அப்போது எத்தனை வயதிருக்கும். சரியாக நினைவிலில்லை. நெப்போலியனும் கஜினியும் பாடப்புத்தகங்களில் படையெடுக்கத்தொங்கியிருந்த காலம். ஏழாம் வகுப்பென்று நினைக்கிறேன். ஏதோ ஒரு நாளில் பள்ளியிலிருந்து திரும்பி வந்த போது அம்மாவின் குரல் கேட்டது.
"ரகு, எங்கயும் வெளயாடப் போகாத.. நாளைக்கு கிராமத்துக்குப் போகணும்.. பாட்டிக்கு உடம்பு !@#$%...."
அதன்பின் எதுவுமே எனக்கு கேட்கவில்லை. கிராமத்துக்குப் போகிறோம் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. நான் நினைவுகளுக்குள் அலையத்துவங்கியிருந்தேன்.
நாங்கள் இருந்தது ஒரு வளர்ந்து வரும் பேரூராட்சி என்றாலும் அப்பாவுக்கு வேலை மாற்றல் என அடிக்கடி அலைந்து கொண்டிருந்ததால், கால் அரை முக்கால் முழு ஆண்டு என்று எந்த விடுமுறை வந்தாலும் அது கிராமத்தில்தான் என்பது எழுதப்படாத நடைமுறையாக இருந்து வந்தது.
ஆனால் கொஞ்ச நாட்களாக கிராமம் பக்கமே போகாமல் இருந்த நேரம் அது. நான் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும் அப்பாவும் அம்மாவும் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பா மட்டும் அவ்வப்போது சென்று வருவார். நானும் உடன் வருவேனென்று அடம்பிடித்த போதெல்லாம் அது பெரியவர்கள் சமாச்சாரமென்று ஒதுக்கிவைக்கப்பட்டேன்.
கிராமத்தில் தாத்தா வீட்டுக்குச் செல்வதென்றாலேயே எனக்கு அலாதியான விருப்பம் உண்டு. வீடும், வீட்டை ஒட்டிய கொல்லையும், கொல்லை முடியும் இடத்திலேயே தொடங்கிவிடும் அந்த குளமும், தாத்தா எவ்வளவுதான் திட்டினாலும். குளத்தில் கும்மாளமடிக்க உடன் வரும் மாரிமுத்து மாமா பையன்களும் என என் சொர்கம் அது.
இது எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்த இடமொன்று அங்குண்டு என்றால் அது அந்த ஊஞ்சல்தான். தன் ஒவ்வொரு கிரீச்சிலும் அது ஏதோ என்னிடம் சொல்லவிழைவதாகவே எனக்கொரு எண்ணமுண்டு. அத்தனை அலைவிலும், அதே லயம் மாறாமல் ஆடும் அதன் ஆட்டம், காலத்தின் பாதை காட்டும் பெண்டுலம் மாதிரி, தான் கடந்து வந்த காலத்தின் எச்சம் சொல்லுவதாய் ஒரு பிரமை.
மேலும் படிக்க...ஆரம்பத்தில் தாத்தாதான் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தபடி கதை சொல்லுவார். அவர் சொல்லும் கதைகளை விட ஊஞ்சலின் ஆட்டம்தான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. ஊஞ்சலில் இருக்கையில் அருகிலும் தொலைவிலுமாக மாறி மாறி பொருள்கள் கொள்ளும் மயக்கம் என்னை சுண்டி இழுத்துக்கொண்டே இருந்தது. தாத்தாவுக்கு ஊஞ்சலை வேகமாக ஆட்டினால் பிடிக்காது. எனக்கு நினைவு தெரிந்து தாத்தா வீட்டினுள் இருந்தால் அந்த ஊஞ்சலில்தான் இருப்பார். அதே கிரீச், மீண்டும் மீண்டும் அவரின் இருப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
தாத்தாவின் துணையில்லாமலேயே ஊஞ்சலில் ஏறிக்கொள்ளுமளவுக்கு வளர்ந்த பின், அந்த ஊஞ்சலே எனக்கு எல்லாமுமாய் ஆகிப்போனது. அமர்ந்தால், ஆடினால், உணவு உண்டால், தூங்கினால் என அனைத்தும் அந்த ஊஞ்சலில்தான்.
எனக்கு வேகம்தான் பிடித்திருந்தது. உந்தி உந்தி இன்னும் இன்னும் என உத்திரத்தை தொட்டு விடும் முனைப்புடனெல்லாம் சிலமுறை ஆடியிருக்கிறேன். சில சமயங்களில் தாத்தா திடீரென வந்து விட்டால் மட்டும் வேகத்தை குறைத்துக்கொள்வதுண்டு. தாத்தாவுக்குத் தெரிந்தாலும் என்னை மட்டும் திட்டார். அதுவே எனக்குப் பெருமையாய் இருந்தது.
