Friday, April 27, 2012

பொறி

உங்கள் வீட்டில் எலி இருக்கிறதா? எங்கள் வீட்டில் இருக்கிறது. அப்படித்தான் நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.

அவ்வப்போது கிடைத்துவரும் சாட்சிகளின் படி, அப்படித்தான் நம்பவேண்டியிருக்கிறது. இதெல்லாம் என்று தொடங்கியது என்று கூட இப்போது சரியாக நினைவில் இல்லை. ஆனால், நான் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியது சரியாக 9 நாட்களுக்குமுன், காந்தி ஜெயந்தியன்று. வெள்ளைக்குல்லாவும் ரகுபதி ராகவ பாடாவிட்டாலும் கூட, வருடத்துக்கு ஒரு நாள் விடுமுறை தரும் ஒரே காரணத்துக்காக நான் காந்தியின் கட்சிதான். நான் ஒன்றும் அப்படியெல்லாம் அவரசப்பட்டு வன்முறையில் இறங்கும் ஆளெல்லாம் கிடையாது.

வாரத்தின் நட்ட நடுவே புதன்கிழமையன்று வந்ததால் யார்தான் காந்தியை வாழ்த்த மாட்டார்கள். அதோடு கூட மனைவியும் ஊரில் இல்லையென்று வெளியில் செல்வது என்று முடிவு செய்து அலமாரியைத் திறந்தபோதுதான் நிகழ்ந்தது அது. ஒரு வினோதமான துர்நாற்றம் கடைசி அடுக்கிலிருந்து வந்தது. குனிந்து பார்த்ததில், அதிகம் உபயோகிக்காத சில துணிகள் முன்வரிசையிலும், அதைவிட அதிகம் உபயோகிக்கப்படாதவை அதன்பின்னும் முறையே அடுக்கப்பட்டிருக்கும். முதல் அடுக்கை கலைத்த போதுதான் தெரியவந்தது. பரிசுப்பொருள்களை பெட்டியில் வைத்து கட்டும் போது அவை அலுங்காமல் இருக்க வைக்கப்படும் கந்தல் கோலத்தில் காட்சியளித்தன சில துணிகள். அவசரமாய் நிமிர்ந்து மேல்அடுக்கை கலைத்த போது, அதன் பின்னும் ஒரு அதிர்ச்சி.

அதற்கு முன்னரே கூட, லேசாக சுரண்டப்பட்ட தேங்காய் மூடிகள் அது இதுவென அங்கங்கு சில தடயங்களைக் கண்டிருந்த போதும், அப்போதெல்லாம் பெரிதாகப்படவில்லை எனக்கு. ஆனால், அன்று என் புத்தம்புதிய பீட்டர் இங்கிலாண்ட் சட்டையில் பாக்கெட் இருந்த இடத்திலிருந்து கோடு கோடாக ஒரு ஓட்டையைக் கண்ட போதுதான் எனக்குள் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச காந்திய வாதி ஓடிப்போயிக்கவேண்டும்.

அன்றிலிந்து, அந்த எலியை ஓழித்துக்கட்டுவது என்று ஒரே குறிக்கோளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறேன். நேற்றுதான் கோபாலிடமிருந்து எலிப்பொறியொன்று வாங்கிவந்து வைத்திருக்கிறேன். இன்று வீட்டுக்குப் போனதும் பார்க்கவேண்டும்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சுகவாசி என்று நண்பர்கள் பொறாமைப்படும் அளவுக்கு நானிருந்தேன். அம்சமாய் மனைவி, வசதியான மாமனார், சொந்தமமாய் வீடு, கை நிறைய சம்பளம் … இதை விட மனிதனுக்கு வேறென்ன வேண்டும். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

