Tuesday, July 29, 2008

பேசாப்பொருள் - IV


மரணத்தையும் வாழப்பிறந்தவனே மனிதன் - யாரோ


அந்த சனிக்கிழமையின் பகல் பொழுது முழுவதும் நானும் அந்த மகனும் பேசிக்கொண்டிருந்ததன் சாராம்சம் இதுதான்.

அவர்களின் சொந்த மாநிலம் மணிப்பூர். மலைகள் சூழ்ந்த சொர்கம். பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கேயே. படித்து முடித்து வேலைக்காக பெங்களுர் வந்திருக்கிறார். காதல் கசிந்து கனிந்துருகி கல்யாணம் முடித்து இங்கேயே தங்கிவிட்டார்.

மரணத்துக்குப் பின் மனித உடலை பஞ்ச பூதங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்கிறது கருட புராணம். சிதையில நெருப்புக்கும், இடுகாட்டில் நிலத்துக்கும், கங்கையில் நீருக்கும் கொடுப்பது மாதிரி, அவர்களுக்கும் ஒரு பழக்கம். ஆகாயத்துக்கு கொடுக்கும் சடங்கு அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வமாக ஒரு மலை முகடு இருக்கும். இறந்த பிறகு இறந்தவர் உடலை தத்தம் மலைமுகட்டில், ஆகாயத்தின் தூதுவர்களாகக் கருதப்படும் பறவைகளுக்கு இரையாக்கிவிடுகின்றனர். இவ்வகையில், இறந்தவர் வெகு சீக்கிரம் சொர்க்கத்திற்கு செல்கிறார் என்பது அவர்களின் நம்பிக்கை.
அவர் தந்தையின் மரணத்தின் போது அச்சடங்கில் ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது. ஒற்றைச் சொல், சொல்லப்பொடும் இடம் பொருள் ஏவல் பொருத்து எத்தனை வடிவம் கொள்கிறது. அன்று அவர் சொன்ன ஏதோ ஒரு சொல்லில் அன்று தன் மகனிடம் சண்டை போட்டவர்தான். அன்றிலிருந்து யாருடனும் பேசுவதில்லையாம்.

“நீங்களே சொல்லுங்க சார்.. resomation, promession னு சயின்ஸ் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. இன்னும் காட்டுமிராண்டித் தனமா இருக்காங்க. காக்காவாம் குருவியாம்.. bull shit.”

“…”

“.. அன்னைக்கு என்னால என்ன பண்ண முடியும் சொல்லுங்க.. எனக்கு மட்டும் எங்க அப்பா மேல பாசம் இல்லையா என்ன..”

அங்கங்கே சென்சார் செய்து அவர் சொன்னதிலிருந்து அவரின் குற்றவுணர்ச்சி புரிந்தது.
அதற்குப் பிறகு இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை கேட்டுக்கொண்டும், யாருடனும் அவர் பேசுவதில்லையாம். யார் அழைத்ததற்கும் செவிசாய்க்காமல் தனியாகவே இருந்திருக்கிறார். இப்போது குழந்தை பிறந்த பிறகு மீண்டும் பலமுறை அழைத்தபின் இங்கு வந்து இருக்கிறார்.

முடிக்கும் போது அவர் கண்களில் கொஞ்சமாய் கண்ணீர் தேங்கியிருந்தது. படிப்பும், நாகரிகமும் அவருக்கு அழுகையை மறைக்க கற்றுக்கொடித்திருந்தன.
-----------
விதிவிலக்கில்லாமல் அடுத்த 11 மாதங்களில் மொட்டைமாடியில்லாமல் மொட்டையாக இருந்த வேறொரு வீட்டிற்கு மாறினோம்.

வழக்கமான அலுவலக பரபரப்புக்கிடையில் வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. அபிலாஷ் பேசுவதாக தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார். எந்த அபிலாஷ் என்று நான் இழுக்கையிலேயே, மணிப்பூர் என்றார்.

