Sunday, July 10, 2011

மோகமுள்

பாண்டுவின் செல்வனே! சத்துவ குணத்தின் போக்கு ஒளிமயமாகவும் ரஜோ குணத்தின் போக்கு காரியத்தில் ஈடுபாடாகவும், தமோ குணத்தின் போக்கு மோகமாகவும் வெளிப்படும்போது அவைகளை அவ்விவேகி வெறுப்பதில்லை. வெளிப்படாதிருக்கும் போது இவைகளுக்காக ஆசைப்படுவதுமில்லை. இக்குணங்களிடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருப்பார். இக்குணங்ககளால் பாதிக்கப்பட்டாலும் இருப்பார்.மேலும் குணங்களே தம்மை வெளிப்படுத்திக் கொண்டும் செயல்படுத்திக் கொண்டும் இருப்பதை உணர்கிறார்.தம் சொரூபத்திலேயே நிலைத்திருக்கிறார்.தாமாக எந்தச் செயலிலும் ஈடுபட இயலாது என்பதை உணர்ந்து அமைதியாக வாழ்கிறார்.

- கண்ணன்

நீண்ட நாட்களாகவே வாசிக்க நினைத்திருந்த புதினம். வாசிக்கத்தொடங்கிய பிறகு, நான் நினைத்த மாதிரியெல்லாம் பக்கங்களை நாலுகால் பாய்ச்சலில் தாண்டிவிட முடியவில்லை. மிக நிதானமாக மிக மிக நிதானமாக ஏறக்குறைய சில மாதங்கள் கடந்து இன்று மாலைதான் படித்துமுடித்திருக்கிறேன்.

இப்போது என்ன நினைக்கிறேன் என்று என்னால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பனொருவனை இனி பல காலத்திற்கு சந்திக்க முடியாது என்று தெரிந்தே, இரயில்நிலையத்தில் வழியனுப்பிவிட்டு திரும்பி வருவது போல் உணர்கிறேன்.

கதையைப் பற்றி நான் எதுவுமே சொல்லப்போவதில்லை. இப்படைப்பிற்கு, ஏன் எந்தவொரு நல்ல படைப்புமே கதை என்கிற கட்டத்தை கடந்து ஒரு அனுபவமாக பரிணமித்துக்கொள்கிறது. அந்த அனுபவம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இடையே வேறுபட்டாலும், அது தனித்துவமான ஒரு அனுபவம்தான். அதை அனுபவித்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. பதிவின் எழுத்து வசதிக்காக இங்கு கதையென்றே கொள்வோம்.

கதையின் களன் புழங்கும் பகுதி, கும்பகோணமும் பாபநாசமும் இரண்டாம் பாதியில் சென்னை. ஆனையடியும் கும்பேச்வரன் கோவிலும் பாபநாசமுமும் குடமுருட்டி ஆறும் நான் பார்த்துப் பழகிய இடங்கள் என்பதாலோ என்னவோ மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன். அதிலும் காட்சிகளை அதன் ஒலிக்குறிப்புகளுடன் வர்ணிப்பதில் தி.ஜா தி.ஜாதான். குடமுருட்டி ஆற்றின் இரவில் பாபுவுக்கு வைத்தி மந்திரம் சொல்லும் அந்த காட்சி ஒரு சோறு.

வார்த்தைகளில் இதெல்லாம் சாத்தியமா? இசையை வார்த்தைகளில் வடிக்கமுடியாது.. ஆனால், இசையென்னும் அனுபவத்தை வார்த்தைகளில் கொண்டுவந்தால் இப்படித்தான் இருக்குமோ? இருக்கக்கூடும். இசை மட்டுமல்ல அறுபது ஆண்டுகளுக்கு முந்திய கும்பகோணமும் நம் கண்முன் விரிகிறது. காவிரியோரத்து மாடியறையும், பூங்காவும் துக்காம்பாளையத்தெருவும் இதோ தொட்டுவிடும் தூரத்தில் ஜாலம் காட்டுகின்றன.

