Monday, February 26, 2007

நிர்வாண நகரம்


இந்த தினத்தில்தான் அந்த ஆசை எனக்கு வந்ததென்று குறிப்பிட்டுக் கூற முடியாது. நினைவு தெரிந்த நாள் தொட்டே ஒரு கார் வாங்கவேண்டுமென்பது என் வாழ்வின் குறிக்கோள்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. சின்ன வயசில் அம்மா எதாவது வாங்கிவர கடைக்கு அனுப்பினால்
, அந்த பயணம் என் மானசீக காருடன்தான். காற்றிலேயே கியர் மாற்றி ஸ்டியரிங் திருப்பி, ஹாரன் அடித்து அமர்க்களம் பண்ணிய எனக்கு அச்சாரமாய் அமைந்தது Boost-க்கு இலவசமாய் வந்த ரேசிங் கார். அது எங்கள் வீட்டில் பயணிக்காத இடமே இல்லை. ஹாலின் சுற்றளவை ஒரு முறை வலம் வந்த பின் ராஜாவுக்கு ராஜா நான்டா" பாட்டில் வரும் ரஜினி மாதிரி சுவற்றில் ஏறியும் பயணித்திருக்கிறேன். வ்ரூம் வ்ரூம் என்று Digital DTS சவுண்ட் எஃபெக்டுடன் நான் கிளம்பினாலே அடுக்களையிலிருந்து அம்மாவின் குரல் கேட்கும்.

சித்த சும்மா இறேண்டா.. காலைலேந்து ஒரே தலைவலி…"

எங்கள் வீட்டுக்குள் ஒரு குட்டி ரயில்வேயே நடத்தத் தொடங்கினேன். என் கார் கிராஸ் பண்னும் போது யார் குறுக்கே வந்தாலும் என் கார் கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக என் கார் என்றுமே நேர் சாலையில் சென்றதில்லை. கொண்டை ஊசி வளைவுகள் என்றால் கொள்ளை பிரியம்.

என் தொல்லை தாங்கமுடியாமல் அம்மாவும் அக்காவும் செய்த கூட்டுச்சதியின் பயனாக, ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து திரும்பி வந்து பார்த்த போது கார் மாயமாய் மறைந்து விட்டது. நான் இரண்டு நாள் அழுத பின் அந்த அத்தியாயம் முடிவுக்கு வந்தது.. ஆனால் கார் வாங்கும் ஆசை மட்டும் Hutch விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டி மாதிரி தொடர்ந்து கொண்டே இருந்தது.

அதன்பின் தொடர்ந்த வருடங்களில் நான் பள்ளி, கல்லூரியை முடித்து இன்று ஒரு கம்பெனியில் கைநிறைய சம்பளத்தில்.

ஒரு நாள் இரவு வேலையிலிருந்து திரும்பி வரும் போதுதான் என் கண்ணைக்கவர்ந்தது, ரோட்டின் குறுக்கே பிரம்மாண்டமாய் வீற்றிருந்த அந்த விளம்பரப்பலகை. என் போன்ற கார் காதலர்களின் கவனத்தைக் கவர்வதற்கென்றே ஒளிவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது பளபளப்பான ஒரு குட்டி கார். அருகிலேயே Car Loan? It is easy என்று போட்டு ஒரு வங்கியின் பெயர் போட்டிருந்தது.

மறுநாளே நான் அந்த வங்கியில். "லோன் அப்ளை பண்ணுபவருக்கு கண்டிப்பாக டிரைவிங் தெரிந்திருக்க வேண்டும" என்று ஒரே வரியில் முட்டுக்கட்டை போட்டார் மேனேஜர். திரும்பிவரும் போதே என் மனம் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டது.

அதன்பின் ஒருவாரம் டிரைவிங் ஸ்கூல் தேடும் படலத்தின் முடிவில் ஒரு டிரைவிங் ஸ்கூலைக் கண்டுபிடித்துச் சென்றேன். அது ஒரு சிறிய காம்ப்ளக்ஸ். பெட்டி பெட்டியாக ஆறு கடைகள். கீழே மூன்று மேலே மூன்று. ஒரு டீக்கடைக்கும் ஒரு லாரி புக்கிங் ஆபீசுக்கும் இடையில், இரண்டடி அகலத்தில் ஏறக்குறைய 80டிகிரி சாய்வில் இருந்த ஒரு படிக்கட்டில் ஏறிச்சென்றால், ஒரு திருப்பத்தில், சுற்றிலும் வெற்றிலை பாக்கு கறைகளுக்கு மத்தியில் டிரைவிங் ஸ்கூல் பெயர் போட்டு அம்புக்குறி போட்டிருந்தது.