குரலிலேயே சந்தோஷம் தெரிந்தது. அன்று காலைதான் அவர் அம்மாவுடன் பேசியிருக்கிறார். மாலை வீட்டுக்கு வரமுடியுமா என்றார். வேலைப்பளுவைப் பொறுத்து மாலையோ, வாரஇறுதியிலோ பார்க்கலாம் என்பதுடன் எங்கள் சம்பாஷனை முடிவுக்கு வந்தது.

அடுத்த சிலமணி நேரங்களிலேயே அவரிடமிருந்து மீண்டும் அழைப்பு. உடனடியாக வீட்டுக்கு வரமுடியுமா என்றார்..?
அதற்குப்பின், அவர் தொலைபேசியில் அழும்போதே எனக்கு உண்மை, ஒரு பந்தாக அடிவயிற்றில் சுழன்று கொண்டது.
அதன்பின் நடந்தது எல்லாமே ஒரு பிளர் ஆகத்தான் நினைவில் நிற்கிறது.

வீட்டுக்குச் சென்ற போது நிறைய பேர் அழுதுகொண்டிருந்தனர்.
இறுதிச்சடங்கை மணிப்பூரில் அவர்கள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்போவதாகச் சொன்னார்.
எல்லாமே எனக்கு அர்த்தமற்றுப் பட்டது. எந்த பிரக்ஞையுமின்றி வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.

அன்றிரவு யாருடனும் எனக்கு பேசப்பிடிக்கவில்லை.

Monday, July 28, 2008

பேசாப்பொருள் - IIIMan acts as though he were the shaper and master of language, while in fact language remains the master of man.
-Martin Heidegger


மொழி என்பது வெறும் எழுத்துக்களாலும் சொற்களாலும் ஒலிகளாலும் கட்டப்படவில்லை. உணர்ச்சிகளால் கட்டப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகளின் வெளிப்பாடே மொழியானதாக வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு மொழியுமே ஒரு ஆச்சரியம்தான். ஒவ்வொரு மொழிக்கும் அதன் ஒலிவடிவையும் வரிவடிவையும் கடந்ததொரு பரிமாணம் இருக்கிறது.

கோபத்திற்கு உருவம் உண்டென்றால் நம்ப முடியுமா? உண்டு என்பதே உண்மை. கோபம் என்பதை மனம் அப்படியே உணர முடியாது. மனத்திற்கு புரியும் வகையில் ஒரு உருவம் அதற்கு வழங்கப்படுகிறது. கோபம் என்ற சொல்
நமக்குத் தெரிந்த எந்த மொழியில் இருந்தாலும், ஒரு pointer மாதிரி, அனைத்து சொற்களும், ஏற்கனவே மனம் உருவகப்படுத்தியிருக்கும் அந்த கோபத்திற்கு திசைகாட்டப்படுகின்றன.
நாம் உணரும் உருவமும், நம் மனம் உணரும் உருவம் முற்றிலும் வேறுபட்டவை.

மனத்தைப் பொறுத்த வரையில் அருவம் என்பதே கிடையாது. வெகு சில ஒலிகளைத் தவிர அனைத்திற்கும் ஏதோ ஒரு உருவத்தை அல்லது உருவகத்தை வகுத்துக் கொள்வதால் மனதிற்கு அருவம் மிக அரிது. ஏதோ ஒரு மோட்டாரின் உறுமல் கேட்கிறது. அதை கேட்கும் நபரின் அறிவின் விஸ்தரத்தைப் பொறுத்து, ஒருவனுக்கு அது வாகனமாக உருவகிக்கிறது. மற்றொருவனுக்கு அது ஒரு இரு சக்கர வாகனமாகவும், சிலருக்கு அது Hero Honda Splendor ஆகவும் உருவமாகிறது. மனம் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஒலிக்கும், இன்னும் சொன்னால், ஒவ்வொரு உள்ளிடலுக்கும் (input) ஏதோ ஒரு உருவத்தை ஒதுக்க தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறது. அது நீங்கள் இது வரை கேட்டே இராத ஒரு ஒலியாகக் கூட இருக்கலாம்.

