"யாரது?"
"திருடன்"
"என்ன வேணும்?"
"நகை வேணும்"
"என்ன நகை?"
"கலர் நகை"
"என்ன கலர்?"
"ம்ம்ம்ம்… செவப்பு கலர்…"
ஏழாம் வகுப்பு ஆ பிரிவில், மற்ற அரை டிராயர்களெல்லாம் அந்த செவப்பு கலரைத்தேடி ஓடிக்கொண்டிருக்க, எனக்குள் மட்டும் சில வினோதமான கேள்விகள் எழுந்தன..
உண்மையிலேயே திருடன் இந்த குணசேகரன் மாதிரிதான் குள்ளமாக வட்டமுகத்துடன், இருப்பானா? இதே மாதிரிதான் ஒவ்வொரு வீடாகச்சென்று தன் வருகையை பராக் சொல்வதுதான் அவன் வேலையா? இல்லையென்றால் அவன் எப்படி இருப்பான்? எங்கள் வீட்டுக்கு மட்டும் அவன் வருவதே இல்லையே ஏன்?
மேலும் படிக்க...
திருடர்கள் மீதான ஈர்ப்பு எப்படி ஏற்பட்டதென்று தெளிவாகத் தெரியவில்லை.. ஆனால், அன்றைக்கு விளையாடும் போதுதான், அந்த முடிவு எனக்குத் தோன்றியது.. அது, எப்படியாவது ஒரு உண்மையான திருடனைப் பார்த்து விடுவதென்று.
ஆனால், திருடர்களைத் தேடி எங்கு போவது எப்படிப் பார்ப்பது எதுவுமே இல்லாமல் ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றியாகிவிட்டது. முதல் வேளையாக அ பிரிவு ஜெகன் தான் நினைவுக்கு வந்தான். அவனுக்கு இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் பரிச்சயம் அதிகம். என்ன கொஞ்சம் அதிகமாக ரீல் சுத்துவான். அவனே வானை அளந்த மாதிரியெல்லாம் கதை சொல்வான். மற்றபடிக்கு சராசரிக்கும் சற்று குறைவான ஒரு மாணவன்தான்.என்ன மாதிரி கூச்சசுபாவமெல்லம் கிடையாது அவனுக்கு.
சொன்னதற்கு கெக்கெ பிக்கேவென்று கொஞ்ச நேரத்திற்கு சிரித்துகொண்டிருந்தவன், திடீரென்று சிரிப்பதை நிறுத்தினான்.
”ஆமாண்டா.. நானும் திருடன பாத்ததே இல்ல.. வா, ரெண்டு பேருமா பாக்கலாம்..”
ஆனால் அவனுக்கும் எப்படியென்று தெரியவில்லை.
எப்படியாவது அவன் ஒரு வழியுடன் வருவானென்று தெரியும்.. ஆனால் என்னவென்று மட்டும் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருந்தேன்.
நினைத்தது மாதிரியே அடுத்தநாளே ஒரு திட்டத்துடன் வந்தான்..
மதியம் உணவு இடைவேளையில் அவனைப்பார்த்வுடனேயே,
”எப்படி டா?”
”கண்டு பிடிச்சுட்டோம்ல.. நம்மகிட்டேயேவா..”
என்றபடி ஒரு போலி பெருமிதத்துடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்..
“எப்படின்னு சொல்லுடா” ஆர்வம் தாங்கவில்லை எனக்கு..
”சரி சரி. அவசரப்படாத.. எதுக்கு இவ்ளோ அலையனும்.. பக்கத்தூருலதான் எங்க மாமா டீக்கடை வச்சுருக்கார்”
” அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்”
”டேய்.. அங்கதான் G7 ம் இருக்கு” என்றபடி கல்மிஷமாய்ச்சிரித்தான்..
வழக்கம்போல் நான் பேந்த பேந்த விழிக்க, எனக்குத் தெரியாத ஒன்றை தெரிந்துகொண்ட கர்வத்துடன் சொல்லத்தொடங்கினான்.. அதாகப்பட்டது, G7 என்பது எங்களின் பக்கத்தூர் போலீஸ் ஸ்டேஷன். அவன் சொன்ன அந்த மாமா கடை, G7 ன் பக்கத்து காம்பௌண்ட்.. அவர்தான் G7 ற்கு ரெகுலர் டீ சப்ளையர்.. எப்படியாவது, ஒரு நாள் டீ கிளாசுடன் உள்ளே நுழைந்தால் வேண்டியமட்டும் லாக்அப்புக்குள் விதவிதமான திருடர்களை கண்குளிர கண்டுவிடலாம் என்பது அவன் திட்டம்.
