Wednesday, December 19, 2007

பெங்களுர் மக்களே..! பதில் சொல்லுங்க..

மெல்லிய பனி, கொஞ்சம் அதிகமாகவே குளிர், காலத்தைக் கடந்த தேவாலயங்கள், ராணுவக் குடியிருப்புகள், எரிச்சல் தரும் டிராஃபிக், தீப்பெட்டிக் குடியிருப்புகள், அடிக்கடி வரும் marketing Call கள் இவற்றோடு பெங்களுரென்றவுடன் தவிர்க்க இயலாத மற்றொன்று FM radio தாங்க..

நானும் ரொம்ப நாளாப் பாத்திட்டேன்.
எல்லா சேனல்லையும், கண்டிப்பா கன்னடப் பாட்டு போடுறாங்க.. ஹிந்தி பாட்டு போடுறாங்க.. ஆங்கிலப் பாட்டு போடுறாங்க.. தெலுங்குப் பாட்டு போடுறாங்க.. இவ்ளோ ஏங்க..? மலையாளப் பாட்டு கூட ஒரு முறை கேட்டிருக்கேன்.. ஆனா இன்னைய வரைக்கும் ஒரு முறை கூட தமிழ் பாட்டு கேட்டதில்லை..?
ஏன் இப்படி?

Wednesday, December 05, 2007

காதலிக்க நேரமில்லை - Title Song

இப்போதெல்லாம் திரைப் பாடல்களுக்கு போட்டியாக வந்து விட்டன நம் சின்னத்திரைப் பாடல்களும். "கண்ணின் மணி... கண்ணின் மணியி"ல் தொடங்கி இன்றைய கோலங்கள் வரை பல பாடல்கள் மக்களின் கவனத்தைக் கவர்ந்திருந்தாலும், சமீபத்தில் வெளிவந்திருக்கும் காதலிக்க நேரமில்லையின் தலைப்புப் பாடல் எனனை வெகுவாகக் கவர்ந்தது.

அழகான பாடல் வரிகள், பொருத்தமான குரல் தேர்வு, மனதை வருடும் மெல்லிய Beat உடன் கூடிய இசை என, ஒரு பெண்ணின் ஏக்கங்களை மிக கச்சிதமாக பதிவுசெய்திருக்கும் இப்பாடல் பெரும் ரசிகர் வட்டத்தைப் பெறும் என நம்பலாம்.
உங்களுக்காக அப்பாடல் இங்கே..


kathalikka neramillai
kathalikka neramil...
Hosted by eSnips

Monday, November 19, 2007

எனக்கென...




நாளின் இனிமை சொல்லும் இளகிய மாலை...
வானவில்லும் வியந்து போகும் அழகிய சோலை..
பூக்களின் பாடலை என் காதில் ஓதி
போதை கூட்டியது தென்றல்..
தனிமையில் அமர்ந்திருந்த நான்
என்னைச்சுற்றிய புல்வெளியில்
பனித்துளியாய் மாற யத்தனித்த நேரம்,
முன்னறிவிப்பின்றி என் முன்னே வந்தமர்ந்தது
ஒரு பட்டாம்பூச்சி


அனிச்சையாய் கைகள் நீட்டினேன்..
எதற்காக? பிடிப்பதற்கா?
தெரியவில்லை..
பிடித்தால் என்ன செய்யப்போகிறேன்?
மென்மையின் மேனி தீண்டவோ?இல்லை
வழித்துணையாய் வீடு செல்லவோ?
விடையில்லை.. ஆனாலும்
உள்மனதில் உருக்கொண்ட ஆசையில்
உடன் களத்தில் குதித்தேன்.



எழுந்து நெருங்கினேன்.
மெல்ல படபடத்து
அடுத்த மலருக்குத் தாவியது..
தொடர்ந்தேன்..
அதற்கடுத்த மலருக்கும்..
என் பிரயாசை அனைத்தையும்
தன் ஒற்றைச் சிறகசைப்பில் தட்டிவிட்டபடி
பூக்களுக்கிடையில் ஒரு பிரௌனியன் பாதையில்
சிறகடித்தது பட்டாம்பூச்சி..


நீண்டு கொண்டே சென்ற
அந்த நிகழ்காலத்தின் முடிவில்
நிச்சயமற்று நான்..
கடந்து செல்வது மலர்ப்பாதை எனினும்
என் மனதுக்குள் ஒற்றை முள்ளாய்
ஒரு ஏமாற்றம்..



