிருக்கலாம்."
மேலும் பல இத்யாதிகள்..
இதற்குள் டிரைவரும், சுகமான தேநீர் பருகலுக்குப் பின் திரும்பியிருந்தார்.
அவரும், அவர் போன்று பொறுமையிழந்த இன்ன பிற ஓட்டுனர்களும் ஒரு வழி கண்டுவிட்டனர். விபத்து நடந்தபகுதியை ஒட்டி செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதையில், ஒரு மாதிரி வண்டியைச் செலுத்தத் தொடங்கினர். ஒவ்வொரு வண்டியும், ஒரு ஜோடி டயர்கள் மண்ணிலும், மறு ஜோடியை சாலையிலும் பொருத்தி, சாய்ந்த ஒரு நிலையில் கடக்கத் தொடங்கியிருந்தன.. நெடியதொரு சர்ப்பம் போல் படுத்துக்கிடந்த அந்த வாகன வரிசை மெல்ல ஊர்ந்தது..


ஒரு கட்டத்தில், பேருந்தில் இருந்த அனைத்து முகங்களும் ஒரு சேர ஜன்னல் பக்கமாய் திரும்பின. விபத்து நடந்த இடமாக இருக்கவேண்டும். எனக்கு ஜன்னல் வழியே பார்க்கப்பிடிக்க வில்லை. டிரைவர் சீட்டுக்குப் பின் மாட்டியிருந்த ராணிமுத்து காலண்டரையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.


தூரத்தில் சைரன் சத்தம் கேட்டது.


மனதில் என்னன்னவோ எண்ணங்கள்.. சடாரென ஜன்னல் வழி பார்த்தேன்.. தெளிவாகத் தெரியவில்லை.. நிழல் உருவமாக ஒருவர் அலங்கோலமாகப் படுத்திருந்தார்..
அருகே, நிராதரவாகத் தரையில் கிடந்தது ஒரு பவர் ரேஞ்சர்ஸ் பொம்மை.

Tuesday, February 19, 2008

அகம் பிரம்மாஸ்மி


எண்ணம் தப்பும் வேளைகளில்
எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன்,
என் கனவுகளை..

பலித்ததும், இழந்ததும்
வேண்டுவதும், வேண்டியதும்
விதவிதமாய் வந்து சென்ற கனவுகள்..

நினைவுகளின் ஏட்டில்,
பலித்தவற்றைக் காட்டிலும்
பலிக்காமல் தொலைந்தவையே
இன்னும் பலம் பெற்றிருக்கின்றன..

வெற்றிடத்தின் தத்துவத்தை
அறிவியலில் அறிந்ததைக்காட்டிலும்,
ஏதேனும் ஒன்றை இழந்ததில் உணர்ந்ததே
நினைவில் நிற்கிறது..

முன்னிரவோ முதல்பகலோ
வினைத்தொகையாய்,
முக்காலத்திலும் முடிவின்றி
நீளும் கனவுகள்..

அய்யனார் கோவிலும்,
பீர்முகமது வீட்டுக் கொல்லையும்,
அஞ்சு கண்ணு பாலமும், ஒற்றைப்பனையும்
வந்த அந்த இரவின் கனவை
இன்னும் சேமித்து வைத்திருக்கிறேன்..

ரகுவரன் வைத்த வெடிகுண்டை
நானும் ஒருமுறை
செயலிழக்கச்செய்திருக்கிறேன்.
ராமசாமி வாத்தியாரை
பிரம்பால் அடித்திருக்கிறேன்..
கேப்டன் வ்யோமுடன்
அண்டம் சுற்றி அலைந்திருக்கிறேன்..

சில சிரிக்க வைத்திருக்கின்றன
சில சிலிர்க்கவைத்திருக்கின்றன..
புரட்டப்படாத கனவுகளின் சில பக்கங்கள்
செல்லரித்தும் போயிருக்கின்றன,
எவ்வாறாயினும்,
அவை என் கனவுகள்..

என் சிருஷ்டியின் குழந்தைகள்
அவற்றின் பிரம்மன் நான்தான்..
என் படைப்பில் பெருமையிருக்காதா எனக்கு?

அதனால்தான்,
கனவுகள் கறுப்பு வெள்ளையென சொன்ன
ஆசிரியருக்கு நிறக்குருடு என சிரித்தேன்..

