Saturday, January 03, 2009

சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்


நீங்கள் கடைசியாக வரைந்தது எப்போது? நினைவிலிருக்கிறதா?

எனக்கு வரையவே வராது. நான் வரைந்ததே இல்லை என்று தத்து பித்து காரணங்களெல்லாம் வேண்டாம்.
நாம் எல்லாருமே வரைந்திருக்கிறோம்.. சிறிதோ பெரிதோ.. சுமாரோ சூப்பரோ, சிலேட்டோ தரையோ புதுச்சுவரோ, அதனை ஒரு தேர்ந்த ஓவியனுக்கே உரிய சிரத்தையுடன் மற்றவர்கள் நினைப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நமக்காக.. நமக்காக மட்டுமே வரைந்திருக்கிறோம்.. நினைவிலிருக்கிறதா?

ஆனா ஆவன்னாவிற்கும் முன்னதாக நம் கைவரப்பெற்ற கலை அது. நாம் கற்றுக்கொண்ட முதல் வரிவடிவம்..
வரைந்து முடித்த பின்பான அந்த மனநிலை நினைவிலிருக்கிறதா..? வரைந்தது சின்னஞ்சிறிய கோட்டோவியமே ஆயினும், முப்பரிமாண பிம்பமென மயக்கமுறும் வகையில் வெவ்வேறு தொலைவுகளில் வெவ்வேறு கோணங்களில் வைத்து ரசித்திருக்கிறீர்களா? தீக்குச்சி மனிதர்களைக் கொண்டு வகுப்பறை நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறீர்களா? பள்ளியில் ஓவிய நோட்டில், ஓரு மலை அதன் இடையிலிருந்து ஓடிவரும் ஒரு நதி, கரையில் ஒற்றைத் தென்னைமரம், அருகிரேயே வயல் சூழ்ந்த ஒரு குடிசை வரைந்த அனுபவம் உண்டா?

எங்கே இருக்கிறான் அந்த ஓவியன் இப்போது? என்றாவது தேடியதுண்டா?

நம் முதல் ஓவியம் எழுத்துக்கள்தான். அப்படி ஒரு சிரத்தையுடன் ஒவ்வொரு எழுத்தாக வரையத் தொடங்கினோம். அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.

கொஞ்சம் யோசித்தால், பள்ளியில்தான் நான் முதன் முதலில் மற்றவர்களுக்காக வரையத்தொடங்கினேன்.. ஆசிரியர்களுக்காக. நான் வரையவனவற்றின் மதிப்பு அவை பெறும் மதிப்பெண்களை விட அதிகம் எனக்கு.. ஒவ்வொருவருக்கும்தான்.
இப்படித்தான் வரைய வேண்டும் என்றில்லாமல், எப்படியும் வரையலாம் என்றிருந்த காலமது.
8 ம் வகுப்பு ஆ பிரிவில் கயல்விழியின் ரப்பர் வளையளோ, ஜியாமெண்ட்ரி பாக்சின் நீள் வட்டத்துளையோ, ஏதுமற்ற நேரங்களில் வெறும் கையோ போதுமானதாக இருந்தது கிளாமிடோமோனாசை வரைவதற்கு. அப்போதெல்லாம் கிளாமிடோமோனாஸ் ராமுவிடம் வட்டமாகவும், புண்ணியமூர்த்தியிடம் நீள்வட்டமாக பென்சில் ஷேட் உடனும், காயத்ரியிடம் பொட்டு வைத்த முகம் போலவும் இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு வளர்ப்புப்பிராணி மாதிரி. வரைந்து முடித்த பின்,

”ஹை.. என்னோடதப் பாரு.. எப்படி இருக்குனு.. நல்லாருக்கா..?”

ஒவ்வொரு வகுப்பிலும்.. இந்த சம்பாஷனைகள் கண்டிப்பாய் இடம் பெற்றிருக்கும்..

வகுப்பறைக்கு வெளியே ட்வீட்டியும் மிக்கி மௌசும் என் பால்ய நண்பர்கள். ஏராளமான முறை வரைந்திருக்கிறேன். தங்கமலரில் வரும் கிருஸ்துமஸ் தாத்தா, ஒரு வரி பிள்ளையார், காந்தி தாத்தா என அனைவரும் என் கைவண்ணத்திலிருந்து தப்பியதில்லை.