அருவம் உருவம் பெறும் அந்த கணம், அலாதியானது. அது வரை கற்பனையில் புலப்படாதற்கெல்லாம் ஒரு உருவம் கொடுக்கத் தொடங்குகிறது மனம்.

ஆம்.உண்மையில், ஒவ்வொரு மொழியும் ஒரு அற்புதம் தான்.

இன்னதுதான் நான் புரிந்து கொண்டது என்று நான் உங்களுக்கு உணர்த்துவது கடினம்.
அன்று ஏதோ சோகத்தில் இருந்தார் போலும். அதற்கான காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்தது. எதுவும் செய்யாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதற்கடுத்த நாள் சந்தோசமாய் இருந்தார். அடுத்தடுத்த நாட்களில், அவரைப் பார்ப்பதே எனக்கு சந்தோசமாய் ஆகிப்போனது. ஒவ்வொரு நாளும் என்னிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கும் அவரிடம். மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டிருப்பார். சோகமாக இருக்கும் போது மட்டும் பெருமூச்சுடன் கூடிய ஒரு மௌனம்.

எனக்கு ஒரு வகையில் கொஞ்சம் சிரிப்பாகக் கூட இருந்தது. எங்களிருவருக்கிடையில் இருப்பது என்ன உறவு. வெளியிருந்து பார்த்தால் நானே இதை பைத்தியக்காரத்தனம் என்றுதான் சொல்லியிருந்திருப்பேன்.
அவர் பேசுவது என்ன மொழி என்ற கேள்விகளெல்லாம் முக்கியத்துவமிழந்து போயிருந்த ஒரு நாள் எனக்கு முன்னமே வந்து காத்துக் கொண்டிருந்தார்..

முதலில் என்னைக் காணும் போது அந்த முகத்தில் தெரியும் அந்த மலர்ச்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று தோன்றியது.
தானே செய்ததாகக் கூறி ஒரு பலகாரம் கொடுத்தார். இனிப்பும் கசப்பும் ஒன்றாகக் கலந்த பலகாரம் அது. பிடித்திருந்ததா பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. ஆனால், எனக்காக அவர் கொண்டு வந்திருந்தது பிடித்திருந்தது. அந்த பலகாரம் வாழ்வின் தத்துவத்தை உணர்;த்துவதாக அவர்களின் நம்பிக்கை. எனக்கும் ஆம் என்று பட்டது.

எப்படி என்று தெளிவாகச் சொல்லத்தெரியா விட்டாலும், என் தினசரி வாழ்வின் தவிர்க்க இயலா அங்கமாகிப்போனது அந்த சந்திப்பு. தவிர்க்க வேண்டிய சில கட்டாய நாட்களில் அதன் வெறுமைய உணர ஆரம்பித்தேன்.
ஒரு வெள்ளிக்கிழமையன்று, வீடு திரும்புகையில் இரண்டாவது மாடியில் ஒரு வீட்டின் முன் மெல்லிய கூட்டம். உள்ளிருந்த அழுகை சத்தம் கேட்டது. எனக்கென்ன என்று நான் கிளம்ப முயற்சித்த நேரம், அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரின் முகம் பரிச்சயமாகத் தெரிந்தது. ஏதோ ஒரு வடகிழக்கு இந்திய முகம். மூளையில் பல்ப் எரிவதற்குள் கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. உடனடியாக விரைந்து சென்றேன்.

