Monday, October 13, 2008

புறாக்கூடு

பலருக்கு நாய்.. சிலருக்கு பூனை.. இன்னும் சிலருக்கு மீன்தொட்டியோ, முயல் குட்டியோ.. ஆனால் எங்கள் வீட்டுக்கு அந்த மாடப்புறாதான்.. நாங்கள் விரும்பியல்ல.. அந்தத புறாவாய் விரும்பி வந்தது.. நாங்கள் விரும்பாவிட்டாலும் எங்கள் வீட்டின் வளர்ப்புப்பிராணி என்று சொல்லிக்கொள்ள அதுதான்.

தீப்பெட்டி தீப்பெட்டியான ஒரு குடியிருப்பு கோபுரத்தின் உச்சியில் எங்கள் வீடு.. வீட்டின் உச்சியில் வெண்டிலேட்டர் அந்தப் புறாவின் போர்சன். சந்தோசமான போர்சன் அது. மாலை வேளைகளில் மட்டும் ஆரவாரம் கேட்கும்.. காலைக்குளிரில் லேசாக உடலையும் கண்களையும் குறுக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும். சில நேரங்களில் விருந்தினர்களும் வருவதுண்டு.
அவ்வப்போது வீட்டுக்குள் இலக்கின்றி அலையும் உதிர்ந்த இறுககள்தான் அப்புறாவின் இருப்பை சுயசரிதமாய் காற்றில் எழுதிக்கொண்டிருக்கும்..

எனக்கும் அம்மாவுக்கும், சண்டையிட வேறு காரணங்கள் இல்லாத போது, இருக்கவே இருக்கிறது இந்த புறாக்கூடு.. அம்மா, அப்புறாவை விரட்டச் சொல்கையிலெல்லாம் என்னவோ போலிருக்கும். நாங்கள்தான் அப்புறாவின் வீட்டை ஆக்கிரமித்திருப்பதாய் ஒரு உணர்வு எழுவதுண்டு.

“அது பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டு போதும்மா..”

“அடப்போடா.. வீடெல்லாம் குப்பையாவறது எனக்குத்தான் தெரியும். ரெண்டு தடவை வெரட்டி விட்டா மூணாவது தடவ தானா போயிடப்போது”

என்பதுதான் அம்மாவின் நிரந்தர வாதம்.
நிரந்தரமாய் இல்லாவிட்டாலும், அவ்வப்போது ஒரு பதில் என்னிடம் தாயாராய் இருப்பதால், இந்த பேச்சுவார்த்தைக்கு என்றுமே முடிவு எட்டியதில்லை.
சில மாலை வேளைகளில் ரொம்ப போரடிக்கும் போது, அந்த புறாக்களின் சம்பாசனைகளை மொழிபெர்த்துக்கொண்டிருப்பேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ரொம்ப சுவாரசியமான வேலையது.

போன கோடையில் சித்தப்பா, குடும்பம் சகிதமாக வீட்டுக்கு வந்தபோது, ராகுல் கண்ணில் முதலில் பட்டது, அந்த புறாதான்..

“ஐ.. புறாப்பா..”

அவனுக்கு ஒரே கொண்டாட்டம்தான். புறா நிக்குது, புறா திரும்புது, புறா பறக்குது என்கிற ரீதியில் அவனின் நேரடி வர்ணணைகள் தொடர்ந்து கொண்டிருக்கும். அதற்கடுத்த நாள், இன்னும் கொஞ்சம் விபரீதமாய்ப் போய், புறாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வந்து நின்றது.

கோரிக்கை சித்தி சித்தப்பா அம்மா வழியாக என் தலையிலேயே வந்து விடிந்தது.

