Sunday, March 30, 2008

கூண்டுக்கிளிகள்


எங்கோ நினைவுகளின் ஆழத்திலிருந்து நினைவுக்கு வந்தது டோங்கு மாமாவின் முகம். எப்போது அவரை நினைத்தாலும் ஒரு ராஜ அலங்காரத்துடன், தலையில் கிரீடம் கையில்செங்கோல் சகிதமாக டோங்கு ராஜாவாகத்தான் எண்ணத்தோன்றுகிறது.
ஏன் இப்படி? ஒரு வேளை அவரின் சிங்கங்களால் இருக்கலாம்.
நேரு மாதிரி, எங்கள் ஊருக்கே மாமாவாகிப்போனவர் அவர். அவரைப்பற்றிய மேலதிக விவரங்கள் கிராமத்தில் யாருக்குமே தெரியாது என்பது என் நம்பிக்கை.

டோங்கு மாமா கதை சொல்ல ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். காவிரிக் கரையோரம் ஒரு திட்டுப் பிள்ளையார் உண்டு. திருட்டுப் பிள்ளையார். பல வருடங்களுக்கு முன், எவனோ ஒருவன் அரச மரத்தடியில் சிவனே என்று இருந்த பிள்ளையாரை திருடிக்கொண்டு போய் தன் வீட்டுக் கிணற்றி்ல் போட்டுவிட்டான். எப்படியோ, கண்டுபிடித்து பிள்ளையாரை கரையேற்றுகையில், ஏதோ தோஷநிவர்த்தி அது இதுவென கதை சொல்லி தப்பித்துவிட்டான். ஆனால், மாட்டிக் கொண்டார் அந்த பிள்ளையார். அன்றிலிருந்து திருட்டுப் பிள்ளையார் ஆகி, இன்று திட்டுப் பிள்ளையாராய் வந்து நிற்கிறார்.

திட்டுப் பிள்ளையார் ஒருமுறை காணாமல் போனதால், ஊர் பெரிசுகளெல்லாம் ஒன்று கூடி சின்னதாய் ஒரு கோயில் கட்டி அதில்,...
சரி கதைக்கு வருவோம்.. அந்த கோயிலின் முன்பு அரசமரத்தடியில் வட்டமாய் சிமெண்டு பெஞ்சு மாதிரியான ஒரு அமைப்பு இருக்கும்..
அதுதான் டோங்கு மாமாவின் சிம்மாசனம்..

மாலை நேரம் வந்தால், ஊரின் அனைத்து அரை டிராயர்களும் ரெட்டை ஜடைகளும் அரசவைக்கு வந்து விடுவர்..

அவரின் கதைசொல்லும் உத்தியே, அதன் கதையல்லாத தன்மைதான்.

ஒவ்வொருவரராக ஏதாவது கேள்விகள் கேட்பார்.. பதில்களை என்றும் எதிர்பார்த்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு அட்டண்டன்ஸ் மாதிரி.. சில கேள்விகளுக்கு அவரே பதிலும் சொல்லுவார். இடையில், நாங்கள் கண்டுபிடிக்கமுடியா ஏதோ ஒரு புள்ளியில் ஒரு கதை தொடங்கி இருக்கும்.

இத்தனை வருடங்களுக்குப் பின் அவரின் சிம்மாசனத்தில் அமர்ந்து, கதை சொல்வதாய் நினைத்துப் பார்க்கிறேன். சில டஜன் சின்னதுகள், லேசாக வாயைப் பிளந்தபடி ஆச்சரியம் மிளிரும் கண்களுடன் என்னையே பார்ப்பதாய் எண்ணுகையில் சிரிப்புதான் வருகிறது. எப்படி கொஞ்சம் கூட சிரிக்காமல் அவரால் கதைசொல்ல முடிந்ததோ.

