Monday, December 08, 2008

ரகுவம்சம்

நமக்கெல்லாம் இராமனின் அயணம் இராமாயணம் தெரியும். ஆனால், அவனுக்கு முன்னும் பின்னுமான கதை பெரிதும் தெரியப்படாமலேயே இருக்கிறது. இராமன் பிறந்த அந்த வம்சத்தை அதன் வரலாறை ஆதியோடந்தமாக விவரிக்கிறது இந்நூல்.

ஒவ்வொரு அரசனின் வரலாறும் ஒரு அத்தியாயமாக வருகிறது. இராமனின் வரலாறான இராமாயணம் இந்நூலின் ஒரு அத்தியாயம் எனும் போது ரகு வம்சத்தின் உண்மையான பரிமாணம் விளங்கும்.

யார் இந்த ரகு? ரகு, ராமனின் கொள்ளுத்தாத்தா. ராமனின் வரலாற்றில் ஏராளமான ஜனரஞ்சக விஷயங்களும் வீரதீர சாகசங்களும் நிறைந்திருந்தாலும், ரகுவின் காலத்தில்தான் அந்த சாம்ராஜ்யம் விசுவருபம் கொண்டு தெற்கே காவிரி வரை வியாபித்து நிலைகொண்டது. அதனால்தான் ரகுவம்சம்.
ஆசிரியருக்கு சொல்வதற்கு ஏராளமான விசயங்கள். எல்லாவற்றையும் முடிந்த அளவு சுவைகுன்றாமல் சுருக்கி அளித்திருக்கிறார்.

படிக்கும் போதே கருத்தைக் கவர்வது அந்த மொழி நடைதான். படிக்க படிக்கத்தான் புரிகிறது காளிதாசன் ஏன் இவ்வாறு கொண்டாடப்படுகிறான் என்று. ஒரு மாதிரி ஆடம்பரமான எழுத்து நடை. குறிப்பாக உயர்வு நவிழ்ச்சியும் தற்குறிப்பேற்றமும் திகட்டத் திகட்ட கொட்டிக்கிடக்கின்றன.
நூற்று முப்பதுக்கும் குறைவான பக்கங்களில் மிகச்சிறிய புத்தகம்தான். ஒரு சில மணிநேரங்களில் முடிக்க முடிந்தாலும், மிக நிதானமாக அனுபவித்துப் படிக்க வேண்டிய ரகம் இது.
காட்சி விவரிப்புகளிலும் அப்படி ஒரு அழகு. நான் எதுவும் சொல்ல வேண்டாம். இதோ ஒரு வசந்த கால வர்ணனை..
மாமரத்தில் தளிர்கள் தோன்றி காற்றில் அசையும் போது கிளைகள் விரல்களை அசைத்து அபிநயம் செய்ய பழகுவது போல் தோன்றின. குயில்களின் வசந்தகாலக் கூவல், நாணத்தால் இளம்பெண்கள் காதற்பேச்சை மென்று விழுங்கிப் பேசுவது போல் இருந்தது. காடு முழுவதும் மலர்கள் தோன்றி, வண்டுகள் ரீங்காரம் செய்யத்தொடங்கின. இதனால் கிளைகள் அபிநயம் பிடித்து ஆடின
ரகுவம்சம் - பக்கம் 67

அழகியல் மட்டுமல்ல, போர்களங்களிலும் இந்த வார்த்தை ஜாலம் தொடர்கிறது. அஜன் படையெடுத்து செல்லும் காட்சியை காளிதாசன் எப்படி விவரிக்கிறான் என்று பாருங்கள்.
ஆனாலும் முறைப்படி நடந்த யுத்தம் மிகக்கடுமையாக நடந்தது. பலர் அதில் கொல்லப்பட்டனர். பலருடைய தலைகள் வெட்டப்பட்டு, வெட்டிய வேகத்தால் அவை உயரக்கிளம்பிச் சென்றன. யுத்தகளத்தில் பிணங்கள் கிடந்ததால், கழுகுகள் ஆகாயத்தில் சுற்றிச் சுற்றி வந்தன. அவற்றின் கால்நகங்களில் தலைகளின் மயிர் சிக்கியதால் தலைகள் கீழே தரையில் விழத் தாமதம் ஆயிற்று.
... ... ...
குதிரைகளின் காலடி வேகமாகப் படுவதால் புழுதி கிளம்பியது. யானைகள் தன் விசிறி போன்ற காதுகளை அசைப்பதால் புழுதி எங்கும் பரவியது. பரவிச்சென்ற புழுதிப்படலம் சூரியனையே திரையிட்டு மறைப்பதைப் போல் மறைத்துவிட்டது. ஆனால், போரின் கடுமை மேலும் அதிகரித்தபின் வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பெருகும் ரத்தம் புழுதியைச் சற்றே அடக்கியது..
ரகுவம்சம் - பக்கம் - 53,54


‘நந்தவனத்திற்கு செல்லும் வழி’ என்று பெயர்ப்பலகை படிப்பதைப் போலிந்தது இந்நூல். நந்தவனம் என்று படிக்கும் போதே இப்படி இருக்கிறதே, உண்மையிலே அந்த நந்தவனத்திற்கு சென்றால் என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் கடந்து செல்கிறது. ரகுவம்சத்தை அதன் மூல வடிவிலேயே படித்துச் சுவைக்கும் அளவிற்கு மொழியறிவு இல்லாததால் பெயர்ப்பலகை கொண்டே சமாதானம் கொள்ளவேண்டியிருக்கிறது.

கதை நடந்த காலத்தை ஒட்டிய பல சுவையான துணுக்குகள் காணக்கிடைக்கின்றன. ஏதாவது மரம் பூக்காமல் இருந்தால் என்ன பண்ணுவோம். கொஞ்சம் யூரியாவோ பொட்டாஷோ கலந்து வைக்கணும் என்றுதான் நாம் யோசிப்போம். ஆனால், காளிதான் எப்படி யோசிக்கறார்னு பாருங்க.
மகிழ மரம் மலராது இருந்தால், இளமையான அழகிய பெண்கள் மதுவைத் தம் வாயில் ஊற்றி, பின் மரத்தின் மேல் உமிழவேண்டும். அப்படி உமிழ்ந்தால் மரம் உடனே பூக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு தோஹதம் என்று பெயர்.
ரகுவம்சம் - பக்கம் 66

(கொடுத்து வைத்த மகிழ மரம் ;-) )
இப்படிப் பண்ணினா, நிச்சயம் மரம் பூக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகமா?

பல போர்க்களத் தந்திரங்களும் காணக்கிடைக்கின்றன.
முன்னேறிச் செல்லும் சேனைக்கு இடையூறாக எங்கேனும் சிறிய ஆறுகள் குறுக்கிட்டால், யானைகளை வரிசையாக நிறுத்தி பாலம் அமைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து படைகள் முன்னேறிச் செல்லும். இப்படித்தான் கபிசை என்ற ஆற்றைக் கடந்து படைகள் முன்னேறிச் சென்றன.

எங்கும் யுத்ததர்மம் மீறப்பட்டதாக குறிப்புகள் இல்லை. (பெரும்பாலான) யுத்தங்கள் தர்ம சாத்திரத்தின் படியே நடந்திருக்கின்றன. படையெடுத்து செல்லும் மன்னன் போர் ஒன்றையே குறிக்கோளாய்க் கொள்ளாமல் செல்லும் வழியிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சாலையமைத்தல் நீர்வசதி ஏற்படுத்துதல் போன்ற அடிப்படைச் சீர்திருத்தங்களைச் செய்தபடியே முன்னேறுவதாக வருகிறது.

இங்கு கவனிக்க வேண்டிய விசயங்கள் இரண்டு. ஒன்று போர் என்பது நாட்டின் எல்லைகளை விரிவாக்குவதற்கு நடந்தாலும், அதில் ஒரு அவசரம் இல்லை. முன்னேறும் படைகள் மிக நிதானத்துடன், தங்களின் மக்கள் வளத்தை வீணடிக்காமல் ஊர்ச்சீர்திருத்தத்துக்காக பயன்படுத்தியுள்ளனர்.

இரண்டாவது போர்களத்திற்கு செல்லும் படைகளை அக்ரோணி என்ற அலகில் வரையறுக்கின்றனர். இப்படி பெரும்படைகள் கடந்து செல்லும் போது கடக்கும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஏராளமான உணவுப்பொருட்களும் பிற அடிப்படைத் தேவைகளும் பெறப்படும். என்னதான் நாட்டைக் காக்கும் படையாக இருந்தாலும், ஒரு அளவைத் தாண்டும் போது மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். அதனை தணிக்கும் விதமாகவும் இந்த சீர்திருத்தங்களைக் கொள்ளலாம்.

எது எப்படியோ, யுத்த தர்மத்திலும் அரசியல் நடைமுறைகளிலும் ரகு வம்ச மன்னர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

முழுவதும் கதையுடன் ஒத்துப் போனேன் என்று சொல்ல முடியாது. ஒரு சில முரண்கள் ஏற்பட்டாலும், இது ஒரு காவியம். அந்த வகையில் சில சலுகைகள் கிடைத்துவிடுகின்றன.

நூலாசிரியர் அ.வெ.சுப்பிரமணியனை பாராட்டியே ஆகவேண்டும். காலம் கடந்து நிற்கும் ஒரு காவியத்தை அழகாக தமிழ் வாசகர்களுக்காக படைத்திருக்கிறார்.

NHM ன் புத்தக வடிவமைப்பு பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஒரே ஒரு நெருடல். ‘சமஸ்கிருமும் தமிழும் இவருக்கு இரண்டு கண்கள்’ என்பதைத் தவிர, மருந்துக்குக் கூட ஆசியரைப்பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் இல்லை. சிறிய அளவிலாவது ஆசிரியர் குறிப்பு வைத்திருக்கலாம் என்று பட்டது.

மத பேதங்களைக் கடந்து தொன்மையான இந்திய மனதின் கதைகளை, அதன் வரலாறை, வாழ்க்கையை அறிந்து கொள்ள, இது முழுமையான நூல் அல்ல. ஆனால், நிச்சயம் படிக்கப்பட வேண்டிய நூல்.

நூலைப் பற்றிய மேலும் சில தகவல்கள்:
ரகுவம்சம்
அ.வெ.சுப்பிரமணியன்
வரம் வெளியீடு
136 பக்கங்கள்
ரூ.60
ISBN 978-81-8368-424-8

புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

சிறப்பான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து, இப்புத்தகத்தை வழங்கி உதவிய NHM - ற்கும் உடனுக்குடன் பதிலளித்து உதவிய நண்பர் ஹரன் ப்ரசன்னாவிற்கும் என் நன்றிகள்.

Monday, November 10, 2008

ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரின் கதை

இவன் என்ன பெரிய இவனா?

மனதுக்குள் சொல்லவொனதாத ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வந்தது.. அலுவலகத்தின் ஒரு மூலையிலமைந்த சிறிய டிஸ்கஷன் ரூம் அது. போதுமான இருக்கைகள் இருந்த போதிலும் 6 பேரும் நின்று கொண்டிருந்தோம்.

அதோ முன்சரிந்த தொப்பையம் வழுக்கைத்தலையுமாக என்னைப்பார்த்து குரைத்துக் கொண்டிருக்கும் ராஜிவ் தான் என் மேனேஜர். எங்களின் சந்தோஷத்தை கெடுப்பதற்கென்றே டெல்லியிலிருந்து வந்திருக்கும் 100 கிலோ அவஸ்தை. இன்று நான் டெலிவரி கொடுக்வேண்டிய Module-ல் இன்னும் மூன்று P1 issues. இரவுக்குள் முடிக்கவேண்டுமாம். அதற்குத்தான் இத்தனை அலம்பல்.

அவருக்கு குறைந்தது 40 வயதிருக்குமா? இருக்கலாம். கொஞ்சம் குள்ளம்தான். நல்லா புளி மூட்டை மாதிரி ஒரு தொப்பை. வழுக்கைத்தலையில் இரண்டு காதுகளுக்கு மேல் மட்டும் புதர் மண்டிய மாதிரி முடிக்கற்றைகள். அதில் ஒரு புற முடியை மட்டும் நீளமாக வளர்த்து மறுபுறம் நோக்கி படிய சீவி, வழுக்கையை மறைக்க முயற்சித்திருப்பார்.

மீட்டிங் முடிந்து வெளியில் வந்தவுடன், சீட்டுக்குப் பாகவே வெட்கமாய் இருந்தது.. இப்போது சீட்டுக்குப்போனால் துக்கம் விசாரிக்கிற மாதிரி ஆனந்த் கேட்கும் கேள்விகளுக்கு இவரே தேவலாம் என்று தோன்றும்.

மாடிக்குப்போய் ஒரு காபி குடிக்கலாம்.

“நேத்து ராத்திரி நைட் அவுட் டா.. 3 மணிநேரம் Dorm போயிட்டு, திரும்பிவந்து வேலை பாத்துகிட்டுருக்கேன்.. அவன் என்னமோ பெரிய இவன் மாதிரி கத்தறாண்டா..என்கிட்ட தனியாவாவது சொல்லியிருக்கலாம்.. எல்லாரும் இருந்தாங்கடா. பூஜா வேற இருந்தாடா.."

(பூஜா என்பது, சுமாராக இல்லாவிட்டாலும் கொஞ்சம் சூப்பராக இருக்கும் நார்த்தி பிகர் எனக் கொள்க)

“என்னடா பண்றது.. எல்லா மேனேஜரும் ஒரே மாதிரிதான் இருக்காங்க.. எனக்கும் ஒருத்தன் வந்து வாச்சிருக்கான்.. எங்கிருந்துதான் வர்ரானுங்களோ.." காஃபி டேபிளில் எழில் இருந்தான்.

“FS மட்டும் ஒழுங்கா இருந்திருந்ததா இதெல்லாம் எப்பவோ முடிஞ்சிருக்குன்டா.. அங்க போய் பம்ம வேண்டியது.."

“…"

“நாம பண்ற வேலைக்கு என்ன மதிப்பு இருக்கு சொல்லு?"

மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு மூலையில் அழவேண்டும் போல் தோன்றியது. சே.. சே.. இது ஆத்திரம் என்று தேற்றிக்கொண்டேன்.
உடம்புக்குள் போன் காபின் கொஞ்சமாக என் மனநிலையை மாற்றியிருந்தது. ஆனாலும் என் மேனேஜர் கமண்டலமும் நீரும் இல்லாமல் தொடர்ச்சியாக என்னிடமிருந்து சாபங்களைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

எங்களின் US டீமுக்கு காலைக்குள் ரிலீஸ் செய்ய வேண்டும். நம்மூர் கணக்கில் நள்ளிரவு 12.30க்குள்.
அரக்க பரக்க முடித்து ஒரு வழியாக ரிலீஸ் செய்த பின்தான் மூச்சே திரும்பவும் வந்தது. டைம் என்ட்ரி போட்டு இன்ன பிற சடங்குகளை எல்லாம் முடித்து Log Off செய்கையில்

“ஹே பாலா.." என்றொரு குரல்.

