Friday, April 27, 2012
பொறி
அவ்வப்போது கிடைத்துவரும் சாட்சிகளின் படி, அப்படித்தான் நம்பவேண்டியிருக்கிறது. இதெல்லாம் என்று தொடங்கியது என்று கூட இப்போது சரியாக நினைவில் இல்லை. ஆனால், நான் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியது சரியாக 9 நாட்களுக்குமுன், காந்தி ஜெயந்தியன்று. வெள்ளைக்குல்லாவும் ரகுபதி ராகவ பாடாவிட்டாலும் கூட, வருடத்துக்கு ஒரு நாள் விடுமுறை தரும் ஒரே காரணத்துக்காக நான் காந்தியின் கட்சிதான். நான் ஒன்றும் அப்படியெல்லாம் அவரசப்பட்டு வன்முறையில் இறங்கும் ஆளெல்லாம் கிடையாது.
வாரத்தின் நட்ட நடுவே புதன்கிழமையன்று வந்ததால் யார்தான் காந்தியை வாழ்த்த மாட்டார்கள். அதோடு கூட மனைவியும் ஊரில் இல்லையென்று வெளியில் செல்வது என்று முடிவு செய்து அலமாரியைத் திறந்தபோதுதான் நிகழ்ந்தது அது. ஒரு வினோதமான துர்நாற்றம் கடைசி அடுக்கிலிருந்து வந்தது. குனிந்து பார்த்ததில், அதிகம் உபயோகிக்காத சில துணிகள் முன்வரிசையிலும், அதைவிட அதிகம் உபயோகிக்கப்படாதவை அதன்பின்னும் முறையே அடுக்கப்பட்டிருக்கும். முதல் அடுக்கை கலைத்த போதுதான் தெரியவந்தது. பரிசுப்பொருள்களை பெட்டியில் வைத்து கட்டும் போது அவை அலுங்காமல் இருக்க வைக்கப்படும் கந்தல் கோலத்தில் காட்சியளித்தன சில துணிகள். அவசரமாய் நிமிர்ந்து மேல்அடுக்கை கலைத்த போது, அதன் பின்னும் ஒரு அதிர்ச்சி.
அதற்கு முன்னரே கூட, லேசாக சுரண்டப்பட்ட தேங்காய் மூடிகள் அது இதுவென அங்கங்கு சில தடயங்களைக் கண்டிருந்த போதும், அப்போதெல்லாம் பெரிதாகப்படவில்லை எனக்கு. ஆனால், அன்று என் புத்தம்புதிய பீட்டர் இங்கிலாண்ட் சட்டையில் பாக்கெட் இருந்த இடத்திலிருந்து கோடு கோடாக ஒரு ஓட்டையைக் கண்ட போதுதான் எனக்குள் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச காந்திய வாதி ஓடிப்போயிக்கவேண்டும்.
அன்றிலிந்து, அந்த எலியை ஓழித்துக்கட்டுவது என்று ஒரே குறிக்கோளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறேன். நேற்றுதான் கோபாலிடமிருந்து எலிப்பொறியொன்று வாங்கிவந்து வைத்திருக்கிறேன். இன்று வீட்டுக்குப் போனதும் பார்க்கவேண்டும்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சுகவாசி என்று நண்பர்கள் பொறாமைப்படும் அளவுக்கு நானிருந்தேன். அம்சமாய் மனைவி, வசதியான மாமனார், சொந்தமமாய் வீடு, கை நிறைய சம்பளம் … இதை விட மனிதனுக்கு வேறென்ன வேண்டும். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
பிரசவத்திற்காக மனைவி ஊருக்குப் போன போதுதான் எல்லாம் தொடங்கியது. ஒரே வாரத்தில் வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்ததுவிட்டது. சுகமான கனவில் லயித்திருக்கையில் அடித்தொண்டையில் அலறும் அலாரம் அடித்த மாதிரி ஆகிவிட்டது. என்னதான் ”எம்பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா”என்று ரெண்டு நாட்கள் குதித்துக்கொண்டிருந்தாலும், மூன்றாம் நாளே கையொடிந்த மாதிரி ஆகிவிட்டது. ஒரு நாளில் எத்தனை காரியங்களுக்கு நான் அவளை சார்ந்திருந்திருக்கிறேன்.. அப்பப்பா அதிலிருந்து மீண்டு என்னை நானே பராமரித்துக்கொள்ள அடுத்து மூன்று நாட்கானது. அதற்குள் நான் ஓரளவுக்கு சுதாரித்துக்கொண்டேன். தினமும் வீட்டுக்குவந்தததும் ஏதாவது படம் பார்க்கத் தொடங்கினேன். அதுவும் ஓரிரு நாளில் போரடித்துவிட்டது.
என் வாழ்க்கை மட்டும் ஏன்தான் இப்படி போரடிக்கிறதோ?. என்னடா வாழ்க்கையிது.. ஒரு புதையல் இல்லை, பூதம் இல்லை.. கையில் ஒரு மந்திரக்குச்சியிருந்தால் அவாடா கடாவ்ராவாவது சொல்லிப்பழகலாம்.. குறைந்த பட்சம் ஒரு அற்புத விளக்காவது இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்றெல்லாம் யோசிககத் தொடங்கிவிட்டேன்.
இப்போது அதற்கெல்லாம் நேரமே இல்லாமல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாள் அலுவலகத்திருந்து திரும்பிவரும் போதும் பொறி என்னவாகியிருக்கும், என்ற நினைப்போ ஆக்கிரமித்துக்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் வந்து பெட்டியைப் பார்ப்பதும் அது இல்லை என்றதும் அடு்த்த நாள் பொறியில் என்ன வைப்பது பொறியை எங்கு வைப்பது என்று யோசிப்பதுலுமே ஓடிக்கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்தவுடன் அவசரமாய் அடுக்களைக்கு ஓடிப்போய் பொறியைப் பார்த்தேன். இன்னும் காலியாகத்தான் இருந்தது. எனக்கு இப்போது நிஜமாகவே சந்தேகம் வரத்தொடங்கிவிட்டது.
உண்மையிலேயே எங்கள் வீட்டில் எலி இருக்கிறதா இல்லை என் மனப்பிராந்தியா. தனியாக வீட்டில் இருப்பதே போதும். இனிமேல் டான்னி டார்கோ மாதிரியான சைக்கோ படங்கள் பார்ப்பதை ஒழித்துவிட வேண்டும். அதில் கூட எலி வராதே. முயல்தானே வரும்.
”இந்தாங்க சார்.. நீங்களும் உங்கள் எலிப்பொறியும்.. நானும் ஒரு வாரமா ஏதேதோ வைச்சுப்பாத்துட்டேன். எதுக்குமே வரலை.. இதுக்கு மேலயும் இந்த பொறியை நான் வைக்கறதா இல்லை”
”சார். நான் எங்க வீட்ல இதே பொறியை வைச்சு நாலு எலி புடிச்சேன் சார்” கோபாலின் கண்ணில் பெருமிதம் மின்னியது.
”இந்த பொறியை வைச்சு… . அதுவும் நாலு எலி.. எப்போ?”
”போன வருசம்..”
”அதான பாத்தேன்.. அது போன வருசம்.. இந்த வருசம் எலியெல்லாம் நல்ல வெவரமாயிடுச்சு போல..” அவரை குறைசொல்லியிருந்தால் கூட அவரின் தன்மான உணர்ச்சி இவ்வளவு சோதிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.
”நீங்க என்ன வைச்சிங்க?”
”என்ன வைக்கலன்னு கேளுங்க சார்.. எங்க வீட்டு கிச்சன்ல இருக்கற ஐட்டத்துல அத்தனையிலயும் ஒரு சாம்பிள் இந்த பெட்டிக்குள்ள போயிருக்கு..”
”இவ்ளோ வைச்சிங்களே.. ஒரு மசால் வடை வைச்சிங்களா? அது அதுக்குன்னு ஒரு நீக்கு போக்கு இருக்குல்லியா.. மணக்க மணக்க ஒரு மசால்வடை வாங்கி அதுல மட்டும் வைச்சுப் பாருங்க.. அது விஸ்வமித்திர எலியா இருந்தாகூட மசால்வடைகிட்ட தாக்குபுடிக்க முடியாது.”
இவர் பேசுவதென்னமோ நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால், நடக்குமா..?
நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, அவரே கடைக்குச் சென்று ஒரு வடையும் வாங்கி விட்டுக்கு வந்து வைத்துவிட்டும் போய்விட்டார். அதில் எலி மட்டும் மாட்டாவிட்டால் பொறியை என்னையே வைத்துக்கொள்ளும் படியும் சொல்லிவிட்டார். என்னே தமிழரின் தன்மான உணர்ச்சி.
இரவு படுக்கப் போகும் போது அடுக்களை முழுவதுமே அந்த மணம் நிரம்யிருந்தது. நாசிக்குள் நுழையும் போதே எச்சில் ஊறியது. அடடா, கொஞ்சம் யோசித்திருந்தால் இன்னொரு வடை கூடுதலாக வாங்யிருக்கலாம் என்றெழுந்த நப்பாசையை அடக்கிக்கொண்டு உறங்கச் சென்றுவிட்டேன்.
ஒரு பெரிய வெண்மணற்பரப்பில் நின்றுகொண்டிருக்கும் போதுதான் அது கண்ணில் பட்டது. தொலைவில் ஒரு மசால் வடை. அதன் மணம் நான் இருந்த இடம் வரை சுண்டி இழுத்துக்கொண்டிருந்தது. தன்னிச்சையாக தொலைவில் தெரிந்த வடைப்புள்ளியை நோக்கி நடக்கத்தொடங்கியிருந்தேன். முதலில் மிக பக்கமாகத் தோன்றிய தொலைவு நடக்க நடக்க வளர்ந்துகொண்டே போவது போல் பட்டது. அப்போதுதான் அந்த எலியைக் கவனித்தேன். அது மறுபுறமிருந்து வடையை நோக்கி வந்துகொண்டிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மிக எளிதாக, மிக லாவகமாக வந்து அந்த வடையை தின்னத்தொடங்கிவிட்டது. ஆத்திரம் கொப்பளிக்க அதை நோக்கி ஓடினேன். முதலில் ஒரு புள்ளியாகத் தெரிந்த எலி அருகில் செல்லச் செல்ல எலியின் உருவத்திற்கு வளர்ந்தது. அத்தோடு நின்றிருக்கலாம். நான் மொத்தமாய் அருகில் சென்ற போதும் கூட அது வளர்வது நிற்கவில்லை. ஏறக்குறைய என் உயரத்திற்கு வளர்ந்த பின், அலட்சியமாக என் பக்கம் திரும்பி ”வடை வேண்டுமா?” என்ற போது, திடுக்கிட்டு எழுந்துவிட்டேன். என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே சில நிமிடங்கள் ஆனது. மெதுவாக அடுக்களைக்குச்சென்று எட்டிப்பார்த்த போதுதான், என் அத்தனை நாள் சந்தேகத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முதல் தரிசனம் நிகழ்ந்தது. சிலிண்டருக்கும் சுவருக்கும் இடையிலிருந்த இடுக்கிலிருந்து எட்டிப்பார்த்த அந்த எலி கண்மூடி திறப்பதற்குள் காணமல் போயிருந்தது. மசால் வடை அப்படியே இருந்தது.
பரவாயில்லை. குறைந்த பட்சம், என் சந்தேகம் உறுதிப்பட்டதே ஓரளவுக்கு திருப்தியளிக்க நிம்மதியாய் உறங்கிப்போனேன். ஆனால், அந்த நிம்மதி அடுத்த நாள் காலை நீடிக்கவில்லை. பொறிவைத்த இடத்தில் அப்படியே இருக்க உள்ளிருந்த மசால் வடை மட்டும் காணாமல் போயிருந்தது. கோபாலை சபித்தபடியே அருகில் சென்று பார்த்த போது, சுற்றி கொஞ்சம் எலிப்புளுக்கை மட்டும் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. இதற்கு மேலும் கோபாலையும் அவன் எலிப்பொறியையும் இந்த எலியையும் நான் நம்புவதாயில்லை. ஒன்று நிஜமாகவே இது ஒரு outdated பொறியாக இருக்க வேண்டும். அல்லது அந்த எலி ராட்டடுயி ரெமி மாதிரி படு சமத்தாக இருக்கவேண்டும்.
“வடை போச்சே..“
பைட் பைப்பர் மாதிரி ஏதாவது வாசிக்கத்தெரிந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை. இப்படி தினம் தினம் நீயா நானா விளையாடுவதற்குப்பதில் பேசாமல், நாலு ரூபாயில் விஷம் வாங்கி வைத்துவிடலாம் என்று விஷமத்தனமான ஒரு யோசனையும் வந்தது. ஆனால் அது வேறு விஷத்தை தின்றுவிட்டு வீட்டில் எங்காவது இடுக்கில் செத்துவிழுந்து நான்கு நான் கழித்துதான் நமக்கு தெரியவரும். அதனால் வேண்டாம் என்று சமாதானம் செய்துகொண்டேன். அதைவிட முக்கியமான காரணம், 12ம் வகுப்பு விலங்கியல் பாடத்திற்காக எலியின் உணவுமண்டலத்தை அறுவைசெய்து காட்டியதற்கே மயங்கி விழுந்து பள்ளியில் பிரபலமானவன் என்பதால், தேவையில்லாத விபரீதங்கள் வேண்டாம். பெட்டியே போதும்.. மாட்டியதும் தூரமாக எங்காவது கொண்டு சென்று விட்டுவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். இப்போது அதற்கும் வழியில்லை என்றே படுகிறது.
ஆனால், அன்றிரவு நான் ஏன் அப்படிச்செய்தேன் என எனக்கே புதிராகத்தான் இருக்கிறது. ஆனாலும் செய்தேன். அந்த புராதண எலிப்பொறியின் இருபக்க கதவுகளையும் திறந்தே வைத்து உள்ளே சில தேங்காய் சில்லுகளையும் வைத்துவிட்டு உறங்கப்போனேன். என்ன எதிர்பார்த்து அப்படிச்செய்தேன் என்று என்னால் தெளிவாகச் சொல்லமுடியவில்லை. ஆனால், அடுத்த நாள் காலையில் கொஞ்சமும் மிச்சமில்லாமல் சில்லுகள் காணாமல் போயிருந்தன. வருகையின் அடையாளமாய் கொஞ்சம் எலிப்புளுக்கை. ஆனால், அன்று எனக்கு கோபம் இல்லை. ஏதோ தினசரி நடவடிக்கை மாதிரி பெட்டி இருந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். அன்றிரவும் கூட கொஞ்சம் பொட்டுக்கடலைகள் வைத்தேன். அடுத்த நாள் கொஞ்சம் வாழைப்பழம் என என் இரவு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகிப்போனது.
இப்போது உங்களிடம் ஜீவகாருண்யம் அது இதென்று நான் புருடா விட்டுக்கொள்ளலாம். உங்களுக்கும் தெரியப்போவதில்லைதான். அனால், உண்மையில் அப்போது என் துணி அடுக்குகள் பாதுகாப்பாய் இருக்கக கண்டேன். அதுதான் என்னை தொடர்ந்து செய்யத் தூண்டியிருக்க வேண்டும்.
வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதைப் போல் இருந்தது. அதுவும் ரொம்ப நாள் தொடரவில்லை. திடீரென ஒரு நாள் காலை, பெட்டியில் வைத்தது வைத்த படியே இருந்தது. வந்து சென்றதற்கும் ஏதும் அடையாளம் இல்லை. அதற்கடுத்த நாளும் அப்படியே. எப்படி வந்ததோ அப்படியே சொல்லாமல் ஒரு நாள் சென்றுவிட்டது.
ஒன்றும் கவலையில்லை. எப்போது வாழ்க்கை மீண்டும் போரடிக்கத் தொடங்கிவிட்டதாக நினைக்கிறேனோ அப்போது அது மீண்டும் வரக்கூடும்.
Tuesday, June 30, 2009
ஊஞ்சல்
"ரகு, எங்கயும் வெளயாடப் போகாத.. நாளைக்கு கிராமத்துக்குப் போகணும்.. பாட்டிக்கு உடம்பு !@#$%...."
அதன்பின் எதுவுமே எனக்கு கேட்கவில்லை. கிராமத்துக்குப் போகிறோம் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. நான் நினைவுகளுக்குள் அலையத்துவங்கியிருந்தேன்.
நாங்கள் இருந்தது ஒரு வளர்ந்து வரும் பேரூராட்சி என்றாலும் அப்பாவுக்கு வேலை மாற்றல் என அடிக்கடி அலைந்து கொண்டிருந்ததால், கால் அரை முக்கால் முழு ஆண்டு என்று எந்த விடுமுறை வந்தாலும் அது கிராமத்தில்தான் என்பது எழுதப்படாத நடைமுறையாக இருந்து வந்தது.
ஆனால் கொஞ்ச நாட்களாக கிராமம் பக்கமே போகாமல் இருந்த நேரம் அது. நான் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும் அப்பாவும் அம்மாவும் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பா மட்டும் அவ்வப்போது சென்று வருவார். நானும் உடன் வருவேனென்று அடம்பிடித்த போதெல்லாம் அது பெரியவர்கள் சமாச்சாரமென்று ஒதுக்கிவைக்கப்பட்டேன்.
