Monday, November 30, 2009
விகடனில் புத்தகம்
மேலும் தகவல்கள் இங்கே
- Bee'morgan
Wednesday, November 25, 2009
பூவும் தலையும்- தொடர்பதிவு
இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
ம்ம். இது போதும். இனி எனக்குப் பிடித்த சில தலைகள்..
1)தொலைக்காட்சியில்
பிடித்தவர்கள்:
கோபிநாத், அனு ஹாசன், சின்மயி (எல்லாரும் விஜய் டிவியான்னு கேக்காதீங்க.. இது தற்செயலானதே )
பிடிக்காதவர்கள்:
சுஹாசினி
விதிவிலக்கில்லாமல் சன்மியூசிக்கின் அனைத்து தொகுப்பாளர்களும்
மானாட மயிலாட வரும் நடுவர்கள் அனைவரும்
2) விளம்பரங்களில்
பிடித்தவர்கள்: சிலருண்டு. ஆனால் பெயர் தெரியாது. அடுத்த முறை டிவியில் வரும் போது காட்டறேன் ;)
பிடிக்காதவர்கள்:
அப்பாஸ் - பத்து நாயகிகளுடன் உப்புக்குச் சப்பாணி கேரக்ட்டராக இருந்தாலும் அவரோட மனதைரியத்துக்காக
சூர்யா : சுடர்மணி ஜட்டிகளைத் தவிர பாக்கி எல்லாத்திலயும் நடிச்சுட்டார்னு நினைக்கிறேன். இவர் கொஞ்சம் விளம்பரங்களைக் குறைச்சுகிட்டா நல்லாயிருக்கும்
அப்புறம் நமீதாவுக்கும் TMT கம்பிக்கும் என்ன சம்பந்தம்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்க
3) படத்தயாரிப்பில்
பிடித்தவர்கள்:
பிரகாஷ்ராஜ், ஷங்கர் அவசரத்தில் நினைவுக்கு வராத இன்னும் சிலர்
பிடிக்காதவர்கள்:
கலாநிதிமாறன், உதயநிதி (இவங்கள்லாம் நெனச்சா குருவி மாதிரி ஒரு படம் எடுக்கறதுக்கு தரமா இன்னும் நாலு படம் எடுக்கலாம். எவ்வளளோ பண்றாங்க. இதப் பண்ண மாட்டாங்களா? )
4) வசனத்தில்
பிடித்தவர்கள்:
எப்போதும் சுஜாதா :) அப்புறம் பாக்யராஜ், விஜி, சிற்சில முறைகள் பாலகுமாரன்
பிடிக்காதவர்கள்:
கலைஞர்
5) எழுத்தில்
பிடித்தவர்கள்:
சுஜாதா, கல்கி, எஸ்ரா, வண்ணதாசன், கி.ரா இது கொஞ்சம் பெரிய பட்டியல்.. அதனால இத்தோட போதும்
பிடிக்காதவர்கள்:
சாருவின் சில எழுத்துகள் அதன் காட்டத்தினாலேயே பிடிக்காமல் போனது. ஒரு சில இலக்கிய அரசியல்களில் மட்டும் ஜெமோ
6) பாடலில்
பிடித்தவர்கள்:
SPB, ஜேசுதாஸ், விஜய் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன்,கார்த்திக், சித்ரா, ஹரிணி, ஷ்ரேயா கோஷல்
பிடிக்காதவர்கள்:
சில பாடல்களில் மனோ, மற்றபடி பெரிதாக யாரும்இல்லை
7) ஓவியர்களில்
பிடித்தவர்கள்:
மாருதி, மதன், மணியம் செல்வன்
பிடிக்காதவர்: நான் சமீபத்தில் வாங்கிய பொன்னியின் செல்வன் பதிப்புக்கு ஓவியம் வரைந்தவர். வரைந்தவர் பெயர் போடவில்லை. குந்தவையைப் பார்த்து டென்சனாயிட்டேன். ஸ்ஸ்ஸ்ஸ். வந்தியத்தேவன் ஒரு படி மேலே போய் காமெடி பீஸ் மாதிரி இருந்தார். இந்த மாதிரி படம் போடறதுக்கு படம் இல்லாமலேயே பொசெ அருமையா இருக்கும்.
அப்பாடா.. ஒரு வழியா முடிச்சிட்டேனா.. அடுத்து இன்னும் மூணு பேர கோத்துவிடனுமாம்.. இதோ
ரெஜோ
சாணக்கியன்
Smiley
வாங்க மக்கா. .வந்து ஒரு அட்டண்டன்ஸ் போடுங்க.. :)
Wednesday, September 16, 2009
அலைக்குறிப்புகள்-3
அலைக்குறிப்புகள்-2
நாங்கள் வந்தடைந்த டச் பேலஸ், உண்மையில் கொஞ்சம் பெரிய சைஸ் பங்களா மாதிரிதான் இருந்தது. இரண்டடுக்குகள், விஸ்தாரமான அறைகள், நீண்டிருக்கும் திண்ணையென நீண்டு படுத்திருந்தது அந்த மாளிகை.
16ம் நூற்றாண்டில் இதனைக்கட்டியர்வகள் போர்ச்சுக்கீசியர்களே. அதற்கடுத்த நூற்றாண்டில், தொடர்ந்து வந்த காலனியாதிக்கப் போரில், டச்சுக்காரர்கள் கொச்சினைக் கைப்பற்ற இந்த அரண்மனையும் அவர்கள் வசமானது. அவர்களும் அவர்கள் பங்குக்கு அங்கங்கே சில மாறுதல்கள், அலங்காரங்கள் செய்து, போரினால் கோபமுற்றிருந்த திருவாங்கூர் மகாராஜாவுக்கு இந்த மாளிகையை பரிசாக அளித்துவிட்டனர்.
அன்றிலிருந்து இது ஒரு ராஜ மாளிகை.
ராஜாக்களெல்லாம் ராஜ்ஜியமிழந்து போக, இப்போது இந்த மாளிகை ஒரு அருங்காட்சியகமாக செயல்பட்டுவருகிறது.
ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேல் இந்த காட்சியகத்தினுள் அலைந்தோம். ராஜாக்கள் பயன்படுத்திய கர்சீப்பிலிருந்து பல்லக்கு வரைக்கும் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். குடும்ப ஓவியங்கள், கேரளாவின் அரச பரம்பரையை விளக்கும் ஓவியங்கள் என்று விதவிதமாய் காட்சிக்கு கிடைக்கின்றது அரச வாழ்க்கை.
மேற்கத்திய கட்டிடக்கலைக்கும் இந்திய கட்டிக்கலைக்குமான கலப்பை இங்கு தெளிவாக உணரமுடியும். கட்டிடத்தின் வெளிப்புற அமைப்பும் நுழைவாயிலும் பாரம்பரிய கேரள வடிவில் அமைந்திருந்தாலும், உள்நுழையும் போது உயர்ந்த நிலைப்படிகளும் கதவுகளும் மேல் நோக்கிய ஆர்க் வடிவில் மேற்கத்திய பாணியை நினைவுபடுத்துகின்றன.
மேலும் படிக்க...
முக்கியமாக எனக்குப் பிடித்த ஒரு பகுதி, முதல்தளத்தில் ஒரு அறை முழுக்க ராமாயணக் காட்சிகளை ஒரு வகை கொலாஜ் சித்திரங்களாக சுவர் முழுவதும் தீட்டியுள்ளனர். கொஞ்சம் நிறம் மங்கியிருந்தாலும், இத்தனை காலத்திற்குப் பிறகும், அதன் கம்பீரம் குறையாமல், ராமனும் லக்குவணனும் இன்ன பிறரும் காட்சி தருகின்றனர். அப்படி ஒரு உணர்ச்சி மயமான ஓவியங்கள். நிச்சயம் ஒரு நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம். பலமணிநேர அவதானிப்பிற்குப் பிறகும், நாம் தவறவிட ஒரு தகவல் இந்த ஓவியங்களில் ஒளிந்திருக்கும். அப்படி பார்த்து பார்த்து தீட்டியிருக்கின்றனர்.
அதன் பிறகான எங்கள் பயணம், சான்டா க்ருஸ் தேவாலயம். இந்நேரம் நீங்களே ஊகித்திருக்கலாம், இந்த தேவாலயம் எவ்வளவு பழமையானதென்று. 1505 ல் கட்டப்பட்டது. போர்த்துக்கீசிய மொழியில் சாண்டா க்ருஸ் என்றால் holy cross என்று பொருள் சொல்கின்றனர். அத்தனை நுண்வேலைப்பாடுகளுடன், தொலைவிலிருந்து பார்க்கும் போதே புருவங்களை உயரச்செய்கிறது. கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி செல்கையில் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கிறது இந்த ஆலயம். கோதிக் வகை கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகச் சொல்லப்படுகிறது இந்த தேவாலயம்.
கொச்சின் போர்த்துக்கீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்களின் வசமான போது, இந்த தீவிலிருந்த பெரும்பான்மையான கத்தோலிக்க கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. அவர்களும் கூட இந்த தேவாலயத்தைப் பார்த்து வியந்திருக்கவேண்டும். அவர்களிடமிருந்து தப்பிப்பிழைத்தாலும் பின்னாளில் ஆங்கிலேயர்களின் வசமான போது, கொஞ்சம் சேதாரம் சுமந்து அதன்பின் சரிசெய்யப்பட்டு இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது இந்த தேவாலயத்தின் மணியோசை. கிட்டத்தட்ட நடை சாத்தும் நேரத்தில் வந்ததால், இங்கு அதிக நேரம் செலவழிக்கமுடியவில்லை. கொஞ்சம் மனவருத்தத்துடன் எங்களின் அடுத்த இலக்கை நோக்கினோம்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும். இந்த தீவினுள் சுற்றியலைவதற்கு யாரிடமும் உதவி கேட்கத் தேவையில்லை. திருப்பத்திற்கு திருப்பம், ஒவ்வொரு தெருவிலும் தெள்ளத்தெளிவாய் திசைகாட்டுகின்றன வழிகாட்டிப் பலகைகள். பார்க்கவே சந்தோஷமாய் இருந்தது. பார்க்கவேண்டிய ஒரு இடத்தை தவறவிட கொஞ்சமும் வாய்பளிக்காமல் நம்மை இட்டுச்செல்கின்றன. கொச்சின் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தாராளமாய் ஒரு ஷொட்டு. :)
சரி.. வாங்க.. அடுத்தது, சான்டா க்ருஸ் தேவாலயத்திலிருந்து நடை பயிலும் தொலைவில் உள்ளது, St.Francis தேவாலயம் (அ) வாஸ்கோடகாமா சர்ச். இது நானே எதிர்பார்க்காத பம்பர் பிரைஸ்.
இந்தியாவின் மிகப்பழமையான தேவாலயம் இது.
சாண்டில்யனின் 'கடல் புறா'வில் எனக்குப் பிடித்த ஒப்புமை ஒன்று.
கடல் ஒரு காந்தம். ஒரு முறை கடலோடியாக இருந்தவன் அந்த ஈர்ப்பின் புலத்திலிருந்து வெளியேறுவது கடினம். அவனுக்கு நிலம் ஒரு நிலையற்ற இடமாக மயக்கம் கொள்ளச்செய்யும். கடலோ அவனை மீண்டும் மீண்டும் தன்னிடம் இழுத்து கிறக்கம் கொடுக்கும் - என அமீரின் கூற்றாக வரும்.
எனக்கும் எப்போதுமே கடல் பயணத்தைப் பற்றிய ஒரு கற்பனை உண்டு. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வாக. நாற்புறமும் நீர் சூழ்ந்த
திசைகள் தொலைத்த ஒரு பயணமாக. ஒரு சாகசப் பயணமாக.. சிறுவயதில் சிந்துபாத்திலிருந்து கொலம்பஸின் வாழ்க்கை வரலாறு வரை நான் படித்த அனைத்துமே இந்த கற்பனையை தூண்டிவிட்டே சென்றிருக்கின்றன.. இப்போதைய நவீன வழிகாட்டி கருவிகள், வானிலை முன்னெச்சரிக்கைகள் எதுவுமே இல்லாமல் மரக்கலங்களில் கடற்பயணம் எப்படி இருந்திருக்கும்..