அதற்கடுத்த முறைகளில் செல்லும் போதெல்லாம் வெளியிலெங்கும் செல்வதைவிட, வீட்டிலேயே இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
விளையாட்டுகள் கூட, வீட்டினுள்ளேயே ஊஞ்சலின் மீதமர்ந்து ஆடமுடியக்கூடிய விளையாட்டுகள்தான் எனக்குப் பிடித்தவையாகின.
அதன்பின் கொஞ்ச நாட்களிலேயே மேற்சொன்ன களேபரங்களில் மொத்தமும் விட்டுப்போயிருந்து, இப்போதுதான் மீண்டும் செல்கிறேன்.
அடுத்தநாள் காலையில் நானும் அம்மாவும் ரயிலில் செல்லும் போது ரயிலின் ஆட்டம் கூட ஊஞ்சலை நினைவுபடுத்தியது.
ஊரில் இறங்கியபோது டீக்கடையிலிருந்து ஆல் இந்தியா ரேடியோ எங்களை வரவேற்றது. சாலையில் குறுக்கே கோலம் போடும் பெண்மணிகள். சில சோம்பேறிக் கோழிகளின் கூவல்கள், என கடந்து சென்று கொண்டிருந்தோம். அம்மாவை அடையாளம் கண்டுகொண்டவர்களின்,
"என்னக்கா? செளக்கியமா..? அண்ணன் வரலியா?"
விசாரிப்புகளிலேயே நேரம் போய்க்கொண்டிருந்தது. எனக்குத்தான் எரிச்சலாய் வந்தது. அம்மாவின் கையைப் பிடித்தபடி அவசரத்துடன் நின்று கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக வீட்டை நெருங்கி, அந்த கடைசி திருப்பத்தில் திரும்பிய போதுதான் அந்த குழப்பம்.
"கடந்த முறை நான் வந்திருந்த போது சரியாகத்தானே இருந்தது இப்போது என்னாயிற்று..?"கடந்த முறை ஒன்றாய் இருந்த வாசல் கதவு இப்போது இரண்டாய் இருந்தது. புதிதாய் வண்ணம் பூசி பளபளப்பாய் இருந்த வாசல்களில் எதுவென்று நான் குழம்பியிருக்கும் போதே, அம்மா ஒரு கதவினுள் என்னைக் கூட்டிப்போனார். உள்ளே நுழைந்தால் எனக்கான அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வாசல் மட்டுமல்ல வீடும் இரண்டாய்ப் பிரிந்திருந்தது.
ஊஞ்சல் மாட்டும் இரு வளையங்களுக்கு நடுவே புதிதாய் வெள்ளையடித்த ஒரு சுவர் புதிதாய் முளைத்திருந்தது. ஒரு வளையம் மட்டுமே அங்கிருந்து தெரிந்தது. மற்றொன்று அடுத்த பக்கத்தில் இருக்கவேண்டுமென்று எண்ணிக்கொண்டேன்.
அந்த பெரியவர்கள் சமாச்சாரம் இதுதான். தாத்தாவின் மரணத்திற்கு பிறகு மாமாக்களுக்குள் ஏற்பட்ட தகராறில், நிலம் மட்டுமல்லாமல் இந்த வீடும் இரண்டாய்ப் பிரிந்திருக்கிறது. கோர்ட்டுக்கெல்லாம் போகுமளவுக்கு பிரச்சனை வளர்ந்திருக்கிறது. கடைசியில் அப்பாதான் இடையில் புகுந்து சமாதானம் செய்திருக்கிறார். ஒரு வீட்டில் ஒரு மாமாவும் பாட்டியும் இன்னொரு வீட்டில் இன்னொரு மாமாவுமென ஏற்பாடு. . என்னால் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த ஊஞ்சலை விட வேறெதும் முக்கியமான விஷயம் இருக்கமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
பாட்டிதான்,
"நானும் அப்பவே கண்ணை மூடியிருக்கனும்"
என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.
கடைசியில் அம்மாதான் கூப்பிட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்று மாமாவைப் பார்த்து வரச்சொன்னார். மாமாவைப் பார்க்கிறோமோ இல்லையோ ஊஞ்சலின் அடுத்த வளையத்தைக் கண்டுவிடவேண்டுமென்ற ஆவலுடன் ஓடினேன். கண்டும் விட்டேன் அந்த அடுத்த வளையத்தை. அது மட்டுமல்ல, இத்தனை நாட்களாக காலத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஆடிவந்த ஆட்டம் அடங்கி அந்த ஊஞ்சல் பரண் மீது புழுதிபடிய மெளனமாய்க் கிடந்தது. சொல்ல வந்ததை கடைசிவரை சொல்லாமலேயே மரித்துப் போன சோகம் அதன் இருப்பில் கசிந்துகொண்டே இருந்தது.
மாலை அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பும் போதே முடிவு செய்து கொண்டேன், இனிமேல் திரும்பவும் வருவதில்லையென.
இரவு வெகுநேரம் வரையில் கிரீச் சத்தம் காதினுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
---
(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும்
சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது)
14 comments:
வாழ்த்துகள் தோழா :-)
why BeeMorgan, you are always writing sad stories. Write some interesting friendly/romantic love stories. Anyway your writing was good. All the best.
