Tuesday, July 15, 2008

பேசாப்பொருள் - II

Whenever two people meet, there are really six people present. There is each man as he sees himself, each man as the other person sees him, and each man as he really is.

- William James

நினைவில் பதிந்து போகாத ஏதோ ஒரு நாளின் மாலை வேளை. அம்புக்குறியாக கூடு திரும்பும் பறவைகளை எண்ணியபடி என் மொட்டை மாடி உலாத்தல்.

கீழிறங்க யத்தனிக்கும் நேரம், அரையிருட்டில் யாரோ நிற்பதாய் ஒரு பிரமை. கொஞ்சம் உற்றுப் பார்த்தேன். எனக்குக் குறுக்காக நிச்சயமாய் யாரோ மாடியில் நிற்கிறார்கள். அரையிருட்டில் சரியாகத் தெரியவில்லை. சில்கவுட் மட்டும் தெரிந்தது. முதுகில் ஏதோ பை ஒன்று மாட்டியிருப்பதாகப் பட்டது. ஆச்சரியம் கலந்த சந்தோசம் எனக்கு, இன்னொருவரை அங்கு கண்டதில்.

போய் பேசலாமா? வேண்டாமா? பேசினால் என்ன நினைப்பார்கள்? பலவித தயக்கங்கள் சந்தேகங்களுக்குப் பின் பேசிவிடுவதெனத் தீர்மானித்தேன். வேண்டுமென்றே செருப்புக்கால்களை தேய்த்து மெல்லமாக சத்தமெழுப்பியபடி நெருங்கினேன். அவ்வுருவம் கைப்பிடிச்சுவர் பிடித்தபடி வெளியே பார்த்துக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது. நான் நெருங்கியதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. முகுதில் இருந்தது பை இல்லை குழந்தை. 2-3 வயது இருக்கும்.

ஏறக்குறைய 8லிருந்து 10 அடி தூரத்தில் நின்று,

"ஹாய்"

சுத்தமாக எந்தவித சலனமும் இல்லை. ஒரு வேளை காது கேட்காதோ?

இதற்கு மேல் முயற்சிக்க கிட்டத்தட்ட வெட்கமாய் இருந்தது. சில வினாடிகள் காத்திருப்புக்குப் பின் கீழே திரும்பிவிட்டேன்.
ஓரிரு நாட்கள் மனதில் இருந்து உறுத்தியபின் நினைவிடுக்கில் புதைந்து போனது.

சிலநாட்களுக்குப்பின் அதே உருவம் மீண்டும் மாடியில். இம்முறை வெளிச்சத்திலேயே கண்டுவிட்டேன். அவர் ஒரு பெண்மணி. அறுபதைக் கடந்திருப்பார் என்று பட்டது. இன்றும் குழந்தை. அஸ்ஸாம் டீ விளம்பரத்தில் சில பெண்கள் தேயிலை பறிப்பார்களே அதே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்திருந்தார். முதுகில் வெள்ளைத்துணியில் ஒரு முண்டு மாதிரி கட்டியிருந்தார். அந்த குழந்தை சமத்தாக அமர்ந்திருந்தது. பேரனாக இருக்கவேண்டும். வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர் போல் இருந்தார். திபெத்திய மூக்கு. நல்ல வெளுப்பு. கண்களில் அதே வெறித்த பார்வை. கொஞ்சம் கூட மாறாமல், கடந்த முறை நான் கண்ட அதே புள்ளியில், எங்கோ தொலைதூரத்தில் தெரியாத ஒரு புள்ளியை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார்.
இம்முறையும் போய்ப் பேசுவதற்கு என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அவ்வளவையும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தபின் திரும்பினேன்.
அதற்கடுத்த சில நாட்களிலும் அதே இருவரைக் காண நேர்ந்தது. சில நேரங்களில் மெல்லிய பேச்சுக்குரல் கேட்கும். குழந்தைக்குகுக் கதையா? இல்லை தனக்குத் தானே பேசிக்கொள்கிறாரா? இல்லை புளுடுத்.? அடச்ச.. நினைவிலிருந்த விலக்கமுடியவில்லை.
கடைசியின் என் மொட்டை மாடி உலாத்தல்களின் குறிக்கோள்கள் மொத்தமாய் காணாமல் போய், அவர்களைக் கவனிப்பதே வழக்கமாய் ஆனது.
கவனித்தபடி கடந்து சென்றன மேலும் சில நாட்கள்.