கடலென்றால் இப்படி இருக்கும் அதில் பயணமென்றால் அப்படி இருக்கும் என்பதெல்லாம் ச்சும்மா.. கடல் என்பது கடல்.. அவ்வளவுதான். அந்த உணர்வை கடல் மட்டுமே தரமுடியும். மனிதனை அற்பனாக சுருங்கச்செய்யும் அந்த பிரம்மாண்டம் கடலால் மட்டுமே முடியும்.
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் புன்னைநல்லூரில் உள்ளது ராணிசமுத்திரம் ஏரி. இன்றைக்கு ஆக்கிரமிப்புகளில் அகப்பட்டு சிறுத்திருந்தாலும், முன்னாளில் இன்னும் விஸ்தாரமாக இருந்திருக்க வேண்டும். அதற்கு பெயர்க்காரணமாக இப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் வாய்வழிக்கதையொன்று.
முன்னொரு காலத்தில் தஞ்சையை ஆண்ட ஒரு ராஜா ஒருவர் போரிடச்செல்கையில்தான் முதன் முதலில் கடலைப் பார்த்தாராம். போர்முடிந்து திரும்பி வந்தவர் தன் ராணியிடம் தான் பார்த்த கடலைப்பற்றி ஆச்சரியம் மேலிட விவரித்திருக்கிறார். அவர் என்ன சொல்லியும் ராணியால் அவர் சொல்லும் அந்த 'கடலை' கற்பனை செய்யமுடியவில்லை. அவர்தான் ராஜாவாச்சே.. உடனே ஆட்களை அழைத்து மிக பிரம்மாண்டமாக இந்த ஏரியை வெட்டி நீர் நிரப்பினாராம். அப்போதும் அவருக்கு திருப்தியில்லை. மீண்டும் மீண்டும் அதனை விஸ்தரித்திருக்கிறார்.. கடைசி வரை அவரால் கடலை கொண்டுவரமுடியவில்லை.. கடைசியல் ஏமாற்றத்துடன்
'கடல் னா கிட்டத்தட்ட இந்த மாதிரி இருக்கும்' என்று ராணியிடம் சொன்னதாக முடிகிறது இந்த கதை. ராணிக்கு சமுத்திரத்தைக் காட்ட வெட்டியதால் இதுவும் ராணிசமுத்திரம் ஆனது.
அதுதான் கடல்.
ஆபத்துகள் நிறைந்த ஒரு சாகசப் பயணம் அது. ஒவ்வொரு பயணமும் ஒரு கொண்டாடத்தகுந்த வெற்றி. அந்த வெற்றி போதைதான் அவனை மீண்டும் மீண்டும் ஈர்த்திருக்க வேண்டும்.
அப்படித்தான் சுமார் 510 ஆண்டுகளுக்கு முன்பு, கொலம்பஸ் மேற்கு நோக்கி பயணத்தை தொடங்கிய காலத்தில் கிழக்கு நோக்கி தன் பயணத்தைத் தொடங்கி சரியாக 317 நாட்கள் கழித்து இந்தியாவிற்கு வெற்றியுடன் வந்தடைந்தார் வாஸ்கோடகாமா. ஒரு முறை லிஸ்பனிலிருந்து கோழிக்கோடு வரை வந்தசேர்தலே கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனையாக கருதப்பட்ட காலத்தில்,
முதல் முறை கடலோடியாக வந்தவர், வெற்றிச்செய்தியுடன் திரும்பிச்சென்று அடுத்த முறை போர்க்கலங்களுடன் வந்திறங்கினார். அப்போதும் கடல் அவரை விடவில்லை. இரண்டாவது முறையும் திரும்பிச்சென்று தன் மூன்றாவது பயணமாக 1519 ல் திரும்பவும் இந்தியா வந்தவர், ஒரு வருடம் இந்தியாவில் போர்த்துக்கீசிய வைசிராயாக இருந்துவிட்டு 1524ல் இங்கேயே காலமானார்.
அவரின் கல்லறை இந்த தேவாலயத்தில்தான் அமைந்துள்ளது.
கடலென்னும் காந்தம் கடலோடியை எப்போதும் விடுவதில்லைதான். பாதை கண்டுபிடிப்பதுதான் வாஸ்கோடகாமா வின் ஒரே குறிக்கோளாக இருந்திருந்தால் அவர் முதல் தடவையோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். அல்லது பதவியும் செல்வமும் ராஜ்ஜிய விஸ்தரிப்பும் குறிக்கோளெனில்
இரண்டாம் முறை போர்க்கலங்களோடு வந்து வெற்றிவாகை சூடிய போதே பயணத்தை முடித்துக்கொண்டிருக்கலாம். மூன்றாம் முறையும் அவரை ஈர்தது எது? சில நேரங்களில் சென்று சேரும் இடம் ஒரு சாக்கு போக்கு மட்டுமே. அந்த இடத்தைவிட அதை நோக்கிய பயணமே போதை தருவதாக அமைவதுண்டு. அந்த போதைதான் அவரை ஆட்டுவித்திருக்கிறது.
சரித்திரத்தின் பாதைகளில் காற்றின் திசைகளை எதிர்த்து கடலில் தன் காலனியை நிறுவிய அந்த மாலுமி முதன் முதலில் நிரந்தரமாக நிலத்தில் உறங்கிய இடம் இது என்ற நினைவே சிலிர்க்க வைத்தது. அப்போதும் கூட கடல் அவரை விட்டுவிடவில்லை. புதைக்கப்பட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் அவரது சவப்பெட்டியின் மிச்சங்கள் இங்கிருந்து போர்த்துக்கலுக்கு கடல் மார்க்கமாக கொண்டுசெல்லப்பட்டு லிஸ்பனில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டன.
ஆனால், அவர் முதலில் புதைக்கபட்ட கல்லறை இன்றும் இங்கு காணக்கிடைக்கிறது.
அவர் நினைவாக இந்த தேவாலயமும் வாஸ்கோடகாமா தேவாலயம் ஆனது. இதற்கடுத்த ஒரு சதுக்கமும் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
(மீண்டும் அலையலாம்)
Sunday, September 06, 2009
அலைக்குறிப்புகள்-2
எங்கள் சொந்த கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனுக்கும் நாங்கள் வந்திறங்கிய போர்ட் கொச்சியின் போட் ஜெட்டிக்கும் பெரிய அளவு வித்தியாசங்கள் ஏதுமில்லை. ஆரவாரமும் பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக மற்றொரு ஞாயிற்றுக் கிழமையை வரவேற்றுக்கொண்டிருந்தது அந்த நகரம்.
ஊருக்குள் நுழைந்ததும் கண்ணில் படும் முதல் விஷயம், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தொடர்பான சுவரொட்டிகள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. யூதர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி அது என்று பின்புதான் தெரிந்து கொண்டோம்.
பெரிதாக திட்டம் எதுவும் இல்லை எங்களிடம். போட் ஜெட்டியிலிருந்து வெளியில் வந்தவுடன், இடது புறம் 'டச் பேலஸ்' என்று போர்ட் போட்டு 1.5 கிலோமீட்டர்கள் என்று போட்டிருந்தது. அதுவே எங்களின் முதல் திட்டமானது. வெயிலின் உக்கிரம் தொடங்காத காலை வேளை என்பதால் நடந்தே செல்லலாம் என்று தொடங்கினோம். மிக அமைதியான கடைவீதி.. மிக மிக அமைதியான தெருக்கள் என்று வழி நெடுகிலும் கிராமத்துக்கான உணர்வைத் தந்து செல்கிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் வாழ்ந்த சுவடுகளும் அங்கங்கே காணக்கிடைக்கின்றன. வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதாய் அறிவித்த பெயர்ப்பலகை ஒன்று ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு காலத்தின் சுவடுகளைச்சுமந்த மிச்சம் இன்னமும் எஞ்சிய படி கண்ணில் பட்டது. கடையின் கதவுகள் திறந்திருக்காத நிலையில் இன்னமும் அந்த கடை அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதா என்று ஆச்சரியப்படுத்தியது.
மேலும் படிக்க...
முதலில் சென்ற டச் பேலஸ் பார்வையாளர் நேரம் 10 மணிக்குத்தான் தொடங்குவதாய் அறிந்து, அதே திசையில் இன்னும் சில நூறு மீட்டர்களில் சைனகோஜ் என்றழைக்கப்படும் யூத ஆலயத்திற்குச் சென்றோம். செல்லும் வழியில் அனேகமாய் யூத முகங்கள் எதிர்ப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் வந்து குடியேறியவர்கள் அவர்கள். கொஞ்சம் பின்னோக்கி பார்க்கையில், கி.மு 700 வாக்கில் வாணிபம் செய்வதற்காக முதன் முதலில் யூதர்கள் இங்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின் கிங் சாலமனின் காலத்தில் கொஞ்சம் இஸ்ரேல் இரண்டாக பிரிந்த போது தஞ்சமடைந்தவர்கள் கொஞ்சமென, வளர்ந்து இப்பகுதி இன்று jew town என்று அழைக்கப்படுகிறது.
காமன்வெல்த் நாடுகளில் இருப்பதிலேயே மிகப்பழமையான சைனகோஜ் இது. இடைக்காலத்தில் கொச்சின் ஒரு சில ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளானபோதும் இவையனைத்திற்கும் தப்பி இன்றும் உயிர்ப்புடன் உள்ள இந்த ஆலயம் 1568ல் நிர்மாணிக்கப்பட்டது. இங்கு ஹீப்ரு மொழியில் அமைந்த கல்வெட்டுகள் சிலவும் காணக்கிடைக்கின்றன. அவர்களின் வழிபாட்டு முறைகளோ, சடங்குகளோ எதுவும் எனக்குத் தெரியாதெனினும், உள்நுழைந்தவுடனேயே வந்து கவிழ்ந்து கொள்ளும் அடர்ந்த மெளனம், ஒரு ஆலயத்தினுள் நாம் இருப்பதை சொல்லிச்செல்கிறது. பல நூறு வருடங்களாக கடவுளின் சாலையாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த இடத்தினுள் சில நிமிடங்கள் மெளனமாய் நின்ற பின் திரும்பினோம். இந்த ஆலயத்தின் முன்புறம் இந்தியாவில் யூதர்களின் பாரம்பரியத்தை விளக்கும் காட்சி சாலை ஒன்றும் உள்ளது.