பிரசவத்திற்காக மனைவி ஊருக்குப் போன போதுதான் எல்லாம் தொடங்கியது. ஒரே வாரத்தில் வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்ததுவிட்டது. சுகமான கனவில் லயித்திருக்கையில் அடித்தொண்டையில் அலறும் அலாரம் அடித்த மாதிரி ஆகிவிட்டது. என்னதான் ”எம்பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா”என்று ரெண்டு நாட்கள் குதித்துக்கொண்டிருந்தாலும், மூன்றாம் நாளே கையொடிந்த மாதிரி ஆகிவிட்டது. ஒரு நாளில் எத்தனை காரியங்களுக்கு நான் அவளை சார்ந்திருந்திருக்கிறேன்.. அப்பப்பா அதிலிருந்து மீண்டு என்னை நானே பராமரித்துக்கொள்ள அடுத்து மூன்று நாட்கானது. அதற்குள் நான் ஓரளவுக்கு சுதாரித்துக்கொண்டேன். தினமும் வீட்டுக்குவந்தததும் ஏதாவது படம் பார்க்கத் தொடங்கினேன். அதுவும் ஓரிரு நாளில் போரடித்துவிட்டது.

என் வாழ்க்கை மட்டும் ஏன்தான் இப்படி போரடிக்கிறதோ?. என்னடா வாழ்க்கையிது.. ஒரு புதையல் இல்லை, பூதம் இல்லை.. கையில் ஒரு மந்திரக்குச்சியிருந்தால் அவாடா கடாவ்ராவாவது சொல்லிப்பழகலாம்.. குறைந்த பட்சம் ஒரு அற்புத விளக்காவது இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்றெல்லாம் யோசிககத் தொடங்கிவிட்டேன்.

இப்போது அதற்கெல்லாம் நேரமே இல்லாமல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாள் அலுவலகத்திருந்து திரும்பிவரும் போதும் பொறி என்னவாகியிருக்கும், என்ற நினைப்போ ஆக்கிரமித்துக்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் வந்து பெட்டியைப் பார்ப்பதும் அது இல்லை என்றதும் அடு்த்த நாள் பொறியில் என்ன வைப்பது பொறியை எங்கு வைப்பது என்று யோசிப்பதுலுமே ஓடிக்கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்தவுடன் அவசரமாய் அடுக்களைக்கு ஓடிப்போய் பொறியைப் பார்த்தேன். இன்னும் காலியாகத்தான் இருந்தது. எனக்கு இப்போது நிஜமாகவே சந்தேகம் வரத்தொடங்கிவிட்டது.

உண்மையிலேயே எங்கள் வீட்டில் எலி இருக்கிறதா இல்லை என் மனப்பிராந்தியா. தனியாக வீட்டில் இருப்பதே போதும். இனிமேல் டான்னி டார்கோ மாதிரியான சைக்கோ படங்கள் பார்ப்பதை ஒழித்துவிட வேண்டும். அதில் கூட எலி வராதே. முயல்தானே வரும்.

”இந்தாங்க சார்.. நீங்களும் உங்கள் எலிப்பொறியும்.. நானும் ஒரு வாரமா ஏதேதோ வைச்சுப்பாத்துட்டேன். எதுக்குமே வரலை.. இதுக்கு மேலயும் இந்த பொறியை நான் வைக்கறதா இல்லை”

”சார். நான் எங்க வீட்ல இதே பொறியை வைச்சு நாலு எலி புடிச்சேன் சார்” கோபாலின் கண்ணில் பெருமிதம் மின்னியது.

”இந்த பொறியை வைச்சு… . அதுவும் நாலு எலி.. எப்போ?”

”போன வருசம்..”

”அதான பாத்தேன்.. அது போன வருசம்.. இந்த வருசம் எலியெல்லாம் நல்ல வெவரமாயிடுச்சு போல..” அவரை குறைசொல்லியிருந்தால் கூட அவரின் தன்மான உணர்ச்சி இவ்வளவு சோதிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.

 ”நீங்க என்ன வைச்சிங்க?”

”என்ன வைக்கலன்னு கேளுங்க சார்.. எங்க வீட்டு கிச்சன்ல இருக்கற ஐட்டத்துல அத்தனையிலயும் ஒரு சாம்பிள் இந்த பெட்டிக்குள்ள போயிருக்கு..”

