Wednesday, December 19, 2007

பெங்களுர் மக்களே..! பதில் சொல்லுங்க..

மெல்லிய பனி, கொஞ்சம் அதிகமாகவே குளிர், காலத்தைக் கடந்த தேவாலயங்கள், ராணுவக் குடியிருப்புகள், எரிச்சல் தரும் டிராஃபிக், தீப்பெட்டிக் குடியிருப்புகள், அடிக்கடி வரும் marketing Call கள் இவற்றோடு பெங்களுரென்றவுடன் தவிர்க்க இயலாத மற்றொன்று FM radio தாங்க..

நானும் ரொம்ப நாளாப் பாத்திட்டேன்.
எல்லா சேனல்லையும், கண்டிப்பா கன்னடப் பாட்டு போடுறாங்க.. ஹிந்தி பாட்டு போடுறாங்க.. ஆங்கிலப் பாட்டு போடுறாங்க.. தெலுங்குப் பாட்டு போடுறாங்க.. இவ்ளோ ஏங்க..? மலையாளப் பாட்டு கூட ஒரு முறை கேட்டிருக்கேன்.. ஆனா இன்னைய வரைக்கும் ஒரு முறை கூட தமிழ் பாட்டு கேட்டதில்லை..?
ஏன் இப்படி?

Wednesday, December 05, 2007

காதலிக்க நேரமில்லை - Title Song

இப்போதெல்லாம் திரைப் பாடல்களுக்கு போட்டியாக வந்து விட்டன நம் சின்னத்திரைப் பாடல்களும். "கண்ணின் மணி... கண்ணின் மணியி"ல் தொடங்கி இன்றைய கோலங்கள் வரை பல பாடல்கள் மக்களின் கவனத்தைக் கவர்ந்திருந்தாலும், சமீபத்தில் வெளிவந்திருக்கும் காதலிக்க நேரமில்லையின் தலைப்புப் பாடல் எனனை வெகுவாகக் கவர்ந்தது.

அழகான பாடல் வரிகள், பொருத்தமான குரல் தேர்வு, மனதை வருடும் மெல்லிய Beat உடன் கூடிய இசை என, ஒரு பெண்ணின் ஏக்கங்களை மிக கச்சிதமாக பதிவுசெய்திருக்கும் இப்பாடல் பெரும் ரசிகர் வட்டத்தைப் பெறும் என நம்பலாம்.
உங்களுக்காக அப்பாடல் இங்கே..


kathalikka neramillai
kathalikka neramil...
Hosted by eSnips

Monday, November 19, 2007

எனக்கென...




நாளின் இனிமை சொல்லும் இளகிய மாலை...
வானவில்லும் வியந்து போகும் அழகிய சோலை..
பூக்களின் பாடலை என் காதில் ஓதி
போதை கூட்டியது தென்றல்..
தனிமையில் அமர்ந்திருந்த நான்
என்னைச்சுற்றிய புல்வெளியில்
பனித்துளியாய் மாற யத்தனித்த நேரம்,
முன்னறிவிப்பின்றி என் முன்னே வந்தமர்ந்தது
ஒரு பட்டாம்பூச்சி


அனிச்சையாய் கைகள் நீட்டினேன்..
எதற்காக? பிடிப்பதற்கா?
தெரியவில்லை..
பிடித்தால் என்ன செய்யப்போகிறேன்?
மென்மையின் மேனி தீண்டவோ?இல்லை
வழித்துணையாய் வீடு செல்லவோ?
விடையில்லை.. ஆனாலும்
உள்மனதில் உருக்கொண்ட ஆசையில்
உடன் களத்தில் குதித்தேன்.



எழுந்து நெருங்கினேன்.
மெல்ல படபடத்து
அடுத்த மலருக்குத் தாவியது..
தொடர்ந்தேன்..
அதற்கடுத்த மலருக்கும்..
என் பிரயாசை அனைத்தையும்
தன் ஒற்றைச் சிறகசைப்பில் தட்டிவிட்டபடி
பூக்களுக்கிடையில் ஒரு பிரௌனியன் பாதையில்
சிறகடித்தது பட்டாம்பூச்சி..


நீண்டு கொண்டே சென்ற
அந்த நிகழ்காலத்தின் முடிவில்
நிச்சயமற்று நான்..
கடந்து செல்வது மலர்ப்பாதை எனினும்
என் மனதுக்குள் ஒற்றை முள்ளாய்
ஒரு ஏமாற்றம்..



திரும்பிப்பார்த்த போது
தொடங்கிய இடத்திலேயே நான்..
கால்கள் களைத்து கடைசியில் வந்தமர்ந்தேன்..
காட்சி இன்பத்தில் மனம் லயிக்கவில்லை..
மனதில் வெறுமை மட்டுமே நிரம்பி வழிந்தது..
சாதாரண வெறுமையல்ல..
அள்ள அள்ளக் குறையாத வெறுமை.
கண்ணைச்சுற்றி காட்சியிருந்தும்
காணமுடியாத வெறுமை..
பச்சைப் புல்வெளிகளில் இருந்த ஆனந்தம்
இப்போது இல்லை.
இப்பூங்காவின் கவின் முழுமையும்
அந்த ஒற்றைப் பட்டாம்பூச்சி
களவாடிச் சென்று விட்டதாய்த் தோன்றியது..


இருக்குமிடமெங்கும் மெல்ல இருள் படர்ந்தது.
என் மனதிலும்தான்..
வானம் பார்த்தேன்..
என்னைப் போலவே தனிமையில்
அந்த நிலா..
எனக்காய் அழுவதாய்த் தோன்றியது.
நிலவுக்கு ஆறுதல் சொல்லும் தைரியம்
எனக்கிருக்கவில்லை...
மௌனமாய் தரை நோக்கியிருந்தேன்..
மனதினுள் ஏதோ ஒரு சலசலப்பு..
துரத்தல் தொடங்கிய அதே மலர் மீது
பட்டாம்பூச்சி மீண்டும்.


இம்முறை என் கைகள் நீளவில்லை..
மௌனமாய்ப் புன்னகைத்தபடி விழி மூடினேன்..
நொடிகளும் யுகங்களும்
உருபுமயக்கங்களாய் உருப்பெற்று
உருண்டோடின..
விழிதிறந்த போது
என் விழித்திரையில்
அந்த பட்டாம்பூச்சி இல்லை..
அதிர்வின்றி எழுந்து நின்றேன்..
மனதில் ஏதோ ஒரு நிம்மதி..
இப்பூங்கா மீண்டுமொரு முறை
பூப்பெய்தியதாய் ஒரு பிரமை..
என் மனம் இப்போது
ஆனந்தமாய் படபடத்துக் கொண்டிருந்தது
மெல்ல வீடு நோக்கி நடக்கத்தொடங்கினேன்..
குனிந்து பார்க்கவில்லை என்றாலும்
எனக்கு நிச்சயமாய்த் தெரியும்
அந்த பட்டாம்பூச்சி
இப்போது அமர்ந்திருப்பது
என் தோள் மீது..

Friday, November 02, 2007

நிலவு கடுப்ப நினைவுகளே..!


தூக்கம் தொலைத்த இரவுகளில் துணைவந்து,

தேய்வதாய் மயக்கி தினம் வளர்ந்து,

மாநிலம் மேவியோடிய போதும் உடன்வந்து,

நோதலோ காதலோ நிச்சயம் தருவதி்ல்

நிலவு கடுப்ப நினைவுகளே..!

Wednesday, October 31, 2007

தமிழில் எழுத Google-ன் மந்திரப்பக்கம்

வலைப்பதிவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை, தமிழில் தட்டச்சுவது. என்னதால் feel பண்ணி பக்கம் பக்கமா எழுதினாலும், கடைசியில் பதிவிடுவதற்குள் டாவு தீர்ந்துவிடும்.. ( தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு..)

இணையத்திலும் பலவித உதவிப்பக்கங்கள் அங்கங்கே உள்ளன. என்னதான் இருந்தாலும் தமிழில் நேரடியாக தட்டச்சும் சுலபம் (அ) செளகரியம் கிடைப்பதில்லை.

இப்போது, Google -ம் இந்த களத்தில் குதித்திருக்கிறது. Google ன் மற்ற படைப்புகள் போலவே, வாய் பிளக்க வைக்கிறது. புதுமையான ஒரு முயற்சி. இப்பக்கத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சி தமிழில் பெற முடியும். இதுதான் எல்லா இடத்திலும் இருக்கிறது என்கிறீர்களா? அதுதான் இல்லை..

இப்பக்கம், ஒவ்வொரு எழுத்தாக எழுத்துரு மாற்றுவதற்குப் பதில் ஒவ்வொரு வார்த்தையாக மாற்றுகிறது. ஒரு வார்த்தைளை எழுதிய பின் space அழுத்தினால் மந்திரம் மாதிரி முதல் வார்த்தை மாறுகிறது. மிகப்பெரிய செளகரியம், அம்மா என்று எழுத Amma, Ammaa என எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அகராதிச்சொற்கள் மட்டுமல்லாது, பெயர்சொற்கள் ஊர்ப்பெயர்கள் எனப் பலவித சொற்களையும் எழுத்துப்பிழையின்றி எழுதமுடியும்.
( எ.கா) Tanjavur, Thanjavur, Thanjavoor, Tanjaavur, Thnjavur <--( 'a' missing. note this) என எப்படி எழுதினாலும் தஞ்சாவூர் கிடைக்கும். இது போன்ற சிறிய வேறுபாடுகளை, தானாகவே கண்டறிந்து சரிசெய்து கொண்டு விடுகிறது.. உண்மையிலேயே வலைப்பதி்வர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். முயற்சித்துப் பாருங்களேன்..
http://www.google.com/transliterate/indic/Tamil

பி.கு:
தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாலம் ஆகிய மொழிகளிலும்
இப்பக்கத்தில் தட்டச்சலாம்.

Tuesday, October 23, 2007

சத்தம் போடாதே- ஒரு பார்வை




We don't see and define. We dfine and then see.
-யாரோ

வேறு எந்த விஷயத்தில் இல்லாவிட்டாலும், திரைப்படங்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் உண்மையே...