நிமிர்ந்தால் என் மேனேஜர்.

“கம் ஆன் மேன்.. என் கார்லையே ட்ராப் பண்ணிடறேன்.. வா.."

“இட்ஸ் ஓகே ராஜிவ்.. நோ பிராப்ளம்.. நான் கம்பெனி கேப்-லையே போயிக்கறேன்.."

“அட சும்மா வாப்பா.. நானும் அப்படித்தான் போறேன்.."

எனக்கும் சரியென்று பட்டது. நீங்கள் செய்தது தவறுன்னு அவருகிட்ட நேரடியாவே சொல்லிடனும்.. இதுதான் சான்ஸ்..
அலுவலகத்தின் கீழ் நான் காத்துக்கொண்டிருந்தேன். தன் வெர்னாவை எடுத்துக்கொண்டு வந்தார். கடந்த மாதம்மான் வாங்கிய கார். பளபளப்பாய் மின்னிது.. எல்லாம் எங்கள புழிஞ்சு எடுகுற காசுதான.. மின்னாம..?

சாலை வெறிச்சோடிக்கிடந்ததற்கு மிக மெதுவாகவே ஓட்டினார். ஏதோ ஒரு இந்திப்பாடலைப்போட்டவர் திடீரென ஞாபகம் வந்தவராய்,

“Oh. I am sorry" என்றபடி FM-ற்குத் தாவினார்..

பீவர் ஒன் ஓ போர் என அர்த்த ராத்திரியிலும் கத்திக்கொண்டிருந்தனர். சூரியனின் இனிய இரவு மாதிரி ஒரு நிகழ்ச்சி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என ஒரு நப்பாசை தோன்றி மறைந்தது.
திடீரென என் பக்கம் திரும்பி

“என் மேல உனக்கு கோவம்தான?" என்றார்..

நான் இந்த திடீர்த்தாக்குதலை எதிர்பார்க்கவில்லை..
சுதாரித்துக்கொண்டு,

“கோவம்னு இல்ல ராஜிவ்.. கொஞ்சம் கஷ்டமா இருந்தது.. ம்ம்..என்னாதான் இருந்தாலும், கடைசியில ப்ராஜெக்ட்தான முக்கியம்.." மண்ணாங்கட்டி ப்ராஜெக்ட்

“தட்ஸ் குட் மேன்.. என்ன பண்ண.. சில நேரங்களில் கடுமையா நடந்துக்க வேண்டியிருக்கு.. என் வேலை அப்படி.. "

FM-ஐ அணைத்துவிட்டு கொஞ்ச நேரம் மௌனமாய் எங்கள் பயணம் தொடர்ந்தது.

ரிங்ரோட்டை அடைந்தாகிவிட்டது.. இன்னும் 15 நிமிடங்களில் வீட்டுக்குப் போய்விடலாம். இப்போதே, படுக்கையில் சுகமாய் உறங்குவதைப்போல பிம்பம் கண்ணில் நிழலாடத்தொடங்கியது.

"Work is work.Life is life. ரெண்டையும் கொழப்பிக்காத.."

ஏன் என்னிடம் இதைச் சொல்கிறார். திரும்பவும் எரிச்சலாக வந்தது. இரண்டு நாட்களுக்கான தூக்கம் வேறு கண்களில் தேங்கிநின்று தலைவலியைத்தந்தது.

டேஷ்போர்ட் மீது சிலபல சாக்லேட்டுகள் சிதறிக்கிடந்தன. ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் நீட்டிவிட்டு அடுத்ததை மிக சாவகாசமாக இரண்டு கைகளாளும் பிரித்தவர், என் பதட்டத்தைப்பார்த்து விட்டு, கவலைவேண்டாம் என்பதைப்போல் சைகை செய்தார்.

“இது நான் போனதடவை அட்லாண்டா போயிருந்தப்போ வாங்கிட்டு வந்தது. “

எனக்கென்ன?

“I love this choco" உடன் அவரின் வாக்கியம் தடைப்பட்டது.

பாதிகடித்த அந்த சாக்லேட் தன் வாக்கில் கீழே விழுந்தது.. இவர் அவசரமாக கியர்மாற்றி, சாலையோரம் வண்டியை நிறுத்தினார்.

“என்னாச்சு ராஜிவ்?" என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே எனக்கு புரிந்து விட்டது.

அவரால் எதுவும் பேசமுடியும் என்று தோன்றவில்லை. தூக்கமுடியாத பளுவை தூக்குபவர் போலிருந்தது அவரது முகபாவம். ஒரு மாதிரி நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சீட்டில் சாய்ந்துவிட்டார். திடீரென்று அவர் முகம் முழுவதும் முத்து முத்தாக வியர்த்திருந்தது. கண்கள் முக்கால்வாசி மூடியநிலையில் மேலே எங்கேயோ சொருகியிருந்தன.

ஒரு கணம் எல்லாமே மறந்து, துடைத்து வைத்த கரும்பலைகை மாதிரி ஒரு உணர்வு.

நெஞ்சில் காதைவைத்துப்பார்த்தேன் நாடி இருப்பது போலவும் இல்லாதது போலவும் பாவ்லா காட்டி பயமுறுத்தியது.
முதலுதவி பற்றியெல்லாம் விவரம் பத்தாது எனக்கு.. ஒரு சில திரைப்படங்களிலிருந்து வந்த அறிவு மட்டும் அவர் நெஞ்சை அழுத்தச் சொன்னது.. அதுவும் அவ்வளவு எளிதாக இல்லை. என்னால் ஒரு இன்ச் கூட அழுத்தமுடியவில்லை. குத்தலாமா? குத்தினால் வலிக்குமா? வலித்தால் எழுந்து கொண்டு சண்டைக்கு வருவார் போன்ற அபத்தமான கற்பனைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு ஓங்கி குத்தினேன்.. எந்தவித சலனமும் இல்லை..

முருகா.. இரண்டாம் முறை. லேசாய் ஒரே ஒரு இருமல்.. மூன்றாம் குத்திற்கு ஒரு சிறிய அதிர்வு கொடுத்து முன்புறம் ஸ்டியரிங்கில் சாய்ந்துவிட்டார்.
யாரிடமாவது உதவிகேட்கலாமென்றால், நாங்கள் இருப்பது மகாதேவ்புராவுக்கும் கேஆர் புரத்துக்கும் இடையில் ஒரு பொட்டைக்காடு. கண்ணுக்கெட்டியதுரம் வரையில் ஒரு வீடும் கிடையாது.

உடனடியாக ஆனந்த் நம்பருக்கு கால்செய்தேன். புல் ரிங் போய் கட்டாகியது. என் அவசரம் புரியாமல் துங்கிக்கொண்டிருக்கிறான்.
கடவுளே.. என் கூட வரும்போதுதான் இப்படி ஆகணுமா..? அவருடன் இப்போது வந்ததில், இப்போது என்ன நடந்தாலும், நான்தான் தார்மீக பொறுப்பா..? எல்லாம் என் நேரம்.. இதற்குள், இந்த நவம்பர் மாத 15 டிகிரி பெங்களுர் இரவிலும் அவரை விட அதிமாக எனக்கு வேர்த்திருந்தது.

என்றோ சேமித்த ஜஸ்ட் டயல் நம்பர் நினைவுக்கு வந்தது. அவசரமாக போன்செய்து, மணிபால் நம்பர் நம்பருக்கு பேசினேன்.
அந்த நேரத்திலும் புத்துணர்ச்சியான ஒரு பெண்குரல். கேட்கவே கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார்.. இன்னும் 10 நிமிசத்தில அங்க வந்திடறோம். நீங்க அதே ரோட்ல இன்னும் ஒரு கிலோமீட்டர் போனா, விஜய் ஹாஸ்பிடல்ஸ் வரும். உங்களால முடிஞ்சா நீங்களே சீக்கிரமா அங்க போயிடுங்க சார்.. ஒவ்வொரு நிமிசமும் ரொம்ப முக்கியம்" என்று வயிற்றில் புளியைக்கரைத்தபடி போனை வைத்தார்.

இதற்குள் 5 நிமிடங்கள் கடந்திருந்தன.
டேஷ் போர்டிலிருந்த ஒரு சாக்லேட் கீழே விழுகையில்தான் கவனித்தேன். இன்ஜின் இன்னும் உறுமிக்கொண்டிருந்தது.

நானா.. சான்சே இல்லை... வாழ்க்கையிலேயே இதுவரை ஒருமுறைதான் கார் ஓட்டியிருக்கிறேன்.. அதுவும் 4 வருசம் முன்னாடி லைசென்ஸ் எடுக்கறதுக்காக ஓட்டுனது. எது கிளட்ச் எது பிரேக்குன்னே மறந்து போச்சு.. என்னால முடியாதுபா.

அதனால என்ன.. ஒரே ஒரு கிலோமீட்டர்தான். எப்படியாவது சமாளிச்சு உருட்டிகிட்டாவது போயிடலாம்.. முயற்சி பண்ணலாம் தப்பில்லை. உயிர்ப்பிரச்சனை என ஏதோ ஒரு அபிமானம் பேசியது.

என்னவானாலும் சரியென்று அபிமானம் பக்கம் சாய்ந்தேன்.

முதல் வேலை ஸ்டியரிங்கில் சாய்ந்திருக்கும் அவரை அப்புறப்படுத்துவது. அவரை நிமிர்த்தி உட்கார வைப்பதற்கே ஒரு குதிரை திறன் தேவைப்படும் போல் தோன்றியது. அவரை அப்படியே பக்கத்து சீட்டுக்குத் தள்ளி விட்டதில் ஒரு மாதிரி கோணலாக படுத்துக்கொண்டார். இன்னும் கால் கிளச் மீது இருந்தது.
அதையும் அப்புறப்படுத்தி, முதல் சில நுறு மீட்டர்கள் தட்டுத்தடுமாறி ஓட்டியபின்தான் நம்பிக்கையே வந்தது. அடுத்த மூன்றாவது நிமிடம் ஆஸ்பத்திரியில்.

அவசரமாக ஓடிச்சென்று ரிசப்சனில் சொன்னது மட்டும்தான் என்வேலை.

“அவரு உங்களுக்கு என்ன வேணும்"

“My Uncle."

“இந்த Form-ல கையெழுத்து போடுங்க.."

நான் போடும் முன்பாகவே அவர் ஐசியு-வினுள் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

என்ன செய்வதென்று தெரியாமல் தேமே என்று வெளியில் நின்றுகொண்டிருந்தேன். இதற்குள் நூறு முறையாவது அவர் பிழைக்கவேண்டுமென்று வேண்டியிருப்பேன். இன்று மதியம்தான் “இவனுக்கு ஏதாவது ஆவனும்" என்று மனதார வேண்டிக்கொண்ட ஒருவரின் உயிருக்காக இப்போது மன்றாடிக்கொண்டிருக்கிறேன். ம்ம்ம்.. விசித்திரமாய் இருந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் எண்ணங்கள் கடந்துகொண்டிருந்தன.

அப்போதுதான் கால் வந்தது.

“என்னடா மாப்ள.. என்னாச்சுடா.. இந்த நேரத்தில கால் பண்ணியிருக்க.. ஏதாவது பிரச்சனையாடா..?"

அடுத்த அரைமணியில் என் கூட இருந்தான் ஆனந்த். கொஞ்சம் தெம்பாக இருந்தது.

“அவர் வீட்டுக்கு சொல்லிட்டியாடா?"

“இன்னும் இல்லடா. அவர் வீட்டு நம்பர் இல்ல என்கிட்ட.."

“அவர் கார்ல ஏதாவது இருக்கும்.. வா போய்ப்பாக்கலாம்.."

அவரை தள்ளிவிட்டதில் விழுந்திருக்க வேண்டும்.. அவரது பிளாக்பெர்ரி காரினுள்ளேயே கிடந்தது.

அதன்பின் அவர் வீட்டுக்குச்சொல்லி, அவர்களும் வந்து, அவர் ஒரு வாரம் மருத்துவமனையிலும் இரண்டு வாரங்கள் மருத்துவ விடுப்பிலும் இருந்து, 3 வது வாரம்தான் அலுவலகம் திரும்பினார்.
பணிக்குத்திரும்பிய முதல்நாளே, அவரே வந்து

"We will go for Coffee " என்றார்.

"Sure" என்றபடி பின் தொடர்ந்தேன்.

“How are you now?"

“I am alright now. No worries" என்றபடி காஃபியை பருகத்தொடங்கினார்.

காஃபிக்குப் பிறகு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம்.

“என்னதான் இருந்தாலும் நான் அன்னைக்கு உன்ன அப்படி பேசியிருக்கக்கூடாதுல்ல.."

"Never mind Rajiv..Work is work. Life is life" என்றேன்..

தனியே வந்து சிரிக்கவேண்டும் போல் தோன்றியது.

--

டிஸ்கி:1: இந்த ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் செந்தழல் ரவியின் ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது (lol)
டிஸ்கி:2: ரவி மன்னிக்க :o)

Monday, October 13, 2008

புறாக்கூடு

பலருக்கு நாய்.. சிலருக்கு பூனை.. இன்னும் சிலருக்கு மீன்தொட்டியோ, முயல் குட்டியோ.. ஆனால் எங்கள் வீட்டுக்கு அந்த மாடப்புறாதான்.. நாங்கள் விரும்பியல்ல.. அந்தத புறாவாய் விரும்பி வந்தது.. நாங்கள் விரும்பாவிட்டாலும் எங்கள் வீட்டின் வளர்ப்புப்பிராணி என்று சொல்லிக்கொள்ள அதுதான்.

தீப்பெட்டி தீப்பெட்டியான ஒரு குடியிருப்பு கோபுரத்தின் உச்சியில் எங்கள் வீடு.. வீட்டின் உச்சியில் வெண்டிலேட்டர் அந்தப் புறாவின் போர்சன். சந்தோசமான போர்சன் அது. மாலை வேளைகளில் மட்டும் ஆரவாரம் கேட்கும்.. காலைக்குளிரில் லேசாக உடலையும் கண்களையும் குறுக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும். சில நேரங்களில் விருந்தினர்களும் வருவதுண்டு.
அவ்வப்போது வீட்டுக்குள் இலக்கின்றி அலையும் உதிர்ந்த இறுககள்தான் அப்புறாவின் இருப்பை சுயசரிதமாய் காற்றில் எழுதிக்கொண்டிருக்கும்..

எனக்கும் அம்மாவுக்கும், சண்டையிட வேறு காரணங்கள் இல்லாத போது, இருக்கவே இருக்கிறது இந்த புறாக்கூடு.. அம்மா, அப்புறாவை விரட்டச் சொல்கையிலெல்லாம் என்னவோ போலிருக்கும். நாங்கள்தான் அப்புறாவின் வீட்டை ஆக்கிரமித்திருப்பதாய் ஒரு உணர்வு எழுவதுண்டு.

“அது பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டு போதும்மா..”

