Tuesday, October 23, 2007

சத்தம் போடாதே- ஒரு பார்வை




We don't see and define. We dfine and then see.
-யாரோ

வேறு எந்த விஷயத்தில் இல்லாவிட்டாலும், திரைப்படங்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் உண்மையே...

பொதுவாக, ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன், அதனைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனத்தை அறிய நான் முற்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் வாழ்வின் சுவாரஸ்யமே, அடுத்த நொடியின் ஆச்சரியத்தில்தான் அடங்கியிருக்கிறது. அந்த அரைநொடி சந்தோஷத்தை இழக்க விரும்பாதவன் நான். ஆனால், பல நேரங்களில் இது சாத்தியப்படுவதில்லைதான். எத்தனையோ ஊடகங்களின் வாயிலாக, படத்திற்கு போவதற்கு முன்பே அதனைப் பற்றிய ஒரு பிம்பம் நம் மனதில் பதிக்கப்பட்டு விடுகிறது. அதன் பின் படம் பார்க்கப் போனால், ஆறு வித்தியாசம் கண்டுபிடித்த கதைதான்.

ஒரு சில திரைப்படங்களே இப்பிம்பத்தை உடைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான், 'சத்தம் போடாதே' வில் எனக்கு நேர்ந்தது.

வழக்கமான விமர்சனங்கள் போல், ஒரு பக்கத்திற்கு குறையாமல் கதை'சுருக்கம்' தந்து, காட்சிகளை அக்கக்காக பிரித்து அலசி ஆராய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், என் மனதில் பட்ட சில கருத்துக்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

நான் படத்திற்கு செல்லும் முன்பே, நண்பர்கள் வட்டத்திலிருந்து பலதரப்பட்ட அறிவுரைகள், விமர்சனங்கள் இன்ன பிறவும். "இருக்கும் வேலைப்பளுவுக்கு மத்தியில், கிடைக்கும் ஒரு வார இறுதியையும் வீணடித்து விடாதே" என்ற அளவுக்கு வந்தன. இருப்பினும், வஸந்த் படமாயிற்றே. அப்படி என்னதான் இருக்கிறது ஒரு முறை பாத்த்துதான் விடலாம் என்றுதான் சென்றேன்..

சுருங்கச் சொல்லின், ஒரு நல்ல திரைப்படம். சமீப காலங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் குத்துப்பாடல்கள் நிரம்பி வழியும் மசாலாப் படங்களுக்கு
இது எவ்வளவோ தேவலாம்.. அங்கங்கே தென்படும் சில அபத்தமான காட்சிளைத்தவிர( யாருமே இல்லாத காட்டில், எப்போதும் இஸ்திரி போட்டுக் கொண்டிருக்கும் அந்த இஸ்திரி கடைக்காரன் மாதிரி) மொத்தத்தில் நன்றாகவே இருக்கிறது.

படத்தில் மொத்தமே விரல் விட்டு எண்ணக் கூடிய கதாபாத்திரங்கள்தான். ஆனாலும், ஒரு நாடகத்தன்மை வராமல் படத்தை கொண்டு சென்றிருப்பதற்கு இயக்குனருக்கு சபாஷ் சொல்ல வேண்டும். வழக்கமான தமிழ் சினிமாவாக இருந்திருந்தால், நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நிச்சயம் ஒரு சண்டைக்காட்சி இடம்பெற்றிருக்க வேண்டும். இறுதிக்காட்சியில் வரும் அந்த பாழடைத்த பங்களாவில், நாயகன் வில்லனை துரத்தி துரத்தி நையப்புடைத்தபின் (அல்லது வில்லனைக் கொன்ற பின்) படம் முடிந்திருக்கும்..

ஆனால், இவை எதுவும் இல்லாமல், ஹீரோயிஸத்தை முடிந்த அளவு குறைக்க சிரமப்பட்டிருக்கிறார் இயக்குனர். "பேசுகிறேன்.." பாடலும், விவாகரத்துக்குப் பின் நாயகியைக் கவர நாயகன் வகுக்கும் வியூகங்களும் ரசிக்க வைக்கின்றன..புதுமுக ஒளிப்பதிவாளராம்.(பெயர் மறந்து விட்டது) சிறப்பாகவே செய்திருக்கிறார். நா.முத்துக்குமார் யுவன் கூட்டணியின் பெயர் சொல்லும் படி இல்லை பாடல்கள்.(ஒன்றைத்தவிர).

இது போதுங்க. இன்னமும் தெரிஞ்சுக்க, நீங்களே தியேட்டருக்கு போய் ஒரு தடவை பாத்திட்டு வாங்க..

என் பரிந்துரை:: "நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்"

1 comment:

Veera said...

நண்பர்களோட கருத்துக்கள்ள இருந்து, படம் நல்லா இருக்குற மாதிரி தெரியுது. ஆனா இன்னும் பாக்க வாய்ப்பு கிடைக்கல.. இந்த வார இறுதியில பாக்கலாம்னு இருக்கேன். வசந்த்தோட படமாச்சே!!