கிராமத்தில் தாத்தா வீட்டுக்குச் செல்வதென்றாலேயே எனக்கு அலாதியான விருப்பம் உண்டு. வீடும், வீட்டை ஒட்டிய கொல்லையும், கொல்லை முடியும் இடத்திலேயே தொடங்கிவிடும் அந்த குளமும், தாத்தா எவ்வளவுதான் திட்டினாலும். குளத்தில் கும்மாளமடிக்க உடன் வரும் மாரிமுத்து மாமா பையன்களும் என என் சொர்கம் அது.
இது எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்த இடமொன்று அங்குண்டு என்றால் அது அந்த ஊஞ்சல்தான். தன் ஒவ்வொரு கிரீச்சிலும் அது ஏதோ என்னிடம் சொல்லவிழைவதாகவே எனக்கொரு எண்ணமுண்டு. அத்தனை அலைவிலும், அதே லயம் மாறாமல் ஆடும் அதன் ஆட்டம், காலத்தின் பாதை காட்டும் பெண்டுலம் மாதிரி, தான் கடந்து வந்த காலத்தின் எச்சம் சொல்லுவதாய் ஒரு பிரமை.
மேலும் படிக்க...
ஆரம்பத்தில் தாத்தாதான் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தபடி கதை சொல்லுவார். அவர் சொல்லும் கதைகளை விட ஊஞ்சலின் ஆட்டம்தான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. ஊஞ்சலில் இருக்கையில் அருகிலும் தொலைவிலுமாக மாறி மாறி பொருள்கள் கொள்ளும் மயக்கம் என்னை சுண்டி இழுத்துக்கொண்டே இருந்தது. தாத்தாவுக்கு ஊஞ்சலை வேகமாக ஆட்டினால் பிடிக்காது. எனக்கு நினைவு தெரிந்து தாத்தா வீட்டினுள் இருந்தால் அந்த ஊஞ்சலில்தான் இருப்பார். அதே கிரீச், மீண்டும் மீண்டும் அவரின் இருப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
தாத்தாவின் துணையில்லாமலேயே ஊஞ்சலில் ஏறிக்கொள்ளுமளவுக்கு வளர்ந்த பின், அந்த ஊஞ்சலே எனக்கு எல்லாமுமாய் ஆகிப்போனது. அமர்ந்தால், ஆடினால், உணவு உண்டால், தூங்கினால் என அனைத்தும் அந்த ஊஞ்சலில்தான்.
எனக்கு வேகம்தான் பிடித்திருந்தது. உந்தி உந்தி இன்னும் இன்னும் என உத்திரத்தை தொட்டு விடும் முனைப்புடனெல்லாம் சிலமுறை ஆடியிருக்கிறேன். சில சமயங்களில் தாத்தா திடீரென வந்து விட்டால் மட்டும் வேகத்தை குறைத்துக்கொள்வதுண்டு. தாத்தாவுக்குத் தெரிந்தாலும் என்னை மட்டும் திட்டார். அதுவே எனக்குப் பெருமையாய் இருந்தது.
அதற்கடுத்த முறைகளில் செல்லும் போதெல்லாம் வெளியிலெங்கும் செல்வதைவிட, வீட்டிலேயே இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
விளையாட்டுகள் கூட, வீட்டினுள்ளேயே ஊஞ்சலின் மீதமர்ந்து ஆடமுடியக்கூடிய விளையாட்டுகள்தான் எனக்குப் பிடித்தவையாகின.
அதன்பின் கொஞ்ச நாட்களிலேயே மேற்சொன்ன களேபரங்களில் மொத்தமும் விட்டுப்போயிருந்து, இப்போதுதான் மீண்டும் செல்கிறேன்.
அடுத்தநாள் காலையில் நானும் அம்மாவும் ரயிலில் செல்லும் போது ரயிலின் ஆட்டம் கூட ஊஞ்சலை நினைவுபடுத்தியது.
ஊரில் இறங்கியபோது டீக்கடையிலிருந்து ஆல் இந்தியா ரேடியோ எங்களை வரவேற்றது. சாலையில் குறுக்கே கோலம் போடும் பெண்மணிகள். சில சோம்பேறிக் கோழிகளின் கூவல்கள், என கடந்து சென்று கொண்டிருந்தோம். அம்மாவை அடையாளம் கண்டுகொண்டவர்களின்,
"என்னக்கா? செளக்கியமா..? அண்ணன் வரலியா?"
விசாரிப்புகளிலேயே நேரம் போய்க்கொண்டிருந்தது. எனக்குத்தான் எரிச்சலாய் வந்தது. அம்மாவின் கையைப் பிடித்தபடி அவசரத்துடன் நின்று கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக வீட்டை நெருங்கி, அந்த கடைசி திருப்பத்தில் திரும்பிய போதுதான் அந்த குழப்பம்.
"கடந்த முறை நான் வந்திருந்த போது சரியாகத்தானே இருந்தது இப்போது என்னாயிற்று..?"
கடந்த முறை ஒன்றாய் இருந்த வாசல் கதவு இப்போது இரண்டாய் இருந்தது. புதிதாய் வண்ணம் பூசி பளபளப்பாய் இருந்த வாசல்களில் எதுவென்று நான் குழம்பியிருக்கும் போதே, அம்மா ஒரு கதவினுள் என்னைக் கூட்டிப்போனார். உள்ளே நுழைந்தால் எனக்கான அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வாசல் மட்டுமல்ல வீடும் இரண்டாய்ப் பிரிந்திருந்தது.
ஊஞ்சல் மாட்டும் இரு வளையங்களுக்கு நடுவே புதிதாய் வெள்ளையடித்த ஒரு சுவர் புதிதாய் முளைத்திருந்தது. ஒரு வளையம் மட்டுமே அங்கிருந்து தெரிந்தது. மற்றொன்று அடுத்த பக்கத்தில் இருக்கவேண்டுமென்று எண்ணிக்கொண்டேன்.
அந்த பெரியவர்கள் சமாச்சாரம் இதுதான். தாத்தாவின் மரணத்திற்கு பிறகு மாமாக்களுக்குள் ஏற்பட்ட தகராறில், நிலம் மட்டுமல்லாமல் இந்த வீடும் இரண்டாய்ப் பிரிந்திருக்கிறது. கோர்ட்டுக்கெல்லாம் போகுமளவுக்கு பிரச்சனை வளர்ந்திருக்கிறது. கடைசியில் அப்பாதான் இடையில் புகுந்து சமாதானம் செய்திருக்கிறார். ஒரு வீட்டில் ஒரு மாமாவும் பாட்டியும் இன்னொரு வீட்டில் இன்னொரு மாமாவுமென ஏற்பாடு. . என்னால் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த ஊஞ்சலை விட வேறெதும் முக்கியமான விஷயம் இருக்கமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
பாட்டிதான்,
"நானும் அப்பவே கண்ணை மூடியிருக்கனும்"
என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.
கடைசியில் அம்மாதான் கூப்பிட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்று மாமாவைப் பார்த்து வரச்சொன்னார். மாமாவைப் பார்க்கிறோமோ இல்லையோ ஊஞ்சலின் அடுத்த வளையத்தைக் கண்டுவிடவேண்டுமென்ற ஆவலுடன் ஓடினேன். கண்டும் விட்டேன் அந்த அடுத்த வளையத்தை. அது மட்டுமல்ல, இத்தனை நாட்களாக காலத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஆடிவந்த ஆட்டம் அடங்கி அந்த ஊஞ்சல் பரண் மீது புழுதிபடிய மெளனமாய்க் கிடந்தது. சொல்ல வந்ததை கடைசிவரை சொல்லாமலேயே மரித்துப் போன சோகம் அதன் இருப்பில் கசிந்துகொண்டே இருந்தது.
மாலை அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பும் போதே முடிவு செய்து கொண்டேன், இனிமேல் திரும்பவும் வருவதில்லையென.
இரவு வெகுநேரம் வரையில் கிரீச் சத்தம் காதினுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
---
(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது)
Wednesday, May 13, 2009
திருடர்கள் ஜாக்கிரதை
"யாரது?"
"திருடன்"
"என்ன வேணும்?"
"நகை வேணும்"
"என்ன நகை?"
"கலர் நகை"
"என்ன கலர்?"
"ம்ம்ம்ம்… செவப்பு கலர்…"
ஏழாம் வகுப்பு ஆ பிரிவில், மற்ற அரை டிராயர்களெல்லாம் அந்த செவப்பு கலரைத்தேடி ஓடிக்கொண்டிருக்க, எனக்குள் மட்டும் சில வினோதமான கேள்விகள் எழுந்தன..
உண்மையிலேயே திருடன் இந்த குணசேகரன் மாதிரிதான் குள்ளமாக வட்டமுகத்துடன், இருப்பானா? இதே மாதிரிதான் ஒவ்வொரு வீடாகச்சென்று தன் வருகையை பராக் சொல்வதுதான் அவன் வேலையா? இல்லையென்றால் அவன் எப்படி இருப்பான்? எங்கள் வீட்டுக்கு மட்டும் அவன் வருவதே இல்லையே ஏன்?
மேலும் படிக்க...

திருடர்கள் மீதான ஈர்ப்பு எப்படி ஏற்பட்டதென்று தெளிவாகத் தெரியவில்லை.. ஆனால், அன்றைக்கு விளையாடும் போதுதான், அந்த முடிவு எனக்குத் தோன்றியது.. அது, எப்படியாவது ஒரு உண்மையான திருடனைப் பார்த்து விடுவதென்று.
ஆனால், திருடர்களைத் தேடி எங்கு போவது எப்படிப் பார்ப்பது எதுவுமே இல்லாமல் ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றியாகிவிட்டது. முதல் வேளையாக அ பிரிவு ஜெகன் தான் நினைவுக்கு வந்தான். அவனுக்கு இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் பரிச்சயம் அதிகம். என்ன கொஞ்சம் அதிகமாக ரீல் சுத்துவான். அவனே வானை அளந்த மாதிரியெல்லாம் கதை சொல்வான். மற்றபடிக்கு சராசரிக்கும் சற்று குறைவான ஒரு மாணவன்தான்.என்ன மாதிரி கூச்சசுபாவமெல்லம் கிடையாது அவனுக்கு.
சொன்னதற்கு கெக்கெ பிக்கேவென்று கொஞ்ச நேரத்திற்கு சிரித்துகொண்டிருந்தவன், திடீரென்று சிரிப்பதை நிறுத்தினான்.
”ஆமாண்டா.. நானும் திருடன பாத்ததே இல்ல.. வா, ரெண்டு பேருமா பாக்கலாம்..”
ஆனால் அவனுக்கும் எப்படியென்று தெரியவில்லை.
எப்படியாவது அவன் ஒரு வழியுடன் வருவானென்று தெரியும்.. ஆனால் என்னவென்று மட்டும் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருந்தேன்.
நினைத்தது மாதிரியே அடுத்தநாளே ஒரு திட்டத்துடன் வந்தான்..
மதியம் உணவு இடைவேளையில் அவனைப்பார்த்வுடனேயே,
”எப்படி டா?”
”கண்டு பிடிச்சுட்டோம்ல.. நம்மகிட்டேயேவா..”
என்றபடி ஒரு போலி பெருமிதத்துடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்..
“எப்படின்னு சொல்லுடா” ஆர்வம் தாங்கவில்லை எனக்கு..
”சரி சரி. அவசரப்படாத.. எதுக்கு இவ்ளோ அலையனும்.. பக்கத்தூருலதான் எங்க மாமா டீக்கடை வச்சுருக்கார்”
” அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்”
”டேய்.. அங்கதான் G7 ம் இருக்கு” என்றபடி கல்மிஷமாய்ச்சிரித்தான்..
வழக்கம்போல் நான் பேந்த பேந்த விழிக்க, எனக்குத் தெரியாத ஒன்றை தெரிந்துகொண்ட கர்வத்துடன் சொல்லத்தொடங்கினான்.. அதாகப்பட்டது, G7 என்பது எங்களின் பக்கத்தூர் போலீஸ் ஸ்டேஷன். அவன் சொன்ன அந்த மாமா கடை, G7 ன் பக்கத்து காம்பௌண்ட்.. அவர்தான் G7 ற்கு ரெகுலர் டீ சப்ளையர்.. எப்படியாவது, ஒரு நாள் டீ கிளாசுடன் உள்ளே நுழைந்தால் வேண்டியமட்டும் லாக்அப்புக்குள் விதவிதமான திருடர்களை கண்குளிர கண்டுவிடலாம் என்பது அவன் திட்டம்.
என்னைப்பொறுத்தவரை போலீஸ் ஸ்டேஷன் என்பதே ரொம்ப பெரிய சமாச்சாரம்.. அதில டீ கிளாசோட போய் மாட்டிகிட்டு என்னையும் ஜெயில்ல போட்டா என்ன ஆகறது.. அடுத்த நாள் ஸ்கூலுக்கு யார் போறது.வீட்ல எப்படி பதில் சொல்றது..
”ம்கூம்.. இதெல்லாம் ஆவுறதில்ல..”
”..?”
”பக்கத்தூருக்கு போகணும்னா பஸ் புடிக்கனும்.. பஸ்க்கு காசு வேணும்.. வீட்ல கேட்டா உதைவிழும்.. நம்மால முடியதுப்பா”
என்ற படி ஜகா வாங்கினேன்..
திருடனைப்பார்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை போல..
”வேணாம்டா விட்டுறலாம்டா..”
அவன் விடுவதாய் இல்லை.. அவனின் வழக்கமான ஜம்பம்..
”ம்ம்.. அஸ்க்கு புஸ்க்கு.. நான் ஒரு ஐடியா சொன்னேன்ல.. நீயும் ஒன்று சொல்லு.. சரிவரலன்னா விட்டுறலாம்”
என்று என்பக்கமே திருப்பிவிட்டான்.. சரி ஆனது ஆகிவிட்டது.. ஒப்புக்கு ஒரு ஐடியா சொல்லி இவனை கழட்டி விடறத்துக்கு, ஒரு நல்ல ஐடியாவை யோசித்தால் என் ஆசையும் நிறைவேறிய மாதிரி இருக்கும். ஆசை யாரை விட்டது.
அதற்கடுத்த ஒரு வாரமும் தினத்தந்தியில் கொலை கொள்ளை செய்திகளை ஒன்று விடாமல் படிக்கத்தொடங்கினேன்.. ஒவ்வொரு நாளும் ஆச்சரியமாய் இருந்தது.. ஒரு நாளில் இவ்வளவு கொள்ளைகள் நடக்கின்றனவா?
ஒரு வாரத்தில் திருடர்களைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரிந்துவிடவில்லையென்றாலும், ஒன்று மட்டும் தெளிவானது.. ஒரு நாளில் ஏராளமான திருட்டுகள் நடக்கின்றன.. கண்டிப்பாக எங்கள் ஊரிலும் ஒரு திருடன் இருக்கவேண்டும் என்று. ஆனால், எப்படி அந்த திருடனை அடையாளம் காண்பது? எப்படிப்பாக்கறது..? வீட்டுக்குப் போயா? எதுவும் தெரியவில்லை.. இருந்தாலும், அடுத்த நாளே ஜெகனிடம் சொன்னேன்.. பக்கத்தூருக்கெல்லாம் போகாம உள்ளுரிலேயே திருடனைப்பார்க்கலாமென்று.. அவனுக்கு அந்த திட்டம் மிகவும் பிடித்துப்போனது எனக்கே பெரிய ஆச்சரியம். அதிலிருந்த விடைதெரியா கேள்விகளையும் சொன்னேன்.. அவன் சட்டை செய்ததாகவே தெரியவில்லை..
”அதுக்கெல்லாம் நம்மகிட்ட ஆள் இருக்கு.. எல்லாம் எம் செயல்” என்றபடி சீட்டியடித்தான்..
எரிச்சலாக வந்தது.. எப்படியோ, அவன் ஒரு பதிலுடன் வந்தால் சரி..
நான் நினைத்ததை விட சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டான் அவன்.
ஊர்க்கடைசியில் நெடுஞ்சாலைக்கு அருகே வீரனார் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு தாமரைக்குளம் உண்டு. அதில் இருப்பதெல்லம் அல்லியென்று ஊருக்கே தெரிந்தாலும் பெயர் மட்டும் தாமரைக்குளம்தான். அதற்குப்பின்னே ஒரு புறத்தில் அடர்த்தியாக மூங்கில் புதரும் கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரு பெரிய ஆலமரமும், தூங்கு மூஞ்சி மரமுமாக அடர்ந்து பந்தல்போட்டிருக்கும்.. அதற்கும் பின்னே போனால், உரக்கடை கோனாரின் வயல் தொடங்கிவிடும்..