“அடப்போடா.. வீடெல்லாம் குப்பையாவறது எனக்குத்தான் தெரியும். ரெண்டு தடவை வெரட்டி விட்டா மூணாவது தடவ தானா போயிடப்போது”

என்பதுதான் அம்மாவின் நிரந்தர வாதம்.
நிரந்தரமாய் இல்லாவிட்டாலும், அவ்வப்போது ஒரு பதில் என்னிடம் தாயாராய் இருப்பதால், இந்த பேச்சுவார்த்தைக்கு என்றுமே முடிவு எட்டியதில்லை.
சில மாலை வேளைகளில் ரொம்ப போரடிக்கும் போது, அந்த புறாக்களின் சம்பாசனைகளை மொழிபெர்த்துக்கொண்டிருப்பேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ரொம்ப சுவாரசியமான வேலையது.

போன கோடையில் சித்தப்பா, குடும்பம் சகிதமாக வீட்டுக்கு வந்தபோது, ராகுல் கண்ணில் முதலில் பட்டது, அந்த புறாதான்..

“ஐ.. புறாப்பா..”

அவனுக்கு ஒரே கொண்டாட்டம்தான். புறா நிக்குது, புறா திரும்புது, புறா பறக்குது என்கிற ரீதியில் அவனின் நேரடி வர்ணணைகள் தொடர்ந்து கொண்டிருக்கும். அதற்கடுத்த நாள், இன்னும் கொஞ்சம் விபரீதமாய்ப் போய், புறாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வந்து நின்றது.

கோரிக்கை சித்தி சித்தப்பா அம்மா வழியாக என் தலையிலேயே வந்து விடிந்தது.

ஒரு வகையில் கொஞ்சம் விசித்திரமாகக் கூட இருந்தது. இத்தனை நாளாய் இந்த எண்ணம் எனக்கு வரவே இல்லையே என்று.
சில நேரங்களில் வராண்டாவின் கைப்பிடிச்சுவரில் அமர்ந்திருக்கும். அப்போதெல்லாம் தூரத்தில் நின்று ரசிப்பதோடு சரி. நெருங்கவேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லை.
இப்போது புதிதாக சந்தேகம் வேறு. நெருங்கினால் ஒரு வேளை பறந்து விடுமோ..
சித்தப்பா ஊரில் இருந்தவரை புறா வராண்டா பக்கமே வராமல் ஏமாற்றிவிட, சித்தப்பா வழியனுப்பும் படலம், ராகுலின் சிணுங்கள்களும், அடுத்த வருடம் இதே புறாவுடன் போட்டோ எடுத்துத் தரப்படும் ரீதியிலான சித்தியின் சமாதனங்களினூடாகவும் முடிவுக்கு வந்தது.
ஆனால் அந்த ஆவல் எனக்குத் தொற்றிக்கொண்டது.
ஒவ்வொரு மாலையும் கவனிக்க ஆரம்பித்தேன்.
ஒரு நாள், கண்டுவிட்டேன் புறாவை.

தடாலடியாக நெருங்குவது சமயோசிதமாகப் படவில்லை. வேறு திசையில் நோக்கியபடி ஒவ்வொரு அடியாக பின்பக்கமாக மிக மெதுவாக எடுத்து வைத்தபடி நெருங்கினேன். என் இதயத்துடிப்பு எனக்குக் கேட்கத்தொடங்கியிருந்தது. அந்தப் புறவோ நடுவில் என்னை ஒரு முறை தலையைத்திருப்பிப் பார்த்ததைத் தவிர வேறெதும் பெரிதாகச் செய்துவிடவில்லை.
எனக்கும் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தது. ஏறக்குறைய ஒரு அடி வட்டத்துக்குள் வந்துவிட்டேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது. இவனால் ஆபத்தில்லை என்று எண்ணியிருக்கக் கூடும்.
அடச்ச..அந்த மில்லியன் யுரோ கேள்வி கொஞ்சம் தாமதமாகத்தான் நினைவுக்கு வந்தது.

‘இப்போ போட்டோ எப்படி எடுக்கறது?’

நெருங்கின மாதிரியே, மிக மெல்லமாக விலகி வந்து, புறாவின் பார்வைப்புலத்தைக்கடந்ததும் ஒரே ஓட்டமாக அடுக்களைக்குச் சென்றேன்.

“அம்மா. அம்மா. இங்க வந்து பாரும்மா..”

“…”

“அந்தப்புறா அப்படியே இருக்குமா.. பக்க்க்க்கத்தில போனாக் கூட..”

அம்மா பெரிய எதிர்வினையெதுவும் கொடுக்கவில்லை. அம்மாவுக்கு அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பாத்திரத்தின் உட்பொருட்கள்தான் முக்கியமாகப் பட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அடம் பிடித்து அம்மா கையில் கேமராவைத்திணித்து, சன்னலின் பின்னே நிறுத்திவிட்டு மெல்ல மெல்ல நெருங்குகையில் சொல்லிவைத்தாற்போல பறந்து போனது.
அமைதியாக வந்து கையில் கேமராவைக் கொடுத்துவிட்டு அடுக்களைக்குப் போனார்.

அதன்பின் புறா, எங்கள் சம்பாசனைகளிலும் நினைவுகளிலும் அடிக்கடி வந்துபோகாவிட்டாலும்,அவ்வப்போது வந்து போனது.
நான் ஓய்வு நேரங்களில் புறாக்களைப் பற்றி படிக்கத்தொடங்கியிருந்தேன். சேனல்களில் அலைகயில் நேட் ஜியோவில் புறாவைக் கண்டால், விடுவதில்லை. அம்மாவும் இப்போதெல்லாம் எதுவும் சொல்வதில்லை.
ஒரு நாள் எதேச்சையாகத் திரும்புகையில்,
கண்டுவிட்டேன் அந்தப்புறாவை மீண்டும் வராண்டாவில்.
மிக சன்னமாக,

“அம்மா”

“என்னடா”

“அந்தப்புறா”

“சரி”

“வராண்டால இருக்குமா.. போட்டோ எடுக்கலாம்மா. இன்னும் ஒரே ஒரு தடவம்மா..”

இரு வினாடிகள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்த பின்,
“சரி. போய் கேமராவை எடுத்துட்டு வா..”

இப்போதே மனதுக்குள் ஆடத்தொடங்கியிருந்தேன் நான். கேமராவை எடுத்து வருகையில் என்ன தோன்றியதோ,
“அம்மா. நீ போய் நில்லுமா.. நான் எடுக்கறேன்..”
முதலில் அம்மாவுக்குப் புரியவில்லை..

பின், புடவைத்தலைப்பைச் சரிசெய்தபடியே, வராண்டாவுக்குப் போனார்.
நான் போன மாதிரி, மிலிட்டரி ஸ்டைல் பதுங்கிப்போற பிசினெஸ்லாம் இல்லை. நிதானமாக மிக தீர்கமாக, அப்புறாவைப் பார்த்தபடியே, நெடுங்காலம் பழகிய நண்பனை வரவேற்கும் தொனியில் சென்றார்.
“இப்படிப் போகாதம்மா” என்று எச்சரிக்க நினைத்தேன்.
அதற்குள் அம்மா. அப்புறாவிற்கு மிக அருகில்.

“கடவுளே, போட்டோ எடுக்கற வரை பறந்துட கூடா”தென்று வேண்டிய படியே போட்டோவும் எடுத்து, அடுத்த வாரமே பிரிண்டும் போட்டு, அதற்கேற்ப அழகானதொரு ப்ரேமும் வாங்கி வீட்டில் டேபிள் மீது வைத்தாகிவிட்டது.
அம்மாவுக்கு சந்தோசமாய் இரந்திருக்க வேண்டும். அவ்வப்போது, காலைச்சமயலுக்குப் பிந்திய ஓய்வுநேரங்களில், அந்தப்புகைப்படத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருப்பார்.
எனக்கும் சந்தோசமாய் இருந்தது.
….

அன்றொரு நாள், ரொம்பநேரம் கத்திக்கொண்டிருந்தது. அறைக்கு வந்து பார்த்தபோது ரொம்ப காயம்பட்டு அலங்கோலமாய் இருந்தது. ஏதோ ஒரு பெரிய பறவை தாக்கியிருக்கவேண்டும்.
படபடவென்று இறகுகளை அடித்துக்கொண்டு அரற்றுவதைப்போலிருந்தது. அதன் கூட்டிலிருந்து சிறு சிறு குச்சிகளும் சில குப்பைகளும் காற்றில் அறைமுழுவதும் பரவுவதை வேடிக்கைப் பார்ப்பதைத்தவிர வேறெதும் எங்களால் செய்யமுடியவில்லை.
கொஞ்ச நேரத்துக்குப் பின் எங்கேயோ பறந்து போனது. அதன் பின் திரும்பவரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அம்மா எதுவும் சொல்லாமல், அனைத்துக் குப்பைகளையம் கூட்டி அள்ளினார்.

மாலை நான் மட்டும் அமர்ந்து அந்த வெண்டிலேட்டரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
புகைப்படத்தில் அம்மாவுடன் சேர்ந்து அந்த புறாவும் சிரிப்பதைப் போல் கற்பனை தோன்றியது.
சுயசரிதத்தின் கடைசி அத்தியாயத்தை காற்றில் எழுதியபடி தரையை வந்தடைந்தது அந்த கடைசிச் சிறகு.

கொஞ்ச நேரம் ஆத்மாநாமை எடுத்துவைத்தேன், வானம் பார்த்தேன், இசையில அளைந்தேன்... எதிலும் மனம் செல்லவில்லை.
இரவு அறையைக் கூட்டியபடி, சாப்பிட வரும்படி அம்மா அழைத்தபோதும், சுத்தமாக பசிக்கவில்லை.
தொண்டைக்கடியில் துக்கமோ, துக்கம் போன்ற ஏதோ ஒன்றோ அடைத்துக்கொண்டு அவஸ்தைப்படுத்தியது. எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தேன்.
கைகழுவ எழுகையில்தான் கவனித்தேன்.
அந்தச் கடைசிச் சிறகு அங்கேயே இருந்தது.
திரும்பி அம்மாவைப் பார்த்தேன்.
தலையைக் கோதியபடியே சொன்னார்,

“ரொம்ப நேரம் கண்முழிக்காதப்பா… போய்ப் படு..”

Thursday, September 04, 2008

கடவுளுக்கான வாய்ப்பாடு

வாரிச் சுருட்டிக்கொண்டு
காலையில் ஒரு கச்சேரி,

காலைக் காப்பி முடிக்கையில்,
சாலமன் பாப்பையா,

அரக்க பரக்க
மதிய உணவை முடித்தால்,
நமீதா வகையறா பேட்டி,

வாயைப் பிளந்து பார்க்க,
இந்தியத் தொலைக்காட்சிகளில்
முதல்முறையாக... என

ஓரிசாவில் சண்டைபோட்டுக் கொண்டாலும்,
எல்லா கடவுளர்க்கும்
ஒரே வாய்ப்பாடுதான், இங்கு..

செய்தி:
சர்வ சமய சமத்தும்
இந்தியாவில் இல்லையாம்..!

Monday, August 25, 2008

Blogging Friends Forever


வலையுலகில் நான் அவ்வளவாக Active கிடையாது. எப்போதாவது நேரம் கிடைக்கையில் எட்டிப் பார்ப்பதோடு சரி.
போனவாரம் அனுஜன்யா வந்து, ஒரு இன்ப அதிர்ச்சி காத்துகிட்டு இருக்கு வலைப்பூவை வந்து பார்க்கவும் சொன்னப்போ எனக்கே கொஞ்சம் குழப்பம்தான்.எனக்கே இன்பமா? அதிர்ச்சியா இருக்கே னு வந்து பாத்தா, நம்மளையும் நம்பி BFF ( Blogging friends Forever) அப்டீனு ஒரு அவார்ட் கொடுத்துட்டாங்க. கூடவே சிலபல கண்டிசன்களும்*. அதையெல்லாம் அப்புறம், அதுக்கு முன்னாடி நான் இதை 5 பேருக்கு கொடுக்கனும். அந்த அஞ்சு பேர்,

1. ரெஜோ
என் உயிர்த தோழன், ரெஜோ ஒரு தீவிர படைப்பாளி. அவனின் படைப்பு வேகம் அசாத்தியமானது. எழுதிக் குவித்தவை ஏராளம். இணையம் காணாமல், காணாமலே போனவையும் ஏராளம். பலமுறை கேட்டுக் கொண்டும் இன்னும் blogger பக்கம் வரவில்லை. அவனின் multiply.com பக்கம்தான் மேலே கொடுத்திருப்பது. இவன் திறமைகளுக்கு ஏற்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதே என் கருத்து. அற்புதமான அழகியல் கவிதைகள் இவனது. பலதரப்பட்ட உணர்வுகளைக் கிளறக்கூடியவை இவன் படைப்புகள்.

2. ஞானசேகர்
நான் அன்னாந்து பார்க்கும் ஒரு பதிவர். தேர்ந்த அறிவும், பரந்த உலக அனுபவம் செறிந்த படைப்புகள் இவரது. பெரும்பாலும், சோகத்தையும் அதன் வலியையும் வீரியம் குறையாமல் பதிந்து செல்பவை இவரது எழுத்துக்கள். இவரின் கவிதைகளை விட, சிறுகதைகளே எனது சாய்ஸ்.

3. ஜெகன்
சின்னச் சின்ன கவிதைகளில் பலப்பல உணர்வுகளாய், தன் எண்ணங்களைப் பாடும் கவிஞன். இவன் ஹைக்கூக்கள் என் சாய்ஸ்.

4. ராஜசேகர்
எனக்குப் பிடித்த ஆங்கிலப் பக்கம் இது. சிறு சிறு உரையாடல்களாய், நுண்ணிய உணர்வுகளைப் பதிவு செய்யும் இந்த உத்தி மிக அலாதியானது. மொழியின் லாவகங்களை நன்கு கையாளத்தெரிந்த எழுத்து நடை அழகு.
(அனுஜன்யா, தமிழ்ப்பதிவுகள் மட்டும்தான் போடனும்னு விதி ஏதும் இல்லையே..! :-) )

அப்பாடா, இது வரைக்கும் 4 நண்பர்களைப் போட்டாச்சு.. அடுத்ததா, என் வலைப்பக்கத்தின் சமீபத்திய விருந்தினர்,

5. சரவண குமார்..
வலைப்பக்த்தின் பெயரே, கவிதைகள் எனப்படும்.. பக்கம் முழுக்க திகட்டாத கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன.இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. படித்தசிலவும் ஒரு சோறாய் இனித்தன. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கவிதைசார்ந்த வலைப்பக்கங்களுக்கு சுட்டி கொடுத்துள்ளார். அனைத்து கவிதை சார்வலைப்பக்கங்களின் one stop 'கவிதை எனப்படும்'. கவிதைகளைத் தேடிப்படிப்போர் கண்டிப்பாய் காணவேண்டிய வலைப்பக்கம்.