அதைவிட முக்கியமான விஷயம், அறுபது ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு துணிச்சலான கதையை வடிப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அன்று என்ன இன்றும் கூட இது விவாததுக்குரிய கருதான். மனித மனத்தின் சில இயல்புகள் என்றும் மாறுவதில்லை. அல்லது மாறுவதற்கு மிக அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன. கயிற்றின் மேல் சாகசம் காட்டுபவனைப் போல ஒரு புறம் இசையையும் ஒரு புறம் இச்சையையும் வைத்து மிக லாவகமாக பயணித்துக்காட்டியிருக்கிறார் தி.ஜா.

”மோகம் மனிதனை ஆட்டிவைக்கிறது” என்பது ஒரு statement. ஒரு உலகப்பொது உண்மை. இதனைப்பேசாத மதங்கள் இல்லை. சில மதங்கள் அரவணைத்துக்கொள்கின்றன. சில கூடவே கூடாது என்கின்றன. ஆனால், நாம் ஞானியல்ல. வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் சாதாரண மனிதனுக்குண்டான சுக துக்கங்களுடன் மோகத்தையும் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது. இந்த ஒரு வரிக்கு உயிரும் உணர்வும் கலந்து கூடவே இசையையும் சேர்த்துப் பிசைந்து மறக்கமுடியாத ஒரு அனுவமாக ரசவாதம் காட்டியிருக்கிறார் தி.ஜா. எந்தவொரு காட்சியும் இலக்கில்லாமல் எங்கோ இட்டுச்செல்வதாக உணரமுடியாது. பக்கங்கள் கடக்க கடக்க நமக்கும் மிகப்பரிச்சமான ஒருவர்களாக ஆகிவிடுகின்றனர் அனைவருமே.

அறுநூற்று சொச்ச பக்கங்களில் பல ஆயிரம் வார்த்தைகளில் எழுப்பிககட்டிய கோட்டை கடைசியில் ”இதற்குத்தானா?” என்ற ஒற்றை கேள்வியில் உடைந்து நொறுங்கும் போது, வாழ்க்கையின் அபத்தங்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீள் பரிசீலனை செய்யவேண்டியிருக்கிறது.

யமுனாவும் ரங்கண்ணாவும் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திப்போயினர். எனக்கு இந்த உலகில் இசைமட்டும் போதும் என்கிற ரங்கண்ணா, நான் எதையும் எதிர்கொள்வேன் என்கிற யமுனா, இவர்களை சிறுபிள்ளைத்தனமாக சித்தரித்து அவமதிக்கவிரும்பவில்லை நான். ஆசிரியரின் வார்த்தைகளில் நீங்களே உணர்ந்து கொள்ள,

------------
மோகமுள்,
தி. ஜானகிராமன்,
ஐந்திணைப்பதிப்பகம்
ரூ. 300
இணையத்தில் இங்கே கிடைக்கும்.
-------------

புத்தகத்தை மூடிவைத்த பிறகும் விடாமல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது அந்த ஒற்றைக்கேள்வி.

புத்தகத்தில் மோகமுள்.

Sunday, June 26, 2011

ஒரு நாள் கூத்து

எழுமையும் ஏமாப்புடைக்கும் என்றாலும் கூட கல்வி எல்லாரும் மிக எளிதாக கிடைத்துவிடுவதில்லை. நானும் கூட மரத்தடி பள்ளியில் மண்ணைக் கிளறியபடி ஆர்க்கிமிடீசைப் படித்தவன்தான். இதைப்பற்றியெல்லாம் அவ்வப்போது அலசி காயப்போடுகையில்,

”ஏதாவது செய்யணும் சார்” என்று ஒரு குரல் கேட்கும்.

என்னதான் அந்த அசரீரி அடிக்கடி கேட்டாலும், இது வரை ஏதும் செய்ததில்லை. அதற்கான வாய்ப்புகளும் சரியாக அமைந்ததில்லை.

அவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்வது மாதிரி அமைந்திருந்தது சென்ற வாரத்தில் ஒரு நாள். அலுவலகத்திலிருந்து நாங்கள் 25 பேர் ஒரு குழுவாக, அரசு சாரா தொண்டு நிறுவனமொன்று நடத்தும் பள்ளிக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் செலவிட்டோம்.

ஒரு நாள் முழுவதும் குழந்தைகளுடன், அவர்களுக்கு கற்றுக்கொடுத்து நிறையவே கற்றுக்கொண்டு, கதைகள் பேசி விளையாடி அவர்களின் பிரியா விடைகளுடன் மாலை கிளம்புகையில், இது ஒரு முழுமையான நாள் என்ற எண்ணமே எழுந்தது.