பொதுவாக, ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன், அதனைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனத்தை அறிய நான் முற்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் வாழ்வின் சுவாரஸ்யமே, அடுத்த நொடியின் ஆச்சரியத்தில்தான் அடங்கியிருக்கிறது. அந்த அரைநொடி சந்தோஷத்தை இழக்க விரும்பாதவன் நான். ஆனால், பல நேரங்களில் இது சாத்தியப்படுவதில்லைதான். எத்தனையோ ஊடகங்களின் வாயிலாக, படத்திற்கு போவதற்கு முன்பே அதனைப் பற்றிய ஒரு பிம்பம் நம் மனதில் பதிக்கப்பட்டு விடுகிறது. அதன் பின் படம் பார்க்கப் போனால், ஆறு வித்தியாசம் கண்டுபிடித்த கதைதான்.

ஒரு சில திரைப்படங்களே இப்பிம்பத்தை உடைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான், 'சத்தம் போடாதே' வில் எனக்கு நேர்ந்தது.

வழக்கமான விமர்சனங்கள் போல், ஒரு பக்கத்திற்கு குறையாமல் கதை'சுருக்கம்' தந்து, காட்சிகளை அக்கக்காக பிரித்து அலசி ஆராய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், என் மனதில் பட்ட சில கருத்துக்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

நான் படத்திற்கு செல்லும் முன்பே, நண்பர்கள் வட்டத்திலிருந்து பலதரப்பட்ட அறிவுரைகள், விமர்சனங்கள் இன்ன பிறவும். "இருக்கும் வேலைப்பளுவுக்கு மத்தியில், கிடைக்கும் ஒரு வார இறுதியையும் வீணடித்து விடாதே" என்ற அளவுக்கு வந்தன. இருப்பினும், வஸந்த் படமாயிற்றே. அப்படி என்னதான் இருக்கிறது ஒரு முறை பாத்த்துதான் விடலாம் என்றுதான் சென்றேன்..

சுருங்கச் சொல்லின், ஒரு நல்ல திரைப்படம். சமீப காலங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் குத்துப்பாடல்கள் நிரம்பி வழியும் மசாலாப் படங்களுக்கு
இது எவ்வளவோ தேவலாம்.. அங்கங்கே தென்படும் சில அபத்தமான காட்சிளைத்தவிர( யாருமே இல்லாத காட்டில், எப்போதும் இஸ்திரி போட்டுக் கொண்டிருக்கும் அந்த இஸ்திரி கடைக்காரன் மாதிரி) மொத்தத்தில் நன்றாகவே இருக்கிறது.

படத்தில் மொத்தமே விரல் விட்டு எண்ணக் கூடிய கதாபாத்திரங்கள்தான். ஆனாலும், ஒரு நாடகத்தன்மை வராமல் படத்தை கொண்டு சென்றிருப்பதற்கு இயக்குனருக்கு சபாஷ் சொல்ல வேண்டும். வழக்கமான தமிழ் சினிமாவாக இருந்திருந்தால், நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நிச்சயம் ஒரு சண்டைக்காட்சி இடம்பெற்றிருக்க வேண்டும். இறுதிக்காட்சியில் வரும் அந்த பாழடைத்த பங்களாவில், நாயகன் வில்லனை துரத்தி துரத்தி நையப்புடைத்தபின் (அல்லது வில்லனைக் கொன்ற பின்) படம் முடிந்திருக்கும்..

ஆனால், இவை எதுவும் இல்லாமல், ஹீரோயிஸத்தை முடிந்த அளவு குறைக்க சிரமப்பட்டிருக்கிறார் இயக்குனர். "பேசுகிறேன்.." பாடலும், விவாகரத்துக்குப் பின் நாயகியைக் கவர நாயகன் வகுக்கும் வியூகங்களும் ரசிக்க வைக்கின்றன..புதுமுக ஒளிப்பதிவாளராம்.(பெயர் மறந்து விட்டது) சிறப்பாகவே செய்திருக்கிறார். நா.முத்துக்குமார் யுவன் கூட்டணியின் பெயர் சொல்லும் படி இல்லை பாடல்கள்.(ஒன்றைத்தவிர).

இது போதுங்க. இன்னமும் தெரிஞ்சுக்க, நீங்களே தியேட்டருக்கு போய் ஒரு தடவை பாத்திட்டு வாங்க..

என் பரிந்துரை:: "நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்"

Tuesday, October 16, 2007

நான் ஏன் எழுதுகிறேன்..? ஜெயகாந்தன்

எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன்.
எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச்செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன்.
வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்.
ஜெயகாந்தனின் வானொலி உரை- ஜீலை-5- 1971

இப்படிச்சொன்ன ஜெயகாந்தன்தான் பின்பொருமுறை, "நீங்கள் ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை?" என்று கேட்டதற்கு,
"நான் விரும்புவதை எழுதுவதற்கு எனக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ, அதே அளவு சுதந்திரம் எழுதாமல் இருப்பதற்கும் உள்ளது" என்றார்..

என்ன ஒரு விசித்திரமான பதில்..! அவருடைய கதாபாத்திரங்களின் சாயல், அவர் மூலம் அடிக்கடி வெளிப்படுவதைக் காணலாம். அல்லது எதிர்த்திசையில் , அவரது குணாதிசியங்கள் அவரின் கதாபாத்திரங்களின் மீது படிந்திருப்பதாகவும் கொள்ளலாம். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கங்காவாகட்டும் 'யுகசந்தி'யின் கெளரிப்பாட்டியாகட்டும், ஏதோ ஒரு விதத்தில் எங்கோ ஒரு மூலையில் அவரின் சாயல் தென்படும்.

அவர் தேர்தலிலும் ஒரு முறை போட்டியிட்டிருக்கிறார், தி.நகர் தொகுதியில். அதில் அவர் பெற்ற வாக்குகள் 200க்கும் குறைவே. எதற்காக தேர்தலில் நின்றார்? தெரியாது.. தேர்தல் முடிவுகளுக்குப் பின் "என்னை நம்பி வாக்களித்த அனைவருக்கும் நன்றி" என்ற அறிக்கையும் கூடவே வந்தது.

அவருடைய பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் தென்படுவது போன்ற 'ஸ்திரபுத்தி'யில்லாத தன்மையா? அல்லது, நான் நினைத்ததை நான் செய்கிறேன் என்ற தன்னிறைவா இது.? தெரியாது..

இவை எல்லாவற்றையும் கடந்து, என் மனதைக்கவர்ந்த எழுத்தாளர் அவர்.. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவரின் 'கர்வம்'. தான் ஒரு எழுத்தாளன் என்ற கர்வம்.. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத அந்த ஞானச்செருக்கே அவரின் அடையாளம்.

பாரதீய ஞானபீட தேர்வுக்குழுவினர் சொன்னது...
"தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, இந்திய இலக்கிய உலகுக்கு அவரது பங்களிப்பு மேன்மை சேர்த்திருக்கிறது. "
உண்மைதான்...

Saturday, October 06, 2007

அவளைப் போல் ஒரு கவிதை..!

பழனிபாரதியின் 'மழைப்பெண்' கவிதைத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கவிதை ஒன்றுண்டு.

அது,

"ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு
ஆணும் போதாது காதலுக்கு..
நிலா வேண்டும், மழைவேண்டும்,
மீன் வேண்டும், காடு வேண்டும்,
தும்பி வேண்டும், மழலை வேண்டும்,
மண்புழு வேண்டும்,
கவிதை வேண்டும்.. "

காதல் கவிதைகள் என்றால் கவிஞர்கள் செய்த காலவிரயம் என்று எண்ணியிருந்த எனக்கு மாற்றுக்கருத்து ஏற்பட உதவிய கவிதைகளில் இதுவும் ஒன்று.( இன்னும் பல உண்டு. அவற்றை பிறகு பார்க்கலாம்)


ஆனால், ஒன்று நிச்சயம். நானும் கொஞ்சம் காதல் எழுதவேண்டும் என்ற ஆவல் துளிர்விட்டது. இதோ நான் எழுதிய கொஞ்சம், இங்கே..

காதல் வந்தாலே, உலகியல் வரையறைகள் தகர்ந்து போவது சகஜம்தான். கவிதையும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் எழுதியதை கவிதைகள் என்று சொல்லமாட்டேன். காதல் பித்தில், சில பிதற்றல்கள்.. அவ்வளவே.. !! காதலின் தீண்டல் கண்டவர்களுக்கு இவை சுவைக்கலாம்..!!!

கவிதையை படங்களுடன் காண, இங்கே செல்லவும்..

  • பாடுபொருளாய்
    காதலைக் கொள்வேனென
    கனவிலும் நினைக்கவில்லை.
    நீ
    வந்தாய்..!
  • -------
  • உன்னில் பிறக்கும்
    கவிதைகளின்
    வளர்ப்புத்தாய்
    நான்..!
  • -------
  • என் கவிதைகளுக்கு
    முதலும் முடிவும்
    ஒரே புள்ளிதான்,
    முடிவிலியைப் போல,
    நீ..!
  • -------
  • எத்தனை அலை
    வந்து சொல்லிச்சென்ற
    பின்னும்,
    மிச்சமிருக்கின்றன
    கடலைப்பற்றிய கதைகள்,
    உன்னைப் பற்றிய
    என் கவிதைகளும்...
  • -------
  • நம்மில் அல்ல,
    நமக்கிடையே
    நிரம்பியிருக்கிறது,
    காதல்..!
  • -------
  • எழுதாமல் விட்ட வரிகள்தான்
    அதிகம் சொல்கின்றன..
    என் காதலை.. !
  • -------
  • தேவதைக் கதைகளை
    கேட்டதில்லை நான்..
    ....
    பார்த்திருக்கிறேன்..!
  • -------
  • என் கவிதைகளை
    அர்த்தமிழக்கச்செய்யும்
    அகராதி
    நீ..!
  • -------

Wednesday, October 03, 2007

படித்ததில் பிடித்தது (1)


அதை நான்
எழுதி முடிக்கும் போது
அதற்கான சுவடுகள்
அழிந்து போயிருக்கும்.
அவற்றின் சுவடுகளாய்
என்
எழுத்துக்கள் இருக்கும்

எழுதும் முன்
எது என்னை வதைத்ததோ
அது உங்களை
வதைக்கத்தொடங்கும் போது
நான் எழுதப்பட்டிருப்பேன்




-மு. மேத்தா

(ஆகாயத்துக்கு அடுத்த வீடு)

Tuesday, July 31, 2007

படம் பார்த்து பதில் சொல்லுங்க..