என்னையும் மதித்து award கொடுத்த அனுஜன்யா இன்றிலிருந்து பாலாவுக்கு BFF கொடுத்த அனுஜன்யா அண்ணா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுவார். :) ( நான் இனிமே சுருக்கமா அண்ணா னு கூப்பிட்டுக்கறேன். அப்பாடா, இந்த link ம் கொடுத்தாச்சு) என்ன அண்ணா.. ஓகே வா?

* Conditions Apply:

1) நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..(சத்தியமா இந்த விளையாட்ட நான் தொடங்கல..)
2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்.. ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்..(என் தளத்திற்கு எல்லாருமே புதுசுதான்.. இருந்தாலும் விதியின் விளையாட்டு ஹ்ம்ம். மன்னிக்கவும் விளையாட்டின் விதிகள் அப்படி)
3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்

Tuesday, August 19, 2008

ஆவியும் நானும்


ரொம்ப நாட்களுக்குப் பிறகு நேற்றிரவு ரயில் பயணத்தில்தான் ஆனந்தவிகடனைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தஞ்சை சந்திப்பு ஹிக்கின்பாதம்ஸில்,

" என்ன, விகடன் 15 ரூபாயா?"

என நான் ஷாக் குடுத்ததற்கு, கடைக்காரர் விட்ட லுக்கிலேயே புரிந்து விட்டது..

' ஆகா, கைப்புள்ள.. லேட் ரியாக் ஷன் குடுத்துட்ட போல.. சைலண்டா எஸ்கேப்' னு வாங்கிட்டு வந்து புரட்ட ஆரம்பிச்சேன்.

பலப்பல மாற்றங்கள் விகடனில். நானும் கல்லூரிக்காலத்தில் ஆ.வியின் அதி தீவிர வாசகனாக இருந்தவன்தான். ஆனால், பணிக்கு வந்தபின், அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குன்றி குறைந்து, மங்கி மறைந்து விட்டது. அதன் பின் எப்போதாவது, வாய்ப்பு கிடைக்கையில் வாசிப்பதோடு சரி.

கொஞ்சம் பெரிய சைஸ், எல்லாபக்கமும் கலர்ஃபுல் என பளபளப்பாக இருந்தாலும், என் கவனத்தை ஈர்த்த முதல் விஷயம், எல்லா கட்டுரைகளிலும் தென்பட்ட தனிமனித அடையாளங்கள். கட்டுரை எழுதுபவரே நேரில் சொல்வது போன்ற நடை, அங்கங்கே சில இடைச்செருகல் கமெண்டுகளுடன், எல்லா கட்டுரைகளிலும் தென்பட்டது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால், ஒரு ப்ளாக் படிக்கற
ஃபீல்.

இரண்டாவது, பக்கத்துக்குப் பக்கம் பரிசுப் போட்டிகள். இதை எழுதி அனுப்புங்க அதை வெல்லுங்க வகையறா. வாசகப் பங்கேற்பை அதிகப்படுத்தும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இது காலத்தின் ஒரு கட்டாயமாகக் கூட அமையலாம். இன்னும் கொஞ்ச நாட்களில், பல வாரஇதழ்கள் இதனைக் காப்பியடிக்கத் தொடங்குவது நிச்சயம். ஆனால், இதிலும், ஒரு எல்லையைக் கடந்தால், கல்லூரி ஆண்டு மலர் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. அந்த எல்லையை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டியது சீனிவாசன் கையில்தான்.

அடுத்து, முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளத்தை குறிவைத்து களம் இறங்கியிருக்கிது ஆ.வி. ஆனால், இளைஞர்களைக் குறிவைக்கிறேன் பேர்வழி என்று, நடுப்பக்கத்தில் தொப்புள் காட்டும் நடிகையை போடாமல், கன்டென்ட் விஷயத்தில் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இது எல்லாத்துக்கும் மேல், கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா எதுக்காக தர்ராங்கனு தெரியல. ஒரு சில ஆண்டுகளுக்கு முன், குங்குமம் சகட்டு மேனிக்கு, 5 ரூபாய்க்கு வாங்குங்க 10 ரூபாய் மதிப்புள்ள பொருள் இலவசம்னு, இலவசம் காட்டியே விற்பனையில் முதலிடத்துக்கு வந்த போதும், கொஞ்சமும் நிதானம் தவறாமல், புத்தகத்தின் மதிப்பு அதன் உள்ளடக்கத்தில்தான் இருக்குன்னு நின்ன ஆ.வி யா இப்படி?

கல்லூரியில் ஒரு முறை, நண்பனுடன் ஒரு சவால். ஆ.வியில் ஒரு ஒற்றுப்பிழை கண்டு பிடிப்பதாக. அப்போதிருந்த என் இலக்கண அறிவிற்கு ஒரு வாரஇறுதி முழுவதும், அட்டைப்பக்கத்திலிருந்து, கடைசிப் பக்கம் வரை தேடியும், ஒன்றும் அகப்படவில்லை.

என்னதான் மாற்றங்கள் வந்தாலும், ஒரு இதழின் பெருமை அந்த தரத்தில்தான் இருக்கிறது. இனிமேலும், இருக்கும் என நம்புகிறேன்.

Tuesday, July 29, 2008

பேசாப்பொருள் - IV


மரணத்தையும் வாழப்பிறந்தவனே மனிதன் - யாரோ


அந்த சனிக்கிழமையின் பகல் பொழுது முழுவதும் நானும் அந்த மகனும் பேசிக்கொண்டிருந்ததன் சாராம்சம் இதுதான்.

அவர்களின் சொந்த மாநிலம் மணிப்பூர். மலைகள் சூழ்ந்த சொர்கம். பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கேயே. படித்து முடித்து வேலைக்காக பெங்களுர் வந்திருக்கிறார். காதல் கசிந்து கனிந்துருகி கல்யாணம் முடித்து இங்கேயே தங்கிவிட்டார்.

மரணத்துக்குப் பின் மனித உடலை பஞ்ச பூதங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்கிறது கருட புராணம். சிதையில நெருப்புக்கும், இடுகாட்டில் நிலத்துக்கும், கங்கையில் நீருக்கும் கொடுப்பது மாதிரி, அவர்களுக்கும் ஒரு பழக்கம். ஆகாயத்துக்கு கொடுக்கும் சடங்கு அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வமாக ஒரு மலை முகடு இருக்கும். இறந்த பிறகு இறந்தவர் உடலை தத்தம் மலைமுகட்டில், ஆகாயத்தின் தூதுவர்களாகக் கருதப்படும் பறவைகளுக்கு இரையாக்கிவிடுகின்றனர். இவ்வகையில், இறந்தவர் வெகு சீக்கிரம் சொர்க்கத்திற்கு செல்கிறார் என்பது அவர்களின் நம்பிக்கை.
அவர் தந்தையின் மரணத்தின் போது அச்சடங்கில் ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது. ஒற்றைச் சொல், சொல்லப்பொடும் இடம் பொருள் ஏவல் பொருத்து எத்தனை வடிவம் கொள்கிறது. அன்று அவர் சொன்ன ஏதோ ஒரு சொல்லில் அன்று தன் மகனிடம் சண்டை போட்டவர்தான். அன்றிலிருந்து யாருடனும் பேசுவதில்லையாம்.

“நீங்களே சொல்லுங்க சார்.. resomation, promession னு சயின்ஸ் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. இன்னும் காட்டுமிராண்டித் தனமா இருக்காங்க. காக்காவாம் குருவியாம்.. bull shit.”

“…”

“.. அன்னைக்கு என்னால என்ன பண்ண முடியும் சொல்லுங்க.. எனக்கு மட்டும் எங்க அப்பா மேல பாசம் இல்லையா என்ன..”

அங்கங்கே சென்சார் செய்து அவர் சொன்னதிலிருந்து அவரின் குற்றவுணர்ச்சி புரிந்தது.
அதற்குப் பிறகு இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை கேட்டுக்கொண்டும், யாருடனும் அவர் பேசுவதில்லையாம். யார் அழைத்ததற்கும் செவிசாய்க்காமல் தனியாகவே இருந்திருக்கிறார். இப்போது குழந்தை பிறந்த பிறகு மீண்டும் பலமுறை அழைத்தபின் இங்கு வந்து இருக்கிறார்.

முடிக்கும் போது அவர் கண்களில் கொஞ்சமாய் கண்ணீர் தேங்கியிருந்தது. படிப்பும், நாகரிகமும் அவருக்கு அழுகையை மறைக்க கற்றுக்கொடித்திருந்தன.
-----------
விதிவிலக்கில்லாமல் அடுத்த 11 மாதங்களில் மொட்டைமாடியில்லாமல் மொட்டையாக இருந்த வேறொரு வீட்டிற்கு மாறினோம்.

வழக்கமான அலுவலக பரபரப்புக்கிடையில் வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. அபிலாஷ் பேசுவதாக தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார். எந்த அபிலாஷ் என்று நான் இழுக்கையிலேயே, மணிப்பூர் என்றார்.

குரலிலேயே சந்தோஷம் தெரிந்தது. அன்று காலைதான் அவர் அம்மாவுடன் பேசியிருக்கிறார். மாலை வீட்டுக்கு வரமுடியுமா என்றார். வேலைப்பளுவைப் பொறுத்து மாலையோ, வாரஇறுதியிலோ பார்க்கலாம் என்பதுடன் எங்கள் சம்பாஷனை முடிவுக்கு வந்தது.

அடுத்த சிலமணி நேரங்களிலேயே அவரிடமிருந்து மீண்டும் அழைப்பு. உடனடியாக வீட்டுக்கு வரமுடியுமா என்றார்..?
அதற்குப்பின், அவர் தொலைபேசியில் அழும்போதே எனக்கு உண்மை, ஒரு பந்தாக அடிவயிற்றில் சுழன்று கொண்டது.
அதன்பின் நடந்தது எல்லாமே ஒரு பிளர் ஆகத்தான் நினைவில் நிற்கிறது.

வீட்டுக்குச் சென்ற போது நிறைய பேர் அழுதுகொண்டிருந்தனர்.
இறுதிச்சடங்கை மணிப்பூரில் அவர்கள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்போவதாகச் சொன்னார்.
எல்லாமே எனக்கு அர்த்தமற்றுப் பட்டது. எந்த பிரக்ஞையுமின்றி வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.

அன்றிரவு யாருடனும் எனக்கு பேசப்பிடிக்கவில்லை.

Monday, July 28, 2008

பேசாப்பொருள் - IIIMan acts as though he were the shaper and master of language, while in fact language remains the master of man.
-Martin Heidegger


மொழி என்பது வெறும் எழுத்துக்களாலும் சொற்களாலும் ஒலிகளாலும் கட்டப்படவில்லை. உணர்ச்சிகளால் கட்டப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகளின் வெளிப்பாடே மொழியானதாக வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு மொழியுமே ஒரு ஆச்சரியம்தான். ஒவ்வொரு மொழிக்கும் அதன் ஒலிவடிவையும் வரிவடிவையும் கடந்ததொரு பரிமாணம் இருக்கிறது.

கோபத்திற்கு உருவம் உண்டென்றால் நம்ப முடியுமா? உண்டு என்பதே உண்மை. கோபம் என்பதை மனம் அப்படியே உணர முடியாது. மனத்திற்கு புரியும் வகையில் ஒரு உருவம் அதற்கு வழங்கப்படுகிறது. கோபம் என்ற சொல்
நமக்குத் தெரிந்த எந்த மொழியில் இருந்தாலும், ஒரு pointer மாதிரி, அனைத்து சொற்களும், ஏற்கனவே மனம் உருவகப்படுத்தியிருக்கும் அந்த கோபத்திற்கு திசைகாட்டப்படுகின்றன.
நாம் உணரும் உருவமும், நம் மனம் உணரும் உருவம் முற்றிலும் வேறுபட்டவை.

மனத்தைப் பொறுத்த வரையில் அருவம் என்பதே கிடையாது. வெகு சில ஒலிகளைத் தவிர அனைத்திற்கும் ஏதோ ஒரு உருவத்தை அல்லது உருவகத்தை வகுத்துக் கொள்வதால் மனதிற்கு அருவம் மிக அரிது. ஏதோ ஒரு மோட்டாரின் உறுமல் கேட்கிறது. அதை கேட்கும் நபரின் அறிவின் விஸ்தரத்தைப் பொறுத்து, ஒருவனுக்கு அது வாகனமாக உருவகிக்கிறது. மற்றொருவனுக்கு அது ஒரு இரு சக்கர வாகனமாகவும், சிலருக்கு அது Hero Honda Splendor ஆகவும் உருவமாகிறது. மனம் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஒலிக்கும், இன்னும் சொன்னால், ஒவ்வொரு உள்ளிடலுக்கும் (input) ஏதோ ஒரு உருவத்தை ஒதுக்க தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறது. அது நீங்கள் இது வரை கேட்டே இராத ஒரு ஒலியாகக் கூட இருக்கலாம்.

அருவம் உருவம் பெறும் அந்த கணம், அலாதியானது. அது வரை கற்பனையில் புலப்படாதற்கெல்லாம் ஒரு உருவம் கொடுக்கத் தொடங்குகிறது மனம்.

ஆம்.உண்மையில், ஒவ்வொரு மொழியும் ஒரு அற்புதம் தான்.

இன்னதுதான் நான் புரிந்து கொண்டது என்று நான் உங்களுக்கு உணர்த்துவது கடினம்.
அன்று ஏதோ சோகத்தில் இருந்தார் போலும். அதற்கான காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்தது. எதுவும் செய்யாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதற்கடுத்த நாள் சந்தோசமாய் இருந்தார். அடுத்தடுத்த நாட்களில், அவரைப் பார்ப்பதே எனக்கு சந்தோசமாய் ஆகிப்போனது. ஒவ்வொரு நாளும் என்னிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கும் அவரிடம். மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டிருப்பார். சோகமாக இருக்கும் போது மட்டும் பெருமூச்சுடன் கூடிய ஒரு மௌனம்.

எனக்கு ஒரு வகையில் கொஞ்சம் சிரிப்பாகக் கூட இருந்தது. எங்களிருவருக்கிடையில் இருப்பது என்ன உறவு. வெளியிருந்து பார்த்தால் நானே இதை பைத்தியக்காரத்தனம் என்றுதான் சொல்லியிருந்திருப்பேன்.
அவர் பேசுவது என்ன மொழி என்ற கேள்விகளெல்லாம் முக்கியத்துவமிழந்து போயிருந்த ஒரு நாள் எனக்கு முன்னமே வந்து காத்துக் கொண்டிருந்தார்..

முதலில் என்னைக் காணும் போது அந்த முகத்தில் தெரியும் அந்த மலர்ச்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று தோன்றியது.
தானே செய்ததாகக் கூறி ஒரு பலகாரம் கொடுத்தார். இனிப்பும் கசப்பும் ஒன்றாகக் கலந்த பலகாரம் அது. பிடித்திருந்ததா பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. ஆனால், எனக்காக அவர் கொண்டு வந்திருந்தது பிடித்திருந்தது. அந்த பலகாரம் வாழ்வின் தத்துவத்தை உணர்;த்துவதாக அவர்களின் நம்பிக்கை. எனக்கும் ஆம் என்று பட்டது.