அந்த வயலுக்கும் குளத்துக்கு பின்பான மரப்பந்தலுக்கும் இடையே ஒரு திட்டு தரிசு நிலம் உண்டு.. அங்கிருந்து பார்த்தால் நெடுஞ்சாலை தெளிவாகத் தெரியும். ஆனால் நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தால் ஆலமரம் வரைக்கும்தான் தெரியும். அந்த இடத்தில் இருந்தால், நமக்குத் தெரியாமல் யாரும் நெடுஞ்சாலை வழியே நம்மிடம் வரமுடியாது. இது போன்ற குணநலன்களால் அப்பகுதி மாதம் இருமுறை கள்ளு காய்ச்ச உகந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அவ்வகையில், இல்லாமல் அப்பகுதி சும்மா இருக்கும் நேரத்தில்தான் அங்கு திருடர்கள் வருவார்களென்றும் தங்களின் திருட்டுப்பொருட்களை பங்கு போட்டுக்கொள்வார்களென்றும், ஒரு நாள் ராத்திரி அங்கு போய் ஒளிந்திருந்தால் நிச்சயம் திருடனைப்பார்த்துவிடலாமென்றும் சொன்னான்.
கேட்பதற்கு தங்கமலரில் கதைபடிப்பது போலிருந்தாலும், எனக்கு உள்ளுர பயம் பரவியது. அந்த திருடர்கள் மாதிரி இவர்களும் கேள்வி கேட்டால் பதில்சொல்லிவிட்டு கொஞ்சம் நகையும் கொடுத்து அனுப்புவார்களா என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன்.
என்னதான் இருந்தாலும் இறங்கியாகிவிட்டது ஒரு நாள் ராத்திரிதானே. இதை மட்டும் தாண்டிட்டா, ஸ்கூலில் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், எங்களின் பிரதாபங்களை.. மற்ற பசங்களெல்லாம் வாயைப்பிளந்து கேட்பார்களென்பதே கொஞ்சமாய் போதையூட்டியது. இடம் தேர்வாகிவிட்டது. காலம், காலாண்டு விடுமுறையின் கடைசிநாளென நீண்ட கலந்தாய்வுக்குப்பின் முடிவுக்கு வந்தோம்.
அவ்வப்போது கனவுகளில் கழுத்தில் கர்சீப், பாரம்பரிமான கன்னத்து மச்சங்களுடன் திருடர்கள் வந்து பயமுறுத்திப்போயினர்.
காலாண்டுப்பரீட்சைக்குப் பிந்திய விடுறைகளை சிதைப்பதற்கென்றே சில ஆசிரியர்கள் இருப்பார்கள். அப்பரீட்சையில் வினாத்தாளாக வந்த அனைத்தையும் நோட்டுப்புத்தகத்தில் எழுதி விடுமுறை முடிந்து வருகையில் கொண்டு வரவேண்டும். அதை நான் எப்போதும் வெறுத்தாலும், அன்றிரவு நான் ஜெகன் வீட்டுக்குச்செல்ல அக்காரணம்தான் உதவியது.
ஜெகனின் அப்பா ஒரு டிரைவர். அவனுக்கு அம்மா கிடையாது. தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்யுமளவுக்கு வளர்ந்திருந்தான் அவன். அன்றிரவு அவன் அப்பாவும் ஊரிலில்லை. நான் போனதிலிருந்தே ஒரேயடியாக அறிவுரை மழை பொழியத்தொடங்கிவிட்டானவன்.
போகும் போது முகத்தில் ஒரு துணி கட்டிக்கொள்ளவேண்டும். செருப்பு போடக்கூடாது. சத்தம் போடக்கூடாது. இருவரும் கையில் ஒரு பூண்டு வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் பலவாய் பட்டியல் நீண்டது..
நள்ளிரவு நேரம் நெருங்க நெருங்க எனக்கு இதயத்துடிப்பு இரட்டிப்பாகி எகிற ஆரம்பித்தது.. குரல் கூட தெளிவாக வரவில்லை..
” ஜெகன்…”
”ம்ம்..”
“கண்டிப்பா போகணுமாடா.. நான் வேணா பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்குப் போயிடறேனே.. இன்னும் கொஸ்டின் பேப்பர் வேற எழுதல..”
”அடச்ச.. சும்மா கெட.. எத்தன தடவை சொல்றது.. இன்னைக்குப் போறோம்.. அவ்ளோதான்.. ”
”..”
”நீ வந்தா வா.. வராட்டி போ.. நான் இன்னைக்குப் போகத்தான் போறேன்..”
அப்படியே தப்பித்து ஓடிவிடலாம் என்று மனதுக்குள் ஒரு குரல் கேட்டாலும், ஒரு வேளை ஜெகன் மட்டும் தனியே சென்று திருடனைப்பார்த்துவிட்டால் அதற்கப்புறம் அவனை கையிலேயே பிடிக்கமுடியாது. அதற்கும் மேலாக, இது என்னோட ஐடியா.. அதுக்காகவாகது நான் போகணும் என்ற முடிவே நிலைத்துவிட்டது..
11 மணிவாக்கில் மெல்ல வீட்டிலிருந்து கிளம்பினோம்.. அமாவாசைக்கு வெகு பக்கத்தில் நிலவு..இப்பவோ அப்பவோ என்பது மாதிரி கொஞ்சமாய் விளிம்பு காட்டிக்கொண்டிருந்தது. தூரத்தில் சில இரவுப்பறவைகள் சத்தம்போட்டுக்கொண்டிருந்தன. முகத்தில் அந்த துணி வேறு மூச்சைத்திணறடித்தது.. அடுத்த தெரு மூலையில் சில நாய்கள் மிரண்டு துரத்த, அந்த முகமூடித்துணியை நல்ல பிள்ளைகளாக மடித்து கையில் வைத்துக்கொண்டோம்.
அது வரை நான் கேள்விப்பட்டிருந்த கொள்ளிவாய்ப்பிசாசுகள், மோகினிகள், கோட்டை வீரன் கதைகளெல்லாம் அசந்தர்ப்பமாக நினைவில் வந்து கலங்கடித்தன. பேசாமல் அவன் சொன்ன முதல் ஐடியாவுக்கு ஓகே சொல்லியிருக்கலாம் என்று பட்டது. எது நடந்தாலும் பகலிலாவது நடந்திருக்கும்.
கண்ணுக்கெட்டும் தூரத்தில் கோயில் வந்தபிறகுதான், அப்பகுதி தெருவிளக்குகளாலும் கைவிடப்ட்ட பகுதியென்று உணர்ந்தோம். அவனுக்குள்ளும் லேசாக பயம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவன் முன்னே செல்ல, மெல்ல தாமரைக்குளத்தை நெருங்கிவிட்டோம்..
ஏதாவது ஒரு வகையில் குளத்தை கடக்கவேண்டும். வலதுகரையோடு போனல் மூங்கில் புதரைத்தாண்டி அந்த திட்டுக்குப் போகவேண்டும்.. அது கொஞ்சம் தூரம்.. அதைவிட, இடதுகரையோடு போனல், ஆலமரத்தை தாண்டி அந்த திட்டுக்குப் போய்விடலாம்.. ஆனால், குறுக்கே கோனார் வயலுக்கு செல்லும் ஓடை வரும்.. அது குளத்துடன் சேரும் இடம் சதுப்பு நிலம் மாதிரி முட்டிவரை சேறாகிக்கிடக்கும்.
ஒரு வழியாக இடது கரையே என்று தீர்ப்பாகியது. அவன் முன்னே செல்ல, அவன் கையைப்பிடித்த படி பின்னே நடந்தேன்.. அவன் கை நடுங்குவது அப்பட்டமாய்த் தெரிந்தது..
அந்த சேற்றுப்பகுதிக்கு வந்தபின் ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியாக வைத்தபடி முன்னேறுகையில்தான் அது நடந்தது.
யாரோ என் காலை கயிற்றைக்கொண்டு இறுக்குவது போல் இருந்தது.. வீல் என்ற ஒரு அலறலுடன் சேற்றில் விழுந்ததில், கழுத்துக்குக் கீழ் மொத்தமாக மூழ்கி சேற்றுக்குள் துளாவிக்கொண்டிருந்தேன். குத்துமதிப்பாக ஒரு திசையிலிருந்து ஜெகன் கத்துவது கேட்டது. என்னால் பதிலுக்கு கூட வாய்திறக்கமுடியாமல், தொண்டைக்குள் அடைப்பது போலிருந்தது. மறக்கமுடியாத அந்த பதினைந்து வினாடி களேபரத்தில், என் கால் கட்டு கொஞ்சமாய் நழுவி விழ, அடித்துபிடித்துக்கொண்டு கரையேறியபோது மொத்தமாக சேற்றில் முழுகி, சொட்டச் சொட்ட, நான் இந்நேரம் அழத்தொடங்கியிருந்தேன்..
அவனுக்குள் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் காலியாகிவிட்டது..
”டேய்.. திரும்பிடலாம்டா”
விசும்பல்களுக்கிடையே தலையாட்டிடேன்.. அவன் பார்த்தானா தெரியவில்லை..
அதே வழியில் திரும்ப வர இருவருக்குமே தைரியமில்லை. பேசாமல், குளத்தைச்சுற்றிக்கொண்டு வலதுகரையுடன் வெளியேறிவிடலாமென்று முன்னேறினோம்..
அந்த ஆலமரத்தின் கீழ் வந்தபோதுதான் அதை கவனித்தேன்.. எங்களுக்கு நேரெதிரே இருபதடிக்கும் குறைவான தொலையில், இருட்டில், கொஞ்சம் பெரிய சைஸில் சப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி ஒன்று காற்றில் அலைந்துகொண்டிருந்தது. எங்களை நோக்கி வருவது போல் தோன்றியது. அதே நேரம் அவனும் அதைப்பார்த்திருக்க வேண்டும்.
”ஓட்றா” என்றொரு குரல் மட்டும் தான் கேட்டது.. அவன் எந்தப்பக்கமாய் ஓடினானென்றெல்லாம் பார்க்க எனக்கு அவகாசம் இல்லை. ஏதோ ஒரு வழி.. தொலைவில் தெரிந்த தெருவிளக்கை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தேன்.
அதற்கடுத்த நாள் நான் ஸ்கூலுக்குச் செல்ல வில்லை.
Monday, November 10, 2008
ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரின் கதை
மனதுக்குள் சொல்லவொனதாத ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வந்தது.. அலுவலகத்தின் ஒரு மூலையிலமைந்த சிறிய டிஸ்கஷன் ரூம் அது. போதுமான இருக்கைகள் இருந்த போதிலும் 6 பேரும் நின்று கொண்டிருந்தோம்.
அதோ முன்சரிந்த தொப்பையம் வழுக்கைத்தலையுமாக என்னைப்பார்த்து குரைத்துக் கொண்டிருக்கும் ராஜிவ் தான் என் மேனேஜர். எங்களின் சந்தோஷத்தை கெடுப்பதற்கென்றே டெல்லியிலிருந்து வந்திருக்கும் 100 கிலோ அவஸ்தை. இன்று நான் டெலிவரி கொடுக்வேண்டிய Module-ல் இன்னும் மூன்று P1 issues. இரவுக்குள் முடிக்கவேண்டுமாம். அதற்குத்தான் இத்தனை அலம்பல்.
அவருக்கு குறைந்தது 40 வயதிருக்குமா? இருக்கலாம். கொஞ்சம் குள்ளம்தான். நல்லா புளி மூட்டை மாதிரி ஒரு தொப்பை. வழுக்கைத்தலையில் இரண்டு காதுகளுக்கு மேல் மட்டும் புதர் மண்டிய மாதிரி முடிக்கற்றைகள். அதில் ஒரு புற முடியை மட்டும் நீளமாக வளர்த்து மறுபுறம் நோக்கி படிய சீவி, வழுக்கையை மறைக்க முயற்சித்திருப்பார்.
மீட்டிங் முடிந்து வெளியில் வந்தவுடன், சீட்டுக்குப் பாகவே வெட்கமாய் இருந்தது.. இப்போது சீட்டுக்குப்போனால் துக்கம் விசாரிக்கிற மாதிரி ஆனந்த் கேட்கும் கேள்விகளுக்கு இவரே தேவலாம் என்று தோன்றும்.
மாடிக்குப்போய் ஒரு காபி குடிக்கலாம்.
“நேத்து ராத்திரி நைட் அவுட் டா.. 3 மணிநேரம் Dorm போயிட்டு, திரும்பிவந்து வேலை பாத்துகிட்டுருக்கேன்.. அவன் என்னமோ பெரிய இவன் மாதிரி கத்தறாண்டா..என்கிட்ட தனியாவாவது சொல்லியிருக்கலாம்.. எல்லாரும் இருந்தாங்கடா. பூஜா வேற இருந்தாடா.."
(பூஜா என்பது, சுமாராக இல்லாவிட்டாலும் கொஞ்சம் சூப்பராக இருக்கும் நார்த்தி பிகர் எனக் கொள்க)
“என்னடா பண்றது.. எல்லா மேனேஜரும் ஒரே மாதிரிதான் இருக்காங்க.. எனக்கும் ஒருத்தன் வந்து வாச்சிருக்கான்.. எங்கிருந்துதான் வர்ரானுங்களோ.." காஃபி டேபிளில் எழில் இருந்தான்.
“FS மட்டும் ஒழுங்கா இருந்திருந்ததா இதெல்லாம் எப்பவோ முடிஞ்சிருக்குன்டா.. அங்க போய் பம்ம வேண்டியது.."
“…"
“நாம பண்ற வேலைக்கு என்ன மதிப்பு இருக்கு சொல்லு?"
மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு மூலையில் அழவேண்டும் போல் தோன்றியது. சே.. சே.. இது ஆத்திரம் என்று தேற்றிக்கொண்டேன்.
உடம்புக்குள் போன் காபின் கொஞ்சமாக என் மனநிலையை மாற்றியிருந்தது. ஆனாலும் என் மேனேஜர் கமண்டலமும் நீரும் இல்லாமல் தொடர்ச்சியாக என்னிடமிருந்து சாபங்களைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
எங்களின் US டீமுக்கு காலைக்குள் ரிலீஸ் செய்ய வேண்டும். நம்மூர் கணக்கில் நள்ளிரவு 12.30க்குள்.
அரக்க பரக்க முடித்து ஒரு வழியாக ரிலீஸ் செய்த பின்தான் மூச்சே திரும்பவும் வந்தது. டைம் என்ட்ரி போட்டு இன்ன பிற சடங்குகளை எல்லாம் முடித்து Log Off செய்கையில்
“ஹே பாலா.." என்றொரு குரல்.
நிமிர்ந்தால் என் மேனேஜர்.
“கம் ஆன் மேன்.. என் கார்லையே ட்ராப் பண்ணிடறேன்.. வா.."
“இட்ஸ் ஓகே ராஜிவ்.. நோ பிராப்ளம்.. நான் கம்பெனி கேப்-லையே போயிக்கறேன்.."
“அட சும்மா வாப்பா.. நானும் அப்படித்தான் போறேன்.."
எனக்கும் சரியென்று பட்டது. நீங்கள் செய்தது தவறுன்னு அவருகிட்ட நேரடியாவே சொல்லிடனும்.. இதுதான் சான்ஸ்..
அலுவலகத்தின் கீழ் நான் காத்துக்கொண்டிருந்தேன். தன் வெர்னாவை எடுத்துக்கொண்டு வந்தார். கடந்த மாதம்மான் வாங்கிய கார். பளபளப்பாய் மின்னிது.. எல்லாம் எங்கள புழிஞ்சு எடுகுற காசுதான.. மின்னாம..?
சாலை வெறிச்சோடிக்கிடந்ததற்கு மிக மெதுவாகவே ஓட்டினார். ஏதோ ஒரு இந்திப்பாடலைப்போட்டவர் திடீரென ஞாபகம் வந்தவராய்,
“Oh. I am sorry" என்றபடி FM-ற்குத் தாவினார்..
பீவர் ஒன் ஓ போர் என அர்த்த ராத்திரியிலும் கத்திக்கொண்டிருந்தனர். சூரியனின் இனிய இரவு மாதிரி ஒரு நிகழ்ச்சி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என ஒரு நப்பாசை தோன்றி மறைந்தது.
திடீரென என் பக்கம் திரும்பி
“என் மேல உனக்கு கோவம்தான?" என்றார்..
நான் இந்த திடீர்த்தாக்குதலை எதிர்பார்க்கவில்லை..
சுதாரித்துக்கொண்டு,
“கோவம்னு இல்ல ராஜிவ்.. கொஞ்சம் கஷ்டமா இருந்தது.. ம்ம்..என்னாதான் இருந்தாலும், கடைசியில ப்ராஜெக்ட்தான முக்கியம்.." மண்ணாங்கட்டி ப்ராஜெக்ட்
“தட்ஸ் குட் மேன்.. என்ன பண்ண.. சில நேரங்களில் கடுமையா நடந்துக்க வேண்டியிருக்கு.. என் வேலை அப்படி.. "
FM-ஐ அணைத்துவிட்டு கொஞ்ச நேரம் மௌனமாய் எங்கள் பயணம் தொடர்ந்தது.
ரிங்ரோட்டை அடைந்தாகிவிட்டது.. இன்னும் 15 நிமிடங்களில் வீட்டுக்குப் போய்விடலாம். இப்போதே, படுக்கையில் சுகமாய் உறங்குவதைப்போல பிம்பம் கண்ணில் நிழலாடத்தொடங்கியது.