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு புகைப்படம் என் கருத்தைக் கவர்ந்தது.. உங்கள் பார்வைக்கு.... கீழே இருக்கும் புகைப்படத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்..



இது தொழிலதிபர் டாடா அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வந்த ஒரு ஓவியம். இதில் ஒளிந்திருப்பது என்ன என்று தெரிகிறதா.? கண்டுபிடித்தால் உங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்ய சபாஷ்..

Saturday, June 30, 2007

என் அறையில் தொலைத்த என் வாசனை


கல்லூரி விடுதிகளில்
களைப்பாறுவதற்கென்றே
வந்து தங்கிவிடுகின்றன
சில வாசனைகள்

உருவமற்று உருவம் பெறும்
ஒரு அமீபாவைப் போல்
ஒவ்வொரு அறையிலும்
ஒரு விதமாய் ஒரு நிறமாய்
ஒரு குணமாய்
உருவம் பெறுகின்றன

முதன் முதலாய்
என் அறையில்
அடியெடுத்து வைத்த அன்று
உணரவில்லை

என்று இந்த வாசம்
உருவானதென்றும் தெளிவில்லை

ஆனாலும் ஒரு நாள்
உருவம் பெற்று விட்டது...

எப்படி வந்ததிது?

பழமையின் வாசனையுடன்
புது சுண்ணாம்பின் வாசனை,
நான் பயன்படுத்தும் ஷேவிங்லோசன்,
பயன்படுத்தாமல் தூக்கிப்போட்ட
பால்பாயிண்ட் பேனா,
இன்று வாங்கிய சாக்லேட்,
உலர வைத்த துணியின் வாசம்,
என அனைத்தும் சேர்த்துப் பிசைந்த
ஒரு விசித்திரமான கலவை அது.

அந்த வாசம்
அறைக்கு அறை வேறுபடுவதை
உணர்ந்திருக்கிறேன்.
அது வெறும் வாசமல்ல.

வாசம் செய்யும் மனிதனின் வாசம்.
அவன் குணங்களின் வாசம்.
நுகர்தலுக்கு ஒரு பரிமாணம்
என்று யார் சொன்னது?
பல பரிமாண பிம்பம் காட்டும்
கண்ணாடி அது

நான்காண்டுகளின் முடிவில்
பாலை நிலத்தை நினைவு படுத்தும்
ஒரு மே மாதத்தில்
அந்த பிரிதல் நடந்தது.
உடமைகளாய் உடன் இருந்தவை
அனைத்தையும்
கவனமுடன் பைகளில் கட்டி
வீட்டுக்கு வந்து பார்த்த போது
தொலைந்து போனவை பட்டியலில்
அந்த வாசமும் சேர்ந்துகொண்டது.

அதன் பின் வருடங்கள் மட்டும்
வந்து செல்கின்றன

துரித உணவகங்கள் மணக்கும்
சாலையோரங்களில்,
நகரத்தின் நெரிசல் மிகுந்த
நாளங்காடிகளில்,
புகைவண்டிப்பயனத்தில்,
புதிதாய் வாங்கிய
நோட்டுப்புத்தகத்தில்,
என் அலுவலக
வரவேற்பறையில்,
குளிர்பதனப் பெட்டியில்
என இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன்

என் அறையில் தொலைத்த
என் வாசனையை.

Thursday, May 10, 2007

இஞ்சி இடுப்பழகி..?


தேவர்மகன் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலைக் நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.. ஆனால் இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..?


உருவகம் பண்ண எவ்வளவோ இருக்கும் போது, கவிஞர் இஞ்சியை எடுத்துக்கொண்டதேன்..?


கொஞ்சம் உங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டு ஒரு பதில் சொல்லுங்களேன்.. ஒரு சுவையான பதில் என்னிடம் உண்டு.. அதை விட சுவையான பல பதில்கள் கிடைக்குமென நம்புகிறேன்.. பார்க்கலாம்.. :-)

Tuesday, May 01, 2007

சரித்திரம் பேசட்டும்...



நான் வெற்றியென்று வெறிகொண்டு அலைந்தவர்களில் ஒருவன்
எது வெற்றி? கேள்வியில் கரைந்தவர்களில் முதல்வன்
அலையாத ஊருமில்லை!! தேடாத தேசமில்லை!!!

வெற்றி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி காட்சி தந்திருக்கிறது.
ஒரு சிலருக்கு வெற்றி எனும் சொல்லின் பொருள்
கல்விச்சாலையிலேயே முடிந்து போகிறது - இன்னும் சிலருக்கு
பணம் புகழ் பெண் செல்வம் என படிப்படியாக நீள
கடைசியில் ஒருவன் சொன்னான்

“உன்னுடைய வெற்றியை உன்னைத்தவிர
வேறு யாரால் தீர்மானிக்க முடியும்??"
இமயமலையின் உச்சிக்கே சென்றாலும் அது வெற்றியல்ல
உன் கண்களில் இருப்பது ஆகாயமென்றால்..

நானும் முடிவெடுத்தேன்
எனக்கு எல்லைகளற்ற ஒரு தேசம் வேண்டும்.
மன்னவன் எண்ணத்திற்கு மறுப்பேது?
அன்றைக்கே பட்டறைகளில் பொறி பறந்தது..

பார்சிறுக்கும் படைதிரட்டி பெரும்போர் தொடுத்தேன்
எதிர்த்தவர் தலைகளை
என் யானைகளுக்குக் கால்பந்தாடக் கொடுத்தேன்
மிச்சமின்றி துவம்சம் செய்து வெற்றி வாகை சூடினேன்


என் பாவங்களுடன் சேர்த்து
என் தேசத்து எல்லையும் விரிந்தது

* * * * * * * * *

"நாடு கடத்துங்கள் இவனை..!"
ஒருநாள் அனிச்சையாய் ஆணையிட்ட போதுதான்
கடத்துவதற்கு நாடே இல்லையென பதில்வந்தது

நாடு என்பது நிலத்துக்கல்ல; மனிதர்களுக்கு
பாதி பேரை நான் கொன்றேன்; மீதி பேரை போர் கொன்றது
இப்படி இருக்கையில் எப்படி இருக்கும் இனி நாடுகள்?

வெற்றிக்கு நான் தந்த வரையறை தவறோ?
முதன் முறையாக
கடந்து வந்த பாதை மீது சந்தேகம் வந்தது..
இழுக்கெனத் தெரிந்தும் துணிந்தபின் எண்ணினேன்..

நான் ஒருவன் வாகைப்பூ சூடுவதற்காக
ஆயிரமாயிரம் பெண்டிர் பூவிழந்தனர் என்பது
ஏன் எனக்குத் தெரியவில்லை?
நான் செய்த தவறுக்கு பூக்களுக்கும் ஏன் தண்டனை?
முடிவில் வெற்றியும்தான் எவ்வளவு சோகமானது..!

மனதில் ஒரு மின்னல்..
நீ முடிவென்று நினைக்கும் வரை எதுவும் முடிவல்ல
தற்கொலை என்பது எதிரியைக் கண்டு பயந்த
கோழையின் சவப்பெட்டி
பராக்கிரமம் பாடும் ஆயிரம் அடைமொழிகளும்
அதைவிட அதிகமாய் விழுப்புண்களும் சுமந்தவன் நான்.
எனக்கான முடிவு இதுவல்ல..
அதனை நானே தேடிக்கொள்கிறேன்..
மனதின் ஒரு ஓரம் மீண்டும் சொன்னது
-“என்றும் எனக்கு எல்லைகள் இல்லை”

Saturday, April 28, 2007

கண் கட்டா வித்தை

எத்தனையோ குழு நடனங்களை மேடைகளில் கண்டிருப்போம்.. ஆனால் சமீபத்தில் இணையத்தில் நான் கண்ட ஒரு காட்சிப்பதிவு என்னை பிரமிக்க வைத்தது.. மனிதர்களை கொண்டு செய்யப்படும் HUMAN ART எனப்படும் வடிவ வித்தைகளில் இவ்வளவு விஷயங்கள் சாத்தியமா..? சந்தேகமிருந்தால் கீழே சொடுக்கவும்..

 

 

 

Thursday, April 26, 2007

முள் இழந்த கடிகாரம்


சூரியன் உதித்தது
வானம் கிழித்து மேலேறி
மெதுவாய் ஊர்ந்தது
பூமியுடன்
பேச்சுவார்த்தை நடத்தும்
காலத்தின் தூதுவன்

காலம் -
ஒரு அதிசய ராட்சசன்
அவன் பயணம்
மிக விசித்திரமானது

யாருக்காகவும்
அவன் நிற்பதில்லை.
அவனுக்கென்று ஒரு வழி.
ஒரே வழி.
வழியெங்கும் அவன்
மென்று துப்பிய எச்சில்கள்
சரித்திரமாய்…

ஒரே வட்டத்திற்குள்
யுகம் யுகமாய்ச் சுற்றியும்
அவன் இன்னும் ஓயவில்லை.

* * * * * *

ஒருநாள் என் வீட்டில்
ஆணியடித்து மாட்டினேன்
ஒரு கடிகாரத்தையும்
சில நம்பிக்கைகளையும்

அந்த கடிகாரத்திற்குப்-
பெருமை தாங்கவில்லை.
ஒவ்வொரு நாளும்
காலம் தன்னில் முகம்பார்ப்பதால்தான்
பூமிப்பந்து சுழல்கிறதென
அதற்கொரு எண்ணம்.

மணிக்கொருதரம் என்னைக் கூப்பிட்டுத்-
தன்பெருமை பாடும்..

ஆயிரம் முறை கடந்தும்
அலுக்காமல் கேட்டேன்
அதன் நம்பிக்கையை..
இரவிலும் கூட விடுவதில்லை.

* * * * * *

அன்றொருநாள் அவதானித்தேன்
காலத்திற்கும் கடிகாரத்திற்கும்
இடையில் நடப்பது
ஒரு போட்டி,
முடிவிலிக்குச் செல்வது
யார் என…

ஒருவரை ஒருவர்
துரத்தியபடி தொடர்ந்து
ஓடிக்கொண்டிருந்தனர்
இருவரும்.

அந்த ராட்சசன் விடுவதாய் இல்லை.
ஒரு நாள், காற்றில் ஏறி
அரூபமாய் வந்தான்.