யாரும் அழைக்காமல் ஒரு வீட்டிற்குச் செல்வது அவ்வளவு நாகரிகமாகப் படவில்லை. ஆனால், அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் நான் இல்லை.
வரவேற்பறையின் ஒரு மூலையில் முழங்காலில் முகம் புதைத்தபடி ‘அவர்’ அழுது கொண்டிருந்தார். அந்த குழந்தை ஒருவித மருண்ட விழிகளுடன் சோபாவில். நின்ற வாக்கில் அதே பார்வையுடன் அவர் மகன்.
அருகில் சென்றேன். நான் எதுவுமே சொல்லாமல் என்னை அவர் நிமிர்ந்து பார்த்தது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுது அந்த அழுகை குறைந்து தேம்பல் மட்டும் மிச்சமிருந்தது.
கொஞ்ச நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தபின்

“மாடிக்கு வாங்க” என்றேன் தமிழில்.

அந்த மகன் என்னை விநோதமாய்ப் பார்ப்பது தெரிந்தது. அழுகைக்குப் பின் மிட்டாய் வாங்கித்தருவதாய் வாக்குறுதி பெற்ற குழந்தையைப் போலவே அவர் தெரிந்தார். எதுவும் பேசாமல் என்னுடன் மாடிக்கு வந்தார்.
ரொம்ப நேரம் நாங்கள் எதுவுமே பேசவில்லை. பேசாமல் இருப்பது அவருக்கு புதிதில்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை இப்படி மௌனியாகப் பார்ப்பது எனக்கு என்னவோ செய்தது. அன்று நான் பேசினேன். என்னன்னமோ பேசினேன். மானேஜர் மீதிருந்த கோபம், காதலியின் முத்தம், புதிதாக வாங்கிய டையரி என முன்னுக்குப் பின் தொடர்பில்லாமல் ஏதேதோ சொன்னேன்.
ரொம்ப சந்தோசமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இவர்தான் இன்று மாலை அழுது கொண்டிருந்தவர் என்று சொன்னால் சத்தியமாக யாரும் நம்பிருக்க மாட்டார்கள். அன்றிரவு கொஞ்சம் தாமதமாக உறங்கிப்போனேன்.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கெல்லாம் யாரோ கதவைத்தட்டும் ஓசை. கதவைத் திறந்தால் அவரின் ‘மகன்’.
அவரை வீட்டுக்குள் அழைத்து அமரவைத்து, மொத்தமாக தூக்கத்திலிருந்து மீண்டு அவரிடம் வருகையில், அவர் கேட்ட முதல் கேள்வி,

“உங்களுக்கு மணிப்புரி தெரியுமா?”

இல்லை என்பது போல் தலையாட்டினேன்.

“என் அம்மாவுக்கு வேறெந்த மொழியும் தெரியாது. பின் எப்படி அவருடன் பேசுகிறீர்கள்?”

“உங்களின் முதல் கேள்விக்கான என் பதிலை எப்படி புரிந்து கொண்டீர்கள். அப்படித்தான்..”

அதற்குப்பின் ஏதோ சொல்லவந்தவர் தயங்கியபடி நிறுத்தினார்.

சிறிது நேர மௌனத்திற்குப் பின்,

“சொன்னால் நம்பமாட்டீர்கள். என் அம்மா என்னுடன் பேசி பத்து வருடங்கள் ஆகின்றன.. என்னிடம் மட்டுமல்ல, யாரிடமும்..”

- இன்னும் பேசும்

Tuesday, July 15, 2008

பேசாப்பொருள் - II

Whenever two people meet, there are really six people present. There is each man as he sees himself, each man as the other person sees him, and each man as he really is.

- William James

நினைவில் பதிந்து போகாத ஏதோ ஒரு நாளின் மாலை வேளை. அம்புக்குறியாக கூடு திரும்பும் பறவைகளை எண்ணியபடி என் மொட்டை மாடி உலாத்தல்.