சம்பிரதாயமான முறையில் இல்லாமல், சின்னச்சின்ன பரிசோதனைகள் வாயிலாக பாடம் நடத்தும் உத்தியை நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். அவ்வப்போது கேள்விகள் கேட்டு அவர்களையும் சோதனையில் பங்கேற்கச்செய்தது எதிர்பார்த்த பலனைத்தந்தது. எல்லாக்குழந்தைகளுக்கும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. சரியான முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்தான் இப்போதைய பெரிய தேவை.

என் பள்ளிக்காலத்தை இன்று நிதானமாக யோசித்துப்பார்க்கையில், முதலில் நினைவுக்கு வருவது, பாடப்புததகங்களுக்கு வெளியிலும் சென்று ஒரு கதை சொல்வது மாதிரி ஈடுபாட்டுடன் பாடமெடுத்த ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே. அவர்களின் பிம்பம் என் மனதில் ஒரு ஆதர்சமாகவே பதிந்திருக்கிறது. எனக்கு ஆங்கிலம் எடுத்த பாலு வாத்தியார். பொதுவாகவே அரசுப்பள்ளிகளில் ஆங்கிலத்துக்கு மருமகள் மரியாதைதான். ஆனால், அவர் ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு சிலாகிக்கும் போது, அப்படி ஒரு பரவச நிலையில் இருப்பார். அப்படி என்னதான் அந்த நாலு வரியில் அடங்கியிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவே படிக்கத்தோன்றும். அதே போல் சமூக அறிவியல் எடுத்த பாஸ்கர் வாத்தியார். ”1963 ம் ஆண்டு பைத்தியக்காரன் ஒருவனால் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று புத்தகத்தில் வரும் ஒரு வரியை வைத்துக்கொண்டு ஒரு வகுப்பு முழுமைக்கும் கதைசொல்லிக்கொண்டிருப்பார். கேட்டுமுடிக்கையில் ”என்னது, கென்னடி செத்துப்போய்ட்டாரா?” னு கேட்கத்தோன்றும்.

அது போலவே இன்னும் சிலர் உண்டு. பள்ளியில் பாடப்புத்தை மட்டுமே கட்டியழுத ஆசியர் எவர் பெயரும் மூளைமடிப்புகளில் பதியவேயில்லை.

சென்ற வாரம் அந்த குழந்தைகள் அனைவரையும் பார்க்கையில் அந்த எண்ணம் மேலும் வலுப்பட்டது.



அந்த பள்ளியைப் பற்றி குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய ஒரு விஷயம், அவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்கள். அனைவருக்கும் பொதுவான மற்றொரு அம்சம், அனைவருமே பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் போருக்குப் பறிகொடுத்தவர்கள். இருக்கும் பெற்றோரும் தமிழகத்திலும் ஒரிசாவிலும் அகதிகள் முகாமை விட்டு வெளியில் செல்ல ஏகப்பட்ட கெடுபிடிகள். அவர்கள் அருகிலுள்ள இடங்களுக்கு வேலைக்குச் சென்றால் கூட மாலை இத்தனை மணிக்குள் முகாம்களுக்குத் திரும்பியிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள். இந்த தொண்டு நிறுவனம் அங்கிருக்கும் குழந்தைகளில் இருநூறு பேரை அழைத்து வந்து இங்கு எழுத்தறிவிக்கிறது. இது ஒரு Residential school. மாதத்தின் பத்து மாதங்கள் குழந்தைகள் அனைவரும் இங்கேயே இருக்கின்றனர். கோடை விடுமுறையாக இரு மாதங்கள் மட்டும் முகாம்களுக்கு விஜயம்.

இப்படி ஒரு இடம் பெங்களுரில் இருப்பது எனக்கு பெரிய ஆச்சரியம். அதுநாள் வரையில், இப்பள்ளியைப் பற்றி நான் கேள்விப்பட்டது கூட கிடையாது.