ஆனால்,
ஊக்கம் தொலைத்து உறைந்து நிற்கும்
வேளையிலும்,
உடைந்து போன வாழ்வுக்கு வண்ணமிடுபவை
இந்த கறுப்பு வெள்ளை கனவுகள்
என உணர்ந்தபின்,
கண்களைத் தொலைத்தவனல்ல
கனவுகளைத் தொலைத்தவனே
குருடன் என்றேன்..

இன்றும்
வண்ணங்கள் சிந்தியபடி,
புரட்டப்படுகின்றன
என் நினைவுகளின் ஏட்டில்
சில கனவுகள்..
பலித்தவையும், தொலைத்தவையும்..

தான் சேமித்த காசை எண்ணி எண்ணிப் பார்த்து
மகிழும் கருமியைப் போல,

எண்ணம் தப்பும் வேளைகளில்
எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன்,
என் கனவுகளை...

Thursday, February 07, 2008

சிறுகை அளாவிய தாள்

ஏதோ ஒரு மரண ஊர்வலத்திற்காக தூவப்பட்டு
சவத்தின் வாசம் சுமந்து
சாலையெங்கும் வாகனங்களால் அரைக்கப்பட்ட
தட்டைப் பூக்களை நினைவுபடுத்தியது

இன்று வாங்கிய க.பருப்பிற்கு
பொட்டலமாய் வந்த,
எங்கோ ஒரு சிறுகுழந்தை
ஆனா ஆவன்னா பழகிய
ஒற்றைக்காகிதம்.

எழுதியதில் பிடித்தது - சர்வேசனுக்காக..


எனக்கும் இதுவரை அழைப்பு வரவில்லை.. ஆனாலும், இது தெய்வக் குத்தமாகாதுன்னு சர்வேசன் சொன்னதால நானும் ஒரு பதிவு போட்டுரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. :-) :-)

அப்படி இப்படின்னு மொத்தமா 22 பதிவு போட்டாச்சு போன வருஷத்துல. எனக்கு எழுதியதில் பிடித்ததுன்னா அது வாக்குமூலம் தான். இது நானா எழுதினதுங்கறத விட, ஒரு நிர்ப்பந்தத்தில் எழுதிய கதை இது.
எவ்வளவு நாளானாலும் மறக்கமுடியாத கல்லூரியின் கடைசி செமஸ்டர். திருச்சி REC ன் பாரம்பரியம் மிக்க nittfest போட்டி. துறை வாரியாக போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு துறையின் தன்மானப் பிரச்சனை என்பதால் போட்டிகள் சற்று பலமாகவே இருக்கும். அதில் அறிவிக்கப்பட்ட கதைப்போட்டிகாக எழுதியதுதான் இது.

கதைப்போட்டிக்கு தலைப்புக்குப் பதிலாக மூன்று விஷயங்கள் கொடுக்கப்பட்டன.
ஒரு உவமை, ஒரு சத்தம், ஒரு புகைப்படம். இம்மூன்றையும் கதையில் வைத்து எழுதவேண்டும் என்பதே போட்டி.
ஏறக்குறைய ஒரு வார காலம் அவகாசம் வழங்கிய பின்னும் எதுவுமே தோன்றாமல், கடைசி நாளன்று இலக்கின்றி எழுதத் தொடங்கிய கதை, முதல் பரிசு வாங்கிய போது ஆச்சரியம்தான் மிச்சம்.
இன்றும் என்னால் நம்பமுடியவில்லை.. முதல் பத்தி எழுதும் போது அடுத்து என்ன எழுதப்போகிறேன் என்பதே எனக்குத் தெரியாது. கதையை எப்படி முடிக்கப் போகிறேன் என்பது கூட தெரியாமல் எழுதி முடித்தேன். எப்படியோ, இது எல்லாம் சேர்ந்து வாக்குமூலம் என் விருப்பப் பதிவாயிடுச்சு.


