கல்லூரி விடுதிகளில்
களைப்பாறுவதற்கென்றே
வந்து தங்கிவிடுகின்றன
சில வாசனைகள்
உருவமற்று உருவம் பெறும்
ஒரு அமீபாவைப் போல்
ஒவ்வொரு அறையிலும்
ஒரு விதமாய் ஒரு நிறமாய்
ஒரு குணமாய்
உருவம் பெறுகின்றன
முதன் முதலாய்
என் அறையில்
அடியெடுத்து வைத்த அன்று
உணரவில்லை
என்று இந்த வாசம்
உருவானதென்றும் தெளிவில்லை
ஆனாலும் ஒரு நாள்
உருவம் பெற்று விட்டது...
எப்படி வந்ததிது?
பழமையின் வாசனையுடன்
புது சுண்ணாம்பின் வாசனை,
நான் பயன்படுத்தும் ஷேவிங்லோசன்,
பயன்படுத்தாமல் தூக்கிப்போட்ட
பால்பாயிண்ட் பேனா,
இன்று வாங்கிய சாக்லேட்,
உலர வைத்த துணியின் வாசம்,
என அனைத்தும் சேர்த்துப் பிசைந்த
ஒரு விசித்திரமான கலவை அது.
அந்த வாசம்
அறைக்கு அறை வேறுபடுவதை
உணர்ந்திருக்கிறேன்.
அது வெறும் வாசமல்ல.
வாசம் செய்யும் மனிதனின் வாசம்.
அவன் குணங்களின் வாசம்.
நுகர்தலுக்கு ஒரு பரிமாணம்
என்று யார் சொன்னது?
பல பரிமாண பிம்பம் காட்டும்
கண்ணாடி அது
நான்காண்டுகளின் முடிவில்
பாலை நிலத்தை நினைவு படுத்தும்
ஒரு மே மாதத்தில்
அந்த பிரிதல் நடந்தது.
உடமைகளாய் உடன் இருந்தவை
அனைத்தையும்
கவனமுடன் பைகளில் கட்டி
வீட்டுக்கு வந்து பார்த்த போது
தொலைந்து போனவை பட்டியலில்
அந்த வாசமும் சேர்ந்துகொண்டது.
அதன் பின் வருடங்கள் மட்டும்
வந்து செல்கின்றன
துரித உணவகங்கள் மணக்கும்
சாலையோரங்களில்,
நகரத்தின் நெரிசல் மிகுந்த
நாளங்காடிகளில்,
புகைவண்டிப்பயனத்தில்,
புதிதாய் வாங்கிய
நோட்டுப்புத்தகத்தில்,
என் அலுவலக
வரவேற்பறையில்,
குளிர்பதனப் பெட்டியில்
என இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன்
என் அறையில் தொலைத்த
என் வாசனையை.
4 comments:
நல்ல கவிதை.
Its fantastic dude... kalloori viduthi oru sorga boomi.. kalloori naatkal oru porkaalam..
I can say only one word “Excellent”, you have dragged me to my college days.Hats off!
உங்களை 8 போட அழைத்திருக்கிறேன்; விபரங்களுக்கு http://vrkathir.blogspot.com/2007/07/8.html
Post a Comment