என்னைப்பொறுத்தவரை போலீஸ் ஸ்டேஷன் என்பதே ரொம்ப பெரிய சமாச்சாரம்.. அதில டீ கிளாசோட போய் மாட்டிகிட்டு என்னையும் ஜெயில்ல போட்டா என்ன ஆகறது.. அடுத்த நாள் ஸ்கூலுக்கு யார் போறது.வீட்ல எப்படி பதில் சொல்றது..
”ம்கூம்.. இதெல்லாம் ஆவுறதில்ல..”
”..?”
”பக்கத்தூருக்கு போகணும்னா பஸ் புடிக்கனும்.. பஸ்க்கு காசு வேணும்.. வீட்ல கேட்டா உதைவிழும்.. நம்மால முடியதுப்பா”
என்ற படி ஜகா வாங்கினேன்..
திருடனைப்பார்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை போல..
”வேணாம்டா விட்டுறலாம்டா..”
அவன் விடுவதாய் இல்லை.. அவனின் வழக்கமான ஜம்பம்..
”ம்ம்.. அஸ்க்கு புஸ்க்கு.. நான் ஒரு ஐடியா சொன்னேன்ல.. நீயும் ஒன்று சொல்லு.. சரிவரலன்னா விட்டுறலாம்”
என்று என்பக்கமே திருப்பிவிட்டான்.. சரி ஆனது ஆகிவிட்டது.. ஒப்புக்கு ஒரு ஐடியா சொல்லி இவனை கழட்டி விடறத்துக்கு, ஒரு நல்ல ஐடியாவை யோசித்தால் என் ஆசையும் நிறைவேறிய மாதிரி இருக்கும். ஆசை யாரை விட்டது.
அதற்கடுத்த ஒரு வாரமும் தினத்தந்தியில் கொலை கொள்ளை செய்திகளை ஒன்று விடாமல் படிக்கத்தொடங்கினேன்.. ஒவ்வொரு நாளும் ஆச்சரியமாய் இருந்தது.. ஒரு நாளில் இவ்வளவு கொள்ளைகள் நடக்கின்றனவா?
ஒரு வாரத்தில் திருடர்களைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரிந்துவிடவில்லையென்றாலும், ஒன்று மட்டும் தெளிவானது.. ஒரு நாளில் ஏராளமான திருட்டுகள் நடக்கின்றன.. கண்டிப்பாக எங்கள் ஊரிலும் ஒரு திருடன் இருக்கவேண்டும் என்று. ஆனால், எப்படி அந்த திருடனை அடையாளம் காண்பது? எப்படிப்பாக்கறது..? வீட்டுக்குப் போயா? எதுவும் தெரியவில்லை.. இருந்தாலும், அடுத்த நாளே ஜெகனிடம் சொன்னேன்.. பக்கத்தூருக்கெல்லாம் போகாம உள்ளுரிலேயே திருடனைப்பார்க்கலாமென்று.. அவனுக்கு அந்த திட்டம் மிகவும் பிடித்துப்போனது எனக்கே பெரிய ஆச்சரியம். அதிலிருந்த விடைதெரியா கேள்விகளையும் சொன்னேன்.. அவன் சட்டை செய்ததாகவே தெரியவில்லை..
”அதுக்கெல்லாம் நம்மகிட்ட ஆள் இருக்கு.. எல்லாம் எம் செயல்” என்றபடி சீட்டியடித்தான்..
எரிச்சலாக வந்தது.. எப்படியோ, அவன் ஒரு பதிலுடன் வந்தால் சரி..
நான் நினைத்ததை விட சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டான் அவன்.
ஊர்க்கடைசியில் நெடுஞ்சாலைக்கு அருகே வீரனார் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு தாமரைக்குளம் உண்டு. அதில் இருப்பதெல்லம் அல்லியென்று ஊருக்கே தெரிந்தாலும் பெயர் மட்டும் தாமரைக்குளம்தான். அதற்குப்பின்னே ஒரு புறத்தில் அடர்த்தியாக மூங்கில் புதரும் கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரு பெரிய ஆலமரமும், தூங்கு மூஞ்சி மரமுமாக அடர்ந்து பந்தல்போட்டிருக்கும்.. அதற்கும் பின்னே போனால், உரக்கடை கோனாரின் வயல் தொடங்கிவிடும்..
