Monday, December 08, 2008

ரகுவம்சம்

நமக்கெல்லாம் இராமனின் அயணம் இராமாயணம் தெரியும். ஆனால், அவனுக்கு முன்னும் பின்னுமான கதை பெரிதும் தெரியப்படாமலேயே இருக்கிறது. இராமன் பிறந்த அந்த வம்சத்தை அதன் வரலாறை ஆதியோடந்தமாக விவரிக்கிறது இந்நூல்.

ஒவ்வொரு அரசனின் வரலாறும் ஒரு அத்தியாயமாக வருகிறது. இராமனின் வரலாறான இராமாயணம் இந்நூலின் ஒரு அத்தியாயம் எனும் போது ரகு வம்சத்தின் உண்மையான பரிமாணம் விளங்கும்.

யார் இந்த ரகு? ரகு, ராமனின் கொள்ளுத்தாத்தா. ராமனின் வரலாற்றில் ஏராளமான ஜனரஞ்சக விஷயங்களும் வீரதீர சாகசங்களும் நிறைந்திருந்தாலும், ரகுவின் காலத்தில்தான் அந்த சாம்ராஜ்யம் விசுவருபம் கொண்டு தெற்கே காவிரி வரை வியாபித்து நிலைகொண்டது. அதனால்தான் ரகுவம்சம்.
ஆசிரியருக்கு சொல்வதற்கு ஏராளமான விசயங்கள். எல்லாவற்றையும் முடிந்த அளவு சுவைகுன்றாமல் சுருக்கி அளித்திருக்கிறார்.

படிக்கும் போதே கருத்தைக் கவர்வது அந்த மொழி நடைதான். படிக்க படிக்கத்தான் புரிகிறது காளிதாசன் ஏன் இவ்வாறு கொண்டாடப்படுகிறான் என்று. ஒரு மாதிரி ஆடம்பரமான எழுத்து நடை. குறிப்பாக உயர்வு நவிழ்ச்சியும் தற்குறிப்பேற்றமும் திகட்டத் திகட்ட கொட்டிக்கிடக்கின்றன.
நூற்று முப்பதுக்கும் குறைவான பக்கங்களில் மிகச்சிறிய புத்தகம்தான். ஒரு சில மணிநேரங்களில் முடிக்க முடிந்தாலும், மிக நிதானமாக அனுபவித்துப் படிக்க வேண்டிய ரகம் இது.
காட்சி விவரிப்புகளிலும் அப்படி ஒரு அழகு. நான் எதுவும் சொல்ல வேண்டாம். இதோ ஒரு வசந்த கால வர்ணனை..
மாமரத்தில் தளிர்கள் தோன்றி காற்றில் அசையும் போது கிளைகள் விரல்களை அசைத்து அபிநயம் செய்ய பழகுவது போல் தோன்றின. குயில்களின் வசந்தகாலக் கூவல், நாணத்தால் இளம்பெண்கள் காதற்பேச்சை மென்று விழுங்கிப் பேசுவது போல் இருந்தது. காடு முழுவதும் மலர்கள் தோன்றி, வண்டுகள் ரீங்காரம் செய்யத்தொடங்கின. இதனால் கிளைகள் அபிநயம் பிடித்து ஆடின
ரகுவம்சம் - பக்கம் 67

அழகியல் மட்டுமல்ல, போர்களங்களிலும் இந்த வார்த்தை ஜாலம் தொடர்கிறது. அஜன் படையெடுத்து செல்லும் காட்சியை காளிதாசன் எப்படி விவரிக்கிறான் என்று பாருங்கள்.
ஆனாலும் முறைப்படி நடந்த யுத்தம் மிகக்கடுமையாக நடந்தது. பலர் அதில் கொல்லப்பட்டனர். பலருடைய தலைகள் வெட்டப்பட்டு, வெட்டிய வேகத்தால் அவை உயரக்கிளம்பிச் சென்றன. யுத்தகளத்தில் பிணங்கள் கிடந்ததால், கழுகுகள் ஆகாயத்தில் சுற்றிச் சுற்றி வந்தன. அவற்றின் கால்நகங்களில் தலைகளின் மயிர் சிக்கியதால் தலைகள் கீழே தரையில் விழத் தாமதம் ஆயிற்று.
... ... ...
குதிரைகளின் காலடி வேகமாகப் படுவதால் புழுதி கிளம்பியது. யானைகள் தன் விசிறி போன்ற காதுகளை அசைப்பதால் புழுதி எங்கும் பரவியது. பரவிச்சென்ற புழுதிப்படலம் சூரியனையே திரையிட்டு மறைப்பதைப் போல் மறைத்துவிட்டது. ஆனால், போரின் கடுமை மேலும் அதிகரித்தபின் வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பெருகும் ரத்தம் புழுதியைச் சற்றே அடக்கியது..
ரகுவம்சம் - பக்கம் - 53,54


‘நந்தவனத்திற்கு செல்லும் வழி’ என்று பெயர்ப்பலகை படிப்பதைப் போலிந்தது இந்நூல். நந்தவனம் என்று படிக்கும் போதே இப்படி இருக்கிறதே, உண்மையிலே அந்த நந்தவனத்திற்கு சென்றால் என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் கடந்து செல்கிறது. ரகுவம்சத்தை அதன் மூல வடிவிலேயே படித்துச் சுவைக்கும் அளவிற்கு மொழியறிவு இல்லாததால் பெயர்ப்பலகை கொண்டே சமாதானம் கொள்ளவேண்டியிருக்கிறது.

