அலைக்குறிப்புகள்-1அலைக்குறிப்புகள்-2நாங்கள் வந்தடைந்த டச் பேலஸ், உண்மையில் கொஞ்சம் பெரிய சைஸ் பங்களா மாதிரிதான் இருந்தது. இரண்டடுக்குகள், விஸ்தாரமான அறைகள், நீண்டிருக்கும் திண்ணையென நீண்டு படுத்திருந்தது அந்த மாளிகை.
16ம் நூற்றாண்டில் இதனைக்கட்டியர்வகள் போர்ச்சுக்கீசியர்களே. அதற்கடுத்த நூற்றாண்டில், தொடர்ந்து வந்த காலனியாதிக்கப் போரில், டச்சுக்காரர்கள் கொச்சினைக் கைப்பற்ற இந்த அரண்மனையும் அவர்கள் வசமானது. அவர்களும் அவர்கள் பங்குக்கு அங்கங்கே சில மாறுதல்கள், அலங்காரங்கள் செய்து, போரினால் கோபமுற்றிருந்த திருவாங்கூர் மகாராஜாவுக்கு இந்த மாளிகையை பரிசாக அளித்துவிட்டனர்.
அன்றிலிருந்து இது ஒரு ராஜ மாளிகை.
ராஜாக்களெல்லாம் ராஜ்ஜியமிழந்து போக, இப்போது இந்த மாளிகை ஒரு அருங்காட்சியகமாக செயல்பட்டுவருகிறது.
ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேல் இந்த காட்சியகத்தினுள் அலைந்தோம். ராஜாக்கள் பயன்படுத்திய கர்சீப்பிலிருந்து பல்லக்கு வரைக்கும் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். குடும்ப ஓவியங்கள், கேரளாவின் அரச பரம்பரையை விளக்கும் ஓவியங்கள் என்று விதவிதமாய் காட்சிக்கு கிடைக்கின்றது அரச வாழ்க்கை.
மேற்கத்திய கட்டிடக்கலைக்கும் இந்திய கட்டிக்கலைக்குமான கலப்பை இங்கு தெளிவாக உணரமுடியும். கட்டிடத்தின் வெளிப்புற அமைப்பும் நுழைவாயிலும் பாரம்பரிய கேரள வடிவில் அமைந்திருந்தாலும், உள்நுழையும் போது உயர்ந்த நிலைப்படிகளும் கதவுகளும் மேல் நோக்கிய ஆர்க் வடிவில் மேற்கத்திய பாணியை நினைவுபடுத்துகின்றன.
மேலும் படிக்க...முக்கியமாக எனக்குப் பிடித்த ஒரு பகுதி, முதல்தளத்தில் ஒரு அறை முழுக்க ராமாயணக் காட்சிகளை ஒரு வகை கொலாஜ் சித்திரங்களாக சுவர் முழுவதும் தீட்டியுள்ளனர். கொஞ்சம் நிறம் மங்கியிருந்தாலும், இத்தனை காலத்திற்குப் பிறகும், அதன் கம்பீரம் குறையாமல், ராமனும் லக்குவணனும் இன்ன பிறரும் காட்சி தருகின்றனர். அப்படி ஒரு உணர்ச்சி மயமான ஓவியங்கள். நிச்சயம் ஒரு நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம். பலமணிநேர அவதானிப்பிற்குப் பிறகும், நாம் தவறவிட ஒரு தகவல் இந்த ஓவியங்களில் ஒளிந்திருக்கும். அப்படி பார்த்து பார்த்து தீட்டியிருக்கின்றனர்.
அதன் பிறகான எங்கள் பயணம், சான்டா க்ருஸ் தேவாலயம். இந்நேரம் நீங்களே ஊகித்திருக்கலாம், இந்த தேவாலயம் எவ்வளவு பழமையானதென்று. 1505 ல் கட்டப்பட்டது. போர்த்துக்கீசிய மொழியில் சாண்டா க்ருஸ் என்றால் holy cross என்று பொருள் சொல்கின்றனர். அத்தனை நுண்வேலைப்பாடுகளுடன், தொலைவிலிருந்து பார்க்கும் போதே புருவங்களை உயரச்செய்கிறது. கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி செல்கையில் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கிறது இந்த ஆலயம். கோதிக் வகை கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகச் சொல்லப்படுகிறது இந்த தேவாலயம்.