"Work is work.Life is life. ரெண்டையும் கொழப்பிக்காத.."
ஏன் என்னிடம் இதைச் சொல்கிறார். திரும்பவும் எரிச்சலாக வந்தது. இரண்டு நாட்களுக்கான தூக்கம் வேறு கண்களில் தேங்கிநின்று தலைவலியைத்தந்தது.
டேஷ்போர்ட் மீது சிலபல சாக்லேட்டுகள் சிதறிக்கிடந்தன. ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் நீட்டிவிட்டு அடுத்ததை மிக சாவகாசமாக இரண்டு கைகளாளும் பிரித்தவர், என் பதட்டத்தைப்பார்த்து விட்டு, கவலைவேண்டாம் என்பதைப்போல் சைகை செய்தார்.
“இது நான் போனதடவை அட்லாண்டா போயிருந்தப்போ வாங்கிட்டு வந்தது. “
எனக்கென்ன?
“I love this choco" உடன் அவரின் வாக்கியம் தடைப்பட்டது.
பாதிகடித்த அந்த சாக்லேட் தன் வாக்கில் கீழே விழுந்தது.. இவர் அவசரமாக கியர்மாற்றி, சாலையோரம் வண்டியை நிறுத்தினார்.
“என்னாச்சு ராஜிவ்?" என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே எனக்கு புரிந்து விட்டது.
அவரால் எதுவும் பேசமுடியும் என்று தோன்றவில்லை. தூக்கமுடியாத பளுவை தூக்குபவர் போலிருந்தது அவரது முகபாவம். ஒரு மாதிரி நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சீட்டில் சாய்ந்துவிட்டார். திடீரென்று அவர் முகம் முழுவதும் முத்து முத்தாக வியர்த்திருந்தது. கண்கள் முக்கால்வாசி மூடியநிலையில் மேலே எங்கேயோ சொருகியிருந்தன.
ஒரு கணம் எல்லாமே மறந்து, துடைத்து வைத்த கரும்பலைகை மாதிரி ஒரு உணர்வு.
நெஞ்சில் காதைவைத்துப்பார்த்தேன் நாடி இருப்பது போலவும் இல்லாதது போலவும் பாவ்லா காட்டி பயமுறுத்தியது.
முதலுதவி பற்றியெல்லாம் விவரம் பத்தாது எனக்கு.. ஒரு சில திரைப்படங்களிலிருந்து வந்த அறிவு மட்டும் அவர் நெஞ்சை அழுத்தச் சொன்னது.. அதுவும் அவ்வளவு எளிதாக இல்லை. என்னால் ஒரு இன்ச் கூட அழுத்தமுடியவில்லை. குத்தலாமா? குத்தினால் வலிக்குமா? வலித்தால் எழுந்து கொண்டு சண்டைக்கு வருவார் போன்ற அபத்தமான கற்பனைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு ஓங்கி குத்தினேன்.. எந்தவித சலனமும் இல்லை..
முருகா.. இரண்டாம் முறை. லேசாய் ஒரே ஒரு இருமல்.. மூன்றாம் குத்திற்கு ஒரு சிறிய அதிர்வு கொடுத்து முன்புறம் ஸ்டியரிங்கில் சாய்ந்துவிட்டார்.
யாரிடமாவது உதவிகேட்கலாமென்றால், நாங்கள் இருப்பது மகாதேவ்புராவுக்கும் கேஆர் புரத்துக்கும் இடையில் ஒரு பொட்டைக்காடு. கண்ணுக்கெட்டியதுரம் வரையில் ஒரு வீடும் கிடையாது.
உடனடியாக ஆனந்த் நம்பருக்கு கால்செய்தேன். புல் ரிங் போய் கட்டாகியது. என் அவசரம் புரியாமல் துங்கிக்கொண்டிருக்கிறான்.
கடவுளே.. என் கூட வரும்போதுதான் இப்படி ஆகணுமா..? அவருடன் இப்போது வந்ததில், இப்போது என்ன நடந்தாலும், நான்தான் தார்மீக பொறுப்பா..? எல்லாம் என் நேரம்.. இதற்குள், இந்த நவம்பர் மாத 15 டிகிரி பெங்களுர் இரவிலும் அவரை விட அதிமாக எனக்கு வேர்த்திருந்தது.
என்றோ சேமித்த ஜஸ்ட் டயல் நம்பர் நினைவுக்கு வந்தது. அவசரமாக போன்செய்து, மணிபால் நம்பர் நம்பருக்கு பேசினேன்.
அந்த நேரத்திலும் புத்துணர்ச்சியான ஒரு பெண்குரல். கேட்கவே கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.
“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார்.. இன்னும் 10 நிமிசத்தில அங்க வந்திடறோம். நீங்க அதே ரோட்ல இன்னும் ஒரு கிலோமீட்டர் போனா, விஜய் ஹாஸ்பிடல்ஸ் வரும். உங்களால முடிஞ்சா நீங்களே சீக்கிரமா அங்க போயிடுங்க சார்.. ஒவ்வொரு நிமிசமும் ரொம்ப முக்கியம்" என்று வயிற்றில் புளியைக்கரைத்தபடி போனை வைத்தார்.
இதற்குள் 5 நிமிடங்கள் கடந்திருந்தன.
டேஷ் போர்டிலிருந்த ஒரு சாக்லேட் கீழே விழுகையில்தான் கவனித்தேன். இன்ஜின் இன்னும் உறுமிக்கொண்டிருந்தது.
நானா.. சான்சே இல்லை... வாழ்க்கையிலேயே இதுவரை ஒருமுறைதான் கார் ஓட்டியிருக்கிறேன்.. அதுவும் 4 வருசம் முன்னாடி லைசென்ஸ் எடுக்கறதுக்காக ஓட்டுனது. எது கிளட்ச் எது பிரேக்குன்னே மறந்து போச்சு.. என்னால முடியாதுபா.
அதனால என்ன.. ஒரே ஒரு கிலோமீட்டர்தான். எப்படியாவது சமாளிச்சு உருட்டிகிட்டாவது போயிடலாம்.. முயற்சி பண்ணலாம் தப்பில்லை. உயிர்ப்பிரச்சனை என ஏதோ ஒரு அபிமானம் பேசியது.
என்னவானாலும் சரியென்று அபிமானம் பக்கம் சாய்ந்தேன்.
முதல் வேலை ஸ்டியரிங்கில் சாய்ந்திருக்கும் அவரை அப்புறப்படுத்துவது. அவரை நிமிர்த்தி உட்கார வைப்பதற்கே ஒரு குதிரை திறன் தேவைப்படும் போல் தோன்றியது. அவரை அப்படியே பக்கத்து சீட்டுக்குத் தள்ளி விட்டதில் ஒரு மாதிரி கோணலாக படுத்துக்கொண்டார். இன்னும் கால் கிளச் மீது இருந்தது.
அதையும் அப்புறப்படுத்தி, முதல் சில நுறு மீட்டர்கள் தட்டுத்தடுமாறி ஓட்டியபின்தான் நம்பிக்கையே வந்தது. அடுத்த மூன்றாவது நிமிடம் ஆஸ்பத்திரியில்.
அவசரமாக ஓடிச்சென்று ரிசப்சனில் சொன்னது மட்டும்தான் என்வேலை.
“அவரு உங்களுக்கு என்ன வேணும்"
“My Uncle."
“இந்த Form-ல கையெழுத்து போடுங்க.."
நான் போடும் முன்பாகவே அவர் ஐசியு-வினுள் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
என்ன செய்வதென்று தெரியாமல் தேமே என்று வெளியில் நின்றுகொண்டிருந்தேன். இதற்குள் நூறு முறையாவது அவர் பிழைக்கவேண்டுமென்று வேண்டியிருப்பேன். இன்று மதியம்தான் “இவனுக்கு ஏதாவது ஆவனும்" என்று மனதார வேண்டிக்கொண்ட ஒருவரின் உயிருக்காக இப்போது மன்றாடிக்கொண்டிருக்கிறேன். ம்ம்ம்.. விசித்திரமாய் இருந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் எண்ணங்கள் கடந்துகொண்டிருந்தன.
அப்போதுதான் கால் வந்தது.
“என்னடா மாப்ள.. என்னாச்சுடா.. இந்த நேரத்தில கால் பண்ணியிருக்க.. ஏதாவது பிரச்சனையாடா..?"
அடுத்த அரைமணியில் என் கூட இருந்தான் ஆனந்த். கொஞ்சம் தெம்பாக இருந்தது.
“அவர் வீட்டுக்கு சொல்லிட்டியாடா?"
“இன்னும் இல்லடா. அவர் வீட்டு நம்பர் இல்ல என்கிட்ட.."
“அவர் கார்ல ஏதாவது இருக்கும்.. வா போய்ப்பாக்கலாம்.."
அவரை தள்ளிவிட்டதில் விழுந்திருக்க வேண்டும்.. அவரது பிளாக்பெர்ரி காரினுள்ளேயே கிடந்தது.
அதன்பின் அவர் வீட்டுக்குச்சொல்லி, அவர்களும் வந்து, அவர் ஒரு வாரம் மருத்துவமனையிலும் இரண்டு வாரங்கள் மருத்துவ விடுப்பிலும் இருந்து, 3 வது வாரம்தான் அலுவலகம் திரும்பினார்.
பணிக்குத்திரும்பிய முதல்நாளே, அவரே வந்து
"We will go for Coffee " என்றார்.
"Sure" என்றபடி பின் தொடர்ந்தேன்.
“How are you now?"
“I am alright now. No worries" என்றபடி காஃபியை பருகத்தொடங்கினார்.
காஃபிக்குப் பிறகு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம்.
“என்னதான் இருந்தாலும் நான் அன்னைக்கு உன்ன அப்படி பேசியிருக்கக்கூடாதுல்ல.."
"Never mind Rajiv..Work is work. Life is life" என்றேன்..
தனியே வந்து சிரிக்கவேண்டும் போல் தோன்றியது.
--
டிஸ்கி:1: இந்த ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் செந்தழல் ரவியின் ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது (lol)
டிஸ்கி:2: ரவி மன்னிக்க :o)
Monday, October 13, 2008
புறாக்கூடு
தீப்பெட்டி தீப்பெட்டியான ஒரு குடியிருப்பு கோபுரத்தின் உச்சியில் எங்கள் வீடு.. வீட்டின் உச்சியில் வெண்டிலேட்டர் அந்தப் புறாவின் போர்சன். சந்தோசமான போர்சன் அது. மாலை வேளைகளில் மட்டும் ஆரவாரம் கேட்கும்.. காலைக்குளிரில் லேசாக உடலையும் கண்களையும் குறுக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும். சில நேரங்களில் விருந்தினர்களும் வருவதுண்டு.
அவ்வப்போது வீட்டுக்குள் இலக்கின்றி அலையும் உதிர்ந்த இறுககள்தான் அப்புறாவின் இருப்பை சுயசரிதமாய் காற்றில் எழுதிக்கொண்டிருக்கும்..
எனக்கும் அம்மாவுக்கும், சண்டையிட வேறு காரணங்கள் இல்லாத போது, இருக்கவே இருக்கிறது இந்த புறாக்கூடு.. அம்மா, அப்புறாவை விரட்டச் சொல்கையிலெல்லாம் என்னவோ போலிருக்கும். நாங்கள்தான் அப்புறாவின் வீட்டை ஆக்கிரமித்திருப்பதாய் ஒரு உணர்வு எழுவதுண்டு.
“அது பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டு போதும்மா..”
“அடப்போடா.. வீடெல்லாம் குப்பையாவறது எனக்குத்தான் தெரியும். ரெண்டு தடவை வெரட்டி விட்டா மூணாவது தடவ தானா போயிடப்போது”
என்பதுதான் அம்மாவின் நிரந்தர வாதம்.
நிரந்தரமாய் இல்லாவிட்டாலும், அவ்வப்போது ஒரு பதில் என்னிடம் தாயாராய் இருப்பதால், இந்த பேச்சுவார்த்தைக்கு என்றுமே முடிவு எட்டியதில்லை.
சில மாலை வேளைகளில் ரொம்ப போரடிக்கும் போது, அந்த புறாக்களின் சம்பாசனைகளை மொழிபெர்த்துக்கொண்டிருப்பேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ரொம்ப சுவாரசியமான வேலையது.
போன கோடையில் சித்தப்பா, குடும்பம் சகிதமாக வீட்டுக்கு வந்தபோது, ராகுல் கண்ணில் முதலில் பட்டது, அந்த புறாதான்..
“ஐ.. புறாப்பா..”
அவனுக்கு ஒரே கொண்டாட்டம்தான். புறா நிக்குது, புறா திரும்புது, புறா பறக்குது என்கிற ரீதியில் அவனின் நேரடி வர்ணணைகள் தொடர்ந்து கொண்டிருக்கும். அதற்கடுத்த நாள், இன்னும் கொஞ்சம் விபரீதமாய்ப் போய், புறாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வந்து நின்றது.
கோரிக்கை சித்தி சித்தப்பா அம்மா வழியாக என் தலையிலேயே வந்து விடிந்தது.
ஒரு வகையில் கொஞ்சம் விசித்திரமாகக் கூட இருந்தது. இத்தனை நாளாய் இந்த எண்ணம் எனக்கு வரவே இல்லையே என்று.
சில நேரங்களில் வராண்டாவின் கைப்பிடிச்சுவரில் அமர்ந்திருக்கும். அப்போதெல்லாம் தூரத்தில் நின்று ரசிப்பதோடு சரி. நெருங்கவேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லை.
இப்போது புதிதாக சந்தேகம் வேறு. நெருங்கினால் ஒரு வேளை பறந்து விடுமோ..
சித்தப்பா ஊரில் இருந்தவரை புறா வராண்டா பக்கமே வராமல் ஏமாற்றிவிட, சித்தப்பா வழியனுப்பும் படலம், ராகுலின் சிணுங்கள்களும், அடுத்த வருடம் இதே புறாவுடன் போட்டோ எடுத்துத் தரப்படும் ரீதியிலான சித்தியின் சமாதனங்களினூடாகவும் முடிவுக்கு வந்தது.
ஆனால் அந்த ஆவல் எனக்குத் தொற்றிக்கொண்டது.
ஒவ்வொரு மாலையும் கவனிக்க ஆரம்பித்தேன்.
ஒரு நாள், கண்டுவிட்டேன் புறாவை.
தடாலடியாக நெருங்குவது சமயோசிதமாகப் படவில்லை. வேறு திசையில் நோக்கியபடி ஒவ்வொரு அடியாக பின்பக்கமாக மிக மெதுவாக எடுத்து வைத்தபடி நெருங்கினேன். என் இதயத்துடிப்பு எனக்குக் கேட்கத்தொடங்கியிருந்தது. அந்தப் புறவோ நடுவில் என்னை ஒரு முறை தலையைத்திருப்பிப் பார்த்ததைத் தவிர வேறெதும் பெரிதாகச் செய்துவிடவில்லை.
எனக்கும் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தது. ஏறக்குறைய ஒரு அடி வட்டத்துக்குள் வந்துவிட்டேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது. இவனால் ஆபத்தில்லை என்று எண்ணியிருக்கக் கூடும்.
அடச்ச..அந்த மில்லியன் யுரோ கேள்வி கொஞ்சம் தாமதமாகத்தான் நினைவுக்கு வந்தது.
‘இப்போ போட்டோ எப்படி எடுக்கறது?’
நெருங்கின மாதிரியே, மிக மெல்லமாக விலகி வந்து, புறாவின் பார்வைப்புலத்தைக்கடந்ததும் ஒரே ஓட்டமாக அடுக்களைக்குச் சென்றேன்.
“அம்மா. அம்மா. இங்க வந்து பாரும்மா..”
“…”
“அந்தப்புறா அப்படியே இருக்குமா.. பக்க்க்க்கத்தில போனாக் கூட..”
அம்மா பெரிய எதிர்வினையெதுவும் கொடுக்கவில்லை. அம்மாவுக்கு அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பாத்திரத்தின் உட்பொருட்கள்தான் முக்கியமாகப் பட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அடம் பிடித்து அம்மா கையில் கேமராவைத்திணித்து, சன்னலின் பின்னே நிறுத்திவிட்டு மெல்ல மெல்ல நெருங்குகையில் சொல்லிவைத்தாற்போல பறந்து போனது.
அமைதியாக வந்து கையில் கேமராவைக் கொடுத்துவிட்டு அடுக்களைக்குப் போனார்.
அதன்பின் புறா, எங்கள் சம்பாசனைகளிலும் நினைவுகளிலும் அடிக்கடி வந்துபோகாவிட்டாலும்,அவ்வப்போது வந்து போனது.
நான் ஓய்வு நேரங்களில் புறாக்களைப் பற்றி படிக்கத்தொடங்கியிருந்தேன். சேனல்களில் அலைகயில் நேட் ஜியோவில் புறாவைக் கண்டால், விடுவதில்லை. அம்மாவும் இப்போதெல்லாம் எதுவும் சொல்வதில்லை.