ஒரு வகையில் கொஞ்சம் விசித்திரமாகக் கூட இருந்தது. இத்தனை நாளாய் இந்த எண்ணம் எனக்கு வரவே இல்லையே என்று.
சில நேரங்களில் வராண்டாவின் கைப்பிடிச்சுவரில் அமர்ந்திருக்கும். அப்போதெல்லாம் தூரத்தில் நின்று ரசிப்பதோடு சரி. நெருங்கவேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லை.
இப்போது புதிதாக சந்தேகம் வேறு. நெருங்கினால் ஒரு வேளை பறந்து விடுமோ..
சித்தப்பா ஊரில் இருந்தவரை புறா வராண்டா பக்கமே வராமல் ஏமாற்றிவிட, சித்தப்பா வழியனுப்பும் படலம், ராகுலின் சிணுங்கள்களும், அடுத்த வருடம் இதே புறாவுடன் போட்டோ எடுத்துத் தரப்படும் ரீதியிலான சித்தியின் சமாதனங்களினூடாகவும் முடிவுக்கு வந்தது.
ஆனால் அந்த ஆவல் எனக்குத் தொற்றிக்கொண்டது.
ஒவ்வொரு மாலையும் கவனிக்க ஆரம்பித்தேன்.
ஒரு நாள், கண்டுவிட்டேன் புறாவை.

தடாலடியாக நெருங்குவது சமயோசிதமாகப் படவில்லை. வேறு திசையில் நோக்கியபடி ஒவ்வொரு அடியாக பின்பக்கமாக மிக மெதுவாக எடுத்து வைத்தபடி நெருங்கினேன். என் இதயத்துடிப்பு எனக்குக் கேட்கத்தொடங்கியிருந்தது. அந்தப் புறவோ நடுவில் என்னை ஒரு முறை தலையைத்திருப்பிப் பார்த்ததைத் தவிர வேறெதும் பெரிதாகச் செய்துவிடவில்லை.
எனக்கும் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தது. ஏறக்குறைய ஒரு அடி வட்டத்துக்குள் வந்துவிட்டேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது. இவனால் ஆபத்தில்லை என்று எண்ணியிருக்கக் கூடும்.
அடச்ச..அந்த மில்லியன் யுரோ கேள்வி கொஞ்சம் தாமதமாகத்தான் நினைவுக்கு வந்தது.

‘இப்போ போட்டோ எப்படி எடுக்கறது?’

நெருங்கின மாதிரியே, மிக மெல்லமாக விலகி வந்து, புறாவின் பார்வைப்புலத்தைக்கடந்ததும் ஒரே ஓட்டமாக அடுக்களைக்குச் சென்றேன்.

“அம்மா. அம்மா. இங்க வந்து பாரும்மா..”

“…”

“அந்தப்புறா அப்படியே இருக்குமா.. பக்க்க்க்கத்தில போனாக் கூட..”

அம்மா பெரிய எதிர்வினையெதுவும் கொடுக்கவில்லை. அம்மாவுக்கு அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பாத்திரத்தின் உட்பொருட்கள்தான் முக்கியமாகப் பட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அடம் பிடித்து அம்மா கையில் கேமராவைத்திணித்து, சன்னலின் பின்னே நிறுத்திவிட்டு மெல்ல மெல்ல நெருங்குகையில் சொல்லிவைத்தாற்போல பறந்து போனது.
அமைதியாக வந்து கையில் கேமராவைக் கொடுத்துவிட்டு அடுக்களைக்குப் போனார்.

அதன்பின் புறா, எங்கள் சம்பாசனைகளிலும் நினைவுகளிலும் அடிக்கடி வந்துபோகாவிட்டாலும்,அவ்வப்போது வந்து போனது.
நான் ஓய்வு நேரங்களில் புறாக்களைப் பற்றி படிக்கத்தொடங்கியிருந்தேன். சேனல்களில் அலைகயில் நேட் ஜியோவில் புறாவைக் கண்டால், விடுவதில்லை. அம்மாவும் இப்போதெல்லாம் எதுவும் சொல்வதில்லை.
ஒரு நாள் எதேச்சையாகத் திரும்புகையில்,
கண்டுவிட்டேன் அந்தப்புறாவை மீண்டும் வராண்டாவில்.
மிக சன்னமாக,

“அம்மா”

“என்னடா”

“அந்தப்புறா”

“சரி”

“வராண்டால இருக்குமா.. போட்டோ எடுக்கலாம்மா. இன்னும் ஒரே ஒரு தடவம்மா..”