மிஞ்சிப்போனால் 8க்கு 8 சதுர அடியில் ஒரு அறை. சுவர் முழுவதும் பெட்டி பெட்டியாகப் போட்டு Road Simbols வரைந்து வைத்திருந்தனர். எப்படியும் வரைந்து பல வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். ஒரு மூலையில் பலவகையான ஆட்டோமொபைல் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன. ஒரு சீலிங் ஃபேன் சீரான சுதியில் பாடிக்கொண்டிருந்தது.. கீழே ஒரே ஒரு டேபிள். அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி ஒருவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். என்னை தலையைத் தூக்கிப்பார்த்தவர், ஏதோ கல்யாண வீட்டுக்கு வரவேற்பவர் போல,

வாங்க, வாங்க! இங்க உட்காருங்க"

கொஞ்சம் கூட மாறாமல், காபியா டீயா? என்கிற தொனியில்

என்ன? டூ வீலரா, ஃபோர் வீலரா?" என்றார்.

ஆள் பார்ப்பதற்கு வீரமணிதாசன் மாதிரி வெள்ளை தாடி, உத்திராட்சக் கொட்டை, 2 இன்ச் அகலத்தில் சந்தனப்பட்டை என பக்திப்பழமாக காட்சி தந்தார்.

ரெண்டுமேதான்…"

ஓட்டத் தெரியுமா? இல்ல கத்துக்கணுமா?"

கத்துகிட்டு லைசென்ஸ் எடுக்கணும்"

ஓகே.. ஓகே.. அதெல்லாம் ஒண்னுமே இல்ல. ஈஸியா எடுத்துடலாம். ரெண்டும் சேத்துண்னா 2600 ரூபா ஆகும். உங்களுக்கு 2500 ரூபா

போட்டுக்கறேன். ஓகேன்னா நாளைக்கே LLR போட்டுறலாம். வரும் போது 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டா அப்புறம் உங்க ரேஷன் கார்டை மட்டும்

எடுத்துட்டு வந்துடுங்க. மத்தத நான் பாத்துக்கறேன். அடுத்த மாசமே லைசென்ஸ் எடுத்துடலாம்..

வேறுசில சம்பிரதாயமான் விசாரிப்புகளுக்குப்பின் வீடு திரும்பினேன்.

மறுநாள் காலை அரைநாள் விடுப்பு கேட்டு சூப்பிரெண்டுக்கு லெட்டர் அனுப்பிய பின் புறப்பட்டேன். நீங்க நேரா RTO ஆபீஸ் வந்துடுங்க. நான் உங்கள அங்க பாக்கறேன்.அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட விதவிதமான வாகனங்கள் புடை சூழ, ஒரு ஓரமாக வீற்றிருந்தது அந்த ஆபீஸ். அலுவலர்கள் யாரும் இன்னும் வரவில்லை.

என்னைப் போல் இன்னும் சிலர், 20 பேர் இருக்கும், திட்டுத் திட்டாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். உங்கள் சேவையில் போக்குவரத்துத் துறை; உங்கள் வசதிக்காக 9 மணிமுதலே இயங்கும் என்ற அறிவிப்புப்பலகை பளபளத்தது. அனிச்சையாய் மணிபார்த்தேன். எனக்கு அருகில் LLR-க்கு ஃபீஸ் எங்க கட்டணும் என்று ஒரு அப்பாவி விசாரித்துக் கொண்டிருந்தார்.

விளம்பரங்களில் வரும் வாட்ச் மாதிர் 10.10 மணிக்கு, ஒருத்தர் வந்து நாற்காலி போட்டு அமர்ந்தார். அருகில் ஒரு பெரிய ரெஜிஸ்டர், கூடவே ஒரு எடுபிடி.

அதற்குள் அந்த டிரைவிங் ஸ்கூல் வீரமணிதாசன் வந்து

சார், நீங்க கையெழுத்து போட்டுட்டு, உள்ள இருக்க க்யூல வந்து உட்காருங்க. நான் உள்ளதான் இருப்பேன்என்ற படி நகர்ந்தார்.

அவர் சொல்லாத மற்றொரு விஷயம், இங்கே ரெஜிஸ்டரில் கையெழுத்து போடவே ஒரு க்யூ காத்துக்கொண்டிருந்தது. அதன் கடைசியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

இந்த கையெழுத்து எதற்கு என்று கேட்கக்கூட முடியாமல், அப்படி ஒரு அவசரம், அனைவரிடமும். மொய் எழுதுவது மாதிரி ஒவ்வொருவராக கையெழுத்து போட, அந்த எடுபிடி

ஆங்.. அம்பது ரூவா எடுப்பா…” என்று அதட்டிக்கொண்டிருந்தான்.