அப்பள்ளியைப் பற்றிய விவரங்கள் அறிந்தவுடன், நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும் எனத்தோன்றியது. இலங்கையில் அவர்கள் துடித்துச் சாகும் போதும் கூட, வரட்டுப் பேச்சு பேசிக்கொண்டிருந்த கையாலாகாதவர்களாகத்தான் நாம் இருந்திருக்கிறோம். அரசை மட்டும் குற்றம் சொல்வதில் பயனில்லை. நாமும் அதன் ஓர் அங்கம்தான்.

என்னால் முடிந்த குறைந்த பட்சமாக ஒரு நாளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்கியது. நிர்வாகிகளுடன் மேலும் பேசியதில், அனைவரும் கையிலிருந்த சொற்ப ரூபாய்களைத் தொகுத்து, அவர்களின் உடனித்தேவையாக சில மருந்துகளும் முதலுதவிப்பெட்டியும் வாங்கிக்கொடுத்தோம்.

அங்கு கட்டமைப்பு வசதிகளும் ரொம்ப பெரிதாக இல்லை. 10வது வரை அங்கு வகுப்புகளுக்கு வசதிகள் உள்ளன. பத்தாவதுக்கு பிறகு வகுப்பில் சிறந்து விளங்கும் ஒரு சிலர் மட்டும் P.U செல்கின்றனர். அதிலும் சிலர் மட்டுமே கல்லூரி வரை எட்டிப்பார்க்கின்றனர்.

பள்ளியைப் பற்றி மேலும்: http://www.igia.org.in/

நாங்கள் 6 லிருந்து 10 வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் எடுத்தோம்.

திட்டப்படி நான் எடுத்துக்கொண்ட, காந்தவியலுக்கு மொத்தம் மூன்று பேர். ஒவ்வொருவம் சுழற்சி முறையில் எடுப்பதாகத்தான் திட்டம். ஆனால் மாணவர்கள், ஆங்கிலத்தில் தடுமாறவே, அனைத்தையும், தமிழிலேயே விவரிக்க வேண்டி வந்ததால் ஒய்வில்லாமல் மூன்றரை மணிநேர வகுப்பையும் நானே எடுத்தேன்.

வகுப்பிலிருந்து வெளிவருகையில் என்னால் சரியாக பேசவே முடியாவிட்டாலும் கூட மிகுந்த மனநிறைவைத்தந்தது அந்த சிலமணிநேரங்கள். மாணவர்களின் இடைவிடாத கேள்விகள், ஆச்சரியப் பார்வைகள், புரிந்த சிரிப்புகள், கற்றுக்கொண்டதன் நன்றிகள் .

மதியம் உணவுக்குப் பின்னர், அவர்களுடன் விளையாட்டுகள். அடுத்த இரண்டு மணி நேரமும் கண்மூடித்திறப்பதற்குள் கடந்துவிட்டது.

இவ்வளவு நெருக்கமாக அம்மாணவர்களுடன் பழகுவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. கிளம்புகையில், மாணவிகள் சிலர் அவர்களே தயாரித்த நன்றி கூறும் வாழ்த்து அட்டையொன்றை நீட்டிய போது என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.

அலுவலகத்திலுந்து திரும்பவும் அடுத்த வருடம்தான் என்றாலும், நான் தனியாகவே மீண்டும் ஒரு முறை செல்லாம் என்று எண்ணியிருக்கிறேன்.

பிறந்தநாள், இறந்தநாள் என்று ஆயிரக்கணக்கில் ரெஸ்டாரன்ட்டுகளில் கொட்டித்தீர்க்கும் பெங்களுர் மக்கள் வருடத்தில் ஒரு நாள் இங்கும் வந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம். பகிரப்படும் மகிழ்ச்சி இரட்டிப்பாகுமென்று ஒரு சொல்வழக்கு உண்டு. நம்பாதாவர்கள் ஒரு முறை கண்டிப்பாய் இங்கு வரவும்.

இது ரெசிடென்சியல் பள்ளி என்பதால் அம்மாணவர்களுக்க பெரிதாக வெளியில் செல்லும் வாய்ப்புகளும் இல்லை. பள்ளியின் காம்பௌண்டு சுவர்களுடன் முடிந்துவிடுகின்றன அவர்களின் இந்தியப்பெருங்கடலும், இமயமலைகளும். நாங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததன் திருப்தியை விட, அவர்களுக்கு ஒரு மாறுதலாக , அவர்கள் உலகின் ஒரு நாள் விருந்தினர்களாக சந்தோஷம் அளித்ததே பெரிதாக இருந்தது.