இரு வினாடிகள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்த பின்,
“சரி. போய் கேமராவை எடுத்துட்டு வா..”

இப்போதே மனதுக்குள் ஆடத்தொடங்கியிருந்தேன் நான். கேமராவை எடுத்து வருகையில் என்ன தோன்றியதோ,
“அம்மா. நீ போய் நில்லுமா.. நான் எடுக்கறேன்..”
முதலில் அம்மாவுக்குப் புரியவில்லை..

பின், புடவைத்தலைப்பைச் சரிசெய்தபடியே, வராண்டாவுக்குப் போனார்.
நான் போன மாதிரி, மிலிட்டரி ஸ்டைல் பதுங்கிப்போற பிசினெஸ்லாம் இல்லை. நிதானமாக மிக தீர்கமாக, அப்புறாவைப் பார்த்தபடியே, நெடுங்காலம் பழகிய நண்பனை வரவேற்கும் தொனியில் சென்றார்.
“இப்படிப் போகாதம்மா” என்று எச்சரிக்க நினைத்தேன்.
அதற்குள் அம்மா. அப்புறாவிற்கு மிக அருகில்.

“கடவுளே, போட்டோ எடுக்கற வரை பறந்துட கூடா”தென்று வேண்டிய படியே போட்டோவும் எடுத்து, அடுத்த வாரமே பிரிண்டும் போட்டு, அதற்கேற்ப அழகானதொரு ப்ரேமும் வாங்கி வீட்டில் டேபிள் மீது வைத்தாகிவிட்டது.
அம்மாவுக்கு சந்தோசமாய் இரந்திருக்க வேண்டும். அவ்வப்போது, காலைச்சமயலுக்குப் பிந்திய ஓய்வுநேரங்களில், அந்தப்புகைப்படத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருப்பார்.
எனக்கும் சந்தோசமாய் இருந்தது.
….

அன்றொரு நாள், ரொம்பநேரம் கத்திக்கொண்டிருந்தது. அறைக்கு வந்து பார்த்தபோது ரொம்ப காயம்பட்டு அலங்கோலமாய் இருந்தது. ஏதோ ஒரு பெரிய பறவை தாக்கியிருக்கவேண்டும்.
படபடவென்று இறகுகளை அடித்துக்கொண்டு அரற்றுவதைப்போலிருந்தது. அதன் கூட்டிலிருந்து சிறு சிறு குச்சிகளும் சில குப்பைகளும் காற்றில் அறைமுழுவதும் பரவுவதை வேடிக்கைப் பார்ப்பதைத்தவிர வேறெதும் எங்களால் செய்யமுடியவில்லை.
கொஞ்ச நேரத்துக்குப் பின் எங்கேயோ பறந்து போனது. அதன் பின் திரும்பவரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அம்மா எதுவும் சொல்லாமல், அனைத்துக் குப்பைகளையம் கூட்டி அள்ளினார்.

மாலை நான் மட்டும் அமர்ந்து அந்த வெண்டிலேட்டரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
புகைப்படத்தில் அம்மாவுடன் சேர்ந்து அந்த புறாவும் சிரிப்பதைப் போல் கற்பனை தோன்றியது.
சுயசரிதத்தின் கடைசி அத்தியாயத்தை காற்றில் எழுதியபடி தரையை வந்தடைந்தது அந்த கடைசிச் சிறகு.

கொஞ்ச நேரம் ஆத்மாநாமை எடுத்துவைத்தேன், வானம் பார்த்தேன், இசையில அளைந்தேன்... எதிலும் மனம் செல்லவில்லை.
இரவு அறையைக் கூட்டியபடி, சாப்பிட வரும்படி அம்மா அழைத்தபோதும், சுத்தமாக பசிக்கவில்லை.
தொண்டைக்கடியில் துக்கமோ, துக்கம் போன்ற ஏதோ ஒன்றோ அடைத்துக்கொண்டு அவஸ்தைப்படுத்தியது. எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தேன்.
கைகழுவ எழுகையில்தான் கவனித்தேன்.
அந்தச் கடைசிச் சிறகு அங்கேயே இருந்தது.
திரும்பி அம்மாவைப் பார்த்தேன்.
தலையைக் கோதியபடியே சொன்னார்,

“ரொம்ப நேரம் கண்முழிக்காதப்பா… போய்ப் படு..”