ஒரு நாள் எதேச்சையாகத் திரும்புகையில்,
கண்டுவிட்டேன் அந்தப்புறாவை மீண்டும் வராண்டாவில்.
மிக சன்னமாக,
“அம்மா”
“என்னடா”
“அந்தப்புறா”
“சரி”
“வராண்டால இருக்குமா.. போட்டோ எடுக்கலாம்மா. இன்னும் ஒரே ஒரு தடவம்மா..”
இரு வினாடிகள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்த பின்,
“சரி. போய் கேமராவை எடுத்துட்டு வா..”
இப்போதே மனதுக்குள் ஆடத்தொடங்கியிருந்தேன் நான். கேமராவை எடுத்து வருகையில் என்ன தோன்றியதோ,
“அம்மா. நீ போய் நில்லுமா.. நான் எடுக்கறேன்..”
முதலில் அம்மாவுக்குப் புரியவில்லை..
பின், புடவைத்தலைப்பைச் சரிசெய்தபடியே, வராண்டாவுக்குப் போனார்.
நான் போன மாதிரி, மிலிட்டரி ஸ்டைல் பதுங்கிப்போற பிசினெஸ்லாம் இல்லை. நிதானமாக மிக தீர்கமாக, அப்புறாவைப் பார்த்தபடியே, நெடுங்காலம் பழகிய நண்பனை வரவேற்கும் தொனியில் சென்றார்.
“இப்படிப் போகாதம்மா” என்று எச்சரிக்க நினைத்தேன்.
அதற்குள் அம்மா. அப்புறாவிற்கு மிக அருகில்.
“கடவுளே, போட்டோ எடுக்கற வரை பறந்துட கூடா”தென்று வேண்டிய படியே போட்டோவும் எடுத்து, அடுத்த வாரமே பிரிண்டும் போட்டு, அதற்கேற்ப அழகானதொரு ப்ரேமும் வாங்கி வீட்டில் டேபிள் மீது வைத்தாகிவிட்டது.
அம்மாவுக்கு சந்தோசமாய் இரந்திருக்க வேண்டும். அவ்வப்போது, காலைச்சமயலுக்குப் பிந்திய ஓய்வுநேரங்களில், அந்தப்புகைப்படத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருப்பார்.
எனக்கும் சந்தோசமாய் இருந்தது.
….
அன்றொரு நாள், ரொம்பநேரம் கத்திக்கொண்டிருந்தது. அறைக்கு வந்து பார்த்தபோது ரொம்ப காயம்பட்டு அலங்கோலமாய் இருந்தது. ஏதோ ஒரு பெரிய பறவை தாக்கியிருக்கவேண்டும்.
படபடவென்று இறகுகளை அடித்துக்கொண்டு அரற்றுவதைப்போலிருந்தது. அதன் கூட்டிலிருந்து சிறு சிறு குச்சிகளும் சில குப்பைகளும் காற்றில் அறைமுழுவதும் பரவுவதை வேடிக்கைப் பார்ப்பதைத்தவிர வேறெதும் எங்களால் செய்யமுடியவில்லை.
கொஞ்ச நேரத்துக்குப் பின் எங்கேயோ பறந்து போனது. அதன் பின் திரும்பவரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அம்மா எதுவும் சொல்லாமல், அனைத்துக் குப்பைகளையம் கூட்டி அள்ளினார்.
மாலை நான் மட்டும் அமர்ந்து அந்த வெண்டிலேட்டரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
புகைப்படத்தில் அம்மாவுடன் சேர்ந்து அந்த புறாவும் சிரிப்பதைப் போல் கற்பனை தோன்றியது.
சுயசரிதத்தின் கடைசி அத்தியாயத்தை காற்றில் எழுதியபடி தரையை வந்தடைந்தது அந்த கடைசிச் சிறகு.
கொஞ்ச நேரம் ஆத்மாநாமை எடுத்துவைத்தேன், வானம் பார்த்தேன், இசையில அளைந்தேன்... எதிலும் மனம் செல்லவில்லை.
இரவு அறையைக் கூட்டியபடி, சாப்பிட வரும்படி அம்மா அழைத்தபோதும், சுத்தமாக பசிக்கவில்லை.
தொண்டைக்கடியில் துக்கமோ, துக்கம் போன்ற ஏதோ ஒன்றோ அடைத்துக்கொண்டு அவஸ்தைப்படுத்தியது. எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தேன்.
கைகழுவ எழுகையில்தான் கவனித்தேன்.
அந்தச் கடைசிச் சிறகு அங்கேயே இருந்தது.
திரும்பி அம்மாவைப் பார்த்தேன்.
தலையைக் கோதியபடியே சொன்னார்,
“ரொம்ப நேரம் கண்முழிக்காதப்பா… போய்ப் படு..”
Sunday, March 30, 2008
கூண்டுக்கிளிகள்

எங்கோ நினைவுகளின் ஆழத்திலிருந்து நினைவுக்கு வந்தது டோங்கு மாமாவின் முகம். எப்போது அவரை நினைத்தாலும் ஒரு ராஜ அலங்காரத்துடன், தலையில் கிரீடம் கையில்செங்கோல் சகிதமாக டோங்கு ராஜாவாகத்தான் எண்ணத்தோன்றுகிறது.
ஏன் இப்படி? ஒரு வேளை அவரின் சிங்கங்களால் இருக்கலாம்.
டோங்கு மாமா கதை சொல்ல ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். காவிரிக் கரையோரம் ஒரு திட்டுப் பிள்ளையார் உண்டு. திருட்டுப் பிள்ளையார். பல வருடங்களுக்கு முன், எவனோ ஒருவன் அரச மரத்தடியில் சிவனே என்று இருந்த பிள்ளையாரை திருடிக்கொண்டு போய் தன் வீட்டுக் கிணற்றி்ல் போட்டுவிட்டான். எப்படியோ, கண்டுபிடித்து பிள்ளையாரை கரையேற்றுகையில், ஏதோ தோஷநிவர்த்தி அது இதுவென கதை சொல்லி தப்பித்துவிட்டான். ஆனால், மாட்டிக் கொண்டார் அந்த பிள்ளையார். அன்றிலிருந்து திருட்டுப் பிள்ளையார் ஆகி, இன்று திட்டுப் பிள்ளையாராய் வந்து நிற்கிறார்.
திட்டுப் பிள்ளையார் ஒருமுறை காணாமல் போனதால், ஊர் பெரிசுகளெல்லாம் ஒன்று கூடி சின்னதாய் ஒரு கோயில் கட்டி அதில்,...
சரி கதைக்கு வருவோம்.. அந்த கோயிலின் முன்பு அரசமரத்தடியில் வட்டமாய் சிமெண்டு பெஞ்சு மாதிரியான ஒரு அமைப்பு இருக்கும்..
அதுதான் டோங்கு மாமாவின் சிம்மாசனம்..
மாலை நேரம் வந்தால், ஊரின் அனைத்து அரை டிராயர்களும் ரெட்டை ஜடைகளும் அரசவைக்கு வந்து விடுவர்..
அவரின் கதைசொல்லும் உத்தியே, அதன் கதையல்லாத தன்மைதான்.
ஒவ்வொருவரராக ஏதாவது கேள்விகள் கேட்பார்.. பதில்களை என்றும் எதிர்பார்த்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு அட்டண்டன்ஸ் மாதிரி.. சில கேள்விகளுக்கு அவரே பதிலும் சொல்லுவார். இடையில், நாங்கள் கண்டுபிடிக்கமுடியா ஏதோ ஒரு புள்ளியில் ஒரு கதை தொடங்கி இருக்கும்.
இத்தனை வருடங்களுக்குப் பின் அவரின் சிம்மாசனத்தில் அமர்ந்து, கதை சொல்வதாய் நினைத்துப் பார்க்கிறேன். சில டஜன் சின்னதுகள், லேசாக வாயைப் பிளந்தபடி ஆச்சரியம் மிளிரும் கண்களுடன் என்னையே பார்ப்பதாய் எண்ணுகையில் சிரிப்புதான் வருகிறது. எப்படி கொஞ்சம் கூட சிரிக்காமல் அவரால் கதைசொல்ல முடிந்ததோ.
பெரும்பாலும் வட இந்தியாவில்தான் கேம்ப் இருக்கும். வருடா வருடம் மழைக்காலங்களில் ஊருக்கு வருவார். அரிதான சில தருணங்களில் கோடையிலும்.
நான்தான் அவருக்கு கிரி பாட்டி கடையிலிருந்து காலைக்கு இட்டலிகள் வாங்கி வருவேன். கொடுக்கும் போதே தெரிந்து விடும். அவர் கண்களில் ஒரு குறும்பு.ஒன்று சினிமாக்கு வர்ரியாடா? அல்லது
"மாப்ளே..ஆத்துக்கு வர்ரியாடா..?"
அவ்வளவுதான் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி, அப்பாவிடம் அழுது அடம் பிடித்து புறப்படுகையில் அம்மா வாசல் வரை வந்து,
என்றபடி சைக்கிளை எடுத்தால்,
குளித்தவுடன் காட்டாமணக்கு குச்சிகளை ஒடித்துக் கொண்டு சுற்றிலுமிருக்கும் மானசீக சிங்கங்களை அடக்கிக் காட்டுவார். ஒரு பேட்டனின் லாவகத்துடன் அவர் சுழற்றுவதிலேயே ஒரு தனி வசீகரம் இருக்கும். சில பல குறிப்புகளும் சொல்லுவார். நானும் கேட்டுக்கொள்வேன்.
அன்றும் அப்படித்தான், ஜலக்கிரீடைக்குப் பின் திட்டுப் பிள்ளையார் மேட்டில் அரசமரத்தடியில் அமர்ந்தோம். சிலுசிலுவென்ற காற்று இதமாக காது குடைந்தது.
சர்க்கஸிற்கெல்லாம் இப்போது யாருமே வருவதில்லையாம். அதனால் அவர்களின் சர்க்கஸை மூடப்போகிறார்களாம். குனிந்து கொண்டே சொன்னார். மாமா இப்படி பேசியதே இல்லை. என்னவோ போலிருந்தது.
அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்னிடம்? ஆறுதலா.எப்படி ஆறுதல் சொல்வது.. அதற்கெல்லாம் வயசு பத்தாது எனக்கு அப்போது.
"மாமா, பேசாம சிங்கம் புலியெல்லாம் இங்க கூப்புட்டு வந்துடுங்க மாமா.. நாம இங்க சர்க்கஸ் போட்டுறலாம்.."
சில வினாடிகள் தாமதத்திற்குப்பின்,
கொஞ்சநேரம் ஒரு கனத்த மெளனம் நிலவியது.
"மாப்ளே, கூண்டுக்குள்ள போனது பயமாத் தெரியலடா.. கூண்ட விட்டு வெளிய வற்றத்துக்குத்தாண்டா பயமா இருக்கு.."
என்றோ அவர் சொன்ன வார்த்தைகளுக்கு இன்றுதான் அர்த்தம் புரிந்தது.
சில வருடங்களுக்கு முன் பூதலூர் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து பார்த்ததாகவும், மாமா சைக்கிளில் புடவை வியாபாரம் செய்வதாகவும் ராஜசேகர் சொன்னான். அப்போது கூட, தலையில் கிரீடத்துடன், ராஜ உடையில்தான் நினைவுக்கு வந்தார். ஒரு கையில் செங்கோலுடன், புடவை வியாபாரம் செய்யும் மாமாவை நினைக்கையில் வயிற்றில் என்னவோ செய்தது.
காலச்சக்கரம்தான் எவ்வளவு குரூரமாகச் சுழல்கிறது மாதிரியெல்லாம் நீதி சொல்லது எனக்குப் பிடிக்கவில்லை..
யார்கண்டார்? இந்நேரம் ஏதேனும் ஒரு திண்ணையில் புடவை கட்டிய அரக்கிகளைப் பற்றிய கதைகளை அவர் சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்.
Tuesday, February 26, 2008
நிழல் நிஜமாகிறது

ஏழேகால் மணிக்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை. எரிச்சல் எரிச்சலாக வந்தது. எதன்மீதும் குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. சுற்றுப்புறம் முழுதும் கண்களால் துளாவியபடி நின்றிருந்தேன்..
பல எரிச்சல் நிமிடங்களுக்குப் பின், பேருந்தி்ல் ஏறும் சமயம் செல்போன் சிணுங்கியது..
கால் பண்ணி காய்ச்சல் வாங்க வேண்டுமா? யோசனையுடன் பொத்தான்களை அழுத்தினேன்..
"ஹலோ.."
"!--! -- ! .. "
"இதோ வந்துட்டே இருக்கேன் சார்.." எத்தனை தடவை..
".."
இன்னும் வோர்ட் கவுண்ட் பண்ணனும், டெம்ப்ளேட் பிக்ஸ் பண்ணனும், ப்ரூஃப் ரீட் பண்ணனும், இத்யாதி இத்யாதி..
"சார். நாளைக்கு காலைல உங்க கையில கதை இருக்கும் சார்.. நானே டைப் பண்ணி அனுப்பிடறேன்.. உங்க இன்பாக்ஸை நாளைக்கு செக் பண்ணுங்க.."
"பண்ணிடறேன் சார்.. நம்புங்க..." கெஞ்சாத குறை..
"..."
கால் ஓடிக்கிட்டே இருக்கு.. சீக்கிரம் கட்பண்ணுய்யா..!" சார் பஸ் புறப்படப்போகுதுன்னு நினைக்கிறேன்.. நான் நாளைக்கு பேசறேன் சார்.."
"..."
பீப்.. பீப்..
அப்பாடா..
முன்பெல்லாம் எப்போதாவது எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு முறை வாரஇதழ் ஒன்றில் வெளியாகி இருந்த என் சிறுகதை ஒன்றை படித்த இவர், புதிதாக தொடங்கப்பட்ட சிற்றிதழ் ஒன்றுக்கு என்பெயரை பரிந்துரை செய்திருக்கிறார்.. கடந்த சில மாதங்களாக எழுதிவருகிறேன்.. பெரிதாக வரவேற்பு ஒன்றும் இல்லை. ஆனால் நானாக எழுதும் போது இருந்த சுதந்திரம் பறிபோய்விட்டதாய் ஒரு உணர்வு. இப்போதெல்லாம் அவசரத்துக்கு எழுதி்க்கொண்டிருக்கிறேன். செயற்கைக் கருத்தரிப்பு மாதிரி. சாம்பார் செய்வது மாதிரி. இந்த மாதிரி கொஞ்சம் அந்த மாதிரி கொஞ்சம் என்று எல்லாத்தையும் கலந்து கதை என்ற பெயரில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.. இதோ இரவோடு இரவாக ஒரு கதை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் எடிட்டர்..
இன்னைக்கு ராத்திரி சிவராத்திரிதான்.. ஏதாவது ஒன்றை எழுதித்தரவேண்டும்..
டிரைவரும் கண்டக்டரும் மிக சாவகாசமாக, சாந்தி பரோட்டாவின் சால்னாவைப் பற்றி விவாதித்துக்கொண்டே வந்து பேருந்தை எடுக்கையில், பயணச்சீ்ட்டில் குறித்திருந்த புறப்படும் நேரம் கடந்து சிலமணிநேரங்கள் ஆகியிருந்தது.
நான் கையில் பேப்பர் பேனாவுடன், காலை கொஞ்சம் தூக்கி முன்சீட்டில் முட்டுக் கொடுத்துக் கொண்டு ஒரு மாதிரி போஸில் அமர்ந்து கொண்டேன்..
எங்கிருந்து தொடங்குவது. எதுவும் தெளிவில்லை.. என்னத்தை எழுதுவது. திரும்பவும் இலக்கில்லா அந்த எரிச்சல்..
போதாக்குறைக்கு கண்டக்டர் தன்பங்குக்கு, TV போட.. ஜாக்கிசானும், ஓவன் வில்சனும் சென்னைத் தமிழில் புகுந்து விளையாடத்தொடங்கினர்.
இப்போதே எழுதி முடித்தால்தான் காலையில் டைப் பண்ணி அனுப்ப முடியும்.
கோயம்பேடு போனா கதைக்காகாது.. அசோக் பில்லர்லையே இறங்கி ஆட்டோ பிடிச்சு போயிடலாம்... யோசித்துக் கொண்டே ஆரம்பித்தேன்..
-------------------------
யாருமற்ற ஒரு அறை.. சுவர்க்கடிகாரம் சுதியோடு டிக் டிக் பாடிக்கொண்டிருந்தது.. தரையில் சில தலைகொய்யப் பட்ட பொம்மைகள். அருகில் ஏதோ ஒரு அறையிலிருந்து இன்றைய முக்கியச் செய்திகள் கேட்டது. சத்தமில்லாமல் சீலிங் பேன் மெல்ல ஓடிக்கொண்டிருந்தது. லேசாகத் திறந்திருந்த முன்கதவு கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு தயக்கத்துடன், முழுசாய்த் திறப்பதற்குள்,
"டா............டி"
ஒரு குட்டிதேவதை ஓடி வந்தது. சமீபத்தில்தான் ஓடப்பழகியிருக்க வேண்டும். ஒரு மாதிரி தத்தி தத்தி ஓடிவந்து குருவின் கழுத்தைக் கட்டிக்கொண்டது..
