எண்ணம் தப்பும் வேளைகளில்
எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன்,
என் கனவுகளை..
பலித்ததும், இழந்ததும்
வேண்டுவதும், வேண்டியதும்
விதவிதமாய் வந்து சென்ற கனவுகள்..
நினைவுகளின் ஏட்டில்,
பலித்தவற்றைக் காட்டிலும்
பலிக்காமல் தொலைந்தவையே
இன்னும் பலம் பெற்றிருக்கின்றன..
வெற்றிடத்தின் தத்துவத்தை
அறிவியலில் அறிந்ததைக்காட்டிலும்,
ஏதேனும் ஒன்றை இழந்ததில் உணர்ந்ததே
நினைவில் நிற்கிறது..
முன்னிரவோ முதல்பகலோ
வினைத்தொகையாய்,
முக்காலத்திலும் முடிவின்றி
நீளும் கனவுகள்..
அய்யனார் கோவிலும்,
பீர்முகமது வீட்டுக் கொல்லையும்,
அஞ்சு கண்ணு பாலமும், ஒற்றைப்பனையும்
வந்த அந்த இரவின் கனவை
இன்னும் சேமித்து வைத்திருக்கிறேன்..
ரகுவரன் வைத்த வெடிகுண்டை
நானும் ஒருமுறை
செயலிழக்கச்செய்திருக்கிறேன்.
ராமசாமி வாத்தியாரை
பிரம்பால் அடித்திருக்கிறேன்..
கேப்டன் வ்யோமுடன்
அண்டம் சுற்றி அலைந்திருக்கிறேன்..
சில சிரிக்க வைத்திருக்கின்றன
சில சிலிர்க்கவைத்திருக்கின்றன..
புரட்டப்படாத கனவுகளின் சில பக்கங்கள்
செல்லரித்தும் போயிருக்கின்றன,
எவ்வாறாயினும்,
அவை என் கனவுகள்..
என் சிருஷ்டியின் குழந்தைகள்
அவற்றின் பிரம்மன் நான்தான்..
என் படைப்பில் பெருமையிருக்காதா எனக்கு?
அதனால்தான்,
கனவுகள் கறுப்பு வெள்ளையென சொன்ன
ஆசிரியருக்கு நிறக்குருடு என சிரித்தேன்..
ஆனால்,
ஊக்கம் தொலைத்து உறைந்து நிற்கும்
வேளையிலும்,
உடைந்து போன வாழ்வுக்கு வண்ணமிடுபவை
இந்த கறுப்பு வெள்ளை கனவுகள்
என உணர்ந்தபின்,
கண்களைத் தொலைத்தவனல்ல
கனவுகளைத் தொலைத்தவனே
குருடன் என்றேன்..
இன்றும்
வண்ணங்கள் சிந்தியபடி,
புரட்டப்படுகின்றன
என் நினைவுகளின் ஏட்டில்
சில கனவுகள்..
பலித்தவையும், தொலைத்தவையும்..
தான் சேமித்த காசை எண்ணி எண்ணிப் பார்த்து
மகிழும் கருமியைப் போல,
எண்ணம் தப்பும் வேளைகளில்
எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன்,
என் கனவுகளை...
6 comments:
உறங்கி, உறங்கி கனவு காணும்
எம்மவரை,
ஊக்குவித்துக் கெடுக்க
போதுமையா நீரொருவர்!
Colour Your Dreams! - எங்கேயோ கேட்டதுபோல இல்ல? [NITTFest!]
நன்று! நன்று!
படைப்பும் நன்று!
கனவுகளும் நன்று!
கனவின் படைப்பும் நன்று!
படைப்பான கனவும் நன்று!
அகம் பிரம்மாஸ்மி!
தத் த்வம் அஸீத்..!
பிரம்மனுக்கு பாராட்டுக்கள்..!
இவண்,
பிரம்மன்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தணிகா :-)
கனவுகள் என்றும் தவறில்லையே.. :)
பிரம்மனுக்கும் என் நன்றிகள்.. !
ஆம்.. தத் த்வம் அஸீத் ..!
//ஆனால்,
ஊக்கம் தொலைத்து உறைந்து நிற்கும்
வேளையிலும்,
உடைந்து போன வாழ்வுக்கு வண்ணமிடுபவை
இந்த கறுப்பு வெள்ளை கனவுகள்
என உணர்ந்தபின்,
கண்களைத் தொலைத்தவனல்ல
கனவுகளைத் தொலைத்தவனே
குருடன் என்றேன்..
//
ஆஹா...அருமை அருமை...
சொல்லும் கருத்தை தன் கவிதைகளில் திறம்பட வெளியிடும் பாங்கு மகாகவியுடையது என்று கூறக்கேட்டிருக்கிறேன். அந்த முண்டாசுக் கவிஞனை காணும் பாக்கியத்தினை பெறவில்லையே என்று வருந்தியதுண்டு. இந்த நிமிடம் முதல் அந்த வருத்தம் தொலையப்பெற்றேன்.
Post a Comment