28 comments:

MSK / Saravana said...

நல்லா இருந்தது நண்பரே.. மனசு கனத்தது..

MSK / Saravana said...

இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Bee'morgan said...

நன்றி சரவணகுமார்.. நீண்ட நாட்களாக இணையம் பக்கம் வரமுடியவில்லை. உங்கள மாதிரி எழுதித்தள்ளறவங்கள பாத்தா பொறாமையா இருக்கு.. :o) இன்னும் உங்க புதிய பதிவுகள் எதுவும் படிக்கல.. கூடிய சீக்கிரம் படிச்சுட்டு சொல்றேன்..

ச.முத்துவேல் said...

//ஒவ்வொரு அடியாக பின்பக்கமாக மிக மெதுவாக எடுத்து வைத்தபடி நெருங்கினேன். என் இதயத்துடிப்பு எனக்குக் கேட்கத்தொடங்கியிருந்தது.//

நல்ல அனுபம்,கனிவான் உணர்வுகள்.
நல்ல பதிவு.

Bee'morgan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துவேல்.. :)

Arizona penn said...

உங்கள் சிறுகதை நன்றாக இருந்தது. சொற்பிரயோகங்கள் மிகவும் கவிதை நடையில் இருந்தது படிக்க சுகமாக இருந்தது...அதே சமயம் ஒரு கவிதையும் இல்லாத, உரைநடையும் இல்லாத உரைநடை கவிதையை படித்த மாதிரியும் இருந்தது. சிறுகதை எழுதுகையில் கவிதைத்தனமான நடையை சிறிது தவிர்த்து, இயல்பான நடை அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. ஒரு சாதாரண சிறுகதை ரசிகையாக நான் சொன்ன கருத்தை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். நீங்கள் மேலும் பல நல்ல சிறுகதைகளை படைக்க எனது வாழ்த்துக்கள்....

Bee'morgan said...

கவலையே வேண்டாம் selwilki .. உங்களின் வாழ்த்துக்கும் விமர்சனத்தும் மிக்க நன்றி.. :) உங்களின் விமர்சனங்கள்தான், என்னை மென்மேலும் பட்டைதீட்டிக்கொள்ள உதவும். தொடர்ந்து செய்தால் இன்னும் மகிழ்வேன்.. :)

Anonymous said...

நல்லா போடுறானுங்கடா பிட்ட பெங்களூருக்கும் , சாலியமங்கலத்துக்கும் ..

சரி இனி கதை ..

ரொம்ப சின்ன விஷயம் ,
ஒரு புறா வெண்டிலேட்டர்ல நம்ம பேச்ச கேக்காம உட்கார்ந்திருக்கறது .
அது போன பிறகு அதோட வெறுமை உணர்த்துற பாரம் தான்
இந்த கதையோட கருன்னு நெனைக்கறேன் .

வழக்காமான உன்னோட நடை . எனக்கு அந்த கவிதைத் தனம் தான் பிடிச்சிருக்கு .

காற்றின் தீராத பக்கங்களில்
அதன் வாழ்வை எழுதியபடி
அலைந்து கொண்டிருக்கிறது
பறவையின் உதிர்ந்த சிறகு .
- பிரமிள்

Bee'morgan said...

அதேதாண்டா.. பிரமிளின் அந்த வரிகளிலிருந்துதான் இது தொடங்கியது.. அப்புறம் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் ஒட்டு போட்டு கடைசியா இப்படி வந்து முடிஞ்சது.. ;)

ராஜ நடராஜன் said...

எழுத்தும் கவிதையும் சரளமாக வருகிறது உங்களுக்கு.வாழ்த்துக்கள்.

Priya said...

arumai!

Bee'morgan said...

@ ராஜநடராஜன்,
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. :) தொடர்ந்து வாருங்கள்..
@ ப்ரியா,
ரிபீட்டு. :)

Priya said...

Arumai! paarattuvadharkku varthai illai..