பொதுவில் அவர் சொல்வதெல்லாம் வீர தீர கதைகளாகவே இருக்கும். அதுவும் தன்னிலையில்தான் கதை சொல்வார். அதிலும் ஒரு வசீகரம் இருக்கும். காவிரிக்கரை போர்க்களத்தில் நின்று இரண்டு தலை ராட்சசனை அவர் கத்தியால் 'விஷ்க்' எங்களுக்கு இரத்தம் சில்லிட்டுப்போகும். அவர் சிங்கத்தின் வாயைப் பிளக்கையில் சுற்றிலும் ஏதேனும் சிங்கம் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளத் தோன்றும்.

எங்கள் வீட்டின் எதிரில் சம்பத் வீடு. அந்த வீட்டின் பக்கவாட்டில் ஆஸ்பெஸ்டாஸ் போட்டு ஒரு அறை இருக்கும் அதுதான் அவரின் அறை. அவர் ஒரு நித்திய பிரம்மச்சாரி். சகலமும் அவரேதான் செய்து கொள்வார். அவர் வேலை செய்வது ஏதோ ஒரு சர்கஸில். ரிங் மாஸ்டர் வேலை. அத்தனை சிங்கங்களை கட்டி மேய்க்கும் வேலை. அதுவே கூட அவர் மீதான பிரம்மிப்பிற்கு காரணமாய் இருந்திருக்கலாம்.
பெரும்பாலும் வட இந்தியாவில்தான் கேம்ப் இருக்கும். வருடா வருடம் மழைக்காலங்களில் ஊருக்கு வருவார். அரிதான சில தருணங்களில் கோடையிலும்.

அவர் வீட்டின் எதிரில் இருந்ததாலோ என்னவோ எங்கள் மீது தனி கரிசனம் உண்டு அவருக்கு. என்னையும் அக்காவையும் அழைத்து வைத்து சில சிறப்புக்கதைகளும் சொல்லுவார். எனக்குப் பெருமையாக இருக்கும்.
நான்தான் அவருக்கு கிரி பாட்டி கடையிலிருந்து காலைக்கு இட்டலிகள் வாங்கி வருவேன். கொடுக்கும் போதே தெரிந்து விடும். அவர் கண்களில் ஒரு குறும்பு.ஒன்று சினிமாக்கு வர்ரியாடா? அல்லது

"மாப்ளே..ஆத்துக்கு வர்ரியாடா..?"

அவ்வளவுதான் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி, அப்பாவிடம் அழுது அடம் பிடித்து புறப்படுகையில் அம்மா வாசல் வரை வந்து,

" டோங்கு பத்திரமா போய்ட்டு வாப்பா.."

"நான் பாத்துக்கறேங்கா. கவலப்படாதீங்க"

என்றபடி சைக்கிளை எடுத்தால்,
அவர் சைக்கிளில் கேரியர் இருந்தாலும் முன்னாடி கம்பியில் அமர்வதுதான் என் விருப்பம்.

பங்குனியி்ல் காவிரியில் அவ்வளவாக தண்ணீர் இருக்காது. அணில் முதுகில் கோடு மாதிரி காவிரில் வரிவரியாக தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். மணல் திட்டுத் திட்டாகத் தெரியும். காவிரியல் குளிப்பதே தனிசுகம்தான். அதைவிட பெரிய சுகம் குளித்தவுடன் ஈரத்துண்டுடன் வெயிலில் நிற்பது.

குளித்தவுடன் காட்டாமணக்கு குச்சிகளை ஒடித்துக் கொண்டு சுற்றிலுமிருக்கும் மானசீக சிங்கங்களை அடக்கிக் காட்டுவார். ஒரு பேட்டனின் லாவகத்துடன் அவர் சுழற்றுவதிலேயே ஒரு தனி வசீகரம் இருக்கும். சில பல குறிப்புகளும் சொல்லுவார். நானும் கேட்டுக்கொள்வேன்.