என் முறை வந்தபோது, ஒவ்வொரு காலமாக பார்த்தேன். வழக்கம் போல் வரிசை எண், பெயரைத் தொடர்ந்து தேர்வுதொடங்கிய நேரம் என்று போட்டு 9.10 என்று நிரப்பப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து ஒரு கையெழுத்திட்டபின் அடுத்த காலம்பார்த்தேன். தேர்வு முடிந்த நேரம் என்று போட்டு 9.30 என்று போட்டிருந்தது.

இந்நேரத்திற்குள் எனக்குப் பின் தள்ளு முள்ளு தொடங்கி விட்டது.

யோவ், சீக்கிரம் நவுருய்யா.. அவனவன் ஜோலியப் பாத்துகிட்டு போவ வேணா?”

அவசரமாய் மற்றொரு கையெழுத்திட்டபின் நகர்ந்தேன்.

தாசன் உள்ளே காத்திருந்தார்.

என்ன சார், நான் ஏதோ பரீட்சை எழுதுனேன்னு கையெழுத்து வாங்குறாங்க. நான் கேள்வித்தாளக் கூட பாக்கலையே சார்..பரிதாபமாய் கேட்டேன்.

இதான் அது..! சீக்கிரமாய் இதுலயும் ஒரு கையெழுத்து போடுங்க..

இந்த வினோதமான பரீட்சையில் அப்படி என்னதான் கேட்டிருக்கிறார்கள் என்ற ஆவலில் அந்த பேப்பரை வாங்கிப் பார்த்தேன்.

நோட்டு பேப்பர் சைஸில் ஒரு சிறிய பேப்பரில் ஒரே ஒரு அட்டவணை மட்டும் போட்டு, வினா எண் என்று போட்டு 1 முதல் 12 வரை அச்சிட்டிருந்துது.

அதற்கு இணையாக விடைகள் என்று போட்டு அ, , ஆ என்று மாற்றி மாற்றி நிரப்பியிருந்தனர்.

மதியம் ஆபீஸ் போனதும் ராம் இடம் நான் எழுதிய இந்த எக்ஸாம் பத்தி சொல்லனும். அவனுக்கு எக்ஸாம் னாலே பயங்கர அலர்ஜி. மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

என் கையில் ஒரு விண்ணப்பத்தைத் திணித்து விட்டு,

இதே க்யூல வாங்க. அந்த கடைசியில் சிகப்புச்சட்டை போட்டவர்கிட்ட இதையும் உங்க ரேசன் கார்டயும் குடுத்திங்கன்னா அவ்ளோதான்.

பையில் கைவிட்டால் போட்டோ மட்டுமே வந்தது. என் விதியை நொந்து கொண்டே அடுத்த Zip-ஐ திறந்தேன். நேற்றிரவு ரேசன் கார்டை எடுத்து கப் போர்டில் வைத்தது நினைவுக்கு வந்தது. ஷட்.

சார்.., ரேஷன் கார்டை மறந்துட்டேன் சார். இப்போ என்ன பண்றது.

சரி சரி.. விடுங்க பாத்துக்கலாம்என்றபடி அடுத்தவரைக் காப்பாற்ற நகர்ந்தார்.

என் முறையும் வந்தது. கொஞ்சம் பெரிய சைஸ் ரோட் சிக்னல் மாதிரி சிகப்பு நிறத்தில் பயமுறுத்தினார் அந்த இன்ஸ்பெக்டர்.

என் விண்ணப்பத்தைப் புரட்டிப் பார்த்தவர்,

அட்ரெஸ் ப்ரூஃப்?”

முடிந்த அளவு சோகமான ஒரு முகத்தை வைத்துக்கொண்டு,

Sir, actually I forgot my ration card. I am working in…

என்னா? மறந்துட்டீங்களா? அது இல்லாம ஒன்னும் பண்ண முடியாது. டிரைவிங் லைசென்ஸ்னா சும்மான்னு நெனச்சிங்களா..எனத்தொடங்கி ஒரு சிற்றுரையே நிகழ்த்திவிட்டார்.

எல்லோரும் என்னையே பார்ப்பதாய் ஒரு உணர்வு. நிமிர்ந்து பார்க்கக் கூட கூச்சமாய் இருந்தது. அதற்குள் எங்கிருந்தோ ஆபத்தாண்டவராக ஓடி வந்த தாசன்

சார் சார், அது நம்ம ஸ்கூல் பையன் சார்

சரி.. சரி.. அட்ரெஸ் ப்ரூஃப் இல்ல.. இதுல இருக்கிற அட்ரஸ அடிச்சுட்டு டிரைவிங் ஸ்கூல் அட்ரஸ எழுதிட்டு வாங்க. லைசென்ஸ் அந்த அட்ரெஸ் போட்டுதான் வரும். ஓகேவா?” என்றபடி நீட்டினார்.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, தாசன் அவசரமாக தலையாட்டிவிட்டு விண்ணப்பத்துடன் என்னையும் வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.