எப்படி என்று தெளிவாகச் சொல்லத்தெரியா விட்டாலும், என் தினசரி வாழ்வின் தவிர்க்க இயலா அங்கமாகிப்போனது அந்த சந்திப்பு. தவிர்க்க வேண்டிய சில கட்டாய நாட்களில் அதன் வெறுமைய உணர ஆரம்பித்தேன்.
ஒரு வெள்ளிக்கிழமையன்று, வீடு திரும்புகையில் இரண்டாவது மாடியில் ஒரு வீட்டின் முன் மெல்லிய கூட்டம். உள்ளிருந்த அழுகை சத்தம் கேட்டது. எனக்கென்ன என்று நான் கிளம்ப முயற்சித்த நேரம், அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரின் முகம் பரிச்சயமாகத் தெரிந்தது. ஏதோ ஒரு வடகிழக்கு இந்திய முகம். மூளையில் பல்ப் எரிவதற்குள் கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. உடனடியாக விரைந்து சென்றேன்.

யாரும் அழைக்காமல் ஒரு வீட்டிற்குச் செல்வது அவ்வளவு நாகரிகமாகப் படவில்லை. ஆனால், அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் நான் இல்லை.
வரவேற்பறையின் ஒரு மூலையில் முழங்காலில் முகம் புதைத்தபடி ‘அவர்’ அழுது கொண்டிருந்தார். அந்த குழந்தை ஒருவித மருண்ட விழிகளுடன் சோபாவில். நின்ற வாக்கில் அதே பார்வையுடன் அவர் மகன்.
அருகில் சென்றேன். நான் எதுவுமே சொல்லாமல் என்னை அவர் நிமிர்ந்து பார்த்தது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுது அந்த அழுகை குறைந்து தேம்பல் மட்டும் மிச்சமிருந்தது.
கொஞ்ச நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தபின்

“மாடிக்கு வாங்க” என்றேன் தமிழில்.

அந்த மகன் என்னை விநோதமாய்ப் பார்ப்பது தெரிந்தது. அழுகைக்குப் பின் மிட்டாய் வாங்கித்தருவதாய் வாக்குறுதி பெற்ற குழந்தையைப் போலவே அவர் தெரிந்தார். எதுவும் பேசாமல் என்னுடன் மாடிக்கு வந்தார்.
ரொம்ப நேரம் நாங்கள் எதுவுமே பேசவில்லை. பேசாமல் இருப்பது அவருக்கு புதிதில்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை இப்படி மௌனியாகப் பார்ப்பது எனக்கு என்னவோ செய்தது. அன்று நான் பேசினேன். என்னன்னமோ பேசினேன். மானேஜர் மீதிருந்த கோபம், காதலியின் முத்தம், புதிதாக வாங்கிய டையரி என முன்னுக்குப் பின் தொடர்பில்லாமல் ஏதேதோ சொன்னேன்.
ரொம்ப சந்தோசமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இவர்தான் இன்று மாலை அழுது கொண்டிருந்தவர் என்று சொன்னால் சத்தியமாக யாரும் நம்பிருக்க மாட்டார்கள். அன்றிரவு கொஞ்சம் தாமதமாக உறங்கிப்போனேன்.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கெல்லாம் யாரோ கதவைத்தட்டும் ஓசை. கதவைத் திறந்தால் அவரின் ‘மகன்’.
அவரை வீட்டுக்குள் அழைத்து அமரவைத்து, மொத்தமாக தூக்கத்திலிருந்து மீண்டு அவரிடம் வருகையில், அவர் கேட்ட முதல் கேள்வி,

“உங்களுக்கு மணிப்புரி தெரியுமா?”

இல்லை என்பது போல் தலையாட்டினேன்.

“என் அம்மாவுக்கு வேறெந்த மொழியும் தெரியாது. பின் எப்படி அவருடன் பேசுகிறீர்கள்?”

“உங்களின் முதல் கேள்விக்கான என் பதிலை எப்படி புரிந்து கொண்டீர்கள். அப்படித்தான்..”

அதற்குப்பின் ஏதோ சொல்லவந்தவர் தயங்கியபடி நிறுத்தினார்.

சிறிது நேர மௌனத்திற்குப் பின்,

“சொன்னால் நம்பமாட்டீர்கள். என் அம்மா என்னுடன் பேசி பத்து வருடங்கள் ஆகின்றன.. என்னிடம் மட்டுமல்ல, யாரிடமும்..”

- இன்னும் பேசும்

Tuesday, July 15, 2008

பேசாப்பொருள் - II

Whenever two people meet, there are really six people present. There is each man as he sees himself, each man as the other person sees him, and each man as he really is.

- William James

நினைவில் பதிந்து போகாத ஏதோ ஒரு நாளின் மாலை வேளை. அம்புக்குறியாக கூடு திரும்பும் பறவைகளை எண்ணியபடி என் மொட்டை மாடி உலாத்தல்.

கீழிறங்க யத்தனிக்கும் நேரம், அரையிருட்டில் யாரோ நிற்பதாய் ஒரு பிரமை. கொஞ்சம் உற்றுப் பார்த்தேன். எனக்குக் குறுக்காக நிச்சயமாய் யாரோ மாடியில் நிற்கிறார்கள். அரையிருட்டில் சரியாகத் தெரியவில்லை. சில்கவுட் மட்டும் தெரிந்தது. முதுகில் ஏதோ பை ஒன்று மாட்டியிருப்பதாகப் பட்டது. ஆச்சரியம் கலந்த சந்தோசம் எனக்கு, இன்னொருவரை அங்கு கண்டதில்.

போய் பேசலாமா? வேண்டாமா? பேசினால் என்ன நினைப்பார்கள்? பலவித தயக்கங்கள் சந்தேகங்களுக்குப் பின் பேசிவிடுவதெனத் தீர்மானித்தேன். வேண்டுமென்றே செருப்புக்கால்களை தேய்த்து மெல்லமாக சத்தமெழுப்பியபடி நெருங்கினேன். அவ்வுருவம் கைப்பிடிச்சுவர் பிடித்தபடி வெளியே பார்த்துக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது. நான் நெருங்கியதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. முகுதில் இருந்தது பை இல்லை குழந்தை. 2-3 வயது இருக்கும்.

ஏறக்குறைய 8லிருந்து 10 அடி தூரத்தில் நின்று,

"ஹாய்"

சுத்தமாக எந்தவித சலனமும் இல்லை. ஒரு வேளை காது கேட்காதோ?

இதற்கு மேல் முயற்சிக்க கிட்டத்தட்ட வெட்கமாய் இருந்தது. சில வினாடிகள் காத்திருப்புக்குப் பின் கீழே திரும்பிவிட்டேன்.
ஓரிரு நாட்கள் மனதில் இருந்து உறுத்தியபின் நினைவிடுக்கில் புதைந்து போனது.

சிலநாட்களுக்குப்பின் அதே உருவம் மீண்டும் மாடியில். இம்முறை வெளிச்சத்திலேயே கண்டுவிட்டேன். அவர் ஒரு பெண்மணி. அறுபதைக் கடந்திருப்பார் என்று பட்டது. இன்றும் குழந்தை. அஸ்ஸாம் டீ விளம்பரத்தில் சில பெண்கள் தேயிலை பறிப்பார்களே அதே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்திருந்தார். முதுகில் வெள்ளைத்துணியில் ஒரு முண்டு மாதிரி கட்டியிருந்தார். அந்த குழந்தை சமத்தாக அமர்ந்திருந்தது. பேரனாக இருக்கவேண்டும். வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர் போல் இருந்தார். திபெத்திய மூக்கு. நல்ல வெளுப்பு. கண்களில் அதே வெறித்த பார்வை. கொஞ்சம் கூட மாறாமல், கடந்த முறை நான் கண்ட அதே புள்ளியில், எங்கோ தொலைதூரத்தில் தெரியாத ஒரு புள்ளியை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார்.
இம்முறையும் போய்ப் பேசுவதற்கு என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அவ்வளவையும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தபின் திரும்பினேன்.
அதற்கடுத்த சில நாட்களிலும் அதே இருவரைக் காண நேர்ந்தது. சில நேரங்களில் மெல்லிய பேச்சுக்குரல் கேட்கும். குழந்தைக்குகுக் கதையா? இல்லை தனக்குத் தானே பேசிக்கொள்கிறாரா? இல்லை புளுடுத்.? அடச்ச.. நினைவிலிருந்த விலக்கமுடியவில்லை.
கடைசியின் என் மொட்டை மாடி உலாத்தல்களின் குறிக்கோள்கள் மொத்தமாய் காணாமல் போய், அவர்களைக் கவனிப்பதே வழக்கமாய் ஆனது.
கவனித்தபடி கடந்து சென்றன மேலும் சில நாட்கள்.

ஆங்கிலம் தெரியாததனாலோ? .. என்ன இது. இப்படி என்று சலித்துப்போன ஒரு நாள், இன்று எப்படியும் பேசிவிடுவதெனத் தீர்மானித்து, மீண்டும் 'ஹாய்'. இம்முறை தலையைத் திருப்பிப்பார்த்தவர், எதுவுமே நடக்காதது போல் மீண்டும் அந்த தொலைதூரப்புள்ளிக்கே பார்வையைத் திருப்பினார்.
எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இனிமேல் சத்தியமாக பேசுவதில்லை என்று சூளுரைத்து என் புத்தியை சபித்தபடியே கீழிறங்கினேன்.
அதனைத் தொடந்த நாட்கள் அவர்கள் இருக்கும் பக்கமே திரும்புவதில்லை என்று வலுக்கட்டாயமாய் என் பார்வையை திருப்பியபடி வானம் பார்த்திருந்தேன். எப்போதாவது சில சமயங்களில் குழந்தையின் அழுகை கேட்கும்.

அன்றொரு நாள் நான் எதேச்சையாகத் திரும்புகையில், ஒரு விஷயம் என் கருத்தைக் கவர்ந்தது. அது அவர் நின்ற இடம். இது எப்போதும் அவர் நிற்கும் இடம் இல்லை என்பது மட்டும் உறுதி. பொருள் என்ன? அடுத்த கேள்வி மனதில் முளைத்தது. புத்தியை மீண்டும் சபித்தபடி, அந்த டாபிக்கை மனதிலிருந்து விரட்டியடித்தேன்.

ஆனாலும், அந்த கேள்விக்குப் பதில் அடுத்த ஓரிரு நாட்களிலேயே கிடைத்துவிட்டது. ஒவ்வொரு நாளும் அவர் நிற்கும் இடம் என்னை நோக்கி நெருங்குவது தெளிவாகத் தெரிந்தது. என்னிடம் பேச விழைகிறார். ஆனால் தயக்கம் என்று புரிந்தது. அவருக்கும் உறுத்தியிருக்க வேண்டும். அன்றெனக்கு பயங்கர சந்தோஷமான தினம். பழிக்குப் பழி வாங்க சந்தர்ப்பம் வாய்த்துவிட்டதென மனது கூத்தாடியது. ஆனால் அந்த சந்தர்ப்பம் வாய்ப்பதற்குள், பழிக்குப்பழி நினைவிலிருந்து காணாமல் போயிருந்தது.

மிக மெல்லமாக என்னை நெருங்கிய அவர், ஏதோ சொன்னார் என்று தெரிந்து திரும்பி அவரை நோக்கினேன்.

"டு யு நோ இன்கிலிஷ்?"

கேள்வியை சட்டை செய்ததாகவே தெரியவில்லை. மீண்டும் ஏதோ சொன்னார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். எங்களிருவருக்கும் இடையில் எந்தவொரு பொது மொழியும் இல்லை. என்ன சொல்வதென்று தெரியாமல், தலையை மட்டும் ஆமாம் என்பது போல் ஆட்டி வைத்தேன்.

கொஞ்ச நேரம் மௌனம். பின் மீண்டும் ஏதோ சொன்னார். அவர் முகத்தையே பாவமாகக் பார்த்துக் கொண்டிருந்தேன்.

'அய்யய்யோ மாட்டிக் கொண்டேனோ?'

இதே கதைதான் ஒரு சில நாட்கள் நீடித்தது. என் மாலைப்பொழுதுகள் வீணாய்ப் போகின்றன என்ற நினைப்பே மனதுக்குள் ஆட்டிப்படைத்தது.
தேமே என்று அவர் முகத்தையே பார்த்தபடி இருப்பேன். ஒரு வேளை மாடிக்குப் போவதையே தவிர்த்து விடலாமா? என்று நான் எண்ணத் தொடங்கிய ஒரு நாள் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
---------------------------
இன்னும் பேசும்...

Monday, June 30, 2008

பேசாப்பொருள் - I

What is coming will come and we will meet it when it does.
- JK Rowling , Harrypotter and the Goblet of Fire
அந்த புது வீட்டிற்கு நாங்கள் சென்றது கடந்த ஆகஸ்ட் என்று நினைக்கிறேன். இந்த பெங்களுரில் வேலைக்கு வந்தபின் வீடு தேடுவது என்பதும் வாழ்வின் ஒரு அங்கமாகிப் போனது. அதிலும் பேச்சுலர்ஸ் என்றால் அத்தைககும் குதிரைக்கும் மீசையும் கொம்பும் முளைத்தால் கூட வீடு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதிலும் புரோக்கர் கூடாது என்றால் சில வார காலங்களுக்கு தெருத்தெருவய் அலைய வேண்டியதிருக்கும்.

இவை எல்லாவற்றையும் கடந்துதான் அந்த வீட்டிற்கு நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. ஒரு அடுக்கு மாடிக்குடியிருப்பின் நான்காவது மாடியில் கடைசி வீடு எங்களது.
அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறது, தமிழ்நாடு மெஸ் கீழேயே இருக்கிறது, ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலேயே இருக்கிறது என அந்த வீடு பிடித்திருப்பதற்கான காரணங்களை கவீன் அடுக்கினாலும், எனக்கு அந்த வீடு பிடித்திருப்பதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். அது மொட்டைமாடி.

எங்கள் வீட்டுக்கு மேல் மொட்டை மாடிதான். இந்த பரபரப்பான நகர வாழ்க்கைக்கு நடுவில் எனக்கு ஆறுதல் தரும் ஒரே விஷயம் அந்த மொட்டைமாடித் தனிமைதான். ஒவ்வொரு நாளும் எத்தனை முகங்கள், எத்தனை பிரச்சனைகள், என்னவொரு ஓட்டம். அந்த ஓட்டத்தின் இடையே நான் இளைப்பாறும் இடம் அந்த மொட்டை மாடிதான்.

என் மாலைநேரங்களுக்காகவே அந்த இடம் அமைந்ததாய் ஒரு பிரமை என்னுள். வாகனங்களின் இரைச்சல் தொலைத்து, ஊர்ச்சந்தடிகள் கடந்த சொர்கம் அது. புத்தகம் படிப்பதானாலும், ஏதாவது எழுதுவதானாலும், வானம் பார்ப்பதானாலும் எல்லாம் அந்த மொட்டை மாடியில்தான்.

