Monday, July 27, 2009

இன்னுமொரு பாதை


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

இன்றிலிருந்து இனிதே துவங்குகிறேன், இன்னுமொரு பாதையில் என் பயணத்தை.

நான் இதுவரை சந்தாதாரராக இருந்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்த புத்தகம் வலைப்பூவில் இனி நானும் பங்குதாரராகிறேன். நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களின் ஒரு அறிமுகத்தை இந்த பக்கத்தில் இனி எழுதலாம் என்றிருக்கிறேன்.

நினைக்கும் போதே ஒரு பயம் கலந்த சந்தோஷம் உண்டாகிறது. என்னை இன்னும் பல புதிய மனிதர்களிடம் இட்டுச்செல்லும் இந்த புதிய பாதை. திடுதிப்பென்று களத்தில் இறக்கிவிடப்பட்ட சிறுவனின் படபடப்புடன், தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வும் சேர்ந்து, நான் கொள்ள வேண்டிய கவனத்தை இன்னும் அதிகரிக்கன்றன.

ஊக்கமும் உற்சாகமும் அளித்து, வழித்துணையென இப்பயணத்தில் என்னை இட்டுச்செல்லும் சேரலுக்கும் ஞானசேகருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இவர்கள் இருவருமாக இணைந்து 'புத்தகம்' வலைப்பூவிற்கென்று ஒரு அளவீட்டை முன்னமே ஏற்படுத்திவிட்டனர். இனியெழுதப்போகும் எனக்கிருக்கும் மிகப்பெரிய சவால், அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் அளவீடுகளைத் தொடர்வதே. என்னால் முடிந்த வரை இப்பணியை சிறப்பாகச் செய்ய விழைகிறேன்.

என்னுடைய முதல் பதிவு 'மெளனியின் கதைகள்' இங்கே.

இந்த பக்கத்திலும் உங்களின் நேர்மையான விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்..

நட்புடன்,
பாலா

Thursday, July 23, 2009

கன சதுரம்

எங்கிருந்து தொடங்க.. என்னவோ யோசித்து எங்கெங்கோ தேடி, ஏறக்குறைய 3 வருடங்களுக்கு முன் தொடங்கியும் விட்டேன் இந்த வலைப்பூவை.
முழு மூச்சுடன் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதி வருகிறேன்.

இந்த மூன்றாண்டு கால எழுத்தில் நான் சாதித்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் உண்டென்றால் அது உறவுகள்தான். எத்தனையோ முகம் தெரியாத நண்பர்கள். எங்களுக்கிடையில் இருப்பது என்ன. ஏதோ ஒரு இழை.. ஒரே ஒரு ஒத்த உணர்ச்சி போதும். முரண்பட்டாலும் கூட போதும். எங்கிருந்தோ வந்து, வாழ்த்தி, வசைபாடி, திருத்தம் சொல்லி என்னை மென்மேலும் செதுக்கும் அந்த உறவுகள்தான் இந்த எழுத்தால் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.

அப்படித்தான் போன வாரம் திடீர்னு ஒரு நாள் அ.மு.செய்யது interesting blog னு ஒரு விருது குடுத்து நம்மளையும் புல்(லா) அரிக்க வைச்சுட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



மேலும் படிக்க...

Wednesday, July 22, 2009

அலைக்குறிப்புகள் - I

ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் எர்ணாகுளம் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் அமைந்தது. கடந்த முறை எர்ணாகுளத்திலும் கொச்சியிலும் அதிகமாக நேரம் செலவழி்க்க முடியாமல் போனதால் இம்முறை நிச்சயம் கொச்சின் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

உள் நுழைவதற்கு முன் ஒரு கொசுறு தகவல். எர்ணாகுளமும் கொச்சியும் இருவெவ்வேறு ஊர்களல்ல. இவை இரண்டுமே ஒருங்கிணைந்த கொச்சி மாநகராட்சியின் பகுதிகள். 1967ல் தனித்தனியாக இருந்த எர்ணாகுளம் கொச்சி மற்றும் மட்டன்சேரி நகராட்சிகள் இணைந்து கொச்சின் மாநகராட்சி உருவானது. எர்ணாகுளம் நவநாகரீகத்தில் திளைத்திருக்கும் நவீன பட்டணம். கொச்சி (அ) ஃபோர்ட் கொச்சி இன்னும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் தான் சிறப்புடன் வாழ்ந்த கால்த்தை அசைபோட்டுக்கொண்டிருக்கும் பழமையின் பட்டணம். இப்படி இரு முரண்பட்ட நகரங்களை ஒரே இடத்தி்ல் காண்பதே சிறப்புதானே..

மேலும் படிக்க...