நான் உறங்கிக்கொண்டிருந்த
அந்த பின்னிரவில்,
அவனுக்கும் என் கடிகாரத்திற்கும்
நடந்த யுத்தத்தில்
அவனால் வீழ்த்த முடிந்தது
கடிகாரத்தை மட்டுமே..
மிச்சமிருந்தன நம்பிக்கைகள்.

துடித்தெழுந்து தரைநோக்கினேன்...
முள் இழந்த கடிகாரம்.

ஒரு மணி முடிந்தது,
பாடல் இல்லை..
இரண்டு… மூன்று.. நான்கு…
இல்லை.

காலம் உறைந்திருக்குமோ?
விழிகசக்கிக் காத்திருந்தேன்.
மறுநாளும் வந்தது.
வரவில்லை சூரியன்.

Thursday, April 05, 2007

வாக்கு மூலம்



(NITTFEST'07 போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை)

அதே "டிக்… டிக்… டிக்…."
எனது நிமிடங்களை மெல்ல நிரப்பிக் கொண்டிருந்தது.

அப்துல்லா பாய் கதவைத்திறக்கும் சத்தமும் டேபிள் மீது டம்ளர் வைக்கும் சத்தமும்.
பிரித்தறியமுடியாத சில பறவைகளின் ஒலி; முட்டிக்குக் கீழே தழும்பின் மீது சூரியன் லேசாக சுட்டுக்கொண்டிருந்தது.

என்னுடைய எல்லா நாளும்இப்படித்தான் தொடங்குகிறது. இந்த மலைக்கிராமத்திற்கு வந்த இந்த மூன்று மாதத்தில் என் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றும் பெரிய மாறுதல் இல்லை. கண்விழிக்கும் போது பதிற்றாண்டுகள் பழமையான அதே அறை, அதைவிடப் பழமையாக நான், அதே நினைவுகள், அதே சூரியன், அதே ஜன்னல், அதே வெறுமை.

காட்டு மல்லி பூத்திருக்குமோ?

மெல்ல கண்விழித்தேன். ஜன்னலின் வழியே கீரிப்பாறை என்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது.

இது உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான மாற்றம் அல்ல. என்னைப் பொருத்த வரை இது படுத்திருப்பதற்கும் அமர்தலுக்குமான மாற்றம். நான் இப்போதெல்லாம் தூங்குவதே இல்லை. நினைவுகளின் குவியலில் புதைந்து போவதாக அது பரிணமித்து விட்டது.

தினசரிகள் கூட வாங்குவதில்லை. இந்த உலகமே அர்த்தமற்று போன பிறகு நாட்டில் என்ன நடந்தால் எனக்கென்ன?

மெல்ல எழுந்து மல்லிச்செடியருகில் சென்றேன். இன்னும் பூக்கவில்லை. நிச்சயம் நாளை பூத்து விடும்.

இதற்கு மேலே போகும் முன், என்னைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.
"ம்ம்ம்.. என்ன சொல்ல….. நான் ஒரு அப்பாவி, ரொம்ப நல்லவன், சிங்கம் மாதிரி, திறந்த புத்தகம் மாதிரி…"
ஆங்…அங்கதான் அது ஆரம்பமாச்சு..
திறந்த புத்தகம் மாதிரி
…..
….

..
ஆம். நான் ஒரு புத்தகம்தான். செல்லரித்துப்போன ஒரு புத்தகம்.
சின்ன வயசில் எங்கள் வீட்டுக்கருகில் அரைடிராயர்கள் யாரும் இல்லை. நொண்டி, கபடி, கில்லி என அனைத்து ஆட்டங்களும் எனக்கு ஒருமையில்தான். பள்ளியிலோ எனக்கு ஆடத்தெரியாது என்று ஒதுக்கப்பட்டேன். ஒரு கட்டத்தில் அனைத்தும் அலுத்துப்போக, பேச்சுத்துணைக்கு வந்தார் கல்கி. அதன்பின் சாண்டில்யன், சாவி, தேவன் என ஒவ்வொருவராக வர என் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. என் சாம்ராஜ்யம் அது. வேறு எவரையும் தவறியும் அனுமதிக்காமல் பழிதீர்த்துக்கொண்டேன்.

* * * * * * * * * *

ஒரு நாள் வகுப்பில் எங்கள் வரலாற்றாசிரியர்,
"ராஜராஜனின் தந்தை யார்?"
"சுந்தர சோழன்" நான்.
அவரைப் பொறுத்தவரை அது ஒரு out of syllabus கேள்வி. எனக்கோ அது பொன்னியின் செல்வன் கதாபாத்திரம்.
என்னை வகுப்பின் முன் அழைத்து ஏதேதோ சொல்லி, பாராட்டி அனுப்ப, என் மனக்குதிரைக்கு சிறகு முளைத்த தினம் அன்று.

அன்று என்னைச் சுற்றியிருந்த அந்த முப்பத்தாறு ஜோடிக்கண்களில் தெரிந்த வியப்பும் ஆச்சரியமும் எனக்கு போதையூட்டின.
நான் சென்று அமர்ந்த போது, அருகிலிருந்தவன் அவனருகில் இருந்த ஒருவன் காதில் ஏதோ சொன்னது எனக்குப் பெருமையாய் இருந்தது. அன்றெனக்குத் தெரியவில்லை அது மிகக்கொடிய தண்டனையென்று.

* * * * * * * * * *

அதன் பின் ஏதேதோ படிக்கத்தொடங்கினேன். கடலை மடித்து வரும் காகிதம் கூட தப்பவில்லை. கடைசியில் என் மூளை ஒரு குப்பைத்தொட்டியான பின்பும் அது நிற்கவில்லை.

கல்லூரியிலும் அந்த வியப்புக் குறி தொடர்ந்தது.

இடைப்பட்ட வருடங்களில் என் பேச்சும் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து புத்தகங்களுடன் மட்டும் பேசுவது என்ற அளவில் சுருங்கிவிட்டது.
ஊரார் பார்வையில் என் பிம்பம் கல்லடி பட்டது.
"ரொம்ப அழுத்தம்டா…"
"சரியான head weight party டா.."
"அய்யே!!! அது ஒரு உம்மனா மூஞ்சி.."
என நான் கேட்டுப்பழகிய பாராட்டுகள் அதிகம்.

கல்லூரி விடுதியில் என் நண்பர்களிடம் பேசியதைக்காட்டிலும் என் அறைச்சுவர்களிடம் அதிகம் பேசியிருப்பேன்.

அப்போதெல்லாம் என் தனிமையை நிரப்பியது இந்த டிக்.. டிக்… டிக்… தான்.

அப்துல்லா பாய் அழைக்கும் குரல் கேட்டது.
மெல்ல அறைக்குச் சென்றேன். மேஜை மீது உணவு காத்திருந்தது. ஒரு அணில் வந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்தது. நான்கு பருக்கைகள் எடுத்து ஜன்னல் மீது வைத்தேன். தயங்கித் தயங்கி வந்து தன் வாலைக் கோதியபடி கொறித்துச்சென்றது. மனசுக்குள் குறித்துக்கொண்டேன்.

ம்ம்… எங்கே விட்டேன்.. என் அறையில்..
பல நாள் அழுதிருக்கிறேன் என் அறையில். நான் அழுவதை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வேறு…
ம்.. அப்படியே அது முடிந்து போனது.

கல்வியை முடித்து தொடர்ந்த வருடத்தில், ராணுவத்திற்கு ஆளெடுப்பதாய் மதிய வெயிலில் அரை நிர்வாணமாய் மைதானத்தில் ஓடவிட்டனர். என்னை விதவிதமாய் அளவெடுத்தபின் முடிவு செய்தனர். அன்று தேர்வான 300 பேரில் நானும் ஒருவன்.

ஒரு நாட்டின் எல்லை என்பது என்ன என்று அந்நாளில் புரிந்து கொண்டேன். மக்களுக்குத் தெரிவது போர் மட்டுமே. அன்றாடம் நடக்கும் சண்டைகள் அவர்களுக்கு தெரிவதில்லை.

துப்பாக்கிச் சத்தம் தாலாட்டாய் ஆகிப்போனது. துப்பாக்கிச்சத்தத்தைக் கொண்டே அது நம்முடையதா எதிரியினதா என்று சொல்லவேண்டும். நடு ராத்திரி சைரன்கள் பழகிப்போயின. முழுமையிழந்த மனிதர்கள் பழகிப்போயினர். தூக்கமும் கொஞ்சம் தூரப்போனது. இருந்தும் என்ன.?? இள ரத்தம்.. முறுக்கேறிய தோள்கள் கர்வம் கொள்ளச்செய்தன.

அப்படித்தான் ஒரு நாள் சண்டை வந்தது, பங்களாதேஷ் எல்லையில். ஏதோ புதிய பள்ளிக்குச் செல்லும் மாணவனைப்போல உற்சாகத்துடன் கிளம்பினேன். நானும் ஒரு நிஜப்போரைப் பார்க்க..ம்..ம்.. ம்.. இல்லை பங்கேற்க..

மேஜர் எங்கள் பதுங்கு குழிக்கு வந்து ஐந்து நிமிடம் இந்தியில் வீரம் பொங்க உரையாற்றிச் சென்றார். முடிவில் நாங்கள் தெரிந்து கொண்டது இன்னும் சில நாட்கள் நாங்கள் அங்கேயே இருக்கவேண்டும் என்பதுதான்.
அந்த கருவறையில் எனக்கு ஒரு நண்பன் கிடைத்தான். முதன் முதலாய் அவனை நோக்கிச் சாய்ந்தது என்மனம். எங்களுக்குள் துளிர்விட்டது ஒரு புதிய உறவு. அவனும் என்னை மாதிரியே தனிமையின் கொடுங்கரங்களில் சிக்கி தன் முகவரியைத் தொலைத்தவன். எங்களுக்குள் பல பொது அம்சங்கள். ம்.. போதும். இதற்கு மேல் அவனைப்பற்றி சொல்ல மனசு கனக்கிறது.

* * * * * * * * * *

நினைக்கிற மாதிரி நேரடியாக போருக்கெல்லாம் செல்ல முடியாது. ஒரு குழி விட்டால் அடுத்த குழி.. இப்படியே ஒரு வாரம் கடந்திருக்கும்.. அதன் பின்தான் எனக்கான நாள் வந்தது..