பள்ளியில் மிக எளிய கோட்டோவியங்களிலிருந்து கொஞ்சம் சிக்கலான குறுக்குவெட்டுத் தோற்றங்களை வரையத்தொடங்கிய நாளில், என் நண்பர்கள் பலருக்கு வரைவதின் மீதிருந்த ஆர்வம் ஓரமாய் ஓடிப்போய் ஒளிந்து கொண்டது. அதன் உச்சம் விலங்குசெல்லின் குறுக்கு வெட்டுத் தோற்றம். அந்த சமயம் பெரும்பலானோர், பேப்பரில் பென்சில் கொண்டு கொத்து பரோட்டோ போடத் தொடங்கியிருக்க நான் மட்டும் கோலத்துக்கு புள்ளி வைப்பதாய் வைத்துக்கொண்டிருப்பேன். எப்படியோ வந்து ஒட்டிக்கொண்டு விட்டது அந்த ஆர்வம். நான் பெரிய ஓவியன் என்ற அவசரமுடிவுக்கெல்லாம் வரவேண்டாம். நான் வரைபவன். அது எப்படி வந்தாலும் விடாது வரைபவனாகத்தான் இருந்தேன். அது ஏதோ ஒரு வகையில் மனநிறைவைத் தந்தது.கல்லூரிக்கு வந்த புதிதில், Engineering Drawing ஆஸ்பத்திரி சுத்தத்துடன் வரைதலை அணுகச் சொன்னது. ஒவ்வாரு மில்லி மீட்டரும் வரைதலின் அங்கம் என்றது. வரைந்தேன். அதுவும் கூட புதுவகையான ஆனந்தமாக இருந்தது. வரைவதற்கென்றே பிரத்யேகமான தயாரான தாள் , விதவிமான கருவிகள், உயரமான மேசை என புதுச்சீருடையில் பள்ளி செல்லும் குழந்தையின் குறுகுறுப்புடன் கடந்து சென்றன அந்த ஓவிய நாட்கள்.
முதலாமாண்டு கடந்த பின்னரும் கூட அவ்வப்போது, தூங்க வைக்கும் பேருரையாசிரியர்களின் வகுப்புகளில் நோட்டுப்புத்தகத்தில் ஏதேதோ வரைந்ததுண்டு.

ஆனால் இன்று வேலைக்கு வந்த பின் கடைசியாய் வரைந்தது எப்போது என்று தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. வரைதல் என் விருப்ப பொழுதுபோக்காக இருந்ததிலிருந்து, ஒரு தொழிற்பெயராய் மாறியது எப்போது என்று யோசித்தால் விடையில்லை.
ஒரு வேளை பால்யம் தொலைத்து சொந்தம் விட்டு, தேசம் விட்டு தூக்கம் தொலைத்து நாம் துரத்தும் நாணயச் சிதறல்களில் காணாமல் போயிருக்கலாம். எனக்கு வரைதல் போல உங்களிடமிருந்தும் கவனிக்கக் கூட அவகாசமின்றி ஏதாவதொன்று காணாமல் போயிருக்கக் கூடும். கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு தேடிப்பாருங்கள், தொலைத்த இடத்தை கடப்பதற்கு முன்..

பள்ளியில் என்னுடன் படித்த பழனிவேலுவுக்கு வினோதமானதொரு பழக்கமுண்டு. ஒவ்வொரு முறை சமூகஅறிவியல் பாடத்தில், பெருங்கடல்களைக் குறிக்கச்சொல்லி வரைபடங்கள் கொடுக்கப்படும் போதெல்லாம், சமுத்திரங்களை குறித்து விட்டு, அவற்றில் கர்ம சிரத்தையாக மீன்களை வரைந்து கொண்டிருப்பான். பல முறை ஆசிரியர்கள் கூப்பிட்டுக் கண்டித்தும் கூட அவன் மாறவே இல்லை. கேட்டால்,

”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்? என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.

ம்ம்ம்...
இப்போது யோசித்துப் பார்க்கையில் உண்மையென்றே படுகிறது.