Priya said...

hmm... how do i type out the tamil font? forgive my ignorance..

Bee'morgan said...

நன்றி ப்ரியா.. :)
தமிழில் எழுதுவது ஒன்றும் கம்ப சித்திரமில்லை.. இந்த பக்கத்துக்குப் போய்ப் பார்க்கவும்.. எல்லாம் அனா, ஆவன்னா போடற மாதிரிதான்.. :D
http://thanikaa.blogspot.com/2008/02/blog-post_10.html

தோகை said...

படித்தபின் நம்மவீட்டுக்கும் ஒருபுறா வரக்கூடாதா என ஏங்கவைத்தது.. அருமை பாலா..

Bee'morgan said...

நன்றி தோகை.. :) உனக்கொரு உண்மை தெரியுமா.. இப்போ உண்மையிலேயே எங்க வீட்டுக்கு ஒரு புறா வந்திடுச்சு.. :) :) :)

Anonymous said...

இன்னும் அது ஓடி போகல ???

Bee'morgan said...

நீ பாத்தது அப்பவே போயிடுச்சு. இப்போ வந்துருக்கறது, புதுவரவு..

Priyadarshini said...

Everything is fine and touching except the "uvamaigal". It gives the feel "engayo padicha madhiri iruku". Ragul character a present panniyirukaradhu romba real la iruku. Congrats...

Bee'morgan said...

@ ப்ரியா: வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சி. :)
எல்லா நேரங்களிலும் புதிய உவமைகள் சாத்தியமில்லைதான்.. இருந்தாலும், இனிமேல் கொஞ்சம் புதுமையாக முயற்சிக்கிறேன்.. சுட்டிக்காட்டியதற்கு நன்றி..

anujanya said...

பாலா,

முதலில் தாமதமான வருகைக்கு ஒரு சாரி. உன் எழுத்துக்கள் எனக்கு வசீகரமாகத்தான் தெரிகிறது. சற்று எழுத்துப் பிழைகளை கவனித்து, மெருகேற்றினால் பெரிய கதை சொல்லி தயார். வாழ்த்துக்கள் பாலா.

அனுஜன்யா

Bee'morgan said...

எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி அண்ணா..
நானும் கண்டேன்.. இருந்தாலும் ஒரு சோம்பல் தனம்..
கூடிய விரைவில் மாத்திடறேன்.. ;)

Bee'morgan said...

சாரியெல்லாம் கேட்டு இப்படி ஷாக் குடுக்கறீங்களேண்ணா.. நீங்க எப்ப வந்தாலும் எனக்கு சந்தோஷமே.. :)

Anand R said...

"அம்மா எதுவும் சொல்லாமல் அனைத்துக் குப்பைகளையும் கூட்டி அள்ளினார்" - பின்னிட்ட போ...
"சுயசரிதத்தின் கடைசி அத்தியாயத்தைக் காற்றில் எழுதியபடி தரையை வந்தடைந்தது அந்த கடைசி சிறகு"... ஆஹா பிரமாதம் கவிதை கவிதை...

Bee'morgan said...

@ Anad R:
:) :) :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

தம்பி! ரசித்தேன். கவிதைப் பிரயோகம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் யதார்த்தமான எழுத்தோட்டத்தை கொஞ்சம் சிதைப்பதாகத் தோன்றுகிறது. ஒரு வாசகனாக என கருத்து இது. எனக்குப் பிடித்திருந்த வரிகள்,

'எனக்கும் அம்மாவுக்கும், சண்டையிட வேறு காரணங்கள் இல்லாத போது, இருக்கவே இருக்கிறது இந்த புறாக்கூடு.. அம்மா, அப்புறாவை விரட்டச் சொல்கையிலெல்லாம் என்னவோ போலிருக்கும். நாங்கள்தான் அப்புறாவின் வீட்டை ஆக்கிரமித்திருப்பதாய் ஒரு உணர்வு எழுவதுண்டு'

ப்ரியமுடன்
-சேரல்

Bee'morgan said...

நன்றி சேரா.. :) அடுத்த முறை நினைவில் கொள்கிறேன்..!