ஆங்கிலம் தெரியாததனாலோ? .. என்ன இது. இப்படி என்று சலித்துப்போன ஒரு நாள், இன்று எப்படியும் பேசிவிடுவதெனத் தீர்மானித்து, மீண்டும் 'ஹாய்'. இம்முறை தலையைத் திருப்பிப்பார்த்தவர், எதுவுமே நடக்காதது போல் மீண்டும் அந்த தொலைதூரப்புள்ளிக்கே பார்வையைத் திருப்பினார்.
எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இனிமேல் சத்தியமாக பேசுவதில்லை என்று சூளுரைத்து என் புத்தியை சபித்தபடியே கீழிறங்கினேன்.
அதனைத் தொடந்த நாட்கள் அவர்கள் இருக்கும் பக்கமே திரும்புவதில்லை என்று வலுக்கட்டாயமாய் என் பார்வையை திருப்பியபடி வானம் பார்த்திருந்தேன். எப்போதாவது சில சமயங்களில் குழந்தையின் அழுகை கேட்கும்.

அன்றொரு நாள் நான் எதேச்சையாகத் திரும்புகையில், ஒரு விஷயம் என் கருத்தைக் கவர்ந்தது. அது அவர் நின்ற இடம். இது எப்போதும் அவர் நிற்கும் இடம் இல்லை என்பது மட்டும் உறுதி. பொருள் என்ன? அடுத்த கேள்வி மனதில் முளைத்தது. புத்தியை மீண்டும் சபித்தபடி, அந்த டாபிக்கை மனதிலிருந்து விரட்டியடித்தேன்.

ஆனாலும், அந்த கேள்விக்குப் பதில் அடுத்த ஓரிரு நாட்களிலேயே கிடைத்துவிட்டது. ஒவ்வொரு நாளும் அவர் நிற்கும் இடம் என்னை நோக்கி நெருங்குவது தெளிவாகத் தெரிந்தது. என்னிடம் பேச விழைகிறார். ஆனால் தயக்கம் என்று புரிந்தது. அவருக்கும் உறுத்தியிருக்க வேண்டும். அன்றெனக்கு பயங்கர சந்தோஷமான தினம். பழிக்குப் பழி வாங்க சந்தர்ப்பம் வாய்த்துவிட்டதென மனது கூத்தாடியது. ஆனால் அந்த சந்தர்ப்பம் வாய்ப்பதற்குள், பழிக்குப்பழி நினைவிலிருந்து காணாமல் போயிருந்தது.

மிக மெல்லமாக என்னை நெருங்கிய அவர், ஏதோ சொன்னார் என்று தெரிந்து திரும்பி அவரை நோக்கினேன்.

"டு யு நோ இன்கிலிஷ்?"

கேள்வியை சட்டை செய்ததாகவே தெரியவில்லை. மீண்டும் ஏதோ சொன்னார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். எங்களிருவருக்கும் இடையில் எந்தவொரு பொது மொழியும் இல்லை. என்ன சொல்வதென்று தெரியாமல், தலையை மட்டும் ஆமாம் என்பது போல் ஆட்டி வைத்தேன்.

கொஞ்ச நேரம் மௌனம். பின் மீண்டும் ஏதோ சொன்னார். அவர் முகத்தையே பாவமாகக் பார்த்துக் கொண்டிருந்தேன்.

'அய்யய்யோ மாட்டிக் கொண்டேனோ?'

இதே கதைதான் ஒரு சில நாட்கள் நீடித்தது. என் மாலைப்பொழுதுகள் வீணாய்ப் போகின்றன என்ற நினைப்பே மனதுக்குள் ஆட்டிப்படைத்தது.
தேமே என்று அவர் முகத்தையே பார்த்தபடி இருப்பேன். ஒரு வேளை மாடிக்குப் போவதையே தவிர்த்து விடலாமா? என்று நான் எண்ணத் தொடங்கிய ஒரு நாள் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
---------------------------
இன்னும் பேசும்...

2 comments:

anujanya said...

முதல் வாரம் பார்த்தேன். சரி அடுத்த வாரம் முடிந்தவுடன் பின்னூட்டம் அளிக்கலாம் என்று இருந்தால், தொடரும் 'தொடரும்'. அழகாக எழுதுகிறீர்கள்.

அனுஜன்யா

Bee'morgan said...

நன்றி அனுஜன்யா.. நானும் ஒரே பதிவா போடலாம்னு எழுதினதுதான்.. கொஞ்சம் பெருசா இருந்ததால, சின்ன சின்னதா 'தொடரும்'..