”இவ்ளோ வைச்சிங்களே.. ஒரு மசால் வடை வைச்சிங்களா? அது அதுக்குன்னு ஒரு நீக்கு போக்கு இருக்குல்லியா.. மணக்க மணக்க ஒரு மசால்வடை வாங்கி அதுல மட்டும் வைச்சுப் பாருங்க.. அது விஸ்வமித்திர எலியா இருந்தாகூட மசால்வடைகிட்ட தாக்குபுடிக்க முடியாது.”

இவர் பேசுவதென்னமோ நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால், நடக்குமா..?
நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, அவரே கடைக்குச் சென்று ஒரு வடையும் வாங்கி விட்டுக்கு வந்து வைத்துவிட்டும் போய்விட்டார். அதில் எலி மட்டும் மாட்டாவிட்டால் பொறியை என்னையே வைத்துக்கொள்ளும் படியும் சொல்லிவிட்டார். என்னே தமிழரின் தன்மான உணர்ச்சி.

இரவு படுக்கப் போகும் போது அடுக்களை முழுவதுமே அந்த மணம் நிரம்யிருந்தது. நாசிக்குள் நுழையும் போதே எச்சில் ஊறியது. அடடா, கொஞ்சம் யோசித்திருந்தால் இன்னொரு வடை கூடுதலாக வாங்யிருக்கலாம் என்றெழுந்த நப்பாசையை அடக்கிக்கொண்டு உறங்கச் சென்றுவிட்டேன்.

ஒரு பெரிய வெண்மணற்பரப்பில் நின்றுகொண்டிருக்கும் போதுதான் அது கண்ணில் பட்டது. தொலைவில் ஒரு மசால் வடை. அதன் மணம் நான் இருந்த இடம் வரை சுண்டி இழுத்துக்கொண்டிருந்தது. தன்னிச்சையாக தொலைவில் தெரிந்த வடைப்புள்ளியை நோக்கி நடக்கத்தொடங்கியிருந்தேன். முதலில் மிக பக்கமாகத் தோன்றிய தொலைவு நடக்க நடக்க வளர்ந்துகொண்டே போவது போல் பட்டது. அப்போதுதான் அந்த எலியைக் கவனித்தேன். அது மறுபுறமிருந்து வடையை நோக்கி வந்துகொண்டிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மிக எளிதாக, மிக லாவகமாக வந்து அந்த வடையை தின்னத்தொடங்கிவிட்டது. ஆத்திரம் கொப்பளிக்க அதை நோக்கி ஓடினேன். முதலில் ஒரு புள்ளியாகத் தெரிந்த எலி அருகில் செல்லச் செல்ல எலியின் உருவத்திற்கு வளர்ந்தது. அத்தோடு நின்றிருக்கலாம். நான் மொத்தமாய் அருகில் சென்ற போதும் கூட அது வளர்வது நிற்கவில்லை. ஏறக்குறைய என் உயரத்திற்கு வளர்ந்த பின், அலட்சியமாக என் பக்கம் திரும்பி ”வடை வேண்டுமா?” என்ற போது, திடுக்கிட்டு எழுந்துவிட்டேன். என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே சில நிமிடங்கள் ஆனது. மெதுவாக அடுக்களைக்குச்சென்று எட்டிப்பார்த்த போதுதான், என் அத்தனை நாள் சந்தேகத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முதல் தரிசனம் நிகழ்ந்தது. சிலிண்டருக்கும் சுவருக்கும் இடையிலிருந்த இடுக்கிலிருந்து எட்டிப்பார்த்த அந்த எலி கண்மூடி திறப்பதற்குள் காணமல் போயிருந்தது. மசால் வடை அப்படியே இருந்தது.

பரவாயில்லை. குறைந்த பட்சம், என் சந்தேகம் உறுதிப்பட்டதே ஓரளவுக்கு திருப்தியளிக்க நிம்மதியாய் உறங்கிப்போனேன். ஆனால், அந்த நிம்மதி அடுத்த நாள் காலை நீடிக்கவில்லை. பொறிவைத்த இடத்தில் அப்படியே இருக்க உள்ளிருந்த மசால் வடை மட்டும் காணாமல் போயிருந்தது. கோபாலை சபித்தபடியே அருகில் சென்று பார்த்த போது, சுற்றி கொஞ்சம் எலிப்புளுக்கை மட்டும் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. இதற்கு மேலும் கோபாலையும் அவன் எலிப்பொறியையும் இந்த எலியையும் நான் நம்புவதாயில்லை. ஒன்று நிஜமாகவே இது ஒரு outdated பொறியாக இருக்க வேண்டும். அல்லது அந்த எலி ராட்டடுயி ரெமி மாதிரி படு சமத்தாக இருக்கவேண்டும்.
“வடை போச்சே..“