கீழிறங்க யத்தனிக்கும் நேரம், அரையிருட்டில் யாரோ நிற்பதாய் ஒரு பிரமை. கொஞ்சம் உற்றுப் பார்த்தேன். எனக்குக் குறுக்காக நிச்சயமாய் யாரோ மாடியில் நிற்கிறார்கள். அரையிருட்டில் சரியாகத் தெரியவில்லை. சில்கவுட் மட்டும் தெரிந்தது. முதுகில் ஏதோ பை ஒன்று மாட்டியிருப்பதாகப் பட்டது. ஆச்சரியம் கலந்த சந்தோசம் எனக்கு, இன்னொருவரை அங்கு கண்டதில்.

போய் பேசலாமா? வேண்டாமா? பேசினால் என்ன நினைப்பார்கள்? பலவித தயக்கங்கள் சந்தேகங்களுக்குப் பின் பேசிவிடுவதெனத் தீர்மானித்தேன். வேண்டுமென்றே செருப்புக்கால்களை தேய்த்து மெல்லமாக சத்தமெழுப்பியபடி நெருங்கினேன். அவ்வுருவம் கைப்பிடிச்சுவர் பிடித்தபடி வெளியே பார்த்துக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது. நான் நெருங்கியதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. முகுதில் இருந்தது பை இல்லை குழந்தை. 2-3 வயது இருக்கும்.

ஏறக்குறைய 8லிருந்து 10 அடி தூரத்தில் நின்று,

"ஹாய்"

சுத்தமாக எந்தவித சலனமும் இல்லை. ஒரு வேளை காது கேட்காதோ?

இதற்கு மேல் முயற்சிக்க கிட்டத்தட்ட வெட்கமாய் இருந்தது. சில வினாடிகள் காத்திருப்புக்குப் பின் கீழே திரும்பிவிட்டேன்.
ஓரிரு நாட்கள் மனதில் இருந்து உறுத்தியபின் நினைவிடுக்கில் புதைந்து போனது.

சிலநாட்களுக்குப்பின் அதே உருவம் மீண்டும் மாடியில். இம்முறை வெளிச்சத்திலேயே கண்டுவிட்டேன். அவர் ஒரு பெண்மணி. அறுபதைக் கடந்திருப்பார் என்று பட்டது. இன்றும் குழந்தை. அஸ்ஸாம் டீ விளம்பரத்தில் சில பெண்கள் தேயிலை பறிப்பார்களே அதே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்திருந்தார். முதுகில் வெள்ளைத்துணியில் ஒரு முண்டு மாதிரி கட்டியிருந்தார். அந்த குழந்தை சமத்தாக அமர்ந்திருந்தது. பேரனாக இருக்கவேண்டும். வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர் போல் இருந்தார். திபெத்திய மூக்கு. நல்ல வெளுப்பு. கண்களில் அதே வெறித்த பார்வை. கொஞ்சம் கூட மாறாமல், கடந்த முறை நான் கண்ட அதே புள்ளியில், எங்கோ தொலைதூரத்தில் தெரியாத ஒரு புள்ளியை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார்.
இம்முறையும் போய்ப் பேசுவதற்கு என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அவ்வளவையும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தபின் திரும்பினேன்.
அதற்கடுத்த சில நாட்களிலும் அதே இருவரைக் காண நேர்ந்தது. சில நேரங்களில் மெல்லிய பேச்சுக்குரல் கேட்கும். குழந்தைக்குகுக் கதையா? இல்லை தனக்குத் தானே பேசிக்கொள்கிறாரா? இல்லை புளுடுத்.? அடச்ச.. நினைவிலிருந்த விலக்கமுடியவில்லை.
கடைசியின் என் மொட்டை மாடி உலாத்தல்களின் குறிக்கோள்கள் மொத்தமாய் காணாமல் போய், அவர்களைக் கவனிப்பதே வழக்கமாய் ஆனது.
கவனித்தபடி கடந்து சென்றன மேலும் சில நாட்கள்.