எனக்குத்தெரிந்த வரையில் அந்த மொட்டைமாடியின் ஏகபோக உரிமையாளன் நான்தான். இது கொஞ்சம் சந்தோஷமாகக் கூட இருந்தது. மாடிக்கு ஆறு குடும்பங்களாக 24 குடும்பங்கள் இருக்கும் ஒரு குடியிருப்பில் யாருமே அந்த மொட்டை மாடியை உபயோகிக்காதது ஆச்சரியமாய் இருந்தது. அவரவர்க்கு அவரவர் ஓட்டம். யாருக்கும் நேரமில்லை. காற்றில் மல்லிகை வாசம் கலந்து வந்தால், வாசம் வந்த திசையைக் கூட திரும்பிப்பார்க்க முடியாத அவசரம் ஒவ்வொருவர்க்கும். அவர்களை நினைக்கையில் பரிதாபமாகக் கூட இருந்தது.

எப்போது என்ன நடக்கும் என்று நம்மால் என்றுமே கணிக்க முடிவதில்லைதான்.

எங்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது அந்த மொட்டை மாடியில்தான்.

கடைசி சந்திப்பும்…


இன்னும் பேசும்...


Tuesday, May 20, 2008

விளம்பரங்களில் Airtelஎல்லைக்கோட்டின் இடைவெளியில் கால்பந்தாடும் சிறுவனாகட்டும்தன் தாத்தாவுடன் mobile ல் chess விளையாடும் அந்த பேரனாகட்டும், தன் குழந்தைக்காக நட்சத்திரங்களில் புள்ளி வைக்கும் அந்த தந்தையாகட்டும், அனைவருக்கிடையேயும் இழையோடுவது போன்ற ஏதோ ஒரு தனித்தன்மை, பார்க்கும் முதல் முறையே 'அட' போட வைக்கிறது.
உண்மையில் Google search காக பதின் வினாடிகளில் ஒரு Indiana Jones படத்தையே பார்த்தால் ஸ்பீல்பெர்கே ஆச்சரியப்பட்டுதான் போவார்.
பெயர் தெரியா அந்த விளம்பரக் கலைஞனின் உழைப்பையும் திறமையையும் நினைத்து பல முறை வியந்திருக்கிறேன். எப்படிப்பட்ட அசாத்தியமான வேலை இது.
கொடுக்கப்படும் சொற்ப வினாடிகளில், தான் சொல்ல வந்ததை சொல்லவேண்டிய கட்டாயமே எங்கும் விரவி நிற்கிறது. இந்த ரத்தினச் சுருக்கம் கைவரப்பெற்ற விளம்பரங்கள்தான் வாசகர்களின் கவனத்தைக் கவர்கின்றன.

ரொம்ப நாட்களுக்கு முன் Express Yourself என்ற வாசகத்துடன் கறுப்பு வெள்ளையில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரம் ஒன்று இன்னும் நினைவில் நிற்கிறது. ஒவ்வொரு உணர்ச்சியாக வரிசைப்படுத்தும் அவ்விளம்பரம் மிகப் பொருத்தமான பிண்ணனி இசையும், கன கச்சிதமான ஒளிப்பதிவுமாக முடிவடையும் வரை நம்மை செயலற்றுப் போகச் செய்யும். இவ்விளம்பரத்திற்காகவே கிரிக்கெட் இடைவேளைகளைக் கூட காத்திருந்து கவனித்த அனுபவம் உண்டு.
இன்று எதேச்சையாக இணையத்தில் அளாவிய போது, Airtel ன் இணைய தளத்தில் இவற்றை காண நேர்ந்தது..
இதோ airtel விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே

Sunday, March 30, 2008

கூண்டுக்கிளிகள்


எங்கோ நினைவுகளின் ஆழத்திலிருந்து நினைவுக்கு வந்தது டோங்கு மாமாவின் முகம். எப்போது அவரை நினைத்தாலும் ஒரு ராஜ அலங்காரத்துடன், தலையில் கிரீடம் கையில்செங்கோல் சகிதமாக டோங்கு ராஜாவாகத்தான் எண்ணத்தோன்றுகிறது.
ஏன் இப்படி? ஒரு வேளை அவரின் சிங்கங்களால் இருக்கலாம்.
நேரு மாதிரி, எங்கள் ஊருக்கே மாமாவாகிப்போனவர் அவர். அவரைப்பற்றிய மேலதிக விவரங்கள் கிராமத்தில் யாருக்குமே தெரியாது என்பது என் நம்பிக்கை.

டோங்கு மாமா கதை சொல்ல ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். காவிரிக் கரையோரம் ஒரு திட்டுப் பிள்ளையார் உண்டு. திருட்டுப் பிள்ளையார். பல வருடங்களுக்கு முன், எவனோ ஒருவன் அரச மரத்தடியில் சிவனே என்று இருந்த பிள்ளையாரை திருடிக்கொண்டு போய் தன் வீட்டுக் கிணற்றி்ல் போட்டுவிட்டான். எப்படியோ, கண்டுபிடித்து பிள்ளையாரை கரையேற்றுகையில், ஏதோ தோஷநிவர்த்தி அது இதுவென கதை சொல்லி தப்பித்துவிட்டான். ஆனால், மாட்டிக் கொண்டார் அந்த பிள்ளையார். அன்றிலிருந்து திருட்டுப் பிள்ளையார் ஆகி, இன்று திட்டுப் பிள்ளையாராய் வந்து நிற்கிறார்.

திட்டுப் பிள்ளையார் ஒருமுறை காணாமல் போனதால், ஊர் பெரிசுகளெல்லாம் ஒன்று கூடி சின்னதாய் ஒரு கோயில் கட்டி அதில்,...
சரி கதைக்கு வருவோம்.. அந்த கோயிலின் முன்பு அரசமரத்தடியில் வட்டமாய் சிமெண்டு பெஞ்சு மாதிரியான ஒரு அமைப்பு இருக்கும்..
அதுதான் டோங்கு மாமாவின் சிம்மாசனம்..

மாலை நேரம் வந்தால், ஊரின் அனைத்து அரை டிராயர்களும் ரெட்டை ஜடைகளும் அரசவைக்கு வந்து விடுவர்..

அவரின் கதைசொல்லும் உத்தியே, அதன் கதையல்லாத தன்மைதான்.

ஒவ்வொருவரராக ஏதாவது கேள்விகள் கேட்பார்.. பதில்களை என்றும் எதிர்பார்த்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு அட்டண்டன்ஸ் மாதிரி.. சில கேள்விகளுக்கு அவரே பதிலும் சொல்லுவார். இடையில், நாங்கள் கண்டுபிடிக்கமுடியா ஏதோ ஒரு புள்ளியில் ஒரு கதை தொடங்கி இருக்கும்.

இத்தனை வருடங்களுக்குப் பின் அவரின் சிம்மாசனத்தில் அமர்ந்து, கதை சொல்வதாய் நினைத்துப் பார்க்கிறேன். சில டஜன் சின்னதுகள், லேசாக வாயைப் பிளந்தபடி ஆச்சரியம் மிளிரும் கண்களுடன் என்னையே பார்ப்பதாய் எண்ணுகையில் சிரிப்புதான் வருகிறது. எப்படி கொஞ்சம் கூட சிரிக்காமல் அவரால் கதைசொல்ல முடிந்ததோ.

பொதுவில் அவர் சொல்வதெல்லாம் வீர தீர கதைகளாகவே இருக்கும். அதுவும் தன்னிலையில்தான் கதை சொல்வார். அதிலும் ஒரு வசீகரம் இருக்கும். காவிரிக்கரை போர்க்களத்தில் நின்று இரண்டு தலை ராட்சசனை அவர் கத்தியால் 'விஷ்க்' எங்களுக்கு இரத்தம் சில்லிட்டுப்போகும். அவர் சிங்கத்தின் வாயைப் பிளக்கையில் சுற்றிலும் ஏதேனும் சிங்கம் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளத் தோன்றும்.

எங்கள் வீட்டின் எதிரில் சம்பத் வீடு. அந்த வீட்டின் பக்கவாட்டில் ஆஸ்பெஸ்டாஸ் போட்டு ஒரு அறை இருக்கும் அதுதான் அவரின் அறை. அவர் ஒரு நித்திய பிரம்மச்சாரி். சகலமும் அவரேதான் செய்து கொள்வார். அவர் வேலை செய்வது ஏதோ ஒரு சர்கஸில். ரிங் மாஸ்டர் வேலை. அத்தனை சிங்கங்களை கட்டி மேய்க்கும் வேலை. அதுவே கூட அவர் மீதான பிரம்மிப்பிற்கு காரணமாய் இருந்திருக்கலாம்.
பெரும்பாலும் வட இந்தியாவில்தான் கேம்ப் இருக்கும். வருடா வருடம் மழைக்காலங்களில் ஊருக்கு வருவார். அரிதான சில தருணங்களில் கோடையிலும்.

அவர் வீட்டின் எதிரில் இருந்ததாலோ என்னவோ எங்கள் மீது தனி கரிசனம் உண்டு அவருக்கு. என்னையும் அக்காவையும் அழைத்து வைத்து சில சிறப்புக்கதைகளும் சொல்லுவார். எனக்குப் பெருமையாக இருக்கும்.
நான்தான் அவருக்கு கிரி பாட்டி கடையிலிருந்து காலைக்கு இட்டலிகள் வாங்கி வருவேன். கொடுக்கும் போதே தெரிந்து விடும். அவர் கண்களில் ஒரு குறும்பு.ஒன்று சினிமாக்கு வர்ரியாடா? அல்லது

"மாப்ளே..ஆத்துக்கு வர்ரியாடா..?"

அவ்வளவுதான் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி, அப்பாவிடம் அழுது அடம் பிடித்து புறப்படுகையில் அம்மா வாசல் வரை வந்து,

" டோங்கு பத்திரமா போய்ட்டு வாப்பா.."

"நான் பாத்துக்கறேங்கா. கவலப்படாதீங்க"

என்றபடி சைக்கிளை எடுத்தால்,
அவர் சைக்கிளில் கேரியர் இருந்தாலும் முன்னாடி கம்பியில் அமர்வதுதான் என் விருப்பம்.

பங்குனியி்ல் காவிரியில் அவ்வளவாக தண்ணீர் இருக்காது. அணில் முதுகில் கோடு மாதிரி காவிரில் வரிவரியாக தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். மணல் திட்டுத் திட்டாகத் தெரியும். காவிரியல் குளிப்பதே தனிசுகம்தான். அதைவிட பெரிய சுகம் குளித்தவுடன் ஈரத்துண்டுடன் வெயிலில் நிற்பது.

குளித்தவுடன் காட்டாமணக்கு குச்சிகளை ஒடித்துக் கொண்டு சுற்றிலுமிருக்கும் மானசீக சிங்கங்களை அடக்கிக் காட்டுவார். ஒரு பேட்டனின் லாவகத்துடன் அவர் சுழற்றுவதிலேயே ஒரு தனி வசீகரம் இருக்கும். சில பல குறிப்புகளும் சொல்லுவார். நானும் கேட்டுக்கொள்வேன்.

அன்றும் அப்படித்தான், ஜலக்கிரீடைக்குப் பின் திட்டுப் பிள்ளையார் மேட்டில் அரசமரத்தடியில் அமர்ந்தோம். சிலுசிலுவென்ற காற்று இதமாக காது குடைந்தது.

அன்று அவருக்கு ஏதோ பிரச்சனை போலும், ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். ம்ஹீம்.. பேசிக்கொண்டிருந்தார்.
சர்க்கஸிற்கெல்லாம் இப்போது யாருமே வருவதில்லையாம். அதனால் அவர்களின் சர்க்கஸை மூடப்போகிறார்களாம். குனிந்து கொண்டே சொன்னார். மாமா இப்படி பேசியதே இல்லை. என்னவோ போலிருந்தது.

அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்னிடம்? ஆறுதலா.எப்படி ஆறுதல் சொல்வது.. அதற்கெல்லாம் வயசு பத்தாது எனக்கு அப்போது.

"மாமா, பேசாம சிங்கம் புலியெல்லாம் இங்க கூப்புட்டு வந்துடுங்க மாமா.. நாம இங்க சர்க்கஸ் போட்டுறலாம்.."

சில வினாடிகள் தாமதத்திற்குப்பின்,
கடகடவென சிரித்தார். என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டாரோ? எதுவும் புரியாமல் நானும் சிரித்தேன்.
கொஞ்சநேரம் ஒரு கனத்த மெளனம் நிலவியது.

"மாப்ளே, கூண்டுக்குள்ள போனது பயமாத் தெரியலடா.. கூண்ட விட்டு வெளிய வற்றத்துக்குத்தாண்டா பயமா இருக்கு.."

என்றோ அவர் சொன்ன வார்த்தைகளுக்கு இன்றுதான் அர்த்தம் புரிந்தது.
அதன் பின் டோங்கு மாமாவை நான் பார்க்கவே இல்லை.

சில வருடங்களுக்கு முன் பூதலூர் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து பார்த்ததாகவும், மாமா சைக்கிளில் புடவை வியாபாரம் செய்வதாகவும் ராஜசேகர் சொன்னான். அப்போது கூட, தலையில் கிரீடத்துடன், ராஜ உடையில்தான் நினைவுக்கு வந்தார். ஒரு கையில் செங்கோலுடன், புடவை வியாபாரம் செய்யும் மாமாவை நினைக்கையில் வயிற்றில் என்னவோ செய்தது.

காலச்சக்கரம்தான் எவ்வளவு குரூரமாகச் சுழல்கிறது மாதிரியெல்லாம் நீதி சொல்லது எனக்குப் பிடிக்கவில்லை..

யார்கண்டார்? இந்நேரம் ஏதேனும் ஒரு திண்ணையில் புடவை கட்டிய அரக்கிகளைப் பற்றிய கதைகளை அவர் சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்.

Wednesday, March 05, 2008

கலிகாலம் என்று...இன்றும்,
கைக்குழந்தையுடன்
பேருந்தில் ஏறும் பெண்களுக்கு
இடம் கொடுக்கும் நபர்கள்
இருக்கிறார்கள்..

அனாமத்தாய் கிடக்கும்
பணப்பைகள்
காவல் நிலையத்தில்
சேர்ப்பிக்கப்படுகின்றன...

மறதியாய்,
சில்லறை வாங்காமல்
திரும்புகையில்,
கூப்பிட்டுக் கொடுக்கும்
கடைக்காரர் இருக்கிறார்...

ஊர் பேர் தெரியாமல்
அடிபட்டுக் கிடப்பவர்கள்
மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்படுகின்றனர்...

பல மூன்றெழுத்து வார்த்தைகள்
அகராதிகளுக்கு அப்பாலும்
உயிருடன் இருக்கின்றன..

இவை எதற்குமே
திராணியற்றவர்கள் மட்டும்,
இன்னும்
சொல்லிக்கொண்டே
இருக்கிறார்கள்...
...