பைட் பைப்பர் மாதிரி ஏதாவது வாசிக்கத்தெரிந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை. இப்படி தினம் தினம் நீயா நானா விளையாடுவதற்குப்பதில் பேசாமல், நாலு ரூபாயில் விஷம் வாங்கி வைத்துவிடலாம் என்று விஷமத்தனமான ஒரு யோசனையும் வந்தது. ஆனால் அது வேறு விஷத்தை தின்றுவிட்டு வீட்டில் எங்காவது இடுக்கில் செத்துவிழுந்து நான்கு நான் கழித்துதான் நமக்கு தெரியவரும். அதனால் வேண்டாம் என்று சமாதானம் செய்துகொண்டேன். அதைவிட முக்கியமான காரணம், 12ம் வகுப்பு விலங்கியல் பாடத்திற்காக எலியின் உணவுமண்டலத்தை அறுவைசெய்து காட்டியதற்கே மயங்கி விழுந்து பள்ளியில் பிரபலமானவன் என்பதால், தேவையில்லாத விபரீதங்கள் வேண்டாம். பெட்டியே போதும்.. மாட்டியதும் தூரமாக எங்காவது கொண்டு சென்று விட்டுவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். இப்போது அதற்கும் வழியில்லை என்றே படுகிறது.

ஆனால், அன்றிரவு நான் ஏன் அப்படிச்செய்தேன் என எனக்கே புதிராகத்தான் இருக்கிறது. ஆனாலும் செய்தேன். அந்த புராதண எலிப்பொறியின் இருபக்க கதவுகளையும் திறந்தே வைத்து உள்ளே சில தேங்காய் சில்லுகளையும் வைத்துவிட்டு உறங்கப்போனேன். என்ன எதிர்பார்த்து அப்படிச்செய்தேன் என்று என்னால் தெளிவாகச் சொல்லமுடியவில்லை. ஆனால், அடுத்த நாள் காலையில் கொஞ்சமும் மிச்சமில்லாமல் சில்லுகள் காணாமல் போயிருந்தன. வருகையின் அடையாளமாய் கொஞ்சம் எலிப்புளுக்கை. ஆனால், அன்று எனக்கு கோபம் இல்லை. ஏதோ தினசரி நடவடிக்கை மாதிரி பெட்டி இருந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். அன்றிரவும் கூட கொஞ்சம் பொட்டுக்கடலைகள் வைத்தேன். அடுத்த நாள் கொஞ்சம் வாழைப்பழம் என என் இரவு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகிப்போனது.

இப்போது உங்களிடம் ஜீவகாருண்யம் அது இதென்று நான் புருடா விட்டுக்கொள்ளலாம். உங்களுக்கும் தெரியப்போவதில்லைதான். அனால், உண்மையில் அப்போது என் துணி அடுக்குகள் பாதுகாப்பாய் இருக்கக கண்டேன். அதுதான் என்னை தொடர்ந்து செய்யத் தூண்டியிருக்க வேண்டும்.
வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதைப் போல் இருந்தது. அதுவும் ரொம்ப நாள் தொடரவில்லை. திடீரென ஒரு நாள் காலை, பெட்டியில் வைத்தது வைத்த படியே இருந்தது. வந்து சென்றதற்கும் ஏதும் அடையாளம் இல்லை. அதற்கடுத்த நாளும் அப்படியே. எப்படி வந்ததோ அப்படியே சொல்லாமல் ஒரு நாள் சென்றுவிட்டது.

ஒன்றும் கவலையில்லை. எப்போது வாழ்க்கை மீண்டும் போரடிக்கத் தொடங்கிவிட்டதாக நினைக்கிறேனோ அப்போது அது மீண்டும் வரக்கூடும்.