எத்தனையோ சோகங்களைக் கடந்து வந்திருந்த போதும், அனைவர் முகத்திலும் சந்தோசமும் நம்பிக்கையும் இன்னும் மிச்சமிருக்கின்றன.

வீடு திரும்பிய பின் குற்றவுணர்ச்சி கொஞ்சம் குறைந்தது மாதிரி இருந்தது.

* * * *

குறிப்பு 1: வழக்கொழிந்து போன பல அழகான தமிழ்ப்பெயர்களைச் சந்தித்தேன். ஈகை வேந்தன், நெடுஞ்செழியன், கார்முகிலன் என இன்னும் பல. இன்று தமிழ்நாட்டில் எந்தவொரு பெற்றொரும் மூன்றெழுத்துக்கு மிகுந்து நாமகரணம் சூட்டுவதாகத்தெரியவில்லை. அந்த மூன்றில் ஒன்று வடமொழியாக இருந்தால் பெற்றோருக்கு இன்னும் பெருமை

குறிப்பு 2: ஒரு சிறுவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவன் நெருங்கிய உறவினர்கள் அவன் கண்முன் கொல்லப்பட்டதை ஒரு செய்தியைப் போலச் சொன்னான். எனக்குதான் அதற்கு மேல் பேசமுடியவில்லை.

Monday, June 20, 2011

அவனும் இவனும்

Disclaimer: இது அவன் இவன் விமரசனம் அல்ல. விமர்சனம் தேடி வந்தவர்கள் இப்போதே தப்பித்துக்கொள்ளலாம். :)

நீண்ட நாட்களுக்குப் பின் தியேட்டர் சென்று படம் பார்ப்பதென முடிவான பிறகு, ஆரண்ய காண்டம் பார்க்கலாம் என்றானது. ஆகா ஓகோ வென நண்பர்களும் உசுப்பேற்ற, நானும் இரு நண்பர்களும் ஒரு வழியாக படத்தின டிரெய்லர் பார்த்து படத்துக்கு தயாராகி படம் எங்கு ஓடுகிறது என்று தேடினால், எங்குமே இல்லை என்று பல்லிளித்தார் கூகிலாண்டவர். படம் வந்து ஒரு வாரம்தானே ஆகிறது.. என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று மீண்டும் சளைக்காமல் தேடியதில், nowrunning.com மட்டும் இந்த படம் ஒரு டப்பா தியேட்டரில் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதாக பாலை வார்த்தது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் மாணவர்கள் மாதிரி ஜோராக கிளம்பி 30 நிமிடங்கள் முன்னதாகவே தியேட்டருக்கு சென்றால், பார்க்கிங்கிலேயே

”மலையாளமா?” என்று கர்ண கடூரமான குரலில் குச்சியை நீட்டினார் பார்க்கிங் ஆசாமி..

பொதுவாக தமிழ்நாட்டுக்கும் கர்னாடகத்தும்தானே பிரச்சனை வரும்.. இப்ப இவர் கேட்கிற தொனியைப் பார்த்தால், கேரளாவுக்கும் பிரச்சனையா.. நல்லவேளையாக நான் இப்போது கேரளா இல்லை என்பது சந்தோசம் என்றாலும், பயத்தை விழுங்கியபடி

”தமிழ்நாடு” என்றேன்..

”அக்கட ரண்டி.. அக்கட ரண்டி” என்று அருகிலிருந்த மற்றொரு தியேட்டரை நோக்கி கை காட்டினார்..

இது என்ன புது அநியாயமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வந்தால் இங்கு படம் பார்கமுடியாதா என்று மேலும் விசாரித்ததில், நேற்றே படம் மாறிவிட்டதாம். இப்போது ஒரு மலையாள படம் ஓடிக்கொண்டிருக்கிறது. . ஆண்டவா. .

தியேட்டர் முன் அப்படத்தின் ஃப்ளெக்ஸ் பேனரில், மார்வரை பாவாடை ஏற்றிக்கட்டிய மங்கை அனைவரையும் வருக வருக என்று வரவேற்றுக்கொண்டிருந்தார். .