அந்த வயலுக்கும் குளத்துக்கு பின்பான மரப்பந்தலுக்கும் இடையே ஒரு திட்டு தரிசு நிலம் உண்டு.. அங்கிருந்து பார்த்தால் நெடுஞ்சாலை தெளிவாகத் தெரியும். ஆனால் நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தால் ஆலமரம் வரைக்கும்தான் தெரியும். அந்த இடத்தில் இருந்தால், நமக்குத் தெரியாமல் யாரும் நெடுஞ்சாலை வழியே நம்மிடம் வரமுடியாது. இது போன்ற குணநலன்களால் அப்பகுதி மாதம் இருமுறை கள்ளு காய்ச்ச உகந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அவ்வகையில், இல்லாமல் அப்பகுதி சும்மா இருக்கும் நேரத்தில்தான் அங்கு திருடர்கள் வருவார்களென்றும் தங்களின் திருட்டுப்பொருட்களை பங்கு போட்டுக்கொள்வார்களென்றும், ஒரு நாள் ராத்திரி அங்கு போய் ஒளிந்திருந்தால் நிச்சயம் திருடனைப்பார்த்துவிடலாமென்றும் சொன்னான்.
கேட்பதற்கு தங்கமலரில் கதைபடிப்பது போலிருந்தாலும், எனக்கு உள்ளுர பயம் பரவியது. அந்த திருடர்கள் மாதிரி இவர்களும் கேள்வி கேட்டால் பதில்சொல்லிவிட்டு கொஞ்சம் நகையும் கொடுத்து அனுப்புவார்களா என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன்.
என்னதான் இருந்தாலும் இறங்கியாகிவிட்டது ஒரு நாள் ராத்திரிதானே. இதை மட்டும் தாண்டிட்டா, ஸ்கூலில் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், எங்களின் பிரதாபங்களை.. மற்ற பசங்களெல்லாம் வாயைப்பிளந்து கேட்பார்களென்பதே கொஞ்சமாய் போதையூட்டியது. இடம் தேர்வாகிவிட்டது. காலம், காலாண்டு விடுமுறையின் கடைசிநாளென நீண்ட கலந்தாய்வுக்குப்பின் முடிவுக்கு வந்தோம்.
அவ்வப்போது கனவுகளில் கழுத்தில் கர்சீப், பாரம்பரிமான கன்னத்து மச்சங்களுடன் திருடர்கள் வந்து பயமுறுத்திப்போயினர்.
காலாண்டுப்பரீட்சைக்குப் பிந்திய விடுறைகளை சிதைப்பதற்கென்றே சில ஆசிரியர்கள் இருப்பார்கள். அப்பரீட்சையில் வினாத்தாளாக வந்த அனைத்தையும் நோட்டுப்புத்தகத்தில் எழுதி விடுமுறை முடிந்து வருகையில் கொண்டு வரவேண்டும். அதை நான் எப்போதும் வெறுத்தாலும், அன்றிரவு நான் ஜெகன் வீட்டுக்குச்செல்ல அக்காரணம்தான் உதவியது.
ஜெகனின் அப்பா ஒரு டிரைவர். அவனுக்கு அம்மா கிடையாது. தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்யுமளவுக்கு வளர்ந்திருந்தான் அவன். அன்றிரவு அவன் அப்பாவும் ஊரிலில்லை. நான் போனதிலிருந்தே ஒரேயடியாக அறிவுரை மழை பொழியத்தொடங்கிவிட்டானவன்.
போகும் போது முகத்தில் ஒரு துணி கட்டிக்கொள்ளவேண்டும். செருப்பு போடக்கூடாது. சத்தம் போடக்கூடாது. இருவரும் கையில் ஒரு பூண்டு வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் பலவாய் பட்டியல் நீண்டது..
நள்ளிரவு நேரம் நெருங்க நெருங்க எனக்கு இதயத்துடிப்பு இரட்டிப்பாகி எகிற ஆரம்பித்தது.. குரல் கூட தெளிவாக வரவில்லை..
” ஜெகன்…”
”ம்ம்..”
“கண்டிப்பா போகணுமாடா.. நான் வேணா பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்குப் போயிடறேனே.. இன்னும் கொஸ்டின் பேப்பர் வேற எழுதல..”