Wednesday, February 27, 2008

இல்லாமலின் இருத்தல்வானம் முழுக்க நட்சத்திரங்கள்
நிறைந்திருந்தாலும்,
வராமல் போன ஒற்றை நிலவிற்காகவே
ஏங்கிக்கிடக்கிறது மனம்..

பத்தொன்பது கேள்விகளுக்கு,
சரியாய் விடையளித்தும்,
தவறவிட்ட இருபதாம் கேள்வியே
தேர்வறைக்குப் பின்னும்
தொடர்ந்து வருகிறது.

மாலைமுழுதும் அவளுடன்
இருந்தும் கூட,
அவள் சென்ற பிறகு,
அவள் அமர்ந்திருந்த பெஞ்சையே
வெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

புலம்பெயர்ந்த பிறகுதான் புரிகிறது,
இட்லியும் சாம்பாரும்
இன்னபிற முன்னாள் அலட்சியங்களும்,
இந்நாள் ஏக்கமென்று..

எதிரியாய் கருதியவனின்
மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,
தவற விட்ட தருணங்களும்,
நழுவிப்போன நட்பின் கணங்களும்..

ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் சுகித்திருக்கலாமோ?

கிடைக்கப்போவதில்லை
எனத் தெரிந்தே தேடுவது
பைத்தியக்காரத்தனமாய்த்
தெரியலாம்..

என்ன செய்ய..?
எத்தனை இருந்தாலும் கூட,
இல்லாமல் போவதிலும்,
அதன் இல்லாமை தரும் சோகத்திலும்,
அடையாளம் காணமுடியா முகமூடியோடு
ஏதோ ஒரு சுகம்
ஒளிந்திருக்கத்தான் செய்கிறது

Tuesday, February 26, 2008

நிழல் நிஜமாகிறது


நாகப்பட்டிணம் பேருந்து நிலையம், தன் வழக்கத்துக்கு சற்றும் விரோதமில்லாமல் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. செல்லரித்த சில கட்டடங்கள், காரை பெயர்ந்து நிற்க, காற்றில் கலந்து வரும் மூத்திரவாசனையுடன், சென்னைக்கான பேருந்தைத் தேடிக்கொண்டிருந்தேன். கட்டிடங்களின் தலையில் ஒவ்வொன்றாக நியான் விளக்குகள் பளிச்சிடத் தொடங்கியிருந்தன.


ஏழேகால் மணிக்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை. எரிச்சல் எரிச்சலாக வந்தது. எதன்மீதும் குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. சுற்றுப்புறம் முழுதும் கண்களால் துளாவியபடி நின்றிருந்தேன்..
பல எரிச்சல் நிமிடங்களுக்குப் பின், பேருந்தி்ல் ஏறும் சமயம் செல்போன் சிணுங்கியது..

சட்.. இன்னைக்கே நாலாவது முறை.. எடிட்டராகத்தான் இருக்கும். இந்த இதழுக்கான சிறுகதை இன்னும் அனுப்பவில்லை.. இன்னும் எழுதவே இல்லை. இன்னும் அடித்துக்கொண்டிருந்தது. கூட்டத்தில் முட்டிமோதி எனக்கான இருக்கைக்குச் சென்றால், யாரோ ஒருவர் துண்டு போட்டு காவலுக்கு ஜன்னல் வழியே கையை விட்டபடி காத்திருந்தார். என் ரிசர்வேசன் டிக்கெட்டின் நம்பகத்தன்மையை நான் நிரூபித்து இருக்கையில் அமர்வதற்குள் கால் கட்டாகி இருந்தது..


எனக்கு டிரைவர் சீட்டுக்கு பின் இரண்டாவது வரிசையில் ஜன்னல் சீட்..ஒரு வழியாக உட்கார்ந்தாகி விட்டது.
கால் பண்ணி காய்ச்சல் வாங்க வேண்டுமா? யோசனையுடன் பொத்தான்களை அழுத்தினேன்..
"ஹலோ.."
"!--! -- ! .. "
"இதோ வந்துட்டே இருக்கேன் சார்.." எத்தனை தடவை..
".."
இன்னும் வோர்ட் கவுண்ட் பண்ணனும், டெம்ப்ளேட் பிக்ஸ் பண்ணனும், ப்ரூஃப் ரீட் பண்ணனும், இத்யாதி இத்யாதி..
"சார். நாளைக்கு காலைல உங்க கையில கதை இருக்கும் சார்.. நானே டைப் பண்ணி அனுப்பிடறேன்.. உங்க இன்பாக்ஸை நாளைக்கு செக் பண்ணுங்க.."
"பண்ணிடறேன் சார்.. நம்புங்க..." கெஞ்சாத குறை..
"..."
கால் ஓடிக்கிட்டே இருக்கு.. சீக்கிரம் கட்பண்ணுய்யா..!" சார் பஸ் புறப்படப்போகுதுன்னு நினைக்கிறேன்.. நான் நாளைக்கு பேசறேன் சார்.."
"..."
பீப்.. பீப்..
அப்பாடா..


முன்பெல்லாம் எப்போதாவது எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு முறை வாரஇதழ் ஒன்றில் வெளியாகி இருந்த என் சிறுகதை ஒன்றை படித்த இவர், புதிதாக தொடங்கப்பட்ட சிற்றிதழ் ஒன்றுக்கு என்பெயரை பரிந்துரை செய்திருக்கிறார்.. கடந்த சில மாதங்களாக எழுதிவருகிறேன்.. பெரிதாக வரவேற்பு ஒன்றும் இல்லை. ஆனால் நானாக எழுதும் போது இருந்த சுதந்திரம் பறிபோய்விட்டதாய் ஒரு உணர்வு. இப்போதெல்லாம் அவசரத்துக்கு எழுதி்க்கொண்டிருக்கிறேன். செயற்கைக் கருத்தரிப்பு மாதிரி. சாம்பார் செய்வது மாதிரி. இந்த மாதிரி கொஞ்சம் அந்த மாதிரி கொஞ்சம் என்று எல்லாத்தையும் கலந்து கதை என்ற பெயரில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.. இதோ இரவோடு இரவாக ஒரு கதை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் எடிட்டர்..


இன்னைக்கு ராத்திரி சிவராத்திரிதான்.. ஏதாவது ஒன்றை எழுதித்தரவேண்டும்..

டிரைவரும் கண்டக்டரும் மிக சாவகாசமாக, சாந்தி பரோட்டாவின் சால்னாவைப் பற்றி விவாதித்துக்கொண்டே வந்து பேருந்தை எடுக்கையில், பயணச்சீ்ட்டில் குறித்திருந்த புறப்படும் நேரம் கடந்து சிலமணிநேரங்கள் ஆகியிருந்தது.


நான் கையில் பேப்பர் பேனாவுடன், காலை கொஞ்சம் தூக்கி முன்சீட்டில் முட்டுக் கொடுத்துக் கொண்டு ஒரு மாதிரி போஸில் அமர்ந்து கொண்டேன்..
எங்கிருந்து தொடங்குவது. எதுவும் தெளிவில்லை.. என்னத்தை எழுதுவது. திரும்பவும் இலக்கில்லா அந்த எரிச்சல்..


போதாக்குறைக்கு கண்டக்டர் தன்பங்குக்கு, TV போட.. ஜாக்கிசானும், ஓவன் வில்சனும் சென்னைத் தமிழில் புகுந்து விளையாடத்தொடங்கினர்.
இப்போதே எழுதி முடித்தால்தான் காலையில் டைப் பண்ணி அனுப்ப முடியும்.
கோயம்பேடு போனா கதைக்காகாது.. அசோக் பில்லர்லையே இறங்கி ஆட்டோ பிடிச்சு போயிடலாம்... யோசித்துக் கொண்டே ஆரம்பித்தேன்..

நிழல் நிஜமாகிறது
-------------------------
யாருமற்ற ஒரு அறை.. சுவர்க்கடிகாரம் சுதியோடு டிக் டிக் பாடிக்கொண்டிருந்தது.. தரையில் சில தலைகொய்யப் பட்ட பொம்மைகள். அருகில் ஏதோ ஒரு அறையிலிருந்து இன்றைய முக்கியச் செய்திகள் கேட்டது. சத்தமில்லாமல் சீலிங் பேன் மெல்ல ஓடிக்கொண்டிருந்தது. லேசாகத் திறந்திருந்த முன்கதவு கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு தயக்கத்துடன், முழுசாய்த் திறப்பதற்குள்,


"டா............டி"

ஒரு குட்டிதேவதை ஓடி வந்தது. சமீபத்தில்தான் ஓடப்பழகியிருக்க வேண்டும். ஒரு மாதிரி தத்தி தத்தி ஓடிவந்து குருவின் கழுத்தைக் கட்டிக்கொண்டது..

"அம்முக்குட்டி.. அதுக்குள்ள ரெடியாயாச்சா..? ம்ம்.. மம்மி எங்க.?"
பெரிய தேவதை இன்னும் குளித்துக் கொண்டிருக்க வேண்டும்.
குரு மனதுக்குள் சிரித்துக் கொண்டான்..
சில்மிஷத்திற்கு இது நேரமல்ல..கோபித்துக் கொள்வாள்..காலேஜ் படிக்கும் போதிலிருந்து அவள் அப்படித்தான். திருமணமாகி 5 வருடங்களுக்குப் பிறகும், இன்னும் அவனாள் அவளைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.
முதல் நாள் அவளைப்பார்த்த போது மனசுக்குள் இருந்த அந்த சந்தோஷ குறுகுறுப்பு ஒவ்வொரு நாளும் புதுசாய் இன்னும் இருக்கிறது..

குழந்தையை உப்புமூட்டை தூக்கிக்கொண்டான்..

இன்னைக்கும் சமாளிக்க வேண்டும்.. இன்று பார்க் போவதாய் ஒரு பிளான்.ஆனால், அதற்குள் கிளையண்ட் ஒருவரிடமிருந்து ஒரு கால். அவரைப் போய் பார்த்தபின்தான் பார்க். இன்னைக்கு ருத்ர தாண்டவமே ஆடப்போறா.
அப்போ கூட அவ அழகாத்தான் இருப்பா..

கொஞ்சம் கொஞ்சமாக என் மனக்கண் முன் விரியத் தொடங்கியிருந்தது குருபிரசாத்தின் வீடு.. முற்புறம் முழுதும் பூச்செடிகளால் தன்னை அலங்கரித்துக் கொண்ட ஒரு அழகான வீடு. முப்பதுகளின் துவக்கத்தில் குரு. அவன் காதல் மனைவி திவ்யா தொட்டுவிடும் தூரத்தில்..

இவர்களுக்குள் காதல் கொஞ்சம் வினோதம்.. பெண்களைக் கண்டாலே விலகி ஓடும் குரு, முதன்முதலில் திவ்யாவைப் பார்த்தது ஒரு ப்ரெளசிங் சென்டரில். நான்காம் ஆண்டு பொறியியலில், ப்ராஜெக்ட் வொர்குக்காக ப்ரெளசிங் சென்னர் போன போது, திவ்யாவும் வந்திருந்தாள். முதல் சிலநாட்கள் பார்வையொடு கழிய, சில நாட்களுக்குப் பின் அவள்தான் வந்து அவளிடம் பேசினாள்.. அதைவிட ஆச்சரியம் இருவரும் கடந்த இரு வருடங்களாகக் குடியிருப்பது ஒரே ஏரியாவில்... இன்னும் பல ஆச்சரியங்களுடன் அவர்களின் பேச்சும் தொடர்ந்தது..

ரொம்ப ரிசர்வ்டு டைப்பான குருவுக்கு, எல்லார் கூடவும் பளிச்சுன்னு பேசற திவ்யாவை பாத்த உடனேயே புடிச்சிடுச்சு. அவ்ளோதான்.. இதுக்கப்புறம் என்ன வேணும்.. அவ பண்ற ஒவ்வொன்னும் அவனுக்கு அழகா தெரிஞ்சுது..
ரொம்ப தயங்கி தயங்கி, அவன் அவள்கிட்ட சொல்லும் போது ஆறு மாசம் ஓடிடுச்சு.
எல்லாத்தையும் குனிந்தபடியே கேட்டுகிட்டு இருந்தா. கடைசியா திரும்பினப்போ கண்ணில ஒரு துளி நீர் இப்பவோ அப்பவோன்னு திரண்டு நின்னுது. அவ்ளோதான் அவன் பாத்தது.. அப்புறம் பளீர் னு ஒரு அறை..
பார்வைப்புலம முழுக்க நட்சத்திரங்களாகப் பறக்க, அடுத்து அவன் கேட்ட வார்த்தைகள்..

"இதைச் சொல்றதுக்கு இவ்ளோ நாளாடா..? மக்கு.."

மட்டும்தான்.. அவன் கண்களைத் திறப்பதற்குள் சாலையைக் கடந்திருந்தாள்..
குருபிரசாத்திற்கு தன்னையே நம்பமுடியவில்லை.. கொஞ்சநேரம் ஆகாயத்தில் பற்ந்த பின் வீட்டுக்குத் திரும்பினான்..

திவ்யா வீட்டில் பெரிதாக ஒன்றும் பிரச்சனை வரவில்லை. குரு வீட்டில் கொஞ்சமாக அமர்க்களத்துக்குப்பின், ஒரு சுபயோக சுபதினத்தில் சுற்றமும் நட்பும் சூழு குரு திவ்யா திருமணம் நடந்தது..

இன்றோடு ஒரு சில காதல்வருடங்களுக்குப் பின் ஒரு குழந்தையும்.. ஸ்வேதா. அதுதான் அவர்கள் முதன் முதலில் சந்தித்த ப்ரெளசிங் சென்டர் பேரு..
ம்ம்ம்... வேணாம்.. நல்லா இல்ல..
சரி..அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச ஒரு பெயர்..
ம்ம்.. போதும்..
திவ்யா குளிச்சுட்டு வந்தாச்சு..
குரு விட்றாத.. எப்படியும் சமாளிச்சுடு..
முகத்தை ஒரு மாதிரி கொஞ்சலாக வைத்துக்கொண்டான். ஒரு கண்ணாடி கிடைத்தால் தன்முகத்தையே பார்த்துக்கொள்ளலாம் போல் தோன்றியது.. அதற்குள் திவ்யா வந்தாச்சு..

"டார்லிங்.. இன்னும் ரெடி ஆகலியா..? பார்க் போலாம்னு சொன்ன..?"

"இதோ அஞ்சு நிமிஷம் டா.. ரெடியாயிடறேன்.. .. உங்க பொண்ணு வேற.. அரைமணி நேரமா ஒரே நச்சரிப்பு.. டாடி டாடின்னு.."

அவள் சலித்துக்கொள்வது கூட அழகுதான்..
குரு தடுமாறாத..
"ஆமா.. இப்படித்தான் சொல்லுவ.. கடைசியில அரைமணிநேரம் ஆகும்.."

அழகாய்ச் சிரித்தாள்..
"ஆமா.. ஆகும்தான்.. என்ன பண்ண.. லேட் ஆயிடுச்சே.."