எதிலுமே முதல் என்றும் மறக்க முடியாதது. எனக்கும் தான்.

ஓரிடத்தில் எசகு பிசகாக சென்று முட்டிக்கொள்ளாத குறை. ஒரு சிறிய மணல் மேட்டைக்கடந்த போது எதிரே 15 அடி தூரத்தில், டைரக்ட் ரேன்ஜ் என்று சொல்வார்கள், ஒரு சப்பை மூக்குக்காரன் ஒரு மாதிரி அசௌகரியமாக துப்பாக்கியைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான். அவன் கவனம் திரும்பும் முன்னர் என் விசை உயிர்த்தது. அவனுக்கு நெற்றியில் இரத்தத்தால் திலகமிட்டு வீரசுவர்கம் அனுப்பி வைத்தேன்.
"...................."
"அவனுக்கும் ஒரு மனைவி இருந்திருப்பாளோ? தன் கணவன் திரும்பி வருவான் என காத்திருந்திருப்பாளோ? ஆயிஷாவா இல்லை மும்தாஜா இல்லை வயதான கண்தெரியாத பெற்றோரா?"
உண்மையிலேயே அந்த சப்பை மூக்குக் காரனுக்காக இன்று அழுதேன். சுவரில் மாட்டியிருந்த அந்த முகமூடிச் சித்திரம் என்னைப் பார்த்துச்சிரித்தது.



இல்லை… இது போலி இல்லை.. உண்மை. என் வேதனை உண்மை. அவன் கண்ட அந்த வலி உண்மை. என் முகமூடிகள் தொலைந்து விட்டன.

* * * * * * * * * *

3அடி 2அங்குலமாய் இருந்த வயசில் ஒரு நாள் என் பாட்டி இறந்து விட அனைவரும் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர். எல்லோரும் ஏன் அழுகின்றனர் என எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் நானும் முயற்சித்தேன். கண்ணீரே வரவில்லை. யாரும் பார்க்காத சமயம் பார்த்து கண்ணில் இரு சொட்டு நீர் எடுத்து வைத்துக்ககொண்டு அழ(!)த் தொடங்கினேன். எனக்குக் கிடைத்த முதல் முகமூடி அது.

அதன் பின் எத்தனையோ முகங்களை மாட்டிக்கொண்டு, எத்தனையோ முறை அழுது, எத்தனையோ முறை சிரித்து, பலமுறை சபித்து இன்று அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறேன்.

இன்று அழும் போது யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் இல்லை. எதற்காகவும் தயங்குவதில்லை. நான் எனக்காக வாழத்தொடங்கி 3 மாதமாகிறது.

* * * * * * * * * *

அந்த சப்பைமூக்கனைத் தொடர்ந்து மேலும் பலர். அப்படியே முன்னேறினேன். எங்கிருந்தோ வந்த குண்டொன்று என் முழங்காலுக்கு கீழே நலம் விசாரிக்க உள்ளே சென்றது. அதன் பின் எதுவும் ஞாபகம் இல்லை.
எதிரிகள் முகாமில் சிக்கி ஒரு வாரம் சிதைபட்டு ஒரு வழியாய் தப்பி சுந்தவரவனக்காடுகளில் ஒரு வாரம் ஊண் உணவின்றி திரிந்து கடைசியாய் உயிர் பிழைத்த போது உணர்ந்து கொண்டேன், உயிர் என்ற சொல்லின் பொருளை.

இப்படி ஒவ்வொரு வார்த்தைக்காய் எனக்கு பொருள் கற்பித்துக் கொண்டே போனது வாழ்க்கையெனும் அகராதி.

என் கருவறை நண்பன் ஒரு நாள் எங்கள் கர்னலினால் என் கண்ணெதிரே சுட்டுக்கொல்லப்பட, என்னுள் துளிர் விட்ட செடி கருகிப்போனது. நான் மிக நெருக்கத்தில் கண்ட மரணம் அது. என் கனவுகள் பொடியாயின. அவன் போர்க்களத்தில் மடிந்திருந்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் அவனின் மரணம் என்னை உலுக்கிப் போனது.

அங்கிருக்க மனமின்றி பணியைத்துறந்து ஊர் திரும்பினேன்.
ஏகப்பட்ட ஏளனப்பேச்சுகள்.
"சுயநலக்காரன்"
"போரைக் கண்டு பயந்துவிட்டான். கோழை""
எனப் பலப்பல..
அவர்களுக்கு பதில் சொல்லும் நிலையை நான் கடந்துவிட்டேன்.

என்னை விட்டுச்சென்ற தனிமை விடாமல் வந்து தொத்திக்கொண்டது.

மீண்டும் கல்கியையும் சுஜாதாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஓரு புத்தகநிலையம் துவங்கினேன். அது மற்றவர்களுக்காக என்பதை விட எனக்காக. எனக்குப் புத்தகங்கள் தேவை. இடைவிடாமல் தேவை. ஏகாந்தம் எனக்கு வேண்டாம்.

மீண்டும் பழையபடி ஆனேன்.

காலம் தன் கணக்குகளை என் மீது எழுதிச்சென்றது. அறுபதைக்கடந்த ஒருநாளில் கண்பார்வை லேசாக மங்கத் தொடங்கியது.

கடந்த மூன்று மாதமாய் இந்த மலைக்கிராமத்தில். இந்த மூன்று மாத காலத்திற்குள் என் மீதும் பசுமை படர்ந்து விட்டதாய் ஒரு உணர்வு. தனிமை கொடுமையல்ல, அது ஒரு தவம் என்று சொல்லித்தந்தது தூரத்தில் நிற்கும் கீரிப்பாறை.

அந்த மலைமீது காணிகள் என்னும் பழங்குடிகள் வசிக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து ஏதாவறு விற்றுச்செல்வார்கள். அப்படித்தான் அறிமுகமானான், நீலன்.. ஒருவேளை எனக்கொரு மகனிருந்து அவனுக்கொரு மகனிருந்தால் அத்தனை வயசிருக்கும். ஒடுங்கிய முகம், கரிய நிறம், ஒரு மாதிரி மலையாளம் கலந்த தமிழ்,.. புரியும்.

சூரியன் தன் பயணத்தை முடித்துக்கொள்ள சித்தமாயிருந்தான்.

ஒரு நாள் அவனுடன் காட்டுக்குச் சென்றேன். சுந்தரவனத்தின் விசாலமும் அங்கு நான் கண்ட தனிமையும் எனக்கு காடுகளின் மீது ஒரு வித இனம் புரியாத பயத்தை உண்டாக்கியிருந்தன. ஆனால் இந்த காடு என்மீது மாயம் புரிந்தது.

செல்லும் வழியெங்கும் என்னுடன் பேசிக்கொண்டே வந்தான். நான் பேசாத போது வழியிலிருந்த செடிகளுடன் பேசிக்கொண்டே வந்தான். சிறிய புழுக்கள் கூட அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.

எனக்குப் பொறாமையாய் வந்தது. இவனுக்கு பேச்சுத்துணைக்கு இத்தனை நண்பர்களா? அவனது நண்பர்களிடம் பேசும் வயசை நான் கடந்து விட்டேனா?

வெட்கம் விட்டு அவனிடம் கேட்டேன்.
சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவன்,
"தட்சிணா என்ன?"
"என்ன வேண்டும்? பணமா? உணவா? விளையாட்டுப் பொருளா?"
"கதை வேணும்…
எனக்குக் கதைபறைய வேணும்"

காணிகளின் நம்பிக்கையில் மலையிலிருக்கும் ஒவ்வொரு பாறையும் மனிதர்களே. தீராத கதைகேட்கும் ஆவலுள்ள மனிதர்கள் பாறையாய் மாறி தன் ஆயிரம் இதழ்களால் கானகம் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.

போருக்குப் பிந்திய என்வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு, அவன் கேட்ட தட்சணை.
என்கதை சொன்னேன்.
அவனுக்கு நிறைய விளங்கவில்லை. எனினும் ஆர்வத்துடன் கதைகேட்பனைப் போலக் கேட்டான்.
என் வாழ்க்கையில் நான் பட்டவை அனைத்தும் இதற்குத்தானோ.. இந்த ஒரு நாளுக்காகத்தானோ? எங்கிருந்து வந்தது எனக்கந்த பேச்சு. மணிக்கணக்கில் இடைவிடாது பேசியிருப்பேன். தொட்டியிலிருந்து வடியும் நீரைப்போல என் மனதும் கசிந்தது. அந்த ஒரு நாள், ஆயிரம் புத்தகங்களில் தேடியும் வர்ணிக்க வார்த்தை கிடைக்கவில்லை.

அதைவிடப்பெரிய பரிசு அவன் தந்த அந்த காட்டு மல்லிச்செடி. கோவிலில் பிரசாதம் பெறும் பக்தனைப்போல பக்தியுடன் வாங்கிக்கொண்டேன்.

அன்றிலிருந்து அந்த மல்லிதான் என் பேச்சுத்துணை. அதன்பின் அந்த நெட்டிலிங்க மரத்திலிருந்த அணில், என் மேஜையின் துளையில் இருக்கும் பொறிவண்டு, அவ்வப்போது வந்துபோகும் அந்த சிட்டுக்குருவி…

கேட்டுக்கொண்டிருந்த அந்த தேரை என்னையும் சேர்த்துக்கொள் என்றபடி மறைவில் சென்று ஒளிந்தது.

என் விதியை நினைத்தேன். இப்போதெல்லாம் அழுகைக்குப் பதில் சிரிப்புத்தான் வருகிறது.
"A tyrants excuse for crime and a fools excuse for failure.."
ஆம்ப்ரோஸ் பியர்ஸ் நினைவுக்கு வந்தார்.

இதற்குள் அந்த பெரிய மலை, காடு, என் மல்லிச்செடி என எல்லாவற்றையும் விழுங்கியபடி மெல்ல என்னை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது இருள்.
மின்சாரம் கூட எனக்கு இப்போது பிடிப்பதில்லை. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு என் நாட்குறிப்பைத் திறந்தேன். மீண்டும் அதே டிக் டிக்..டிக் என் எண்ணத்தை நிறைத்தது. இருளின் வருகைக்குப் பின் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு எனக்கிருக்கும் ஒரே சாட்சி.