”அடச்ச.. சும்மா கெட.. எத்தன தடவை சொல்றது.. இன்னைக்குப் போறோம்.. அவ்ளோதான்.. ”
”..”
”நீ வந்தா வா.. வராட்டி போ.. நான் இன்னைக்குப் போகத்தான் போறேன்..”
அப்படியே தப்பித்து ஓடிவிடலாம் என்று மனதுக்குள் ஒரு குரல் கேட்டாலும், ஒரு வேளை ஜெகன் மட்டும் தனியே சென்று திருடனைப்பார்த்துவிட்டால் அதற்கப்புறம் அவனை கையிலேயே பிடிக்கமுடியாது. அதற்கும் மேலாக, இது என்னோட ஐடியா.. அதுக்காகவாகது நான் போகணும் என்ற முடிவே நிலைத்துவிட்டது..
11 மணிவாக்கில் மெல்ல வீட்டிலிருந்து கிளம்பினோம்.. அமாவாசைக்கு வெகு பக்கத்தில் நிலவு..இப்பவோ அப்பவோ என்பது மாதிரி கொஞ்சமாய் விளிம்பு காட்டிக்கொண்டிருந்தது. தூரத்தில் சில இரவுப்பறவைகள் சத்தம்போட்டுக்கொண்டிருந்தன. முகத்தில் அந்த துணி வேறு மூச்சைத்திணறடித்தது.. அடுத்த தெரு மூலையில் சில நாய்கள் மிரண்டு துரத்த, அந்த முகமூடித்துணியை நல்ல பிள்ளைகளாக மடித்து கையில் வைத்துக்கொண்டோம்.
அது வரை நான் கேள்விப்பட்டிருந்த கொள்ளிவாய்ப்பிசாசுகள், மோகினிகள், கோட்டை வீரன் கதைகளெல்லாம் அசந்தர்ப்பமாக நினைவில் வந்து கலங்கடித்தன. பேசாமல் அவன் சொன்ன முதல் ஐடியாவுக்கு ஓகே சொல்லியிருக்கலாம் என்று பட்டது. எது நடந்தாலும் பகலிலாவது நடந்திருக்கும்.
கண்ணுக்கெட்டும் தூரத்தில் கோயில் வந்தபிறகுதான், அப்பகுதி தெருவிளக்குகளாலும் கைவிடப்ட்ட பகுதியென்று உணர்ந்தோம். அவனுக்குள்ளும் லேசாக பயம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவன் முன்னே செல்ல, மெல்ல தாமரைக்குளத்தை நெருங்கிவிட்டோம்..
ஏதாவது ஒரு வகையில் குளத்தை கடக்கவேண்டும். வலதுகரையோடு போனல் மூங்கில் புதரைத்தாண்டி அந்த திட்டுக்குப் போகவேண்டும்.. அது கொஞ்சம் தூரம்.. அதைவிட, இடதுகரையோடு போனல், ஆலமரத்தை தாண்டி அந்த திட்டுக்குப் போய்விடலாம்.. ஆனால், குறுக்கே கோனார் வயலுக்கு செல்லும் ஓடை வரும்.. அது குளத்துடன் சேரும் இடம் சதுப்பு நிலம் மாதிரி முட்டிவரை சேறாகிக்கிடக்கும்.
ஒரு வழியாக இடது கரையே என்று தீர்ப்பாகியது. அவன் முன்னே செல்ல, அவன் கையைப்பிடித்த படி பின்னே நடந்தேன்.. அவன் கை நடுங்குவது அப்பட்டமாய்த் தெரிந்தது..
அந்த சேற்றுப்பகுதிக்கு வந்தபின் ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியாக வைத்தபடி முன்னேறுகையில்தான் அது நடந்தது.
யாரோ என் காலை கயிற்றைக்கொண்டு இறுக்குவது போல் இருந்தது.. வீல் என்ற ஒரு அலறலுடன் சேற்றில் விழுந்ததில், கழுத்துக்குக் கீழ் மொத்தமாக மூழ்கி சேற்றுக்குள் துளாவிக்கொண்டிருந்தேன். குத்துமதிப்பாக ஒரு திசையிலிருந்து ஜெகன் கத்துவது கேட்டது. என்னால் பதிலுக்கு கூட வாய்திறக்கமுடியாமல், தொண்டைக்குள் அடைப்பது போலிருந்தது. மறக்கமுடியாத அந்த பதினைந்து வினாடி களேபரத்தில், என் கால் கட்டு கொஞ்சமாய் நழுவி விழ, அடித்துபிடித்துக்கொண்டு கரையேறியபோது மொத்தமாக சேற்றில் முழுகி, சொட்டச் சொட்ட, நான் இந்நேரம் அழத்தொடங்கியிருந்தேன்..