"அம்முக்குட்டி.. அதுக்குள்ள ரெடியாயாச்சா..? ம்ம்.. மம்மி எங்க.?"
பெரிய தேவதை இன்னும் குளித்துக் கொண்டிருக்க வேண்டும்.
குரு மனதுக்குள் சிரித்துக் கொண்டான்..
சில்மிஷத்திற்கு இது நேரமல்ல..கோபித்துக் கொள்வாள்..காலேஜ் படிக்கும் போதிலிருந்து அவள் அப்படித்தான். திருமணமாகி 5 வருடங்களுக்குப் பிறகும், இன்னும் அவனாள் அவளைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.
முதல் நாள் அவளைப்பார்த்த போது மனசுக்குள் இருந்த அந்த சந்தோஷ குறுகுறுப்பு ஒவ்வொரு நாளும் புதுசாய் இன்னும் இருக்கிறது..
குழந்தையை உப்புமூட்டை தூக்கிக்கொண்டான்..
இன்னைக்கும் சமாளிக்க வேண்டும்.. இன்று பார்க் போவதாய் ஒரு பிளான்.ஆனால், அதற்குள் கிளையண்ட் ஒருவரிடமிருந்து ஒரு கால். அவரைப் போய் பார்த்தபின்தான் பார்க். இன்னைக்கு ருத்ர தாண்டவமே ஆடப்போறா.
அப்போ கூட அவ அழகாத்தான் இருப்பா..
கொஞ்சம் கொஞ்சமாக என் மனக்கண் முன் விரியத் தொடங்கியிருந்தது குருபிரசாத்தின் வீடு.. முற்புறம் முழுதும் பூச்செடிகளால் தன்னை அலங்கரித்துக் கொண்ட ஒரு அழகான வீடு. முப்பதுகளின் துவக்கத்தில் குரு. அவன் காதல் மனைவி திவ்யா தொட்டுவிடும் தூரத்தில்..
இவர்களுக்குள் காதல் கொஞ்சம் வினோதம்.. பெண்களைக் கண்டாலே விலகி ஓடும் குரு, முதன்முதலில் திவ்யாவைப் பார்த்தது ஒரு ப்ரெளசிங் சென்டரில். நான்காம் ஆண்டு பொறியியலில், ப்ராஜெக்ட் வொர்குக்காக ப்ரெளசிங் சென்னர் போன போது, திவ்யாவும் வந்திருந்தாள். முதல் சிலநாட்கள் பார்வையொடு கழிய, சில நாட்களுக்குப் பின் அவள்தான் வந்து அவளிடம் பேசினாள்.. அதைவிட ஆச்சரியம் இருவரும் கடந்த இரு வருடங்களாகக் குடியிருப்பது ஒரே ஏரியாவில்... இன்னும் பல ஆச்சரியங்களுடன் அவர்களின் பேச்சும் தொடர்ந்தது..
ரொம்ப ரிசர்வ்டு டைப்பான குருவுக்கு, எல்லார் கூடவும் பளிச்சுன்னு பேசற திவ்யாவை பாத்த உடனேயே புடிச்சிடுச்சு. அவ்ளோதான்.. இதுக்கப்புறம் என்ன வேணும்.. அவ பண்ற ஒவ்வொன்னும் அவனுக்கு அழகா தெரிஞ்சுது..
ரொம்ப தயங்கி தயங்கி, அவன் அவள்கிட்ட சொல்லும் போது ஆறு மாசம் ஓடிடுச்சு.
எல்லாத்தையும் குனிந்தபடியே கேட்டுகிட்டு இருந்தா. கடைசியா திரும்பினப்போ கண்ணில ஒரு துளி நீர் இப்பவோ அப்பவோன்னு திரண்டு நின்னுது. அவ்ளோதான் அவன் பாத்தது.. அப்புறம் பளீர் னு ஒரு அறை..
பார்வைப்புலம முழுக்க நட்சத்திரங்களாகப் பறக்க, அடுத்து அவன் கேட்ட வார்த்தைகள்..
"இதைச் சொல்றதுக்கு இவ்ளோ நாளாடா..? மக்கு.."
மட்டும்தான்.. அவன் கண்களைத் திறப்பதற்குள் சாலையைக் கடந்திருந்தாள்..
குருபிரசாத்திற்கு தன்னையே நம்பமுடியவில்லை.. கொஞ்சநேரம் ஆகாயத்தில் பற்ந்த பின் வீட்டுக்குத் திரும்பினான்..
திவ்யா வீட்டில் பெரிதாக ஒன்றும் பிரச்சனை வரவில்லை. குரு வீட்டில் கொஞ்சமாக அமர்க்களத்துக்குப்பின், ஒரு சுபயோக சுபதினத்தில் சுற்றமும் நட்பும் சூழு குரு திவ்யா திருமணம் நடந்தது..
இன்றோடு ஒரு சில காதல்வருடங்களுக்குப் பின் ஒரு குழந்தையும்.. ஸ்வேதா. அதுதான் அவர்கள் முதன் முதலில் சந்தித்த ப்ரெளசிங் சென்டர் பேரு..
ம்ம்ம்... வேணாம்.. நல்லா இல்ல..
சரி..அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச ஒரு பெயர்..
ம்ம்.. போதும்..
திவ்யா குளிச்சுட்டு வந்தாச்சு..
குரு விட்றாத.. எப்படியும் சமாளிச்சுடு..
முகத்தை ஒரு மாதிரி கொஞ்சலாக வைத்துக்கொண்டான். ஒரு கண்ணாடி கிடைத்தால் தன்முகத்தையே பார்த்துக்கொள்ளலாம் போல் தோன்றியது.. அதற்குள் திவ்யா வந்தாச்சு..
"டார்லிங்.. இன்னும் ரெடி ஆகலியா..? பார்க் போலாம்னு சொன்ன..?"
"இதோ அஞ்சு நிமிஷம் டா.. ரெடியாயிடறேன்.. .. உங்க பொண்ணு வேற.. அரைமணி நேரமா ஒரே நச்சரிப்பு.. டாடி டாடின்னு.."
அவள் சலித்துக்கொள்வது கூட அழகுதான்..
குரு தடுமாறாத..
"ஆமா.. இப்படித்தான் சொல்லுவ.. கடைசியில அரைமணிநேரம் ஆகும்.."
அழகாய்ச் சிரித்தாள்..
"ஆமா.. ஆகும்தான்.. என்ன பண்ண.. லேட் ஆயிடுச்சே.."
ஆங்.. இதுதான் சமயம்..
சோபாவில் அமர்ந்து, ஷீவைக் கழற்றிக்கொண்டே, முடிந்த வரை மிக இயல்பாய் சொன்னான்
"ok டியர்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. நீ பொறுமையா கிளம்பு.. அதக்குள்ள நான் போய் ஒரு க்ளையண்டப் பாத்திட்டு வந்துடறேன்."
எந்த சத்தமும் இல்லை.. பெட் ரூமி்ல் திறக்கப்பட்டுக் கொண்டிருந்த டிராயர் கூட பாதியில் நின்றதாய் ஒரு பிரமை..
"வந்த உடனே நாம பார்க் போகலாம்.. "
"நெனச்சேன்.. அய்யா இன்னைக்கு சீக்கிரம் வரும் போதே நினைச்சேன்.. குடும்பத்தைப் பத்தி அக்கறை இருந்தாத்தான. "
"ஹே. .. அதெல்லாம் இல்லடா.. இது ரொம்ப முக்கியமா."
"ஒன்னும் வேணாம்.. போங்க.. போய் உங்க க்ளையண்டையே கட்டிகிட்டு அழுவுங்க..."
"திருவாரூர்,திருவாரூர்,திருவாரூர்" மற்றும் "டீ காப்பி, டீ காப்பி" யோடு வந்தது தஞ்சாவூர் பேருந்து நிலையம்..
ஒரு அரைமணிநேரத்துக்குப் பின் பேருந்து புறப்பட கொஞ்சமாய் கண்களை மூடி குருபிரசாத்தைத் தொடர்ந்தேன்..
குருபிரசாத், புறப்படத் தயராகிக்கொண்டிருந்தான்.
"டாடி.. வரும் போது எனக்கு பவர் ரேஞ்சர்ஸ் பொம்மை டாடி.. "
"சரி டா செல்லம்.. அப்டியே வற்றத்துக்குள்ள மம்மியை சமாதானம் பண்ணிவை.. வந்தவுடன் பார்க் போகலாம்.."
"ok டாடி.."
"ம்.. அப்ப்புபுபுபுபுறம்... "
இப்படி கேட்டா முத்தம் தரணும்னு அர்த்தம்..
சமத்தாக வந்து கன்னத்தில் ஒரு உம்மா கொடுத்தது குழந்தை..
அடுத்தது கிடைக்குமா என்ற நப்பாசையில் திரும்பிய போது, பெட்ரூம் கதவு முன்னமே சாத்தி்யிருந்தது. சமாதான ஒப்பந்தத்துக்கு இது நேரமல்ல.. வந்து பார்த்துக் கொள்ளலாம்.. திவ்யா ஒரு பெரிய குழந்தை.. பார்க் போனா எல்லாம் சரியாயிடும்..
"ஏண்டி ராதிகா.. அத்தானக் கூப்புடு.. நல்ல வேளை.. ஒரு தண்ணி பாட்டில் வாங்கியாரச் சொல்லு.. "
மொழியில்லாத ஒரு முனகல்..
"அண்ணாச்சி.. வாங்க.. ஒரு டீ போட்டுட்டு வந்துடலாம்.."
"அட.. என்னங்கய்யா இது..."
"கொஞ்சம் இருப்பா.. வண்டியை ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு வற்றேன்.."
ஒரு மாதிரி, ட்யூன் பண்ணாத ரேடியோ மாதிரி, சகல சம்பாஷனைகளும் காதில் விழுந்து கொண்டிருந்தன..
மெல்ல கண்விழித்தேன்.. காற்றில் மெல்லியதொரு பரபரப்பு தெரிந்தது.. ஒவ்வொருவருக்கு ஒரு அவசரம். எங்கள் பேருந்து நின்று கொண்டிருந்தது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன்.. நீண்ட தூரத்துக்கு வாகனவரிசை விளக்கு வைத்த ஜன்னல்களாகத் தெரிந்தது..
"என்ன சார் ஆச்சு.."
இதே கேள்விக்கு பலவிதப்பட்ட தேற்றங்கள் தரப்பட்டுக் கொண்டிருந்தன பேருந்தினுள். கடைசியில் வந்த நடத்துனர் அனைவரின் கேள்விப்பார்வைக்குமாய் பதில் சொன்னார்..
"ஏதோ ஆக்சிடண்டாம்.. இப்போதான்.. கொஞ்சநேரம் முன்னாடி.. எவனோ ஒரு லாரி காரன் பைக்ல ஏத்திட்டானாம்.. "
"எப்போ டிராஃபிக் கிளியர் பண்ண போறாங்கன்னு தெரியல.."
"...?"
கொஞ்சநேரம் கடந்தது..
"இதுக்குத்தாங்க.. SETC க்கு திருச்சி போர்டிங்கே குடுக்கக்கூடாது.. அது மட்டும் இல்லைனா, இந்நேரம் பின்னாடியே செங்கிப்பட்டி போய் பைபாஸை புடிச்சு போயிருக்கலாம்."
மேலும் பல இத்யாதிகள்..
இதற்குள் டிரைவரும், சுகமான தேநீர் பருகலுக்குப் பின் திரும்பியிருந்தார்.
அவரும், அவர் போன்று பொறுமையிழந்த இன்ன பிற ஓட்டுனர்களும் ஒரு வழி கண்டுவிட்டனர். விபத்து நடந்தபகுதியை ஒட்டி செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதையில், ஒரு மாதிரி வண்டியைச் செலுத்தத் தொடங்கினர். ஒவ்வொரு வண்டியும், ஒரு ஜோடி டயர்கள் மண்ணிலும், மறு ஜோடியை சாலையிலும் பொருத்தி, சாய்ந்த ஒரு நிலையில் கடக்கத் தொடங்கியிருந்தன.. நெடியதொரு சர்ப்பம் போல் படுத்துக்கிடந்த அந்த வாகன வரிசை மெல்ல ஊர்ந்தது..
ஒரு கட்டத்தில், பேருந்தில் இருந்த அனைத்து முகங்களும் ஒரு சேர ஜன்னல் பக்கமாய் திரும்பின. விபத்து நடந்த இடமாக இருக்கவேண்டும். எனக்கு ஜன்னல் வழியே பார்க்கப்பிடிக்க வில்லை. டிரைவர் சீட்டுக்குப் பின் மாட்டியிருந்த ராணிமுத்து காலண்டரையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
தூரத்தில் சைரன் சத்தம் கேட்டது.
மனதில் என்னன்னவோ எண்ணங்கள்.. சடாரென ஜன்னல் வழி பார்த்தேன்.. தெளிவாகத் தெரியவில்லை.. நிழல் உருவமாக ஒருவர் அலங்கோலமாகப் படுத்திருந்தார்..
அருகே, நிராதரவாகத் தரையில் கிடந்தது ஒரு பவர் ரேஞ்சர்ஸ் பொம்மை.
Thursday, April 05, 2007
வாக்கு மூலம்

(NITTFEST'07 போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை)
எனது நிமிடங்களை மெல்ல நிரப்பிக் கொண்டிருந்தது.
அப்துல்லா பாய் கதவைத்திறக்கும் சத்தமும் டேபிள் மீது டம்ளர் வைக்கும் சத்தமும்.
பிரித்தறியமுடியாத சில பறவைகளின் ஒலி; முட்டிக்குக் கீழே தழும்பின் மீது சூரியன் லேசாக சுட்டுக்கொண்டிருந்தது.
என்னுடைய எல்லா நாளும்இப்படித்தான் தொடங்குகிறது. இந்த மலைக்கிராமத்திற்கு வந்த இந்த மூன்று மாதத்தில் என் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றும் பெரிய மாறுதல் இல்லை. கண்விழிக்கும் போது பதிற்றாண்டுகள் பழமையான அதே அறை, அதைவிடப் பழமையாக நான், அதே நினைவுகள், அதே சூரியன், அதே ஜன்னல், அதே வெறுமை.
காட்டு மல்லி பூத்திருக்குமோ?
மெல்ல கண்விழித்தேன். ஜன்னலின் வழியே கீரிப்பாறை என்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது.
இது உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான மாற்றம் அல்ல. என்னைப் பொருத்த வரை இது படுத்திருப்பதற்கும் அமர்தலுக்குமான மாற்றம். நான் இப்போதெல்லாம் தூங்குவதே இல்லை. நினைவுகளின் குவியலில் புதைந்து போவதாக அது பரிணமித்து விட்டது.
தினசரிகள் கூட வாங்குவதில்லை. இந்த உலகமே அர்த்தமற்று போன பிறகு நாட்டில் என்ன நடந்தால் எனக்கென்ன?
மெல்ல எழுந்து மல்லிச்செடியருகில் சென்றேன். இன்னும் பூக்கவில்லை. நிச்சயம் நாளை பூத்து விடும்.
இதற்கு மேலே போகும் முன், என்னைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.
"ம்ம்ம்.. என்ன சொல்ல….. நான் ஒரு அப்பாவி, ரொம்ப நல்லவன், சிங்கம் மாதிரி, திறந்த புத்தகம் மாதிரி…"
ஆங்…அங்கதான் அது ஆரம்பமாச்சு..
திறந்த புத்தகம் மாதிரி
…..
….
…
..
ஆம். நான் ஒரு புத்தகம்தான். செல்லரித்துப்போன ஒரு புத்தகம்.
சின்ன வயசில் எங்கள் வீட்டுக்கருகில் அரைடிராயர்கள் யாரும் இல்லை. நொண்டி, கபடி, கில்லி என அனைத்து ஆட்டங்களும் எனக்கு ஒருமையில்தான். பள்ளியிலோ எனக்கு ஆடத்தெரியாது என்று ஒதுக்கப்பட்டேன். ஒரு கட்டத்தில் அனைத்தும் அலுத்துப்போக, பேச்சுத்துணைக்கு வந்தார் கல்கி. அதன்பின் சாண்டில்யன், சாவி, தேவன் என ஒவ்வொருவராக வர என் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. என் சாம்ராஜ்யம் அது. வேறு எவரையும் தவறியும் அனுமதிக்காமல் பழிதீர்த்துக்கொண்டேன்.
* * * * * * * * * *
ஒரு நாள் வகுப்பில் எங்கள் வரலாற்றாசிரியர்,
"ராஜராஜனின் தந்தை யார்?"
"சுந்தர சோழன்" நான்.
அவரைப் பொறுத்தவரை அது ஒரு out of syllabus கேள்வி. எனக்கோ அது பொன்னியின் செல்வன் கதாபாத்திரம்.
என்னை வகுப்பின் முன் அழைத்து ஏதேதோ சொல்லி, பாராட்டி அனுப்ப, என் மனக்குதிரைக்கு சிறகு முளைத்த தினம் அன்று.