திரும்பிப்பார்த்த போது
தொடங்கிய இடத்திலேயே நான்..
கால்கள் களைத்து கடைசியில் வந்தமர்ந்தேன்..
காட்சி இன்பத்தில் மனம் லயிக்கவில்லை..
மனதில் வெறுமை மட்டுமே நிரம்பி வழிந்தது..
சாதாரண வெறுமையல்ல..
அள்ள அள்ளக் குறையாத வெறுமை.
கண்ணைச்சுற்றி காட்சியிருந்தும்
காணமுடியாத வெறுமை..
பச்சைப் புல்வெளிகளில் இருந்த ஆனந்தம்
இப்போது இல்லை.
இப்பூங்காவின் கவின் முழுமையும்
அந்த ஒற்றைப் பட்டாம்பூச்சி
களவாடிச் சென்று விட்டதாய்த் தோன்றியது..


இருக்குமிடமெங்கும் மெல்ல இருள் படர்ந்தது.
என் மனதிலும்தான்..
வானம் பார்த்தேன்..
என்னைப் போலவே தனிமையில்
அந்த நிலா..
எனக்காய் அழுவதாய்த் தோன்றியது.
நிலவுக்கு ஆறுதல் சொல்லும் தைரியம்
எனக்கிருக்கவில்லை...
மௌனமாய் தரை நோக்கியிருந்தேன்..
மனதினுள் ஏதோ ஒரு சலசலப்பு..
துரத்தல் தொடங்கிய அதே மலர் மீது
பட்டாம்பூச்சி மீண்டும்.


இம்முறை என் கைகள் நீளவில்லை..
மௌனமாய்ப் புன்னகைத்தபடி விழி மூடினேன்..
நொடிகளும் யுகங்களும்
உருபுமயக்கங்களாய் உருப்பெற்று
உருண்டோடின..
விழிதிறந்த போது
என் விழித்திரையில்
அந்த பட்டாம்பூச்சி இல்லை..
அதிர்வின்றி எழுந்து நின்றேன்..
மனதில் ஏதோ ஒரு நிம்மதி..
இப்பூங்கா மீண்டுமொரு முறை
பூப்பெய்தியதாய் ஒரு பிரமை..
என் மனம் இப்போது
ஆனந்தமாய் படபடத்துக் கொண்டிருந்தது
மெல்ல வீடு நோக்கி நடக்கத்தொடங்கினேன்..
குனிந்து பார்க்கவில்லை என்றாலும்
எனக்கு நிச்சயமாய்த் தெரியும்
அந்த பட்டாம்பூச்சி
இப்போது அமர்ந்திருப்பது
என் தோள் மீது..

Friday, November 02, 2007

நிலவு கடுப்ப நினைவுகளே..!


தூக்கம் தொலைத்த இரவுகளில் துணைவந்து,

தேய்வதாய் மயக்கி தினம் வளர்ந்து,

மாநிலம் மேவியோடிய போதும் உடன்வந்து,

நோதலோ காதலோ நிச்சயம் தருவதி்ல்

நிலவு கடுப்ப நினைவுகளே..!

Wednesday, October 31, 2007

தமிழில் எழுத Google-ன் மந்திரப்பக்கம்

வலைப்பதிவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை, தமிழில் தட்டச்சுவது. என்னதால் feel பண்ணி பக்கம் பக்கமா எழுதினாலும், கடைசியில் பதிவிடுவதற்குள் டாவு தீர்ந்துவிடும்.. ( தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு..)

இணையத்திலும் பலவித உதவிப்பக்கங்கள் அங்கங்கே உள்ளன. என்னதான் இருந்தாலும் தமிழில் நேரடியாக தட்டச்சும் சுலபம் (அ) செளகரியம் கிடைப்பதில்லை.

இப்போது, Google -ம் இந்த களத்தில் குதித்திருக்கிறது. Google ன் மற்ற படைப்புகள் போலவே, வாய் பிளக்க வைக்கிறது. புதுமையான ஒரு முயற்சி. இப்பக்கத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சி தமிழில் பெற முடியும். இதுதான் எல்லா இடத்திலும் இருக்கிறது என்கிறீர்களா? அதுதான் இல்லை..