அவனுக்குள் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் காலியாகிவிட்டது..
”டேய்.. திரும்பிடலாம்டா”
விசும்பல்களுக்கிடையே தலையாட்டிடேன்.. அவன் பார்த்தானா தெரியவில்லை..
அதே வழியில் திரும்ப வர இருவருக்குமே தைரியமில்லை. பேசாமல், குளத்தைச்சுற்றிக்கொண்டு வலதுகரையுடன் வெளியேறிவிடலாமென்று முன்னேறினோம்..
அந்த ஆலமரத்தின் கீழ் வந்தபோதுதான் அதை கவனித்தேன்.. எங்களுக்கு நேரெதிரே இருபதடிக்கும் குறைவான தொலையில், இருட்டில், கொஞ்சம் பெரிய சைஸில் சப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி ஒன்று காற்றில் அலைந்துகொண்டிருந்தது. எங்களை நோக்கி வருவது போல் தோன்றியது. அதே நேரம் அவனும் அதைப்பார்த்திருக்க வேண்டும்.
”ஓட்றா” என்றொரு குரல் மட்டும் தான் கேட்டது.. அவன் எந்தப்பக்கமாய் ஓடினானென்றெல்லாம் பார்க்க எனக்கு அவகாசம் இல்லை. ஏதோ ஒரு வழி.. தொலைவில் தெரிந்த தெருவிளக்கை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தேன்.
அதற்கடுத்த நாள் நான் ஸ்கூலுக்குச் செல்ல வில்லை.
15 comments:
நல்ல கதையோட்டம். சில வரிகள் விளங்கவில்லை. மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்
நன்றி சேரா.. :)
சீட்டியடித்தான்- meaning enna nu sollu.
இருவரும் கையில் ஒரு பூண்டு வைத்துக்கொள்ள வேண்டும்-intha line ethuku enaku theriyala.:-(
ஏதாவது ஒரு வகையில் குளத்தை கடக்கவேண்டும். வலதுகரையோடு போனல் மூங்கில் புதரைத்தாண்டி அந்த திட்டுக்குப் போகவேண்டும்.. அது கொஞ்சம் தூரம்.. அதைவிட, இடதுகரையோடு போனல், ஆலமரத்தை தாண்டி அந்த திட்டுக்குப் போய்விடலாம்.. ஆனால், குறுக்கே கோனார் வயலுக்கு செல்லும் ஓடை வரும்.. அது குளத்துடன் சேரும் இடம் சதுப்பு நிலம் மாதிரி முட்டிவரை சேறாகிக்கிடக்கும். - nalla imagine panna vaikku intha part:)
kathai rompa nalla irukku bala.interesting ah porathu.:)nice one :)
உன்னிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களுள் ஒன்று. வாசகர்களை சுண்டி இழுத்து "மேலும் படிக்க..." வைக்கும் சுட்டி. பத்து வரிகளுக்கு மிகாமல் எழுதும் விஷயங்களுக்கு, (கதை, கட்டுரை) எழுதுபவர்கள் இந்த உத்தியை உன்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கல்கியின் எழுத்துக்களை நூலின் நிறை, பருமன், நீளம், அகலம் மற்றும் பத்தியின் அளவு ஆகிய காரணிகளால் படிக்காமல் விட்டவர்கள் நானறிய நிறைய பேர் :) (பிறகு, "நீ சிவகாமியின் சபதம் கதை சொல்லு கேட்கிறோம்" என்று காது கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்!)
* வித்தியாசமான கரு (உண்மை அனுபவமா?).
* கதையின் ஓட்டம் ஒரு சிறுவனின் பார்வையில் விசயங்களை சொன்னாலும், சில இடங்களில் வருகின்ற வார்த்தை பிரயோகங்கள் சிறுவனுக்குள் மறைந்திருந்த எழுத்தாளரைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.
*
"ஜெகனின் அப்பா ஒரு டிரைவர். அவனுக்கு அம்மா கிடையாது. தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்யுமளவுக்கு வளர்ந்திருந்தான் அவன்."