கதை சூப்பர்.உயிர் துடிப்பான ”கரு”
முதல் பாதி உணர்ச்சிகள் யதார்த்தம்.
//ஒரு வளையம் மட்டுமே அங்கிருந்து தெரிந்தது. மற்றொன்று அடுத்த பக்கத்தில் //
மனதை நெருடும் இடம்.இந்த இடத்தில்தான் கதையின் knot விழுகிறது.இதற்கு அப்புறம கதையை எடுத்துச் செல்வதுதான் திறமை.
முன் பாதியில் இருக்கும் அறியா பருவ(innocence) நடையில் இருக்கும் விவரிப்பு பின்னால் நீங்கள்
(கதைச்சொல்லி) உள்ளே நுழைந்து சில இடங்களில் மெட்சூர்டு நடை வந்து விட்டது. பின் வருவற்றை அம்மா சொல்வது மாதிரி
சொல்லியிருக்கலாம்.
//தாத்தாவின் மரணத்திற்கு......//
கிழ் வருவது வயசுக்கேற்ற உள் உணர்ச்சி இல்லை.
// சொல்ல வந்ததை கடைசிவரை கசிந்துகொண்டே இருந்தது//
//அடுத்த வளையத்தைக் கண்டுவிடவேண்டுமென்ற ஆவலுடன் ஓடினேன்//
சூப்பர்.
வாழ்த்துக்கள்!
மிகச்சிறப்பான கதை வாழ்த்துகள் வெற்றிக்காக..!
எதிர்பார்ப்புகளை பொய்யாக்காத பீமோர்கன்.
உங்கள் எழுத்தில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
//"ரகு, எங்கயும் வெளயாடப் போகாத.. நாளைக்கு கிராமத்துக்குப் போகணும்.. பாட்டிக்கு உடம்பு !@#$%...."//
//கஜினியும் பாடப்புத்தகங்களில் படையெடுக்கத்தொங்கியிருந்த காலம்.//
அங்க தான் நீக்கிறீங்க...
நீங்க வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
வாழ்த்துக்கள் தேவையில்லை என நினைக்கிறேன்.
மன்னிக்கவும் தோழர்களே.. அலுவலகத்தில் அளவுக்கதிகமான ஆணிகள் காரணமாக, இத்தனை நாட்கள் இணையம் பக்கமே வரமுடியவில்லை..
@ ரவிஷங்கர்:
நான் எதிர்பார்த்திருந்த விமர்சனங்களில் உங்களதும் ஒன்று.. உண்மையான பார்வைக்கு நன்றி :)
தொடக்கத்தில், இளவயதின் அசைபோடலாக.. வளர்ந்த ஒருவர் நினைத்துப் பார்ப்பதாக எழுத விழைந்தேன்.. கடைசியில் எழுதி முடிக்கையில் இப்படி.. படித்துப் பார்க்கையில் கொஞ்சம் உறுத்தினாலும் ஏனோ மாற்றத் தோன்றவில்லை.. அடுத்த முறை நிச்சயம் நினைவில் கொள்கிறேன்..
வாழ்த்துக்கும் நன்றி நண்பரே:) :)
@ ஆதிமூலகிருஷ்ணன்:
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)
@ அ.மு.செய்யது:
நானும் ரசித்து எழுதிய வரிகள் அவை.. அப்படியே சொல்லியிருக்கீங்க.
தனிப்பட்ட அன்புக்கும்
வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா.. :)
உங்களுக்கு என்னால் இயன்ற ஒரு சிறு பரிசு.வந்து பார்க்கவும்.
இங்கே கிளிக்கவும்.
அந்த அடுத்த வளையத்தை. அது மட்டுமல்ல, இத்தனை நாட்களாக காலத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஆடிவந்த ஆட்டம் அடங்கி அந்த ஊஞ்சல் பரண் மீது புழுதிபடிய மெளனமாய்க் கிடந்தது. சொல்ல வந்ததை கடைசிவரை சொல்லாமலேயே மரித்துப் போன சோகம் அதன் இருப்பில் கசிந்துகொண்டே இருந்தது.
ஆரம்பம் முதல் முடிவு வரை வாக்கியங்களால் அசத்தியிருக்கிறீர்கள்.
நன்றி அமித்து அம்மா.. :)
வருகைக்கும் வாழ்த்துக்கும்.. அப்படியே செய்யதுவின் அறிமுகத்திற்கு சிறப்பு நன்றிகளும்.. :) சரிதானே..?
"sensex"ல் - ஏற்றமும் உண்டு இறக்கமும் உண்டு
உன் படைப்புகளிலோ
ஏற்றங்கள் மட்டுமே உண்டு
வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணா.. :)
ஏதேனும் கறுப்பு தினங்கள் நிகழாமல் என்னை உயர எடுத்துச்செல்வது உங்கள் வார்த்தைகள்தான்.. விமர்சனமாயினும், வாழ்த்துகளாயினும் என்னை வழிநடத்தும் உங்களின் கருத்திற்கு நன்றி.. :)
Post a Comment