இப்பக்கம், ஒவ்வொரு எழுத்தாக எழுத்துரு மாற்றுவதற்குப் பதில் ஒவ்வொரு வார்த்தையாக மாற்றுகிறது. ஒரு வார்த்தைளை எழுதிய பின் space அழுத்தினால் மந்திரம் மாதிரி முதல் வார்த்தை மாறுகிறது. மிகப்பெரிய செளகரியம், அம்மா என்று எழுத Amma, Ammaa என எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அகராதிச்சொற்கள் மட்டுமல்லாது, பெயர்சொற்கள் ஊர்ப்பெயர்கள் எனப் பலவித சொற்களையும் எழுத்துப்பிழையின்றி எழுதமுடியும்.
( எ.கா) Tanjavur, Thanjavur, Thanjavoor, Tanjaavur, Thnjavur <--( 'a' missing. note this) என எப்படி எழுதினாலும் தஞ்சாவூர் கிடைக்கும். இது போன்ற சிறிய வேறுபாடுகளை, தானாகவே கண்டறிந்து சரிசெய்து கொண்டு விடுகிறது.. உண்மையிலேயே வலைப்பதி்வர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். முயற்சித்துப் பாருங்களேன்..
http://www.google.com/transliterate/indic/Tamil

பி.கு:
தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாலம் ஆகிய மொழிகளிலும்
இப்பக்கத்தில் தட்டச்சலாம்.

Tuesday, October 23, 2007

சத்தம் போடாதே- ஒரு பார்வை




We don't see and define. We dfine and then see.
-யாரோ

வேறு எந்த விஷயத்தில் இல்லாவிட்டாலும், திரைப்படங்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் உண்மையே...

பொதுவாக, ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன், அதனைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனத்தை அறிய நான் முற்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் வாழ்வின் சுவாரஸ்யமே, அடுத்த நொடியின் ஆச்சரியத்தில்தான் அடங்கியிருக்கிறது. அந்த அரைநொடி சந்தோஷத்தை இழக்க விரும்பாதவன் நான். ஆனால், பல நேரங்களில் இது சாத்தியப்படுவதில்லைதான். எத்தனையோ ஊடகங்களின் வாயிலாக, படத்திற்கு போவதற்கு முன்பே அதனைப் பற்றிய ஒரு பிம்பம் நம் மனதில் பதிக்கப்பட்டு விடுகிறது. அதன் பின் படம் பார்க்கப் போனால், ஆறு வித்தியாசம் கண்டுபிடித்த கதைதான்.

ஒரு சில திரைப்படங்களே இப்பிம்பத்தை உடைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான், 'சத்தம் போடாதே' வில் எனக்கு நேர்ந்தது.

வழக்கமான விமர்சனங்கள் போல், ஒரு பக்கத்திற்கு குறையாமல் கதை'சுருக்கம்' தந்து, காட்சிகளை அக்கக்காக பிரித்து அலசி ஆராய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், என் மனதில் பட்ட சில கருத்துக்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

நான் படத்திற்கு செல்லும் முன்பே, நண்பர்கள் வட்டத்திலிருந்து பலதரப்பட்ட அறிவுரைகள், விமர்சனங்கள் இன்ன பிறவும். "இருக்கும் வேலைப்பளுவுக்கு மத்தியில், கிடைக்கும் ஒரு வார இறுதியையும் வீணடித்து விடாதே" என்ற அளவுக்கு வந்தன. இருப்பினும், வஸந்த் படமாயிற்றே. அப்படி என்னதான் இருக்கிறது ஒரு முறை பாத்த்துதான் விடலாம் என்றுதான் சென்றேன்..

சுருங்கச் சொல்லின், ஒரு நல்ல திரைப்படம். சமீப காலங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் குத்துப்பாடல்கள் நிரம்பி வழியும் மசாலாப் படங்களுக்கு
இது எவ்வளவோ தேவலாம்.. அங்கங்கே தென்படும் சில அபத்தமான காட்சிளைத்தவிர( யாருமே இல்லாத காட்டில், எப்போதும் இஸ்திரி போட்டுக் கொண்டிருக்கும் அந்த இஸ்திரி கடைக்காரன் மாதிரி) மொத்தத்தில் நன்றாகவே இருக்கிறது.