இது வரை தியேட்டரில் மலையாளப்படமே பார்த்ததில்லையே என்று எழுந்த குற்றவுணர்ச்சியையும் ஓரங்கட்டி, பார்த்தால் தமிழ்ப்படவே பார்ப்பதென சூளுரைத்து அருகிலிருந்த தியேட்டருக்கு சென்றால், அங்கு காத்திருந்தது அடுத்த அதிர்ச்சி. அங்கு ஆரண்ய காண்டத்திற்கு பதிலாக அவனும் இவனும் எங்களைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தனர்.

அவன் இவன் ஆ என்று நண்பர்களிருவரும் பின்வாங்க,

இவ்வளவு தூரம் பெட்ரோலை புகைத்து வந்த ஒரே காரணத்துக்காகவாவது இந்த படம் பார்த்துவிட்டு போகலாம் என்று முண்டியடித்து டிக்கெட்டும் வாங்கினால், படம் தொடங்குவதற்கு 5 நிமிடம் முன்பாகத்தான் உள்ளே விடுவோம் என்று சங்கிலியைப்போட்டு இறுக பூட்டியிருந்தனர். அதற்கு இன்னும் பத்து நிமிடம் இருக்கிறதே என்று அக்கம் பக்கம் நோட்டம் விட்டதில் நிறைய பேர் குடும்பம் சகிதமாக பிள்ளை குட்டிகளுடன் வந்திருந்தனர். ஜீன்ஸ் கூலிங்கிளாஸ் சகிதமாக பீட்டர் மங்கைகளையும் காணமுடிந்தது. இவர்களுக்கு இன்னமும் பாலா மேல் இருக்கும் நம்பிக்கையா, இல்லை என்னைப் போல் ஏமாந்த சோனகிரிகளா என்று எழுந்த சந்தேகத்தையும் பொறுத்துக்கொண்டு காத்திருந்தோம். பூட்டு திறக்கும் போதுதான் தெரிய வந்தது, டிக்கெட்டில் போட்டிருக்கும் இருக்கை எண்கலெல்லாம் சும்மா உல்லுலாயிக்கு. உள்ளே நுழைந்ததும் உங்கள் கபடியாடும் திறமைக்கேற்ப ஒரு இருக்கையை பட்டாபோட்டுக்கொள்ளலாம். . கிட்டத்தட்ட மன்னன் பட ரஜினி ரேன்ஞ்சுக்குத்தான் உள்ளே நுழைய முடிந்தது.

இதெல்லாம் சரி.. படம் என்னவானதா? வேண்டாம்.. குறை சொல்வது ரொம்பவும் சுலபம். அது நிறைய சொல்லலாம். முதல் பாதி என்னால் கொஞ்சமும் ஒன்றமுடியவில்லை. ரொம்ப செயற்கையாகத் தெரிந்தது பல இடங்களில். படத்தில் எனக்குப் பிடித்த இரு விஷயங்கள் மட்டும்..

முதலாவது.. பாலாவின் ட்ரேட் மார்க் பாத்திரங்கள்.. இது வரை நீங்கள் சந்தித்திராத கதாபாத்திரங்களை அவளர்களின் வாழ்விடங்களிலேயே ஒப்பனைகளின்றி காணலாம். . இப்படி குற்றப்பரம்பரையைப் பற்றி தமிழில் வேறேதும் படம் வந்திருக்கிறதா எனத்தெரியவில்லை. அப்புறம் அந்த கமுதிக்கோட்டை ஜமீன்.. சுதந்திர இந்தியாவிடம் ஜமீனை பறிகொடுத்துவிட்டு வறட்டு ஜம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் பாத்திரமும் கச்சிதம்.. அப்புறம் அந்த சிறுவன்.. எதுவுமே பேசாவிட்டாலும், அவர்களின் குடியிருப்பின் வாயிலில் அபாய மணியடிக்கும் கிழவன்.. இன்னும் இன்னும்.. இவர்களையெல்லாம் திரையில் கொண்டுவர பாலாவால் மட்டுமே முடியும்.

அடுத்து ஜமீன்தாரின் நடிப்பும், அவருக்கும் அந்த சிறுவனுக்கும் இடையிலான உறவும் எனக்கு பிடித்திருந்தது. பாசாங்குகள் இன்று உறவுகளை காட்சிப்படுத்திய பாலா, நாயகர்கள் என்றாலே ஒரு நாயகி தேவை என்கிற ஆலம் ஆரா கால ஃபார்முலாவின் சறுக்கியிருப்பது உறுத்துகிறது.