கொச்சின் போர்த்துக்கீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்களின் வசமான போது, இந்த தீவிலிருந்த பெரும்பான்மையான கத்தோலிக்க கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. அவர்களும் கூட இந்த தேவாலயத்தைப் பார்த்து வியந்திருக்கவேண்டும். அவர்களிடமிருந்து தப்பிப்பிழைத்தாலும் பின்னாளில் ஆங்கிலேயர்களின் வசமான போது, கொஞ்சம் சேதாரம் சுமந்து அதன்பின் சரிசெய்யப்பட்டு இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது இந்த தேவாலயத்தின் மணியோசை. கிட்டத்தட்ட நடை சாத்தும் நேரத்தில் வந்ததால், இங்கு அதிக நேரம் செலவழிக்கமுடியவில்லை. கொஞ்சம் மனவருத்தத்துடன் எங்களின் அடுத்த இலக்கை நோக்கினோம்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும். இந்த தீவினுள் சுற்றியலைவதற்கு யாரிடமும் உதவி கேட்கத் தேவையில்லை. திருப்பத்திற்கு திருப்பம், ஒவ்வொரு தெருவிலும் தெள்ளத்தெளிவாய் திசைகாட்டுகின்றன வழிகாட்டிப் பலகைகள். பார்க்கவே சந்தோஷமாய் இருந்தது. பார்க்கவேண்டிய ஒரு இடத்தை தவறவிட கொஞ்சமும் வாய்பளிக்காமல் நம்மை இட்டுச்செல்கின்றன. கொச்சின் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தாராளமாய் ஒரு ஷொட்டு. :)
சரி.. வாங்க.. அடுத்தது, சான்டா க்ருஸ் தேவாலயத்திலிருந்து நடை பயிலும் தொலைவில் உள்ளது, St.Francis தேவாலயம் (அ) வாஸ்கோடகாமா சர்ச். இது நானே எதிர்பார்க்காத பம்பர் பிரைஸ்.
இந்தியாவின் மிகப்பழமையான தேவாலயம் இது.
சாண்டில்யனின் 'கடல் புறா'வில் எனக்குப் பிடித்த ஒப்புமை ஒன்று.
கடல் ஒரு காந்தம். ஒரு முறை கடலோடியாக இருந்தவன் அந்த ஈர்ப்பின் புலத்திலிருந்து வெளியேறுவது கடினம். அவனுக்கு நிலம் ஒரு நிலையற்ற இடமாக மயக்கம் கொள்ளச்செய்யும். கடலோ அவனை மீண்டும் மீண்டும் தன்னிடம் இழுத்து கிறக்கம் கொடுக்கும் - என அமீரின் கூற்றாக வரும்.
எனக்கும் எப்போதுமே கடல் பயணத்தைப் பற்றிய ஒரு கற்பனை உண்டு. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வாக. நாற்புறமும் நீர் சூழ்ந்த
திசைகள் தொலைத்த ஒரு பயணமாக. ஒரு சாகசப் பயணமாக.. சிறுவயதில் சிந்துபாத்திலிருந்து கொலம்பஸின் வாழ்க்கை வரலாறு வரை நான் படித்த அனைத்துமே இந்த கற்பனையை தூண்டிவிட்டே சென்றிருக்கின்றன.. இப்போதைய நவீன வழிகாட்டி கருவிகள், வானிலை முன்னெச்சரிக்கைகள் எதுவுமே இல்லாமல் மரக்கலங்களில் கடற்பயணம் எப்படி இருந்திருக்கும்..
கடலென்றால் இப்படி இருக்கும் அதில் பயணமென்றால் அப்படி இருக்கும் என்பதெல்லாம் ச்சும்மா.. கடல் என்பது கடல்.. அவ்வளவுதான். அந்த உணர்வை கடல் மட்டுமே தரமுடியும். மனிதனை அற்பனாக சுருங்கச்செய்யும் அந்த பிரம்மாண்டம் கடலால் மட்டுமே முடியும்.
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் புன்னைநல்லூரில் உள்ளது ராணிசமுத்திரம் ஏரி. இன்றைக்கு ஆக்கிரமிப்புகளில் அகப்பட்டு சிறுத்திருந்தாலும், முன்னாளில் இன்னும் விஸ்தாரமாக இருந்திருக்க வேண்டும். அதற்கு பெயர்க்காரணமாக இப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் வாய்வழிக்கதையொன்று.
முன்னொரு காலத்தில் தஞ்சையை ஆண்ட ஒரு ராஜா ஒருவர் போரிடச்செல்கையில்தான் முதன் முதலில் கடலைப் பார்த்தாராம். போர்முடிந்து திரும்பி வந்தவர் தன் ராணியிடம் தான் பார்த்த கடலைப்பற்றி ஆச்சரியம் மேலிட விவரித்திருக்கிறார். அவர் என்ன சொல்லியும் ராணியால் அவர் சொல்லும் அந்த 'கடலை' கற்பனை செய்யமுடியவில்லை. அவர்தான் ராஜாவாச்சே.. உடனே ஆட்களை அழைத்து மிக பிரம்மாண்டமாக இந்த ஏரியை வெட்டி நீர் நிரப்பினாராம். அப்போதும் அவருக்கு திருப்தியில்லை. மீண்டும் மீண்டும் அதனை விஸ்தரித்திருக்கிறார்.. கடைசி வரை அவரால் கடலை கொண்டுவரமுடியவில்லை.. கடைசியல் ஏமாற்றத்துடன்
'கடல் னா கிட்டத்தட்ட இந்த மாதிரி இருக்கும்' என்று ராணியிடம் சொன்னதாக முடிகிறது இந்த கதை. ராணிக்கு சமுத்திரத்தைக் காட்ட வெட்டியதால் இதுவும் ராணிசமுத்திரம் ஆனது.