ஆங்.. இதுதான் சமயம்..
சோபாவில் அமர்ந்து, ஷீவைக் கழற்றிக்கொண்டே, முடிந்த வரை மிக இயல்பாய் சொன்னான்

"ok டியர்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. நீ பொறுமையா கிளம்பு.. அதக்குள்ள நான் போய் ஒரு க்ளையண்டப் பாத்திட்டு வந்துடறேன்."

எந்த சத்தமும் இல்லை.. பெட் ரூமி்ல் திறக்கப்பட்டுக் கொண்டிருந்த டிராயர் கூட பாதியில் நின்றதாய் ஒரு பிரமை..

"வந்த உடனே நாம பார்க் போகலாம்.. "

"நெனச்சேன்.. அய்யா இன்னைக்கு சீக்கிரம் வரும் போதே நினைச்சேன்.. குடும்பத்தைப் பத்தி அக்கறை இருந்தாத்தான. "

"ஹே. .. அதெல்லாம் இல்லடா.. இது ரொம்ப முக்கியமா."

"ஒன்னும் வேணாம்.. போங்க.. போய் உங்க க்ளையண்டையே கட்டிகிட்டு அழுவுங்க..."

"திருவாரூர்,திருவாரூர்,திருவாரூர்" மற்றும் "டீ காப்பி, டீ காப்பி" யோடு வந்தது தஞ்சாவூர் பேருந்து நிலையம்..
ஒரு அரைமணிநேரத்துக்குப் பின் பேருந்து புறப்பட கொஞ்சமாய் கண்களை மூடி குருபிரசாத்தைத் தொடர்ந்தேன்..
குருபிரசாத், புறப்படத் தயராகிக்கொண்டிருந்தான்.

"டாடி.. வரும் போது எனக்கு பவர் ரேஞ்சர்ஸ் பொம்மை டாடி.. "

"சரி டா செல்லம்.. அப்டியே வற்றத்துக்குள்ள மம்மியை சமாதானம் பண்ணிவை.. வந்தவுடன் பார்க் போகலாம்.."

"ok டாடி.."

"ம்.. அப்ப்புபுபுபுபுறம்... "
இப்படி கேட்டா முத்தம் தரணும்னு அர்த்தம்..
சமத்தாக வந்து கன்னத்தில் ஒரு உம்மா கொடுத்தது குழந்தை..
அடுத்தது கிடைக்குமா என்ற நப்பாசையில் திரும்பிய போது, பெட்ரூம் கதவு முன்னமே சாத்தி்யிருந்தது. சமாதான ஒப்பந்தத்துக்கு இது நேரமல்ல.. வந்து பார்த்துக் கொள்ளலாம்.. திவ்யா ஒரு பெரிய குழந்தை.. பார்க் போனா எல்லாம் சரியாயிடும்..

"ஏண்டி ராதிகா.. அத்தானக் கூப்புடு.. நல்ல வேளை.. ஒரு தண்ணி பாட்டில் வாங்கியாரச் சொல்லு.. "
மொழியில்லாத ஒரு முனகல்..

"அண்ணாச்சி.. வாங்க.. ஒரு டீ போட்டுட்டு வந்துடலாம்.."

"அட.. என்னங்கய்யா இது..."

"கொஞ்சம் இருப்பா.. வண்டியை ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு வற்றேன்.."
ஒரு மாதிரி, ட்யூன் பண்ணாத ரேடியோ மாதிரி, சகல சம்பாஷனைகளும் காதில் விழுந்து கொண்டிருந்தன..

மெல்ல கண்விழித்தேன்.. காற்றில் மெல்லியதொரு பரபரப்பு தெரிந்தது.. ஒவ்வொருவருக்கு ஒரு அவசரம். எங்கள் பேருந்து நின்று கொண்டிருந்தது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன்.. நீண்ட தூரத்துக்கு வாகனவரிசை விளக்கு வைத்த ஜன்னல்களாகத் தெரிந்தது..


"என்ன சார் ஆச்சு.."

இதே கேள்விக்கு பலவிதப்பட்ட தேற்றங்கள் தரப்பட்டுக் கொண்டிருந்தன பேருந்தினுள். கடைசியில் வந்த நடத்துனர் அனைவரின் கேள்விப்பார்வைக்குமாய் பதில் சொன்னார்..


"ஏதோ ஆக்சிடண்டாம்.. இப்போதான்.. கொஞ்சநேரம் முன்னாடி.. எவனோ ஒரு லாரி காரன் பைக்ல ஏத்திட்டானாம்.. "


"எப்போ டிராஃபிக் கிளியர் பண்ண போறாங்கன்னு தெரியல.."
"...?"
கொஞ்சநேரம் கடந்தது..


"இதுக்குத்தாங்க.. SETC க்கு திருச்சி போர்டிங்கே குடுக்கக்கூடாது.. அது மட்டும் இல்லைனா, இந்நேரம் பின்னாடியே செங்கிப்பட்டி போய் பைபாஸை புடிச்சு போயிருக்கலாம்."
மேலும் பல இத்யாதிகள்..
இதற்குள் டிரைவரும், சுகமான தேநீர் பருகலுக்குப் பின் திரும்பியிருந்தார்.
அவரும், அவர் போன்று பொறுமையிழந்த இன்ன பிற ஓட்டுனர்களும் ஒரு வழி கண்டுவிட்டனர். விபத்து நடந்தபகுதியை ஒட்டி செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதையில், ஒரு மாதிரி வண்டியைச் செலுத்தத் தொடங்கினர். ஒவ்வொரு வண்டியும், ஒரு ஜோடி டயர்கள் மண்ணிலும், மறு ஜோடியை சாலையிலும் பொருத்தி, சாய்ந்த ஒரு நிலையில் கடக்கத் தொடங்கியிருந்தன.. நெடியதொரு சர்ப்பம் போல் படுத்துக்கிடந்த அந்த வாகன வரிசை மெல்ல ஊர்ந்தது..


ஒரு கட்டத்தில், பேருந்தில் இருந்த அனைத்து முகங்களும் ஒரு சேர ஜன்னல் பக்கமாய் திரும்பின. விபத்து நடந்த இடமாக இருக்கவேண்டும். எனக்கு ஜன்னல் வழியே பார்க்கப்பிடிக்க வில்லை. டிரைவர் சீட்டுக்குப் பின் மாட்டியிருந்த ராணிமுத்து காலண்டரையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.


தூரத்தில் சைரன் சத்தம் கேட்டது.


மனதில் என்னன்னவோ எண்ணங்கள்.. சடாரென ஜன்னல் வழி பார்த்தேன்.. தெளிவாகத் தெரியவில்லை.. நிழல் உருவமாக ஒருவர் அலங்கோலமாகப் படுத்திருந்தார்..
அருகே, நிராதரவாகத் தரையில் கிடந்தது ஒரு பவர் ரேஞ்சர்ஸ் பொம்மை.

Tuesday, February 19, 2008

அகம் பிரம்மாஸ்மி


எண்ணம் தப்பும் வேளைகளில்
எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன்,
என் கனவுகளை..

பலித்ததும், இழந்ததும்
வேண்டுவதும், வேண்டியதும்
விதவிதமாய் வந்து சென்ற கனவுகள்..

நினைவுகளின் ஏட்டில்,
பலித்தவற்றைக் காட்டிலும்
பலிக்காமல் தொலைந்தவையே
இன்னும் பலம் பெற்றிருக்கின்றன..

வெற்றிடத்தின் தத்துவத்தை
அறிவியலில் அறிந்ததைக்காட்டிலும்,
ஏதேனும் ஒன்றை இழந்ததில் உணர்ந்ததே
நினைவில் நிற்கிறது..

முன்னிரவோ முதல்பகலோ
வினைத்தொகையாய்,
முக்காலத்திலும் முடிவின்றி
நீளும் கனவுகள்..

அய்யனார் கோவிலும்,
பீர்முகமது வீட்டுக் கொல்லையும்,
அஞ்சு கண்ணு பாலமும், ஒற்றைப்பனையும்
வந்த அந்த இரவின் கனவை
இன்னும் சேமித்து வைத்திருக்கிறேன்..

ரகுவரன் வைத்த வெடிகுண்டை
நானும் ஒருமுறை
செயலிழக்கச்செய்திருக்கிறேன்.
ராமசாமி வாத்தியாரை
பிரம்பால் அடித்திருக்கிறேன்..
கேப்டன் வ்யோமுடன்
அண்டம் சுற்றி அலைந்திருக்கிறேன்..

சில சிரிக்க வைத்திருக்கின்றன
சில சிலிர்க்கவைத்திருக்கின்றன..
புரட்டப்படாத கனவுகளின் சில பக்கங்கள்
செல்லரித்தும் போயிருக்கின்றன,
எவ்வாறாயினும்,
அவை என் கனவுகள்..

என் சிருஷ்டியின் குழந்தைகள்
அவற்றின் பிரம்மன் நான்தான்..
என் படைப்பில் பெருமையிருக்காதா எனக்கு?

அதனால்தான்,
கனவுகள் கறுப்பு வெள்ளையென சொன்ன
ஆசிரியருக்கு நிறக்குருடு என சிரித்தேன்..

ஆனால்,
ஊக்கம் தொலைத்து உறைந்து நிற்கும்
வேளையிலும்,
உடைந்து போன வாழ்வுக்கு வண்ணமிடுபவை
இந்த கறுப்பு வெள்ளை கனவுகள்
என உணர்ந்தபின்,
கண்களைத் தொலைத்தவனல்ல
கனவுகளைத் தொலைத்தவனே
குருடன் என்றேன்..

இன்றும்
வண்ணங்கள் சிந்தியபடி,
புரட்டப்படுகின்றன
என் நினைவுகளின் ஏட்டில்
சில கனவுகள்..
பலித்தவையும், தொலைத்தவையும்..

தான் சேமித்த காசை எண்ணி எண்ணிப் பார்த்து
மகிழும் கருமியைப் போல,

எண்ணம் தப்பும் வேளைகளில்
எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன்,
என் கனவுகளை...

Thursday, February 07, 2008

சிறுகை அளாவிய தாள்

ஏதோ ஒரு மரண ஊர்வலத்திற்காக தூவப்பட்டு
சவத்தின் வாசம் சுமந்து
சாலையெங்கும் வாகனங்களால் அரைக்கப்பட்ட
தட்டைப் பூக்களை நினைவுபடுத்தியது

இன்று வாங்கிய க.பருப்பிற்கு
பொட்டலமாய் வந்த,
எங்கோ ஒரு சிறுகுழந்தை
ஆனா ஆவன்னா பழகிய
ஒற்றைக்காகிதம்.

எழுதியதில் பிடித்தது - சர்வேசனுக்காக..


எனக்கும் இதுவரை அழைப்பு வரவில்லை.. ஆனாலும், இது தெய்வக் குத்தமாகாதுன்னு சர்வேசன் சொன்னதால நானும் ஒரு பதிவு போட்டுரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. :-) :-)

அப்படி இப்படின்னு மொத்தமா 22 பதிவு போட்டாச்சு போன வருஷத்துல. எனக்கு எழுதியதில் பிடித்ததுன்னா அது வாக்குமூலம் தான். இது நானா எழுதினதுங்கறத விட, ஒரு நிர்ப்பந்தத்தில் எழுதிய கதை இது.
எவ்வளவு நாளானாலும் மறக்கமுடியாத கல்லூரியின் கடைசி செமஸ்டர். திருச்சி REC ன் பாரம்பரியம் மிக்க nittfest போட்டி. துறை வாரியாக போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு துறையின் தன்மானப் பிரச்சனை என்பதால் போட்டிகள் சற்று பலமாகவே இருக்கும். அதில் அறிவிக்கப்பட்ட கதைப்போட்டிகாக எழுதியதுதான் இது.

கதைப்போட்டிக்கு தலைப்புக்குப் பதிலாக மூன்று விஷயங்கள் கொடுக்கப்பட்டன.
ஒரு உவமை, ஒரு சத்தம், ஒரு புகைப்படம். இம்மூன்றையும் கதையில் வைத்து எழுதவேண்டும் என்பதே போட்டி.
ஏறக்குறைய ஒரு வார காலம் அவகாசம் வழங்கிய பின்னும் எதுவுமே தோன்றாமல், கடைசி நாளன்று இலக்கின்றி எழுதத் தொடங்கிய கதை, முதல் பரிசு வாங்கிய போது ஆச்சரியம்தான் மிச்சம்.
இன்றும் என்னால் நம்பமுடியவில்லை.. முதல் பத்தி எழுதும் போது அடுத்து என்ன எழுதப்போகிறேன் என்பதே எனக்குத் தெரியாது. கதையை எப்படி முடிக்கப் போகிறேன் என்பது கூட தெரியாமல் எழுதி முடித்தேன். எப்படியோ, இது எல்லாம் சேர்ந்து வாக்குமூலம் என் விருப்பப் பதிவாயிடுச்சு.


அப்படியே, நம்ப பங்குக்கு இவங்கள கூப்பிட்டுருக்கேன்..
1) சேரல்
2) ஞானசேகர்
3) வில்வகுமார்
4) வீரபாகு
5) ஜகன்

Monday, January 28, 2008

குறுக்கெழுத்துப் புதிர்

---------------------------
என்னால முடிஞ்சவரை கொஞ்சம் முயற்சி பண்ணியிருக்கேன்... நீங்களும் முயற்சிக்கலாமே..
---------------------------
இடமிருந்து வலம்:
1. நிலாநிழல் (8)
4. இ.வ(9) க்கு கொடுமை சிதையில் (2)
5. கைமேல் வினையின் விளைவு (3)
6. சூளையில் சுட்டாலும் குளிர்ச்சி தரும் (2)
7. நெய்தலின் உரிப்பொருள் (2)
9. பிரிவின் பண்புத்தொகை பெண்ணுக்கு (4)
11. வளர்நிலாப் பருவ அலகு (2)
13. நமக்கு இரண்டு இ.வ(7) க்கு ஒன்று (2)
15. வழிகாட்டும் வினைத்தொகை (5)

வலமிருந்து இடம்:
8. அதிர்வில் ஆரம்பிக்கும் ஆற்றல் (2)
10. ஆண் பெண் பலருக்கும் பொதுவாய் (2)

மேலிருந்து கீழ்:
1. கடவுளோடு கைக்கிளை (6)
2. புதிர் தொடுக்கும் மாயக்குளத்தின் மந்திரக்குரல் (4)
3. கல்லானதால் கள்ளில்லை கனவில் (4)
6. தாலோஃபைட் தாவரம் (2)
7. உயிர் கொடுக்கும் உயிர் எடுத்தாலும் கிடைக்கும் (2)
11. மூப்பின் முன்னுரை ஜன்னலில் (2)
12. 7'up சாம்ராஜியம் (2)

கீழிருந்து மேல்:
8. வனமில்லா வனத்தின் வனவிலங்கு (5)
14. நியாயத்திற்கும் நிறுத்தலுக்கும் ராசியானது (3)
10. புத்தரின் போதனை இந்தோனேஷியாவில் (2)
16. கேள்விக்கு பதில் (3)