அன்றும் அப்படித்தான், ஜலக்கிரீடைக்குப் பின் திட்டுப் பிள்ளையார் மேட்டில் அரசமரத்தடியில் அமர்ந்தோம். சிலுசிலுவென்ற காற்று இதமாக காது குடைந்தது.

அன்று அவருக்கு ஏதோ பிரச்சனை போலும், ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். ம்ஹீம்.. பேசிக்கொண்டிருந்தார்.
சர்க்கஸிற்கெல்லாம் இப்போது யாருமே வருவதில்லையாம். அதனால் அவர்களின் சர்க்கஸை மூடப்போகிறார்களாம். குனிந்து கொண்டே சொன்னார். மாமா இப்படி பேசியதே இல்லை. என்னவோ போலிருந்தது.

அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்னிடம்? ஆறுதலா.எப்படி ஆறுதல் சொல்வது.. அதற்கெல்லாம் வயசு பத்தாது எனக்கு அப்போது.

"மாமா, பேசாம சிங்கம் புலியெல்லாம் இங்க கூப்புட்டு வந்துடுங்க மாமா.. நாம இங்க சர்க்கஸ் போட்டுறலாம்.."

சில வினாடிகள் தாமதத்திற்குப்பின்,
கடகடவென சிரித்தார். என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டாரோ? எதுவும் புரியாமல் நானும் சிரித்தேன்.
கொஞ்சநேரம் ஒரு கனத்த மெளனம் நிலவியது.

"மாப்ளே, கூண்டுக்குள்ள போனது பயமாத் தெரியலடா.. கூண்ட விட்டு வெளிய வற்றத்துக்குத்தாண்டா பயமா இருக்கு.."

என்றோ அவர் சொன்ன வார்த்தைகளுக்கு இன்றுதான் அர்த்தம் புரிந்தது.
அதன் பின் டோங்கு மாமாவை நான் பார்க்கவே இல்லை.

சில வருடங்களுக்கு முன் பூதலூர் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து பார்த்ததாகவும், மாமா சைக்கிளில் புடவை வியாபாரம் செய்வதாகவும் ராஜசேகர் சொன்னான். அப்போது கூட, தலையில் கிரீடத்துடன், ராஜ உடையில்தான் நினைவுக்கு வந்தார். ஒரு கையில் செங்கோலுடன், புடவை வியாபாரம் செய்யும் மாமாவை நினைக்கையில் வயிற்றில் என்னவோ செய்தது.

காலச்சக்கரம்தான் எவ்வளவு குரூரமாகச் சுழல்கிறது மாதிரியெல்லாம் நீதி சொல்லது எனக்குப் பிடிக்கவில்லை..

யார்கண்டார்? இந்நேரம் ஏதேனும் ஒரு திண்ணையில் புடவை கட்டிய அரக்கிகளைப் பற்றிய கதைகளை அவர் சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்.

Wednesday, March 05, 2008

கலிகாலம் என்று...



இன்றும்,
கைக்குழந்தையுடன்
பேருந்தில் ஏறும் பெண்களுக்கு
இடம் கொடுக்கும் நபர்கள்
இருக்கிறார்கள்..

அனாமத்தாய் கிடக்கும்
பணப்பைகள்
காவல் நிலையத்தில்
சேர்ப்பிக்கப்படுகின்றன...

மறதியாய்,
சில்லறை வாங்காமல்
திரும்புகையில்,
கூப்பிட்டுக் கொடுக்கும்
கடைக்காரர் இருக்கிறார்...

ஊர் பேர் தெரியாமல்
அடிபட்டுக் கிடப்பவர்கள்
மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்படுகின்றனர்...

பல மூன்றெழுத்து வார்த்தைகள்
அகராதிகளுக்கு அப்பாலும்
உயிருடன் இருக்கின்றன..

இவை எதற்குமே
திராணியற்றவர்கள் மட்டும்,
இன்னும்
சொல்லிக்கொண்டே
இருக்கிறார்கள்...
...