பெரிதும் எதிர்பார்த்த ”ஒரு மலையோரம்” பாடல் படத்தில் வரவே இல்லை. L

படத்திற்கு செல்லும் முன், இது ஒரு காமெடி படமென்று யாரோ சொன்னதாக நினைவு. அது யாரென்று இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்..

பாலா படத்திற்கெல்லம் genre சொல்லவது ரொம்பவே கஷ்டம். இது பாலா படம் அவ்வளவுதான். நான் கடவுளும் பிதா மகனும் உங்களுக்கு மிகப்பிடித்த படங்கள் என்றால், இதுவும் பிடிக்கக்கூடும். அதற்கு மேல் உங்களின் ஊழ்வினை.

Moral of the story: கூகிலாண்டவர் (பெரும்பாலும்) பொய் சொல்ல மாட்டார். :P

Sunday, June 12, 2011

காலக்கணக்கு

பாதை தொலைத்த கருநிறப்பறவையொன்று

ஆழியின் இருள் வானில் நீந்துகிறது. . .

சிறகின் திராணி தீரும் மட்டும்

இருள் கிழித்த அப்பறவை,

செயலற்று நீர் சேரும் அந்த வினாடி

உதிரத்தொடங்குகிறது பறவையின்

இறகுகளில் படிந்திருந்த வானம். .

Thursday, June 02, 2011

எனக்கும் ஒரு கனவுண்டு

எனக்கு ஒரு கனவுண்டு. .
அடிக்கடி வரும் கனவு,
அது ஒரு மந்திரவாசல் பற்றியது. .
என் வாழ்வின் அத்தனை பிரச்சனைகளுக்குமான தீர்வு
அந்த கதவின் மறுபுறம்
என் வருகையை எதிர்நோக்கிக்காத்திருந்தது

எல்லாமே இருந்தது அங்கு
மனம் கொண்ட மனைவி
நிறைவான பெற்றோர்
குதூகலமாய்க் குழந்தைகள் என
கண் நிறையும் விளம்பரக்குடும்பம்.

பிசிராந்தையார் மாதிரி நரைக்காத தலையுடன்
நூறாண்டுகள் வாழ்ந்து முடித்து,
சலித்துப்போகும் ஒரு நாளில்
சந்தோசமாய் செத்துப்போகலாம்.

விழித்திருக்கும் வினாடியெல்லாம்
விழி நோக, அந்தக் கதவினைத்தேடி
பித்தம்கொண்டலைந்தேன்

கனவின் வருகையும் வீரியமும்
நாளுக்குநாள் கூடி,
தேடிக்களைத்த ஒரு நாள்
கதவுகள் மட்டுமே சூழ்ந்த ஒரு அறையில்
தனித்து விடப்பட்டதை உணர்ந்தேன்

ஒரு கதவினைப்போல மற்றொன்றில்லை
எந்த கதவிலும் சாவித்துவாரங்களில்லை
எனக்கான அமிர்தம் எந்த கதவின் பின்?

எனதென நான் நினைத்த கதவினைத்
தொடவிழைந்த வினாடியே,
சுற்றியிருந்த கதவுகள் அனைத்தும்
சுழலத்தொடங்கின..
மெதுவாய்த்தொடங்கிய சுழற்சி
சிற்சில வினாடிகளில்
என்னை மையமாகக்கொண்ட
பேய்ச்சுழலாக உருக்கொண்டது. .

பார்வைப்புலம் முழுவதும்,
பிரிதத்தறிய முடியாத காட்சிச்சிதறல்..

கிறுகிறுத்த சிந்தையும்,
ஓடிக்களைத்த கால்களுமாய்,
சுழற்சி ஓயும் சமயம்
என் கதவென நான் தேர்ந்தெடுத்த ஒன்றினுள்
ஆவலாய்ப் பாய்ந்தேன். .

அது வரை தேடியலைந்த களைப்பில்
உடன் உறங்கிப்போனேன்..

கனவில் வந்தது ஒரு மந்திர வாசல்..

எனக்கும் ஒரு கனவுண்டு
உங்களைப் போலவே. . .