அங்கிருந்து வரும் வழியெங்கும் சிறிதும் பெரிதுமாய் ஆண்டிக் எனப்படும் பழம்பொருள் விற்பனைக் கடைகள் ஏராளமாய் இருக்கின்றன. முழுக்க முழுக்க இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளைக் குறிவைத்து இயங்குபவை இந்தக் கடைகள். ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள், பழங்கால சிலைகள், ஓலைச்சுவடிகள், பட்டு, வாசனைப்பொருட்கள், புத்தகங்கள், மூலிகைகள் என்று ஒன்றுக்கொன்று சம்ந்தமில்லாமல் பல பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. (தனியாகவும் கிடைக்கின்றன) . என்னவாக இருந்த போதிலும் இவை அனைத்திற்கும் இடையில் நூலிழை போன்றதொரு தொடர்பு ஓடுகிறது. அது இந்தியா. வரலாற்றுப் புத்தகத்தில் இந்தியா என்ற நாட்டில் எதுஎதெல்லாம் சிறப்பானவை என்று உள்ளதோ, அது நூற்றாண்டுகளுக்கு முன்னராக இருக்கலாம் கவலையில்லை, அவையனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இந்தியா என்ற ஒரு பிம்பம் மேற்கில் எப்படி பிரதிபலிக்கப்படுகிறது என்று இந்தக் கடைகளில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு சில பதிற்றாண்டுகளுக்கு முன் வெளிவந்த சில ஹாலிவுட் படங்களில், இந்தியா என்றாலே யானைகளும் பாம்பாட்டிகளும் மந்திரவாதிகளும் நிறைந்த ஒரு நிலம் என்பது மாதிரியான சித்தரிப்பு இருக்கும். அதற்கும் இதற்கும் பெரிதாக எதுவும் வித்தியாசம் இல்லை எனலாம். புத்தக்கடைக்குச் சென்றால், சல்மான் ருஷ்டி, கிரண் தேசாய், அருந்ததிராய் என்று மேற்கில் பிரபலமான எழுத்துகள் மட்டும் கிடைக்கின்றன. குறிப்பாக இன்னொரு விஷயமும் எல்லா கடைகளிலும் தவறாமல் கிடைக்கிறது. அது காமசூத்ரா. கொக்கோகரிலிருந்து வாத்ஸ்யாயனர் வரை பிறந்த தேசம் என்பதாலோ என்னவோ, வரும் வெளிநாட்டுப் பயணிகளில் இரண்டில் ஒருவர் தவறாமல் கேட்கும் விஷயம் இதுவாம். coffee table books என்றழைக்கப்படும் சைஸில் சில ஆயிரங்கள் விலையிட்டு அமோகமாய் விற்பனையாகின்றன இந்த புத்தகங்கள்.
பட்டு ஆடைகள் நுண் வேலைப்பாடமைந்த தரை விரிப்புகளும் ஏராளமாய்க் கிடைக்கின்றன. இங்கு கடை வைத்திருப்போரில் பெரும்பாலானோர் காஷ்மீரிலிருந்து வந்ததாகச் சொல்கின்றனர். இந்த தரைவரிப்புகள் முதலான கைவினைப்பொருட்களும் அங்கிருந்துதான் வருகின்றனவாம். ஆச்சரியமாய் இருந்தது. இந்தியாவின் வடமுனையில் தயாராகும் ஒரு பொருளுக்கு தென்முனையில் இப்படி ஒரு சந்தை அமைந்திருக்கிறது. அதுவும் வெளிநாட்டு பயணிகளால் விரும்பி வாங்கிச்செல்லப்படுகிறது.
இப்படியே ஒவ்வொரு கடையாக கடந்து டச் பேலஸ் க்கு வந்தடைந்தோம்.
(மீண்டும் அலையலாம்)
Monday, July 27, 2009
இன்னுமொரு பாதை
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
இன்றிலிருந்து இனிதே துவங்குகிறேன், இன்னுமொரு பாதையில் என் பயணத்தை.
நான் இதுவரை சந்தாதாரராக இருந்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்த புத்தகம் வலைப்பூவில் இனி நானும் பங்குதாரராகிறேன். நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களின் ஒரு அறிமுகத்தை இந்த பக்கத்தில் இனி எழுதலாம் என்றிருக்கிறேன்.
நினைக்கும் போதே ஒரு பயம் கலந்த சந்தோஷம் உண்டாகிறது. என்னை இன்னும் பல புதிய மனிதர்களிடம் இட்டுச்செல்லும் இந்த புதிய பாதை. திடுதிப்பென்று களத்தில் இறக்கிவிடப்பட்ட சிறுவனின் படபடப்புடன், தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வும் சேர்ந்து, நான் கொள்ள வேண்டிய கவனத்தை இன்னும் அதிகரிக்கன்றன.
ஊக்கமும் உற்சாகமும் அளித்து, வழித்துணையென இப்பயணத்தில் என்னை இட்டுச்செல்லும் சேரலுக்கும் ஞானசேகருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இவர்கள் இருவருமாக இணைந்து 'புத்தகம்' வலைப்பூவிற்கென்று ஒரு அளவீட்டை முன்னமே ஏற்படுத்திவிட்டனர். இனியெழுதப்போகும் எனக்கிருக்கும் மிகப்பெரிய சவால், அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் அளவீடுகளைத் தொடர்வதே. என்னால் முடிந்த வரை இப்பணியை சிறப்பாகச் செய்ய விழைகிறேன்.
என்னுடைய முதல் பதிவு 'மெளனியின் கதைகள்' இங்கே.
இந்த பக்கத்திலும் உங்களின் நேர்மையான விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்..
நட்புடன்,
பாலா
Thursday, July 23, 2009
கன சதுரம்
முழு மூச்சுடன் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதி வருகிறேன்.
இந்த மூன்றாண்டு கால எழுத்தில் நான் சாதித்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் உண்டென்றால் அது உறவுகள்தான். எத்தனையோ முகம் தெரியாத நண்பர்கள். எங்களுக்கிடையில் இருப்பது என்ன. ஏதோ ஒரு இழை.. ஒரே ஒரு ஒத்த உணர்ச்சி போதும். முரண்பட்டாலும் கூட போதும். எங்கிருந்தோ வந்து, வாழ்த்தி, வசைபாடி, திருத்தம் சொல்லி என்னை மென்மேலும் செதுக்கும் அந்த உறவுகள்தான் இந்த எழுத்தால் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.
அப்படித்தான் போன வாரம் திடீர்னு ஒரு நாள் அ.மு.செய்யது interesting blog னு ஒரு விருது குடுத்து நம்மளையும் புல்(லா) அரிக்க வைச்சுட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் படிக்க...
இந்த விளையாட்டுக்கு விதிமுறை ரொம்ப சிம்பிள். எனக்குப் பிடித்த இன்னும் ஆறு சுவாரஸ்ய பதிவர்களுக்கு இந்த விருதை கடத்தனும். :) அவ்ளோதான். கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.
இருந்தாலும், என் கடன் விருது கொடுத்து எஸ்கேப் ஆவதே.. எனக்குப் பிடித்த சுவாரஸ்யமான ஆறு பதிவர்கள் கீழே. இன்னும் நிறைய பேர் இருக்காங்க. எண்ணிக்கை கட்டுப்பாட்டினால் ஆறுடன் முடித்துக்கொள்கிறேன்.
சுற்றத்திலும் நட்பிலும் நிறைய சுவாரஸ்யமான பதிவர்கள் இருந்தாலும்,
இம்முறை, நான் இது வரை கண்டிராத அந்த முகம் தெரியா நண்பர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம்.
இந்த மாய உலகம் தரும் சுதந்திரம் மிகப்பெரியது. எழுதுபவனின் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல், எழுத்துக்களை மட்டும் கொண்டுசேர்க்கும் வல்லமை இதற்குண்டு. அப்படி நான் ரசிக்கும் ஆறு பக்கங்கள் இவை. எல்லாம் ஒரே தளத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு கனசதுரத்தைப் போல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இருக்கலாம். ஆனால் நான் ரசிக்கும் பக்கங்கள் இவை.. உங்களின் பார்வைக்கு..
மனம் போன போக்கில்:
இவரைப் பற்றி நான் அறிமுகம் கொடுத்தால் சரியாக இருக்காது. ஆனால், இவரின் வலைப்பதிவைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். கிட்டத்தட்ட இவரது நாட்குறிப்புகள்தான் இந்த வலைப்பூ. அபுனைவுகளை இத்தனை சுவாரஸ்யமாய் எழுதமுடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் எழுத்து இவருடையது. என்னை நோய்விட்டு வாழச்செய்வதில் சொக்கருக்கும் ஒரு பங்குண்டு. :)
ஒரு வகை சுய எள்ளலுடன் இவர் எழுதும் கட்டுரைகள் எப்போதும் என் ஃபேவரிட்.
கென்:
ஹா..என்ன சொல்வது.. இவரின் புனைவுகளை புனைவுகள் என்று நம்புவது அத்தனை கஷ்டம். அப்படி ஒரு உயிர்புடன் எழுதும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். இவரின் வலைப்பக்கத்தி்ல் நான் படித்த அந்த முதல் பதிவு இன்னும் நினைவில் நிற்கிறது.
எனக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. இதனைப் படித்துவிட்டு இவருக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்திருப்பதாக ஏமாந்து போனோர் ஏராளம். கொஞ்சம் தீவிரமான பதிவர். இவரை உணர்ந்து கொள்ள இவரின் நிறைய பதிவுகளைப் படிக்க வேண்டும். படிச்சுப் பாருங்களேன்.
PKP:
பல பூச்சி பூச்சியான விஷயங்களை அழகு தமிழில் விவரிக்கும் வாத்தியார் இவர். டெக்னாலஜி சம்பந்தமான அனைத்தும், கூடவே அவ்வப்போது சில தத்துவங்களும் நிச்சயம் கிடைக்கும் இங்கு. உங்கள் சந்தேகங்களுக்கும் விடை சொல்லும் ஆல் இன் ஆல் அழகுராஜா இவர். ஏராளமான பயனுள்ள தொடுப்புகள் இவர் பக்கத்தில் கிடைக்கும். இது ஒரு மினியேச்சர் தகவல் களஞ்சியம். up-to-date ஆ இருக்க இந்த பக்கத்தை தொடர்ந்து வாசிக்கலாம்.
உலகிர்க்கெல்லாம் ஒரே துப்பட்டி-ஆகாயம்.எனக்கு மட்டும் கவிதை
பூபேஷ். ரொம்ப சாதாராணமான வார்த்தைகள் கொண்டு அசாதாரணமான கவிதைகள் புனையும் வித்தகர் இவர். எங்கெங்கோ அலையாமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாக சொல்லும் கவிதைகள் இவரது. ரொம்ப நாட்களாக எழுதாமல் இருந்து இப்போதுதான் திரும்பவும் எழுதத் தொடங்கியிருக்கிறார். தொடருவார் என்று நம்புவோம்.
நந்து f/o நிலா:
இவரிடம் என்னை முதலில் ஈர்த்ததே அந்த பெயர்தான். நந்து f/o நிலா. தன் குழந்தை மீது அவர் கொண்ட காதல்தான் அவர் பக்கத்துக்கு போகும் முன்னமே எனக்குப் பிடித்தது. தேர்ந்த புகைப்படக் கலைஞர். நிச்சயம் ஒரு நடை போய் இவரின் படைப்புகளைப் பாருங்கள்.
நந்து சார், மறக்காம நிலாவுக்கு சுத்திப்போடுங்க.. :)
இவரும் ரொம்ப நாட்களாக எழுதாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் திரும்புவார் என்று நம்புவோம்.
தமிழ் காமிக்ஸ் உலகம்:
வாங்க.. வாங்க.. இது நம்ம ஏரியா. இரும்புக்கை மாயாவியில் தொடங்கி கன்னித்தீவு வரைக்கும் எல்லா காமிக்ஸ் பற்றியும் கொசுவர்த்திப்பதிவுகள் நியாயமாகவும் தரமாகவும் இங்கு கிடைக்கும். என்னைக்காவது ரொம்ப டென்சனா இருந்தீங்கன்னா, இங்க வாங்க. "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" ன்னு சந்தோசமா பாடிக்கிட்டே திரும்ப போகலாம்.
---
Wednesday, July 22, 2009
அலைக்குறிப்புகள் - I
உள் நுழைவதற்கு முன் ஒரு கொசுறு தகவல். எர்ணாகுளமும் கொச்சியும் இருவெவ்வேறு ஊர்களல்ல. இவை இரண்டுமே ஒருங்கிணைந்த கொச்சி மாநகராட்சியின் பகுதிகள். 1967ல் தனித்தனியாக இருந்த எர்ணாகுளம் கொச்சி மற்றும் மட்டன்சேரி நகராட்சிகள் இணைந்து கொச்சின் மாநகராட்சி உருவானது. எர்ணாகுளம் நவநாகரீகத்தில் திளைத்திருக்கும் நவீன பட்டணம். கொச்சி (அ) ஃபோர்ட் கொச்சி இன்னும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் தான் சிறப்புடன் வாழ்ந்த கால்த்தை அசைபோட்டுக்கொண்டிருக்கும் பழமையின் பட்டணம். இப்படி இரு முரண்பட்ட நகரங்களை ஒரே இடத்தி்ல் காண்பதே சிறப்புதானே..