ஆங்கிலம் தெரியாததனாலோ? .. என்ன இது. இப்படி என்று சலித்துப்போன ஒரு நாள், இன்று எப்படியும் பேசிவிடுவதெனத் தீர்மானித்து, மீண்டும் 'ஹாய்'. இம்முறை தலையைத் திருப்பிப்பார்த்தவர், எதுவுமே நடக்காதது போல் மீண்டும் அந்த தொலைதூரப்புள்ளிக்கே பார்வையைத் திருப்பினார்.
எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இனிமேல் சத்தியமாக பேசுவதில்லை என்று சூளுரைத்து என் புத்தியை சபித்தபடியே கீழிறங்கினேன்.
அதனைத் தொடந்த நாட்கள் அவர்கள் இருக்கும் பக்கமே திரும்புவதில்லை என்று வலுக்கட்டாயமாய் என் பார்வையை திருப்பியபடி வானம் பார்த்திருந்தேன். எப்போதாவது சில சமயங்களில் குழந்தையின் அழுகை கேட்கும்.

அன்றொரு நாள் நான் எதேச்சையாகத் திரும்புகையில், ஒரு விஷயம் என் கருத்தைக் கவர்ந்தது. அது அவர் நின்ற இடம். இது எப்போதும் அவர் நிற்கும் இடம் இல்லை என்பது மட்டும் உறுதி. பொருள் என்ன? அடுத்த கேள்வி மனதில் முளைத்தது. புத்தியை மீண்டும் சபித்தபடி, அந்த டாபிக்கை மனதிலிருந்து விரட்டியடித்தேன்.

ஆனாலும், அந்த கேள்விக்குப் பதில் அடுத்த ஓரிரு நாட்களிலேயே கிடைத்துவிட்டது. ஒவ்வொரு நாளும் அவர் நிற்கும் இடம் என்னை நோக்கி நெருங்குவது தெளிவாகத் தெரிந்தது. என்னிடம் பேச விழைகிறார். ஆனால் தயக்கம் என்று புரிந்தது. அவருக்கும் உறுத்தியிருக்க வேண்டும். அன்றெனக்கு பயங்கர சந்தோஷமான தினம். பழிக்குப் பழி வாங்க சந்தர்ப்பம் வாய்த்துவிட்டதென மனது கூத்தாடியது. ஆனால் அந்த சந்தர்ப்பம் வாய்ப்பதற்குள், பழிக்குப்பழி நினைவிலிருந்து காணாமல் போயிருந்தது.

மிக மெல்லமாக என்னை நெருங்கிய அவர், ஏதோ சொன்னார் என்று தெரிந்து திரும்பி அவரை நோக்கினேன்.

"டு யு நோ இன்கிலிஷ்?"

கேள்வியை சட்டை செய்ததாகவே தெரியவில்லை. மீண்டும் ஏதோ சொன்னார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். எங்களிருவருக்கும் இடையில் எந்தவொரு பொது மொழியும் இல்லை. என்ன சொல்வதென்று தெரியாமல், தலையை மட்டும் ஆமாம் என்பது போல் ஆட்டி வைத்தேன்.

கொஞ்ச நேரம் மௌனம். பின் மீண்டும் ஏதோ சொன்னார். அவர் முகத்தையே பாவமாகக் பார்த்துக் கொண்டிருந்தேன்.

'அய்யய்யோ மாட்டிக் கொண்டேனோ?'

இதே கதைதான் ஒரு சில நாட்கள் நீடித்தது. என் மாலைப்பொழுதுகள் வீணாய்ப் போகின்றன என்ற நினைப்பே மனதுக்குள் ஆட்டிப்படைத்தது.
தேமே என்று அவர் முகத்தையே பார்த்தபடி இருப்பேன். ஒரு வேளை மாடிக்குப் போவதையே தவிர்த்து விடலாமா? என்று நான் எண்ணத் தொடங்கிய ஒரு நாள் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
---------------------------
இன்னும் பேசும்...