அப்படியே, நம்ப பங்குக்கு இவங்கள கூப்பிட்டுருக்கேன்..
1) சேரல்
2) ஞானசேகர்
3) வில்வகுமார்
4) வீரபாகு
5) ஜகன்

Monday, January 28, 2008

குறுக்கெழுத்துப் புதிர்

---------------------------
என்னால முடிஞ்சவரை கொஞ்சம் முயற்சி பண்ணியிருக்கேன்... நீங்களும் முயற்சிக்கலாமே..
---------------------------
இடமிருந்து வலம்:
1. நிலாநிழல் (8)
4. இ.வ(9) க்கு கொடுமை சிதையில் (2)
5. கைமேல் வினையின் விளைவு (3)
6. சூளையில் சுட்டாலும் குளிர்ச்சி தரும் (2)
7. நெய்தலின் உரிப்பொருள் (2)
9. பிரிவின் பண்புத்தொகை பெண்ணுக்கு (4)
11. வளர்நிலாப் பருவ அலகு (2)
13. நமக்கு இரண்டு இ.வ(7) க்கு ஒன்று (2)
15. வழிகாட்டும் வினைத்தொகை (5)

வலமிருந்து இடம்:
8. அதிர்வில் ஆரம்பிக்கும் ஆற்றல் (2)
10. ஆண் பெண் பலருக்கும் பொதுவாய் (2)

மேலிருந்து கீழ்:
1. கடவுளோடு கைக்கிளை (6)
2. புதிர் தொடுக்கும் மாயக்குளத்தின் மந்திரக்குரல் (4)
3. கல்லானதால் கள்ளில்லை கனவில் (4)
6. தாலோஃபைட் தாவரம் (2)
7. உயிர் கொடுக்கும் உயிர் எடுத்தாலும் கிடைக்கும் (2)
11. மூப்பின் முன்னுரை ஜன்னலில் (2)
12. 7'up சாம்ராஜியம் (2)

கீழிருந்து மேல்:
8. வனமில்லா வனத்தின் வனவிலங்கு (5)
14. நியாயத்திற்கும் நிறுத்தலுக்கும் ராசியானது (3)
10. புத்தரின் போதனை இந்தோனேஷியாவில் (2)
16. கேள்விக்கு பதில் (3)

Wednesday, December 19, 2007

பெங்களுர் மக்களே..! பதில் சொல்லுங்க..

மெல்லிய பனி, கொஞ்சம் அதிகமாகவே குளிர், காலத்தைக் கடந்த தேவாலயங்கள், ராணுவக் குடியிருப்புகள், எரிச்சல் தரும் டிராஃபிக், தீப்பெட்டிக் குடியிருப்புகள், அடிக்கடி வரும் marketing Call கள் இவற்றோடு பெங்களுரென்றவுடன் தவிர்க்க இயலாத மற்றொன்று FM radio தாங்க..

நானும் ரொம்ப நாளாப் பாத்திட்டேன்.
எல்லா சேனல்லையும், கண்டிப்பா கன்னடப் பாட்டு போடுறாங்க.. ஹிந்தி பாட்டு போடுறாங்க.. ஆங்கிலப் பாட்டு போடுறாங்க.. தெலுங்குப் பாட்டு போடுறாங்க.. இவ்ளோ ஏங்க..? மலையாளப் பாட்டு கூட ஒரு முறை கேட்டிருக்கேன்.. ஆனா இன்னைய வரைக்கும் ஒரு முறை கூட தமிழ் பாட்டு கேட்டதில்லை..?
ஏன் இப்படி?

Wednesday, December 05, 2007

காதலிக்க நேரமில்லை - Title Song

இப்போதெல்லாம் திரைப் பாடல்களுக்கு போட்டியாக வந்து விட்டன நம் சின்னத்திரைப் பாடல்களும். "கண்ணின் மணி... கண்ணின் மணியி"ல் தொடங்கி இன்றைய கோலங்கள் வரை பல பாடல்கள் மக்களின் கவனத்தைக் கவர்ந்திருந்தாலும், சமீபத்தில் வெளிவந்திருக்கும் காதலிக்க நேரமில்லையின் தலைப்புப் பாடல் எனனை வெகுவாகக் கவர்ந்தது.

அழகான பாடல் வரிகள், பொருத்தமான குரல் தேர்வு, மனதை வருடும் மெல்லிய Beat உடன் கூடிய இசை என, ஒரு பெண்ணின் ஏக்கங்களை மிக கச்சிதமாக பதிவுசெய்திருக்கும் இப்பாடல் பெரும் ரசிகர் வட்டத்தைப் பெறும் என நம்பலாம்.
உங்களுக்காக அப்பாடல் இங்கே..


kathalikka neramillai
kathalikka neramil...
Hosted by eSnips