கதை நடந்த காலத்தை ஒட்டிய பல சுவையான துணுக்குகள் காணக்கிடைக்கின்றன. ஏதாவது மரம் பூக்காமல் இருந்தால் என்ன பண்ணுவோம். கொஞ்சம் யூரியாவோ பொட்டாஷோ கலந்து வைக்கணும் என்றுதான் நாம் யோசிப்போம். ஆனால், காளிதான் எப்படி யோசிக்கறார்னு பாருங்க.
மகிழ மரம் மலராது இருந்தால், இளமையான அழகிய பெண்கள் மதுவைத் தம் வாயில் ஊற்றி, பின் மரத்தின் மேல் உமிழவேண்டும். அப்படி உமிழ்ந்தால் மரம் உடனே பூக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு தோஹதம் என்று பெயர்.
ரகுவம்சம் - பக்கம் 66

(கொடுத்து வைத்த மகிழ மரம் ;-) )
இப்படிப் பண்ணினா, நிச்சயம் மரம் பூக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகமா?

பல போர்க்களத் தந்திரங்களும் காணக்கிடைக்கின்றன.
முன்னேறிச் செல்லும் சேனைக்கு இடையூறாக எங்கேனும் சிறிய ஆறுகள் குறுக்கிட்டால், யானைகளை வரிசையாக நிறுத்தி பாலம் அமைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து படைகள் முன்னேறிச் செல்லும். இப்படித்தான் கபிசை என்ற ஆற்றைக் கடந்து படைகள் முன்னேறிச் சென்றன.

எங்கும் யுத்ததர்மம் மீறப்பட்டதாக குறிப்புகள் இல்லை. (பெரும்பாலான) யுத்தங்கள் தர்ம சாத்திரத்தின் படியே நடந்திருக்கின்றன. படையெடுத்து செல்லும் மன்னன் போர் ஒன்றையே குறிக்கோளாய்க் கொள்ளாமல் செல்லும் வழியிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சாலையமைத்தல் நீர்வசதி ஏற்படுத்துதல் போன்ற அடிப்படைச் சீர்திருத்தங்களைச் செய்தபடியே முன்னேறுவதாக வருகிறது.

இங்கு கவனிக்க வேண்டிய விசயங்கள் இரண்டு. ஒன்று போர் என்பது நாட்டின் எல்லைகளை விரிவாக்குவதற்கு நடந்தாலும், அதில் ஒரு அவசரம் இல்லை. முன்னேறும் படைகள் மிக நிதானத்துடன், தங்களின் மக்கள் வளத்தை வீணடிக்காமல் ஊர்ச்சீர்திருத்தத்துக்காக பயன்படுத்தியுள்ளனர்.

இரண்டாவது போர்களத்திற்கு செல்லும் படைகளை அக்ரோணி என்ற அலகில் வரையறுக்கின்றனர். இப்படி பெரும்படைகள் கடந்து செல்லும் போது கடக்கும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஏராளமான உணவுப்பொருட்களும் பிற அடிப்படைத் தேவைகளும் பெறப்படும். என்னதான் நாட்டைக் காக்கும் படையாக இருந்தாலும், ஒரு அளவைத் தாண்டும் போது மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். அதனை தணிக்கும் விதமாகவும் இந்த சீர்திருத்தங்களைக் கொள்ளலாம்.

எது எப்படியோ, யுத்த தர்மத்திலும் அரசியல் நடைமுறைகளிலும் ரகு வம்ச மன்னர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

முழுவதும் கதையுடன் ஒத்துப் போனேன் என்று சொல்ல முடியாது. ஒரு சில முரண்கள் ஏற்பட்டாலும், இது ஒரு காவியம். அந்த வகையில் சில சலுகைகள் கிடைத்துவிடுகின்றன.

நூலாசிரியர் அ.வெ.சுப்பிரமணியனை பாராட்டியே ஆகவேண்டும். காலம் கடந்து நிற்கும் ஒரு காவியத்தை அழகாக தமிழ் வாசகர்களுக்காக படைத்திருக்கிறார்.

NHM ன் புத்தக வடிவமைப்பு பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஒரே ஒரு நெருடல். ‘சமஸ்கிருமும் தமிழும் இவருக்கு இரண்டு கண்கள்’ என்பதைத் தவிர, மருந்துக்குக் கூட ஆசியரைப்பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் இல்லை. சிறிய அளவிலாவது ஆசிரியர் குறிப்பு வைத்திருக்கலாம் என்று பட்டது.

மத பேதங்களைக் கடந்து தொன்மையான இந்திய மனதின் கதைகளை, அதன் வரலாறை, வாழ்க்கையை அறிந்து கொள்ள, இது முழுமையான நூல் அல்ல. ஆனால், நிச்சயம் படிக்கப்பட வேண்டிய நூல்.

நூலைப் பற்றிய மேலும் சில தகவல்கள்:
ரகுவம்சம்
அ.வெ.சுப்பிரமணியன்
வரம் வெளியீடு
136 பக்கங்கள்
ரூ.60
ISBN 978-81-8368-424-8

புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

சிறப்பான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து, இப்புத்தகத்தை வழங்கி உதவிய NHM - ற்கும் உடனுக்குடன் பதிலளித்து உதவிய நண்பர் ஹரன் ப்ரசன்னாவிற்கும் என் நன்றிகள்.