Tuesday, June 30, 2009

ஊஞ்சல்

அப்போது எத்தனை வயதிருக்கும். சரியாக நினைவிலில்லை. நெப்போலியனும் கஜினியும் பாடப்புத்தகங்களில் படையெடுக்கத்தொங்கியிருந்த காலம். ஏழாம் வகுப்பென்று நினைக்கிறேன். ஏதோ ஒரு நாளில் பள்ளியிலிருந்து திரும்பி வந்த போது அம்மாவின் குரல் கேட்டது.

"ரகு, எங்கயும் வெளயாடப் போகாத.. நாளைக்கு கிராமத்துக்குப் போகணும்.. பாட்டிக்கு உடம்பு !@#$%...."

அதன்பின் எதுவுமே எனக்கு கேட்கவில்லை. கிராமத்துக்குப் போகிறோம் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. நான் நினைவுகளுக்குள் அலையத்துவங்கியிருந்தேன்.

நாங்கள் இருந்தது ஒரு வளர்ந்து வரும் பேரூராட்சி என்றாலும் அப்பாவுக்கு வேலை மாற்றல் என அடிக்கடி அலைந்து கொண்டிருந்ததால், கால் அரை முக்கால் முழு ஆண்டு என்று எந்த விடுமுறை வந்தாலும் அது கிராமத்தில்தான் என்பது எழுதப்படாத நடைமுறையாக இருந்து வந்தது.

ஆனால் கொஞ்ச நாட்களாக கிராமம் பக்கமே போகாமல் இருந்த நேரம் அது. நான் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும் அப்பாவும் அம்மாவும் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பா மட்டும் அவ்வப்போது சென்று வருவார். நானும் உடன் வருவேனென்று அடம்பிடித்த போதெல்லாம் அது பெரியவர்கள் சமாச்சாரமென்று ஒதுக்கிவைக்கப்பட்டேன்.

கிராமத்தில் தாத்தா வீட்டுக்குச் செல்வதென்றாலேயே எனக்கு அலாதியான விருப்பம் உண்டு. வீடும், வீட்டை ஒட்டிய கொல்லையும், கொல்லை முடியும் இடத்திலேயே தொடங்கிவிடும் அந்த குளமும், தாத்தா எவ்வளவுதான் திட்டினாலும். குளத்தில் கும்மாளமடிக்க உடன் வரும் மாரிமுத்து மாமா பையன்களும் என என் சொர்கம் அது.

இது எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்த இடமொன்று அங்குண்டு என்றால் அது அந்த ஊஞ்சல்தான். தன் ஒவ்வொரு கிரீச்சிலும் அது ஏதோ என்னிடம் சொல்லவிழைவதாகவே எனக்கொரு எண்ணமுண்டு. அத்தனை அலைவிலும், அதே லயம் மாறாமல் ஆடும் அதன் ஆட்டம், காலத்தின் பாதை காட்டும் பெண்டுலம் மாதிரி, தான் கடந்து வந்த காலத்தின் எச்சம் சொல்லுவதாய் ஒரு பிரமை.

மேலும் படிக்க...

Friday, June 12, 2009

சொல்லாத சொல்

எதிர்வீட்டு்க குழந்தை
உன்னைப்போலவே முறைக்கிறது
கைபேசிக்கு தலைசாய்த்து சாலையில்
எதிர்படுபவனின் சிகை
உன்னைப்போலிருக்கிறது
வாடியபூக்கள் சில வலுக்கட்டாயமாய்
உன் முகத்தை மனதில் இருத்திப் போகின்றன
கடன் அட்டைக்காக அழைப்பவன் கூட
உன் குரலை ஒத்திருக்கிறான்..

சாலையில், வீட்டில், திரையரங்கில்,
ஆற்றங்கரையில், பேருந்தில் என
நாம் ஒன்றாய் இருந்த அத்தனை
இடங்களிலும்
உன்னிடம் யாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இதற்கு பதில் கிளம்புகையிலாவது
சொல்லியிருக்கலாம்
”என்னை மன்னித்து விடடா” என்று..

Wednesday, June 10, 2009

வாசகன்

ஒவ்வொரு ரயில் பயணத்தின்
முன்தினத்திலும் தவறாமல்
எடுத்துவைக்கப்படும் புத்தகங்கள்
பிரிக்கப்படாமலேயே ஊர்வந்தடைகின்றன..
அதைவிட சுவாரஸ்யமான
மனிதர்கள் வாசிக்கக்கிடைப்பதால்..