படத்தில் மொத்தமே விரல் விட்டு எண்ணக் கூடிய கதாபாத்திரங்கள்தான். ஆனாலும், ஒரு நாடகத்தன்மை வராமல் படத்தை கொண்டு சென்றிருப்பதற்கு இயக்குனருக்கு சபாஷ் சொல்ல வேண்டும். வழக்கமான தமிழ் சினிமாவாக இருந்திருந்தால், நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நிச்சயம் ஒரு சண்டைக்காட்சி இடம்பெற்றிருக்க வேண்டும். இறுதிக்காட்சியில் வரும் அந்த பாழடைத்த பங்களாவில், நாயகன் வில்லனை துரத்தி துரத்தி நையப்புடைத்தபின் (அல்லது வில்லனைக் கொன்ற பின்) படம் முடிந்திருக்கும்..

ஆனால், இவை எதுவும் இல்லாமல், ஹீரோயிஸத்தை முடிந்த அளவு குறைக்க சிரமப்பட்டிருக்கிறார் இயக்குனர். "பேசுகிறேன்.." பாடலும், விவாகரத்துக்குப் பின் நாயகியைக் கவர நாயகன் வகுக்கும் வியூகங்களும் ரசிக்க வைக்கின்றன..புதுமுக ஒளிப்பதிவாளராம்.(பெயர் மறந்து விட்டது) சிறப்பாகவே செய்திருக்கிறார். நா.முத்துக்குமார் யுவன் கூட்டணியின் பெயர் சொல்லும் படி இல்லை பாடல்கள்.(ஒன்றைத்தவிர).

இது போதுங்க. இன்னமும் தெரிஞ்சுக்க, நீங்களே தியேட்டருக்கு போய் ஒரு தடவை பாத்திட்டு வாங்க..

என் பரிந்துரை:: "நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்"

Tuesday, October 16, 2007

நான் ஏன் எழுதுகிறேன்..? ஜெயகாந்தன்

எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன்.
எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச்செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன்.
வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்.
ஜெயகாந்தனின் வானொலி உரை- ஜீலை-5- 1971

இப்படிச்சொன்ன ஜெயகாந்தன்தான் பின்பொருமுறை, "நீங்கள் ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை?" என்று கேட்டதற்கு,
"நான் விரும்புவதை எழுதுவதற்கு எனக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ, அதே அளவு சுதந்திரம் எழுதாமல் இருப்பதற்கும் உள்ளது" என்றார்..

என்ன ஒரு விசித்திரமான பதில்..! அவருடைய கதாபாத்திரங்களின் சாயல், அவர் மூலம் அடிக்கடி வெளிப்படுவதைக் காணலாம். அல்லது எதிர்த்திசையில் , அவரது குணாதிசியங்கள் அவரின் கதாபாத்திரங்களின் மீது படிந்திருப்பதாகவும் கொள்ளலாம். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கங்காவாகட்டும் 'யுகசந்தி'யின் கெளரிப்பாட்டியாகட்டும், ஏதோ ஒரு விதத்தில் எங்கோ ஒரு மூலையில் அவரின் சாயல் தென்படும்.

அவர் தேர்தலிலும் ஒரு முறை போட்டியிட்டிருக்கிறார், தி.நகர் தொகுதியில். அதில் அவர் பெற்ற வாக்குகள் 200க்கும் குறைவே. எதற்காக தேர்தலில் நின்றார்? தெரியாது.. தேர்தல் முடிவுகளுக்குப் பின் "என்னை நம்பி வாக்களித்த அனைவருக்கும் நன்றி" என்ற அறிக்கையும் கூடவே வந்தது.

அவருடைய பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் தென்படுவது போன்ற 'ஸ்திரபுத்தி'யில்லாத தன்மையா? அல்லது, நான் நினைத்ததை நான் செய்கிறேன் என்ற தன்னிறைவா இது.? தெரியாது..

இவை எல்லாவற்றையும் கடந்து, என் மனதைக்கவர்ந்த எழுத்தாளர் அவர்.. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவரின் 'கர்வம்'. தான் ஒரு எழுத்தாளன் என்ற கர்வம்.. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத அந்த ஞானச்செருக்கே அவரின் அடையாளம்.

