Tuesday, July 29, 2008

பேசாப்பொருள் - IV


மரணத்தையும் வாழப்பிறந்தவனே மனிதன் - யாரோ


அந்த சனிக்கிழமையின் பகல் பொழுது முழுவதும் நானும் அந்த மகனும் பேசிக்கொண்டிருந்ததன் சாராம்சம் இதுதான்.

அவர்களின் சொந்த மாநிலம் மணிப்பூர். மலைகள் சூழ்ந்த சொர்கம். பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கேயே. படித்து முடித்து வேலைக்காக பெங்களுர் வந்திருக்கிறார். காதல் கசிந்து கனிந்துருகி கல்யாணம் முடித்து இங்கேயே தங்கிவிட்டார்.

மரணத்துக்குப் பின் மனித உடலை பஞ்ச பூதங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்கிறது கருட புராணம். சிதையில நெருப்புக்கும், இடுகாட்டில் நிலத்துக்கும், கங்கையில் நீருக்கும் கொடுப்பது மாதிரி, அவர்களுக்கும் ஒரு பழக்கம். ஆகாயத்துக்கு கொடுக்கும் சடங்கு அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வமாக ஒரு மலை முகடு இருக்கும். இறந்த பிறகு இறந்தவர் உடலை தத்தம் மலைமுகட்டில், ஆகாயத்தின் தூதுவர்களாகக் கருதப்படும் பறவைகளுக்கு இரையாக்கிவிடுகின்றனர். இவ்வகையில், இறந்தவர் வெகு சீக்கிரம் சொர்க்கத்திற்கு செல்கிறார் என்பது அவர்களின் நம்பிக்கை.
அவர் தந்தையின் மரணத்தின் போது அச்சடங்கில் ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது. ஒற்றைச் சொல், சொல்லப்பொடும் இடம் பொருள் ஏவல் பொருத்து எத்தனை வடிவம் கொள்கிறது. அன்று அவர் சொன்ன ஏதோ ஒரு சொல்லில் அன்று தன் மகனிடம் சண்டை போட்டவர்தான். அன்றிலிருந்து யாருடனும் பேசுவதில்லையாம்.

“நீங்களே சொல்லுங்க சார்.. resomation, promession னு சயின்ஸ் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. இன்னும் காட்டுமிராண்டித் தனமா இருக்காங்க. காக்காவாம் குருவியாம்.. bull shit.”

“…”

“.. அன்னைக்கு என்னால என்ன பண்ண முடியும் சொல்லுங்க.. எனக்கு மட்டும் எங்க அப்பா மேல பாசம் இல்லையா என்ன..”

அங்கங்கே சென்சார் செய்து அவர் சொன்னதிலிருந்து அவரின் குற்றவுணர்ச்சி புரிந்தது.
அதற்குப் பிறகு இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை கேட்டுக்கொண்டும், யாருடனும் அவர் பேசுவதில்லையாம். யார் அழைத்ததற்கும் செவிசாய்க்காமல் தனியாகவே இருந்திருக்கிறார். இப்போது குழந்தை பிறந்த பிறகு மீண்டும் பலமுறை அழைத்தபின் இங்கு வந்து இருக்கிறார்.

முடிக்கும் போது அவர் கண்களில் கொஞ்சமாய் கண்ணீர் தேங்கியிருந்தது. படிப்பும், நாகரிகமும் அவருக்கு அழுகையை மறைக்க கற்றுக்கொடித்திருந்தன.
-----------
விதிவிலக்கில்லாமல் அடுத்த 11 மாதங்களில் மொட்டைமாடியில்லாமல் மொட்டையாக இருந்த வேறொரு வீட்டிற்கு மாறினோம்.

வழக்கமான அலுவலக பரபரப்புக்கிடையில் வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. அபிலாஷ் பேசுவதாக தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார். எந்த அபிலாஷ் என்று நான் இழுக்கையிலேயே, மணிப்பூர் என்றார்.

குரலிலேயே சந்தோஷம் தெரிந்தது. அன்று காலைதான் அவர் அம்மாவுடன் பேசியிருக்கிறார். மாலை வீட்டுக்கு வரமுடியுமா என்றார். வேலைப்பளுவைப் பொறுத்து மாலையோ, வாரஇறுதியிலோ பார்க்கலாம் என்பதுடன் எங்கள் சம்பாஷனை முடிவுக்கு வந்தது.

அடுத்த சிலமணி நேரங்களிலேயே அவரிடமிருந்து மீண்டும் அழைப்பு. உடனடியாக வீட்டுக்கு வரமுடியுமா என்றார்..?
அதற்குப்பின், அவர் தொலைபேசியில் அழும்போதே எனக்கு உண்மை, ஒரு பந்தாக அடிவயிற்றில் சுழன்று கொண்டது.
அதன்பின் நடந்தது எல்லாமே ஒரு பிளர் ஆகத்தான் நினைவில் நிற்கிறது.

வீட்டுக்குச் சென்ற போது நிறைய பேர் அழுதுகொண்டிருந்தனர்.
இறுதிச்சடங்கை மணிப்பூரில் அவர்கள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்போவதாகச் சொன்னார்.
எல்லாமே எனக்கு அர்த்தமற்றுப் பட்டது. எந்த பிரக்ஞையுமின்றி வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.

அன்றிரவு யாருடனும் எனக்கு பேசப்பிடிக்கவில்லை.

4 comments:

anujanya said...

நல்லா இருக்கு. நிதானமான நடை. சொல்வதற்கு நிறைய கருத்துகள். Resomation, promession என்று என்னவெல்லாமோ எழுதி இப்போது தூக்கத்தில் என்னை நானே மிகு சூட்டில் தூளாக்கிக் கொள்வதாக கெட்ட கனவுகள் வருகிறது.

அனுஜன்யா

Anand R said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை... மிக விரைவில் உயரங்களை அடைய என் வாழ்த்துக்கள்.

Priyadarshini said...

Highly matured writing.. tempts to read.. Thank you for giving such stories.

Bee'morgan said...

@ அனுஜன்யா:
அண்ணா.. ரொம்ப பயப்படாதீங்க.. :) எல்லாம் கற்பனைதான்..

@ Anand r:
நன்றி அண்ணா.. :)

@ ப்ரியா:
நன்றி ப்ரியா.. :)