29.03.07

இன்று மூன்று நல்ல காரியங்கள் செய்தேன்

1)பசியுடன் வந்த ஒரு அணிலுக்கு உணவிட்டேன்
2) என்னால் உயிர் விட்ட ஒருத்தனுக்காக உண்மையிலேயே அழுதேன்
3) நாளையும் மூன்று நல்லது செய்ய முடிவெடுத்துள்ளேன்.
அதற்கு மேல் என்ன எழுதுவதென்று தெரியவில்லை..

இன்னமும் நான் ரொம்ப நல்லவன், அப்பாவி …

கீழேயே எழுதினேன்

நான் தலைக்கனம் பிடித்தவன், சுயநலக்காரன்

என்னை அணியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று சொன்ன அந்த அணித்தலைவன் விளையாட வருகிறாயா எனக் கேட்டான்;
சப்பை மூக்குக் காரனின் முகம் தெரியாத மனைவி வந்தாள்; பள்ளியில் கடலைமிட்டாய் விற்கும் தாயம்மாக் கிழவியிடம் திருடிய 2 ரூபாய் நாணயம் கை கால் முளைத்து என்னைத் துரத்தியது; தி.ஜா வந்து ஏதோ ஒரு வார்த்தைக்கு அர்த்தம் கேட்டுப்போனார்.
வில்பர் ஸ்மித்துடன் புதையல் வேட்டைக்குச் சென்று மீள முடியாத காட்டுக்குள் சிக்கிக் கொண்டேன். எங்கு தேடியும் என்னைக் காணவில்லை.

என் கருவறை நண்பன் வந்து "தும் கப் ஆ ரகேகோ" என்றான்.

அதற்கடுத்தநாள் என் நாட்குறிப்பு நிரப்படவில்லை.
30.03.07
__________________
__________________
__________________
__________________
பட்டிருந்தால் எழுதியிருப்பேன்,

மல்லி இன்று பூத்தது.

Wednesday, March 07, 2007

உனக்காக... (என் முதல் கவிதை)


(தயவு செய்து கவிஞர்கள் மன்னிக்க..)

உனக்காக வார்த்தைகள் தேடி
வார்த்தைப்பஞ்சத்தில் அலைந்த எனக்கு
ஆறுதல் சொன்னது
ஒரு பூச்செடி.

உன் பெருமை பாடியபடி
அதன் கிளையில்
ஒற்றை ரோஜா
வசீகரமாய் சிரித்துக்கொண்டிருந்தது...

என்னைப்போலவே அலைந்து
கடைசியில் பூக்களுக்கு
கட்சி மாறிய
தன் கதையை சொல்லி
ஆறுதல் சொன்னது...
ம்ம்... அனுபவஸ்தன்தான்..

மனதைத் தேற்றியபடியே
திரும்பினேன்..
ஆறுதல் வேண்டி காத்திருந்ததது
ஒரு நந்தவனம்..

Monday, February 26, 2007

நிர்வாண நகரம்


இந்த தினத்தில்தான் அந்த ஆசை எனக்கு வந்ததென்று குறிப்பிட்டுக் கூற முடியாது. நினைவு தெரிந்த நாள் தொட்டே ஒரு கார் வாங்கவேண்டுமென்பது என் வாழ்வின் குறிக்கோள்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. சின்ன வயசில் அம்மா எதாவது வாங்கிவர கடைக்கு அனுப்பினால்
, அந்த பயணம் என் மானசீக காருடன்தான். காற்றிலேயே கியர் மாற்றி ஸ்டியரிங் திருப்பி, ஹாரன் அடித்து அமர்க்களம் பண்ணிய எனக்கு அச்சாரமாய் அமைந்தது Boost-க்கு இலவசமாய் வந்த ரேசிங் கார். அது எங்கள் வீட்டில் பயணிக்காத இடமே இல்லை. ஹாலின் சுற்றளவை ஒரு முறை வலம் வந்த பின் ராஜாவுக்கு ராஜா நான்டா" பாட்டில் வரும் ரஜினி மாதிரி சுவற்றில் ஏறியும் பயணித்திருக்கிறேன். வ்ரூம் வ்ரூம் என்று Digital DTS சவுண்ட் எஃபெக்டுடன் நான் கிளம்பினாலே அடுக்களையிலிருந்து அம்மாவின் குரல் கேட்கும்.

சித்த சும்மா இறேண்டா.. காலைலேந்து ஒரே தலைவலி…"

எங்கள் வீட்டுக்குள் ஒரு குட்டி ரயில்வேயே நடத்தத் தொடங்கினேன். என் கார் கிராஸ் பண்னும் போது யார் குறுக்கே வந்தாலும் என் கார் கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக என் கார் என்றுமே நேர் சாலையில் சென்றதில்லை. கொண்டை ஊசி வளைவுகள் என்றால் கொள்ளை பிரியம்.

என் தொல்லை தாங்கமுடியாமல் அம்மாவும் அக்காவும் செய்த கூட்டுச்சதியின் பயனாக, ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து திரும்பி வந்து பார்த்த போது கார் மாயமாய் மறைந்து விட்டது. நான் இரண்டு நாள் அழுத பின் அந்த அத்தியாயம் முடிவுக்கு வந்தது.. ஆனால் கார் வாங்கும் ஆசை மட்டும் Hutch விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டி மாதிரி தொடர்ந்து கொண்டே இருந்தது.

அதன்பின் தொடர்ந்த வருடங்களில் நான் பள்ளி, கல்லூரியை முடித்து இன்று ஒரு கம்பெனியில் கைநிறைய சம்பளத்தில்.

ஒரு நாள் இரவு வேலையிலிருந்து திரும்பி வரும் போதுதான் என் கண்ணைக்கவர்ந்தது, ரோட்டின் குறுக்கே பிரம்மாண்டமாய் வீற்றிருந்த அந்த விளம்பரப்பலகை. என் போன்ற கார் காதலர்களின் கவனத்தைக் கவர்வதற்கென்றே ஒளிவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது பளபளப்பான ஒரு குட்டி கார். அருகிலேயே Car Loan? It is easy என்று போட்டு ஒரு வங்கியின் பெயர் போட்டிருந்தது.

மறுநாளே நான் அந்த வங்கியில். "லோன் அப்ளை பண்ணுபவருக்கு கண்டிப்பாக டிரைவிங் தெரிந்திருக்க வேண்டும" என்று ஒரே வரியில் முட்டுக்கட்டை போட்டார் மேனேஜர். திரும்பிவரும் போதே என் மனம் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டது.

அதன்பின் ஒருவாரம் டிரைவிங் ஸ்கூல் தேடும் படலத்தின் முடிவில் ஒரு டிரைவிங் ஸ்கூலைக் கண்டுபிடித்துச் சென்றேன். அது ஒரு சிறிய காம்ப்ளக்ஸ். பெட்டி பெட்டியாக ஆறு கடைகள். கீழே மூன்று மேலே மூன்று. ஒரு டீக்கடைக்கும் ஒரு லாரி புக்கிங் ஆபீசுக்கும் இடையில், இரண்டடி அகலத்தில் ஏறக்குறைய 80டிகிரி சாய்வில் இருந்த ஒரு படிக்கட்டில் ஏறிச்சென்றால், ஒரு திருப்பத்தில், சுற்றிலும் வெற்றிலை பாக்கு கறைகளுக்கு மத்தியில் டிரைவிங் ஸ்கூல் பெயர் போட்டு அம்புக்குறி போட்டிருந்தது.

மிஞ்சிப்போனால் 8க்கு 8 சதுர அடியில் ஒரு அறை. சுவர் முழுவதும் பெட்டி பெட்டியாகப் போட்டு Road Simbols வரைந்து வைத்திருந்தனர். எப்படியும் வரைந்து பல வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். ஒரு மூலையில் பலவகையான ஆட்டோமொபைல் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன. ஒரு சீலிங் ஃபேன் சீரான சுதியில் பாடிக்கொண்டிருந்தது.. கீழே ஒரே ஒரு டேபிள். அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி ஒருவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். என்னை தலையைத் தூக்கிப்பார்த்தவர், ஏதோ கல்யாண வீட்டுக்கு வரவேற்பவர் போல,

வாங்க, வாங்க! இங்க உட்காருங்க"

கொஞ்சம் கூட மாறாமல், காபியா டீயா? என்கிற தொனியில்

என்ன? டூ வீலரா, ஃபோர் வீலரா?" என்றார்.

ஆள் பார்ப்பதற்கு வீரமணிதாசன் மாதிரி வெள்ளை தாடி, உத்திராட்சக் கொட்டை, 2 இன்ச் அகலத்தில் சந்தனப்பட்டை என பக்திப்பழமாக காட்சி தந்தார்.

ரெண்டுமேதான்…"

ஓட்டத் தெரியுமா? இல்ல கத்துக்கணுமா?"

கத்துகிட்டு லைசென்ஸ் எடுக்கணும்"

ஓகே.. ஓகே.. அதெல்லாம் ஒண்னுமே இல்ல. ஈஸியா எடுத்துடலாம். ரெண்டும் சேத்துண்னா 2600 ரூபா ஆகும். உங்களுக்கு 2500 ரூபா

போட்டுக்கறேன். ஓகேன்னா நாளைக்கே LLR போட்டுறலாம். வரும் போது 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டா அப்புறம் உங்க ரேஷன் கார்டை மட்டும்

எடுத்துட்டு வந்துடுங்க. மத்தத நான் பாத்துக்கறேன். அடுத்த மாசமே லைசென்ஸ் எடுத்துடலாம்..

வேறுசில சம்பிரதாயமான் விசாரிப்புகளுக்குப்பின் வீடு திரும்பினேன்.

மறுநாள் காலை அரைநாள் விடுப்பு கேட்டு சூப்பிரெண்டுக்கு லெட்டர் அனுப்பிய பின் புறப்பட்டேன். நீங்க நேரா RTO ஆபீஸ் வந்துடுங்க. நான் உங்கள அங்க பாக்கறேன்.அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட விதவிதமான வாகனங்கள் புடை சூழ, ஒரு ஓரமாக வீற்றிருந்தது அந்த ஆபீஸ். அலுவலர்கள் யாரும் இன்னும் வரவில்லை.