மேலும் படிக்க...
எனக்கு போர்ட் கொச்சி செல்வதற்குத்தான் ஆர்வம் அதிகம். இருந்தாலும் எர்ணாகுளத்தையும் ஒரு வலம் வரலாமே என்றொரு எண்ணம்.
நாங்கள் ஒரு குழுவாகச் சென்றிருந்த போதும் முதல் நாள் பயணக்களைப்பிலிருந்தே யாரும் மீண்டு வராத நிலையில் நான் மட்டும் தனியே என் பயணத்தைத் தொடங்கினேன். காலை 6 மணிக்கு முதலில் சென்ற இடம், எர்ணாகுளத்தில் மரைன் டிரைவ் என்றழைக்கப்படும் கடலொட்டிய நடைபாதை. பொதுவாகவே மேற்குக் கடற்கரையில் சூரிய உதயத்தை விட அஸ்தமனமே சிறப்பு என்றாலும், மாலை 5 மணிக்கு ரயில் என்பதால் கண்டிப்பாக அஸ்தனமனம் பார்க்க முடியாது. உதயமாவது பார்ககலாமே என்றுதான் கிளம்பினேன்.
கொஞ்சம் கொஞ்சமாக இருளின் பிடியிலிருந்து மீண்டு வரும் கடலின் பிரம்மாண்டம் கொள்ளை அழகு. சூரியனைக் காணமுடியாவிட்டாலும் விடியலின் ஒவ்வொரு வினாடியிலும் அதன் இருப்பை உணரமுடியும்.
மரைன் டிரைவ் 2லிருந்து 3 கிலோமீட்டர் நீளம் இருக்கலாம். இது பருவழைக்காலம்.. மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியில் போட்ட மாதிரி ஈரம் அப்பியிருந்தது. லேசான தூறல் இருந்த போதும் குடைபிடித்தபடியே அந்த காலைவேளையில் பல பெரிசுகள் சுவாரஸ்யமாக கதைத்தபடியே நடைபயின்றுகொண்டிருந்தனர். மருந்துக்குக் கூட 40 வயதுக்குக் கீழ் யாரையும் காணோம்.
கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை. ஓரத்தில் குரோட்டன்ஸ் செடிகள். அங்கங்கே இளைப்பார பெஞ்சுகள் என்று நடைபாதையை மிகச்சிறப்பாக பராமரித்து வருகின்றனர். ஆனால் கடல்தான் கொஞ்சம் ஏமாற்றம் தருகிறது.
இந்த இடத்தில் கடல் கிட்டத்தட்ட கழிமுகம் மாதிரி. அரபிக்கடல் கொஞ்சம் கன்னாபின்னாவென்று நிலத்தினுள் நீண்டிருக்கும் இடம் இது. அலைகள் இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட சிறைக்கைதியைப்போல் தன் சீற்றம் தணிந்து கவிழ்ந்த முகத்துடன் காட்சி தருகிறது கடல். இந்த பிம்பத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன அங்கங்கே மிதந்து கொண்டிருக்கும் ஆகாயத்தாமரைகள். அதன் பரிமாணத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஒரு குளத்திலிருந்து வேறுபடுத்திச்சொல்லிவிடமுடியாது. ஆனாலும் அந்த மரைன் டிரைவிற்காகவே நிச்சயம் செல்லவேண்டிய இடம் இது.
அறைக்குத்திரும்பி காலை உணவுக்குப் பின் போர்ட் கொச்சிக்கான பயணம் தொடங்கியது. இம்முறை நண்பர் ஒருவரும் இணைந்து கொள்ள இருவரானது எங்கள் பயணம்.
எர்ணாகுளத்திலிருந்து கொச்சிக்கு செல்ல சாலை மார்கம் தலையைச் சுற்றி மூக்கைத்தொடுவது மாதிரி. ஆனால், பகல் முழுவதும்
20 நிமிட இடைவெளியில் போக்குவரத்துப் படகுகள் தாராளமாய்க் கிடைக்கின்றன. ம்ம்ம்.. டவுன் பஸ் மாதிரி இதனை கற்பனை பண்ணிக்கொள்ளலாம். 50 லிருந்து 80 பேர் வரை செல்லக்கூடிய படகுகள். சிலசமயங்களில் இருசக்கர வாகனங்களும் இதில் பயணிக்கின்றன. கொச்சியிலிருந்து தினந்தோறும் வேலை நிமித்தமாக எர்ணாகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்குச் சென்று வருவோருக்கு இவைதான் ஆபந்தாண்டவன். டிக்கெட்டும் ரயிலின் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டைவிட 50 பைசா குறைவுதான். எர்ணாகுளம் போட் ஜெட்டி (படகு நிறுத்தம்) யிலிருந்து எங்களின் பயணம் தொடங்கியது.
பத்து நிமிட பயணம்தான். இந்திய கடல்படை தளமொன்றும் கொச்சின் சரக்குப் பெட்டகமும் இடையில் வருகின்றன. இவற்றைக் கடந்து
ஃபோர்ட் கொச்சியில் கால் வைத்தபோதே உணர்ந்து கொண்டேன். இது நான் எதிர்பார்த்த மாதிரி இருக்கப் போவதில்லையென. மொத்த ஊரும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டிருந்தது.
(மீண்டும் அலையலாம்)
Tuesday, June 30, 2009
ஊஞ்சல்
"ரகு, எங்கயும் வெளயாடப் போகாத.. நாளைக்கு கிராமத்துக்குப் போகணும்.. பாட்டிக்கு உடம்பு !@#$%...."
அதன்பின் எதுவுமே எனக்கு கேட்கவில்லை. கிராமத்துக்குப் போகிறோம் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. நான் நினைவுகளுக்குள் அலையத்துவங்கியிருந்தேன்.
நாங்கள் இருந்தது ஒரு வளர்ந்து வரும் பேரூராட்சி என்றாலும் அப்பாவுக்கு வேலை மாற்றல் என அடிக்கடி அலைந்து கொண்டிருந்ததால், கால் அரை முக்கால் முழு ஆண்டு என்று எந்த விடுமுறை வந்தாலும் அது கிராமத்தில்தான் என்பது எழுதப்படாத நடைமுறையாக இருந்து வந்தது.
ஆனால் கொஞ்ச நாட்களாக கிராமம் பக்கமே போகாமல் இருந்த நேரம் அது. நான் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும் அப்பாவும் அம்மாவும் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பா மட்டும் அவ்வப்போது சென்று வருவார். நானும் உடன் வருவேனென்று அடம்பிடித்த போதெல்லாம் அது பெரியவர்கள் சமாச்சாரமென்று ஒதுக்கிவைக்கப்பட்டேன்.
கிராமத்தில் தாத்தா வீட்டுக்குச் செல்வதென்றாலேயே எனக்கு அலாதியான விருப்பம் உண்டு. வீடும், வீட்டை ஒட்டிய கொல்லையும், கொல்லை முடியும் இடத்திலேயே தொடங்கிவிடும் அந்த குளமும், தாத்தா எவ்வளவுதான் திட்டினாலும். குளத்தில் கும்மாளமடிக்க உடன் வரும் மாரிமுத்து மாமா பையன்களும் என என் சொர்கம் அது.
இது எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்த இடமொன்று அங்குண்டு என்றால் அது அந்த ஊஞ்சல்தான். தன் ஒவ்வொரு கிரீச்சிலும் அது ஏதோ என்னிடம் சொல்லவிழைவதாகவே எனக்கொரு எண்ணமுண்டு. அத்தனை அலைவிலும், அதே லயம் மாறாமல் ஆடும் அதன் ஆட்டம், காலத்தின் பாதை காட்டும் பெண்டுலம் மாதிரி, தான் கடந்து வந்த காலத்தின் எச்சம் சொல்லுவதாய் ஒரு பிரமை.
மேலும் படிக்க...
ஆரம்பத்தில் தாத்தாதான் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தபடி கதை சொல்லுவார். அவர் சொல்லும் கதைகளை விட ஊஞ்சலின் ஆட்டம்தான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. ஊஞ்சலில் இருக்கையில் அருகிலும் தொலைவிலுமாக மாறி மாறி பொருள்கள் கொள்ளும் மயக்கம் என்னை சுண்டி இழுத்துக்கொண்டே இருந்தது. தாத்தாவுக்கு ஊஞ்சலை வேகமாக ஆட்டினால் பிடிக்காது. எனக்கு நினைவு தெரிந்து தாத்தா வீட்டினுள் இருந்தால் அந்த ஊஞ்சலில்தான் இருப்பார். அதே கிரீச், மீண்டும் மீண்டும் அவரின் இருப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
தாத்தாவின் துணையில்லாமலேயே ஊஞ்சலில் ஏறிக்கொள்ளுமளவுக்கு வளர்ந்த பின், அந்த ஊஞ்சலே எனக்கு எல்லாமுமாய் ஆகிப்போனது. அமர்ந்தால், ஆடினால், உணவு உண்டால், தூங்கினால் என அனைத்தும் அந்த ஊஞ்சலில்தான்.
எனக்கு வேகம்தான் பிடித்திருந்தது. உந்தி உந்தி இன்னும் இன்னும் என உத்திரத்தை தொட்டு விடும் முனைப்புடனெல்லாம் சிலமுறை ஆடியிருக்கிறேன். சில சமயங்களில் தாத்தா திடீரென வந்து விட்டால் மட்டும் வேகத்தை குறைத்துக்கொள்வதுண்டு. தாத்தாவுக்குத் தெரிந்தாலும் என்னை மட்டும் திட்டார். அதுவே எனக்குப் பெருமையாய் இருந்தது.
அதற்கடுத்த முறைகளில் செல்லும் போதெல்லாம் வெளியிலெங்கும் செல்வதைவிட, வீட்டிலேயே இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
விளையாட்டுகள் கூட, வீட்டினுள்ளேயே ஊஞ்சலின் மீதமர்ந்து ஆடமுடியக்கூடிய விளையாட்டுகள்தான் எனக்குப் பிடித்தவையாகின.
அதன்பின் கொஞ்ச நாட்களிலேயே மேற்சொன்ன களேபரங்களில் மொத்தமும் விட்டுப்போயிருந்து, இப்போதுதான் மீண்டும் செல்கிறேன்.
அடுத்தநாள் காலையில் நானும் அம்மாவும் ரயிலில் செல்லும் போது ரயிலின் ஆட்டம் கூட ஊஞ்சலை நினைவுபடுத்தியது.
ஊரில் இறங்கியபோது டீக்கடையிலிருந்து ஆல் இந்தியா ரேடியோ எங்களை வரவேற்றது. சாலையில் குறுக்கே கோலம் போடும் பெண்மணிகள். சில சோம்பேறிக் கோழிகளின் கூவல்கள், என கடந்து சென்று கொண்டிருந்தோம். அம்மாவை அடையாளம் கண்டுகொண்டவர்களின்,
"என்னக்கா? செளக்கியமா..? அண்ணன் வரலியா?"
விசாரிப்புகளிலேயே நேரம் போய்க்கொண்டிருந்தது. எனக்குத்தான் எரிச்சலாய் வந்தது. அம்மாவின் கையைப் பிடித்தபடி அவசரத்துடன் நின்று கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக வீட்டை நெருங்கி, அந்த கடைசி திருப்பத்தில் திரும்பிய போதுதான் அந்த குழப்பம்.
"கடந்த முறை நான் வந்திருந்த போது சரியாகத்தானே இருந்தது இப்போது என்னாயிற்று..?"