அதுதான் கடல்.
ஆபத்துகள் நிறைந்த ஒரு சாகசப் பயணம் அது. ஒவ்வொரு பயணமும் ஒரு கொண்டாடத்தகுந்த வெற்றி. அந்த வெற்றி போதைதான் அவனை மீண்டும் மீண்டும் ஈர்த்திருக்க வேண்டும்.
அப்படித்தான் சுமார் 510 ஆண்டுகளுக்கு முன்பு, கொலம்பஸ் மேற்கு நோக்கி பயணத்தை தொடங்கிய காலத்தில் கிழக்கு நோக்கி தன் பயணத்தைத் தொடங்கி சரியாக 317 நாட்கள் கழித்து இந்தியாவிற்கு வெற்றியுடன் வந்தடைந்தார் வாஸ்கோடகாமா. ஒரு முறை லிஸ்பனிலிருந்து கோழிக்கோடு வரை வந்தசேர்தலே கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனையாக கருதப்பட்ட காலத்தில்,
முதல் முறை கடலோடியாக வந்தவர், வெற்றிச்செய்தியுடன் திரும்பிச்சென்று அடுத்த முறை போர்க்கலங்களுடன் வந்திறங்கினார். அப்போதும் கடல் அவரை விடவில்லை. இரண்டாவது முறையும் திரும்பிச்சென்று தன் மூன்றாவது பயணமாக 1519 ல் திரும்பவும் இந்தியா வந்தவர், ஒரு வருடம் இந்தியாவில் போர்த்துக்கீசிய வைசிராயாக இருந்துவிட்டு 1524ல் இங்கேயே காலமானார்.
அவரின் கல்லறை இந்த தேவாலயத்தில்தான் அமைந்துள்ளது.
கடலென்னும் காந்தம் கடலோடியை எப்போதும் விடுவதில்லைதான். பாதை கண்டுபிடிப்பதுதான் வாஸ்கோடகாமா வின் ஒரே குறிக்கோளாக இருந்திருந்தால் அவர் முதல் தடவையோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். அல்லது பதவியும் செல்வமும் ராஜ்ஜிய விஸ்தரிப்பும் குறிக்கோளெனில்
இரண்டாம் முறை போர்க்கலங்களோடு வந்து வெற்றிவாகை சூடிய போதே பயணத்தை முடித்துக்கொண்டிருக்கலாம். மூன்றாம் முறையும் அவரை ஈர்தது எது? சில நேரங்களில் சென்று சேரும் இடம் ஒரு சாக்கு போக்கு மட்டுமே. அந்த இடத்தைவிட அதை நோக்கிய பயணமே போதை தருவதாக அமைவதுண்டு. அந்த போதைதான் அவரை ஆட்டுவித்திருக்கிறது.
சரித்திரத்தின் பாதைகளில் காற்றின் திசைகளை எதிர்த்து கடலில் தன் காலனியை நிறுவிய அந்த மாலுமி முதன் முதலில் நிரந்தரமாக நிலத்தில் உறங்கிய இடம் இது என்ற நினைவே சிலிர்க்க வைத்தது. அப்போதும் கூட கடல் அவரை விட்டுவிடவில்லை. புதைக்கப்பட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் அவரது சவப்பெட்டியின் மிச்சங்கள் இங்கிருந்து போர்த்துக்கலுக்கு கடல் மார்க்கமாக கொண்டுசெல்லப்பட்டு லிஸ்பனில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டன.
ஆனால், அவர் முதலில் புதைக்கபட்ட கல்லறை இன்றும் இங்கு காணக்கிடைக்கிறது.
அவர் நினைவாக இந்த தேவாலயமும் வாஸ்கோடகாமா தேவாலயம் ஆனது. இதற்கடுத்த ஒரு சதுக்கமும் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
(மீண்டும் அலையலாம்)
4 comments:
நீ இன்னும் நிறைய எழுதலாம் .. இது எப்பவும் சொல்றது தான். எத்தனை தடவை படிச்சாலும் சுவாரசியமா இருக்கு உன் எழுத்துகள்.
நண்றி நண்பா.. :) கண்டிப்பாய் முயற்சிக்கிறேன்.. :)
[நான் என்ன வைச்சுகிட்டேவா வஞ்சகம் பண்றேன்..அது அதுக்கு னு ஒரு காலநேரம் கூடி வரவேணாம்?.. க்கும்.. ;) ]
'கடல் னா கிட்டத்தட்ட இந்த மாதிரி இருக்கும்' என்று ராணியிடம் சொன்னதாக முடிகிறது இந்த கதை. ராணிக்கு சமுத்திரத்தைக் காட்ட வெட்டியதால் இதுவும் ராணிசமுத்திரம் ஆனது. //
இது எனக்கு புதிய தகவல்.
தொடரட்டும் அலைக்குறிப்புகள்
நன்றி அமித்தும்மா.. :)
Post a Comment