அன்று என்னைச் சுற்றியிருந்த அந்த முப்பத்தாறு ஜோடிக்கண்களில் தெரிந்த வியப்பும் ஆச்சரியமும் எனக்கு போதையூட்டின.
* * * * * * * * * *
அதன் பின் ஏதேதோ படிக்கத்தொடங்கினேன். கடலை மடித்து வரும் காகிதம் கூட தப்பவில்லை. கடைசியில் என் மூளை ஒரு குப்பைத்தொட்டியான பின்பும் அது நிற்கவில்லை.
கல்லூரியிலும் அந்த வியப்புக் குறி தொடர்ந்தது.
இடைப்பட்ட வருடங்களில் என் பேச்சும் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து புத்தகங்களுடன் மட்டும் பேசுவது என்ற அளவில் சுருங்கிவிட்டது.
ஊரார் பார்வையில் என் பிம்பம் கல்லடி பட்டது.
"ரொம்ப அழுத்தம்டா…"
"சரியான head weight party டா.."
"அய்யே!!! அது ஒரு உம்மனா மூஞ்சி.."
என நான் கேட்டுப்பழகிய பாராட்டுகள் அதிகம்.
கல்லூரி விடுதியில் என் நண்பர்களிடம் பேசியதைக்காட்டிலும் என் அறைச்சுவர்களிடம் அதிகம் பேசியிருப்பேன்.
அப்போதெல்லாம் என் தனிமையை நிரப்பியது இந்த டிக்.. டிக்… டிக்… தான்.
அப்துல்லா பாய் அழைக்கும் குரல் கேட்டது.
மெல்ல அறைக்குச் சென்றேன். மேஜை மீது உணவு காத்திருந்தது. ஒரு அணில் வந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்தது. நான்கு பருக்கைகள் எடுத்து ஜன்னல் மீது வைத்தேன். தயங்கித் தயங்கி வந்து தன் வாலைக் கோதியபடி கொறித்துச்சென்றது. மனசுக்குள் குறித்துக்கொண்டேன்.
ம்ம்… எங்கே விட்டேன்.. என் அறையில்..
பல நாள் அழுதிருக்கிறேன் என் அறையில். நான் அழுவதை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வேறு…
ம்.. அப்படியே அது முடிந்து போனது.
கல்வியை முடித்து தொடர்ந்த வருடத்தில், ராணுவத்திற்கு ஆளெடுப்பதாய் மதிய வெயிலில் அரை நிர்வாணமாய் மைதானத்தில் ஓடவிட்டனர். என்னை விதவிதமாய் அளவெடுத்தபின் முடிவு செய்தனர். அன்று தேர்வான 300 பேரில் நானும் ஒருவன்.
ஒரு நாட்டின் எல்லை என்பது என்ன என்று அந்நாளில் புரிந்து கொண்டேன். மக்களுக்குத் தெரிவது போர் மட்டுமே. அன்றாடம் நடக்கும் சண்டைகள் அவர்களுக்கு தெரிவதில்லை.
துப்பாக்கிச் சத்தம் தாலாட்டாய் ஆகிப்போனது. துப்பாக்கிச்சத்தத்தைக் கொண்டே அது நம்முடையதா எதிரியினதா என்று சொல்லவேண்டும். நடு ராத்திரி சைரன்கள் பழகிப்போயின. முழுமையிழந்த மனிதர்கள் பழகிப்போயினர். தூக்கமும் கொஞ்சம் தூரப்போனது. இருந்தும் என்ன.?? இள ரத்தம்.. முறுக்கேறிய தோள்கள் கர்வம் கொள்ளச்செய்தன.
அப்படித்தான் ஒரு நாள் சண்டை வந்தது, பங்களாதேஷ் எல்லையில். ஏதோ புதிய பள்ளிக்குச் செல்லும் மாணவனைப்போல உற்சாகத்துடன் கிளம்பினேன். நானும் ஒரு நிஜப்போரைப் பார்க்க..ம்..ம்.. ம்.. இல்லை பங்கேற்க..
மேஜர் எங்கள் பதுங்கு குழிக்கு வந்து ஐந்து நிமிடம் இந்தியில் வீரம் பொங்க உரையாற்றிச் சென்றார். முடிவில் நாங்கள் தெரிந்து கொண்டது இன்னும் சில நாட்கள் நாங்கள் அங்கேயே இருக்கவேண்டும் என்பதுதான்.
* * * * * * * * * *
நினைக்கிற மாதிரி நேரடியாக போருக்கெல்லாம் செல்ல முடியாது. ஒரு குழி விட்டால் அடுத்த குழி.. இப்படியே ஒரு வாரம் கடந்திருக்கும்.. அதன் பின்தான் எனக்கான நாள் வந்தது..
எதிலுமே முதல் என்றும் மறக்க முடியாதது. எனக்கும் தான்.
ஓரிடத்தில் எசகு பிசகாக சென்று முட்டிக்கொள்ளாத குறை. ஒரு சிறிய மணல் மேட்டைக்கடந்த போது எதிரே 15 அடி தூரத்தில், டைரக்ட் ரேன்ஜ் என்று சொல்வார்கள், ஒரு சப்பை மூக்குக்காரன் ஒரு மாதிரி அசௌகரியமாக துப்பாக்கியைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான். அவன் கவனம் திரும்பும் முன்னர் என் விசை உயிர்த்தது. அவனுக்கு நெற்றியில் இரத்தத்தால் திலகமிட்டு வீரசுவர்கம் அனுப்பி வைத்தேன்.
"அவனுக்கும் ஒரு மனைவி இருந்திருப்பாளோ? தன் கணவன் திரும்பி வருவான் என காத்திருந்திருப்பாளோ? ஆயிஷாவா இல்லை மும்தாஜா இல்லை வயதான கண்தெரியாத பெற்றோரா?"
உண்மையிலேயே அந்த சப்பை மூக்குக் காரனுக்காக இன்று அழுதேன். சுவரில் மாட்டியிருந்த அந்த முகமூடிச் சித்திரம் என்னைப் பார்த்துச்சிரித்தது.
இல்லை… இது போலி இல்லை.. உண்மை. என் வேதனை உண்மை. அவன் கண்ட அந்த வலி உண்மை. என் முகமூடிகள் தொலைந்து விட்டன.
* * * * * * * * * *
3அடி 2அங்குலமாய் இருந்த வயசில் ஒரு நாள் என் பாட்டி இறந்து விட அனைவரும் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர். எல்லோரும் ஏன் அழுகின்றனர் என எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் நானும் முயற்சித்தேன். கண்ணீரே வரவில்லை. யாரும் பார்க்காத சமயம் பார்த்து கண்ணில் இரு சொட்டு நீர் எடுத்து வைத்துக்ககொண்டு அழ(!)த் தொடங்கினேன். எனக்குக் கிடைத்த முதல் முகமூடி அது.
அதன் பின் எத்தனையோ முகங்களை மாட்டிக்கொண்டு, எத்தனையோ முறை அழுது, எத்தனையோ முறை சிரித்து, பலமுறை சபித்து இன்று அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறேன்.
இன்று அழும் போது யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் இல்லை. எதற்காகவும் தயங்குவதில்லை. நான் எனக்காக வாழத்தொடங்கி 3 மாதமாகிறது.
* * * * * * * * * *
அந்த சப்பைமூக்கனைத் தொடர்ந்து மேலும் பலர். அப்படியே முன்னேறினேன். எங்கிருந்தோ வந்த குண்டொன்று என் முழங்காலுக்கு கீழே நலம் விசாரிக்க உள்ளே சென்றது. அதன் பின் எதுவும் ஞாபகம் இல்லை.
எதிரிகள் முகாமில் சிக்கி ஒரு வாரம் சிதைபட்டு ஒரு வழியாய் தப்பி சுந்தவரவனக்காடுகளில் ஒரு வாரம் ஊண் உணவின்றி திரிந்து கடைசியாய் உயிர் பிழைத்த போது உணர்ந்து கொண்டேன், உயிர் என்ற சொல்லின் பொருளை.
இப்படி ஒவ்வொரு வார்த்தைக்காய் எனக்கு பொருள் கற்பித்துக் கொண்டே போனது வாழ்க்கையெனும் அகராதி.
என் கருவறை நண்பன் ஒரு நாள் எங்கள் கர்னலினால் என் கண்ணெதிரே சுட்டுக்கொல்லப்பட, என்னுள் துளிர் விட்ட செடி கருகிப்போனது. நான் மிக நெருக்கத்தில் கண்ட மரணம் அது. என் கனவுகள் பொடியாயின. அவன் போர்க்களத்தில் மடிந்திருந்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் அவனின் மரணம் என்னை உலுக்கிப் போனது.
அங்கிருக்க மனமின்றி பணியைத்துறந்து ஊர் திரும்பினேன்.
ஏகப்பட்ட ஏளனப்பேச்சுகள்.
"சுயநலக்காரன்"
"போரைக் கண்டு பயந்துவிட்டான். கோழை""
எனப் பலப்பல..
அவர்களுக்கு பதில் சொல்லும் நிலையை நான் கடந்துவிட்டேன்.
என்னை விட்டுச்சென்ற தனிமை விடாமல் வந்து தொத்திக்கொண்டது.
மீண்டும் கல்கியையும் சுஜாதாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஓரு புத்தகநிலையம் துவங்கினேன். அது மற்றவர்களுக்காக என்பதை விட எனக்காக. எனக்குப் புத்தகங்கள் தேவை. இடைவிடாமல் தேவை. ஏகாந்தம் எனக்கு வேண்டாம்.
மீண்டும் பழையபடி ஆனேன்.
காலம் தன் கணக்குகளை என் மீது எழுதிச்சென்றது. அறுபதைக்கடந்த ஒருநாளில் கண்பார்வை லேசாக மங்கத் தொடங்கியது.
கடந்த மூன்று மாதமாய் இந்த மலைக்கிராமத்தில். இந்த மூன்று மாத காலத்திற்குள் என் மீதும் பசுமை படர்ந்து விட்டதாய் ஒரு உணர்வு. தனிமை கொடுமையல்ல, அது ஒரு தவம் என்று சொல்லித்தந்தது தூரத்தில் நிற்கும் கீரிப்பாறை.
அந்த மலைமீது காணிகள் என்னும் பழங்குடிகள் வசிக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து ஏதாவறு விற்றுச்செல்வார்கள். அப்படித்தான் அறிமுகமானான், நீலன்.. ஒருவேளை எனக்கொரு மகனிருந்து அவனுக்கொரு மகனிருந்தால் அத்தனை வயசிருக்கும். ஒடுங்கிய முகம், கரிய நிறம், ஒரு மாதிரி மலையாளம் கலந்த தமிழ்,.. புரியும்.
சூரியன் தன் பயணத்தை முடித்துக்கொள்ள சித்தமாயிருந்தான்.
ஒரு நாள் அவனுடன் காட்டுக்குச் சென்றேன். சுந்தரவனத்தின் விசாலமும் அங்கு நான் கண்ட தனிமையும் எனக்கு காடுகளின் மீது ஒரு வித இனம் புரியாத பயத்தை உண்டாக்கியிருந்தன. ஆனால் இந்த காடு என்மீது மாயம் புரிந்தது.
செல்லும் வழியெங்கும் என்னுடன் பேசிக்கொண்டே வந்தான். நான் பேசாத போது வழியிலிருந்த செடிகளுடன் பேசிக்கொண்டே வந்தான். சிறிய புழுக்கள் கூட அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.
எனக்குப் பொறாமையாய் வந்தது. இவனுக்கு பேச்சுத்துணைக்கு இத்தனை நண்பர்களா? அவனது நண்பர்களிடம் பேசும் வயசை நான் கடந்து விட்டேனா?
வெட்கம் விட்டு அவனிடம் கேட்டேன்.
சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவன்,
"தட்சிணா என்ன?"
"என்ன வேண்டும்? பணமா? உணவா? விளையாட்டுப் பொருளா?"
"கதை வேணும்…
எனக்குக் கதைபறைய வேணும்"
காணிகளின் நம்பிக்கையில் மலையிலிருக்கும் ஒவ்வொரு பாறையும் மனிதர்களே. தீராத கதைகேட்கும் ஆவலுள்ள மனிதர்கள் பாறையாய் மாறி தன் ஆயிரம் இதழ்களால் கானகம் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.
போருக்குப் பிந்திய என்வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு, அவன் கேட்ட தட்சணை.
என்கதை சொன்னேன்.
அவனுக்கு நிறைய விளங்கவில்லை. எனினும் ஆர்வத்துடன் கதைகேட்பனைப் போலக் கேட்டான்.
என் வாழ்க்கையில் நான் பட்டவை அனைத்தும் இதற்குத்தானோ.. இந்த ஒரு நாளுக்காகத்தானோ? எங்கிருந்து வந்தது எனக்கந்த பேச்சு. மணிக்கணக்கில் இடைவிடாது பேசியிருப்பேன். தொட்டியிலிருந்து வடியும் நீரைப்போல என் மனதும் கசிந்தது. அந்த ஒரு நாள், ஆயிரம் புத்தகங்களில் தேடியும் வர்ணிக்க வார்த்தை கிடைக்கவில்லை.
அதைவிடப்பெரிய பரிசு அவன் தந்த அந்த காட்டு மல்லிச்செடி. கோவிலில் பிரசாதம் பெறும் பக்தனைப்போல பக்தியுடன் வாங்கிக்கொண்டேன்.
அன்றிலிருந்து அந்த மல்லிதான் என் பேச்சுத்துணை. அதன்பின் அந்த நெட்டிலிங்க மரத்திலிருந்த அணில், என் மேஜையின் துளையில் இருக்கும் பொறிவண்டு, அவ்வப்போது வந்துபோகும் அந்த சிட்டுக்குருவி…
கேட்டுக்கொண்டிருந்த அந்த தேரை என்னையும் சேர்த்துக்கொள் என்றபடி மறைவில் சென்று ஒளிந்தது.
என் விதியை நினைத்தேன். இப்போதெல்லாம் அழுகைக்குப் பதில் சிரிப்புத்தான் வருகிறது.
"A tyrants excuse for crime and a fools excuse for failure.."
ஆம்ப்ரோஸ் பியர்ஸ் நினைவுக்கு வந்தார்.
இதற்குள் அந்த பெரிய மலை, காடு, என் மல்லிச்செடி என எல்லாவற்றையும் விழுங்கியபடி மெல்ல என்னை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது இருள்.
மின்சாரம் கூட எனக்கு இப்போது பிடிப்பதில்லை. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு என் நாட்குறிப்பைத் திறந்தேன். மீண்டும் அதே டிக் டிக்..டிக் என் எண்ணத்தை நிறைத்தது. இருளின் வருகைக்குப் பின் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு எனக்கிருக்கும் ஒரே சாட்சி.
29.03.07
இன்று மூன்று நல்ல காரியங்கள் செய்தேன்
1)பசியுடன் வந்த ஒரு அணிலுக்கு உணவிட்டேன்
2) என்னால் உயிர் விட்ட ஒருத்தனுக்காக உண்மையிலேயே அழுதேன்
3) நாளையும் மூன்று நல்லது செய்ய முடிவெடுத்துள்ளேன்.
இன்னமும் நான் ரொம்ப நல்லவன், அப்பாவி …
நான் தலைக்கனம் பிடித்தவன், சுயநலக்காரன்
என்னை அணியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று சொன்ன அந்த அணித்தலைவன் விளையாட வருகிறாயா எனக் கேட்டான்;
சப்பை மூக்குக் காரனின் முகம் தெரியாத மனைவி வந்தாள்; பள்ளியில் கடலைமிட்டாய் விற்கும் தாயம்மாக் கிழவியிடம் திருடிய 2 ரூபாய் நாணயம் கை கால் முளைத்து என்னைத் துரத்தியது; தி.ஜா வந்து ஏதோ ஒரு வார்த்தைக்கு அர்த்தம் கேட்டுப்போனார்.
வில்பர் ஸ்மித்துடன் புதையல் வேட்டைக்குச் சென்று மீள முடியாத காட்டுக்குள் சிக்கிக் கொண்டேன். எங்கு தேடியும் என்னைக் காணவில்லை.
என் கருவறை நண்பன் வந்து "தும் கப் ஆ ரகேகோ" என்றான்.
அதற்கடுத்தநாள் என் நாட்குறிப்பு நிரப்படவில்லை.
__________________
__________________
__________________
__________________
பட்டிருந்தால் எழுதியிருப்பேன்,
மல்லி இன்று பூத்தது.
Monday, February 26, 2007
நிர்வாண நகரம்
இந்த தினத்தில்தான் அந்த ஆசை எனக்கு வந்ததென்று குறிப்பிட்டுக் கூற முடியாது. நினைவு தெரிந்த நாள் தொட்டே ஒரு கார் வாங்கவேண்டுமென்பது என் வாழ்வின் குறிக்கோள்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. சின்ன வயசில் அம்மா எதாவது வாங்கிவர கடைக்கு அனுப்பினால், அந்த பயணம் என் மானசீக காருடன்தான். காற்றிலேயே கியர் மாற்றி ஸ்டியரிங் திருப்பி, ஹாரன் அடித்து அமர்க்களம் பண்ணிய எனக்கு அச்சாரமாய் அமைந்தது Boost-க்கு இலவசமாய் வந்த ரேசிங் கார். அது எங்கள் வீட்டில் பயணிக்காத இடமே இல்லை. ஹாலின் சுற்றளவை ஒரு முறை வலம் வந்த பின் “ராஜாவுக்கு ராஜா நான்டா" பாட்டில் வரும் ரஜினி மாதிரி சுவற்றில் ஏறியும் பயணித்திருக்கிறேன். வ்ரூம் வ்ரூம் என்று Digital DTS சவுண்ட் எஃபெக்டுடன் நான் கிளம்பினாலே அடுக்களையிலிருந்து அம்மாவின் குரல் கேட்கும்.