என்னைப் போல் இன்னும் சிலர், 20 பேர் இருக்கும், திட்டுத் திட்டாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். உங்கள் சேவையில் போக்குவரத்துத் துறை; உங்கள் வசதிக்காக 9 மணிமுதலே இயங்கும் என்ற அறிவிப்புப்பலகை பளபளத்தது. அனிச்சையாய் மணிபார்த்தேன். எனக்கு அருகில் LLR-க்கு ஃபீஸ் எங்க கட்டணும் என்று ஒரு அப்பாவி விசாரித்துக் கொண்டிருந்தார்.

விளம்பரங்களில் வரும் வாட்ச் மாதிர் 10.10 மணிக்கு, ஒருத்தர் வந்து நாற்காலி போட்டு அமர்ந்தார். அருகில் ஒரு பெரிய ரெஜிஸ்டர், கூடவே ஒரு எடுபிடி.

அதற்குள் அந்த டிரைவிங் ஸ்கூல் வீரமணிதாசன் வந்து

சார், நீங்க கையெழுத்து போட்டுட்டு, உள்ள இருக்க க்யூல வந்து உட்காருங்க. நான் உள்ளதான் இருப்பேன்என்ற படி நகர்ந்தார்.

அவர் சொல்லாத மற்றொரு விஷயம், இங்கே ரெஜிஸ்டரில் கையெழுத்து போடவே ஒரு க்யூ காத்துக்கொண்டிருந்தது. அதன் கடைசியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

இந்த கையெழுத்து எதற்கு என்று கேட்கக்கூட முடியாமல், அப்படி ஒரு அவசரம், அனைவரிடமும். மொய் எழுதுவது மாதிரி ஒவ்வொருவராக கையெழுத்து போட, அந்த எடுபிடி

ஆங்.. அம்பது ரூவா எடுப்பா…” என்று அதட்டிக்கொண்டிருந்தான்.

என் முறை வந்தபோது, ஒவ்வொரு காலமாக பார்த்தேன். வழக்கம் போல் வரிசை எண், பெயரைத் தொடர்ந்து தேர்வுதொடங்கிய நேரம் என்று போட்டு 9.10 என்று நிரப்பப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து ஒரு கையெழுத்திட்டபின் அடுத்த காலம்பார்த்தேன். தேர்வு முடிந்த நேரம் என்று போட்டு 9.30 என்று போட்டிருந்தது.

இந்நேரத்திற்குள் எனக்குப் பின் தள்ளு முள்ளு தொடங்கி விட்டது.

யோவ், சீக்கிரம் நவுருய்யா.. அவனவன் ஜோலியப் பாத்துகிட்டு போவ வேணா?”

அவசரமாய் மற்றொரு கையெழுத்திட்டபின் நகர்ந்தேன்.

தாசன் உள்ளே காத்திருந்தார்.

என்ன சார், நான் ஏதோ பரீட்சை எழுதுனேன்னு கையெழுத்து வாங்குறாங்க. நான் கேள்வித்தாளக் கூட பாக்கலையே சார்..பரிதாபமாய் கேட்டேன்.

இதான் அது..! சீக்கிரமாய் இதுலயும் ஒரு கையெழுத்து போடுங்க..

இந்த வினோதமான பரீட்சையில் அப்படி என்னதான் கேட்டிருக்கிறார்கள் என்ற ஆவலில் அந்த பேப்பரை வாங்கிப் பார்த்தேன்.

நோட்டு பேப்பர் சைஸில் ஒரு சிறிய பேப்பரில் ஒரே ஒரு அட்டவணை மட்டும் போட்டு, வினா எண் என்று போட்டு 1 முதல் 12 வரை அச்சிட்டிருந்துது.

அதற்கு இணையாக விடைகள் என்று போட்டு அ, , ஆ என்று மாற்றி மாற்றி நிரப்பியிருந்தனர்.

மதியம் ஆபீஸ் போனதும் ராம் இடம் நான் எழுதிய இந்த எக்ஸாம் பத்தி சொல்லனும். அவனுக்கு எக்ஸாம் னாலே பயங்கர அலர்ஜி. மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

என் கையில் ஒரு விண்ணப்பத்தைத் திணித்து விட்டு,

இதே க்யூல வாங்க. அந்த கடைசியில் சிகப்புச்சட்டை போட்டவர்கிட்ட இதையும் உங்க ரேசன் கார்டயும் குடுத்திங்கன்னா அவ்ளோதான்.

பையில் கைவிட்டால் போட்டோ மட்டுமே வந்தது. என் விதியை நொந்து கொண்டே அடுத்த Zip-ஐ திறந்தேன். நேற்றிரவு ரேசன் கார்டை எடுத்து கப் போர்டில் வைத்தது நினைவுக்கு வந்தது. ஷட்.

சார்.., ரேஷன் கார்டை மறந்துட்டேன் சார். இப்போ என்ன பண்றது.

சரி சரி.. விடுங்க பாத்துக்கலாம்என்றபடி அடுத்தவரைக் காப்பாற்ற நகர்ந்தார்.

என் முறையும் வந்தது. கொஞ்சம் பெரிய சைஸ் ரோட் சிக்னல் மாதிரி சிகப்பு நிறத்தில் பயமுறுத்தினார் அந்த இன்ஸ்பெக்டர்.

என் விண்ணப்பத்தைப் புரட்டிப் பார்த்தவர்,

அட்ரெஸ் ப்ரூஃப்?”

முடிந்த அளவு சோகமான ஒரு முகத்தை வைத்துக்கொண்டு,

Sir, actually I forgot my ration card. I am working in…

என்னா? மறந்துட்டீங்களா? அது இல்லாம ஒன்னும் பண்ண முடியாது. டிரைவிங் லைசென்ஸ்னா சும்மான்னு நெனச்சிங்களா..எனத்தொடங்கி ஒரு சிற்றுரையே நிகழ்த்திவிட்டார்.

எல்லோரும் என்னையே பார்ப்பதாய் ஒரு உணர்வு. நிமிர்ந்து பார்க்கக் கூட கூச்சமாய் இருந்தது. அதற்குள் எங்கிருந்தோ ஆபத்தாண்டவராக ஓடி வந்த தாசன்

சார் சார், அது நம்ம ஸ்கூல் பையன் சார்

சரி.. சரி.. அட்ரெஸ் ப்ரூஃப் இல்ல.. இதுல இருக்கிற அட்ரஸ அடிச்சுட்டு டிரைவிங் ஸ்கூல் அட்ரஸ எழுதிட்டு வாங்க. லைசென்ஸ் அந்த அட்ரெஸ் போட்டுதான் வரும். ஓகேவா?” என்றபடி நீட்டினார்.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, தாசன் அவசரமாக தலையாட்டிவிட்டு விண்ணப்பத்துடன் என்னையும் வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.

சார், நான் போய் ரேசன் கார்ட எடுத்துட்டு இன்னோரு நாள் வற்ரேன் சார்..

அட, நீங்க ஒண்னு.. .. உங்களுக்கு என்ன அட்ரெஸ் வேணும்னு ஒரு பேப்பர்ல எழுதி கொடுங்க.. அது போதும். நாளைலேந்து டிரைவிங் கிளாஸ் வந்திடுங்க.

ராம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக

ம்.. இது என்னடா..? பாஸ்போர்ட் ஆபீஸ் போய் பாரு.. ஹண்ட்ரட் ருப்பீஸ் கொடுத்தா உன்ன க்யூல முன்னாடி கொண்டு போய் நிக்க வைக்க கூட ஆள் இருக்கு..

எப்படிடா?” ஆச்சரியம் விலகாமல் கேட்டேன்.

அப்படித்தான். Anything is possible in Indiaஎன்னைப் பார்த்து கண்ணடித்தான்.

என்னுடைய டிரைவிங் கிளாஸ் தொடங்கியது. 2,3,4 வது கியரெல்லாம் ஒழுங்காக வந்துவிட பர்ஸ்ட் கியர் போட்டு ஸ்டார்ட் செய்வது மட்டும் 20
கிளாஸ்க்கு அப்புறமும் அடம் பிடித்தது.

டெஸ்ட் நாளும் வந்தது. எவ்வளவோ முயன்றும் நான் பயந்த மாதிரியே ஓட்டும் போது வண்டி ஆஃப் ஆகி விட்டது. டெஸ்ட் முடித்து அருகிலேயே காத்திருந்தேன்.

அரைமணி நேரம் கழித்து என்னிடம் ஓடி வந்தார் தாசன். கூடவே அசலா போலியா என்று கூறமுடியாத மூச்சிரைப்பும்.

சார் சார்உங்கள பெயில் பண்ணிடவான்னு கேக்குறாரு இன்ஸ்பெக்டரு…. பெயிலானா 200 ரூபா கட்டி அடுத்த வாரம் திரும்பவும் வரணும் சார்..

இதற்குள் அந்த அலுவலகத்தின் நடைமுறைகள் எனக்கு ஓரளவு அத்துப்படியாகிவிட்டன.

இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க..

இன்ஸ்பெக்டர் நமக்கு தெரிஞ்சவர்தான். வேணுன்னா இன்னைக்கே முடிச்சிடலாம். ஆனாஒரு நூத்தம்பது ரூபா கூட செலவாகும்..

சிறிது நேரத்திற்குப் பின் என்னை ஒரு அறைக்கு அழைத்துச்சென்று ஒரு digi cam-ல் போட்டோ எடுத்தனர். பின் ஒரு பிரிண்ட் அவுட்டில் கையெழுத்திட்டேன்.

சாய்ங்காலம் நம்ம ஸ்கூலுக்கு வந்து லைசென்ஸ் வாங்கிக்கலாம் சார்..புன்னகை மாறாமல் வழியனுப்பினார்.

மாலை டிரைவிங் ஸ்கூல் சென்று என் லைசென்ஸை வாங்கி ஆச்சரியத்துடன் பார்த்தேன். என் வீட்டு முகவரி, வரி வரியாக அச்சிடப்பட்டிருந்தது.

எது வேணா பண்லாம் சார்..தாசன் பல்லைக்காட்டினார்.

Anything is possible in Indiaராம் சொன்னது நினைவுக்கு வந்தது.

தெருவில் இறங்கி நடந்தேன்.

டீக்கடை டீவியில் ஒரு செல்போன் விளம்பரம் கேட்பாரற்று அலறிக் கொண்டிருந்தது,

விழித்திடு இந்தியா! விழித்திடு


Friday, February 23, 2007

Sherlock Holmes ரசிகர்களுக்கு...