- இந்த வரிகள் அடுத்து வரும் பத்திகளுக்கான நியாயத்தை நிரூபிக்கத் திணிக்கப்பட்டு இருக்கின்றது. ஜெகனை முதன் முதலாய் அறிமுகப் படுத்தும் பொழுதே செருகி இருந்தால் இயல்பானதாய் இருக்கும்.
நிற்க.
ஒரு வாசகன் ஒரு கதையை முழுவதுமாக வாசித்தாலே (படிப்பது என்பது வேறு!) எழுத்தாளனுக்கு வெற்றி. நீ வென்றுவிட்டாய் :)
அருமையான கதையோட்டம் .. :-)
சுபி சொல்வதை முழுவதும் ஆமோதிக்கிறேன் ..
@ சத்யா:
நன்றி :)
சீட்டியடித்தல்னா, விசிலடிக்கிறது.
----
பூண்டெல்லாம் பால்ய பருவத்து நம்பிக்கைகளில் ஒன்று.. :)
----
@ Subi:
நன்றி அண்ணா.. :) உங்கர் பாராட்டுகளைக் கேட்கையில், உண்மையிலேயே சந்தோஷமாகவும், கூடவே கொஞ்சம் பயமாவும் இருக்கு.. தொடர்ந்த என் பயணத்திற்கு இதுதான் ஊன்றுகோல்.. :)
@ Subi:
கதை னு வந்தபின் ஆராயக்கூடாது.. கற்பனைதான்.. :) ஆனாலும், சில உண்மைகளும் உண்டு..
----
//
சிறுவனுக்குள் மறைந்திருந்த எழுத்தாளரைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.
//
ம்ம்.. எனக்கும் கொஞ்சம் பட்டது.. இன்னும் நான் செல்லவேண்டிய தொலைவைக்காட்டுகிறது..
//அடுத்து வரும் பத்திகளுக்கான நியாயத்தை நிரூபிக்கத் திணிக்கப்பட்டு இருக்கின்றது.//
உண்மையான விமர்சனத்திற்கு மிக்க நன்றி அண்ணா.. என்னை மென்மேலும் பட்டைதீட்டும் உங்களின் கோணம். அடுத்தடுத்த படைப்புகளில் கருத்தில் கொள்கிறேன்..
@ரெஜோ:
:)
ரிப்பீட்டேய்..
செவி மடுத்துக் கேட்பவர்களிடம் உள்ளது உள்ள படியே விமர்சிக்க ஆசை. அதுவும் எனது அறிவிற்கு எட்டிய தொலைவில் உனது கதை இருந்ததால் மேற்கூறிய பின்னூட்டம்..
ரெஜோவாசனின் சுஜாதா பாணி கதையைப் படித்தும் பின்னூட்டம் கொடுக்காததற்கு காரணம் இதுதான்.. "அருமையாக இருக்கிறது" என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.. அருமையாக இருக்கிறது என்பது அவனுக்கே தெரியுமாதலால் அதையும் சொல்லாமல் விட்டு விட்டேன் :)
தொழில்முறை கதை சொல்லியின் லாவகம் உனக்கு வந்துவிட்டிருக்கிறது பீமார்கன்! வாழ்த்துகள்!
பூண்டு இருக்குமிடத்திற்கு பாம்பு வராது என்பார்கள். அதனால்தான் என்று நினைத்தேன். அது என்ன பால்ய நம்பிக்கை?
நன்றி சாணக்கியன். :)
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே..! அதுதான்.. :D
வெகு நாட்கள் கழித்து மீண்டும் உன் வலைத்தளத்திற்கு வந்திருக்கிறேன் (காரணம் உனக்கே தெரியும்). கண்ட முதல் கதையிலேயே எனை (மீண்டும்) கவர்ந்துவிட்டாய். பாராட்ட வேண்டிய வார்த்தைகளனைத்தும் சுபி-யின் விமர்சனத்திலிருந்து எடுத்துக்கொள். மீதம் வைக்காமல் எல்லா விமர்சனங்களையும் அவரே தந்துவிட்டார். என் பங்கிற்கு - பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணா.. :) நீங்கள் மீண்டும் வந்திருப்பதே எனக்கு மகிழ்ச்சி.. :)
வாழ்த்துகளுக்கும் நன்றி.. :)
Post a Comment