பாரதீய ஞானபீட தேர்வுக்குழுவினர் சொன்னது...
"தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, இந்திய இலக்கிய உலகுக்கு அவரது பங்களிப்பு மேன்மை சேர்த்திருக்கிறது. "
உண்மைதான்...

Saturday, October 06, 2007

அவளைப் போல் ஒரு கவிதை..!

பழனிபாரதியின் 'மழைப்பெண்' கவிதைத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கவிதை ஒன்றுண்டு.

அது,

"ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு
ஆணும் போதாது காதலுக்கு..
நிலா வேண்டும், மழைவேண்டும்,
மீன் வேண்டும், காடு வேண்டும்,
தும்பி வேண்டும், மழலை வேண்டும்,
மண்புழு வேண்டும்,
கவிதை வேண்டும்.. "

காதல் கவிதைகள் என்றால் கவிஞர்கள் செய்த காலவிரயம் என்று எண்ணியிருந்த எனக்கு மாற்றுக்கருத்து ஏற்பட உதவிய கவிதைகளில் இதுவும் ஒன்று.( இன்னும் பல உண்டு. அவற்றை பிறகு பார்க்கலாம்)


ஆனால், ஒன்று நிச்சயம். நானும் கொஞ்சம் காதல் எழுதவேண்டும் என்ற ஆவல் துளிர்விட்டது. இதோ நான் எழுதிய கொஞ்சம், இங்கே..

காதல் வந்தாலே, உலகியல் வரையறைகள் தகர்ந்து போவது சகஜம்தான். கவிதையும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் எழுதியதை கவிதைகள் என்று சொல்லமாட்டேன். காதல் பித்தில், சில பிதற்றல்கள்.. அவ்வளவே.. !! காதலின் தீண்டல் கண்டவர்களுக்கு இவை சுவைக்கலாம்..!!!

கவிதையை படங்களுடன் காண, இங்கே செல்லவும்..

  • பாடுபொருளாய்
    காதலைக் கொள்வேனென
    கனவிலும் நினைக்கவில்லை.
    நீ
    வந்தாய்..!
  • -------
  • உன்னில் பிறக்கும்
    கவிதைகளின்
    வளர்ப்புத்தாய்
    நான்..!
  • -------
  • என் கவிதைகளுக்கு
    முதலும் முடிவும்
    ஒரே புள்ளிதான்,
    முடிவிலியைப் போல,
    நீ..!
  • -------
  • எத்தனை அலை
    வந்து சொல்லிச்சென்ற
    பின்னும்,
    மிச்சமிருக்கின்றன
    கடலைப்பற்றிய கதைகள்,
    உன்னைப் பற்றிய
    என் கவிதைகளும்...
  • -------
  • நம்மில் அல்ல,
    நமக்கிடையே
    நிரம்பியிருக்கிறது,
    காதல்..!
  • -------
  • எழுதாமல் விட்ட வரிகள்தான்
    அதிகம் சொல்கின்றன..
    என் காதலை.. !
  • -------
  • தேவதைக் கதைகளை
    கேட்டதில்லை நான்..
    ....
    பார்த்திருக்கிறேன்..!
  • -------
  • என் கவிதைகளை
    அர்த்தமிழக்கச்செய்யும்
    அகராதி
    நீ..!
  • -------

Wednesday, October 03, 2007

படித்ததில் பிடித்தது (1)


அதை நான்
எழுதி முடிக்கும் போது
அதற்கான சுவடுகள்
அழிந்து போயிருக்கும்.
அவற்றின் சுவடுகளாய்
என்
எழுத்துக்கள் இருக்கும்

எழுதும் முன்
எது என்னை வதைத்ததோ
அது உங்களை
வதைக்கத்தொடங்கும் போது
நான் எழுதப்பட்டிருப்பேன்




-மு. மேத்தா

(ஆகாயத்துக்கு அடுத்த வீடு)

Tuesday, July 31, 2007

படம் பார்த்து பதில் சொல்லுங்க..

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு புகைப்படம் என் கருத்தைக் கவர்ந்தது.. உங்கள் பார்வைக்கு.... கீழே இருக்கும் புகைப்படத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்..



இது தொழிலதிபர் டாடா அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வந்த ஒரு ஓவியம். இதில் ஒளிந்திருப்பது என்ன என்று தெரிகிறதா.? கண்டுபிடித்தால் உங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்ய சபாஷ்..