கடந்த முறை ஒன்றாய் இருந்த வாசல் கதவு இப்போது இரண்டாய் இருந்தது. புதிதாய் வண்ணம் பூசி பளபளப்பாய் இருந்த வாசல்களில் எதுவென்று நான் குழம்பியிருக்கும் போதே, அம்மா ஒரு கதவினுள் என்னைக் கூட்டிப்போனார். உள்ளே நுழைந்தால் எனக்கான அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வாசல் மட்டுமல்ல வீடும் இரண்டாய்ப் பிரிந்திருந்தது.
ஊஞ்சல் மாட்டும் இரு வளையங்களுக்கு நடுவே புதிதாய் வெள்ளையடித்த ஒரு சுவர் புதிதாய் முளைத்திருந்தது. ஒரு வளையம் மட்டுமே அங்கிருந்து தெரிந்தது. மற்றொன்று அடுத்த பக்கத்தில் இருக்கவேண்டுமென்று எண்ணிக்கொண்டேன்.
அந்த பெரியவர்கள் சமாச்சாரம் இதுதான். தாத்தாவின் மரணத்திற்கு பிறகு மாமாக்களுக்குள் ஏற்பட்ட தகராறில், நிலம் மட்டுமல்லாமல் இந்த வீடும் இரண்டாய்ப் பிரிந்திருக்கிறது. கோர்ட்டுக்கெல்லாம் போகுமளவுக்கு பிரச்சனை வளர்ந்திருக்கிறது. கடைசியில் அப்பாதான் இடையில் புகுந்து சமாதானம் செய்திருக்கிறார். ஒரு வீட்டில் ஒரு மாமாவும் பாட்டியும் இன்னொரு வீட்டில் இன்னொரு மாமாவுமென ஏற்பாடு. . என்னால் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த ஊஞ்சலை விட வேறெதும் முக்கியமான விஷயம் இருக்கமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
பாட்டிதான்,
"நானும் அப்பவே கண்ணை மூடியிருக்கனும்"
என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.
கடைசியில் அம்மாதான் கூப்பிட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்று மாமாவைப் பார்த்து வரச்சொன்னார். மாமாவைப் பார்க்கிறோமோ இல்லையோ ஊஞ்சலின் அடுத்த வளையத்தைக் கண்டுவிடவேண்டுமென்ற ஆவலுடன் ஓடினேன். கண்டும் விட்டேன் அந்த அடுத்த வளையத்தை. அது மட்டுமல்ல, இத்தனை நாட்களாக காலத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஆடிவந்த ஆட்டம் அடங்கி அந்த ஊஞ்சல் பரண் மீது புழுதிபடிய மெளனமாய்க் கிடந்தது. சொல்ல வந்ததை கடைசிவரை சொல்லாமலேயே மரித்துப் போன சோகம் அதன் இருப்பில் கசிந்துகொண்டே இருந்தது.
மாலை அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பும் போதே முடிவு செய்து கொண்டேன், இனிமேல் திரும்பவும் வருவதில்லையென.
இரவு வெகுநேரம் வரையில் கிரீச் சத்தம் காதினுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
---
(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது)
Friday, June 12, 2009
சொல்லாத சொல்
உன்னைப்போலவே முறைக்கிறது
கைபேசிக்கு தலைசாய்த்து சாலையில்
எதிர்படுபவனின் சிகை
உன்னைப்போலிருக்கிறது
வாடியபூக்கள் சில வலுக்கட்டாயமாய்
உன் முகத்தை மனதில் இருத்திப் போகின்றன
கடன் அட்டைக்காக அழைப்பவன் கூட
உன் குரலை ஒத்திருக்கிறான்..
சாலையில், வீட்டில், திரையரங்கில்,
ஆற்றங்கரையில், பேருந்தில் என
நாம் ஒன்றாய் இருந்த அத்தனை
இடங்களிலும்
உன்னிடம் யாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இதற்கு பதில் கிளம்புகையிலாவது
சொல்லியிருக்கலாம்
”என்னை மன்னித்து விடடா” என்று..
Wednesday, June 10, 2009
வாசகன்
முன்தினத்திலும் தவறாமல்
எடுத்துவைக்கப்படும் புத்தகங்கள்
பிரிக்கப்படாமலேயே ஊர்வந்தடைகின்றன..
அதைவிட சுவாரஸ்யமான
மனிதர்கள் வாசிக்கக்கிடைப்பதால்..
Wednesday, May 13, 2009
திருடர்கள் ஜாக்கிரதை
"யாரது?"
"திருடன்"
"என்ன வேணும்?"
"நகை வேணும்"
"என்ன நகை?"
"கலர் நகை"
"என்ன கலர்?"
"ம்ம்ம்ம்… செவப்பு கலர்…"
ஏழாம் வகுப்பு ஆ பிரிவில், மற்ற அரை டிராயர்களெல்லாம் அந்த செவப்பு கலரைத்தேடி ஓடிக்கொண்டிருக்க, எனக்குள் மட்டும் சில வினோதமான கேள்விகள் எழுந்தன..
உண்மையிலேயே திருடன் இந்த குணசேகரன் மாதிரிதான் குள்ளமாக வட்டமுகத்துடன், இருப்பானா? இதே மாதிரிதான் ஒவ்வொரு வீடாகச்சென்று தன் வருகையை பராக் சொல்வதுதான் அவன் வேலையா? இல்லையென்றால் அவன் எப்படி இருப்பான்? எங்கள் வீட்டுக்கு மட்டும் அவன் வருவதே இல்லையே ஏன்?
மேலும் படிக்க...
திருடர்கள் மீதான ஈர்ப்பு எப்படி ஏற்பட்டதென்று தெளிவாகத் தெரியவில்லை.. ஆனால், அன்றைக்கு விளையாடும் போதுதான், அந்த முடிவு எனக்குத் தோன்றியது.. அது, எப்படியாவது ஒரு உண்மையான திருடனைப் பார்த்து விடுவதென்று.
ஆனால், திருடர்களைத் தேடி எங்கு போவது எப்படிப் பார்ப்பது எதுவுமே இல்லாமல் ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றியாகிவிட்டது. முதல் வேளையாக அ பிரிவு ஜெகன் தான் நினைவுக்கு வந்தான். அவனுக்கு இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் பரிச்சயம் அதிகம். என்ன கொஞ்சம் அதிகமாக ரீல் சுத்துவான். அவனே வானை அளந்த மாதிரியெல்லாம் கதை சொல்வான். மற்றபடிக்கு சராசரிக்கும் சற்று குறைவான ஒரு மாணவன்தான்.என்ன மாதிரி கூச்சசுபாவமெல்லம் கிடையாது அவனுக்கு.
சொன்னதற்கு கெக்கெ பிக்கேவென்று கொஞ்ச நேரத்திற்கு சிரித்துகொண்டிருந்தவன், திடீரென்று சிரிப்பதை நிறுத்தினான்.
”ஆமாண்டா.. நானும் திருடன பாத்ததே இல்ல.. வா, ரெண்டு பேருமா பாக்கலாம்..”
ஆனால் அவனுக்கும் எப்படியென்று தெரியவில்லை.
எப்படியாவது அவன் ஒரு வழியுடன் வருவானென்று தெரியும்.. ஆனால் என்னவென்று மட்டும் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருந்தேன்.
நினைத்தது மாதிரியே அடுத்தநாளே ஒரு திட்டத்துடன் வந்தான்..
மதியம் உணவு இடைவேளையில் அவனைப்பார்த்வுடனேயே,
”எப்படி டா?”
”கண்டு பிடிச்சுட்டோம்ல.. நம்மகிட்டேயேவா..”
என்றபடி ஒரு போலி பெருமிதத்துடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்..
“எப்படின்னு சொல்லுடா” ஆர்வம் தாங்கவில்லை எனக்கு..
”சரி சரி. அவசரப்படாத.. எதுக்கு இவ்ளோ அலையனும்.. பக்கத்தூருலதான் எங்க மாமா டீக்கடை வச்சுருக்கார்”
” அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்”
”டேய்.. அங்கதான் G7 ம் இருக்கு” என்றபடி கல்மிஷமாய்ச்சிரித்தான்..
வழக்கம்போல் நான் பேந்த பேந்த விழிக்க, எனக்குத் தெரியாத ஒன்றை தெரிந்துகொண்ட கர்வத்துடன் சொல்லத்தொடங்கினான்.. அதாகப்பட்டது, G7 என்பது எங்களின் பக்கத்தூர் போலீஸ் ஸ்டேஷன். அவன் சொன்ன அந்த மாமா கடை, G7 ன் பக்கத்து காம்பௌண்ட்.. அவர்தான் G7 ற்கு ரெகுலர் டீ சப்ளையர்.. எப்படியாவது, ஒரு நாள் டீ கிளாசுடன் உள்ளே நுழைந்தால் வேண்டியமட்டும் லாக்அப்புக்குள் விதவிதமான திருடர்களை கண்குளிர கண்டுவிடலாம் என்பது அவன் திட்டம்.
என்னைப்பொறுத்தவரை போலீஸ் ஸ்டேஷன் என்பதே ரொம்ப பெரிய சமாச்சாரம்.. அதில டீ கிளாசோட போய் மாட்டிகிட்டு என்னையும் ஜெயில்ல போட்டா என்ன ஆகறது.. அடுத்த நாள் ஸ்கூலுக்கு யார் போறது.வீட்ல எப்படி பதில் சொல்றது..
”ம்கூம்.. இதெல்லாம் ஆவுறதில்ல..”
”..?”
”பக்கத்தூருக்கு போகணும்னா பஸ் புடிக்கனும்.. பஸ்க்கு காசு வேணும்.. வீட்ல கேட்டா உதைவிழும்.. நம்மால முடியதுப்பா”
என்ற படி ஜகா வாங்கினேன்..
திருடனைப்பார்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை போல..
”வேணாம்டா விட்டுறலாம்டா..”
அவன் விடுவதாய் இல்லை.. அவனின் வழக்கமான ஜம்பம்..
”ம்ம்.. அஸ்க்கு புஸ்க்கு.. நான் ஒரு ஐடியா சொன்னேன்ல.. நீயும் ஒன்று சொல்லு.. சரிவரலன்னா விட்டுறலாம்”
என்று என்பக்கமே திருப்பிவிட்டான்.. சரி ஆனது ஆகிவிட்டது.. ஒப்புக்கு ஒரு ஐடியா சொல்லி இவனை கழட்டி விடறத்துக்கு, ஒரு நல்ல ஐடியாவை யோசித்தால் என் ஆசையும் நிறைவேறிய மாதிரி இருக்கும். ஆசை யாரை விட்டது.
அதற்கடுத்த ஒரு வாரமும் தினத்தந்தியில் கொலை கொள்ளை செய்திகளை ஒன்று விடாமல் படிக்கத்தொடங்கினேன்.. ஒவ்வொரு நாளும் ஆச்சரியமாய் இருந்தது.. ஒரு நாளில் இவ்வளவு கொள்ளைகள் நடக்கின்றனவா?
ஒரு வாரத்தில் திருடர்களைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரிந்துவிடவில்லையென்றாலும், ஒன்று மட்டும் தெளிவானது.. ஒரு நாளில் ஏராளமான திருட்டுகள் நடக்கின்றன.. கண்டிப்பாக எங்கள் ஊரிலும் ஒரு திருடன் இருக்கவேண்டும் என்று. ஆனால், எப்படி அந்த திருடனை அடையாளம் காண்பது? எப்படிப்பாக்கறது..? வீட்டுக்குப் போயா? எதுவும் தெரியவில்லை.. இருந்தாலும், அடுத்த நாளே ஜெகனிடம் சொன்னேன்.. பக்கத்தூருக்கெல்லாம் போகாம உள்ளுரிலேயே திருடனைப்பார்க்கலாமென்று.. அவனுக்கு அந்த திட்டம் மிகவும் பிடித்துப்போனது எனக்கே பெரிய ஆச்சரியம். அதிலிருந்த விடைதெரியா கேள்விகளையும் சொன்னேன்.. அவன் சட்டை செய்ததாகவே தெரியவில்லை..