துப்பறியும் கதைகளில் தனக்கென தனியிடம் பிடித்த Sherlock Holmesகதைகள் காலத்தைக் கடந்து நிற்பவை. எழுதப்பட்டு 130 வருடங்கள் ஆகியும் இன்றைய இளம் தலைமுறைக்கதைகளுடன் போட்டியிடும் இவற்றை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது.

Sherlock Holmes-ன் நுண்ணறிவில் வசியப்பட்ட அவர் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி. உங்கள் கண்களுக்கு விருந்தாக...

செவ்வாய் தோறும் இரவு 9 மணிக்கு History Channel-ல் துப்பறிகிறார்.

குறிப்பாக, ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முந்திய இங்கிலாந்தை அதன் பழமை மாறாமல்- அந்த குதிரை வண்டிகள், ரயில் நிலையங்கள், வீடுகள் , உடைகள், சாலைகள் - என கொஞ்சமும் மாறாமல் பதிவு செய்திருக்கம் History Channel-க்கு ஒரு சபாஷ் போடலாம்.
பார்வையாளர்களை நிச்சயம் ஒரு நூற்றாண்டு பின்னோக்கி இட்டுச்செல்லும் மந்திர ஜாலம் இது.

பி.கு: சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மறு ஒளிபரப்பும் உண்டு.

Thursday, February 15, 2007

கிரேஸி மோகன்… அட ..? ..!


கிரேஸி மோகன்.. தமிழ் கூறும் நல்லுலகத்தில் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு பெயர். தமிழகத்து மக்களை நோய் விட்டு வாழச்செய்வதில் இவருக்கு பெரும்பங்கு உண்டென்பது அனைவருக்கும் தெரிந்ததே.

சமீபத்தில் பண்பலை ஒன்றில் இவரது பேட்டியைக் கேட்க நேர்ந்தது. பல சுவாரஸ்யமான தகவல்கள் வந்தாலும் அவர் சொன்ன ஒரு செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனக்கு முன்னமே தெரிந்த ஒரு விஷயத்தின் மற்றொரு பரிமாணத்தை அவர் சொன்ன போது, கிரேஸி தி கிரேட்..

‘அவ்வை சண்முகி' திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அத்திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்கான டிஸ்கஷன்- கமல், ரவிக்குமார், வாலி, கிரேஸி மோகன்.

சூழ்நிலை இதுதான். கணவனைப் பிரிந்து பிறந்த வீட்டில் வாழ்கிறாள் மனைவி. ஒரு நாள் அவள் வீட்டில் சுமங்கலி பூஜை நடக்கிறது. இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கணவனின் பெருமைகளை எடுத்துக் கூறி, கணவனுடன் வாழ்வதுதான் ஒரு பெண்னிற்கு அழகு என அறிவுரை கூறுமாறு பாடல் அமைய வேண்டும். அதிலும் குறிப்பாக தன் கணவனையே மறந்து விட்டவள் போல் இருக்கும் மனைவிக்கு அவள் கணவனை நினைவூட்டும் விதமாக பாடல் அமைய வேண்டும்.

மற்றொரு முன் குறிப்பு, படத்தில் கணவனின் பெயர் பாண்டியன். அனைவரும் அவனை பாண்டி என்றுதான் விளிப்பர்.

இந்த இடத்தில் கிரேஸி மோகன் சொன்ன ஒரு ஐடியாதான் இந்த பதிவுக்கே காரணம்..

அதாவது, பாடல் உண்மையில் கணவனின் பெருமைகளை எடுத்து கூற வேண்டும். (இது கூடியிருக்கும் மற்ற பெண்களுக்காக ) அதே சமயம் மறைமுகமாக கதாநாயகிக்கு அவள் கணவன் பாண்டியை நினைவூட்ட வேண்டும்.

அதன் படி அமைந்த பாடல் வரிகள் இதோ..

குங்குமத்தை வைப்பாண்டி
கொஞ்சிக் கொஞ்சி நிப்பாண்டி
கொண்டவன் போல் துணை யாரடி?
. . .
. . .
தூணுக்குள்ளும் இருப்பாண்டி
துரும்பிலும் இருப்பாண்டி
நம்பியவர் நெஞ்சில் நிற்பாண்டி..
. . .

இதனை முதல் முறை கேட்ட போது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஒரு கமெர்ஷியல் பட்தில் வரும் ஒரு பாடலில் இவ்வளவு நுணுக்கமான ஒரு விஷயமா?.. அட..?..!

Sunday, February 11, 2007

எல்லோர்க்கும் பெய்யும் மழை

இன்று காலை தினத்தந்தியைப் பிரித்த போது, பத்தி பத்தியான கற்பழிப்பு கொலை, காவிரி போராட்டம், உலகக்கோப்பைகளுக்கு நடுவே கருத்தைக் கவர்ந்தது ஒரு செய்தி,
அது,
IAS அதிகாரிகளின் மனைவிகள் பலர் இணைந்து ஒரு சங்கம் அமைத்து, அதன் மூலம் 4 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளதுதான்..

செய்தியைப் படிக்கும் போதே சந்தோஷமாக இருந்தது.
ஏதோ, கணவர் சம்பாதிக்கிறார்; நமக்கு வேண்டிய வசதி கிடைக்கிறது; இருக்கவே இருக்கிறது மெகா சீரியல் என்று இருந்து விடாமல், ஏதேனும் செய்யவேண்டும் என்று அவர்கள் கை கோர்த்திருப்பதே வரவேற்கத்தக்கது. அவர்களுக்கு ஒரு சல்யூட்...

ஆனால், இது வெறும் விளம்பரத்துக்காகவோ, பகட்டுக்காகவோ இல்லாமல் உண்மையான சேவைக்காக, மன நிறைவுக்காக அமையும் போது மட்டுமே இந்த மகிழ்ச்சி தொடரும்.... தொடரும் என நம்புவோம்...

அதே போன்று, கடைசிப்பக்கத்தில் மற்றொரு செய்தி.. கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக சொர்ணா என்ற பெண் பொறுப்பேற்றிருக்கிறார.. அப்போ கூடிய விரைவில் கணவன்மார்களும் ஒரு சங்கம் அமைக்கணும்னு சொல்லுங்க....

Friday, January 19, 2007

Lord of the rings

Lord of the rings உலகத்தினுள் நுழையும் முன் Sunday Times பத்திரிக்கையிலிருந்து ஒரு மேற்கோள் ::
“The English speaking world is divided into those who have read The Lord of the rings and The Hobbit and those who are going to read them.”

ஆம். இது உண்மைதான்.











தன் கற்பனையில் ஒரு புது உலகத்தையே (Middle Earth) சிருஷ்டித்திருக்கிறார் ஆசிரியர். Middle Earth-ன் வரலாற்றில் இரண்டாடம் யுகமான Ring Age ல் சுற்றிச் சுழலுகிறது கதை.

வழக்கமான புராணக்கதைதான். ஒரு தீய சக்தி உலகத்தையே ஆட்கொள்ள நினைக்கிறது. அதனை எதிர்த்துப் போராடும் ஒரு குழுவின் கதை.

ஆனால் இடையில் அந்த Ring concept ஆசிரியருக்குத் தோன்றியது ஒரு அழகான ஆச்சரியம் தான். அதாவது Middle earthன் பூர்வ குடி மக்களான Elfகள் தங்களின் நண்பர்களுக்கு ஒருவித Ring ஐ பரிசளிக்கின்றனர். 3 rings to the elven kings, 7 for the dwarf lords, 9 for the mortal man என பட்டியல் நீளுகிறது. இதில் நடுவில் புகும் Dark lord Sauron, Ring ஐ எப்படி செய்வதென தந்திரமாகத் தெரிந்து கொண்டு தனக்கென ஒன்றை உருவாக்கிக் கொள்கிறான். இந்த புதிய Ring ஆனது மற்ற அனைத்தையும் விட சக்தி வாய்ந்ததாகவும் மற்ற அனைத்து Ring களையும் கட்டுப்படுத்துமாறும் உருவாக்குகிறான்.

அந்த Ring ன் சக்தியைக் கொண்டு அண்டை நாடுகளைக் கைப்பற்ற முனையும் போது King Isildur of Gondor அவனது விரலை வெட்டி விடுகிறார். இப்போது அந்த Ring Isildur இடம் வருகிறது.

ஆனால் Orcs என அழைக்கப்படும் Sauron ன் அரைமனிதப் படைகள் Isildur-ஐக் கொன்று விட Ring யாருக்கும் கிடைக்காமல் ஒரு ஆற்றுப்படுகையில் புதைந்து போகிறது.

பலகாலங்களுக்குப் பின் எதேச்சையாக மீன் பிடிக்கச்செல்லும் Smeagol கையில் அது அகப்பட, பின் Smeagol இடம் இருந்து Bilbo Baggins இடம் வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் போரில் தோற்கடிக்கப் பட்ட Sauron (of Mordor) மீண்டும் எழுகிறான்; ஒரு பெரும்படை திரட்டுகிறான்.

உலகை வெல்லும் அவனது ஆசைக்கு தற்போது தேவைப்படுவது, தொலைந்து போன அந்த ஒரு Ring தான். இந்நிலையில் Sauron ஐ தோற்கடிக்க ஒரே வழி அந்த Ring ஐ அழிப்பதுதான். இங்கு வரும் அடுத்த கட்டுப்பாடு, அந்த Ring ஐ Mordor ல்( Sauron ன் தேசம்) உள்ள Cracks of mound doom ல் மட்டுமே அழிக்க முடியும். அங்குதான் அந்த Ring செய்யப்பட்டது.

இந்தப் பணியை மேற்கொள்ள The fellowship of the ring அமைக்கப்படுகிறது. அவர்கள் உயிரைப் பணயம் வைத்து, பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, Ring ஐ அழித்து எப்படி வெற்றி பெறுகின்றனர் என்பதை நீட்டி முழக்கிச் சொல்லும் கதைதான் LOTR.

கதை முழுக்க பல ஆச்சரியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக Hobbits வாழும் அந்த Shire நமக்கும் இப்படி ஓரிடம் கிடைக்காதா என ஏங்க வைக்கிறது. அதன் பின் வரும் நடக்கும் மரங்கள் (Ents), the towers, forces of the dead, white tree, Gandalf என பற்பல. இவை எல்லாவற்றிற்கும் மேலாக Smeagol ன் பாத்திரப்படைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

தொடரும்...