வாய்வழிக்கதைகளோ திரைப்படமோ தொலைக்காட்சியோ, இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுடன் சேர்த்தே ஊட்டப்படும் விஷயங்களில் ஒன்று மகாபாரதம். எப்படியோ வந்து நம்முடன் ஒட்டிக்கொண்ட அதே பாரதம். அதே கதை. அதே மாந்தர்கள். ஆனால் எஸ்ரா திரும்பவும் சொல்லும் போது முழு பாரதமும் இது வரை கண்டிராத புதியதொரு பரிமாணம் கொள்கிறது.
இதுவரை நாம் கேட்டுவந்த பாரதங்கள் போல் படர்க்கையிலல்லாது முன்னிலையில் கதை சொல்லும் உத்தியே மிகவும் அலாதியானது.
மகாபாரதம் என்பது நடந்து முடிந்த கதையல்ல. அது நடக்கும் கதை. நடந்து கொண்டிருக்கும் கதை என்கிறார். ஒரு தேசாந்திரியாக அஸ்தினாபுரத்தினுள் நுழைந்து தன் கண்முன் நடக்கும் காட்சிகளாக பாரத்தை விவரிக்கிறார். முன்கதை தேவைப்படும் சில இடங்களில் சூதர்கள் சொல்லும் கதைகளாக நம்முன் வைக்கிறார்.
வெறும் வயிறில் பருகப்படும் ஒரு மிடறு திரவம் நாம் உணரும் போதே மிக மெதுவாக உணவுக்குழலுக்குள் இறங்குவதைப்போல், நாம் உணரும் போதே மிக மெதுவாக நம்முள் ஊடுருவிச் சென்று உறைகிறது இந்த பாண்டவம். கொஞ்சம் கூட அவசரப்படாமல் நிதானமாக மிக நிதானமாக ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கும் மேலாக இந்நுலை படித்துமுடித்தேன். முடிக்கையில், கௌரவர்களும் பாண்டவர்களும் கதாமாந்தர்களாக இல்லாமல், நம் அண்டைவீட்டு மனிதர்களாக உருக்கொள்ளும் அந்த பிம்பமே ஆசியரியரின் வெற்றி.
நாம் இதுவரை பெயர் மட்டுமே அறிந்திருந்த பலருக்கு உணர்வும் உருவமும் தந்து உலவவிட்டிருக்கிறார். குறிப்பாக மயனின் முன்கதையும் ஜராவின் வஞ்சமும் ஏகலைவன் பெற்ற நாயின் சாபமும் போன்ற எண்ணற்ற கிளைக்கதைகள் பெருத்த அதிர்வினை ஏற்படுத்துகின்றன. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அரண்மனையில் பாஞ்சாலியின் சிரிப்பொலியும் அதனால் துரியோதனன் கொண்ட சினமும் இயல்பாக நடந்தவையென்றே நினைத்திருந்தேன். ஆனால் அத்தனையும் தி்ட்டமிட்டே நடத்திவைக்கப்பட்டன என்று இவர் சொல்கையிலும் கூட கொஞ்சமும் முரண்படவிடாமல் மகுடிக்குக் கட்டுப்பட்ட சர்ப்பமென தன்னுடனேயே அழைத்துச்செல்கிறார்.
குறிப்பாக துரியோதன வதம் பற்றிய விவரிப்பில் துரியோதனனைப்பற்றி இதுவரை நாம் கட்டமைத்திருந்த அனைத்து பிம்பங்களும் உடைந்து சிதறுகின்றன. நாயகனுக்கும் அநாயகனுக்கும் இடையிலான யுத்தமாக விவரிக்காமல் இரு முரண்பட்ட கருத்துகள் கொண்டோருக்கு இடையிலான யுத்தமாகவே குருஷேத்திரம் இங்கு படர்கிறது.
படிக்கப்படிக்க ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. இந்த மனிதர் வார்த்தைகளில் என்னவொரு லாவகத்துடன் விளையாடுகிறார். சுனையிலிருந்து பீறிடும் நீர் போல அத்தனை சரளத்துடன் ஒரு நடை. படிக்கும் போது ஒரு போதையென நம்மை ஆட்கொள்கிறது.
எவ்வளவு சொன்னாலும் வார்த்தைகளில் விவரிக்கமுடியாத அனுபவம் அது. தீவிரவாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாதது இந்த பாண்டவம்.
லயத்துடன் ஆட்டப்படும் ஒரு ஊஞ்சல் போல் கதை காலத்தில் முன்னும் பின்னுமாக பயணிப்பதால் மகாபாரதக்கதையில் ஓரளவுக்கு குழப்பமற்ற பரிச்சயம் நலம்.
உபபாண்டவம் பற்றி சேரலும் அருமையானதொரு பதிவிட்டிருக்கிறார் இங்கே.
இணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்.
----------------------
உபபாண்டவம்
எஸ். ராமகிருஷ்ணன்
விஜயா பதிப்பகம்
384 பக்கங்கள்
ரூ. 150
----------------------
6 comments:
நன்று பாலா!
நான் மறந்தோ தெரிந்தோ விட்டுவிட்ட சில விஷயங்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறாய். நீ சொல்வது போல் தீவிர வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
உன் எழுத்துநடை இன்னும் மெருகேறியிருப்பதாக உணர்கிறேன். தொடர்க
-ப்ரியமுடன்
சேரல்
/*வெறும் வயிறில் பருகப்படும் ஒரு மிடறு திரவம் நாம் உணரும் போதே மிக மெதுவாக உணவுக்குழலுக்குள் இறங்குவதைப்போல், நாம் உணரும் போதே மிக மெதுவாக நம்முள் ஊடுருவிச் சென்று உறைகிறது இந்த பாண்டவம்*/
/*லயத்துடன் ஆட்டப்படும் ஒரு ஊஞ்சல் போல் கதை காலத்தில் முன்னும் பின்னுமாக பயணிப்பதால்*/
அருமையான உவமைகள். உன்னை இப்படி படைப்பூக்கத்துடன் எழுத வைத்திருப்பதிலேயே நாவலின் வலிமையை சிறப்பை உணர முடிகிறது. ஆம், ஒரு சுமாரான படைப்பைக் குறித்து எழுதும்போது இப்படி ஒரு படைப்பூக்கம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணுகிறேன்.
வாழ்த்துகள்!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சேரா.. :)
உங்களின் பதிவை படித்தபின் நான் எழுதுவதற்கு எதுவும் மிச்சமில்லையோ என நினைத்தேன். நல்லவேளை.. தெரிந்தே விட்டுவைத்ததில் தப்பித்தேன். :P
ஆம் சாணக்கியன்.. இந்த படைப்பூக்கத்தில் பாண்டவத்தின் தாக்கம் நிறைய உண்டு.. படித்துப்பாருங்கள்.. உங்களுக்கும் பிடிக்கும் என எண்ணுகிறேன்..
உங்களின் வாழ்த்துக்கும் நன்றி :)
பகிர்வுக்கு நன்றி
நன்றி பிரபு :)
Post a Comment