”அதுக்கெல்லாம் நம்மகிட்ட ஆள் இருக்கு.. எல்லாம் எம் செயல்” என்றபடி சீட்டியடித்தான்..
எரிச்சலாக வந்தது.. எப்படியோ, அவன் ஒரு பதிலுடன் வந்தால் சரி..
நான் நினைத்ததை விட சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டான் அவன்.
ஊர்க்கடைசியில் நெடுஞ்சாலைக்கு அருகே வீரனார் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு தாமரைக்குளம் உண்டு. அதில் இருப்பதெல்லம் அல்லியென்று ஊருக்கே தெரிந்தாலும் பெயர் மட்டும் தாமரைக்குளம்தான். அதற்குப்பின்னே ஒரு புறத்தில் அடர்த்தியாக மூங்கில் புதரும் கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரு பெரிய ஆலமரமும், தூங்கு மூஞ்சி மரமுமாக அடர்ந்து பந்தல்போட்டிருக்கும்.. அதற்கும் பின்னே போனால், உரக்கடை கோனாரின் வயல் தொடங்கிவிடும்..
அந்த வயலுக்கும் குளத்துக்கு பின்பான மரப்பந்தலுக்கும் இடையே ஒரு திட்டு தரிசு நிலம் உண்டு.. அங்கிருந்து பார்த்தால் நெடுஞ்சாலை தெளிவாகத் தெரியும். ஆனால் நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தால் ஆலமரம் வரைக்கும்தான் தெரியும். அந்த இடத்தில் இருந்தால், நமக்குத் தெரியாமல் யாரும் நெடுஞ்சாலை வழியே நம்மிடம் வரமுடியாது. இது போன்ற குணநலன்களால் அப்பகுதி மாதம் இருமுறை கள்ளு காய்ச்ச உகந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அவ்வகையில், இல்லாமல் அப்பகுதி சும்மா இருக்கும் நேரத்தில்தான் அங்கு திருடர்கள் வருவார்களென்றும் தங்களின் திருட்டுப்பொருட்களை பங்கு போட்டுக்கொள்வார்களென்றும், ஒரு நாள் ராத்திரி அங்கு போய் ஒளிந்திருந்தால் நிச்சயம் திருடனைப்பார்த்துவிடலாமென்றும் சொன்னான்.
கேட்பதற்கு தங்கமலரில் கதைபடிப்பது போலிருந்தாலும், எனக்கு உள்ளுர பயம் பரவியது. அந்த திருடர்கள் மாதிரி இவர்களும் கேள்வி கேட்டால் பதில்சொல்லிவிட்டு கொஞ்சம் நகையும் கொடுத்து அனுப்புவார்களா என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன்.
என்னதான் இருந்தாலும் இறங்கியாகிவிட்டது ஒரு நாள் ராத்திரிதானே. இதை மட்டும் தாண்டிட்டா, ஸ்கூலில் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், எங்களின் பிரதாபங்களை.. மற்ற பசங்களெல்லாம் வாயைப்பிளந்து கேட்பார்களென்பதே கொஞ்சமாய் போதையூட்டியது. இடம் தேர்வாகிவிட்டது. காலம், காலாண்டு விடுமுறையின் கடைசிநாளென நீண்ட கலந்தாய்வுக்குப்பின் முடிவுக்கு வந்தோம்.
அவ்வப்போது கனவுகளில் கழுத்தில் கர்சீப், பாரம்பரிமான கன்னத்து மச்சங்களுடன் திருடர்கள் வந்து பயமுறுத்திப்போயினர்.
காலாண்டுப்பரீட்சைக்குப் பிந்திய விடுறைகளை சிதைப்பதற்கென்றே சில ஆசிரியர்கள் இருப்பார்கள். அப்பரீட்சையில் வினாத்தாளாக வந்த அனைத்தையும் நோட்டுப்புத்தகத்தில் எழுதி விடுமுறை முடிந்து வருகையில் கொண்டு வரவேண்டும். அதை நான் எப்போதும் வெறுத்தாலும், அன்றிரவு நான் ஜெகன் வீட்டுக்குச்செல்ல அக்காரணம்தான் உதவியது.
ஜெகனின் அப்பா ஒரு டிரைவர். அவனுக்கு அம்மா கிடையாது. தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்யுமளவுக்கு வளர்ந்திருந்தான் அவன். அன்றிரவு அவன் அப்பாவும் ஊரிலில்லை. நான் போனதிலிருந்தே ஒரேயடியாக அறிவுரை மழை பொழியத்தொடங்கிவிட்டானவன்.
போகும் போது முகத்தில் ஒரு துணி கட்டிக்கொள்ளவேண்டும். செருப்பு போடக்கூடாது. சத்தம் போடக்கூடாது. இருவரும் கையில் ஒரு பூண்டு வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் பலவாய் பட்டியல் நீண்டது..
நள்ளிரவு நேரம் நெருங்க நெருங்க எனக்கு இதயத்துடிப்பு இரட்டிப்பாகி எகிற ஆரம்பித்தது.. குரல் கூட தெளிவாக வரவில்லை..
” ஜெகன்…”
”ம்ம்..”
“கண்டிப்பா போகணுமாடா.. நான் வேணா பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்குப் போயிடறேனே.. இன்னும் கொஸ்டின் பேப்பர் வேற எழுதல..”
”அடச்ச.. சும்மா கெட.. எத்தன தடவை சொல்றது.. இன்னைக்குப் போறோம்.. அவ்ளோதான்.. ”
”..”
”நீ வந்தா வா.. வராட்டி போ.. நான் இன்னைக்குப் போகத்தான் போறேன்..”
அப்படியே தப்பித்து ஓடிவிடலாம் என்று மனதுக்குள் ஒரு குரல் கேட்டாலும், ஒரு வேளை ஜெகன் மட்டும் தனியே சென்று திருடனைப்பார்த்துவிட்டால் அதற்கப்புறம் அவனை கையிலேயே பிடிக்கமுடியாது. அதற்கும் மேலாக, இது என்னோட ஐடியா.. அதுக்காகவாகது நான் போகணும் என்ற முடிவே நிலைத்துவிட்டது..
11 மணிவாக்கில் மெல்ல வீட்டிலிருந்து கிளம்பினோம்.. அமாவாசைக்கு வெகு பக்கத்தில் நிலவு..இப்பவோ அப்பவோ என்பது மாதிரி கொஞ்சமாய் விளிம்பு காட்டிக்கொண்டிருந்தது. தூரத்தில் சில இரவுப்பறவைகள் சத்தம்போட்டுக்கொண்டிருந்தன. முகத்தில் அந்த துணி வேறு மூச்சைத்திணறடித்தது.. அடுத்த தெரு மூலையில் சில நாய்கள் மிரண்டு துரத்த, அந்த முகமூடித்துணியை நல்ல பிள்ளைகளாக மடித்து கையில் வைத்துக்கொண்டோம்.
அது வரை நான் கேள்விப்பட்டிருந்த கொள்ளிவாய்ப்பிசாசுகள், மோகினிகள், கோட்டை வீரன் கதைகளெல்லாம் அசந்தர்ப்பமாக நினைவில் வந்து கலங்கடித்தன. பேசாமல் அவன் சொன்ன முதல் ஐடியாவுக்கு ஓகே சொல்லியிருக்கலாம் என்று பட்டது. எது நடந்தாலும் பகலிலாவது நடந்திருக்கும்.
கண்ணுக்கெட்டும் தூரத்தில் கோயில் வந்தபிறகுதான், அப்பகுதி தெருவிளக்குகளாலும் கைவிடப்ட்ட பகுதியென்று உணர்ந்தோம். அவனுக்குள்ளும் லேசாக பயம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவன் முன்னே செல்ல, மெல்ல தாமரைக்குளத்தை நெருங்கிவிட்டோம்..
ஏதாவது ஒரு வகையில் குளத்தை கடக்கவேண்டும். வலதுகரையோடு போனல் மூங்கில் புதரைத்தாண்டி அந்த திட்டுக்குப் போகவேண்டும்.. அது கொஞ்சம் தூரம்.. அதைவிட, இடதுகரையோடு போனல், ஆலமரத்தை தாண்டி அந்த திட்டுக்குப் போய்விடலாம்.. ஆனால், குறுக்கே கோனார் வயலுக்கு செல்லும் ஓடை வரும்.. அது குளத்துடன் சேரும் இடம் சதுப்பு நிலம் மாதிரி முட்டிவரை சேறாகிக்கிடக்கும்.
ஒரு வழியாக இடது கரையே என்று தீர்ப்பாகியது. அவன் முன்னே செல்ல, அவன் கையைப்பிடித்த படி பின்னே நடந்தேன்.. அவன் கை நடுங்குவது அப்பட்டமாய்த் தெரிந்தது..
அந்த சேற்றுப்பகுதிக்கு வந்தபின் ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியாக வைத்தபடி முன்னேறுகையில்தான் அது நடந்தது.
யாரோ என் காலை கயிற்றைக்கொண்டு இறுக்குவது போல் இருந்தது.. வீல் என்ற ஒரு அலறலுடன் சேற்றில் விழுந்ததில், கழுத்துக்குக் கீழ் மொத்தமாக மூழ்கி சேற்றுக்குள் துளாவிக்கொண்டிருந்தேன். குத்துமதிப்பாக ஒரு திசையிலிருந்து ஜெகன் கத்துவது கேட்டது. என்னால் பதிலுக்கு கூட வாய்திறக்கமுடியாமல், தொண்டைக்குள் அடைப்பது போலிருந்தது. மறக்கமுடியாத அந்த பதினைந்து வினாடி களேபரத்தில், என் கால் கட்டு கொஞ்சமாய் நழுவி விழ, அடித்துபிடித்துக்கொண்டு கரையேறியபோது மொத்தமாக சேற்றில் முழுகி, சொட்டச் சொட்ட, நான் இந்நேரம் அழத்தொடங்கியிருந்தேன்..
அவனுக்குள் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் காலியாகிவிட்டது..
”டேய்.. திரும்பிடலாம்டா”
விசும்பல்களுக்கிடையே தலையாட்டிடேன்.. அவன் பார்த்தானா தெரியவில்லை..
அதே வழியில் திரும்ப வர இருவருக்குமே தைரியமில்லை. பேசாமல், குளத்தைச்சுற்றிக்கொண்டு வலதுகரையுடன் வெளியேறிவிடலாமென்று முன்னேறினோம்..
அந்த ஆலமரத்தின் கீழ் வந்தபோதுதான் அதை கவனித்தேன்.. எங்களுக்கு நேரெதிரே இருபதடிக்கும் குறைவான தொலையில், இருட்டில், கொஞ்சம் பெரிய சைஸில் சப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி ஒன்று காற்றில் அலைந்துகொண்டிருந்தது. எங்களை நோக்கி வருவது போல் தோன்றியது. அதே நேரம் அவனும் அதைப்பார்த்திருக்க வேண்டும்.
”ஓட்றா” என்றொரு குரல் மட்டும் தான் கேட்டது.. அவன் எந்தப்பக்கமாய் ஓடினானென்றெல்லாம் பார்க்க எனக்கு அவகாசம் இல்லை. ஏதோ ஒரு வழி.. தொலைவில் தெரிந்த தெருவிளக்கை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தேன்.
அதற்கடுத்த நாள் நான் ஸ்கூலுக்குச் செல்ல வில்லை.
Tuesday, May 12, 2009
Sunday, February 22, 2009
அரசூர் வம்சம்
”..... அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.
அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?
பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.
கேட்டு விட்டு எழுதுகிறேன்.”