சார், நான் போய் ரேசன் கார்ட எடுத்துட்டு இன்னோரு நாள் வற்ரேன் சார்..

அட, நீங்க ஒண்னு.. .. உங்களுக்கு என்ன அட்ரெஸ் வேணும்னு ஒரு பேப்பர்ல எழுதி கொடுங்க.. அது போதும். நாளைலேந்து டிரைவிங் கிளாஸ் வந்திடுங்க.

ராம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக

ம்.. இது என்னடா..? பாஸ்போர்ட் ஆபீஸ் போய் பாரு.. ஹண்ட்ரட் ருப்பீஸ் கொடுத்தா உன்ன க்யூல முன்னாடி கொண்டு போய் நிக்க வைக்க கூட ஆள் இருக்கு..

எப்படிடா?” ஆச்சரியம் விலகாமல் கேட்டேன்.

அப்படித்தான். Anything is possible in Indiaஎன்னைப் பார்த்து கண்ணடித்தான்.

என்னுடைய டிரைவிங் கிளாஸ் தொடங்கியது. 2,3,4 வது கியரெல்லாம் ஒழுங்காக வந்துவிட பர்ஸ்ட் கியர் போட்டு ஸ்டார்ட் செய்வது மட்டும் 20
கிளாஸ்க்கு அப்புறமும் அடம் பிடித்தது.

டெஸ்ட் நாளும் வந்தது. எவ்வளவோ முயன்றும் நான் பயந்த மாதிரியே ஓட்டும் போது வண்டி ஆஃப் ஆகி விட்டது. டெஸ்ட் முடித்து அருகிலேயே காத்திருந்தேன்.

அரைமணி நேரம் கழித்து என்னிடம் ஓடி வந்தார் தாசன். கூடவே அசலா போலியா என்று கூறமுடியாத மூச்சிரைப்பும்.

சார் சார்உங்கள பெயில் பண்ணிடவான்னு கேக்குறாரு இன்ஸ்பெக்டரு…. பெயிலானா 200 ரூபா கட்டி அடுத்த வாரம் திரும்பவும் வரணும் சார்..

இதற்குள் அந்த அலுவலகத்தின் நடைமுறைகள் எனக்கு ஓரளவு அத்துப்படியாகிவிட்டன.

இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க..

இன்ஸ்பெக்டர் நமக்கு தெரிஞ்சவர்தான். வேணுன்னா இன்னைக்கே முடிச்சிடலாம். ஆனாஒரு நூத்தம்பது ரூபா கூட செலவாகும்..

சிறிது நேரத்திற்குப் பின் என்னை ஒரு அறைக்கு அழைத்துச்சென்று ஒரு digi cam-ல் போட்டோ எடுத்தனர். பின் ஒரு பிரிண்ட் அவுட்டில் கையெழுத்திட்டேன்.

சாய்ங்காலம் நம்ம ஸ்கூலுக்கு வந்து லைசென்ஸ் வாங்கிக்கலாம் சார்..புன்னகை மாறாமல் வழியனுப்பினார்.

மாலை டிரைவிங் ஸ்கூல் சென்று என் லைசென்ஸை வாங்கி ஆச்சரியத்துடன் பார்த்தேன். என் வீட்டு முகவரி, வரி வரியாக அச்சிடப்பட்டிருந்தது.

எது வேணா பண்லாம் சார்..தாசன் பல்லைக்காட்டினார்.

Anything is possible in Indiaராம் சொன்னது நினைவுக்கு வந்தது.

தெருவில் இறங்கி நடந்தேன்.

டீக்கடை டீவியில் ஒரு செல்போன் விளம்பரம் கேட்பாரற்று அலறிக் கொண்டிருந்தது,

விழித்திடு இந்தியா! விழித்திடு


5 comments:

Anonymous said...

நல்ல நடை நன்றாக எழுதியிருக்கிறீர்கள் !!

http://www.desipundit.com/2007/02/26/license/

SurveySan said...

நல்ல பதிவு. நீங்களும் கவுந்ததுதான் தாங்க முடியல :)

We like the easy route, when one is available, no matter how ugly the route is.

ஷோபன் said...

அட்றா சக்கை, நீங்களும் நம்ப கேஸ்தான்.

என்னங்க பண்றது...இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் :-(

இப்பவாவது முதல் கியர் ஒழுங்கா விழுதா?

ரொம்ப நல்லா எழுதறீங்க, நல்ல flow இருக்கு, வாழ்த்துக்கள்.

Unknown said...

இந்தியா ஒளிர்கிறது !!!!

நல்லா எழுதுறீங்க வாழ்த்துக்கள் !!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

தலைப்பும், நடையும் நன்றாக இருக்கின்றன

-ப்ரியமுடன்
சேரல்