“சித்த சும்மா இறேண்டா.. காலைலேந்து ஒரே தலைவலி…"
எங்கள் வீட்டுக்குள் ஒரு குட்டி ரயில்வேயே நடத்தத் தொடங்கினேன். என் கார் கிராஸ் பண்னும் போது யார் குறுக்கே வந்தாலும் என் கார் கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக என் கார் என்றுமே நேர் சாலையில் சென்றதில்லை. கொண்டை ஊசி வளைவுகள் என்றால் கொள்ளை பிரியம்.
என் தொல்லை தாங்கமுடியாமல் அம்மாவும் அக்காவும் செய்த கூட்டுச்சதியின் பயனாக, ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து திரும்பி வந்து பார்த்த போது கார் மாயமாய் மறைந்து விட்டது. நான் இரண்டு நாள் அழுத பின் அந்த அத்தியாயம் முடிவுக்கு வந்தது.. ஆனால் கார் வாங்கும் ஆசை மட்டும் Hutch விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டி மாதிரி தொடர்ந்து கொண்டே இருந்தது.
அதன்பின் தொடர்ந்த வருடங்களில் நான் பள்ளி, கல்லூரியை முடித்து இன்று ஒரு கம்பெனியில் கைநிறைய சம்பளத்தில்.
ஒரு நாள் இரவு வேலையிலிருந்து திரும்பி வரும் போதுதான் என் கண்ணைக்கவர்ந்தது, ரோட்டின் குறுக்கே பிரம்மாண்டமாய் வீற்றிருந்த அந்த விளம்பரப்பலகை. என் போன்ற கார் காதலர்களின் கவனத்தைக் கவர்வதற்கென்றே ஒளிவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது பளபளப்பான ஒரு குட்டி கார். அருகிலேயே Car Loan? It is easy என்று போட்டு ஒரு வங்கியின் பெயர் போட்டிருந்தது.
மறுநாளே நான் அந்த வங்கியில். "லோன் அப்ளை பண்ணுபவருக்கு கண்டிப்பாக டிரைவிங் தெரிந்திருக்க வேண்டும" என்று ஒரே வரியில் முட்டுக்கட்டை போட்டார் மேனேஜர். திரும்பிவரும் போதே என் மனம் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டது.
அதன்பின் ஒருவாரம் டிரைவிங் ஸ்கூல் தேடும் படலத்தின் முடிவில் ஒரு டிரைவிங் ஸ்கூலைக் கண்டுபிடித்துச் சென்றேன். அது ஒரு சிறிய காம்ப்ளக்ஸ். பெட்டி பெட்டியாக ஆறு கடைகள். கீழே மூன்று மேலே மூன்று. ஒரு டீக்கடைக்கும் ஒரு லாரி புக்கிங் ஆபீசுக்கும் இடையில், இரண்டடி அகலத்தில் ஏறக்குறைய 80டிகிரி சாய்வில் இருந்த ஒரு படிக்கட்டில் ஏறிச்சென்றால், ஒரு திருப்பத்தில், சுற்றிலும் வெற்றிலை பாக்கு கறைகளுக்கு மத்தியில் டிரைவிங் ஸ்கூல் பெயர் போட்டு அம்புக்குறி போட்டிருந்தது.
மிஞ்சிப்போனால் 8க்கு 8 சதுர அடியில் ஒரு அறை. சுவர் முழுவதும் பெட்டி பெட்டியாகப் போட்டு Road Simbols வரைந்து வைத்திருந்தனர். எப்படியும் வரைந்து பல வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். ஒரு மூலையில் பலவகையான ஆட்டோமொபைல் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன. ஒரு சீலிங் ஃபேன் சீரான சுதியில் பாடிக்கொண்டிருந்தது.. கீழே ஒரே ஒரு டேபிள். அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி ஒருவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். என்னை தலையைத் தூக்கிப்பார்த்தவர், ஏதோ கல்யாண வீட்டுக்கு வரவேற்பவர் போல,
“வாங்க, வாங்க! இங்க உட்காருங்க"
கொஞ்சம் கூட மாறாமல், காபியா டீயா? என்கிற தொனியில்
“என்ன? டூ வீலரா, ஃபோர் வீலரா?" என்றார்.
ஆள் பார்ப்பதற்கு வீரமணிதாசன் மாதிரி வெள்ளை தாடி, உத்திராட்சக் கொட்டை, 2 இன்ச் அகலத்தில் சந்தனப்பட்டை என பக்திப்பழமாக காட்சி தந்தார்.
“ரெண்டுமேதான்…"
“ஓட்டத் தெரியுமா? இல்ல கத்துக்கணுமா?"
“கத்துகிட்டு லைசென்ஸ் எடுக்கணும்"
“ஓகே.. ஓகே.. அதெல்லாம் ஒண்னுமே இல்ல. ஈஸியா எடுத்துடலாம். ரெண்டும் சேத்துண்னா 2600 ரூபா ஆகும். உங்களுக்கு 2500 ரூபா
போட்டுக்கறேன். ஓகேன்னா நாளைக்கே LLR போட்டுறலாம். வரும் போது 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டா அப்புறம் உங்க ரேஷன் கார்டை மட்டும்
எடுத்துட்டு வந்துடுங்க. மத்தத நான் பாத்துக்கறேன். அடுத்த மாசமே லைசென்ஸ் எடுத்துடலாம்..”
வேறுசில சம்பிரதாயமான் விசாரிப்புகளுக்குப்பின் வீடு திரும்பினேன்.
மறுநாள் காலை அரைநாள் விடுப்பு கேட்டு சூப்பிரெண்டுக்கு லெட்டர் அனுப்பிய பின் புறப்பட்டேன். “நீங்க நேரா RTO ஆபீஸ் வந்துடுங்க. நான் உங்கள அங்க பாக்கறேன்.” அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட விதவிதமான வாகனங்கள் புடை சூழ, ஒரு ஓரமாக வீற்றிருந்தது அந்த ஆபீஸ். அலுவலர்கள் யாரும் இன்னும் வரவில்லை.
என்னைப் போல் இன்னும் சிலர், 20 பேர் இருக்கும், திட்டுத் திட்டாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். உங்கள் சேவையில் போக்குவரத்துத் துறை; உங்கள் வசதிக்காக 9 மணிமுதலே இயங்கும் என்ற அறிவிப்புப்பலகை பளபளத்தது. அனிச்சையாய் மணிபார்த்தேன். எனக்கு அருகில் LLR-க்கு ஃபீஸ் எங்க கட்டணும் என்று ஒரு அப்பாவி விசாரித்துக் கொண்டிருந்தார்.
விளம்பரங்களில் வரும் வாட்ச் மாதிர் 10.10 மணிக்கு, ஒருத்தர் வந்து நாற்காலி போட்டு அமர்ந்தார். அருகில் ஒரு பெரிய ரெஜிஸ்டர், கூடவே ஒரு எடுபிடி.
அதற்குள் அந்த டிரைவிங் ஸ்கூல் வீரமணிதாசன் வந்து
“சார், நீங்க கையெழுத்து போட்டுட்டு, உள்ள இருக்க க்யூல வந்து உட்காருங்க. நான் உள்ளதான் இருப்பேன்” என்ற படி நகர்ந்தார்.
அவர் சொல்லாத மற்றொரு விஷயம், இங்கே ரெஜிஸ்டரில் கையெழுத்து போடவே ஒரு க்யூ காத்துக்கொண்டிருந்தது. அதன் கடைசியில் என்னை இணைத்துக் கொண்டேன்.
இந்த கையெழுத்து எதற்கு என்று கேட்கக்கூட முடியாமல், அப்படி ஒரு அவசரம், அனைவரிடமும். மொய் எழுதுவது மாதிரி ஒவ்வொருவராக கையெழுத்து போட, அந்த எடுபிடி
“ஆங்.. அம்பது ரூவா எடுப்பா…” என்று அதட்டிக்கொண்டிருந்தான்.
என் முறை வந்தபோது, ஒவ்வொரு ‘காலமா’க பார்த்தேன். வழக்கம் போல் வரிசை எண், பெயரைத் தொடர்ந்து தேர்வுதொடங்கிய நேரம் என்று போட்டு 9.10 என்று நிரப்பப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து ஒரு கையெழுத்திட்டபின் அடுத்த ‘காலம்’ பார்த்தேன். தேர்வு முடிந்த நேரம் என்று போட்டு 9.30 என்று போட்டிருந்தது.
இந்நேரத்திற்குள் எனக்குப் பின் தள்ளு முள்ளு தொடங்கி விட்டது.
“யோவ், சீக்கிரம் நவுருய்யா.. அவனவன் ஜோலியப் பாத்துகிட்டு போவ வேணா?”
அவசரமாய் மற்றொரு கையெழுத்திட்டபின் நகர்ந்தேன்.
தாசன் உள்ளே காத்திருந்தார்.
“என்ன சார், நான் ஏதோ பரீட்சை எழுதுனேன்னு கையெழுத்து வாங்குறாங்க. நான் கேள்வித்தாளக் கூட பாக்கலையே சார்..” பரிதாபமாய் கேட்டேன்.
“இதான் அது..! சீக்கிரமாய் இதுலயும் ஒரு கையெழுத்து போடுங்க..”
இந்த வினோதமான பரீட்சையில் அப்படி என்னதான் கேட்டிருக்கிறார்கள் என்ற ஆவலில் அந்த பேப்பரை வாங்கிப் பார்த்தேன்.
நோட்டு பேப்பர் சைஸில் ஒரு சிறிய பேப்பரில் ஒரே ஒரு அட்டவணை மட்டும் போட்டு, வினா எண் என்று போட்டு 1 முதல் 12 வரை அச்சிட்டிருந்துது.
அதற்கு இணையாக விடைகள் என்று போட்டு அ, இ, ஆ என்று மாற்றி மாற்றி நிரப்பியிருந்தனர்.
மதியம் ஆபீஸ் போனதும் ராம் இடம் நான் எழுதிய இந்த எக்ஸாம் பத்தி சொல்லனும். அவனுக்கு எக்ஸாம் னாலே பயங்கர அலர்ஜி. மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.
என் கையில் ஒரு விண்ணப்பத்தைத் திணித்து விட்டு,
“இதே க்யூல வாங்க. அந்த கடைசியில் சிகப்புச்சட்டை போட்டவர்கிட்ட இதையும் உங்க ரேசன் கார்டயும் குடுத்திங்கன்னா அவ்ளோதான்.”
பையில் கைவிட்டால் போட்டோ மட்டுமே வந்தது. என் விதியை நொந்து கொண்டே அடுத்த Zip-ஐ திறந்தேன். நேற்றிரவு ரேசன் கார்டை எடுத்து கப் போர்டில் வைத்தது நினைவுக்கு வந்தது. ஷட்.
“சார்.., ரேஷன் கார்டை மறந்துட்டேன் சார். இப்போ என்ன பண்றது.”
“சரி சரி.. விடுங்க பாத்துக்கலாம்” என்றபடி அடுத்தவரைக் காப்பாற்ற நகர்ந்தார்.
என் முறையும் வந்தது. கொஞ்சம் பெரிய சைஸ் ரோட் சிக்னல் மாதிரி சிகப்பு நிறத்தில் பயமுறுத்தினார் அந்த இன்ஸ்பெக்டர்.
என் விண்ணப்பத்தைப் புரட்டிப் பார்த்தவர்,
“அட்ரெஸ் ப்ரூஃப்?”
முடிந்த அளவு சோகமான ஒரு முகத்தை வைத்துக்கொண்டு,
“Sir, actually I forgot my ration card. I am working in…”
“என்னா? மறந்துட்டீங்களா? அது இல்லாம ஒன்னும் பண்ண முடியாது. டிரைவிங் லைசென்ஸ்னா சும்மான்னு நெனச்சிங்களா..” எனத்தொடங்கி ஒரு சிற்றுரையே நிகழ்த்திவிட்டார்.
எல்லோரும் என்னையே பார்ப்பதாய் ஒரு உணர்வு. நிமிர்ந்து பார்க்கக் கூட கூச்சமாய் இருந்தது. அதற்குள் எங்கிருந்தோ ஆபத்தாண்டவராக ஓடி வந்த தாசன்
“சார் சார், அது நம்ம ஸ்கூல் பையன் சார்”
“சரி.. சரி.. அட்ரெஸ் ப்ரூஃப் இல்ல.. இதுல இருக்கிற அட்ரஸ அடிச்சுட்டு டிரைவிங் ஸ்கூல் அட்ரஸ எழுதிட்டு வாங்க. லைசென்ஸ் அந்த அட்ரெஸ் போட்டுதான் வரும். ஓகேவா?” என்றபடி நீட்டினார்.
நான் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, தாசன் அவசரமாக தலையாட்டிவிட்டு விண்ணப்பத்துடன் என்னையும் வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
“சார், நான் போய் ரேசன் கார்ட எடுத்துட்டு இன்னோரு நாள் வற்ரேன் சார்..”
“அட, நீங்க ஒண்னு.. .. உங்களுக்கு என்ன அட்ரெஸ் வேணும்னு ஒரு பேப்பர்ல எழுதி கொடுங்க.. அது போதும். நாளைலேந்து டிரைவிங் கிளாஸ் வந்திடுங்க.”
ராம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக
“ம்.. இது என்னடா..? பாஸ்போர்ட் ஆபீஸ் போய் பாரு.. ஹண்ட்ரட் ருப்பீஸ் கொடுத்தா உன்ன க்யூல முன்னாடி கொண்டு போய் நிக்க வைக்க கூட ஆள் இருக்கு..”
“எப்படிடா?” ஆச்சரியம் விலகாமல் கேட்டேன்.
“அப்படித்தான். Anything is possible in India” என்னைப் பார்த்து கண்ணடித்தான்.
என்னுடைய டிரைவிங் கிளாஸ் தொடங்கியது. 2,3,4 வது கியரெல்லாம் ஒழுங்காக வந்துவிட பர்ஸ்ட் கியர் போட்டு ஸ்டார்ட் செய்வது மட்டும் 20
கிளாஸ்க்கு அப்புறமும் அடம் பிடித்தது.
டெஸ்ட் நாளும் வந்தது. எவ்வளவோ முயன்றும் நான் பயந்த மாதிரியே ஓட்டும் போது வண்டி ஆஃப் ஆகி விட்டது. டெஸ்ட் முடித்து அருகிலேயே காத்திருந்தேன்.
அரைமணி நேரம் கழித்து என்னிடம் ஓடி வந்தார் தாசன். கூடவே அசலா போலியா என்று கூறமுடியாத மூச்சிரைப்பும்.
“சார் சார்… உங்கள பெயில் பண்ணிடவான்னு கேக்குறாரு இன்ஸ்பெக்டரு…. பெயிலானா 200 ரூபா கட்டி அடுத்த வாரம் திரும்பவும் வரணும் சார்..”
இதற்குள் அந்த அலுவலகத்தின் நடைமுறைகள் எனக்கு ஓரளவு அத்துப்படியாகிவிட்டன.
“இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க..”
“இன்ஸ்பெக்டர் நமக்கு தெரிஞ்சவர்தான். வேணுன்னா இன்னைக்கே முடிச்சிடலாம். ஆனா… ஒரு நூத்தம்பது ரூபா கூட செலவாகும்..”
சிறிது நேரத்திற்குப் பின் என்னை ஒரு அறைக்கு அழைத்துச்சென்று ஒரு digi cam-ல் போட்டோ எடுத்தனர். பின் ஒரு பிரிண்ட் அவுட்டில் கையெழுத்திட்டேன்.
“சாய்ங்காலம் நம்ம ஸ்கூலுக்கு வந்து லைசென்ஸ் வாங்கிக்கலாம் சார்..” புன்னகை மாறாமல் வழியனுப்பினார்.
மாலை டிரைவிங் ஸ்கூல் சென்று என் லைசென்ஸை வாங்கி ஆச்சரியத்துடன் பார்த்தேன். என் வீட்டு முகவரி, வரி வரியாக அச்சிடப்பட்டிருந்தது.
“எது வேணா பண்லாம் சார்..” தாசன் பல்லைக்காட்டினார்.
“Anything is possible in India” ராம் சொன்னது நினைவுக்கு வந்தது.
தெருவில் இறங்கி நடந்தேன்.
டீக்கடை டீவியில் ஒரு செல்போன் விளம்பரம் கேட்பாரற்று அலறிக் கொண்டிருந்தது,
“விழித்திடு இந்தியா! விழித்திடு”