படித்து முடித்து மூடிவைத்தபோது எதுவுமே தோன்றவில்லை. சுற்றி சுற்றி மொத்தமாக வெறுமையை நிரப்பிச்சென்றதாக ஒரு பிரமை.. இப்புத்தகம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூட தெளிவாகச் சொல்லமுடியவில்லை.. ஏதோ பிடித்திருக்கிறது.. ஏதோ பிடிக்கவில்லை.. ஏதோ குறைகிறது. ஆனாலும், நிச்சயம் ஏதோ உள்ளே இருக்கிறது.
மேலும் படிக்க...
ஒரே கோட்டில்தான் கதை செல்கிறது. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைத் தொடராமல், மொத்தமாக அரசூரைத் தொடர்கிறது இக்கதை.
காலம் கிட்டத்தட்ட இரு நுற்றாண்டுகளுக்கு முன்.. அது ஏன் கிட்டத்தட்ட? அதுதான் பிரச்சனையே. காலம் என்ற ஒன்றே இங்கு கிட்டத்தட்டதான். சரி. கதைக்குப் போகலாம் வாங்க.
அரசூரில் ஒரு புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணர் சுப்ரமணிய அய்யர். அவருக்கு இரண்டு புத்திரர்கள். வேதங்களை கரைத்துக்குடித்து கடைசியில் மனநிலை பிறழ்ந்து போகும் சாமா முதல்பையன். தந்தைக்குப்பின் புகையிலை வியாபாரத்தை பொறுப்பாக கவனித்துக்கொள்ளும் சங்கரன் இரண்டாமவன். வியாபாரம் மட்டுமல்ல. தினம்தினம் மாடியிலிருந்து பக்கத்து அரண்மனையில் ராணியின் ஜலக்கிரீடையையும் கவனித்துக்கொள்கிறான்.
ராணிக்கு ஒரு ராஜா. பெயரைத்தவிர ராஜாவுக்குரிய எந்தவொரு அடிப்படைத்தகுதியுமின்றி, வெள்ளையர்களை அண்டிப்பிழைக்கும் ஒரு டம்மி ராஜா. அவருக்கு மலப்பிரச்சனையிலிருந்து வாய் உபசாரம் கேட்கும் புஸ்தி மீசைக்கிழவன் வரை ஆயிரத்தெட்டு பிரச்சனைகள். இதில் தன் மனைவி குளிக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் பார்க்கிறான் என்பது பிரதானமிழந்துபோக, கஜானாவிலிருந்து கரையப்போகும் அடுத்த வராகன்தான் அவரின் கவலை.
மலையாளக்கரையிலிருந்து மாட்டுப்பெண்ணாக வரும் பகவதிக்குட்டி மற்றும் தமையன் கிட்டாவய்யன் குடும்பத்தைப்பற்றிய பின்புலம்.
பார்வதியைப் பெண் பார்க்க அனைவரும் வண்டி கட்டிக்கொண்டு மலையாளக்கரைக்குப் போனபோது சாமாவுடன் வீடும் தீக்கிரையாகுகிறது. அதிர்ச்சியில் அவன் தாய் கல்யாணியம்மாளுக்கு நோவுகண்டுவிடுகிறது. அப்புறம் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சங்கரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் முடிகிறது..
உண்மையில் கதையென்று பார்த்தால் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை.
இது சாதாராண கதை. இதனை அசாதாராணமாக்குவதற்கென்றே வருகின்றனர் பனியன் சகோதரர்கள். காலத்தால் நுற்றைம்பது வருடத்துக்கு பின்னாலிலிருந்து சர்வசாதாரணமாக ஒரு ஆஸ்டின் காரில் காலத்தில் பயணிக்கின்றனர். கள்ளத்தோணி போட்டு ஜாமான் கடத்தற மாதிரி பின்னாளிலிருந்து பொருட்களை கொண்டு சென்று முன்னாளில் விற்று வருகின்றனர்.
ஒரு முறை இறந்தகாலத்தில் புகைப்படம் எடுத்து நிகழ்காலத்துக்கு வந்து டெவலப்செய்து, மீண்டும் இறந்த காலத்துக்கே சென்று விற்கின்றனர். எனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு பயப்படாதீங்க. இதெல்லாம் புத்தகத்தில் வர்ரதுதான்.
போதாக்குறைக்கு ராஜாவையே சுற்றி சுற்றி வந்து திவசத்துக்கு சாராயம் கேட்கும் இறந்து போன ராஜாக்கள் வேறு.. சுப்பம்மாளின் வாயில் ஏறி நலங்கு பாடும் மூத்தகுடிப்பெண்டுகள் ஒரு புறம். சாமாவுடன் போகம் கொள்ளும் குருக்கள்பெண் மறுபுறம்.. என்று தெளித்து வைத்த மாதிரி வழி நெடுகிலும் மீகற்பனைக்கான வித்துகள் கொட்டிக்கிடக்கின்றன. யாவரும் அதனை சட்டைசெய்வதில்லை. அதுவும் ஒரு அங்கமாக, அது பாட்டுக்கு இருக்கிறது.
நாம்தான் உள்ளே நுழைகயில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்..
ஏனெனில், எதிர்பாரா சாலையின் திருப்பங்களில், உங்களை மதமாற்றம் செய்விக்க குரிசைகளுடன் பாதிரிகள் காத்திருக்க கூடும். பிரசாதம் வாங்க கோயிலுக்குப் போனால், வெடிக்காரனின் கால்கள் வந்து பிரசாதத்தில் பங்கு கேட்கலாம். அக்கடா என்று சாலையில் நடக்கும் போது ஆகாயத்திலிருந்து சினேகாம்பாளின் தகப்பனார் உங்கள் மீது மூத்திரம் பெய்யலாம். அல்லது யந்திரத்தில் ஒளிந்திருக்கும் தேவதைகள் வந்து குடிக்க பால் கேட்கலாம். 300 ஆண்டுகளுக்கு முன் துர்மரணமடைந்த குருக்கள் பெண் வந்து போகத்திற்கு அழைக்கலாம்...
இதுதான் என்றில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுதான் அரசூர்.
குறிப்பிடவேண்டிய விஷயம். அந்த மொழி நடை. விதவிதமான மொழிநடைகள். சுதந்திரத்துக்கும் முந்திய காலத்தின் வெகுஜன தமிழ்நடை மாதிரி.. அரதப்பழசான, தொட்டால் உடைந்துவிடக்கூடிய மாதிரி பழுப்புக்காகிதத்தில் தூசியேறிப்போய் சில புத்தகங்கள் நூலகத்தில் கிடைக்குமே.. அந்த மாதிரி ஒரு நடை.. எப்படித்தான் அப்படி எழுதினார் என்று ஆச்சரியமூட்டுகிறது. ஒரு பக்கம் ரெண்டு பக்கம் அல்ல, பெரும்பாலான இடத்தில் அத்தகைய நடைதான். முழுக்க பிராமண பாஷைதான்.. ஆனால், மனதை கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளுங்கள்.. உங்களை அதிரவைக்கும் பிராமண பாஷை இது.
பெண்பார்க்கச் செல்கையில் அந்த மலையாள நடை. சென்னைக்குச் செல்கையில் காலத்தால் கொஞ்சம் மாறுபட்ட நடை என்று ஏகத்துக்கு மெனக்கெட்டிருக்கிறார் முருகன்.
அதே மாதிரி விதவிதமான கதாபாத்திரங்கள். வெண்பா வடிக்கும் கொட்டக்குடி தாசி, டெலிபதியை முயற்சிக்கும் பிஷாரடி வைத்தியர், தகட்டில் தேவதைகளை நிறுத்தும் ஜோசியர் அண்ணாசாமி ஐய்யங்கார் திவரசப் பிராமணர் சுந்தர கனபாடிகள் என்று நிறைய நிறைய முற்றிலும் முரண்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையம் ஸ்தாபிப்பதிலும், அந்தந்த சூழ்நிலைகளில் அந்தந்த பாத்திரங்களில் மனஓட்டங்களைச் சித்தரிப்பதிலும் ஆச்சரியமூட்டுகிறார். சில இடங்களில் கொஞ்சம் அதிகப்படியான மன ஓட்டங்கள் சலிப்பைத்தருகின்றன.
அப்புறம், கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான மதராஸ்பட்டிண சூழலைப் படம்பிடித்திருப்பதும் ஒரு புதுமையான அனுபவம். காப்பி என்று புதிதாக வந்திருக்கும் ஒரு வஸ்துவைப்பற்றி சிலாகிக்கின்றனர். பெண்பார்ப்பதற்கு வண்டிகட்டிக்கொண்டு நாள்கணக்கில் பயணம் செல்கின்றனர். கிண்டி கிராமத்திலிருந்து சென்னைப்பட்டணம் போய் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பிராமணர்கள் இருக்கின்றனர். இப்படி இன்னும் பல.
உறுத்திய விஷயம். அதுவும் நடைதான்.. சில இடங்களில் ரொம்ப abusive.. கொஞ்சம் அதிகப்படியான டோஸ்தான்.. இவ்வளவு காட்டம் தேவையான்னு தெரியல. போகம் போகம் போகம். சில பாத்திரங்களின் வடிவமைப்பிலேயே போகமும் கூடவே வந்துவிட்டிருக்கிறது. ராஜாவுக்கு சேடிப்பெண் மீது எப்போதும் ஒரு கண். சாமாவுக்கு குருக்கள் பெண். சங்கரனுக்கு பார்வதிக்குட்டி. இருந்தாலும் கப்பலில் வெள்ளைக்காரப் பெண்மணிகளுடன் சுகித்திருக்கிறான். கிட்டாவய்யனுக்கு பணிமுடிந்து திரும்புகையில் வழியில் தென்படும் அனைத்து பெண்களும் காமபாணம் எய்கின்றனர். சில இடங்களில் கதைக்குத் தேவையான ஒன்றாகத் தோன்றினாலும் இவ்வளவு தேவையா? தெரியவில்லை.
இப்படியெல்லாம் கதை எழுதினால் இதன்பெயர் மாய யதார்த்தமாம். ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், இருக்கவே இருக்கார் நம்ம கவிதை அண்ணாத்த அனுஜன்யா. அவரின் இந்தப் பக்கத்திற்கு போய்ப்பாருங்க.
கடைசியா என்னதான் சொல்ல வர்ர? இதைப் படிங்கறீயா? வேணங்கறியா..?
நீங்கள் பதினெட்டு வயதுக்குட்பட்டவரா (அ)
அவ்வப்போது மனநிறைவுக்குக்காகவும் பொழுது போக்கிற்காகவும் புத்தகங்கள் படிப்பவரா.. தாராளமாய் இந்த பதிவை இத்துடன் மறந்துவிட்டு உங்கள் அன்றாடப்பணிகளைத் தொடரலாம்..
இல்லை. நன் ஒரு தீவிர வாசிப்பாளன். தேடித் தேடிப் படிப்பவன். புதியன தேடும் பித்தன் அப்பிடீன்னெல்லாம் வசனம் பேசற ஆளா? தப்பே இல்லை.. படிச்சுப்பாருங்க.
புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்
--------
அரசூர் வம்சம்
இரா. முருகன்
464 பக்கங்கள்
ரூ.175
கிழக்கு பதிப்பகம்
---------
Saturday, February 07, 2009
உபபாண்டவம்
இதுவரை நாம் கேட்டுவந்த பாரதங்கள் போல் படர்க்கையிலல்லாது முன்னிலையில் கதை சொல்லும் உத்தியே மிகவும் அலாதியானது.
மகாபாரதம் என்பது நடந்து முடிந்த கதையல்ல. அது நடக்கும் கதை. நடந்து கொண்டிருக்கும் கதை என்கிறார். ஒரு தேசாந்திரியாக அஸ்தினாபுரத்தினுள் நுழைந்து தன் கண்முன் நடக்கும் காட்சிகளாக பாரத்தை விவரிக்கிறார். முன்கதை தேவைப்படும் சில இடங்களில் சூதர்கள் சொல்லும் கதைகளாக நம்முன் வைக்கிறார்.
வெறும் வயிறில் பருகப்படும் ஒரு மிடறு திரவம் நாம் உணரும் போதே மிக மெதுவாக உணவுக்குழலுக்குள் இறங்குவதைப்போல், நாம் உணரும் போதே மிக மெதுவாக நம்முள் ஊடுருவிச் சென்று உறைகிறது இந்த பாண்டவம். கொஞ்சம் கூட அவசரப்படாமல் நிதானமாக மிக நிதானமாக ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கும் மேலாக இந்நுலை படித்துமுடித்தேன். முடிக்கையில், கௌரவர்களும் பாண்டவர்களும் கதாமாந்தர்களாக இல்லாமல், நம் அண்டைவீட்டு மனிதர்களாக உருக்கொள்ளும் அந்த பிம்பமே ஆசியரியரின் வெற்றி.
நாம் இதுவரை பெயர் மட்டுமே அறிந்திருந்த பலருக்கு உணர்வும் உருவமும் தந்து உலவவிட்டிருக்கிறார். குறிப்பாக மயனின் முன்கதையும் ஜராவின் வஞ்சமும் ஏகலைவன் பெற்ற நாயின் சாபமும் போன்ற எண்ணற்ற கிளைக்கதைகள் பெருத்த அதிர்வினை ஏற்படுத்துகின்றன. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அரண்மனையில் பாஞ்சாலியின் சிரிப்பொலியும் அதனால் துரியோதனன் கொண்ட சினமும் இயல்பாக நடந்தவையென்றே நினைத்திருந்தேன். ஆனால் அத்தனையும் தி்ட்டமிட்டே நடத்திவைக்கப்பட்டன என்று இவர் சொல்கையிலும் கூட கொஞ்சமும் முரண்படவிடாமல் மகுடிக்குக் கட்டுப்பட்ட சர்ப்பமென தன்னுடனேயே அழைத்துச்செல்கிறார்.
குறிப்பாக துரியோதன வதம் பற்றிய விவரிப்பில் துரியோதனனைப்பற்றி இதுவரை நாம் கட்டமைத்திருந்த அனைத்து பிம்பங்களும் உடைந்து சிதறுகின்றன. நாயகனுக்கும் அநாயகனுக்கும் இடையிலான யுத்தமாக விவரிக்காமல் இரு முரண்பட்ட கருத்துகள் கொண்டோருக்கு இடையிலான யுத்தமாகவே குருஷேத்திரம் இங்கு படர்கிறது.
படிக்கப்படிக்க ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. இந்த மனிதர் வார்த்தைகளில் என்னவொரு லாவகத்துடன் விளையாடுகிறார். சுனையிலிருந்து பீறிடும் நீர் போல அத்தனை சரளத்துடன் ஒரு நடை. படிக்கும் போது ஒரு போதையென நம்மை ஆட்கொள்கிறது.
எவ்வளவு சொன்னாலும் வார்த்தைகளில் விவரிக்கமுடியாத அனுபவம் அது. தீவிரவாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாதது இந்த பாண்டவம்.
லயத்துடன் ஆட்டப்படும் ஒரு ஊஞ்சல் போல் கதை காலத்தில் முன்னும் பின்னுமாக பயணிப்பதால் மகாபாரதக்கதையில் ஓரளவுக்கு குழப்பமற்ற பரிச்சயம் நலம்.
உபபாண்டவம் பற்றி சேரலும் அருமையானதொரு பதிவிட்டிருக்கிறார் இங்கே.
இணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்.
----------------------
உபபாண்டவம்
எஸ். ராமகிருஷ்ணன்
விஜயா பதிப்பகம்
384 பக்கங்கள்
ரூ. 150
----------------------
Saturday, January 03, 2009
சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்
நீங்கள் கடைசியாக வரைந்தது எப்போது? நினைவிலிருக்கிறதா?
எனக்கு வரையவே வராது. நான் வரைந்ததே இல்லை என்று தத்து பித்து காரணங்களெல்லாம் வேண்டாம்.
நாம் எல்லாருமே வரைந்திருக்கிறோம்.. சிறிதோ பெரிதோ.. சுமாரோ சூப்பரோ, சிலேட்டோ தரையோ புதுச்சுவரோ, அதனை ஒரு தேர்ந்த ஓவியனுக்கே உரிய சிரத்தையுடன் மற்றவர்கள் நினைப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நமக்காக.. நமக்காக மட்டுமே வரைந்திருக்கிறோம்.. நினைவிலிருக்கிறதா?
ஆனா ஆவன்னாவிற்கும் முன்னதாக நம் கைவரப்பெற்ற கலை அது. நாம் கற்றுக்கொண்ட முதல் வரிவடிவம்..
வரைந்து முடித்த பின்பான அந்த மனநிலை நினைவிலிருக்கிறதா..? வரைந்தது சின்னஞ்சிறிய கோட்டோவியமே ஆயினும், முப்பரிமாண பிம்பமென மயக்கமுறும் வகையில் வெவ்வேறு தொலைவுகளில் வெவ்வேறு கோணங்களில் வைத்து ரசித்திருக்கிறீர்களா? தீக்குச்சி மனிதர்களைக் கொண்டு வகுப்பறை நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறீர்களா? பள்ளியில் ஓவிய நோட்டில், ஓரு மலை அதன் இடையிலிருந்து ஓடிவரும் ஒரு நதி, கரையில் ஒற்றைத் தென்னைமரம், அருகிரேயே வயல் சூழ்ந்த ஒரு குடிசை வரைந்த அனுபவம் உண்டா?
எங்கே இருக்கிறான் அந்த ஓவியன் இப்போது? என்றாவது தேடியதுண்டா?
நம் முதல் ஓவியம் எழுத்துக்கள்தான். அப்படி ஒரு சிரத்தையுடன் ஒவ்வொரு எழுத்தாக வரையத் தொடங்கினோம். அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.
கொஞ்சம் யோசித்தால், பள்ளியில்தான் நான் முதன் முதலில் மற்றவர்களுக்காக வரையத்தொடங்கினேன்.. ஆசிரியர்களுக்காக. நான் வரையவனவற்றின் மதிப்பு அவை பெறும் மதிப்பெண்களை விட அதிகம் எனக்கு.. ஒவ்வொருவருக்கும்தான்.
இப்படித்தான் வரைய வேண்டும் என்றில்லாமல், எப்படியும் வரையலாம் என்றிருந்த காலமது.
8 ம் வகுப்பு ஆ பிரிவில் கயல்விழியின் ரப்பர் வளையளோ, ஜியாமெண்ட்ரி பாக்சின் நீள் வட்டத்துளையோ, ஏதுமற்ற நேரங்களில் வெறும் கையோ போதுமானதாக இருந்தது கிளாமிடோமோனாசை வரைவதற்கு. அப்போதெல்லாம் கிளாமிடோமோனாஸ் ராமுவிடம் வட்டமாகவும், புண்ணியமூர்த்தியிடம் நீள்வட்டமாக பென்சில் ஷேட் உடனும், காயத்ரியிடம் பொட்டு வைத்த முகம் போலவும் இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு வளர்ப்புப்பிராணி மாதிரி. வரைந்து முடித்த பின்,
”ஹை.. என்னோடதப் பாரு.. எப்படி இருக்குனு.. நல்லாருக்கா..?”
ஒவ்வொரு வகுப்பிலும்.. இந்த சம்பாஷனைகள் கண்டிப்பாய் இடம் பெற்றிருக்கும்..
வகுப்பறைக்கு வெளியே ட்வீட்டியும் மிக்கி மௌசும் என் பால்ய நண்பர்கள். ஏராளமான முறை வரைந்திருக்கிறேன். தங்கமலரில் வரும் கிருஸ்துமஸ் தாத்தா, ஒரு வரி பிள்ளையார், காந்தி தாத்தா என அனைவரும் என் கைவண்ணத்திலிருந்து தப்பியதில்லை.
பள்ளியில் மிக எளிய கோட்டோவியங்களிலிருந்து கொஞ்சம் சிக்கலான குறுக்குவெட்டுத் தோற்றங்களை வரையத்தொடங்கிய நாளில், என் நண்பர்கள் பலருக்கு வரைவதின் மீதிருந்த ஆர்வம் ஓரமாய் ஓடிப்போய் ஒளிந்து கொண்டது. அதன் உச்சம் விலங்குசெல்லின் குறுக்கு வெட்டுத் தோற்றம். அந்த சமயம் பெரும்பலானோர், பேப்பரில் பென்சில் கொண்டு கொத்து பரோட்டோ போடத் தொடங்கியிருக்க நான் மட்டும் கோலத்துக்கு புள்ளி வைப்பதாய் வைத்துக்கொண்டிருப்பேன். எப்படியோ வந்து ஒட்டிக்கொண்டு விட்டது அந்த ஆர்வம். நான் பெரிய ஓவியன் என்ற அவசரமுடிவுக்கெல்லாம் வரவேண்டாம். நான் வரைபவன். அது எப்படி வந்தாலும் விடாது வரைபவனாகத்தான் இருந்தேன். அது ஏதோ ஒரு வகையில் மனநிறைவைத் தந்தது.
கல்லூரிக்கு வந்த புதிதில், Engineering Drawing ஆஸ்பத்திரி சுத்தத்துடன் வரைதலை அணுகச் சொன்னது. ஒவ்வாரு மில்லி மீட்டரும் வரைதலின் அங்கம் என்றது. வரைந்தேன். அதுவும் கூட புதுவகையான ஆனந்தமாக இருந்தது. வரைவதற்கென்றே பிரத்யேகமான தயாரான தாள் , விதவிமான கருவிகள், உயரமான மேசை என புதுச்சீருடையில் பள்ளி செல்லும் குழந்தையின் குறுகுறுப்புடன் கடந்து சென்றன அந்த ஓவிய நாட்கள்.
முதலாமாண்டு கடந்த பின்னரும் கூட அவ்வப்போது, தூங்க வைக்கும் பேருரையாசிரியர்களின் வகுப்புகளில் நோட்டுப்புத்தகத்தில் ஏதேதோ வரைந்ததுண்டு.
ஆனால் இன்று வேலைக்கு வந்த பின் கடைசியாய் வரைந்தது எப்போது என்று தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. வரைதல் என் விருப்ப பொழுதுபோக்காக இருந்ததிலிருந்து, ஒரு தொழிற்பெயராய் மாறியது எப்போது என்று யோசித்தால் விடையில்லை.
ஒரு வேளை பால்யம் தொலைத்து சொந்தம் விட்டு, தேசம் விட்டு தூக்கம் தொலைத்து நாம் துரத்தும் நாணயச் சிதறல்களில் காணாமல் போயிருக்கலாம். எனக்கு வரைதல் போல உங்களிடமிருந்தும் கவனிக்கக் கூட அவகாசமின்றி ஏதாவதொன்று காணாமல் போயிருக்கக் கூடும். கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு தேடிப்பாருங்கள், தொலைத்த இடத்தை கடப்பதற்கு முன்..
பள்ளியில் என்னுடன் படித்த பழனிவேலுவுக்கு வினோதமானதொரு பழக்கமுண்டு. ஒவ்வொரு முறை சமூகஅறிவியல் பாடத்தில், பெருங்கடல்களைக் குறிக்கச்சொல்லி வரைபடங்கள் கொடுக்கப்படும் போதெல்லாம், சமுத்திரங்களை குறித்து விட்டு, அவற்றில் கர்ம சிரத்தையாக மீன்களை வரைந்து கொண்டிருப்பான். பல முறை ஆசிரியர்கள் கூப்பிட்டுக் கண்டித்தும் கூட அவன் மாறவே இல்லை. கேட்டால்,
”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்? என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.
ம்ம்ம்...
இப்போது யோசித்துப் பார்க்கையில் உண்மையென்றே படுகிறது.